புலவர் இரா. இராமமூர்த்தி.

திருக்குறளில் இதழ்கள் ஒட்டாத பாடல்கள் பற்றி நாம் இதற்கு முன் பார்த்தோம்! அதிலும் குறிப்பாக நாம் பார்த்த பாடல்:

“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் “(341)

என்ற குறட்பா ஆகும். அதனைத் தவிர 240, 286, 310, 419, 427, 472, 489, 516, 523, 679, 894,1080,1082, 1177,1179,1211, 1213,1219,1236,1286,1296ஆகிய
இருபத்தொரு குறட்பாக்கள் உதடு ஒட்டாத குறட்பாக்களாக உள்ளன! இவற்றை நிரொட்டகம் என்று கூறுவர். தமிழில் “நிரோட்டக யமக வந்தாதி” என்ற நூல் உள்ளது. மேலும் “இதழகலந்தாதாதி” என்ற நூலை வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அளித்துள்ளார்!

திருக்குறளில் அதிகமான அளவில் உதடு ஒட்டும்படி அமைந்த சீர்களுடன் அமைந்த பாடல் உள்ளது! அப்பாடல்,

“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை “

என்ற பாடலாகும்! இந்தப் பாடலின் தனிச்சிறப்பு, துப்பு என்ற சொல்லே மீண்டும் மீண்டும் வந்தமையேயாகும்! துப்பு என்ற சொல், ஐந்து இடங்களிலும் ஐந்து வெவ்வேறு பொருள்களுடன் அமைந்துள்ளது! துப்பு என்ற சொல், துய்ப்பு என்பதாகிய உண்ணுதலைக் குறித்தது! துய்ப்பார்க்கு, அதாவது உண்பவர்களுக்கு, அவர்களுக்குத் தேவையான துப்பு ஆய அதாவது உணவாகிய பயிர்வகைகளை, நிலத்தடி நீராகி வேர்மூலம் சென்று வளர்த்தும், பின்னர் துப்பு ஆக்கி, சமைப்பதற்குரிய உணவாகித் துப்பார்க்கு அதாவது உணவை உண்பவர்க்கு துப்பு ஆயதூஉம் தாகம் தீர்ப்பதற்கும், உணவு செரிப்பதற்கும் உரிய குடிநீர் ஆகியதும் மழை நீரேயாகும்! என்ற விரிவான பொருளைத் துப்பு என்ற சொல்லே ஐந்து வகையாய்த் தருகிறது! உண்ணுதல், பயிர் வளர்த்தல், சமைத்தல், உணவு, குடிநீர் என்ற ஐவகைப் பொருள்களுடன் துப்பு என்ற சொல்லே அமைந்துள்ளது.

நீர் என்பது மேலிருந்து கீழே இறங்கும் தொழிலை உடையது! இந்த நீர் மேல் நோக்கிச் சென்று மேகமாகத் திரண்டு மழை நீராகி இறங்குகிறது! இவ்வகையில் நீரின் நிலைப்புச்சக்தி, இயங்குசக்தி என்ற இருவகை ஆற்றல்கள் வெளிப்படுகின்றன! கடல் நீர் நிலைப்புச் சக்தி; மழைநீர் இயங்கு சக்தி; அவற்றுடன் உணவுப் பயிர்களை வளர்ப்பது, உணவு சமைப்பது, குடிநீராகி விடாய் தீர்ப்பது போன்ற சிறுசிறு இயங்கு சக்திகளுடன் மழையாகிய நீர் பல்வேறு பயன்களைத் தருகிறது! கடவுளின் ஆற்றலைப் போலவே, நீரின் ஆற்றலும் எல்லையற்றது! அதனால் அது கடவுளின் ஆற்றலுக்கு ஒப்பானதாகிறது. காணாத இடத்திலிருந்து அருள்வது கடவுளாற்றல்! கண்ணுக்கு முன்னே காட்சி யளித்து அருள்வது மழையின் ஆற்றல்! அதனால்தான் கடவுள் வாழ்த்தினை அடுத்து, வான்சிறப்பினை வள்ளுவர் அமைத்தார்! இனி, இந்த அழகிய குறட்பாவை மீண்டும் ஒருமுறை கூறுவோம்!

“துப்பார்க்குத் துப்புஆய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்புஆய தூஉம் மழை! “(12)

ஒட்டாத வானத்திலிருந்து பெய்தாலும் உயிர்களுடன் ஒட்டி, உணவுப்பயிரை வளர்ப்பதாய், உணவாய், உணவைச் சமைப்பதாய், உண்ணும்போது உதவும் குடிநீராய், உணவை நொதிக்கச் செய்யும் சீரண நீராய் நம்முடன் ஐந்து வகைகளில் ஒட்டிக் கொண்டிருப்பது நீரே, என்பதை ‘துப்பு ‘எனச் சொல்லும் போதெல்லாம் நம் உதடு ஒட்டும்படி, இந்தக் குறட்பா அமைந்திருப்பதால் நாம் புதுமையான விளக்கத்தைப் பெற்று மகிழ்கிறோம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *