Blog

  • பிறழ்வு வண்ணங்கள்

    -கவிஜி 

    வோல்கா கரையெங்கும்
    உன்கனவு மழை
    போத்தல்
    திறக்காத போதும்
    மதுவின் மழை
    என் மனங்கும்…!

    வழி மாறியதோ,
    விழி தூறியதோ,
    உள்ளம் பொங்கும்
    துளிகளின் நிலவுக் கூட்டம்…

    வண்ணப் பிறழ்வுகளின்
    மாமரத்துத் தனிமையென,
    தலைவிரித்த பெருமழைக்குள்
    நம் நிழல் வட்டம்…!

    காகிதப்பூக்கள் கப்பலான
    தத்துவத்தில்
    ஆளுக்கொரு ஜன்னல்
    நெடும் பயணம்…!

    திறவாத கூட்டுக்குள்
    திறம்பட வரைந்த
    தூரிகையில் சொட்டும்
    நிறமற்ற மழை
    குடியற்ற நம்வெளி…!

    மழைக்கு ஒதுங்கிய
    பாதங்களில்
    மனம் நிறைக்கும்
    மழை, வீடெங்கும்!

     

     

    Share
  • மறக்கவியலா இன்ப வெள்ளம்!

    -வேதா. இலங்காதிலகம்

    வெள்ளம் பலர் வாழ்வில் வேதனை
    உள்ளம் வெதும்பத் துன்பச் சாதனை
    வெள்ளம் கொள்ளும் பெரும் கள்ளம்
    பள்ளம் நோக்கித் தானே துள்ளும்.                      flood

    தள்ளும் ஊரையே அழித்து முழுகும்
    துள்ளும் குழந்தைகள் கப்பலிட மகிழும்
    வெள்ளம் என்றதும் எனக்கும் நினைவில்
    வள்ளத்தின் பயணம் வரும் நிறைவில்.

    அன்று இலங்கைத் தேயிலைத் தோட்டத்தின்
    நின்றாளும் அதிகாரியாக என் துணைவர்
    வென்றது வெள்ளம் காலு கங்கையால்
    தெருவினை மேவிப் பாய்ந்ததே கடல்.

    தேயிலைக் கொழுந்து மூட்டைகள் தொழிற்சாலைக்குத்
    தேவதூதர்களாய்  தோணிக்காரர்கள் உதவிக்கு, கொழுந்துக்
    கோணிகள் தோணியில்! நாமுமதில் பயணிகளாய்
    தோற்றம் காஷ்மீரப் படகுப் பயணமாய்!

     

     

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 31

    – புலவர் இரா. இராமமூர்த்தி.

    திருக்குறளில் இதழ்கள் ஒட்டாத பாடல்கள் பற்றி நாம் இதற்கு முன் பார்த்தோம்! அதிலும் குறிப்பாக நாம் பார்த்த பாடல்:

    “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன் “(341)

    என்ற குறட்பா ஆகும். அதனைத் தவிர 240, 286, 310, 419, 427, 472, 489, 516, 523, 679, 894,1080,1082, 1177,1179,1211, 1213,1219,1236,1286,1296ஆகிய
    இருபத்தொரு குறட்பாக்கள் உதடு ஒட்டாத குறட்பாக்களாக உள்ளன! இவற்றை நிரொட்டகம் என்று கூறுவர். தமிழில் “நிரோட்டக யமக வந்தாதி” என்ற நூல் உள்ளது. மேலும் “இதழகலந்தாதாதி” என்ற நூலை வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அளித்துள்ளார்!

    திருக்குறளில் அதிகமான அளவில் உதடு ஒட்டும்படி அமைந்த சீர்களுடன் அமைந்த பாடல் உள்ளது! அப்பாடல்,

    “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை “

    என்ற பாடலாகும்! இந்தப் பாடலின் தனிச்சிறப்பு, துப்பு என்ற சொல்லே மீண்டும் மீண்டும் வந்தமையேயாகும்! துப்பு என்ற சொல், ஐந்து இடங்களிலும் ஐந்து வெவ்வேறு பொருள்களுடன் அமைந்துள்ளது! துப்பு என்ற சொல், துய்ப்பு என்பதாகிய உண்ணுதலைக் குறித்தது! துய்ப்பார்க்கு, அதாவது உண்பவர்களுக்கு, அவர்களுக்குத் தேவையான துப்பு ஆய அதாவது உணவாகிய பயிர்வகைகளை, நிலத்தடி நீராகி வேர்மூலம் சென்று வளர்த்தும், பின்னர் துப்பு ஆக்கி, சமைப்பதற்குரிய உணவாகித் துப்பார்க்கு அதாவது உணவை உண்பவர்க்கு துப்பு ஆயதூஉம் தாகம் தீர்ப்பதற்கும், உணவு செரிப்பதற்கும் உரிய குடிநீர் ஆகியதும் மழை நீரேயாகும்! என்ற விரிவான பொருளைத் துப்பு என்ற சொல்லே ஐந்து வகையாய்த் தருகிறது! உண்ணுதல், பயிர் வளர்த்தல், சமைத்தல், உணவு, குடிநீர் என்ற ஐவகைப் பொருள்களுடன் துப்பு என்ற சொல்லே அமைந்துள்ளது.

    நீர் என்பது மேலிருந்து கீழே இறங்கும் தொழிலை உடையது! இந்த நீர் மேல் நோக்கிச் சென்று மேகமாகத் திரண்டு மழை நீராகி இறங்குகிறது! இவ்வகையில் நீரின் நிலைப்புச்சக்தி, இயங்குசக்தி என்ற இருவகை ஆற்றல்கள் வெளிப்படுகின்றன! கடல் நீர் நிலைப்புச் சக்தி; மழைநீர் இயங்கு சக்தி; அவற்றுடன் உணவுப் பயிர்களை வளர்ப்பது, உணவு சமைப்பது, குடிநீராகி விடாய் தீர்ப்பது போன்ற சிறுசிறு இயங்கு சக்திகளுடன் மழையாகிய நீர் பல்வேறு பயன்களைத் தருகிறது! கடவுளின் ஆற்றலைப் போலவே, நீரின் ஆற்றலும் எல்லையற்றது! அதனால் அது கடவுளின் ஆற்றலுக்கு ஒப்பானதாகிறது. காணாத இடத்திலிருந்து அருள்வது கடவுளாற்றல்! கண்ணுக்கு முன்னே காட்சி யளித்து அருள்வது மழையின் ஆற்றல்! அதனால்தான் கடவுள் வாழ்த்தினை அடுத்து, வான்சிறப்பினை வள்ளுவர் அமைத்தார்! இனி, இந்த அழகிய குறட்பாவை மீண்டும் ஒருமுறை கூறுவோம்!

    “துப்பார்க்குத் துப்புஆய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்புஆய தூஉம் மழை! “(12)

    ஒட்டாத வானத்திலிருந்து பெய்தாலும் உயிர்களுடன் ஒட்டி, உணவுப்பயிரை வளர்ப்பதாய், உணவாய், உணவைச் சமைப்பதாய், உண்ணும்போது உதவும் குடிநீராய், உணவை நொதிக்கச் செய்யும் சீரண நீராய் நம்முடன் ஐந்து வகைகளில் ஒட்டிக் கொண்டிருப்பது நீரே, என்பதை ‘துப்பு ‘எனச் சொல்லும் போதெல்லாம் நம் உதடு ஒட்டும்படி, இந்தக் குறட்பா அமைந்திருப்பதால் நாம் புதுமையான விளக்கத்தைப் பெற்று மகிழ்கிறோம்!

    Share
  • நடக்காத குற்றத்திற்கு மூவருக்குத் தண்டனை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்கா சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றுவதில் உலகிலேயே முதல் இடம் வகிக்கிறது என்பது எல்லோரும் அறிந்தது.  எவ்வளவு பெரிய பணக்காரர்கள் என்றாலும், எவ்வளவு பெரிய அரசியல்வாதிகள் என்றாலும் தவறு செய்தால் சட்டம் அவர்களை விட்டுவைப்பதில்லை.  இது மிகவும் பாராட்டுக்குரியது.  யாரோ செய்த குற்றத்திற்கு அதில் சம்பந்தப்படாதவர்களைத் தண்டிப்பதும் அமெரிக்காவில் நடக்கிறது.  இந்தியாவில் முன்னையது நடக்கவில்லை என்றாலும் பின்னையது நடக்கிறதா என்று தெரியவில்லை.  அது பற்றிப் பத்திரிக்கைகளில் அதிகம் செய்திகள் வருவதில்லை.  மேலும், தவறாகத் தண்டிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க வழக்கை மறுபரிசீலனை செய்யும் அமைப்பு எதுவும் அமெரிக்காவில் போல் இந்தியாவில் இல்லை.

    குற்றமே நடந்திராதபோது குற்றம் புரிந்ததாகப் பழிசுமத்தப்பட்டு மூவர் தண்டிக்கப்பட்டு முப்பத்து மூன்று வருஷங்களுக்கு மேல் அந்த மூவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது பற்றிச் சமீபத்தில் படித்தபோது அமெரிக்காவில் மட்டும்தான் இம்மாதிரி நடக்கும் போலும் என்று எண்ணத் தோன்றியது.

    1980-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியுயார்க் நகரின் புருக்லின் பகுதியில் இருந்த ஒரு மூன்று மாடி வீட்டில் தீப்பிடித்து மூன்றாவது மாடியில் குடியிருந்த ஒரு தாயும் அவருடைய ஐந்து குழந்தைகளும் அந்த விபத்தில் உயிர் இழந்தனர்.  அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்த அந்த வீட்டின் சொந்தக்கார அம்மாள் மேலே குறிப்பிட்ட மூன்று பேர்தான் அந்த வீட்டிற்குத் தீவைத்ததாகச் சாட்சியம் சொன்னார்.  இவர் சட்டவிரோதமாகப் போதைப் பொருள் விற்பவர்.  தனக்கும் அவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் ‘நான் திரும்பி வந்து அந்த வீட்டிற்குத் தீவைக்கப் போகிறேன்’ என்று கூறியதாகவும் தன்னுடைய சாட்சியத்தில் கூறினார்.  தீ விபத்து ஏற்படுவதற்குச் சற்று முன்பு அவர்கள் மூவரும் பேசியதைத் தான் கேட்டதாகவும் தீ விபத்து நடந்த பிறகு அவர்கள் மூவரும் அந்த வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சொன்ன சாட்சியத்தை வைத்து அந்த மூவருக்கும் தீ விபத்தை ஏற்படுத்தியதற்கும் ஆறு பேர் இறப்பதற்குக் காரணமாக இருந்ததற்கும் ஆயுள் முழுவதும் சிறைவாசம் என்று தீர்ப்பாகியது.  ஒருவர் மட்டும் கூறிய சாட்சியத்தை வைத்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

    தாங்கள் நிரபராதிகள் என்று எத்தனை முறை கூறியும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை.  இவர்கள் மூவர் மேலும் வழக்கு நடந்துகொண்டிருந்தபோது வில்லலோபஸின் மனைவியும் வாஸ்கஸின் மனைவியும்  தங்கள் கணவன்மார் குற்றம் நடந்த அன்று தங்களுடன் இருந்ததாகக் கூறிய சாட்சியத்தை நீதிமன்றம் ஒத்துக்கொள்ளவில்லை.

