Blog

  • படக்கவிதைப் போட்டி – 31

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11998163_894541927266674_2024035369_n

    107291507@N03_rசாந்தி விஜய் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (26.09.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • மூங்கில் இலைக் காடுகளே …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    Moongil Ilai Kaadugale video screen shotஅடர்ந்து வளர்ந்த மூங்கில்காடுகளில் காற்று மழை புயல்களினிடையே சிக்கிடும்போது ஒரு சில துளைகள் உண்டாகும்! அதில் உண்டான துளைகளின் வழியே காற்று நுழைந்த போது புல்லாங்குழல் நாதம் கண்டறியப்பட்டது, அதுவே பூபாளம் எனப்பட்டது.

    காலைக் கதிரவன் கடலில் குளித்தெழுந்து வருகின்ற அழகும், அதிகாலை இளங்குயில் பாடி நமை அழைக்கும் இனிமையும் நம் இதயத்திற்கு இதமானவை. எனவேதான் திரைப்படப்பாடல்களில் பெரும்பாலும் தொடக்கம் புல்லாங்குழல் இசையிருக்கும்.

    மிகக்குறைந்த செலவில் திரைப்படம் எடுப்பதையும், அதில் அன்றாட வாழ்க்கையில் சராசரி மனிதர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அலசி ஆராய்வதையும் தனது கொள்கைகளாய் கொண்டிருந்த விசு அவர்கள் இயக்கிய “பெண்மணி அவள் கண்மணி” திரைப்படத்தில் தேனிலவு செல்லும் தம்பதிகள் பாடும் பாடலாய் இந்தப் பாடல்!

    Moongil Ilai Kaadugale video screen shot3“இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழலோ” என்கிற கவிதை வரியை நினைவூட்டும் பல்லவி. இயற்கையின் அழகு எத்தனை எத்தனை!! விரிந்துகிடக்கும் வானம் முதல், பரவி எழுந்துநிற்கும் மலைகள் என அதன் கூறுகள் ஒவ்வொன்றும் தன்னெழில் தந்து இந்த உலகத்திற்கு அழகூட்டுகின்றன!

    எஸ்.பி.பாலசுப்பிரமணிம் குரலில் இழைந்தோடும் இனிய கானம், சங்கர் கணேஷ் இசையில் பொங்கிப் பெருகி வருகிறது பெண்மணி அவள் கண்மணிக்காக! மூங்கில் இலைக் காடுகளே முத்துமழை மேகங்களே எழுதியிருப்பவர் கவிஞர் வாலி.

    மூங்கில் இலை காடுகளே
    முத்து மழை மேகங்களே
    பூங்குருவி கூட்டங்களே வாருங்கள்
    வானகத்தில் சொர்க்கமில்லை
    வையகத்தில் உள்ளதென்று
    ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள் பாருங்கள் (மூங்கிலிலை)

    மாம்பூக்களே மைனாக்களே
    சந்தோஷ வேளைதான் சங்கீதம் பாடுங்கள்
    நாணல்களே நாரைகளே
    கல்யாணப் பெண் இவள் நல் வாழ்த்துப்பாடுங்கள்
    கால காலமாய் தப்பாத தாளமாய்
    காதல் வண்ணமே மங்காத வேளையாய்
    பெண் என்ற காவியம் பல்லாண்டு வாழணும் (மூங்கிலிலை)

    கார்காலமே நீர்த் தூவுமே
    செந்தாழம்பூ உடல் சில்லென்று கூசுமே
    ஆண் பாதியும் பெண் பாதியும்
    ஒன்றாகும் வேளையில் சம்சார காணமே
    ஓடம் போலவே உள்ளங்கள் ஆடவே
    ஏரி போலவே வெள்ளங்கள் ஊறவே
    ஒன்றான ஜாதகம் பல்லாண்டு வாழணும் (மூங்கிலிலை)

    மூங்கில் இலை காடுகளே
    முத்து மழை மேகங்களே
    பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்

    காணொளி: https://www.youtube.com/watch?v=hxC69rkhPiE

    https://www.youtube.com/watch?v=hxC69rkhPiE

    பாடும் நிலா பாலசுப்ரமணியன் அவர்கள் பாடும் பாடலாக மேற்கண்ட வரிகளில் ஒருமுறையும் …

    வாணி ஜெயராம் அவர்கள் குரலில் கீழ்க்கண்ட வரிகளில் மற்றொரு முறையும் இடம்பெறும் பாடல்.

    மூங்கில் இலை காடுகளே
    முத்து மழை மேகங்களே
    பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்
    மாலையிட்ட மங்கையர்க்கு
    தற்கொலை தான் சொர்க்கம் என்றால்
    மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள் கூறுங்கள் (மூங்கிலிலை)

    மாம்பூக்களே மைனாக்களே
    கல்யாணப்பாவை என் கண்ணீரை பாருங்கள்
    நாணல்களே நாரைகளே
    பெண்பட்ட பாடுகள் எல்லோருக்கும் கூறுங்கள்
    பேரம் பேசவே கல்யாண சந்தையோ
    பெண்கள் யாவரும் வெள்ளாட்டு மந்தையோ
    கல்யாண ஊர்வலம் எல்லாமே நாடகம் (மூங்கிலிலை)

    பூச்சூடவும் பாய் போடவும்
    கல்யாண மாப்பிள்ளை கேட்பாரே வாடகை
    பொன்னோடுதான் பெண் தேடுவாள்
    அம்மாடி மாமியார் பெண்ணல்ல தாடகை
    கேள்வி என்பதே இல்லாத தேசமா?
    யாரும் உண்மையை சொல்லாத தோசமா
    பெண் இங்கு தாரமா? வந்தாலே பாரமா? (மூங்கிலிலை)

    காணொளி: https://www.youtube.com/watch?v=i1jitFtbkRs

    https://www.youtube.com/watch?v=i1jitFtbkRs

    Share
  • குறளின் கதிர்களாய்…(89)

    -செண்பக ஜெகதீசன்

    கான முயலெய்த அம்பினில் யானை
    பிழைத்தவே லேந்த லினிது.   (திருக்குறள்-772: படைச்செருக்கு)

    புதுக் கவிதையில்…

    உருவில் சிறிய
    வனத்து முயலை
    வீழ்த்த எய்திடும் அம்பைவிட,
    உருவில் பெரிய
    யானைமேல்
    எய்து தவறிய அம்பை
    ஏந்துதலே சிறப்பு!

    குறும்பாவில்…

    படைச்செருக்கு இதுதான்,
    முயலை வீழ்திடும் அம்பைவிட
    யானையில் தவறியதே சிறந்தது!

    மரபுக் கவிதையில்…

    அம்புகள் எல்லாம் ஒன்றேதான்
    –அழிக்கும் தொழிலைக் கொண்டதுதான்,
    வம்பாய் வராத முயலினையே
    –வீழ்த்தும் அம்பில் சிறப்பில்லை,

    தெம்பாய் நடந்து வந்தேதான்
    –திடமாய் எதிர்க்கும் யானையதன்
    தும்பிக் கைவிழ எய்தவம்பு
    –தவறி வீழினும் சிறப்பன்றோ!

    லிமரைக்கூ…

    வனத்து முயலை வீழ்த்திடும் அம்பு,
    இதைவிட யானையில் தவறிய
    அம்பதுவே சிறந்தது என்றுநீ நம்பு!

    கிராமிய பாணியில்…

    அம்பு அம்பு வில்லம்பு
    ஆள அடிக்கும் வில்லம்பு,
    எல்லா அம்பும் அம்பில்ல
    எதயும் அடிச்சா செறப்பில்ல…

    காட்டு மொசலு கீழவுழ
    போட்ட அம்பு பெரிசில்ல,
    காட்டு யான மேலவுட்டு
    காயப் படுத்தாம உழுந்தாலும்
    அந்த அம்பு ஒசத்திதான்
    அதுக்குப் பெரும அதிகந்தான்…

    அம்பு அம்பு வில்லம்பு
    ஆள அடிக்கும் வில்லம்பு!

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 180

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை

    கோவலன் கண்ணகியைப் பாராட்டி, ஒரு சிலம்பை எடுத்துச்சென்று விற்று வருவேன்’ என்று கூறி, விடைபெற்றுச் செல்லுதல்

    கோவலன் கண்ணகியிடம் கூறினான்:
    “பிறந்த குடியின் முதல் சுற்றமாகிய
    தாய் தந்தையரையும்,
    உடனிருந்து வேலை செய்யும் மகளிரையும்,
    அடியார்கள் கூட்டத்தையும்,
    நட்பாய் நிற்கும் தோழியரையும் விட்டு விலகி
    நல்லோர் விரும்பும் நாணத்தையும் மடத்தையும்
    பெருமை வாய்ந்த கற்பினையும் மட்டும் விரும்பி,
    அவற்றை மட்டுமே துணையாகக் கொண்டு
    இவ்விடத்து என்னுடன் வந்து
    என் துன்பம் தீர்த்த
    பொன் போன்றவளே!
    கொடி போன்றவளே!
    மலர்மாலை அணிந்தவளே!
    நாணின் பாவையே!
    நீள்நில விளக்கே!
    கற்பின் கொழுந்தே!
    பொற்பின் செல்வியே!

    உன் சிறிய பாதங்களுக்கு
    அணியாகும் சிலம்புகளுள் ஒன்றை
    நான் சென்று விற்று வருவேன்;
    நான் வரும் வரையில்
    நீ இங்கு வருந்தாது இருப்பாயாக!”

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 81 – 99

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–

     

    Share
  • செய்திகள் வாசிப்பது …

    — எஸ். வி. நாராயணன்.

    S.V. Narayananஎழுபதுகளின் பிற்பகுதியிலே புதுச்சேரியில் வானொலி நிருபராக நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது, இட்லிக்கடை வைத்துப் பிழைத்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி, வங்கிக்கடன் பெற்று தம்முடைய தொழிலை அபிவிருத்தி செய்ய முனைந்தது பற்றிய ஒரு செய்தியை வானொலி ஒலிபரப்பியது. இட்லிக்கடை பற்றி கூட செய்தியில் வருகிறதே என ஓரிருவர் கிண்டலாகக் கேட்டதுண்டு. ஏழை, எளியோருக்கு உதவும் வகையில் வங்கி சேவைகள் மாற்றமடைந்து வருவதை மக்களுக்குத் தெரிவிப்பதற்காகவே அந்த செய்தி வெளியிடப்பட்டது என குறை கூறியவர்களுக்கு பதிலளித்தோம். முதலில் கேலி செய்தவர்கள், பின்னர் அத்தகைய செய்திகள் வெளியிடுவதன் அவசியத்தைப் புரிந்துகொண்டனர்.

    மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் புயலில் சிக்கி மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்ட தகவலை அவரது வாய் மொழியாகவே ஒலிபரப்பியபோது, அந்தச் செய்தி பல நெஞ்சங்களை உருக்கியது. அதேபோல, புதுவை ஜிப்மர் மருத்துவமனையில், அன்றைய கால கட்டத்தில் கடினம் என்று கருதப்பட்ட கண் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது பற்றிய செய்தி ஒலிபரப்பானது. பல நாட்களுக்குப் பிறகும் அந்தச் செய்தியை பலர் நினைவுகூர்ந்தனர்.

    புதுவையில் கம்பன் விழா ஒருமுக்கியமான நிகழ்ச்சி. அந்த விழா பற்றிய தகவல்கள் மாநில செய்தியில் மட்டுமன்றி தில்லியிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ் செய்தியிலும் இடம் பெற்றபோது புதுவை தமிழன்பர்கள் பலர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த எளிய உதாரணங்களை இங்கு குறிப்பிடுவதன் நோக்கம், செய்தி என்பது அரசியல்வாதிகளைச் சுற்றி நடப்பது மட்டுமல்ல என்பதைச் சுட்டிக்காட்டவே. அரசியல்வாதிகள் தும்மினாலும், தூங்கினாலும் அவை முதற்பக்க செய்தியாகிவிடுகின்றன. திரையுலகத் தேவதைகளின் கிசுசிசுக்கள் ‘கட்டம்’ போட்டு வெளியிடப்படவேண்டியவை ஆயிற்றே. கொள்ளை, கொலை, கற்பழிப்பு இவை பற்றிய செய்திகள் இல்லாவிட்டால் பத்திரிகைகளின் விற்பனை சரிந்துவிடுமே. இத்தகைய ‘பெரிய பெரிய’ விஷயங்கள் இருக்கும்போது, ‘சின்ன சின்ன’ விஷயங்களை கவனிப்பவர் யார்? தவிர, ‘பெரிய’ விஷயங்களைத் தொகுத்தளிப்பது அவ்வளவு சிரமமான காரியம் அல்ல. அரசியல்வாதிகள் பேட்டி அளிப்பார்கள். பத்திரிகையில் போடுவதற்கு ஏற்றவாறு அறிக்கைகள் தருவார்கள். நிருபர்களுக்குத் தக்க வசதிகளையும் செய்து தருவார்கள். பின்னர் என்ன? அந்தச் செய்திகள் பத்தி பத்தியாக வெளிவருவதில் ஆச்சரியம் என்ன. காவல் துறை அதிகாரிகளை அணுகினால் கொலை, கொள்ளை போன்ற சமுதாய அவலங்கள் பற்றிய செய்திகள் கிடைத்துவிடும். விலாவாரியாகப் போட்டுவிடலாம். ஆனால், எங்கோ ஒரு மூலையில் சப்தமின்றி செயல்பட்டு, சாதனை புரிந்து வரும் சாதாரண மக்களைப் பற்றிய தகவல்களைத் தேடிப்பிடித்துத்தான் போடவேண்டியிருக்கும். அதே போல மக்களுக்குத் தேவையான, அவர்களுக்குப் பயன்படக்கூடிய செய்திகளை திரட்டிட மிகுந்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதற்காக கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.

