keshav2

எண்ணும் தொழிலவள், எண்ணிலா எண்ணமவள்
எண்ணுவோர்க்(கு) ஏற்ற எழுச்சியவள் -எண்ணிடத்
தின்னும் பசியவள் தீராத தாகமவள்
உண்ணா முலையவளை உண்….(1)

 
கத்தி , உடுக்கை,கபாலம், திரிசூலம்
சக்தி கரமுற்ற ஆயுதங்கள் -பக்தி
இலாதோர் இதயச் சிலாவைப் பிளந்து
பலாவின் சுளையைப் புதைக்கும்….(2)

அழுதாலும் பிள்ளைக்(கு) அவள்தான் பொறுப்பு
பழுதான பின்பும் பரிவை -விழுதாய்ப்
பொழிவாள் எமது பராசக்தி, நெஞ்சே
தொழுவாய் அவளைத் தொடர்ந்து….(3)

அச்சுறுத்தும் பூதமா? அன்றிமாத்ரு பூதமா?
எச்சரிக்கை யோடுன்னை உச்சரிப்பதா? -நச்சரவம்
மாண்டோர் கபாலங்கள் பூண்டோன் இடபாகி
வேண்டாமே வேஷ விருப்பு….(4)

முகிலாண்ட வெற்பாளும் முக்கண்ணன் கற்பாளும்
அகிலாண்ட ஆனைக்கா அம்மே -நகிலுண்ட
சம்பந்தன் போலெண்ணி செந்தமிழ்ப் பாலூட்டு
இம்மந்தன் வாக்கில் இசைந்து….(5)

இறையவள், நான்கு மறையவள், நாதர்க்(கு)
அரையவள், தீவளிவான் அப்பு -தரையவள்
பக்தித் துறையவள் முக்தி அறையவள்
சக்தியுறை பாதம் சரண்….(6)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.