    ரேமாண்ட் மோரா என்பவர் 1989-இல் சிறையிலேயே மாரடைப்பால் காலமானார்.  வில்லியம் வாஸ்கஸ், அமௌரி வில்லலோபஸ் ஆகிய மற்ற இருவரும் சிறையில் உழன்றனர்.  வாஸ்கஸ் சிறையில் இருக்கும்போது  கண்களில் ஏற்படும் கண்திரவ அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிறை அதிகாரிகள் அவருக்குச் சரியான மருத்துவ சிகிச்சை அளிக்காததால் பார்வையை இழந்தார்.  வில்லலோபஸ் பல முறை தன்னைப் பரோலில் விடுமாறு கேட்டும் அதிகாரிகள் அவருக்குப் பரோல் வழங்கவில்லை.  சிறையில் இருக்கும் கைதிகள் பல ஆண்டுகள் சிறையில் இருந்த பிறகு அவர்களுடைய நன்னடைத்தைக்காக அவர்களுக்குப் பரோல் வழங்கப்படும்.  ‘தான் செய்த தவறுக்கு’ அவர் ஒருபோதும் வருந்தவில்லை என்ற காரணம் காட்டி அவருக்கு பரோல் கொடுக்க மறுத்து வந்தனர்.  33 வருடங்களுக்கு மேல் சிறையில் இருந்த பிறகு பரோல் கிடைத்து வெளியில் வந்த வில்லலோபஸ் நியுயார்க் சட்டக் கல்லூரியை அணுகித் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டியிருக்கிறார்.  அந்தக் கல்லூரியின் ‘தண்டிக்கப்பட்ட பிறகு நியாயத்திற்காகப் போராடும் பிரிவின்’ (Post-conviction Innocence Clinic) தலைவரும் அவருடைய சட்டம் படிக்கும் மாணவர்களும் இவருடைய வழக்கைத் திரும்ப எடுத்து ஆராய்ந்திருக்கின்றனர்.  சட்டக் கல்லூரிகளில் வேலைபார்க்கும் சில சட்டப் பேராசிரியர்கள் இந்த மாதிரிச் சில வழக்குகளைத் திரும்ப எடுத்து ஆராய்ந்து தவறாகத் தண்டிக்கப்பட்டவர்களை விடுவித்திருக்கிறார்கள்.

    தீ விபத்து நடந்த வீட்டின் முதல் தளத்தில் சில நேரங்களில் போதை மருந்திற்கு அடிமையானவர்கள் தீ மூட்டி போதை மருந்தைத் தயார்செய்வார்களாம்.  அப்படிச் செய்த ஒரு சமயத்தில் தீப்பொறி ஒரு மின்சாரக் கம்பியில் பற்றித் தீப்பிடித்துக்கொண்டிருக்கிறது.  இப்படிப் பற்றிக்கொண்ட தீ யாராலும் வேண்டுமென்றே மூட்டப்படவில்லை.  அப்படி ஏற்பட்டது ஒரு தீ விபத்தே. ஆனால், இதைக் காவல் துறை அப்போது ஒத்துக்கொள்ளவில்லை. நெருப்பு எப்படிப் பற்றுகிறது, அதன் பிறகு எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படுகின்றன என்ற விபரங்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் அப்போது ஏற்பட்டது விபத்துதான் என்று இப்போது முடிவுசெய்திருக்கிறார்கள்.

    மேலும், இவர்கள் மூவர் மேலும் குற்றம் சுமத்திய அந்த வீட்டின் உரிமையாளர் இறக்கும் தறுவாயில் தன் மகளிடம் தனக்கும் அந்த மூவருக்கும் போதைப் பொருள் விற்பனை சம்பந்தமாக ஏற்பட்ட தகராறினால் தான் அவர்களைக் குற்றவாளிகள் என்று காட்டிக் கொடுத்ததாகக் கூறி மனம் வருந்தியிருக்கிறார்.  அமெரிக்காவில் வீடுகள் உட்பட எல்லாக் கட்டடங்களிலும் நெருப்புப் புகையைக் கண்டுபிடித்து அலாரம் அடிக்க ஒரு கருவி இருக்க வேண்டும்.  இந்தப் பாதுகாப்பை வீட்டுக்கார அம்மாள் செய்யவில்லை.  அதனால் தன் மீது குற்றம் சுமத்தப்படலாம் என்று நினைத்து அது விபத்தில்லை என்று நம்பவைப்பதற்காக மூவர் மீதும் பழியைப் போட்டார்.

    இந்த வழக்கு எப்படி நீதிமன்றத்தால் முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டது என்று புரியவில்லை என்று இப்போது வழக்கை நடத்திய பப்ளிக் பிராசிக்யூட்டர் கூறியிருக்கிறார்.  பப்ளிக் பிராசிக்யூட்டரின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டிருப்போரில் அதிக ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர்கள் இவர்கள்தானாம்.

    2015 டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி இந்த மூவரும் குற்றமற்றவர்கள் என்று நீதிபதி கூறிய பிறகு நீதிமன்றத்திற்கு வந்திருந்த, சிறையில் இறந்துபோன மோராவின் மகளும் மனைவியும் ‘இது எங்களுக்குக் கிடைத்த சிறந்த கிறிஸ்துமஸ் பரிசு’ என்று கூறி ஒருவரையொருவர் ஆரத் தழுவிக்கொண்டனர்.  வாஸ்கஸ், ‘நான் இழந்த வருடங்களை யாராலும் எவ்வளவு பணத்தாலும் திருப்பிக் கொடுக்க முடியாது.  முப்பது வயதில் சிறைக்குச் சென்றேன்.  இப்போது 65 வயது ஆகிறது’ என்று கூறிக்கொண்டு பார்வையற்ற தன் கண்களிலிருந்து வழிந்த நீரைத் துடைத்திருக்கிறார்.  பல முறை தான் ‘மனம் திருந்தி’ வருத்தப்படாததைக் காரணம் காட்டி (செய்யாத தவறுக்கு யார் வருத்தம் தெரிவிப்பார்கள்?)  பரோல் மறுக்கப்பட்ட வில்லலோபஸ், ‘அவர்கள் எனக்குப் பெரிய தீங்கு இழைத்தார்கள்.  ஆனாலும் எனக்குக் கோபம் இல்லை.  எல்லாவற்றுக்கும் இறைவன் இருக்கிறார்’ என்று கூறியிருக்கிறார்.  இத்தனைக்குப் பிறகும் அவருக்கு இறை நம்பிக்கை இருக்கிறது!

    குற்றம் புரியாதவர்கள் தண்டிக்கப்படுவதும் அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து அவர்கள் அந்தப் பழியிலிருந்து விடுதலை பெறுவதும் அப்போது லட்சக் கணக்கில் தவறான தண்டனையை அனுபவித்தற்கு நஷ்டஈடாகப் பணம் பெறுவதும் அமெரிக்காவில் நடக்காத ஒன்றல்ல.  இதற்காகவே குற்றமின்மையை நிரூபிக்கும் அமைப்பு ஒன்று (Innocence Project) அமெரிக்காவில் இயங்கி வருகிறது.  இப்படி ஒன்று இல்லாவிட்டால் தவறாகத் தண்டிக்கப்பட்டவர்களின் கதி என்ன ஆகியிருக்கும் என்று யோசிக்கவே பயமாக இருக்கிறது.

    Share
  • “அவன், அது, ஆத்மா” (42)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 42

    நண்பன் கபாலியும், அவனும், “வை..ராஜா..வை”யும்

    அவன் சூளைமேடு கிருஷ்ணாபுரத்தில் இருந்தபொழுது அந்த வீட்டின் தென்னை ஒலை வேய்ந்த மாடியில் இரண்டு மூன்று பிரும்மச்சாரிகள் வாடகைக்குக் குடி இருந்தனர். அதில் அவனுக்கு நண்பன் கபாலியும் ஒருவன். கபாலி “எம்.எல். புஜாரா” நிறுவனத்தில் வேலை செய்து வந்தான். அந்த நிறுவனம் இராயபுரத்தில் இருந்தது. கிழிந்த அட்டைகள், நோட்டுப் புத்தகங்கள், தெருக்குப்பைகளைத் திரட்டி அதை “பேப்பர்” தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்புகிற தொழிலைச் செய்து வந்தது. கபாலி அந்த நிறுவனத்தில் நல்ல பொறுப்பில் மகிழ்ச்சியாக இருந்தான். கபாலியிடம் தீய பழக்கங்கள் எதுவும் இருந்ததில்லை.

    அவனும், கபாலியும் நிறைய திரைப்படங்களுக்குச் சேர்ந்தே சென்று வந்தனர். வேலை முடிந்து வந்தால் அருகில் உள்ள ராம் தியேட்டர், சாலிகிராமத்தில் இருந்த இராஜேந்திரா தியேட்டர், கோடம்பாக்கத்தில் லிபர்ட்டி தியேட்டர் போன்ற இடங்களுக்கு இரவுக் காட்சி திரைப்படங்களுக்குச் சென்று வருவார்கள். கபாலி, நடிகர் ஜெய்சங்கரின் தீவிர ரசிகன். அவன் சிவாஜி ரசிகன். அதனால் இருவரும் சேர்ந்தே அந்த இரு நடிகர்களின் படங்களுக்கும் செல்வது வழக்கம். அப்பொழுதெல்லாம் சாலிகிராமம் இராஜேந்திராவில் இரவுக் காட்சிக்கு இரண்டு படங்கள் போடுவார்கள். இரவு பத்து மணிக்குத் துவங்கி காலையில் மூன்று மணிக்கு அந்தப் படங்கள் முடியும். அப்படி ஒருமுறை “ராஜபார்ட் ரங்கதுரை, தேன்சிந்துதே வானம்” என்ற இரண்டு படங்களைப் பார்த்தனர். கபாலிக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. “ராஜபார்ட்ரங்கதுரை” படத்தில் ஒரு உணர்ச்சிகரமான கட்டத்தில் நம்பியாரும், சிவாஜியும் பேசும் சமயம் பக்கத்தில் படம்பார்த்துக் கொண்டிருப்பவரிடம் நம்பியாரைக் காட்டி, ” சார்..இவர்தான் சிவாஜியா என்றும், சிவாஜியைக் காட்டி இவர்தான் ஜெய்சங்கரா” என்றும் சிரிக்காமலே கபாலி கேட்டதற்கு, அந்த சிவாஜி ரசிகர்,” .தெரியலைனா பேசாம படத்த பாருங்க சார். நான் பாடத்தைப் பாக்கணும்” என்று கோபமாகச் சொன்னார். ” சார்…எனக்கு ஊர் டெல்லி…அதனால் இந்த ஊர் நடிகர்களைத் தெரியாது…அதுதான் கேட்டேன்…” என்றான் கபாலி. “..என்ன கிண்டலா பண்ணறீங்க…சிவாஜியக் கூடவா தெரியாது” என்று அந்த நபர் கேட்ட விதத்தை நினைத்து இன்றும் கூட அவன் சிரிப்பதுண்டு.

    ஒரு ஞாயிறு அன்று மதிய வேளையில் அவனும், கபாலியும் மின்சார ரயிலில் மாம்பலம் சென்று விட்டு நும்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி, அந்த ரயில் நிலையம் ஒட்டிய சிறிய தெருவழியாக நடந்து வந்து கொண்டிருந்தனர். தெரு ஓரத்தில் ஐந்தாறு பேர்கள் தரையில் அமர்ந்து கொண்டு ஏதோ விளையாடிக் கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தனர். “கண்ணா…அங்க என்ன விளையாடராங்கன்னு பார்க்கலாமா” என்று அவனிடம் கபாலி சொல்ல, இருவரும் அங்கு சென்றனர். தரையில் கட்டம் போட்டு, அதில் புளியங்கொட்டைகளை வைத்து “வை ராஜா வை…வை ராஜா வை..” என்று அவர்கள் விளையாடுவது அவனுக்குப் புதுமையாக இருந்தது. அவன் இதற்கு முன்பு இதுபோன்ற விளையாட்டைப் பார்த்ததில்லை. இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் அவர்களின் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்பி,” வாங்க சார்…ஐம்பது காசு வைச்சா..ஒரு ரூபாய் கிடைக்கும்…ஒரு ரூபாய் வைச்சா இரண்டு ரூபாய் கிடைக்கும்” என்று அங்கிருந்த அனைவருமே இவர்களைச் சூழ்ந்து கொண்டு சொல்லவும், ” ஏய்..கண்ணா …ஒங்கிட்ட எவ்வளவு இருக்கு” என்றான் கபாலி. ” ஐம்பது பைசா” என்றான் அவன். “சரி..அதை வை” என்று சொல்ல அவனும் அதை ஒரு சதுரத்தில் வைத்தான். “வை ராஜா வை…வை ராஜா வை..” என்று சொல்லி புளியங்கொட்டைகளைக் குலுக்கி போட ,” சார்..உங்களுக்கு ஒரு ரூபாய்” விழுந்திருக்கு….மறுபடியும் ஒரு ரூபாய் வையுங்க…இரண்டு ரூபாய் கிடைக்கும் என்றனர். “அவன் அந்த ஒரு ரூபாயை வைத்தான். இப்பொழுதும் அதே “வை ராஜா வை…வை ராஜா வை..” சொல்லிக்கொண்டு புளியங்கொட்டைகளைக் குலுக்கி போட ,” சார்…போச்சே…” என்றனர். அவன் அதிர்ந்து போனான். அன்று அவனுக்கு ஐம்பது காசு என்பது மிகப் பெரியது. ஜெயகாந்தனின் நாவல் ஒரு ரூபாக்குக் கிடைத்த காலம். அவனிடம் வேறு காசு இல்லை என்று தெரிந்து கொண்டவர்கள், கபாலியைப் பார்த்து, ” நீங்க வையுங்க…ஐந்து ரூபாய் வைச்சா பத்து ரூபாய் கிடைக்கும்…ஐம்பது ரூபாய் வைச்சா நூறு ரூபாய் கிடைக்கும்” என்று ஆசை காட்டினர். கபாலி தன்னுடைய மணிபர்சை கையில் வைத்தபடி,” உங்கள்ட்ட நூறு ரூபாய் இருக்கா” என்று கேட்டான் அப்பாவியாக.