    செய்திகள் திரட்டுவோருக்கு மற்றொரு முக்கிய பொறுப்பும் உண்டு. மக்களின் மேம்பாட்டுக்காக அரசு கோடி கோடியாக ஆண்டுதோறும் செலவழிக்கிறது. ஆனால், இதில் 15 சதவிகிதம் கூட மக்களைச் சென்றடைவதில்லை என்று மூத்த அரசியல் தலைவர்களே கூறியிருக்கிறார்கள். அரசு திட்டங்கள் பற்றி தொடர்ச்சியானதொரு கணிப்பு இருக்கவேண்டாமா? சட்டமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையோடு, ஜனநாயகத்தின் முக்கியமான நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத்துறை இந்தப் பொறுப்பை ஏற்று, அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டவேண்டாமா? அரசு திட்டங்கள் விஷயத்தில் தற்போதைய அணுமுறையை எப்படி இருக்கிறது தெரியுமா? பத்திரிகைகள், ரேடியோ, டெலிவிஷன் போன்ற வெகுஜன தகவல் தொடர்பு அமைப்புகள் பெரும்பாலும் அரசு தரும் தகவல்களை வெளியிடுவதோடு தங்களுடைய பொறுப்பு தீர்ந்துவிட்டதாக நினைக்கின்றன. திட்ட நிறைவேற்றம் பற்றி, நடுநிலையில் நின்று, அவ்வப்போது தக்க செய்திகளை அளிக்க அவை அதிகமாக முன்வருவதில்லை. அரசின் திட்டங்களை விமர்சனம் செய்தால் அரசின் விளம்பர ஆதரவு, மற்றும் கிடைக்கக்கூடிய இதர வசதிகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் ஓரளவு இருக்கலாம். மேலும், அத்தகைய கணிப்புகளை மேற்கொள்ள போதிய வசதியின்மை ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், பொதுவாக ஒருவித அக்கறையின்மை அல்லது மெத்தனம் காரணமாகவே இத்தகைய முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதில்லை என்றே கூறவேண்டும்.

    மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பு தங்களுக்கு உண்டு என்பதை பத்திரிகை உலகம் உணர்ந்தால் நமது ஜனநாயகம் வலுப்பெறும் என்பதில் ஐயமில்லை. உதாரணமாக, பல ‘இலவச’ திட்டங்களை இன்று காண்கிறோம். இந்த திட்டங்கள் நல்லதா? இவற்றால் மக்களுக்குப் பயன்கிட்டுகிறதா? குளறுபடிகள் ஏதுமின்றி இத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா? இதுபற்றி நடுநிலையிலான ஒரு கணிப்பை பத்திரிகைள் தருவது எவ்வளவு பொருத்தமாக இருக்கும். அரசுப் பணிகள் மட்டுமின்றி, ஒரு சமூகத்தின் செயல்பாடுகளை ஆக்கபூர்வமாக அலசும் தன்மையையும் பத்திரிகைகள் வளர்த்துக் கொள்ளவேண்டும். கல்வியறிவு பெருகிவரும் இந்நாளிலும் பற்பல மூடநம்பிக்கைகள், அருவருக்கத்தக்க பழக்க வழக்கங்கள் இருந்து வருகின்றன. தலையில் தேங்காய் உடைத்தல், குழி மாற்றுத் திருவிழா, வழிபாடு என்றபெயரில் பிராணிகளை பலி கொடுக்கும் போக்கு இவையெல்லாம் இன்னமும் தொடருகின்றன. சாதிப் பிரச்சினைகள் ஓய்ந்தபாடில்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறையவில்லை. குழந்தைகளின் உரிமைகள், சில சமயம், பெற்றோர்களாலேயே பறிக்கப்படுகின்றன. இத்தகைய அவலங்கள் நீங்கினால்தான் ஒரு சமூகம் விரைவாக முன்னேற முடியும். மக்களிடையே விவேகம், பரஸ்பர நல்லுணர்வு, வளமான சிந்தனைகள் இவற்றை ஊக்குவிப்பதில் வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் ஓரளவாவது அக்கறை காட்டவேண்டாமா?

    ‘மீடியாவின்’ சக்திபற்றி எவரும் எடுத்துக் கூறவேண்டியதில்லை. கத்திமுனையைவிட பேனாவின் முனை வலிமைமிக்கது என்பதை அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், ‘மீடியா’ அமைப்புகள் தங்கள் வலிமையை சமுதாய முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துகின்றனவா என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    பத்திரிகைகள், டெலிவிஷன், ரேடியோ அனைத்தும் இப்போது விளம்பர வலையில் சிக்கியிருக்கின்றன. விளம்பரங்கள் தேவைதான். வணிகத் தகவல்கள், வேலை வாய்ப்பு குறிப்புகள், திருமண வாய்ப்புகள் போன்ற பல செய்திகள் விளம்பரங்கள் மூலம் கிடைக்கத்தான் செய்கின்றன. ஆனால், விளம்பரங்களின் ஆக்கிரமிப்பு இப்போது செய்திகளையே மூழ்கடித்துவிடும் போலிருக்கிறது. எந்த ஒரு டெலிவிஷன் சேனலிலும் செய்தி அரை மணி என்றால் அதில் பாதி நேரத்திற்குமேல் விளம்பரங்கள். ஷாம்பூ, மெதுபானங்கள், சிவப்பழகு கிரீம் போன்றவற்றிற்கான விளம்பரங்கள் திரும்பத் திரும்ப, அலுத்துப்போகும் அளவுக்கு வருகின்றன. செய்திகளிடையே விளம்பரம் என்ற நிலைமாறி விளம்பரங்களிடையே செய்தி என்ற மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

    விளம்பரங்களைப்பற்றிக் குறிப்பிடுகையில் மற்றெhரு அம்சத்தையும் சொல்ல வேண்டியிருக்கிறது. புகைபிடித்தலும், புகையிலையை உபயோகித்தலும் உடல் நலத்திற்கு தீமை என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்து. புகையிலையின் தீங்குகள் பற்றி பத்திரிகைகள் தலையங்கங்கள் எழுதுகின்றன. நீண்ட கட்டுரைகளையும் வெளியிடுகின்றன. அதே நேரத்தில், கவர்ச்சிமிக்க சிகெரெட் விளம்பரங்களை பெரிய அளவில் வெளியிட பத்திரிகைகள் தயங்குவதில்லை. எந்தவிதத்தில் இது நியாயம் எனத் தெரியவில்லை. ‘படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்’ என்பதுபோல இருக்கிறது இது. மதுபான விளம்பரங்கள் கூடாது என அரசு வலியுறுத்துகிறது. ஆனால், அத்தகைய விளம்பரங்கள் ஏதாவது ஒருவகையில் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

    புகைப்படங்களின் உபயோகம் பற்றியும் இங்கு கூறவேண்டும். ஒரு பக்கம் எழுதினால் கூடத்தெரிவிக்க முடியாத ஒரு கருத்தை நல்ல படம் ஒன்று தெளிவாக்கிவிடும் என்பார்கள். ஆனால், இப்போதெல்லாம், செய்திக்காக படம் போடுவதைவிட, வெறும் கவர்ச்சிக்காகவோ, இடத்தை நிரப்புவதற்காகவோ புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் ஒட்டைச்சிவிங்கி குட்டி போட்ட செய்தியும், சீனாவில் மாடு ஒன்று தெருவில் மிரண்டு ஓடிய செய்தியும் டெலிவிஷனில் ஒளிபரப்பப்படுகிறது என்றால் அதற்குக் காரணம் அந்நிய ஏஜன்சிகள் மூலம் அந்தப்படம் கிடைப்பதுதான். படம் கிடைக்கிறது. தேவையா என உரசிப்பார்க்காமல் போட்டு விடுகிறார்கள். இடத்தை நிரப்பி விடுகிறார்கள்.

    இன்று மீடியா ஏகமாக வளர்ந்திருக்கிறது. எத்தனை பத்திரிகைகள். எவ்வளவு டெலிவிஷன் சேனல்கள். ரேடியோ அமைப்புகளும் பெருக ஆரம்பித்து விட்டனவன்றோ. இந்த ‘மீடியா’ சக்தி, கவர்ச்சிக்கும், விளம்பரத்திற்கும் பலிபோகாமல் இருந்தால், மக்களுக்கு ஆக்கபூர்வமாக பணியாற்றிட முடியும். இல்லையெனில், பொதுத் தொண்டு ஆற்றவந்த அரசியல் வாதிகள் போல, ‘மீடியாவும்’ திசைமாறிச் சென்றுவிடும்.

    Share
  • உன்னையறிந்தால் …….. (23)

    –நிர்மலா ராகவன்.

    நல்லவனாக இரு

    உனையறிந்தால்

     

    நல்லவனாக இரு …

    ஒரு மாணவன் என்னிடம் கேட்ட கேள்வி: `நல்லவனாக இரு! (BE GOOD) என்று எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால், நல்லவனாக இருப்பதென்றால் எப்படியென்று தெரியவில்லையே!’

    விளக்கம்: எது நல்லது என்பது வீட்டுக்கு வீடு மாறுபடும்.

    உதாரணம் 1: பிள்ளைச் செல்வத்தில் சிறந்து, ஆனால் பொருட்செல்வமின்றி வாடும் குடும்பத்தில் பெற்றோர் இருவரும் கடுமையாக உழைக்க வேண்டிய நிலை. அதனால், மூத்த குழந்தை வீட்டு வேலைகளைச் செய்வதுடன், தன் தம்பி தங்கைகளையும் பார்த்துக்கொண்டால், `நல்ல, பொறுப்பான பிள்ளை’.

    இவன் பெரியவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு, அத்துமீறாமல் நடக்கிறான். சுயநலனைப்பற்றி நினைத்தும் பாராது, பிறருக்காக உழைக்கிறான். பள்ளியிலும் பிறருக்கு உதவுவானே தவிர, தான் முன்னுக்கு வரவேண்டும் என்ற வெறியோ, சுயநலமோ கிடையாது. இத்தகைய மாணவர்களால் நிறைய மதிப்பெண்கள் பெறமுடியாது. சிலர் அதைப் பெரிது பண்ணாமல் ஏற்பார்கள். வேறு சிலருக்குத் தம் பெற்றோர்மீது ஆத்திரம் எழும் — தம்மை இப்படி வளர்த்ததற்காக.

    இப்படிப்பட்டவர்களில் ஒருவன் என்னைக் கேட்டான்: `நாங்கள் நிறைய மதிப்பெண்கள் வாங்குவதில்லை என்று ஆசிரியர்கள் எங்களைக் கேலி செய்கிறார்கள், திட்டுகிறார்கள். அதெப்படி மற்றவர்கள் நிறைய மார்க் வாங்குகிறார்கள், டீச்சர்?’

    ஒரு முறை, நான் உடல்நிலை சரியில்லாதபோது அந்த வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தேன். ஏதோ எழுத்து வேலை கொடுத்தபோது, பலரும் அதைச் செய்யாது, உரக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். `டீச்சருக்குத்தான் குரல் கம்மி இருக்கிறதே! எப்படித் திட்ட முடியும்!’ என்ற மிதப்புடன். ஒரு மாணவன், அவர்களைவிட உரக்க, `ஹேய்! டீச்சருக்கே, பாவம், உடம்பு சரியாக இல்லை. நீங்கள் எல்லாம் சத்தம் போட்டு, அவர்களை இன்னும் கஷ்டப்படுத்துகிறீர்களே!’ என்று இரைந்தான். அதன்பின், வகுப்பில் அப்படி ஒரு நிசப்தம்! உரக்கப் பேசியவர்களின் தலை குனிந்தது.
    (அதுவே `சிறந்த’ மாணவர்களின் வகுப்பில் ஆசிரியைகளுக்கு மைக்ரெய்ன் தலைவலியோ, காய்ச்சலோ, `பாடம் நடத்துங்கள்!’ என்று பிடிவாதம் பிடிப்பார்கள். அவர்களுக்கு மார்க்கு குறைந்துவிட்டால் என்ன செய்வது!)

