படக்கவிதைப் போட்டி .. (81)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
ஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 08.10.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.
இடம்கொடுத்தால்…
எல்லை தாண்டிப் பேகும்போது,
செல்லப் பிராணியும்
தொல்லைதான்..
மாட்டின் பின்னே செல்வது
மடமை என்றாக்கி,
நாயின் பின்னே செல்வதை
நாகரீகமாக்கிக்கொண்டோம்..
அதனால்தான்,
நாயும் ஏறுது
நம் தலையில்..
இடத்தைக் கொடுத்தால்,
மடத்தைப் பிடிப்பது
மனிதனிடம் கற்றதுதானோ…!
-செண்பக ஜெகதீசன்…
உலகில் நன்றியுள்ள பிராணி நாய் என்று சொல்வதுண்டு
உலகில் நன்றிகெட்டவன் என்று மனிதனை சொல்வதுண்டு
நாயை செல்லமாக வளர்ப்பவன், எல்லையை மீறக்கூடாது
அதனைஅதிகம் தூக்கி வைத்து கொண்டாடவும் கூடாது !
நாயும் எஜமானன் போடும் உணவிற்காக நன்றியினை காட்டும்
சிலசமயம் அடித்து துரத்தினாலும் அவனிடமே வந்து சேரும்
கடலில் அவன் வீசிய பொருளை நீந்தி சென்று எடுத்து வரும்
கடலில் குளித்தாலும் தோளையும் தாவி பிடித்து உறவாடும் !
வீட்டில் திருடர்கள் வந்தால் குரைத்து மனிதனை எழுப்பும்
எஜமானன் தொலைவில் இருந்தாலும் அவன் வரவை உணர்த்தும்
தன் எஜமானுக்காக உயிரையும் கொடுத்து செய்நன்றி காட்டும்
யாருமில்லாத தனிமனிதனுக்கு நண்பனாய் துணையிருக்கும் !
பொய்யும்,புரட்டும் பேசுபவர்களிடம் ஜாக்கிரதையாக பேசுவோம்
நாய் ஜாக்கிரதை என்ற பலகையை வீட்டு வாசலில் மாட்டுவோம்
உலகில் நாய் வளர்ப்பதே ஓர் நாகரிக பொழுது போக்காகும்
என்றைக்கும் நன்றியுடனே நம்மையும்,வீட்டையும் காக்கும்!
யாரையாவது திட்டும்போது நாயே என வசைபாடுகின்றோம்
அந்த நாய்க்கு இருக்கும் நன்றி கூட சிலரிடம் இல்லை என்கிறோம்
ஐந்தறிவு கொண்ட நாயே நமக்கு உற்ற நண்பனாய்இருக்கின்றதே
பழகும் விதத்தில் பழகினால் பகைவனும் நண்பனே என அறிந்ததே !
ரா.பார்த்தசாரதி
நீராதாரங்கள்
அடையாளமில்லாமல்
அழிக்கப்பட்டு
அடுக்குமாடி கட்டடங்கள் ஆயின
ஏரிகளும் குளங்களும்
யாரிடம் முறையிடும்?
தன் குறையை
மனிதனின்பிழை கண்ட
இறைவனின் இழையே
மழையாககொட்டி
வெள்ளமாக பெருக்ககெடுக்க
ஏழை பணக்காரன்
வித்தியாசமின்றி விரட்ட
உயிர்களையும்
உடமைகளையும்
இழந்தாலும்
இந்த ஐந்தறிவு உயிரை
முதுகில் அணைத்து
கரை சேர்த்த இந்தமனிதனின்
மனிதாபிமானம்
மறக்கமுடியாது
சரஸ்வதிராசேந்திரன்