    “ம்…இருக்கு..வையுங்க சார்…என்று சொல்லிக் கொண்டே கபாலி கையில் வைத்திருந்த “மணிபர்சில்” இருந்த ஐம்பது ரூபாய் நோட்டை அவர்களில் ஒருவன் மிக விரைவாக எடுத்து “வை ராஜா வை…வை ராஜா வை..” என்று சொல்லிக் கொண்டே தரையில் உள்ள சதுரத்தில் வைத்து, உடனே ” போச்சே சார்” என்று கூறிக் கொண்டு அந்த ஐந்து பேர்களும் அந்த இடத்தில் இருந்து வேகமாகக் கலைந்து சென்று விட்டனர். அவனும், கபாலியும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

    அது அவனுக்கு ஒரு பாடமானது. அன்று முதல் அவன் எந்த சூதாட்ட இடத்திற்கும் செல்வது கிடையாது. விளையாட்டிற்குக் கூட அவன் நண்பர்களுடன் “சீட்டும்” ஆடுவது கிடையாது. லாட்டரிச் சீட்டு போன்ற அதர்மமான வழிகளில் அவன் அறவே செல்வது கிடையாது. என்ன கஷ்டம் வந்தாலும் அதிக வட்டிக்கு ஆசைப் பட்டு பணத்தைத் தனியாரிடம் கொடுப்பதும் கிடையாது. அவன் தொலைத்த “ஐம்பது காசுகள்” அவனுக்குக் கற்றுக் கொடுத்த அனுபவப் பாடம் அதுதான்.

    “போச்சுது போச்சுது பாரத நாடு
    போச்சுது நல்லறம் போச்சுது வேதம்
    ஆச்சரி யக்கொடுங் கோலங்கள் காண்போம்
    ஐய இதனைத் தடுத்தல் அரிதோ?”

    என்று விதுரன் சூதாட்டத்தின் தீமையை திருதராஷ்டிரனிடம் கூறுகிற “பாஞ்சாலி சபதத்தின்” மகாகவி பாரதியாரின் வரிகள்தான் எத்தனை உண்மை.

    07.01.2016

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 45

    –சி. ஜெயபாரதன்.

     

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    “ஊத்தைப் பற்கள் நிரம்பிய ஒரு நாடு வயிற்று நோயால் நாச மடையும் ! பல நாடுகள் அப்படிச் செரிக்க முடியாத வயிற்று வலியோடு துன்புற்று வருகின்றன. சிரியாவில் சொத்தைப் பற்களைப் பார்க்க விரும்புவோர் கல்விக் கூடங்களில் படிக்கும் மாணவ மாணவிகளைப் பிற்காலப் பொறுப்புக்கு இன்று எப்படித் தயார் செய்கிறார் என்று காணச் செல்லுங்கள்.”
    கலில் கிப்ரான். (Decayed Teeth)
    ___________________

    வலுவற்ற மனிதன் !
    ___________________

    வசந்தம் வந்தது !
    வாய் திறந்து சிற்றோடைகளும்
    ஆறுகளும் முணுமுணுக்க
    ஆரம்பித்தன !
    பூக்களின் புன்சிரிப்புகள்
    பொங்கின !
    மனித ஆத்மா திருப்தி யுற்று
    மகிழ்ச்சி அடைந்தன !
    திடீரெனச் சினமுற்று
    இயற்கை
    குப்பையைக் கொட்டியது
    ஒப்பனை நகரில் !
    மனிதன் மறந்தான் இயற்கையின்
    சிரிப்பை, செழிப்பை,
    பரிவை எல்லாம் !
    பயங்கரக்
    குருட்டுப் புயல் விசை ஒன்று
    ஒரு மணி நேரத்தில்
    உருக் குலைத்தது
    பல பிறவிகள் மெய்வருந்தி
    உழைத்துக் கட்டியதை !
    மாசுகளால் கோர மரணம்
    மானிடரைப் பீடிக்கும் !
    விலங்கி னத்தையும்
    சிதைத்துச்
    சின்னா பின்ன மாக்கும் !
    ___________________

    நெருப்புப் பற்றி மக்களையும்
    சாதனங் களையும்
    எரித்துக் கரியாக்கும் !
    ஒரு பயங்கர நீளிரவு
    எழில் வாழ்வின்
    ஒளிமயத்தை எரித்துக்
    குப்பைக் கோலச் சாம்பலாக்கும் !
    அச்சமூட்டும்
    மூர்க்கச் சக்திகள்
    அழித்தது மனிதரை !
    அவரது குடி இல்லங்களை !
    அவரது
    அரும்பணிச் சாதனைகளை !
    அத்தகைய
    அழிவுப் பிரளயத்தில்
    பூமியின் மடியில் நின்றான்
    தூரத்தில் வலுவிலா
    அற்ப மனிதன் வழிபாடுடன்
    வெற்று நோக்குடன்
    வேதனை யுடன்
    கடவுளின் பேராற்ற லுக்கு
    அடங்கிக் கொண்டு !
    ___________________

    Share
  • தாய் மொழியில் பயின்றால்தான் மக்கள் வளம் பெறுவார்கள்

     

    தாய் மொழியில் பயின்றால்தான் மக்கள் வளம் பெறுவார்கள், ஜெர்மனியில் அனைத்துப் பள்ளிகளும் அரசுப் பள்ளிகளே , தங்க நகையே அணியாத நாடு ஜெர்மன், வாழ்க்கையில் கல்வி தான் நண்பன் என ஜெர்மன் ஆராய்ச்சியாளர் பேச்சு

     

    suba3

    தேவகோட்டை:
    “வாழ்க்கை முழுவதும் கல்விதான் சிறந்த நண்பனாக இருக்கும்,’ என ஜெர்மனி ஆராய்ச்சியாளர் சுபாஷினி ட்ரெம்மல் பேசினார்.

    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் வாழ்வியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.

    விழாவில் தமிழ் மரபு அறக் கட்டளை துணைத்தலைவரும் , கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான ஜெர்மனியில் வசிக்கும் மலேசியத் தமிழர் சுபாஷினி ட்ரெம்மல் மாணவர்களிடையே பேசுகையில், “”தமிழகத்திற்கு ஒரு முறை வந்தபோது, கல்வெட்டுகளில் கிறுக்கல்கள் இருந்தது. அதில் உள்ளதைப் படிக்க முயற்சித்தபோது கல்வெட்டு ஆராய்ச்சியில் ஆர்வம் வந்தது. ஜெர்மனியில் இலத்தீன் மொழியில் கல்வெட்டுகள் உள்ளன. அங்குள்ள பாடபுத்தகங்கள் பெரிய அளவிலும், பெரிய படங்களுடன் உள்ளன. ஜெர்மனியில் எல்லா பள்ளிகளும் அரசுப் பள்ளிகள்தான். ஆங்கிலம் வந்ததற்கு ஜெர்மன் மொழிதான் காரணம். பள்ளிகளில் வகுப்புகள் 1ம் வகுப்பு, 2ம் வகுப்பு, 3ம் வகுப்பு, 4ம் வகுப்பு எனவும்,பிறகு விரும்பிய பாடங்களை படிக்கும் வண்ணமும் வகுப்புகள் இருக்கும். 5 வது வகுப்புக்கு இரண்டாவது மொழியாக இத்தாலி, இலத்தீன் என எதையாவது தேர்ந்தெடுத்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

    suba2

    பிறகு, ஜெர்மனியில் வசந்த காலம், கோடைக் காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் என நான்கு பருவ காலங்கள் உள்ளன. ஜெர்மனியில் கோதுமை, கம்பு, சோளம், கடுகு அதிகமாகப் பயிரிடப்படுகிறது. கடுகில் இருந்து எண்ணெய், எரிவாயு தயாரிக்கப்படுகிறது. அங்கு 800 ஆண்டுகள் பழமையான கீல்ஸ் பல்கலைக்கழகம் உள்ளது. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த ட்ரையர் என்ற பழமையான தேவாலயம் உள்ளது என்றார். மாணவ மாணவிகளுக்கு ஜெர்மனிக்குச் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது. தமிழகத்திற்கு இது வரை 16 முறை வந்துள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் மிகவும் பிடித்த இடம் திருவண்ணாமலை அருகே சமண கோவில் உள்ள திருமலை என்கிற இடம் தான் என்று கூறினார். ஜெர்மனியில் பிடித்த இடம் பெர்லின் எனக் கூறினார்.

    தாய் மொழியில் பயின்றால் மட்டுமே அனைவரும் நல்ல நிலைமைக்கு வர இயலும் என்று கூறினார். கல்வி கற்பது வாழ்வில் இன்றியமையாதது. கல்வி கற்பது பல வாழ்வியல் முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும். சிறந்த கல்வியாளர்களாக வர வேண்டும். வாழ்க்கை முழுவதும் பல வழிகளிலும் கல்வி தான் சிறந்த உற்ற நண்பனாக இருக்க முடியும். வீதிகளில் பல இடங்களிலும் பார்க்கும் போது ஆங்காங்கே குப்பை கிடக்கிறது. குப்பைகளை கொட்டக் கூடாது. அதற்கான இடங்களில் கொட்ட வேண்டும். யாரேனும் குப்பையைக் கொட்டினால் அதை எடுத்து தொட்டியில் போடவேண்டும். குப்பைகளைக் கண்ட இடங்களில் போட்டால் ஏற்படும் கெடுதல்களை பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இளம் வயதிலேயே கீரை போன்ற சத்தான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும் என்றார்.

    suba1

    தனலெட்சுமி, பரமேசுவரி, சௌமியா, சந்தியா, காயத்திரி, முனிஸ்வரன், ஜெகதீஸ்வரன், அய்யப்பன் உட்படப் பல மாணவ, மாணவியரின் கேள்விக்கு பதிலளித்தார். விழாவில் எல்.ஐ.சி., மேனாள் கோட்ட மேலாளர் வினைதீர்த்தான், மணலூர் அழகு மலர் பள்ளி தாளாளர் யோகலட்சுமி, திருச்சி கடல் ஆராய்ச்சி மாணவர் அப்துல் ரகுமான் ஆகியோர் பேசினர். ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

    பட விளக்கம் :
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஜெர்மன் நாட்டுத் தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுபாஷிணி ட்ரம்மல் மாணவர்களுடன் ஜெர்மன் நாடு தொடர்பாக கலந்துரையாடினார்.