    இப்போது, நான்: வாழ்க்கையில் கல்வியும், பெரிய உத்தியோகமும் அனைத்துமில்லை. மனிதாபிமானம் என்று ஒன்று இருக்கிறது. அது உங்களிடம் நிறைந்திருக்கிறது. வருங்காலத்தில் உங்கள் குடும்பம் உங்களால் மகிழ்ச்சியாக விளங்கும்!

    உதாரணம் 2: பணக்காரக் குடும்பத்தில் பிறந்த ஒரே பிள்ளையாக இருந்தால், தாய் கரிசனமாக, வயிறு கொள்ளாத அளவுக்கு உணவு போட்டு, எல்லாவற்றையும் அவன் சாப்பிட்டு முடித்தால், மகிழ்ந்து பாராட்டுகிறாள்: `நல்ல பிள்ளை!’

    ஆனால், பார்ப்பவர்கள் `குண்டு!’ என்று கேலி செய்வதால் ஒடுங்கிப் போகிறான். பிறருடன் கலந்து பழகத் தெரியாது போகிறது. இப்படியெல்லாம் வித்தியாசமாக வளர்க்கப்பட்டுவிட்டு, பள்ளிக்கூடத்துக்குப் போனால், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு வேறு விதமாக இருக்கும். புத்தகங்களைக் கரைத்துக் குடித்த மாணவன் பாராட்டுக்கு உரியவனாகிறான். ஏனெனில், அவன் பரீட்சைகளில் நிறைய மதிப்பெண்கள் பெற்றால், நாளிதழ்களில் போடுவார்கள். அதனால் பள்ளியின் மதிப்பும், ஆசிரியர்களின் மதிப்பும் உயருமே!

    கதை: நான் குறுகிய காலம் வேலை பார்த்த பள்ளியில் ஒரு மாணவி (16) வகுப்பறையில் மின்விசிறியைச் சுழலவிட்டால், உடனே எழுந்துபோய் நிறுத்தி விடுவாள். ஒரு முறை எங்கள் வகுப்பிற்கு வந்திருந்த மேலதிகாரிக்காக நான் மின்விசிறியைச் சுழலவிட்டபோதும் அப்படியே செய்தாள்.

    நான் கேட்டபோது, `எனக்குப் பிடிக்காது!’ என்றாள் திமிராக. `பிடிக்காவிட்டால், இடத்தை மாற்றிக்கொள்!’ என்றேன். அவள் முகத்தில் ஒரே ஆத்திரம் — தன் விருப்பு வெறுப்பை மீறி ஒருவர் நடக்கலாமா என்பதுபோல். பிற ஆசிரியைகளிடம் விசாரித்தபோது, `அவள் பள்ளியிலேயே மிகச் சிறந்த மாணவி!’ என்றார்கள் சர்வ சாதாரணமாக. அதனால், எல்லாரும் அவளுக்கு விட்டுக்கொடுத்தே பழகிவிட்டார்கள்.

    நான் தலைமை ஆசிரியையிடம், `உங்கள் பள்ளி சிறந்தது என்று பெயர் வாங்கியிருக்கலாம். ஆனால், குணமில்லாமல், கல்வி இருந்து பயனில்லை. யாராக இருந்தாலும், தவறு செய்தால் திருத்தியாக வேண்டும்,’ என்று சொன்னேன். தலைமை ஆசிரியை என்னை எதிர்க்கவில்லை. தானும் பிற ஆசிரியைகளும் செய்த தவற்றை ஒத்துக்கொண்டாள் போலும்! முகத்தில் ஆழ்ந்த வருத்தம் தெரிந்தது.

    சில குழந்தைகள் சிறு வயதிலிருந்தே புகழப்பட்டு வளர்ந்திருப்பார்கள். தம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டு, எந்தக் காரியத்தையும் பிறரைவிட மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைத்துச் செயல்படுவார்கள். இவர்களால் தோல்வியை ஏற்கவே முடியாது. உடைந்து போய்விடுவார்கள்.
    மாணவ மாணவிகளின் திறமைக்கு ஏற்ப, வெவ்வேறு வகுப்புகளில் பிரிக்கப்பட்டால், அத்தகைய வகுப்பில் நுழையும்போதே ஒரு வித பதற்றத்தை உணரமுடியும்.

    நான் காரணத்தைக் கேட்டபோது, `எல்லா ஆசிரியர்களும், `உங்களைத்தான் இந்தப் பள்ளி பெரிதும் நம்பி இருக்கிறது. நீங்கள் எல்லா பாடங்களிலும் 80%-க்குமேல் வாங்கவேண்டும்! என்று சொல்கிறார்கள். பயமாயிருக்கிறது!’ என்றார்கள். இந்தமாதிரி எதிர்பார்ப்பே அவர்களை சராசரிக்குச் சற்றுக் குறைவாகவே தேர்ச்சி பெற வழிவகுக்கும். வேறு சிலர் அறிவாளிகளாக இருந்தாலும், எல்லாவற்றிலும் பிறரைத் தோற்கடிப்பதை விரும்ப மாட்டார்கள். போட்டி மனப்பான்மை வெறியாக மாறிவிடும்போது நட்பு கிடைப்பது துர்லபம் என்று அறிந்தவர்கள் இவர்கள்.

    `எனக்கு வகுப்பில் முதல் மாணவியாக ஆகப் பிடிக்காது. தலையை நிமிர்த்திக்கொண்டு, எல்லாரையும் அலட்சியப் பார்வை பார்த்துக்கொண்டு! ஐயே!’ புத்திகூர்மையான மாணவ மாணவிகள் இப்படிக் கூறுவதைக் கேட்டுச் சிரித்திருக்கிறேன்.

    பிறருக்கு உதவினால் நல்லவர் என்று பெயர் வாங்கலாம். ஆனால், நாம் உடலில் வலுவின்றி இருக்கும்போது, `பிறர் கேட்கிறாரே!’ என்று உதவ முற்படுவது அறிவீனம். நம்மை நன்றாகக் கவனித்துக்கொண்டால்தானே பிறரைக் கவனித்துக்கொள்ள சக்தி இருக்கும்! அது சுயநலம் என்று அர்த்தமில்லை.

    `நீங்கள் யாரைப்போல் எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?’ என்று என்னை ஒரு பேட்டியில் கேட்டிருக்கிறார்கள். `என் போட்டி என்னுடன்தான்!’ என்று பதிலளித்தேன். போட்டி வெறி, அதனால் உண்டாகும் பதற்றம், பகைமை இவையெல்லாம் இன்றி நாம் வாழ்வில் முன்னேற முடியாதா, என்ன! இம்மாதிரியான எதிர்மறைக் குணங்களுக்கு ஆளாகும்போதுதான் நோய்வாய்ப்படுகிறோம்.

    சமையலோ, எழுதுவதோ, சித்திரம் வரைதலோ, எதுவாக இருந்தாலும், எப்போதையும்விட நாம் இன்று செய்வது இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று உறுதி செய்து கொள்ளுங்கள். இது நம்முடனேயே போட்டி போடுவது. நாம் விரும்பியபடியே நடந்தால், நிறைவாக இருக்கும்.

    Share
  • தேடும் கண்கள்!

    -கவிஜி

    கழுத்தை அறுப்பதோடு
    நிறுத்திக் கொண்டது
    80களின் காதல்
    வாய் குவித்துக்
    குருதி  குடிக்கிறது
    90களின் காதல்!

    ***

    காரியமெல்லாம்
    முடிந்த பின்னிரவில்
    விசும்பிக் கொண்டிருந்தார்
    இன்னும் மூன்று நாட்களில்
    மரிக்கப் போகிறவர்
    கிமுவில் ஒரு நாள்…!

    ***

    மீன்களற்ற குளத்தில்
    தேடும் கண்கள்
    மீன்களாகிறது!

     

    Share
  • ஏழரை எப்படி வரும்?

    பாலசுப்ரமணியன்

    காலைக்கதிரவனின் முதல் மரியாதை இன்னும் மண்ணுக்குக் கிட்டவில்லை. மெல்லிய இளவேனில் காற்று உடலுக்கு மிகவும் இதமாக இருந்தது. நரசிம்மன் வழக்கம் போல் தன் வீட்டு மொட்டை மாடியில் தன்னுடைய தினசரி காலை நடையை துவக்கியிருந்தார் பொதுவாக அந்த நேரத்தில் அவர் எதைப்பற்றியும் யோசிப்பதில்லை. ஆனால் இன்று அவர் மனம் கொஞ்சம் பாரமாக இருந்தது. அதற்குக் காரணம் அவர் முன்தினம் தன் வீட்டுப் பரம்பரை ஜோசியரிடம் தன்னுடைய ஜாதகத்தைக் காண்பித்ததுதான்.

    “உங்களுக்கு மூல நட்சத்திரம். வரப்போவது ஏழரை நாட்டுச் சனி. ரொம்பப் படுத்தும். ஜாக்கிரதையாக இருக்கணும். உடம்பை கொஞ்சம் படுத்தும். வேண்டாத வம்பு தும்புல மாட்டிப்பேள். கொஞ்சம் வாயை அடக்கி வாசிக்கணும். என்ன சொன்னாலும் தப்பாகும்.”

    இது போதாதா நரசிம்மனின் மனசை ஒரு கலக்குக் கலக்க!  பாவம், மனுஷன்!  காலையிலே மாலனைப்பற்றிக்கூட நினைக்கவில்லை. எல்லாம் சனி பகவான் நினைப்புத்தான்!!

    இன்று மொட்டை மாடியில் அவர் நடையில் அவ்வளவு வேகமில்லை. “ஹலோ, நரசிம்மன், குட் மார்னிங்” பக்கத்து வீட்டுக்காரரின்   குரல்கூட அவர் காதுகளில் விழவில்லை.

    “”காலையிலே ரொம்ப சிந்தனை போலிருக்கு” இது மீண்டும் பக்கத்து வீட்டுக்காரர். நரசிம்மன் தன்னை அமுக்கியிருக்கும் சிந்தனையிலிருந்து  வெளியே வந்த பாடில்லை. மரத்திலிருந்து விழுந்த முள் அவர் கால்களில் குத்தி வலி தந்தது. காலை ஒருமுறை தூக்கி முள்ளைப் பிடுங்கி எறிந்தார்.

    “வனமாலி கதி சாரங்கி .. ” வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டே மேலே நடந்தார். “சனி பகவான் எப்படி வருவார்? சனி வரும்போதே ஒரு உலுக்கு உலுக்கும் என்பார்களே.!! நாராயணா. நீ தான் காப்பாத்தணும்.”

    மனம் அலைபாய்ந்துகொண்டிருந்தது

    “அம்மா” என்று ஒரே அலறல். ஒரு நிமிடம் தன தலையை இரு கைகளால் தாங்கிக்கொண்டு “நாராயணா, நாராயணா” என்று அந்த முதலை வாயில் பிடிபட்ட யானை “ஆதிமூலமே” என்று அழைத்ததுபோல் ஒரு கத்தல். என்ன ஆச்சு என்று அவருக்கே புரியவில்லை. “என்ன சார்? ” மீண்டும் பக்கத்து வீட்டுக்காரர்.

    “மண்டையிலே யாரோ பளார்னு அறைந்தமாதிரி இருந்தது” சொல்லிக்கொண்டே திரும்பிப்பார்த்தார். “ஓ, அந்த காக்கான்னா சிறகாலே மண்டையிலே அடிச்சிட்டு ப் போறது.”

    ஒரு கணம். “ஆஹா, ஜோசியர் சொன்னது சரியாப்போச்சு. அந்த சனி பகவான் தன்னோட காக்கை வாகனத்திலேதான் வந்து மண்டையிலே தட்டி விட்டு ப் போயிருக்கார்.” அவர் மனம் ஒத்துக்கொண்டது.

    “ஆரம்பிச்சாச்சு. சனியின் பலன் இன்னிலேந்து போலிருக்கு. சனிப்பெயர்ச்சிக்கு மூன்று மாதம் முன்னாலேயே பலன் தெரியும் என்று சொல்லுவா.”

    அவர் நடையின் வேகம் தளர்ந்தது. சரி. இன்னிக்கு நடையை இதோடு முடித்துக்கொள்ளவேண்டியதுதான்.

    “பத்து நிமிஷம் தானே ஆச்சு. இன்னொரு அஞ்சு நிமிஷம் பார்க்கலாமா. “மனம் யோசித்தது. திரும்பிப்பார்த்தார் “நல்லவேளை. காக்கை. போயிடுத்து” அவர் நடை தொடர்ந்தது.

