“அவன், அது, ஆத்மா” (42)
மீ.விசுவநாதன்
அத்யாயம்: 42
நண்பன் கபாலியும், அவனும், “வை..ராஜா..வை”யும்
அவன் சூளைமேடு கிருஷ்ணாபுரத்தில் இருந்தபொழுது அந்த வீட்டின் தென்னை ஒலை வேய்ந்த மாடியில் இரண்டு மூன்று பிரும்மச்சாரிகள் வாடகைக்குக் குடி இருந்தனர். அதில் அவனுக்கு நண்பன் கபாலியும் ஒருவன். கபாலி “எம்.எல். புஜாரா” நிறுவனத்தில் வேலை செய்து வந்தான். அந்த நிறுவனம் இராயபுரத்தில் இருந்தது. கிழிந்த அட்டைகள், நோட்டுப் புத்தகங்கள், தெருக்குப்பைகளைத் திரட்டி அதை “பேப்பர்” தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்புகிற தொழிலைச் செய்து வந்தது. கபாலி அந்த நிறுவனத்தில் நல்ல பொறுப்பில் மகிழ்ச்சியாக இருந்தான். கபாலியிடம் தீய பழக்கங்கள் எதுவும் இருந்ததில்லை.
அவனும், கபாலியும் நிறைய திரைப்படங்களுக்குச் சேர்ந்தே சென்று வந்தனர். வேலை முடிந்து வந்தால் அருகில் உள்ள ராம் தியேட்டர், சாலிகிராமத்தில் இருந்த இராஜேந்திரா தியேட்டர், கோடம்பாக்கத்தில் லிபர்ட்டி தியேட்டர் போன்ற இடங்களுக்கு இரவுக் காட்சி திரைப்படங்களுக்குச் சென்று வருவார்கள். கபாலி, நடிகர் ஜெய்சங்கரின் தீவிர ரசிகன். அவன் சிவாஜி ரசிகன். அதனால் இருவரும் சேர்ந்தே அந்த இரு நடிகர்களின் படங்களுக்கும் செல்வது வழக்கம். அப்பொழுதெல்லாம் சாலிகிராமம் இராஜேந்திராவில் இரவுக் காட்சிக்கு இரண்டு படங்கள் போடுவார்கள். இரவு பத்து மணிக்குத் துவங்கி காலையில் மூன்று மணிக்கு அந்தப் படங்கள் முடியும். அப்படி ஒருமுறை “ராஜபார்ட் ரங்கதுரை, தேன்சிந்துதே வானம்” என்ற இரண்டு படங்களைப் பார்த்தனர். கபாலிக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. “ராஜபார்ட்ரங்கதுரை” படத்தில் ஒரு உணர்ச்சிகரமான கட்டத்தில் நம்பியாரும், சிவாஜியும் பேசும் சமயம் பக்கத்தில் படம்பார்த்துக் கொண்டிருப்பவரிடம் நம்பியாரைக் காட்டி, ” சார்..இவர்தான் சிவாஜியா என்றும், சிவாஜியைக் காட்டி இவர்தான் ஜெய்சங்கரா” என்றும் சிரிக்காமலே கபாலி கேட்டதற்கு, அந்த சிவாஜி ரசிகர்,” .தெரியலைனா பேசாம படத்த பாருங்க சார். நான் பாடத்தைப் பாக்கணும்” என்று கோபமாகச் சொன்னார். ” சார்…எனக்கு ஊர் டெல்லி…அதனால் இந்த ஊர் நடிகர்களைத் தெரியாது…அதுதான் கேட்டேன்…” என்றான் கபாலி. “..என்ன கிண்டலா பண்ணறீங்க…சிவாஜியக் கூடவா தெரியாது” என்று அந்த நபர் கேட்ட விதத்தை நினைத்து இன்றும் கூட அவன் சிரிப்பதுண்டு.
