நடக்காத குற்றத்திற்கு மூவருக்குத் தண்டனை
நாகேஸ்வரி அண்ணாமலை
அமெரிக்கா சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றுவதில் உலகிலேயே முதல் இடம் வகிக்கிறது என்பது எல்லோரும் அறிந்தது. எவ்வளவு பெரிய பணக்காரர்கள் என்றாலும், எவ்வளவு பெரிய அரசியல்வாதிகள் என்றாலும் தவறு செய்தால் சட்டம் அவர்களை விட்டுவைப்பதில்லை. இது மிகவும் பாராட்டுக்குரியது. யாரோ செய்த குற்றத்திற்கு அதில் சம்பந்தப்படாதவர்களைத் தண்டிப்பதும் அமெரிக்காவில் நடக்கிறது. இந்தியாவில் முன்னையது நடக்கவில்லை என்றாலும் பின்னையது நடக்கிறதா என்று தெரியவில்லை. அது பற்றிப் பத்திரிக்கைகளில் அதிகம் செய்திகள் வருவதில்லை. மேலும், தவறாகத் தண்டிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க வழக்கை மறுபரிசீலனை செய்யும் அமைப்பு எதுவும் அமெரிக்காவில் போல் இந்தியாவில் இல்லை.
குற்றமே நடந்திராதபோது குற்றம் புரிந்ததாகப் பழிசுமத்தப்பட்டு மூவர் தண்டிக்கப்பட்டு முப்பத்து மூன்று வருஷங்களுக்கு மேல் அந்த மூவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது பற்றிச் சமீபத்தில் படித்தபோது அமெரிக்காவில் மட்டும்தான் இம்மாதிரி நடக்கும் போலும் என்று எண்ணத் தோன்றியது.
1980-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியுயார்க் நகரின் புருக்லின் பகுதியில் இருந்த ஒரு மூன்று மாடி வீட்டில் தீப்பிடித்து மூன்றாவது மாடியில் குடியிருந்த ஒரு தாயும் அவருடைய ஐந்து குழந்தைகளும் அந்த விபத்தில் உயிர் இழந்தனர். அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்த அந்த வீட்டின் சொந்தக்கார அம்மாள் மேலே குறிப்பிட்ட மூன்று பேர்தான் அந்த வீட்டிற்குத் தீவைத்ததாகச் சாட்சியம் சொன்னார். இவர் சட்டவிரோதமாகப் போதைப் பொருள் விற்பவர். தனக்கும் அவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் ‘நான் திரும்பி வந்து அந்த வீட்டிற்குத் தீவைக்கப் போகிறேன்’ என்று கூறியதாகவும் தன்னுடைய சாட்சியத்தில் கூறினார். தீ விபத்து ஏற்படுவதற்குச் சற்று முன்பு அவர்கள் மூவரும் பேசியதைத் தான் கேட்டதாகவும் தீ விபத்து நடந்த பிறகு அவர்கள் மூவரும் அந்த வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சொன்ன சாட்சியத்தை வைத்து அந்த மூவருக்கும் தீ விபத்தை ஏற்படுத்தியதற்கும் ஆறு பேர் இறப்பதற்குக் காரணமாக இருந்ததற்கும் ஆயுள் முழுவதும் சிறைவாசம் என்று தீர்ப்பாகியது. ஒருவர் மட்டும் கூறிய சாட்சியத்தை வைத்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
தாங்கள் நிரபராதிகள் என்று எத்தனை முறை கூறியும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இவர்கள் மூவர் மேலும் வழக்கு நடந்துகொண்டிருந்தபோது வில்லலோபஸின் மனைவியும் வாஸ்கஸின் மனைவியும் தங்கள் கணவன்மார் குற்றம் நடந்த அன்று தங்களுடன் இருந்ததாகக் கூறிய சாட்சியத்தை நீதிமன்றம் ஒத்துக்கொள்ளவில்லை.
ரேமாண்ட் மோரா என்பவர் 1989-இல் சிறையிலேயே மாரடைப்பால் காலமானார். வில்லியம் வாஸ்கஸ், அமௌரி வில்லலோபஸ் ஆகிய மற்ற இருவரும் சிறையில் உழன்றனர். வாஸ்கஸ் சிறையில் இருக்கும்போது கண்களில் ஏற்படும் கண்திரவ அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிறை அதிகாரிகள் அவருக்குச் சரியான மருத்துவ சிகிச்சை அளிக்காததால் பார்வையை இழந்தார். வில்லலோபஸ் பல முறை தன்னைப் பரோலில் விடுமாறு கேட்டும் அதிகாரிகள் அவருக்குப் பரோல் வழங்கவில்லை. சிறையில் இருக்கும் கைதிகள் பல ஆண்டுகள் சிறையில் இருந்த பிறகு அவர்களுடைய நன்னடைத்தைக்காக அவர்களுக்குப் பரோல் வழங்கப்படும். ‘தான் செய்த தவறுக்கு’ அவர் ஒருபோதும் வருந்தவில்லை என்ற காரணம் காட்டி அவருக்கு பரோல் கொடுக்க மறுத்து வந்தனர். 33 வருடங்களுக்கு மேல் சிறையில் இருந்த பிறகு பரோல் கிடைத்து வெளியில் வந்த வில்லலோபஸ் நியுயார்க் சட்டக் கல்லூரியை அணுகித் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டியிருக்கிறார். அந்தக் கல்லூரியின் ‘தண்டிக்கப்பட்ட பிறகு நியாயத்திற்காகப் போராடும் பிரிவின்’ (Post-conviction Innocence Clinic) தலைவரும் அவருடைய சட்டம் படிக்கும் மாணவர்களும் இவருடைய வழக்கைத் திரும்ப எடுத்து ஆராய்ந்திருக்கின்றனர். சட்டக் கல்லூரிகளில் வேலைபார்க்கும் சில சட்டப் பேராசிரியர்கள் இந்த மாதிரிச் சில வழக்குகளைத் திரும்ப எடுத்து ஆராய்ந்து தவறாகத் தண்டிக்கப்பட்டவர்களை விடுவித்திருக்கிறார்கள்.