    சிறிது நேரத்தில் மீண்டும் “அம்மா” என்று தலையைப் பிடித்துக்கொண்டு கீழே விழாத குறையாய் நரசிம்மன். “அப்பவே நினைத்தேன். சனீஸ்வரனுக்கு எதிராய் நாம். போகப்படாதுன்னு.  தப்புத்தான். தப்பு” சொல்லிக்கொண்டே அந்த மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தார்.

    “ஏன்னா. என்ன ஆச்சு., மாடில ஒரே சத்தமா இருந்தது.” அலமேலுவை ஒரு முறை பார்த்துக்கொண்டே “சனி வரானில்லையோ  . அதுக்கு முகவுரை எழுதிட்டுபோனான்” மனைவிக்கு ஒன்றும் புரிய வில்லை.

    அடுத்த நாள் காலை அவருக்கு மொட்டைமாடிக்குப்   போவதா வேண்டாமா என்ற பிரச்சனை. “ஏன்னா, ஒரு நாள்  நடந்தா நித்தியம் நடக்குமாயென்ன? ” மனைவியின் கேள்விக்குப் பதில் சொல்லமுடியவில்லை. “தைரியம் புருஷலக்ஷணம்” என்றோ படித்தது இப்போது நினைவுக்கு வந்தது.

    மாடியிலே பதினைந்து நிமிடங்கள் நடந்தவர் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். சனி பகவானின் வாகனத்தை எங்கும் காணோம். நடையில் வேகம் கட்டியது. சில நிமிடங்களில் “அம்மா”என்று தலையைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்தவர் பந்தயத்தில் ஓடுவது போல கீழிறங்கி வந்தார்.

    இரண்டு மாதங்களுக்கு நரசிம்மன் மாடிப்பக்கம்   செல்லவே இல்லை. ஒரு நாள் மாலை அவரை மாடியிலே பார்த்த பக்கத்து வீட்டு கோவிந்தராஜன் “என்ன நரசிம்மன், ரொம்ப நாளா மார்னிங் வாக்ல உங்களைக் காணோம்.” என்றார்.

    “என்ன சார் பண்றது, என் நட்சரத்துக்கு ஏழரைச் சனி பிடிச்சிருக்கு. தினசரி  காலையிலே காக்கை ரூபத்திலே சனி பகவான் மண்டையில ஓங்கி அடிச்சுட்டு போறார். ஒரு நாளுன்னா பரவாயில்ல,. தினசரியா? அதான். “

    ” என்ன சார் சொல்றேள், ஏழரை எட்டரையின்னு. கொஞ்சம் மேல நிமிந்து பாருங்கோ. உங்காத்து மரத்திலே காக்கா கூடுகட்டிக் குஞ்சு பொரிச்சிருக்கு. யார் அந்தப்பக்கம் போனாலும் தற்காப்புக்காக மண்டையிலே தட்டி விரட்டறது. ஒரு நாள் என்னைக்கூட எங்காத்து மாடியிலே…””

    கோவிந்தராஜன் பேசுவதைக் கேட்க நரசிம்மன் அங்கே நிற்கவில்லை. அவர் மனதில் ஒரே குழப்பம். “அப்போ, சனி பகவான் இப்படி வரவில்லை என்றால் வேறே எப்படி வருவார்?”

    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    Share
  • துளி பா!

    – தமிழ்நேசன் த. நாகராஜ்

    வாக்குச் சீட்டு
    தவணை முறையில்
    நாட்டைக் கொள்ளையடிக்கத்
    தன்மானத்தை இழந்து
    மக்கள் எழுதித் தந்த
    அனுமதி சாசனம்!

    ***

    வாக்குச் சேகரிப்பு
    கோடிகளைச் சுருட்டுவதற்கு
    முன்னோட்டமாக
    உன் கோவணத்தையும்
    கேட்கிறான் பிச்சையாக!

    ***

    சாதீ
    நம்மைப் பிரிக்கும் முன்
    தீயிட்டு எரிக்கப்பட
    வேண்டிய தீ!

    ***

    மீசை
    ஆடவனின் கம்பீரம்
    வீரத்தின் அடையாளம்!

    ***

    பணம்
    கருவறையில் துவங்கிக்
    கல்லறை வரையிலும்!

    ***

    நட்பூ
    உள்ளங்கையில்
    உறவான வாசனை
    பூக்களின் உன்னதம்!

    ***

    அம்மா
    அன்பின் விலாசம்
    மூன்றெழுத்தில்!

    ***

    நகைக்கடைப் பணிப்பெண்
    ஏழை விட்டில்
    பிறந்தாலும் கையில்
    விதவிதமான நகைகள்!

    ***

    இடி மின்னல்
    நீலவானத்தையே
    முட்டிப் பிளக்கும்
    இரட்டைக் குழல் துப்பாக்கி!

     

    Share
  • லக்ஷ்மி கடாக்ஷம்

    — தமிழ்த்தேனீ.

    “ பணம் “ இந்த ஒரு சொல் மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது?

    அந்தப் பணத்தைச் சேர்க்க மனிதர் என்ன பாடு படுகிறார்? சிலர் தமது உடல் உழைப்பால், சிலர் தமது மூளையால், சிலர் அவர்களின் தந்திரத்தால், சிலர் அவர்களின் கட்டற்ற முறையால் தவறான செயல்களால் சேர்க்கின்றனர் செல்வத்தை.

    நான் எப்போதுமே இறைவனிடம் எனக்கு நிறையச் செல்வத்தை அள்ளிக்கொடு என்று வேண்டமாட்டேன். மாறாக, இன்று எனக்குத் தேவையானவற்றை நிறைவாகச் செல்வழிக்க ஐந்து ரூபாய்கள் இருந்தால் போதும் என்றால் அந்த ஐந்து ரூபாய்களை அடைய எனக்கு ஏதேனும் வழிகாட்டு.

    நாளை பத்து ரூபாய்கள் வேண்டுமென்றாலோ, அதற்கு மறு நாள் இரண்டு ரூபாய் வேண்டுமென்றாலோ அவற்றை அடைய வழிகாட்டு. வேறு ஒரு நாள் எந்தச் செலவுமே இல்லையென்றால் எனக்கு அன்று பணம் தேவையில்லை. ஆனால் யாரிடமும் கையேந்தும் நிலையையோ அல்லது கடன் வாங்கும் நிலையையோ ஏற்படுத்தாதே என்றுதான் வேண்டிக் கொள்வேன்.

    அதற்கு மேல் வாழ்க்கையில் எதுவும் தேவையில்லை என்பதுதான் உண்மை, அதற்கு மேல் அதிகப் பணம் வைத்திருந்தால் அதை எப்படிச் செலவழிப்பது என்று தெரியாமல் தீய பழக்க வழக்கங்கள் வரும் என்பதுதான் உண்மை.

    மேலும் வாழ்க்கையில் நிம்மதியான நிலையைப் போக்கி பிரச்சனைகளை ஏற்படுத்தும் அதிகப் பணத்தின் கையிருப்பு. ஏனென்றால், அதிகப் பணம் இருக்கும் போது இல்லாதவருக்குக் கொடுப்போம் என்னும் மன நிலை நமக்கு வருவதில்லை என்பதே உண்மை.இந்தக் கருத்தை ஒட்டிய என் கற்பனைக் கதை.

    ***

    Kubera,_the_God_of_Riches_WIKIஒருவர் எதிர்பாராத விதமாகச் செல்வத்தின் அதிபதியான குபேரனை சந்திக்கிறார். அவரிடம் குபேரப் பெருமானே எனக்கு உங்கள் அருள் வேண்டும், ஶ்ரீ மஹாலக்ஷ்மியின் அருள் வேண்டும் . எனக்கு நிறையப் பொன்னும் பொருளும் பணமும் வேண்டும். ஆகவே பொன் செய்யும் மருந்தொன்று எனக்குக் கொடுத்து அருளினால் என்றும் உங்களை நான் மறவாமல் இருப்பேன். ஏனென்றால் இப்போது பொன்னுக்கு இருக்கும் மதிப்பு வேறு எதற்கும் இல்லை என்றாராம்.

    அதற்குக் குபேரன் அந்த மனிதரிடம் நான் சொல்வதைக் கவனமாகக் கேள் மனிதா பொன்னை மனிதர்களாகிய நீங்கள் கண்டு பிடித்தீர்கள், முத்து, பவழம், வைரம் போன்ற விலை மதிப்பற்ற பொருட்களை நீங்கள் கண்டு பிடித்தீர்கள். எங்கள் திரு உருவப் படங்களைப் பதிப்பித்து, விக்ரக வடிவில் வடித்து அவற்றையெல்லாம் எங்கள் மேல் அணிவித்து எங்களைச் செல்வந்தர்களாக காட்டுகிறீர்கள். எங்கள் கைகளின் மூலமாகக் கொட்டுவதைப் போல் காட்டுகிறீர்கள். நீங்களாகக் கற்பனை செய்து கொண்டு அந்தக் கற்பனையை உண்மை என்று நினைத்து நீங்களே ஏமாறுகிறீர்கள்.

    நன்றாக யோசித்துப் பார் பணத்தை நாங்களா அச்சடிக்கிறோம், அச்சடிப்பது நீங்கள். அப்படி இருக்க எங்களிடம் வந்து அந்தப் பணத்தைக் கேட்டால் நாங்கள் எப்படித் தருவோம். மிகச் சரியாக விநாயக சதுர்த்தி அன்று நாம் சந்தித்திருக்கிறோம். எல்லாம் இறைவன் செயல். எல்லோருமே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் குபேரனாகிய என்னிடம்தாம் எல்லாச் செல்வமும் இருக்கிறது என்று.

    ஒரு காலத்தில் என்னுடைய கட்டுப்பாட்டிலேதான் எல்லாச் செல்வமும் இருந்தது. அப்போது எனக்குக் கர்வமும் இருந்தது. அந்தக் கர்வத்தின் விளைவால் நான் பரமசிவனிடம் சென்று அவரை விருந்துக்கு அழைத்தேன் என்னிடம் உள்ள செல்வங்களையெல்லாம் காட்டிப் பெருமைப்படுவதற்கு.

    ஆனால் பரமசிவன் எப்படியோ என் மனதில் இருந்ததை அறிந்துகொண்டு அவருக்கு முக்கியமான வேலை இருப்பதாகவும் அதனால் விநாயகரை அனுப்புவதாகவும் சொன்னார். நானும் விநாயகரை விருந்தாளியாய் ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தேன்.

    குறிப்பிட்ட தினத்தில் விநாயகரும் வந்தார். அவருக்கு பிடித்தமான எல்லாவித உணவு வகைகளும் சமைத்து அவருக்குத் தலை வாழை இலையிலே பரிமாறினேன். அவரும் மகிழ்ந்து நன்றாகச் சாப்பிட்டார். போடப் போட உண்டு கொண்டே இருந்தார், உணவு வகைகள் எல்லாம் காலியாகின. அடுத்து அவரின் பசியைப் போக்க என்னிடமிருந்த செல்வங்களை எல்லாம் பரிமாறினேன் ஏதோ ஒரு கட்டத்தில் அவருக்கு என்ன தோன்றியதோ போதும் என்றார்.

    ஆனால் அவர் போதும் என்கிற சொல்லை உச்சரித்த நேரத்துக்குள் என்னுடைய செல்வத்தில் பாதி காணாமல் போயிற்று. அப்போதுதான் புரிந்தது அது என் கர்வத்தின் விளைவு என்று. ஆகவே செல்வம் அதிகமிருந்தால் கர்வம் வரும். கர்வம் வந்தால் செல்வம் காணாமல் போகும். அதனால்தான் அதற்குப் பெயர் செல்வம் என்று வைத்துவிட்டு, அது இல்லாதவனுக்கு வறுமை என்று பொருள் கொள்ளுகிறீர்கள்.

    இந்த உலகத்திலே வயிறு நிரம்பினால் மனம் நிறையும், போதும் போதும் என்று கைகளை குறுக்கே தடுத்து இனி போடாதீர்கள் என்று மறுப்பர். ஆனால் கஜானா நிரம்பினால் மனம் பேராசை கொள்ளும் கைகளை அகல விரித்து இன்னும் வேண்டு இன்னும் வேண்டும் என்று பேராசை கொள்வர்.

    பேராசை பெரு நஷ்டம் என்பதை அனுபவித்தவன் நான் . ஆகவே போதும் என்கிற ஒற்றைச் சொல்லையே உனக்குப் பரிசாக அளிக்கிறேன். ஏன் தெரியுமா போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து. என்று கூறிவிட்டு குபேரன் அந்த மனிதரின் கண்ணிலிருந்து மறைந்தே போனார். இன்று வரை அவரைக் காணவில்லை. நீங்கள் யாரேனும் அவரைக் கண்டால் என்னிடம் சொல்லுங்கள்.