    L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
    Head Master,
    Chairman Manicka Vasagam Middle School,
    Devakottai.630 302.
    Sivagangai Dist.
    TamilNadu.
    09786113160.
    E-Mail : jeyamchok@gmail.com
    http://www.kalviyeselvam.blogspot.in/

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ஆண்டாள் – 22 ….
    —————————————

    e1d38a8f-45fe-4164-b163-607ed25801b5

    ”அங்கண்மா ஞாலத்திற்(கு) ஆண்டாள் திருப்பாவை,
    திங்கள் கதிர்முகத்தோன் தேவகிசேய், -செங்கண்மால்,
    நோன்பிருந்து சொல்லியவண்ணம் நாடுவோர் நிச்சயம்
    வான்புகவை குண்டம் வசம் ” ….கிரேசி மோகன்….

    Share
  • சிவபிரதோஷம்

     

    “நம்பிப் பிடித்தேன்”

    (மீ.விசுவநாதன்)

    நம்பி இறைவ னிருதாள் பிடித்தால் நமதுளத்தில்
    எம்பிக் குதித்துக் கிடப்பான் அழகனாம் ஈசனென்பான் !
    வெம்பி விழாமல் வினையைத் திருப்பிடச் செய்வதற்கு
    “நம்பி” அவனைத் தவிரவும் யாரடா நம்துணையே !

    ( கட்டளை கலித்துறை )
    (பிரதோஷ தினம் : 07.01.2016)

    Share
  • மார்கழி மணாளன் 22 திரு அன்பில் – வடிவழகிய நம்பி  

     க. பாலசுப்பிரமணியன்

    7e4175fa-f573-49ca-b2e5-0ba6d431f218

    நீர்பாதி நிலம்பாதி தன்னில் தவமாக  உடல் நிறுத்தி

    நிலையில்லா மனம்தன்னை இறை நினைவில் நிறுத்தி

    நினைவின் கருவாய் நீர்வண்ணன் உருவம் நிறுத்தி

    நினைவிழந்த தவத்தோனாய் நின்றான் சுதபனுமே !

     

    சுடுசொல்லில் சுவைகண்ட துர்வாசர் நிலையிழந்து

    உருமாற்றி உருக்குலைந்த தவளையாய் உருவாக்க

    உள்ளத்திலே தவமாகத் தாமோதரன்  மட்டுமிருக்க

    உளம்கனிந்த வடிவழகன் சுதபனுக்குக் காட்சி அன்பில் !

     

    தன்னழகில் நிலைகுலைந்த தவத்தோன் நான்முகனும்

    விண்ணுலகில் வேறில்லையென்ற மமதையில் நிற்க

    வடிவழகன் கண்டதுமே விழிநிறுத்தி வியந்தான் அன்பில்

    கண்ணமுது தேடியவன் விண்ணமுது கிடைத்திடவே !

     

    கண்ணழகு காலழகு கையழகு கண்ணா !

    காண்கின்ற திசையெல்லாம் உன்னழகு !

    கோலாட்ட நடையழகு கைகளிலே குழலழகு

    குசேலன் நட்பழகு நீ குறைவில்லா வடிவழகு !

     

    வாமன வடிவழகு!  வளர்ந்திட்ட விஸ்வரூபம் அழகு !

    வராஹ வடிவழகு! வீரனே! வில்லுந்தன் கையழகு !

    தாழம்பூ மணமழகு! உன்னருகே தாயாரின் துணையழகு !

    தாளாத அன்பழகு ! தூயவனே, உன் திருவுள்ளம் அழகு!

     

     

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ”ஆண்டாள் -21″….
    ————————————-

    f9e8e11b-dff8-4daf-b1c0-55a346482f35

    போற்றக் கலங்களெதிர் பார்க்கும் கலங்கரைத்
    தோற்றத்திற்க்(கு) ஈடாய் திருப்பாவை, -சாற்றினாள்
    சம்சாரக் கப்பலது, சிக்கிடாது பக்தியாம்
    மின்சாரம் ஆண்டாள் மினுக் ….கிரேசி மோகன்….

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: எல்லாம் பொய் அட்டூணே வாய்

     

    சேர்ந்தா ரொருவரைச் சேர்ந்தொழுகப் பட்டவர்
    தீர்ந்தாராக் கொண்டு தெளியினும் – தேர்ந்தவர்க்குச்
    செல்லாமை காணாக்கால் செல்லும்வாய் என்னுண்டாம்
    எல்லாம்பொய் அட்டூணே வாய்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்து ஒழுகப்பட்டவர்
    தீர்ந்தாராக் கொண்டு தெளியினும், தேர்ந்து அவர்க்குச்
    செல்லாமை காணாக்கால், செல்லும்வாய் என் உண்டாம்?-
    எல்லாம் பொய்; அட்டு ஊணே வாய்.

    பொருள் விளக்கம்:
    தன் சுற்றத்தார் ஒருவரை; உதவிநாடி தன்னிடம் வந்தவரை விருந்தோம்பும் ஒருவர், வந்தவர் தன்னுடன் தொடர்பில் இருப்பவரல்ல என்று தெளிவாகத் தெரிந்தாலும், அந்த உறவினர் வறுமையில் இருந்து மீள முடியாதிருப்பதை ஆராய்ந்து அதை நீக்கும் முறையை அறிந்திராவிடில், அவருக்கு வேறு என்னதான் வழி இருக்கிறது? (பசி நீக்கும் உணவளித்துக் காப்பதைத் தவிர பிற உதவிகள்) எல்லாமே பொய்; சமைத்து உணவளித்து உதவுவதே மெய்யான உதவி.

    பழமொழி சொல்லும் பாடம்: அறங்களுள் சிறந்த அறமாகக் கருதப்படுவது வறியவரின் பசி நீங்க உணவளிப்பது மட்டுமே. பசி தீர்க்கும் அறத்தின் சிறப்பை வள்ளுவர்,

    அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
    பெற்றான் பொருள்வைப் புழி. (குறள்: 226)

    வறுமையில் உழல்பவரின் பசியைத் தீர்த்திடுக. அந்த அறம் ஒன்றே பொருள் பெற்றோர் தனது செல்வத்தை தம் பிற்கால நலனுக்காகச் சேமித்து வைக்கும் கருவூலம் என்கிறார்.

    Share
  • நாசாவின் பொழுது புலர்ச்சி விண்ணுளவி குள்ளக் கோள் செரிஸை நெருங்கி விட்டது

    ajay

    பொழுது புலர்ச்சி விண்ணுளவி

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++

    https://youtu.be/MTfMBJngwtw

    https://youtu.be/0bWZ5U-YYq4

    https://youtu.be/5OFgJwdZxRc

    http://dawn.jpl.nasa.gov/mission/live_shhttots.html

    https://twitter.com/NASA_Dawn

    http://www.space.com/29984-dawn-spacecraft-ceres-glitch-recovery.html#ooid=lweDJsdToMMQlqJIAcCgIW64PjI42ma0

    ++++++++++++++

    நிலவினில் தடம் வைத்தார்
    நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
    செவ்வாய்க் கோள் ஆராயத்
    தளவுளவி சிலவற்றை
    நாசாவும்
    ஈசாவும் உளவ இறக்கின !
    வால்மீன் வயிற்றில் அடித்து
    தூசியை விண்வெளியில் ஆராய்ந்தார்
    நாசா விஞ்ஞானிகள் !
    வால்மீனை விரட்டிச் சென்று
    தூசியைப் பிடித்துக்
    காசினியில் இறக்கும் விண்கப்பல் !
    வக்கிரக் கோள் ஒன்றின்
    மாதிரி மண் எடுத்து
    பூமிக்கு மீண்டது
    ஜப்பான் விண்ணுளவி !
    அயான் எஞ்சினை முதன்முறை இயக்கி
    பல மில்லியன் மைல்கள்
    பயணம் செய்து
    முரண்கோள் வெஸ்டாவை
    முற்றுகை இட்டு
    புலர்ச்சி விண்ணுளவி
    குள்ளக் கோள் செரிஸை நெருங்கி,
    நீரெழுச்சி காணச் செல்லும்
    சூரிய மண்டலம் ஆய்வதற்கு !

    +++++++++++

    Dawn close to Ceres

    பொழுது புலர்ச்சி விண்கப்பல் குள்ளக் கோள் செரிஸை நெருங்கி விட்டது.

    2007 இல் ஏவப்பட்டு நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி [Dawn Space Probe] முதன்முறையாக அயான் எஞ்சினை உந்துவிசையாகப் பயன்படுத்தி சுமார் 8 ஆண்டுகள் தொடர்ந்து பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து, முரண் கோள்கள் திரியும் வளையத்தில் [Astroid Belt – Between Mars & Jupiter] வெஸ்டா முரண்கோளைச் 14 மாதங்கள் [2011- 2012] சுற்றி முதலில் ஆராய்ந்தது.  பிறகு பயணம் தொடர்ந்து, இப்போது அடுத்தோர் குள்ளக் கோள் செரிஸை [Dwarf Planet Ceres] ஆராய நெருங்கி விட்டது.  முதல் நெருக்கத் தளப்பதிவுச் சுற்றுவீதி [Survey Orbit- RC3]  2700 மைல் [4400 கி.மீ.] உயரத்தில் இயக்கப் பட்டது. அது நிகழ விண்ணுளவி ஒரு மாத நாட்களில் 5 சுற்றுக்கள் செய்தது. அந்த உயரத்தில் பொழுது புலர்ச்சி விண்ணுளவி 3 வாரங்கள் தளப்பதிவு [Survey] செய்தது.

    Dawn's orbit

    அடுத்து புலர்ச்சி விண்ணுளவி 118 சுருள் சுற்றுகளில் [Spiral Revolutions] செரிஸ் நோக்கி இறங்கி, 915 மைல் [1470 கி.மீ.] உயரத்தில் மூன்றாம் தளப்பதிவுச் சுற்றைத் [HAMO -High Altitude Mapping Orbit] தாண்டி, 240 மைல் [385 கி.மீ.] உயரத்தில் நான்காம் தளப்பதிவுச் சுற்றுக்கு [LAMO -Low Altitude Mapping Orbit] மாறுகிறது.  அந்த மாறுபாடு நேரும்போது விண்ணுளவி 2 மாதக் காலம் 160 முறை சுற்றிவரும்.

    பொழுது புலர்ச்சி விண்ணுளவில் இயங்கி வரும் கருவிகள் :

    1.  நியூட்ரான் ஒளிப்பட்டை மானி  [Neutron Spectrometer]
    2.  காமாக் கதிர் ஒளிப்பட்டை மானி  [Gamma Ray Spectrometer]
    3.  உட்சிவப்புத் தளப்பதிவு ஒளிப்பட்டை மானி   [Infrared Mapping Spectrometer]
    4.  கூர்மையான காமிரா  [Powerful Camera]

    குள்ளக் கோள் செரிஸ் தன்னை ஒருமுறை சுற்ற சுமார் 9 மணி நேரம் எடுக்கிறது.  புலர்ச்சி விண்ணுளவி செரிஸை ஒருமுறை சுற்ற 5:30 மணி நேரம் பிடிக்கிறது.  இப்போது [டிசம்பர் 4, 2015] பொழுது புலர்ச்சி விண்ணுளவி பூமியிலிருந்து 309 மில்லியன் மைல் [500 மில்லியன் கி.மீ] தூரத்தில் இயங்கிக் கொண்டு வருகிறது.  அதிலிருந்து வரும் வானலைச் சமிக்கைகள் [ரேடியோ சிக்னல்ஸ்] பூமிக்கு வந்து சேர சுமார் 1 மணி நேரம் [55 நிமிடங்கள்] ஆகும்.

    Dawn closer to Ceres

    “ஹெர்ச்செல் விண்ணோக்கி ஆய்வகத்தின் மூலம் செரிஸ் குள்ளக் கோளில் நீர் எழுச்சி ஊற்றுகள் இருப்பதாக நாங்கள் கண்டது இதுவே முதன்முறை.   மேலும் இந்தக் கண்டுபிடிப்பு செரிஸின் அடித்தளத்தில் உறைந்த பனித்தள இருப்பையும், மேல்தள வாயுச் சூழ்வெளி அமைப்பையும் நிரூபித்துக் காட்டியது.”

