ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 45
–சி. ஜெயபாரதன்.
(1883-1931)
ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“ஊத்தைப் பற்கள் நிரம்பிய ஒரு நாடு வயிற்று நோயால் நாச மடையும் ! பல நாடுகள் அப்படிச் செரிக்க முடியாத வயிற்று வலியோடு துன்புற்று வருகின்றன. சிரியாவில் சொத்தைப் பற்களைப் பார்க்க விரும்புவோர் கல்விக் கூடங்களில் படிக்கும் மாணவ மாணவிகளைப் பிற்காலப் பொறுப்புக்கு இன்று எப்படித் தயார் செய்கிறார் என்று காணச் செல்லுங்கள்.”
கலில் கிப்ரான். (Decayed Teeth)
___________________
வலுவற்ற மனிதன் !
___________________
வசந்தம் வந்தது !
வாய் திறந்து சிற்றோடைகளும்
ஆறுகளும் முணுமுணுக்க
ஆரம்பித்தன !
பூக்களின் புன்சிரிப்புகள்
பொங்கின !
மனித ஆத்மா திருப்தி யுற்று
மகிழ்ச்சி அடைந்தன !
திடீரெனச் சினமுற்று
இயற்கை
குப்பையைக் கொட்டியது
ஒப்பனை நகரில் !
மனிதன் மறந்தான் இயற்கையின்
சிரிப்பை, செழிப்பை,
பரிவை எல்லாம் !
பயங்கரக்
குருட்டுப் புயல் விசை ஒன்று
ஒரு மணி நேரத்தில்
உருக் குலைத்தது
பல பிறவிகள் மெய்வருந்தி
உழைத்துக் கட்டியதை !
மாசுகளால் கோர மரணம்
மானிடரைப் பீடிக்கும் !
விலங்கி னத்தையும்
சிதைத்துச்
சின்னா பின்ன மாக்கும் !
___________________
நெருப்புப் பற்றி மக்களையும்
சாதனங் களையும்
எரித்துக் கரியாக்கும் !
ஒரு பயங்கர நீளிரவு
எழில் வாழ்வின்
ஒளிமயத்தை எரித்துக்
குப்பைக் கோலச் சாம்பலாக்கும் !
அச்சமூட்டும்
மூர்க்கச் சக்திகள்
அழித்தது மனிதரை !
அவரது குடி இல்லங்களை !
அவரது
அரும்பணிச் சாதனைகளை !
அத்தகைய
அழிவுப் பிரளயத்தில்
பூமியின் மடியில் நின்றான்
தூரத்தில் வலுவிலா
அற்ப மனிதன் வழிபாடுடன்
வெற்று நோக்குடன்
வேதனை யுடன்
கடவுளின் பேராற்ற லுக்கு
அடங்கிக் கொண்டு !
___________________