    Share
  • தேசம் காப்போம்!

    -பா.ராஜசேகர்

    அஞ்சி அஞ்சி வாழ்ந்த காலம் போதும்!
    துஞ்சித் துஞ்சி வீழ்ந்தகதை எப்போ மாறும்?

    பொய்மூட்டை புளுகைக்காட்டி ஓட்டுக் கேட்டான்!
    பொன்முட்டை வாத்துத் தரேன் மாற்றம் கேட்டான்!

    ஏமாந்தவன் எல்லோரும் ஓட்டுப் போட்டாங்கையா!
    எடுபட்டவன் ஆட்சியைப் புடிச்சிட்டான்யா!

    கூறுபோட்டு நாட்டையே விற்கிறாண்டா!
    காசைவாங்கிக் காற்றைக்கூடக் கெடுக்கிறாண்டா!

    இயற்கை தந்த தண்ணீருக்கும் விலையை  வச்சான்!
    ஏழையோட வயத்திலே உலையை வச்சான்!

    சொல்லச்சொல்ல வேதனைகள் என்னசொல்ல?
    போதைவிற்று ’கஜானா’ நிரப்பும் அரசுதாண்டா!

    அரசியலில் நல்லவர்கள் ஒதுங்கிநின்றால்
    குள்ளநரிக் கூட்டம் நின்று ஆட்டம் போடும்!

    வெட்கம் வேண்டாம் நல்லோரே சுத்தம் செய்வோம்!
    நாட்டைக்காக்கக் குள்ளநரிக் கூட்டம் வெல்வோம்!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 30-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரத்திற்குரிய படக்கவிதைப் போட்டியின் புகைப்படத்தை எடுத்துத் தந்திருக்கும் திருமிகு. திவ்யா பிள்ளைக்கும், இப்படத்தைப் போட்டிக்கு ஏற்றது எனத் தேர்வுசெய்து தந்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமையின் நன்றி.

    raindrops

    அடடா! வான்தரும் அமிழ்தத்தை அங்கையில் ஏந்துவதில் கிட்டும் இன்பமே அலாதிதான்! விசும்பின் துளி வீழாமல்போனால் பசும்புல்லின் தலையும் காண்பது அரிதன்றோ?

    ’மாமழை போற்றுதும்’ என்றார் இளங்கோவடிகள். ஆகவே மழையைப் போற்றிவிட்டுக் கவிமழையில் நனையப் புகுவோம்!

    ’வான்மழை பொழியத் தவறினாலும், வீட்டில் அன்னையவள் தன் பிள்ளைகள்மீது பொழியும் முத்தமழை தவறுவதே இல்லை!’ என்று வியக்கிறார் திரு. விக்னேஷ்.

    வானம் இல்லை
    மேகம் இல்லை
    மழை பெய்வதற்கான 
    எந்தஒரு அறிகுறியும் இல்லை
    ஆனால்
    வீட்டுக்குள்
    நித்தம் மழை 
    குழந்தைகளின் மேல்
    அம்மா பொழியும்
    முத்த மழை !

    ***

    ’கடல்நீர் யாங்கணும் நிறைந்திருந்தும் பயனென்ன? குடிநீர்ப் பஞ்சத்தால் அழிந்துபடும் ஊர்களுக்கோர் அளவில்லை’ என்ற தன் மனத்துயரை நயமான வார்த்தைகளில் வடித்துள்ளார் திரு. ஜெயபாரதன்.

    கடல்நீர் பேரளவில்
    முடங்கிக் கிடந்தாலும்,
    குடிநீர் இல்லாத
    ஊர்கள்
    கோடி கோடி !
    பசுஞ் சோலை இல்லா
    பாலை வனங்கள் உண்டு. 
    நேற்று
    சிரித்தோடிய 
    சிற்றாறு
    இன்று
    விதவை போல் 
    வெந்நிற ஆடை உடுத்தி
    மண் குவாரி
    ஆனது !
    நாளைய தினம்
    அடுப்பில் கூழ் கிண்ட 
    நீரில்லை !
    குடிக்க நீரில்லை !
    கிணறுகள்
    தோண்டப் பூதங்கள்
    எங்கே ?

    ***

    கடந்துசென்ற மழையின் வண்ணத்தைத் தன் என்ண தூரிகையால் வரைந்து காட்டியிருக்கின்றார் திரு. கவிஜி.

    தினம் ஒரு 
    வண்ணத்தில் 
    வந்த மழையில் 
    நனைதல் பற்றிய 
    குறியீட்டுக்குள் 
    ஒரு சங்கேத பாஷையாக 
    நிறமற்ற வெளியின் 
    குடை கொண்டு 
    தடுக்கும் 
    உறுத்தலின் கைக்குள் 
    தங்காமலே கடந்த பின்னும் 
    மிச்சமிருக்கிறது 
    கடந்த மழையின் 
    வண்ணம்…

    ***

    ’உள்ளங்கையில் பட்டுத்தெறிக்கும் இந்தத் தண்ணீர்…தண்ணீரன்று! அஃது ஏழையின் கண்ணீர்!’ என்று அருமையாய் விளக்கமளிக்கின்றார் திரு. தமிழ்த்தேனீ.

    உள்ளங்கையில் பட்டுத் தெறித்து
    உள்ளொளி பெற்று ஒளியாய்ப்
    பொறிந்து வெண்மை ஒளியாய்ச்
    சிதறி எழுந்து நான் உள்ளே
    வந்தால் முழுதும் நிரம்பிய
    அணைக்கட்டும் உடைந்தே
    தெறிக்கும் என்றே உணர்த்தும்
    ஒரு துளி தண்ணீர் – அது
    வெள்ளை உள்ளம் கொண்டே
    வாழுகின்ற ஏழையின் கண்ணீர்
     
    ***

    ’ஓர் உயிரின் பயணத்தைக் கடந்தகாலம், சிதையில் கிடந்தகாலம், மழையாய்க் கொட்டிய கார்காலம், மனம் குதூகலித்த மகிழ்காலம்’ எனப் பல்வேறு நிலைகளில் பகுத்துக்காட்டியிருக்கிறார் திரு. விஎஸ்கே.

    கட்டுக்கடங்காப் பருவத்தில் – உடல்
    விட்டகலாத மோஹத்தில் – தினம்
    மெட்டுக்கடங்காக் கவிதையைப்போல் -நானும்
    சிட்டாய்த் திரிந்தேன் ஒருகாலம்.
    […]
    விட்டுப்பறந்தது ஆவியிங்கு -உடல்
    விட்டுப்பிரிந்தது உயிர்க்கோடு – நால்வர்
    தொட்டுத்தூக்கிட சிதையினிலே -நானும்
    சுட்டுக்கரிந்தேன் ஒருகாலம்.
    […]
    சுட்டிடும்சூரிய ஒளியாலே – வெளி

    எட்டிப்பறந்தேன் ஆவியாய் – மேகக்
    கூட்டில்சேர்ந்து மழையெனவே – நானும்
    கொட்டிக்குவிந்தேன் கார்காலம்.

    நீட்டியகரத்தின் குவியலிலே – பல‌
    சொட்டுத்திரளாய் வீழ்கையிலே – சற்று
    எட்டிப்பார்த்தேன் யாரெனவே -நானென்
    துணையினைக்கண்டேன் மகிழ்காலம்…

    ***

    ’பாசனத்திற்குச் சொட்டுத் தண்ணீர் கொடேன்!’ எனச் சண்டையிடும் அண்டை மாநிலங்களை வைத்துக்கொண்டு ’இந்தியா ஒரே தேசம்!’ என்று முழக்கமிடுவது நகைப்பிற்கிடமானது என்று சீறுகிறார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

    காவேரியை வழி மறித்து
    தமிழகத்தைத் தவிக்கவிட்டு
    சட்டம் பேசி
    சண்டித்தனம் செய்கிறது 
    கர்நாடகம்
    […]
    ஒவ்வொரு ஆண்டும்

    துப்பாயத் தூவும் மழை
    தப்பாது பெய்யுமாவென
    தலை மேல் கைவைத்து
    காத்திருக்கிறது தமிழகம்

    மேட்டூர் வற்றும் பொழுதெல்லாம்
    பாலைவனமாவது
    பாசன வயல்கள் மட்டுமல்ல
    ஏழைகளின் வாழ்வும்தான்!

    உங்களுக்கு
    உரிமையுள்ள நீரென்றாலும்
    விரல்களைக் கழுவக் கூட
    விட மாட்டோமென
    அடம் பிடிக்கின்றன
    அண்டை மாநிலங்கள்

    இதில் 
    இடக்கரடக்கலாய்
    எங்கிருந்தோ ஒரு குரல்
    இந்தியா ஒரே தேசம்
    இந்தியர் அனைவரும் சகோதரர்

    ***

    ’மூன்றாம் உலகப்போர் நீருக்காகத்தான் நடைபெறப்போகிறது!’ என்ற சமூகவியல் அறிஞர்களின் கருத்தை வழிமொழிந்து, அந்நிலையைத் தடுக்க முயலவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது திரு. இளவல் ஹரிஹரனின் கவிதை.

     உள்ளங்கையில் தாங்கும்
    ஒவ்வொரு துளிகளாய்
    ஒவ்வொன்றும் உயிர்த் துளிகளாய்…
    […]
    ஒரு துளி  குடிக்க,
    ஒரு துளி குளிக்க,
    ஒரு துளி களிக்க,
    ஒரு துளி கழிக்க…..

    அறிந்தும் அறியாமலும்…
    தெரிந்தும் தெரியாமலும…
    நீர்நிலைகளில்
    மனிதர் செய்த பிழைகளை
    மறந்தும் மன்னிக்க
    இயற்கை தயாரில்லை…..

    மூண்டெழும்
    மூன்றாம் உலகப் போர்
    வேண்டிடும் நீருக்காக
    விளையும் உண்மையை
    உணர்ந்தால் மனிதர்
     
    உள்ளங்கைகளில் தான்
    உயிர்த்துளிகளாய் மனிதர்
    தாங்கிட வேண்டும் நன்றாய்…

    ***

    குடிநீருக்காய்க் கையேந்தும் முதுமையைப் பாடுபொருளாக்கியுள்ளார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அன்று மழையைக் கையிலேந்த
    அம்மா தடுத்து விடவில்லை,
    அன்பு பாசம் அனைத்தும்நிறை
    அன்னை உருவம் அதுதானே,
    இன்று முதுமைத் துணைதவிர
    இல்லை எவரும் துணையெனவே,
    என்றும் தன்கை தனக்குதவி
    ஏந்திடும் என்கை குடிநீர்க்கே…!

    ***

    மழையின் நல்வரவில் மனமகிழ்ந்து மணம்பரப்பும் அன்னை பூமியை நம் கண்முன் காட்சிப்படுத்துக்கின்றார் திருமிகு. தமிழ்முகில்.

    …மழை அது – மண் சேர்ந்த மாத்திரத்தில்
    பரவுமே உள்ளங்கவர் வாசம் !
    வாசனையில் இலயித்து
    நாசியும் உள்ளிழுக்குமே
    புத்துணர்வு நிறை சுவாசம் !
    உள்ளங்கைதனில் ஏந்தி மகிழ்ந்திட
    உள்ளமும் புதிதாய் பிறந்து
    குதூகலிக்குமே – சிறு கிள்ளையென !
    மழைதனை புறக்கணிக்காது
    வரவேற்போம் மழையை
    மண் நோக்கி ! மழையின் வரவில்
    மகிழ்ந்து மணம் பரப்பட்டும்
    அன்னை பூமி !

    ***

    ’அடுக்ககவாசிகளின் அசுரப்பசிக்கு இரையானது இயற்கை! உணவுப்பொருள் பங்கீட்டுக்கு ரேஷன்கடை வாயிலில் நிற்பதுபோல் குடிநீருக்கும் காத்துநிற்கும் அவலநிலை வாய்த்துவிடுமோ?’ எனும் தன் மனக்குமுறலைக் கனல்கக்கும் கவிதையில் பதியவைத்திருக்கிறார் திருமிகு. லட்சுமி.

    ….மரம் நட மறந்த
    பூகம்ப வருகை விரும்பி
    அடுக்ககவாசிகளின்
    இயந்திரத் தேடலின்
    அசுரப் பசியில்
    தொலைந்து போன
    சுவைநீர்
    […]
    உப்பு நீரால் சூழப்பட்டு
    கண்ணீர்க் கடலில்
    வாழும் மதுக்குடிசைவாசிகளின்
    தொலைந்து போன
    சிரிப்பைத் தேடி
    கூற்றுவனாய்
    அமில மதுத் தண்ணீர்
    உள்ளங்கையில் ஏந்தி
    நிற்பது யார்?
    கால் கடுக்க உணவுப் பொருளுக்கு
    ரேஷனில் நின்ற காலம் போய்
    தண்ணீருக்கும் வண்ணக்குடங்களில்
    நீர் வரையறை அளக்கும்
    காலம் வரும்வரை
    உள்ளங்கையில் இடும் கணக்கீடு
    சொட்டு நீருக்காக
    ஓட்டை லாரியின்
    வருகைக்காக குளிக்கக் காத்திருக்கும்
    தார் பூசிய 
    சாலை கணக்காய்
    உழவு மறந்த மனிதனாய்
    காத்திருப்போம்!