    மைக்கேல் கியூப்பர்ஸ் [European Space Agency -ESA Spain] 

    “செரிஸ் குள்ளக் கோளில் நீர் எழுச்சி ஊற்றுக்கள் உண்டாக அடித்தளக் கடல் உறைதுள்ளதா ?   அல்லது தென்படும் இருபுற நீர் எழுச்சி ஊற்றுகள் மட்டும் தனித்து இயங்குபவையா என்னும் வினாக்கள் எழுகின்றன. ”

    ஃபிரான்ஸ் விஞ்ஞான ஆராய்ச்சித் தேசீய மையம் வானியலார்.

    Dawn close to Ceres -1

    செரிஸ் குள்ளக் கோளில் நீர் எழுச்சி ஊற்றுக்கள் கண்டுபிடிப்பு பில்லிய ஆண்டுகளுக்கு முன்பு  நீரும், கார்பன் மூலக்கூறுகளும் சுமந்து வந்த முரண் கோள்கள் [Comets & Asteroids] பூமியைத் தாக்கின என்னும் முன்னோடி நியதிகளை வலியுறுத்தும்.    அடுத்த  ஆண்டு நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி [Dawn Spacecraft] செரிஸ் குள்ளக் கோளைச் சுற்றும் போது மேலும் புதிய தகவல் கிடைக்கும்.”

    ஹம்பர்டோ  காம்பின்ஸ் & கிரிஸ்டீன் கம்ஃபர்ட்,  வானியலார், மத்திய பிளாரிடா பல்கலைக் கழகம்.  

    “2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகளை ஒரு வக்கிரக் கோளுக்கு [Asteroid]] அனுப்பி வைக்க நாசாவுக்கு நான் ஆணை இடுகிறேன்.  அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் “புலர்ச்சி” விண்ணுளவி (Dawn Space Probe) தேவையான விபரங்களை இப்போது சேமிக்கும்.”

    ஓபாமா அமெரிக்க ஜனாதிபதி

    Location of Dawn spacrcraft

    “முதன்முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) முக்கிய வக்கிரக் கோள் ஒன்றை நாசாவின் விண்ணுளவி சுற்ற ஆரம்பித்து விண்வெளித் தேடலில் ஓர் உன்னத மைல்கல் நட்ட இன்றைய தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம்.  வெஸ்டா வக்கிரக் கோளை விண்ணுளவி ஆராய்வது மாபெரும் விஞ்ஞானச் சாதனையாகக் குறிக்கப்படுகிறது.  அது எதிர்காலப் பரிதி மண்டலக் கோள்களுக்கு மனிதர் பயணம் செய்யப் பாதை விரிக்கிறது.”

    சார்லஸ் போல்டன் (NASA Administrator)

    Water found in Ceres

    சூரிய மண்டலத்தைச் சேர்ந்த குள்ளக் கோள் செரிஸில் நீர் எழுச்சி ஊற்றுக்கள் கண்டுபிடிப்பு  

    2014 ஜனவரி 22 இல் ஈசாவின் விஞ்ஞானிகள் [ESA European Space Agency Scientists]  தமது ஹெர்ச்செல் விண்ணோக்கி ஆய்வகத்தின் மூலம் [Herschel Space Observatory] குள்ளக் கோள் செரிஸிலிருந்து விட்டுவிட்டுத் தெரியும் இரண்டு நீர் எழுச்சி ஆவி ஊற்றுகள் [Water Vapour Spouts, like Geysers] வெளியேறு வதை நோக்கியுள்ளார்.   முழு உருண்டையான குள்ளக் கோள் செரிஸ் முரண் கோள்கள் சுற்றும் வளையத்தில் [Asteroid Belt]  ஒன்றாக உள்ளது.  முரண்கோள்கள் வளையம் செவ்வாய்க் கோளுக்கும், பூதக்கோள் வியாழனுக்கும் இடையே சூரியனைச் சுற்றி வருகின்றன.  செரிஸ் குள்ளக் கோள், முரண்கோள்கள் எல்லாவற்றிலும் மிகப் பெரியது !

    Dawn approaches Ceres

    2007 இல் நாசா ஏவிய “புலர்ச்சி” விண்ணுளவி வெஸ்டா முரண் கோளை முதலில் சுற்றி உளவித் தற்போது குள்ளக் கோளை நோக்கிச் செல்கிறது.  புலர்ச்சி 2015 ஏப்ரலில் செரிஸ் குள்ளக் கோளைச் சுற்றி நீர் எழுச்சி ஊற்றுக்களை நெருங்கி ஆராய்ந்து, புதுத் தகவலை அனுப்பும்.  செரிஸ் குள்ளக் கோளை முதன்முதல் 1801 இல் இத்தாலிய வானியல் விஞ்ஞானி கியூஸெப் பியாஸ்ஸி [Giuseppe Piazzi] கண்டுபிடித்தார்.  அது வேளாண்மை, இனவிருத்தியைக் குறிப்பிடும்  ஒரு ரோமன் பெண் தெய்வத்தின் பெயர்.  செரிஸின் விட்டம் 950 கி.மீ. [590 மைல்].  அது ஒருதரம் சூரியனைச் சுற்றிவர நாலரை ஆண்டுகள் எடுக்கும்.   முதலில் அதைச் சூரிய மண்டலத் தோற்றத்தில் எச்சமான ஒரு பளுமிக்க முரண்கோள் [Massive Asteroid] என்றுதான் கருதினார்.   கூர்ந்து நோக்கியதில் அது முழு உருண்டை வடிவத்தில் சிலிகேட் உட்கரு கொண்ட, பனிக்கவச உட்புறத்தை  உடைய சிறுகோள் என்று முடிவு செய்யப் பட்டது.  2008 ஆம் ஆண்டில் அகில் வானியல் ஐக்கியக் குழுவினர்   [IAU – International Astronomical Union] தீர்ப்புப்படி அது குள்ளக் கோள்கள் [Dwarf Planets] வகுப்பில் ஒன்றாய் புளுடோ கோளுடன் இடப்பட்டது.

    Dawn spiraling toward Ceres

    2011 -2013 ஆண்டுகளுக்கு இடையில் ஐரோப்பா விண்வெளி  ஆணையகத்தைச் [ESA -European Space Agency] சேர்ந்த மைக்கேல் கியூப்பர்ஸ் [Michael Kueppers] என்பவர் பூமியைச் சுற்றிவரும் ஹெர்ச்செல் விண்ணோக்கியின் உட்சிவப்புக் கருவி மூலம் [Infra-Red Instrument] நான்கு முறை, குள்ளக் கோள் செரிஸை உளவி வந்தார்.   அப்போது அவர் வியக்கத் தக்க முறையில் செரிஸ் குள்ளக் கோளில் முதன் முறையாக இரண்டு நீர் எழுச்சி ஊற்றுக்களைக் கண்டார்.  அவை இரண்டும் சூரியனை நோக்கும் திசையில் தெளிவாய்த் தெரிந்தன.   நீள்வட்ட  வீதியில் சூரியனைச் சுற்றி வரும் செரிஸ் குள்ளக் கோள் சூரியனை நெருங்கும் போது மட்டுமே அந்த நீர் ஊற்றுகள் தென்பட்டன.   அந்த இரண்டு நீர் ஊற்றுக்களும் வினாடிக்கு [6 கி.கி.] 13 பவுண்டு வீதம் நீரை வெளியேற்றியன.  விஞ்ஞானிகள் நீர் எழுச்சி ஊற்றுகள் செரிஸில் இருப்பதாகக் கண்டது இதுவே முதன்முறை.   மேலும் இந்தக் கண்டு பிடிப்பு செரிஸின் அடித்தளத்தில் உறைந்த பனித்தள இருப்பையும், மேல்தள வாயுச் சூழ்வெளி அமைப்பையும் நிரூபிக்க  வழி வகுத்தது.

    Herschel Space Observatory

    செரிஸில் நீர் எழுச்சி ஊற்றுக்கள் ஒரு சமயம் தெரிந்தும், மறு சமயம் மறைந்தும் மாறி மாறி  வருவதற்குக் காரணம் என்ன ?   விந்தையாக நீர் எழுச்சி ஊற்றுகள் சூரியனுக்கு நேர் எதிரில் வரும் போதுதான் தெரிகின்றன.   சூரியனுக்கு அப்பால் செரிஸ் நீள்வட்ட வீதியில்  செல்லும் போது, நீர் ஊற்றுகள் தெரிவதில்லை.   அதவது செரிஸ் சூரியனுக்கு அருகில் வரும் போது  மேற்தளம் சூடாகி, அதன் அடித்தளத்தில் உள்ள உறைந்த நீர் உருகி, அழுத்தம் ஏறி பீறிட்டு எழுகிறது !   சூரியனைச் செரிஸ் தாண்டிப் போனதும் அடித்தளம் குளிர்ந்து போவதால் நீர் எழுச்சி ஊற்று நிறுத்தம் அடைகிறது !  2015 ஏப்ரலில்சுற்றப் போகும் நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி செரிஸை நெருங்கி நோக்கும் போது இன்னும் புதிய தகவல் வெளியாகும்.

    Dawn Orbit around Ceres -1

    “புலர்ச்சி விண்ணுளவி வெஸ்டாவைச் சுற்றும் போது ஆராய எத்தனை தணிவாகச் செல்ல முடியுமோ அத்தனைத் தணிவு உயரத்தில் பயணம் செய்ய முயல்கிறோம்.  விண்ணுளைவி வக்கிரக் கோளில் தவறி விழுந்து முறிந்து போனால் நாசா எங்கள் மீது படுகோபம் அடையும்.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (University of California, LA)

    “வக்கிரக் கோள் வெஸ்டாவில் ஓர் உலோகக் கரு (Metal Core) மையத்திலும் சிலிகேட் பாறை அதைச் சுற்றிலும் இருப்பதாக நாங்கள் ஊகிக்கிறோம்.  பரிதி மண்டல வரலாற்றில் எப்போதோ அதன் தென் துருவ முனை உடைந்து பெரும்பான்மைப் பகுதி சப்பையாகப் போனது.   அப்பகுதியின் சிதறிய சில துணுக்குகள் பூமியிலும் விழுந்திருக்கலாம்.  பூமியில் விழுந்த 20 விண்கற்களில் ஒன்று வெஸ்டாவி லிருந்து விழுந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

    “வெஸ்டா, செரிஸ் வக்கிரக் கோள்களை ஆராயும் போது விண்கோள்களின் முரணான தோற்றப் பண்பாடுகளை அறிய முடியும்.  முன்னது பரிதி மண்டல அகக் கோள்கள் போல் (Inner Planets) பாறைக் கட்டமைப்பில் வார்க்கப் பட்டது.  பின்னது புறக்கோள்கள் போல் (Outer Planets) பனித்தள வடிவத்தில் உருவானது.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

    நாசா விண்ணுளவி புலர்ச்சி செரிஸ் முரண்கோள் நோக்கிச் செல்கிறது.

    முதல் விண்வெளிக்  குறிக்கோள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி இரண்டாவது குறிப்பணியைத் துவங்க முரண்கோள் “செரிஸ்”  [Asteroid Ceres] நோக்கி இப்போது [2012 நவம்பர்] சென்று கொண்டிருக்கிறது.    2011 ஜூலை 15 ஆம் தேதி விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண் கோள் ஈர்ப்பு விசையில் இழுக்கப் பட்டு அதைச் சுற்ற ஆரம்பித்தது.   ஏறக்குறைய  ஒன்பது மாதங்கள்  புலர்ச்சி வெஸ்டாவை வலம் வந்து பல ஆய்வுத் தகவல் அனுப்பி, 2012 ஆகஸ்டு மாதத்தில் ஈர்ப்பி லிருந்து விடுபட்டு அடுத்த முரண்கோள் செரிஸை நோக்கிச் செல்லத் துவங்கியது.