தீ விபத்து நடந்த வீட்டின் முதல் தளத்தில் சில நேரங்களில் போதை மருந்திற்கு அடிமையானவர்கள் தீ மூட்டி போதை மருந்தைத் தயார்செய்வார்களாம். அப்படிச் செய்த ஒரு சமயத்தில் தீப்பொறி ஒரு மின்சாரக் கம்பியில் பற்றித் தீப்பிடித்துக்கொண்டிருக்கிறது. இப்படிப் பற்றிக்கொண்ட தீ யாராலும் வேண்டுமென்றே மூட்டப்படவில்லை. அப்படி ஏற்பட்டது ஒரு தீ விபத்தே. ஆனால், இதைக் காவல் துறை அப்போது ஒத்துக்கொள்ளவில்லை. நெருப்பு எப்படிப் பற்றுகிறது, அதன் பிறகு எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படுகின்றன என்ற விபரங்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் அப்போது ஏற்பட்டது விபத்துதான் என்று இப்போது முடிவுசெய்திருக்கிறார்கள்.
மேலும், இவர்கள் மூவர் மேலும் குற்றம் சுமத்திய அந்த வீட்டின் உரிமையாளர் இறக்கும் தறுவாயில் தன் மகளிடம் தனக்கும் அந்த மூவருக்கும் போதைப் பொருள் விற்பனை சம்பந்தமாக ஏற்பட்ட தகராறினால் தான் அவர்களைக் குற்றவாளிகள் என்று காட்டிக் கொடுத்ததாகக் கூறி மனம் வருந்தியிருக்கிறார். அமெரிக்காவில் வீடுகள் உட்பட எல்லாக் கட்டடங்களிலும் நெருப்புப் புகையைக் கண்டுபிடித்து அலாரம் அடிக்க ஒரு கருவி இருக்க வேண்டும். இந்தப் பாதுகாப்பை வீட்டுக்கார அம்மாள் செய்யவில்லை. அதனால் தன் மீது குற்றம் சுமத்தப்படலாம் என்று நினைத்து அது விபத்தில்லை என்று நம்பவைப்பதற்காக மூவர் மீதும் பழியைப் போட்டார்.
இந்த வழக்கு எப்படி நீதிமன்றத்தால் முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டது என்று புரியவில்லை என்று இப்போது வழக்கை நடத்திய பப்ளிக் பிராசிக்யூட்டர் கூறியிருக்கிறார். பப்ளிக் பிராசிக்யூட்டரின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டிருப்போரில் அதிக ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர்கள் இவர்கள்தானாம்.
2015 டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி இந்த மூவரும் குற்றமற்றவர்கள் என்று நீதிபதி கூறிய பிறகு நீதிமன்றத்திற்கு வந்திருந்த, சிறையில் இறந்துபோன மோராவின் மகளும் மனைவியும் ‘இது எங்களுக்குக் கிடைத்த சிறந்த கிறிஸ்துமஸ் பரிசு’ என்று கூறி ஒருவரையொருவர் ஆரத் தழுவிக்கொண்டனர். வாஸ்கஸ், ‘நான் இழந்த வருடங்களை யாராலும் எவ்வளவு பணத்தாலும் திருப்பிக் கொடுக்க முடியாது. முப்பது வயதில் சிறைக்குச் சென்றேன். இப்போது 65 வயது ஆகிறது’ என்று கூறிக்கொண்டு பார்வையற்ற தன் கண்களிலிருந்து வழிந்த நீரைத் துடைத்திருக்கிறார். பல முறை தான் ‘மனம் திருந்தி’ வருத்தப்படாததைக் காரணம் காட்டி (செய்யாத தவறுக்கு யார் வருத்தம் தெரிவிப்பார்கள்?) பரோல் மறுக்கப்பட்ட வில்லலோபஸ், ‘அவர்கள் எனக்குப் பெரிய தீங்கு இழைத்தார்கள். ஆனாலும் எனக்குக் கோபம் இல்லை. எல்லாவற்றுக்கும் இறைவன் இருக்கிறார்’ என்று கூறியிருக்கிறார். இத்தனைக்குப் பிறகும் அவருக்கு இறை நம்பிக்கை இருக்கிறது!
குற்றம் புரியாதவர்கள் தண்டிக்கப்படுவதும் அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து அவர்கள் அந்தப் பழியிலிருந்து விடுதலை பெறுவதும் அப்போது லட்சக் கணக்கில் தவறான தண்டனையை அனுபவித்தற்கு நஷ்டஈடாகப் பணம் பெறுவதும் அமெரிக்காவில் நடக்காத ஒன்றல்ல. இதற்காகவே குற்றமின்மையை நிரூபிக்கும் அமைப்பு ஒன்று (Innocence Project) அமெரிக்காவில் இயங்கி வருகிறது. இப்படி ஒன்று இல்லாவிட்டால் தவறாகத் தண்டிக்கப்பட்டவர்களின் கதி என்ன ஆகியிருக்கும் என்று யோசிக்கவே பயமாக இருக்கிறது.

நல்ல பதிவு. குற்றமின்மையை நிரூபிக்கும் அமைப்பு (Innocence Project), இந்தியாவிலும் தேவை. இங்கு உள்ளது மேல்முறையீடு மட்டுமே.