    ***

    ’மழைநீரில் கைநனைத்து மகிழ்வதைவிட அவசியமானது அதனைத் தேக்கிவைப்பது!’ என அறிவுறுத்துகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    அவசர நடவடிக்கைஏரிகள் எல்லாம்
    கான்கீரீட் கட்டடமாயின
    […]
    நீரின்றி அமையாது உலகு
    வேர்றுருந்து போனால்
    விளையும் பயிரில்லை
    சோர்ந்து நிற்கும் மக்கள்
    சார்ந்து நிற்பது வானத்தை
    விழும் மழை நீரை
    மகிழ்ந்து கையிலேந்தி
    வேடிக்கை பார்க்காமல்
    மழை நீரை சேமிக்க
    மழை நீரைவிதைப்போம்
    தயாராவோம் அடுத்த
    தலைமுறைக்கு
    பணத்தைவிட
    தண்ணீர் அவசியம்
    அவசரகால நடவடிக்கை
    எடுப்போம்!

    ***

    வழக்கம் போலவே, சிந்திக்கவைத்த சிறந்த கவிதைகள்! கவிச்சுவையில் திளைத்த மனத்தோடு இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைத் தேர்ந்தெடுத்துத் தந்துவிடுகிறேன்.

    தவறுதல் மனித இயற்கை; தன் தவற்றை எண்ணி வருந்துதல் அறம். அவ்வாறு வருந்துபவனை மன்னித்தல் மனிதமாண்பு என்பது நாமறிந்ததே. அதே குணநலன்களை மழையிடமும் ஏற்றி, மரங்களையழித்ததனால் பட்டுப்போன பூமியில் தனித்துத் தவிக்கும் இறுதிமனிதனுக்குப் பாவமன்னிப்பு வழங்கி அவன் கைகளில் வெள்ளமாய்ப் பொழியும் (கருணை)மழையை எழிலோவியமாய்ச் சமைத்துள்ளது ஓர் கவிதை.

    அக்கவிதை…

    இந்தப் பிரபஞ்சத்தின்
    இறுதி மனிதனின் கைகள்
    அதன் சுருக்கம் சொல்லும்
    அவன் வாழ்ந்த​ காலங்களை
    நடை தளர்ந்து தள்ளாடி வருகிறான்
    கண்ணுக்கெட்டிய​ தூரம் வரை வறட்சி
    பட்ட​ மரங்கள் விதவைகள் போல் மூளியாக
    நெருப்பில் எரிந்த​ பூமி
    புல் பூண்டுக்கும் இடமில்லை
    வானத்தைப் பார்க்கிறான்
    எந்த​ சலனமுமில்லை
    பிடி தளர​ நிலத்தில் விழுந்து
    கதறி அழுகிறான்
    இவன் கைகள் வெட்டிய​
    மரங்களை நினைவு கூருகிறான்
    சிட்டுக் குருவிகள் போட்ட​ சாபமோ
    இன்றும் நீர் இல்லையெனில்
    இவன் மரணம் இன்று தீர்ப்பிடப்பட்டிருக்கும்
    பூஞ்சையான​ கண்களில் நீர் துளித்தது
    வெடித்து இரத்தம் வடித்த​ உதடுகளால்
    சிரிப்பொன்றைக் கோடி காட்டினான்
    சுடலை ஞானமோ?
    என்றோ ஒரு நாள்
    தவித்த வாய்க்குத் தண்ணீர்
    கொடுத்ததாய் ஞாபகம்
    இடி இடித்தது சடசடவென​ கோரமழை
    நடுங்கும் கரங்களில்
    இறைவனின் கருணையை ஏந்தினான்.

    வளமார் சிந்தனைகளோடு வனப்பாய் அமைந்துள்ள இந்தக் கவிதையின் ஆசிரியர் திருமிகு. ராதா மரியரத்தினத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

    ***

    அடுத்து, உழவனோடு தோழமைகொண்டு உரையாடும் மழைத்துளியின் தன்னம்பிக்கையூட்டும் வைரவரிகளை அழகான கவிதைப் படையலாக்கியிருக்கின்றது மற்றொரு கவிதை…

    நேற்று நான் விளையாடிய 
    காடுகளை அழித்துக்
    கட்டிடம் கட்டி என் கனவுகளை 
    சிதைத்தவர்களால் 
    ஆங்காங்கே அடைமழைஎன்று 
    ருத்ர தாண்டவமாடினாலும்  
    என்னைக் கொண்டு பசுமை செய்யும் 
    உழவுத் தோழா நான் 
    உன்கையில் விழும்போதுதான் 
    மீண்டும் குழந்தையாகி விடுகிறேன் 
    […]
    விண்ணுக்கும் மண்ணுக்குமான 
    தொப்புள் கொடியுறவல்லவா 
    உனக்கும் எனக்கும்.
    புரட்சி புரட்சி என்று 
    போர்க்கொடி பிடித்து 
    மார்தட்டிக் கொள்ளும் இந்த பூமியில் 
    நீயும் நானும் கைகோர்த்த புரட்சி 
    இல்லாமல் போனால் 
    வரட்சியல்லவா அவர்கள் 
    வயிறும் வாழ்வும்.

    என் வருகைக்கு 
    எதிப்புக் காட்டும் முகமாய் 
    குடையும் கூரையும் போட்டு 
    மறைந்து போகும் அவர்கள் மீதில்லா 
    அன்பும் ஆனந்தமும் 
    உன்மீது எனக்கதிகம் என்பதாலேயே 
    உன் ஓட்டைக்கூரை வழியே 
    உன் வீட்டுக்குள் வந்துவிடுகிறேன்.
    […]
    ஏய் உழவுத் தோழா 
    எதிர்பார்ப்பு இல்லாமல் 
    உனக்குதவி செய்தாலும் இன்னும் 
    ஏழ்மை என்னும் நிலையில் நின்று நீ 
    என்றென்றும் என்னை மட்டுமே 
    எதிர்பாத்து நிற்கிறாய் 
    […]
    நீ என்னை நம்பி
    கையை விட்டாலும் 
    மறையும் நான் உனக்காக
    நாளையும்  வருவேன். 
    நன்றிக் கெட்ட உலகத்தில் 
    நம்பிக்கையை விட்டு விட்டால்
    கைகொடுக்க யாருமில்லை புரிந்துகொள்.

    திரு. மெய்யன் நடராஜின் நம்பிக்கை விதைதூவும் இந்த நற்கவிதையைப் பாராட்டுக்குரியது எனத் தெரிவிக்கின்றேன். 

    போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் நன்றி!

     

    Share
  • அரிமா விருதுகள் 2015 : ரூ 25,000 பரிசு குறும்பட விருது

    கடந்த 3 ஆண்டுகளில் வெளியான குறும்பட ஆவணப்பட, குறுந்தகடுகளை அனுப்பலாம்.

    சக்தி விருது
    கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை இரு பிரதிகள் அனுப்பலாம்.
    கடைசி தேதி:30-10-2015.
    ==============================================================================
    அனுப்ப வேண்டிய முகவரி:
    தலைவர்:
    திருப்பூர் மத்திய அரிமா சங்கம்
    34,ஸ்டேட் பாங்க் காலனி,
    காந்தி நகர், திருப்பூர்.641 603
    தொடர்புக்கு : 9443559215.,

    Share
  • விடிகாலை வெளிச்சம்

    “வாகான வாயுனக்கு வந்ததேன்! , வீழ்த்திடும்,
    சோகானு பூதியைச் சொல்லவல்ல, -ஆகாயம்,
    கீழுள்ள ஆய கலையில் சிரிப்பின்றேல்,
    பாழுந்தன் வாய்ப்பந்தல் பேச்சு”….கிரேசி மோகன்….

    Share
  • 2015 செப்டம்பர் 16 ஆம் தேதி சில்லியில் நேர்ந்த 8.3 ரிக்டர் பூகம்பத்தில் சிறிய சுனாமி, சிதைவுகள், மக்கள் மரணம்.

    ajay

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    +++++++++++++++
    Damages

    பூமகள் சற்று தோளசைத்தாள் !
    தாமாக வீழ்ந்தன,
    மாட மாளிகைகள் !
    மாந்தர் பலர் மரித்தார்.
    சிதைவுகளில்
    சிக்கினர் ! செத்தனர் ! புதைந்தனர் !
    கடற்தட்டு
    தடம் மாறிக் கால் உதைத்து
    உடனே பேரலை எழும் !
    பூகம்ப ஆட்டம் நகர்த்திடும்
    பூகோள அச்சை !
    காலம் மாறும் ! பருவம் மாறும் !
    நாளின் நேரம் குன்றும் !
    கனல் குழம்பு அழுத்த மாகிக்
    குப்பென எழும் எரிமலை !
    சூழ்வெளி
    பாழாய்ப் போக
    ஆழ்ந்த பூமி  அமைப்பிலும்
    ஊழல் பிறழ்ச்சி தான்
    சூழ்ந்துள்ளது !
    எங்கெங்கு வாழினும்
    இன்னலப்பா !
    ஏழு பிறப்பிலும் மானிடருக்குத்
    தொல்லை யப்பா !
    ஊழிக் கூத்தின்
    பிரளயக் கோரம்  அடுத்தடுத்து
    அரங்கே றுமப்பா !
    முடுக்கிய பம்பரக் கோளம்
    உடுக்கடிக்கும்
    ஊழியின் மேளம் !

    +++++++++++++++++++

    உலுக்கிச் செல்லும் ஊழியின் கை
    உலுக்கி உலுக்கி மேற் செல்லும் !
    அழுதாலும், தொழுதாலும் ஓயாதவன் கை !
    குலுக்கிய பின் மீண்டும் குலுக்க வரும் !

    புதிய உமர் கையாம்.

    Small Tsunami

    சில்லி நாடு கடந்த பத்தாண்டுகளாக நிலநடுக்க சமயத்தில் மேற்கொள்ள ஏதுவான கட்டுமான நெறிப்பாடுகளை [Good Compliance Codes for Buildings] அமைத்துக் கொண்டுள்ளது.  பூகம்பம் நேர்ந்தால் மற்ற தேசங்களைக் காட்டிலும் சில்லி நாட்டின் ஒரு நகரில் வாழவே நான் விரும்புகிறேன்.

    ரிச்சர்டு ஆல்சன் [பேரசுர நிகழ்ச்சி ஆய்வுக்கூடம், பிளாரிடா அகில நாட்டுப் பல்கலைக் கழகம்]

    பூகம்ப சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு செம்மையாக வேலை செய்தது.
    நாங்கள் சுனாமிப் பேரலைகள் தாக்குவதற்கு முன்னே புலம்பெயரப் போதிய நேரம் இருந்தது.  கடற்கரை அருகே என் கடை உள்ளது.  இருவர் இங்கு மரித்தார்.  எச்சரிக்கை அறிவிப்பு இல்லாவிடில் ஏராளமான மக்கள் இறந்து போயிருப்பார் !
    பாட்ரிசியோ ஃபாரியா [சில்லி இல்லாபெல் ஊர் மீனவன்]
     
    Location of Chile earthquake
    சில்லியில் 8.3 ரிக்டர்  அசுரப் பூகம்பம் & சுனாமி
    [செப்டம்பர் 16, 2015]
     