    2007 செப்டம்பர் 7 ஆம் தேதி விண்வெளியில் ஏவப்பட்ட புலர்ச்சி விண்ணுளவி  2008 ஆகஸ்டில் பூமி, செவ்வாய்க் கோள் கடந்து முரண் கோள்கள் நிரம்பிய வக்கிரக் கோள் வளையத்த நெருங்கி 2011 ஜூலை 15 ஆம் தேதி வெஸ்டா ஈர்ப்பு விசையில் இறங்கி  அதைச் சுற்ற ஆரம்பித்தது.   விண்ணுளவி புலர்ச்சி முரண் கோள்கள் வெஸ்டாவும், செரிஸும் போல சூரினைச் சுற்றி வருகிறது.   சூரியனி லிருந்து பூமி சுமார் 93 மில்லியன் மைல்கள் [150 கி.மீ.] சராசரி தூரத்தில் சூரினைச் சுற்றுகிறது.  இந்த தூரமே [One Astronomical Unit (1 AU)] என்று குறிப்பிடப்  படுகிறது.  இப்போது புலர்ச்சி விண்ணுளவி  வெஸ்டாவை விட்டு விலகி செரிஸ் முரண் கோளை நெருங்க தனிப்பட்ட சூரிய நீள்வட்டச் சுற்று வீதியில் பயணம் செய்கிறது.

    இவ்விதம் புலர்ச்சி விண்ணுளவி பல மில்லியன் மைல்கள் எளிதாய், ஆனால் மெதுவாய்ப் பயணம் செய்ய உந்துசக்தி தருவது அதன் : அயான் எஞ்சின் [Ion Propulsion System].   அதன் உந்துசக்தி வேகம் மணிக்கு 16,300  மைல்கள்.  அதாவது வினாடிக்கு 7.3 கி.மீ.  இப்போது [2012 நவம்பர்]  புலர்ச்சி விண்ணுளவி பூமியிலிருந்து 166 மில்லியன் மைல் [267 மில்லியன் கி.மீ.] தூரத்தில் பயணம் செய்கிறது.   புலர்ச்சிக்குச் செரிஸ் முரண்கோள் 37 மில்லியன் மைல் [59 மில்லியன் கி.மீ.] தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.

    நாசா விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண்கோளைச் சுற்றி முடித்தது.

    நாசா 2007 செப்டம்பரில் ஏவிய புலர்ச்சி விண்ணுளவி புவியைத் தாண்டிப் பரிதி மண்டலத்தில் நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து, 2011 ஜூலை 17 ஆம் தேதிமுதன் முதல் முரண் கோள் வளையத்தில் (Asteroid Belt) தடம் வைத்துப் பெரிய வடிவில் ஒன்றான வெஸ்டா வக்கிரக் கோளை (Asteroid Vesta) நெருங்கிச் சுற்ற ஆரம்பித்தது.  பரிதி மண்டல முரண் கோள் வளையத்தில் கோடான கோடி வக்கிரக் கோள்கள் செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையே வியாழனைச் சுற்றிக் கொண்டு வருகின்றன.  நகரும் இந்த அடர்த்தி மந்தையில் வெஸ்டாவைக் கண்டுபிடித்துப் பிற வக்கிரக் கோள்கள் மோதிச் சிதையாமல் சுற்றி வருவது ஒரு மாபெரும் விண்வெளிச் சாதனையாகவும் வரலாற்று மைல் கல்லாகவும் கருதப்படுகிறது.

    Relative Sizes of Dwarf Planets

    விண்ணுளவி அன்றைய தினத்தில் வெஸ்டாவை 530 கி.மீ. (300 மைல்) உயரத்தில் வலம் வந்தது.  வெஸ்டாவை நெருங்கவே நான்கு வருடங்கள் கடந்து விட்டன.  ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி மேலும் நான்கு ஆண்டுகள் பயணம் செய்து அடுத்துள்ள எல்லா வற்றுக்கும் பெரிய முரண்கோள் செரிஸை (Asteroid Ceres) 2015 இல் சுற்றத் துவங்கும்.  2015 இல் செரிஸை ஐந்து மாதங்கள் ஆய்வு செய்து புலர்ச்சியின் குறிப்பணி முடியும் போது அது சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணம் செய்திருக்கும்.

    Dawn Orbit around Ceres

    2007 செப்டம்பர் 27 ஆம் தேதி புலர்ச்சி விண்ணுளவி அமெரிக்காவின் பிளாரிடா கெனாவரல் ஏவுகணை முனையிலிருந்து டெல்டா -2 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.  10 கி. வாட் மின்னாற்றல் கொண்ட சூரிய சக்தி அயான் எஞ்சின் முடுக்கி மெதுவாகச் சென்று 2011 ஆண்டு ஜூலையில் வெஸ்டா முரண்கோளையும், 2015 இல் செரிஸ் முரண்கோளையும் ஆராயத் திட்டமிடப் பட்டது  2015 இல் அதன் விண்ணுளவு முடியும் போது அது சுமார் 3 பில்லியன் (5 பில்லியன் கி.மீ) தூரம் பயணம் செய்திருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.  இந்த திட்டத் துக்குச்  செலவாகும் நிதித் தொகை 475 மில்லியன் டாலர்.  பூமியைக் கடந்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி செவ்வாய்க் கோளை அண்டி ‘நெருக்க ஈர்ப்பு வீச்சில்’ (Flyby Gravity Force) வேகம் மிகையாகி வெஸ்டாவை விரைவில் அடையத் திட்டமிடப் பட்டது.

    வக்கிரக் கோள் வெஸ்டா 1807 ஆண்டில் பூதக் கோள் வியாழனுக்கும், செந்நிறக் கோள் செவ்வா யிக்கும் இடையே உள்ள முரண்கோள் வளையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, வெஸ்டாவின் குறுக்கு நீளம் 326 மைல் (525 கி.மீ).  தென்புறத்தில் நேர்ந்த பெருத்த மோதலில் வெஸ்டா துருவப் பகுதியில் சிதைவடைந்து சப்பையான கால்பந்து போல் தோற்றம் அளிக்கிறது.  பூமியி லிருந்து சுமார் 117 மில்லியன் மைல் (188 மில்லியன் கி.மீ.) தூரத்தில் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இந்த விந்தை வரலாறு நிகழ்ந்திருக்கிறது !  திட்டத்தில் அடுத்த சிறப்பு முயற்சி என்ன வென்றால் புலர்ச்சி விண்ணுளவி இத்தனை தூரப் பயண நகர்ச்சிக்கும், திசை திருப்பத்துக்கும் ஒரு புதுவித அயான் எஞ்சினைப் (Solar Electric Ion Engine) பயன் படுத்தியுள்ளது.  ஆரம்பத்தில் புலர்ச்சி 6200 மைல் உயரத்தில் பறந்து வெஸ்டாவின் ஈர்ப்பு விசையில் பிடிபட்டு சுற்றியது.  சிறிது சிறிதாகப் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இறுதியில் 120 மைல் (200 கி.மீ) உயரத்தில் வலம் வந்து முரண்கோளின் இயற்கைத் தன்மைகளை 9 மாதங்கள் ஆராயும் திட்டம் உள்ளது

    பூமி போன்ற கோள்கள் முதலில் தோன்றிய போது சிதறிய இந்த வக்கிரக் கோள்கள் பரிதி மண்டலத்தின் தோற்றத்தைத் தெரிவிக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.  வெஸ்டா, செரிஸ் முரண்கோள்கள் விஞ்ஞானிகளுக்குப் புதிய படைப்புக் கருத்துக்களைத் தெரிவிக்கும்.  புதன், பூமி, வெள்ளி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்கள் உருவான பிறகு சிதறி எஞ்சிய மிச்சத் துணுக்குகள் தான் இந்த வக்கிரக் கோள்கள்.!  முரண்கோள் வெஸ்டாவின் மையத்தில் ஓர் உலோகக் கரு உள்ள தாகவும், அதைச் சுற்றிலும் சிலிகேட் பாறைகள் மூடி இருப்ப தாகவும் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்.  வெஸ்டாவின் மேற்தளம் அடித்தள எரிமலைகள் பீறிட்டு உருவாக்கப் பட்டுள்ளது.

    முரண்கோள் வளையத்தில் எல்லாவற்றுக்கும் பெரிய வக்கிரக் கோள் செரிஸ்.  அதன் பூதளத்  தன்மைகளைக் கண்டறிய முதலில் உதவியது ஹப்பிள் தொலைநோக்கி.  செரிஸின் குறுக்கு நீளம் 580 மைல் (930 கி.மீ).  ஏறக்குறைய உருண்டையான செரிஸ் புளுடோ போல் பரிதி மண்டலத்தின் குட்டிக் கோள் (Dwarf Planet) என்ற வகுப்பணியில் வைக்கப் படுவது.  செரிஸ் முரண்கோளில் 40 – 80 மைல் (60 – 120 கி.மீ) ஆழப் பனித்தளம் உள்ளதாகவும் பூமியை விட இனிப்பு நீர்ச் சேமிப்பு (Sweet Water Storage) ஆறு மடங்கு மிக்கதாகவும் அறியப் படுகிறது.

    புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?

    புலர்ச்சி வெஸ்டாவை 9 மாதங்கள் சுற்றி வரும்,  பிறகு செரிஸை நெருங்கி குறைந்தது 5 மாதங்கள் சுற்றி வரும். புலர்ச்சி முரண்கோளைத் திசை திருப்பி நகர்த்த 10 கி.வாட் சூரிய சக்தி அயான் எஞ்சின் (Solar Electric Ion Engine) பயன்படுத்தப் படுகிறது.  இதுவரைப் பயன் படுத்திய இரசாயன ராக்கெட்டுகள் போலின்றி அயான் எஞ்சின்கள் துடிப்புத் தள்ளு (Push by Impulse) ஆற்றல் உடையது.  உந்து சக்திக்கு எஞ்சினில் ஸீனான் அயான்கள் (Xenon Ions) வெளியே தள்ளப் படுகின்றன.  பூமியின் பெருவாரியான கடல்நீர் வெள்ளம் பற்பல முரண்கோள்களில் உள்ள பனிப்பாறையிலிருந்து மோதலின் போது பரவிச் சேமிப்பானது என்று சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

    1. வெஸ்டா, செரிஸ் முரண் கோள்களின், மேற்தள அமைப்பு, உட்தள அமைப்பு, திணிவை ஆராய்வது.

    2. முரண் கோள்களின் வடிவளவு, உட்கலவை, உருவத் தோற்றம், நிறையை அறிவது.

    3. மேற்தள ஆய்வு, ஆழ்குழிகளை ஆராய்தல்.

    4. முரண் கோள் வடிவ அமைப்பில் பனிநீர்ச் சேமிப்புத் தேக்கம் பற்றி அறிவது.

    புலர்ச்சி விண்ணுளவி தாதுக்கள், மூலக, மூலக்கூறுகளைக் காணும் கருவிகளைச் சுமந்து செல்கிறது.  2011 ஆகஸ்டு மாதத்தில் புலர்ச்சி வெஸ்டா மீது 120 மைல் உயரத்தில் பறந்து கருவிகள் வேலை செய்யத் துவங்கும்.  பூதள வேறுபாடுகள், சூழ்வெளி அமைப்பு, மலைச் சிகரத் தோற்றங்கள், எரிமலைச் சிதைவுகள், எரிமலைக் குழம்போட்டம் ஆகியவற்றை ஆராயும்.