ஒரு ஞாயிறு அன்று மதிய வேளையில் அவனும், கபாலியும் மின்சார ரயிலில் மாம்பலம் சென்று விட்டு நும்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி, அந்த ரயில் நிலையம் ஒட்டிய சிறிய தெருவழியாக நடந்து வந்து கொண்டிருந்தனர். தெரு ஓரத்தில் ஐந்தாறு பேர்கள் தரையில் அமர்ந்து கொண்டு ஏதோ விளையாடிக் கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தனர். “கண்ணா…அங்க என்ன விளையாடராங்கன்னு பார்க்கலாமா” என்று அவனிடம் கபாலி சொல்ல, இருவரும் அங்கு சென்றனர். தரையில் கட்டம் போட்டு, அதில் புளியங்கொட்டைகளை வைத்து “வை ராஜா வை…வை ராஜா வை..” என்று அவர்கள் விளையாடுவது அவனுக்குப் புதுமையாக இருந்தது. அவன் இதற்கு முன்பு இதுபோன்ற விளையாட்டைப் பார்த்ததில்லை. இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் அவர்களின் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்பி,” வாங்க சார்…ஐம்பது காசு வைச்சா..ஒரு ரூபாய் கிடைக்கும்…ஒரு ரூபாய் வைச்சா இரண்டு ரூபாய் கிடைக்கும்” என்று அங்கிருந்த அனைவருமே இவர்களைச் சூழ்ந்து கொண்டு சொல்லவும், ” ஏய்..கண்ணா …ஒங்கிட்ட எவ்வளவு இருக்கு” என்றான் கபாலி. ” ஐம்பது பைசா” என்றான் அவன். “சரி..அதை வை” என்று சொல்ல அவனும் அதை ஒரு சதுரத்தில் வைத்தான். “வை ராஜா வை…வை ராஜா வை..” என்று சொல்லி புளியங்கொட்டைகளைக் குலுக்கி போட ,” சார்..உங்களுக்கு ஒரு ரூபாய்” விழுந்திருக்கு….மறுபடியும் ஒரு ரூபாய் வையுங்க…இரண்டு ரூபாய் கிடைக்கும் என்றனர். “அவன் அந்த ஒரு ரூபாயை வைத்தான். இப்பொழுதும் அதே “வை ராஜா வை…வை ராஜா வை..” சொல்லிக்கொண்டு புளியங்கொட்டைகளைக் குலுக்கி போட ,” சார்…போச்சே…” என்றனர். அவன் அதிர்ந்து போனான். அன்று அவனுக்கு ஐம்பது காசு என்பது மிகப் பெரியது. ஜெயகாந்தனின் நாவல் ஒரு ரூபாக்குக் கிடைத்த காலம். அவனிடம் வேறு காசு இல்லை என்று தெரிந்து கொண்டவர்கள், கபாலியைப் பார்த்து, ” நீங்க வையுங்க…ஐந்து ரூபாய் வைச்சா பத்து ரூபாய் கிடைக்கும்…ஐம்பது ரூபாய் வைச்சா நூறு ரூபாய் கிடைக்கும்” என்று ஆசை காட்டினர். கபாலி தன்னுடைய மணிபர்சை கையில் வைத்தபடி,” உங்கள்ட்ட நூறு ரூபாய் இருக்கா” என்று கேட்டான் அப்பாவியாக.
“ம்…இருக்கு..வையுங்க சார்…என்று சொல்லிக் கொண்டே கபாலி கையில் வைத்திருந்த “மணிபர்சில்” இருந்த ஐம்பது ரூபாய் நோட்டை அவர்களில் ஒருவன் மிக விரைவாக எடுத்து “வை ராஜா வை…வை ராஜா வை..” என்று சொல்லிக் கொண்டே தரையில் உள்ள சதுரத்தில் வைத்து, உடனே ” போச்சே சார்” என்று கூறிக் கொண்டு அந்த ஐந்து பேர்களும் அந்த இடத்தில் இருந்து வேகமாகக் கலைந்து சென்று விட்டனர். அவனும், கபாலியும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
அது அவனுக்கு ஒரு பாடமானது. அன்று முதல் அவன் எந்த சூதாட்ட இடத்திற்கும் செல்வது கிடையாது. விளையாட்டிற்குக் கூட அவன் நண்பர்களுடன் “சீட்டும்” ஆடுவது கிடையாது. லாட்டரிச் சீட்டு போன்ற அதர்மமான வழிகளில் அவன் அறவே செல்வது கிடையாது. என்ன கஷ்டம் வந்தாலும் அதிக வட்டிக்கு ஆசைப் பட்டு பணத்தைத் தனியாரிடம் கொடுப்பதும் கிடையாது. அவன் தொலைத்த “ஐம்பது காசுகள்” அவனுக்குக் கற்றுக் கொடுத்த அனுபவப் பாடம் அதுதான்.
“போச்சுது போச்சுது பாரத நாடு
போச்சுது நல்லறம் போச்சுது வேதம்
ஆச்சரி யக்கொடுங் கோலங்கள் காண்போம்
ஐய இதனைத் தடுத்தல் அரிதோ?”
என்று விதுரன் சூதாட்டத்தின் தீமையை திருதராஷ்டிரனிடம் கூறுகிற “பாஞ்சாலி சபதத்தின்” மகாகவி பாரதியாரின் வரிகள்தான் எத்தனை உண்மை.
07.01.2016
அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..