    தென் அமெரிக்கா சில்லி நாட்டில் ஓரசுரப் பூகம்பம்
    2015 செப்டம்பர் 16 ஆம் தேதி புதன்கிழமை இரவில் மக்கள் தூங்கும் போது சில்லி நாட்டின் வடபகுதியில் உள்ள ஸாண்டியாகோ நகருக்கு அருகில் இல்லாபெல் என்னும் ஊரில் [Illapel, Chile]  8.3 ரிக்டர் அளவில் ஒரு பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு 11 பேர் மரித்தார் [2015 செப்டம்பர் 17 அறிவிப்பு]. 34 பேர் காயமடைந்தார்.  சுமார் ஒரு மில்லியன் மக்கள் வீட்டை விட்டு நீங்க வேண்டியதாயிற்று. 240,000 பேர் மின்சாரப் பரிமாற்றம் இழந்தார்.  அடுத்து சிறிய சுனாமிப் பேரலை 4.5 மீடர் [15 அடி] உயரத்தில் எழுந்து, கடற் கரையில் உள்ள பல்வேறு சிற்றூர்கள் கடல் நீரில் முங்கிக் குளித்தன. இல்லாபெல் ஸாண்டியாகோவுக்கு வடக்கில் 280 கி.மீ. தூரத்தில் உள்ளது. நிலநடுக்க மையம் [Epic Center] இல்லாபெல் ஊருக்கு 55 கி.மீ. தூரத்தில் இருந்ததாகக் கணக்கிடப் படுகிறது.  இல்லாபெல்லைச் சுற்றியுள்ள ஜனத் தொகை : சுமார் 35,000.  முதல் நடுக்கத்துக்குப் பிறகு அடுத்தடுத்து 6 முதல் 7 ரிக்டர் வரை நில அதிர்வு ஆட்டங்கள் நேர்ந்தன.  முதல் நடுக்கம் 3 நிமிடம் நீடித்தது.  சில்லியின் நீண்ட பசிபிக் கடற்கரை ஊர்கள் அனைத்துக்கும் சுனாமிப் பேரலை அடிப்பு எச்சரிக்கை அறிவிக்கப் பட்டது.  உடனே பொதுமக்கள் பலர் உள் நாட்டுக்குள் ஓடியும், சிலர் வாகனங்களில் ஏறியும் புலம் பெயர்ந்து தப்பிக் கொண்டனர்.
    Tsunami travel time
    சில்லி நாடு உலகிலேயே பூகம்பங்கள் தாக்கும் நாடுகளில் முதன்மை நாடாகக் கருதப்படுவது.  காரணம், சில்லி கடற்கரைக்கு அப்பால் நாஸ்கா அடித்தட்டு, [Nazca Tectonic Plate] தென்னமெரிக்க அடித்தட்டின் கீழ் நகர்ந்து, ஆண்டிஸ் மலைத்தொடர் சிகரத்தை மென்மேலும் உயர்த்துகிறது.  சென்ற வருடம் சில்லி நாட்டின்  வட புறத்தில் வாழும் மக்கள் பேரளவு சிதைவுகள் செய்த வெள்ளத்தின் அடிப்பாலும், தெற்குப் பகுதியில் காட்டுத் தீக்கள் எரிப்பாலும், இரண்டு எரிமலைகள் வெடிப்பாலும் இடருற்றார். இதுவரை உலகிலே வலுமிக்க அசுர நிலநடுக்கம் 9.5 ரிக்டர் அளவு சில்லியில்  1960 ஆம் ஆண்டில் நேர்ந்தது.  அதில் பலியானவர் 5000 மேற்பட்டவர்.  2010 இல் நேர்ந்த 8.8 ரிக்டர் பூகம்பத்தில் எழுந்த சுனாமிப் பேரலையில் நூற்றுக் கணக்கான பேர் [சுமார் 500] உயிரிழந்தார்.  அந்த அசுர நில நடுக்கத்தில் பூமியின் சுழற்சியே சிறிது மாறி, 24 மணிநேர நாட் பொழுது இம்மி அளவு குன்றியது !

    Earthquake damage -1

    Location

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2tjIczIHkkA

    http://www.youtube.com/watch?v=_YENHB0Im2I&feature=player_embedded

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=qAqubO0R4Z0

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kg67JKzoXmY

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ERVa7MZP87Y

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E426goB47kE

    http://www.bbc.com/news/world-latin-america-26862237

    Earthquake damage -5

    Location of Warning

    தென் அமெரிக்காவை அருகிய பசிபிக் கடற்தள அடித்தட்டு “நாஸ்கா”  [Nazca Tectonic Plate]  ஆண்டு ஒன்றுக்குச் சராசரி 3 அங்குல நகர்ச்சியில் பிறழ்ச்சி அடைகிறது.   முதல் நடுக்கத்திற்குப் பிறகு  அடுத்த ஓரிரு வாரங்கள் தொடரப் போகும் “பின்னதிர்ச்சியே”  [Aftershocks] மிக்கச் சேதாரம் அளிக்க வல்லது.    அதுபோல் ஓரிரு வாரங்களுக்கு முன்பே பூகம்பம், அதே தளத்தில் நேர்ந்த முதல் நடுக்கத்துக்கு முன்னதிர்ச்சியாய் [Beforeshocks]  வந்துள்ளதையும் குறிப்பிட வேண்டும்.

    பீட்டர் ஸ்பாட்ஸ்  [கிறிஸ்டியன் விஞ்ஞானக் கண்காணிப்பு வெளியீடு]

    “உலகில் நிகழும் மாபெரும் நில நடுக்கங்கள் பல்நூறு கி.மீடர் பாறைகளைப் பூமிக்குள் நகட்டிப் பூகோளத்தின் பளுச் சமன்பாட்டை வேறிடத்துக்குத் தள்ளிவிடும்.  அதன் விளைவால் பூமியின் சுழற்சி பாதிக்கப்படும்.  (சில்லியின் 8.8 ரிக்டர் அளவுப் பூகம்பத்தில்) ஒரு நாளின் நீட்சி 1.26 மைக்ரோ விநாடி குன்றி விட்டது.  பூகோள அச்சு பளுவைச் சமப்படுத்த 2.7 மில்லியார்க் விநாடி ( 8 செ.மீடர்)  (3 அங்குலம்) சரிந்து விட்டது.”

    ரிச்சர்டி கிராஸ் (Richard Gross, Geophysicist NASA Jet Propulsion Lab, California)

    “இந்து மாக்கடலில் 2004 ஆண்டில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவு இந்தோனேசியப் பூகம்பத்தில் மாபெரும் சுனாமி எழுந்து ஒரு நாளின் நீட்சியை 6.8 மைக்ரோ விநாடிகள் குன்ற வைத்துப் பூகோள அச்சும் 2.3 மில்லியார்க் விநாடி (milliarc-sec)  (7 செ.மீ) (2.5″) மாற்றம் அடைந்தது.”

    நாசா விஞ்ஞானிகள் அறிக்கை

    Ring of Earthquake Fire

    தென்னமெரிக்காவின் சில்லி நாட்டில் மீண்டும், மீண்டும் பேரிடர்ப் பூகம்பங்கள் ! 

    2014 ஏப்ரல் முதல் தேதியன்று 8.2 ரிக்டர் அளவுப் பூகம்பம் இரவில் ஏற்பட்டு, 7 அடி [2 மீடர்]  உயரச் சுனாமியும் எழுந்து, அரசாங்கம் எச்சரிக்கை விடுத்து, கடற்கரை நகரான லிகுயிக் [[Lquique] பகுதியில் 900,000 மக்கள்  இடப் பெயர்ச்சி செய்ய நேர்ந்தது.   அடுத்து 24 மணி நேரத்தில் அதே பகுதியில் 7.6 ரிக்டர் அளவு பின்னதிர்ச்சியாய் [Aftershocks] 14 மைல் கடல் ஆழத்தில் தாக்கியது !   8.2 அளவு முதல் பூகம்பம் 12.5 மைல் கடல் ஆழத்தில் நேர்ந்தது.  லிகுயிக் நகரின் ஜனத்தொகை : 200,000.   விபத்தில் ஆறு பேர் உயிழந்தார்.  நிலநடுக்கத்தில் 2600 இல்லங்களுக்கு மேலாகச் சேதாரம் ஏற்பட்டது.   40,000 பேருக்கு மின்சாரப் பரிமாற்றம்  தடைப்பட்டது.  வட கரைப் பகுதிகளில் மீனவர் படகுகள் பல  தகர்க்கப் பட்டன.

    அந்த நிகழ்ச்சி நேர்வதற்கு முன்பு அதே தொடர் முறிவுப் பகுதியில் உள்ள பனாமா, காலிஃபோனியா பூதளங்களில் நிலநடுக்கம் உண்டானது.  பனாமா கால்வாய் போக்குவரத்து இயங்கும் பகுதியில் 6.2 ரிக்டர் அளவும், லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் 5.1 ரிக்டர் அளவிலும் பூகம்பம் உண்டாகி யுள்ளது.  2010 ஆண்டு சில்லியில் நேர்ந்த 8.8 ரிக்டர் பூகம்பத்தில் சுமார் 700 பேர் மாண்டனர்.   அப்போதைய கோர நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட பண விரையம் : 30 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப் படுகிறது !  இப்போதைய சேதாரத்தால்  நிதியிழப்பு இத்தனை அளவு பெருந் தொகை இல்லை என்று  தெரிகிறது.

    Panama Canal on the Fault Line

    சில்லி பெரு நடுக்கத்துக்கு இரண்டு வாரங்களுக்கு  முன்பே 7.6 அளவில் ஒரு முன்னதிர்ச்சியும் [Beforeshocks], நேர்ந்த 24 மணி நேரத்துக்குள்  6.1 அளவில் பின்னதிர்ச்சியும் [Aftershocks] நிகழ்ந்ததும் குறிப்பிடத் தக்கவை.  பின்னதிர்ச்சி பசிபிக் கடலில் கரையிலிருந்து 14 மைல் தூரத்தில், 12 மைல் கடல் ஆழத்தில் ஏற்பட்டுள்ள

    ​ ​

    தாய்க் கணிக்கப் படுகிறது.  1960 இல் சில்லியில் நேர்ந்த 9.5 அளவு மிகப்பெரும் பூகம்பத்தில் 1655 பேர் மாண்டனர் !நிலநடுக்கம் நேர்ந்த இம்மூன்று பகுதிகளும் [காலிஃபோர்னியா, பனாமா, சில்லி நகர்ப் புறங்கள்]  பூகம்ப அரங்குகள் கொண்ட “தீக்கனல் வளையத்தில்” [Ring of Fire]  படிந்துள்ளன.  உலகில் ஏற்பட்ட 90% நில நடுக்கங்கள் [எண்ணிக்கை : 81] இந்த தீக்கனல் வளையத்தில்தான்  நேர்ந்துள்ளன என்று அமெரிக்கன் பூதளவியல் அளப்பகம் [United States Geological Survey] கூறுகிறது !  சில்லியில் நேர்ந்த நிலநடுக்கம் பசிபிக் கடற்தள அடியில் உள்ள  7000 மைல் நீளமுள்ள  நாஸ்கா அடித்தட்டு முறிவில் [Nazca Tectonic Fault Plate] ஏற்பட்டுள்ளது.

    உலகில் மிகப்பெரும் பூகம்பப் பேரிடர்கள்  கடல் சூழ்ந்த அடித்தட்டுப் பெயர்ச்சித் தளங்களிலேதான் நிகழ்கின்றன !   அந்த அடித்தட்டுப் பிறழ்ச்சிகளின் இடையே நசுக்கப்படும் நீர் மண்டலம் அழுத்தமாகிப் பிளவுச் சேதாரங்களில் பன்மடங்கு அதிகமாகின்றன.  2010 பிப்ரவரி 27 இல் நேர்ந்த சில்லி மாபெரும் பூகம்பத்தைப், பூதளவியல் ஆராய்ச்சி மைய ஜெர்மன் விஞ்ஞானிகள் ஆய்ந்து,  அடித்தட்டுகளுக்கு இடையே நிரம்பி  நேரும் நீரழுத்தம் சிதைவுகளில் பெரும்பங்கு ஏற்றுள்ளதாகக் கண்டுள்ளார்கள்.

    Earthquake damage -2

    Earthquake damage -3

    “பூமியின் நிலப்பரப்புப் பகுதிகள் அனைத்தும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மாபெரும் ஒற்றைக் கண்டமாக இருந்தது !  பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, எப்படியோ அப்பெருங் கண்டம் பிளவுபட்டு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து, தற்போதுள்ள இடங்களுக்கு அவை பெயர்ச்சி ஆகியுள்ளன!  பூகோளத்தின் அடித் தட்டுகள் [Crusts] பூமியின் உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] மிதந்து மெதுவாக நிலப் பெயர்ச்சி அடைகின்றன!  கண்டங்களின் நிலப் பெயர்ச்சிக்கும், அடித்தட்டுப் பிறழ்ச்சிக்கும் [Continental Drift & Plate Tectonics] பூர்வப் படிவப் பதிவுகள் [Fossil Records] சான்றுகள் காட்டி நிரூபணமும் அளிக்கின்றன”.

    டாக்டர் ஆல்ஃபிரெட் வெஜினர், ஜெர்மன் பூதளவாதி [Dr. Alfred Wegener (1880-1930)]

    சில்லியின் பூகம்பத்தால் பூகோளத்தின் அச்சு நகர்ந்திருக்கலாம் !