    Complete Project

    (தொடரும்)

    ************************
    தகவல்:

    Picture Credits: NASA, JPL, ESA, JAXA

    1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
    2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
    3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
    4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
    5 http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]
    5 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=41006061&format=html (Plasma Rocket Engines)
    6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
    7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
    8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
    9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
    10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
    11. Space Probe Enthralls Japan, as it Heads Home By : Sagamihara (AFP) June 8, 2010
    12 Scientific American Hayabusa Spacecraft Headed Back Toward Earth, Perhaps with Asteroid Dust in Hand
    By : John Matson (June 11, 2010)
    13 Space Flight Now – Japan Spacecraft will Plunge Back to Earth Sunday By : Stephen Clark (June 12, 2010)
    14 Wikipedia : Missio Type Asteroid Sample Returned to Earth (June 13, 2010)
    15 Space Flight Now : Hayabusa Completes Fiery Return to Earth (June 13, 2010)
    16 Aviation Week – Japan Hayabusu Spacecraft Capsule Successful Landing (June 13, 2010)
    17. Space Daily : Asteroid SampleReturn Capsule Recovered in Outback Australia (June 14, 2010)
    18 Japan Seeks Guiness Record Listing for Space Probe. (June 15, 2010)
    19. BBC News : Successful Launch for NASA Probe (Dawn) (Sep 27, 2007)
    20 Wikipedea : http://en.wikipedia.org/wiki/Asteroid_belt (July 19, 2011)
    21 BBC News : Dawn Probe Orbits Asteroid Vesta By : Jonathan Amos (July 17, 2011)
    22 Space Flight Now : Dawn Asteroid Explorer Moves into Orbit ar Versa By Stephen Clark (July 17, 2011)
    23 BBC News : Asteroid Vesta Reveals its Scars By : Jonathan Amos (July 19, 2011)
    24 Daily Galaxy : Was Earth’s Original Water Delivered by Ice-covered Asteroids ? (July 19, 2011)
    25. NASA JPL Site on Dawn : http://dawn.jpl.nasa.gov/mission/trajectory.asp[Dawn Update]
    26 ANew Dawn For NASA’s Asteroid Explorer [October 1, 2012]
    27. http://en.wikipedia.org/wiki/Dawn_(spacecraft) [October 17, 2012]
    28. Dawn Update : http://dawn.jpl.nasa.gov/mission/journal_10_31_12.asp[October 31, 2012]

    29. http://spaceref.com/asteroids/dawn-spacecraft-heads-for-ceres.html  [December 4, 2013]

    30. http://articles.timesofindia.indiatimes.com/2014-01-23/science/46513244_1_ceres-dwarf-planet-asteroid-belt[January 23, 2014]

    31.    http://www.skyandtelescope.com/news/home/Dwarf-Planet-Ceres-Exhales-Water-241639001.html  [January 23, 2014]

    32. http://gizmodo.com/the-long-spiraling-path-nasas-dawn-spacecraft-will-tak-1684284947  [February 6, 2015]

    33.  http://earthsky.org/space/closest-look-yet-at-ceres-bright-spots [May 11, 2015]

    34.  http://www.space.com/29984-dawn-spacecraft-ceres-glitch-recovery.html  [July 17, 2015]

    35. http://www.spacedaily.com/reports/Dawn_spiraling_in_towards_Ceres_999.html  [December 4, 2015]

    36.  http://spaceflightnow.com/2015/06/07/dawn-enters-new-orbit-closer-to-ceres/  [December 27, 2015]

    37.  https://en.wikipedia.org/wiki/Dawn_(spacecraft)  [December 29, 2015]

    38.  http://mashable.com/2014/12/30/dawn-ceres/#LiMmmONXomq3

    39.  http://theplanets.org/ceres/

    40.  https://en.wikipedia.org/wiki/Ceres_(dwarf_planet) [January 1, 2016]

    ++++++++++++++++++
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) ( January 1, 2016)

    https://jayabarathan.wordpress.com/

    Attachments area
    Preview YouTube video Dawn, Mission to the Asteroids Vesta & Ceres 2007 NASA JPL Leonard Nimoy 720 HD

    Dawn, Mission to the Asteroids Vesta & Ceres 2007 NASA JPL Leonard Nimoy 720 HD

    Preview YouTube video Dwarf planet Ceres ‘spewing water vapour’ – This is REAL Genius

    Dwarf planet Ceres ‘spewing water vapour’ – This is REAL Genius

    Preview YouTube video Crazy Engineering: Ion Propulsion and the Dawn Mission

    Crazy Engineering: Ion Propulsion and the Dawn Mission

    Share
  • மார்கழி மணாளன் 21 – நைமிசாரண்யம் –  தேவராஜப் பெருமாள் 

    க. பாலசுப்பிரமணியன் 

    5c4a6a61-a8a5-4f32-a3c0-1ca8ef7fcaac

    நான்முகன் விடுத்த சக்கரம் நைமிசாரண்யம் வந்தது

    நானிலம் போற்றும் வண்ணம் விடியலைத்  தந்தது

    நான்மறை போற்றிட நல்லோருக்குப் புகல் தந்தது

    நாதங்கள் முழங்கியே நாரணன் புகழ் சொன்னது !

     

    மலர்வண்ணம் கனிவண்ணம்  எழில் பொங்கும்

    வான்மின்னும் கான்வண்ணம் மனம்கொள்ளும்

    இறைபோற்றும் வேள்வி பெருக்கும் ஒளிவண்ணம்

    இசையோடு இயல்சேர்க்கும் வேதியர் ஒலிவெள்ளம்  !

     

    வான்விட்டு மண் வந்து தவம்செய்த விண்ணவரும்

    ஊன்விட்டு உயிர்தொட்டு மனம் காக்கும் யோகியரும்

    இறைமட்டும் தேடி அமர்ந்த இனிய நைமிசாரிண்யம்

    இயற்கையை இசைத்து இறைவன் படைத்த காவியம் !

     

    மரணத்தை வெல்ல வரம்பெற்றான் விருத்தன்

    மதம்கொண்ட களிறுபோல் மயக்கம் கொண்டான்

    மனமுடைந்த இந்திரனும் மாலனின் சொல்கேட்டு

    மாதவத்தோன் ததீசியிடம் எலும்பைப் பெற்றான் !

     

    வஜ்ராயுத்தில் வளைந்தது விருத்தனின் ஆணவம்

    வானவர் யோகியர் மோனத்தில்  மலர்ந்தது கானகம் !

    மறைகளை போற்றிடும் மாதவர் காண மாலனும் வந்தான்

    மங்கலம் பொங்கிட மானுடம் தழைத்திட மார்கழி மணாளன் !

     

     

     

     

     

     

    Share
  • ரஷிய இலக்கிய உருவவியல் கட்டமைப்பு தழுவலும் எதிர்த்தழுவலும் (19ஆம் நூற்றாண்டு)

    ரஷிய இலக்கிய உருவவியல் கட்டமைப்பு

    தழுவலும் எதிர்த்தழுவலும் (19ஆம் நூற்றாண்டு)

    சு. விமல்ராஜ்.

    இலக்கியம் என்பது மனித இனத்தின் உணர்வுகளை பரிமாறிக்கொள்ள உதவும் கருவி மட்டும் அல்ல, அது சமூகம் என்னும் அமைப்புக்குள் கீழே விழுந்துவிட்டவனைக் கைப்பிடித்து தூக்கி நிறுத்தவும் உதவும். மனித இனம் காலங்காலமாய் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள, மாற்றிக்கொள்ள இலக்கியத்தை ஒரு கருவியாகக் கொண்டு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரஷிய இலக்கிய வரலாற்றின் ஆழமான பார்வைப் பதிவுகளில் படைப்பின் முக்கியத்துவம் சாதாரண மக்களுக்கான இலக்கியமாக, இலக்கியம் தன்னை மாற்றிக்கொள்ளும்போதுதான் அதன் அடர்த்தி உண்மையானதாக இருக்கும் என்ற நிலை உள்ளது. உருவம், உள்ளடக்கம், இலக்கணத்தன்மை இவை இலக்கியத்தை ஒரு மேல் தளத்தில் வைத்துப் பார்க்காமல் சாதாரண குடிமக்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்வதாக இருக்கவேண்டும் என்பது ஒரு கருத்து. இதற்கு எதிரிடையான கருத்து வழியும் உண்டு. ஏனென்றால் இலக்கியம் என்பது எப்போதும் இலக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஒரு கூற்று உண்டு.

    அதிகார வர்க்கங்களின் முகமூடியைக் கிழித்து எறியும் விதமாக உருவான ரஷிய இலக்கிய முகம் நடுத்தர மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களுக்காகப் போராடும் கருவியாகவும் பயன்பட்டது. நவம்பர் புரட்சிக்குப் பிறகு ரஷ்யாவில் இலக்கியத்துறையில் காணப்பட்ட மாற்றம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்து ஒன்றிலிருந்து இருபத்து ஐந்தில் உருவான உருவவியல் கோட்பாட்டின் வெற்றி என்று சொல்லுகிற அளவுக்கு அது அமைந்திருந்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளில் ‘ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹிஸ்ட்ரி ஆஃப் ஆர்ட்’ என்னும் அரசு நிறுவனம் நிறுவப்பட்டு அதனுடைய இலக்கிய வரலாற்றுப் பிரிவாக ஒன்று இயங்கியது. இந்நேரத்தில் உருவவியல் இயங்குதளம் விரைவாக இயங்கியது. அங்கே காணப்பட்ட மார்க்சியத்தின் அழகியலுக்கு நேர் எதிரான ஒரு திறனாய்வுக் கோட்பாட்டை திட்டவட்டமான முறையில் உருவவியல் முன் வைத்தது. அது, ஒரு இலக்கியப்படைப்புக்கு சமூகவியல் அல்லது உளவியல் விளக்கத்தையோ அல்லது படைப்பாளிகளின் வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையாகக் கொண்ட விளக்கத்தையோ கொடுப்பதைப் புறக்கணித்தது. கவிதைப் படைப்பு, அதன் கட்டுமானம், அதன் சீர்கள், தளைகள், பாணிகள் ஆகியவற்றின் மீது அக்கறை காட்டியது.

    ஓபாயாஸ் என்ற பெயரில் விக்டர் ஸ்க்ளொவ்ஸ்கி என்பவரின் தலைமையில் இயங்கிய உருவவியலை சார்ந்தவர்கள் ஒரு படைப்பின் உள் அடக்கத்தைப் பொருட்படுத்தாமல் அதிலுள்ள சிறப்பான இலக்கிய உத்திகளை மட்டுமே ஆய்வு செய்ய தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டனர். கலை இலக்கியப்படைப்புகளுக்கு அதன் உள் கட்டமைப்புக்கு மட்டுமே முதன்மைக்கொடுத்தும் அவற்றை வெறும் சமூகவியல் நோக்கில் மட்டுமே பார்த்தும் வந்த பிளாக்கானோவியப் பார்வைக்கான எதிர்ப்பாகவே உருவவியல் என்றே கூறலாம். புரட்சிக்கு முந்தைய ரஷியாவில் இருந்த மொழியியல் ஆய்வுகளில் ஏற்பட்டிருந்த முன்னேற்றங்களைப் பயன்படுத்திக் கொண்ட உருவவியல் ஆய்வாளர்கள், ஃப்யூச்சரிசம் போன்ற நவீனப்போக்குகளை ஆதரித்தனர். பாட்டாளி வர்க்கம் பழைய சமுதாயத்தை உதறித்தள்ளியதைப் போல் தாங்கள் பழைய மரபுகளை எதிர்ப்பதாகக் கூறினர். தோஸ்தோவெஸ்கியின் படைப்புகளிலோ அல்லது நிகோலாய் பெர்டியெவின் தத்துவத்திலோ காணப்படுகின்ற கருத்துகளின் செல்வாக்கில் இருந்து இலக்கியத் திறனாய்வை விடுவிக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணம் உருவவியலை ஆதரித்தவர்களுக்கு இருந்தது. ஏன் என்றால் ரஷியர்களிடம் இறை நம்பிக்கை அதிகமாக இருந்தது.

    உருவவியல் கோட்பாட்டாளர்களின் கருத்துகள் விமர்சனங்களுக்கு உள்ளானது. முழுவதும் கடவுள் இல்லை என்னும் கொள்கை உடையவர்கள் என்று கருதத்தக்கவர்களால் ஏற்பட்ட புரட்சியால் மயக்கப்பட்டவர்கள் என்ற நிலையிலும்கூட கடவுள் செயல் என்ற தன்மையில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர் என்று உருவவியல் கோட்பாடு கொண்டவர்கள் கருதுகின்றனர். ரஷிய நாட்டின் குறியீட்டுக்கவிஞர் அலெக்சாண்டர் பிளாக்கை அவர்கள் சுட்டிக்காட்டினர் (ரஷிய புரட்சி இலக்கியம்.ப.85 .ராஜதுரை) தமது பன்னிருவர் என்ற கவிதையில் ஏசு கிருத்துவை செங்காவலரை வழி நடத்திச் செல்பவராக வர்ணிக்கிறார்.

