கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
படிகமணி மாலை படிப்புணர்த்தும் ஓலை
மடிதவழும் வீணை, மருங்கின் -பிடிபடாமை
கோலத்தை நெஞ்சிருத்தி கும்பிடுவோர் முன்வாழ்த்தாய்,
வேலொத்து பாயும் வசவு ….(1)
வர்மன் வரைந்தாற்போல் வாரிசத்தில் வீற்றிருந்து
தர்மம் தவம்தானம் தேர்ந்திட -கர்மமாய்
மோனத்தில் மூழ்கி முனையும் மஹாசக்தி
ஞானத்தை நானுற நல்கு ….(2)
அற்பனே ஆனாலும் ஆசான் அவளிரெண்டு
பொற்பதம் போற்ற புழலறிவின் -கற்பனை
ஊற்றில் குளித்து உவப்பால் துடைத்தணிவர்
மாற்றுத் துணியாய் மனது ….(3)
கல்வி கலவிடும் செல்வம் சிணுங்கிடும்
வல்லமை வீரம் வணங்கிடும் -செல்வி
கலைவாணி யாலுன் கவுரவம் கூடும்
தலைவானில் நிற்கும் திமிர்ந்து ….(4)
வித்தை, வினயம், விசாரம், விவேகமிவை
மொத்தமுமென் நெஞ்சில் முளைத்திட -ஸ்ரத்தை
அளித்திடு சாரதா அம்பிகே, என்னுள்
முளைத்திடு முண்டகம் மா ….(5)
முண்டகம் -தாமரை
கீரன் திருமுரு காற்றுப் படையவள்,
மாரன் திருவாய் மொழியவள், -சூரன்
மகாகவி பாரதியின் மாங்குயில் பாட்டு,
தகாதோர் செவிக்கவள் திட்டு’’….(6)
அகல விடாதுனை ஆட்கொண்டு, -இகபர,
சுகங்க ளுடனே சுவிகாரம் கொள்வாள்,
அகங்கார நெஞ்சை அழித்து”….கிரேசி மோகன்….