    கவிதைப்பாணியினை விடுதலை செய்வதும் பணிந்து போகும் சிம்பலிஸ்டுகளை மேன்மேலும் அடிமைப்படுத்தி வந்துள்ள தத்துவ சமயப் போக்குகளுக்கு தலை வணங்க மறுப்பதும் உருவவியலாளர்களின் முதன்மையான நோக்கமாகும் என்று போரிஸ் ஐசன்பாம் கூறுகிறார். எனவே, ஓபாயாஸ் குழுவானது மார்க்சிய அழகியல் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது, கட்சிக்குத் துணை புரிகின்ற இலக்கிய விமர்சனப் போக்குதான் என்று கட்சித்தலைவர்கள் சிலர் கருதியதில் நியாயம் இருந்தது. உருவவியலாளர்கள் தங்கள் கருத்துகளை தடையேதும் இல்லாமலும், மிகுந்த செருக்கோடும் பிரகடனப்படுத்தினர். இலக்கியத்தை வெறும் மேல் கட்டுமானம் என்று கருதுவதை முற்றிலும் மறுத்த ஐசன் பாம் ஏதாவது ஒரு பொருளாதார அல்லது சமூக அறிவியல் அடிப்படையில் ஒரு இலக்கியப் படைப்பை விளக்க முயற்சி செய்வது இலக்கியத்தின் உள் இயக்கங்களை அல்லது அதன் தனித்த இயக்கத்தை மறுப்பதற்கு ஒத்ததாகும் என்றும் கூறினார்.

    உருவமும் உள் அடக்கமும் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமான தொடர்பு உள்ளவை என்பதைக் கேள்விக்கு உட்படுத்தும் அளவுக்கு ஸ்க்ளோவ்ஸ்கியால் தன் கருத்துகளை அன்று அச்சமின்றி வெளிப்படுத்த முடிந்தது. “கலையின் வடிவங்கள் அவற்றில் கலைக்குரிய நியாயங்கள் உண்டா இல்லையா என்பதைக் கொண்டே மதிப்பிட வேண்டும். ஒரு புதிய வடிவம் ஏதோவொரு புதிய உள்ளடக்கத்தை வெளியீடு செய்வதாகத் தோன்றுவதில்லை. மாறாக தன் இலக்கிய மதிப்பை இழந்துவிட்ட பழைய இலக்கியத்துக்கான மாற்றீடாகத்தான் அப்புதிய வடிவம் தோன்றுகிறது.”(சான்று. விக்டர் க்ளொவ்ஸ்கி, கார்னல் யுனிவர்சிடி பிரஸ், லண்டன்.1977பக்கம்.85)

    செயலின் ஒளிசார்ந்த நிழல்:
    ஆரம்ப காலகட்டத்தில் உருவ இயல் மீதான போல்ஷ்வில் தலைவர்களின் நிலைப்பாடு இறுக்கமானதாக இருக்கவில்லை. பொதுவாக அவர்கள் இலக்கிய விவகாரங்களை எச்சரிக்கையுடன் அணுகுவதையே விரும்பினர். கருத்துப் போராட்டத்தின் மூலம் எதிர்தரப்பினரை முறியடிப்பதிலும் வென்று எடுப்பதிலும் நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்கள் கடைப்பிடித்த அளவுகோல் எழுத்தாளர்கள் புரட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்களா? இல்லையா? என்பதுதான்.

    உருவ இயலாளர்கள் கவிதையின் உத்தி நிலையைப் பற்றி ஒரு பட்டியலை உருவாக்கினார்கள். இத்தகைய பகுப்பு ஆய்வுக்காக அவர்களைப் பாராட்ட வேண்டும் என்று புகாரின் கூறினார். இலக்கியத்தைப் பற்றிய காரண காரிய விளக்கம் தரக்கூடிய ஒரே தத்துவம் மார்க்சியம் மட்டுமே என்றும் ஒரு குறிப்பிட்ட போக்கு ஏன் எவ்வாறு தோன்றியது என்பதை மார்க்சியத்தால் மட்டுமே விளக்கமுடியும் என்றும் கூறினார் த்ரோத்ஸ்கி.

    அழகியல் பற்றிய மதிப்பீடுகளுக்கான அளவுகோல்கள் அனைத்தையும் மார்க்சியத்தால் மட்டுமே வழங்கிவிட முடியாது என்றும் ஒரு இலக்கிய வடிவத்திலுள்ள குறிப்பிட்ட கலையம்சங்கள் மீது அழுத்தம் தருவதில் நியாயம் உண்டு என்றும் ஒப்புக்கொண்ட த்ரோத்ஸ்கி உருவ இயல் பகுப்பாய்வு நுட்பங்களைப் புறக்கணிக்கவில்லை. ஏனெனில் கலை, உலகை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி அல்ல; மாறாகக் கலைக்கே உரிய விதிகளுக்கு ஏற்ப எதார்த்தத்தை உருமாற்றம் செய்வதாகும். ஆனால் கலைகளை அவற்றின் நுட்பங்களை மட்டும் கொண்டு விளக்குவதோ அல்லது இலக்கியம் முழுவதையும் சொல்வெளியீட்டு பாணியாகக் குறுக்கி விடுவதோ தவறானது என்று அவர்கூறினார். ஒரு கவிதையின் உயிரெழுத்து, மெய்யெழுத்து, வேர்ச்சொல், வாக்கியத்தின் அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய புள்ளி விவரம் சொல்வது மட்டும் ஒரு திறானாய்வாளனின் பணியல்ல என்ற அவர், “ உருவ இயலாளர்கள் புனித ஜானின் சீடர்கள். முதலில் சொல் இருந்தது என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் நாங்கள் கருதுகிறோம்; ஆரம்பத்தில் இருந்தது செயல்- பிறகே சொல் வந்தது- செயலின் ஒலி சார்ந்த நிழலாக ” (சான்று:பக்கம் லியோ த்ரோஸ்கி தி பார்மலிஸ்ட் ஆஃப் பொயட்ரி அண்ட் மார்க்சிஸ்ட் டேவிட் கிரெய்க் பெங்குயின் , லண்டன்,1975ப.374.)

    அகத்தூண்டல்:
    கலைப்படைப்புக்கு அகத்தூண்டுதல் என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது என்பது ஒரு கோட்பாடு. கலைப்படைப்பில் தர்க்கத்திற்கு மாறான அம்சங்கள் உள்ளன. நனவிலி என்னும் மனத்தின் செயல்பாட்டை அதில் காணலாம் என்ற கருத்துகளையும், கலையின் உளவியல் செயல்பாட்டையும் உருவவியல் கோட்பாட்டை உடையவர்கள், மயாகோவ்ஸ்கி, ஓசிப் ப்ரிக், புரோலிட்கள் ஆகியோரையும் சேர்த்து மறுத்தனர். இந்த அம்சங்களை மரபான மார்க்சிய இலக்கிய விமர்சகர்கள் சக பயணிகள் த்ரோஸ்கி முதலானோர் ஒப்புக்கொண்டனர். கட்சி-அரசு தலைவர்களில் உருவ இயல் பற்றிய கடுமையான திறனாய்வைச் செய்தவர்கள் லுனாசார்கிஸ்தான். உள்ளடக்கத்தைத் தவிர்த்து கவிதை உத்திகளை மட்டுமே கருத்தில் கொள்ளும் உருவ இயல் இலக்கிய விமர்சனம் உண்மையான மனிதப் பிரச்சனைகளை தவிர்க்கின்ற நழுவுதல் தொடர்பானதே என்றும் நசிந்து போன ஆளும் வர்க்கத்தின் மலட்டுப் படைப்பே என்றும் கூறினார். “நவீன முதலாளி வர்க்கத்தால் அனுபவித்து மகிழக்கூடிய புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒரே கலை வகை, புற உலகம் சாராத வெறும் உருவம்மட்டும் உள்ள கலைதான். அக்டோபர் புரட்சிக்கு முன்பு உருவவியல் பழுத்துக் கொண்டு வந்த ஒரு காயமாக இருந்தது. இன்று அது பழைய அமைப்பின் பிடிவாதமிக்க எச்சமாக உள்ளது. இன்னும் மாற்றத்துக்கு உட்படாத ஐரோப்பிய முதலாளி வர்க்கத்தைப் பார்த்து கள்ளத்தனமாகக் கண் சிமிட்டுகிற அறிவாளிகளின் கடைசிப் புகலிடமாக உள்ளது ” [சான்று: 87]

    இலக்கியமும் எடுத்தியம்பலும்:
    இலக்கியத்தை எடுத்து இயம்புவதின் மொழியைப் பல்வேறு சொற்களைப் பயன்படுத்திப் பாகுபடுத்தி ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஒவ்வொரு சொல் வகைகளையும் கிட்டத்தட்ட ஒரு உரையாடலின் வடிவம் ஆகும். எடுத்து உரைத்தலின் நீண்ட பகுதிகள் கதையைச் சொல்பவனின் குரலில் எழுதப்பட்டிருப்பதாக தோன்றுவதாகத் தெரிந்தாலும் இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான குரல்கள் இயக்க அசைவுடன் நல்ல தொடர்பு கொண்டிருப்பதாகக் கொள்ளமுடியும். வெவ்வேறு கால வரலாற்று நிலைகளின் இந்தச் சொல் அமைப்புகளின் தொடர்பு உடைமை வேறு வகையானதாக இருக்கின்றன. உண்மைத் தன்மையின் உயிர் குரலாக எது ஒலிக்கிறதோ அது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

    தோயஸ்தோவ்ஸ்கியின் படைப்புகள் பலகுரல் தன்மையுடையவை ஆகும். இந்தக் குரல்களில் எதையுமே படைப்பாளியின் குரலாக எடுத்துக்கொள்ள முடியாது. படைப்பின் உச்சம் என்பது குரலின் மொழி என்ன சொல்கிறது என்பதுதான். ஆனால், இது படைப்பாளியின் எதேச்சகார குரலுக்குக் கட்டுப்படும் அமைப்பிலும் இல்லை. அந்தக் குரல்கள் தம்மைப் படைத்துவிட்ட ஆசிரியனுக்கும் அவனது குரலுக்கும் அருகில் நிற்கக்கூடியவை. அவனுடன் ஒத்துப்போக மறுப்பவை. அவனுக்கு எதிராகக் கலகம் செய்யவும் தயங்காது. ஆனால் இதைப் பல பாணிகளின் வேறுபட்ட புதிய வடிவம் என்றும் எடுத்துக்கொள்ளக்கூடாது. இவரின் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தன் தனித்த தன்மைக்கே உரிய தனித்த பாணியில் பேசுவதில்லை. இவரின் இரட்டை ஆளுமையை நாம் உணரவும் முடியும். லுனா சார்க்கியின் நூலின் இருந்து தோவ்ஸ்தயோஸ்கியின் உயிர்ப்பை உணரமுடியும். லூனாசார்க்கின் தனித்தன்மையையும் தெரிந்துகொள்ள முடியும். இவரது நாவல்களில் இந்த பல குரல்கள் கொள்ளும் முரண்பாடு, மோதல் ஆகியவை ஒன்றாக இணைந்து முழுமையான படைப்பு உருவாக்கும் படைப்பு ஆசிரியனின் குரல் இவரின் இரட்டை ஆளுமையைத் தனித்துக் காட்டுகிறது.

    சு.விமல்ராஜ்,
    உதவிப்பேராசிரியர்,
    அ.வ.அ.கல்லூரி,
    மயிலாடுதுறை.
    அலை:8220470590
    thamizhvimal@gmail.com

    Share