    தென்னமெரிக்காவின் சில்லியில் பிப்ரவரி 27 இல் நேர்ந்த 8.8 ரிக்டர் அளவு அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்து ஒரு நாளின் மணிக் கணக்கைக் குறைத்திருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கணினிப் போலி மாடலின் (Computer Simulation) மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். “உலகில் நிகழும் மாபெரும் நில நடுக்கங்கள் பல்நூறு கி.மீடர் பாறைகளைப் பூமிக்குள் நகட்டிப் பூகோளத்தின் பளுச் சமன்பாட்டை வேறிடத்துக்குத் தள்ளிவிடும்.  அதன் விளைவால் பூமியின் சுழற்சி பாதிக்கப்படும்.  (சில்லியின் 8.8 ரிக்டர் அளவுப் பூகம்பத்தில்) ஒரு நாளின் நீட்சி 1.26 மைக்ரோ-செகண்டு குன்றி விட்டது.  பூகோள அச்சு பளுவைச் சமப்படுத்த 2.7 மில்லியார்க் விநாடி (milliarc-sec) ( 8 செ.மீடர்) (3 அங்குலம்) சாய்ந்து விட்டது.” என்று நாசா ஜெட் உந்துக்கணை பூதளவியல் விஞ்ஞானி, ரிச்சர்டி கிராஸ் கூறுகிறார்.

    இம்மாதிரிப் பூகம்ப மாடல்களைக் கணினிப் போலி மாடல் மூலம் காணலாம்.  ஆனால் அந்த மிகச் சிறிய பூகோள விளைவுகளை கருவிகள் மூலம் உளவி அளப்பது மிகச் சிரமமானது.  சில மாறுதல்கள் மட்டும் வெளிப்படையாகத் தெரிபவை.  “அருகில் உள்ள சில தீவுகள் நகட்டப் படலாம்,” என்று பாதிக்கப் பட்ட தளங்களை உளவு செய்த பிரிட்டன் லிவர்பூல் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆன்டிரியாஸ் ரியட்பிராக் (Andreas Rietbrock) கூறுகிறார்.  சில்லியின் மிகப் பெரிய நகரம் கன்செப்ஷன் (Concepcion) கரைக்கு அப்பால் உள்ள ஸான்டா மரியா தீவு (Santa Maria) பூகம்பத்தால் 2 மீடர் (6 அடி) உயர்ந்திருக்கும் என்றும் கூறுகிறார்.  தீவில் காணப்படும் பாறைகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட பூகம்பங்களால் நேர்ந்த மேல்மட்ட நகர்ச்சியை நோக்கிக் காட்டின என்றும் கூறுகிறார்.

    பூகம்பத்தின் பனிவழுக்கு விளைவு என்றால் என்ன ?

    பிரிட்டிஷ் புவியியல் தள ஆய்வு நிபுணர் டேவிட் கெர்ரிட்ஜ் (David Kerridge) இதைப் ‘பனி வழுக்கு விளைவு’ (Ice Skater Effect) என்று குறிப்பிடுகிறார்.  அதாவது பனி வழுக்குத் தளத்தில் வட்டமிடும் ஒரு பெண் தன் கரங்களை உள்ளே இழுத்துக் கொள்ளும் போது அவளது சுற்று வேகம் மென்மேலும் மிகையாகிறது.  அதுபோல் பூகோளம் சுற்றும் போது அதன் உட்பளு நகர்வதால் அதன் சுழற்சி வேகம் மாறுகிறது என்று டேவிட் கெர்ரிட்ஜ் கூறுகிறார்.

    Earthquake damage -4

    “பூகம்ப மானது ஐயமின்றிப் (பளுவை நகர்த்தி) பூகோளத்தை ஒரு வளையமாக்கி ஓர் ஆலய மணி போல் ஆக்கி விட்டது,” என்று உதாரணம் கொடுக்கிறார். ஆலய மணியின் நடுத் தண்டு இங்குமங்கும் நகரும் போது மணிச் சிமிழும் அதற்கேற்பச் சாய்கிறது.  மணிச் சிமிழின் அச்சும் சரிகிறது. “இந்து மாக்கடலில் 2004 இல் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவு இந்தனேசியப் பூகம்பத்தில் மாபெரும் சுனாமி எழுந்து ஒரு நாளின் நீட்சியை 6.8 மைக்ரோ விநாடிகள் குன்ற வைத்துப் பூகோள அச்சும் 2.3 மில்லி வளைவி விநாடி (7 செ.மீ) (2.5″) மாற்றம் அடைந்தது.” என்று நாசா அறிக்கை ஒன்று கூறுகிறது.  இம்மாதிரி மாற்றங்கள் பூமியில் விளைந்து அடுத்து மாறுவது வரை அப்படியே தொடர்கின்றன !  மேலும் பூமியில் அத்தகைய சிறு மாறுபாடுகள் சூழ்வெளி வாயு மண்டலத்தில் நேரும் பெரும் மாறுபாடுடன் இணைந்து கொள்கின்றன என்று அறியப் படுகின்றது.

    History of Chile Earthquakes

    சில்லியின் நில நடுக்கம் எவ்விதம் புவி அச்சை மாற்றியது ?

    சமீபத்தில் சில்லியில் நேர்ந்த 8.8 ரிக்டர் அளவுப் பூகம்பம், உட்தளப் பளுவை உள்ளே தள்ளி இருந்தால் அம்மாற்றம் புவி அச்சை நகர்த்தி இருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்.  ஆலய மணி அடிக்கும் போது மணித் தண்டு மையத்தை நோக்கி வரும்போது மணிச் சிமிழும் சாய்கிறதல்லவா ?  அதை மூட்டி விடுவது பூமியின் ‘அடித்தட்டு நகர்ச்சி இயக்கமே’ (Plate Tectonics Interactions).  வெவ்வே றான அடித்தட்டுப் பளுக்களின் தனித்துவ நகர்ச்சியே  நில நடுக்கத்தை உண்டாக்குகிறது.  மெதுவாகப் புவி அச்சு பம்பரம் போல் வட்டமிடுவதே ‘அச்சு நகர்ச்சி’ என்று கூறப்படுகிறது. (The Shift of the Earth’s Axis is called “Precession”). பூமி தன்னைத் தானே சுற்ற 24 மணி நேரம் ஆகிறது.  பூமியின் சாய்ந்த அச்சு நகர்ச்சியால் மெதுவாக ஒரு வட்டமிட சுமார் 25800 ஆண்டுகள் ஆகின்றன.  அச்சு நகர்ச்சி புவிச் சுற்றில் அடித்தட்டு ஆட்டப் பளுத் தள்ளுதலால் நிகழும் ‘நெம்பு மாறுபாட்டால்’ (Change in Torque) உண்டாகிறது.  அதனால் புவி அச்சுக் கோண வேகமும் (Angular Velocity) மாறுகிறது.

    உதாரணமாக இரண்டு மெல்லட்டைப் புத்தகங்களை எதிர் எதிரே வைத்து ஒன்றை ஒன்று நெருங்கச் செய்வோம்.  சில சமயம் புத்தகத் தாள்கள் ஒன்றுக்கு அடியில் ஒன்றாய்ச் சுமுகமாகச் சொருகிக் கொள்ளலாம்.  அல்லது ஒன்றுக்குள் ஒன்று நுழைய முடியாது கட்டுத் தாள்கள் சுருட்டிக் கொண்டு புத்தக இடத்தை மாற்றலாம்.  இந்தப் புத்தகங்களே புவிக்குப் பளுவாய் அமைந்துள்ள அடித்தட்டுகள் (Tectonic Plates) என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  அவ்விதம் அடித்தட்டுகள் நெருங்கும் போது பூமியின் உட்பளு இடம் மாறுகிறது.

    சில்லி நாட்டின் பல மைல்களுக்குக் கீழே நாஷ்கா அடித்தட்டு, தென் அமெரிக்க அடித்தட்டு   (Nazca Plate & South American Plate) என்று இரண்டு அடித்தட்டுகள் ஆண்டுக்கு 7 செ.மீடர் வேகத்தில் ஒன்றை ஒன்று நெருங்கி வருபவை.  அவை ஒன்றின் மேல் ஒன்று குதிரை ஏறும் போது நில நடுக்கம் உண்டாகிறது.  அப்படி ஏறும் போது மேலும் கீழும் ஆடும் ஸ்பிரிங் போல் (Spring Wire) அடித்தட்டுகள் குதிக்கின்றன.  அந்த அதிர்வலைகளே நில நடுக்கமாக பூமியின் தளப்பகுதியில் மேலும் கீழும் தாவி அல்லது பக்க வாட்டில் எதிர் எதிராய் நகர்ந்து வீடுகளை இடிக்கிறது, பாலங்களை உடைக்கிறது, வீதிகளைப் பிளக்கிறது !

    Locaton of Chile Earthquake

    பூகோள அதிர்ச்சிகளில் என்ன நிகழ்கின்றன ?

    பூகம்பத்தின் போது பொதுவாக நேரும் விளைவுகள் :

    1.  புவி அடித்தட்டுகள் நகர்ச்சி :  நாஷ்கா தென் அமெரிக்க அடித்தட்டுகள் மோதி ஒன்றின் மேல் ஒன்று ஏறுதல் அல்லது, அடித்தட்டுகள் எதிர் எதிர் உராய்வு.  அல்லது அடித்தட்டுகள் மேல் கீழ்ச் சரிவு.

    2.  அசுரப் பூகம்பம் ஏற்படுதல் : உதாரணம் சில்லியின் 8.8 ரிக்டர் அளவுத் தீவிரம். (பிப்ரவரி 27, 2010)

    3.  பூமியின் உட்பளு தள்ளப்படுதல் :  பளுக் கடத்தல் நில நடுக்கத் தீவிரத்தைச் சார்ந்தது.

    4.  புவி அச்சு சாய்வு :  பளுவைப் பொருத்தும், இட நகர்ச்சியைப் பொருத்தும் அச்சின் சரிவு மாறுபடும்.

    5.  புவி அச்சுக் கோணத்தின் வேகம் மாறுபடுதல் (Angular Velocity Changes).

    சுருங்கச் சொன்னால் பூகம்பத்தின் போது நேரும் பளுத் தள்ளல், இடமாறுபாடு, வேகம் ஆகியவை ஈடுபாடு கொண்டு புவி அச்சைத் திரிபு செய்கின்றன.  பூகம்பங்கள் ஏற்படும் போது இவ்விதம் பன்முறைப் பூமியின் வரலாற்றில் புவி அச்சின் சரிவு மாறுபட்டுள்ளது.

    இமாலய மலைச் சரிவுகளை ஆட்டிய நில அதிர்ச்சிகள்

    விடுதலை அடைந்த பிறகு 2005 அக்டோபர் 8 ஆம் தேதி முதன்முதல் வரலாற்றில் மிகக் கோரமான ஓர் அசுரப் பூகம்பம் பாகிஸ்தான் வடகிழக்குப் பகுதியை 7.6 ரிக்டர் உச்ச அளவில் குறைந்தது 140 தடவைகள் குலுக்கி ஆட்டி பெரும் காங்கிரீட் கட்டிடங்களைக் கூட கீழே தள்ளிச் சிதைத்து விட்டது!  பாகிஸ்தான் பற்றிக் கொண்ட காஷ்மீரில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 54,000 ஆக அக்டோபர் 16 இல் கணிக்கப் பட்டது, இப்போது 79,000 [அக்டோபர் 20, 2005] ஆக ஏறி யிருப்பதாக அறிவிக்கப் பட்டது.  குளிர்காலம் விரட்டிக் கொண்டு வரும் இந்த தருணத்தில் குறைந்தது 2 மில்லியன் மக்களுக்குத் தங்க வீடுகள் இல்லாமல், தகர்ந்து போன தளங்களில் நின்று தவித்தார்கள்!  இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் 2000 பேர் மரணம் அடைந்ததாகத் தெரிகிறது.  2005 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அடித்த சூறாவளி கேட்ரினாவின் ஆற்றலை விட 20 மடங்கு மிகையான பேராற்றல் கொண்டது, காஷ்மீர் பூகம்பம் என்று அமெரிக்காவின் நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது!  2004 ஆண்டு இறுதியில் இந்தோனேசியா கடற்தட்டில் ஆட்டம் நேர்ந்து உலகப் பெரும் சுனாமிப் பேரலைகள் தாக்கித் தென்னாசியக் கடற்கரைப் பகுதிகளில் 230,000 பேர்கள் மாண்டு போயினர்!  அரை மில்லியனுக்கு மேற்பட்டவர் தமது இல்லங்களை இழந்தனர். 1991 ஆம் ஆண்டு அடித்த சூறாவளிப் பேய்மழையில் பங்களா தேசப் பகுதிகளில் மட்டும் சுமார் 140,000 மக்கள் மடிந்தனர் என்று அறியப்படுகிறது.

    நிலையற்று நடுங்கும் இமய மலைத் தொடர்ச்சிகள்

    பூகோளத்தில் உள்ள நீர்ப் பரப்பில் அட்லாண்டிக் கடலின் அகற்சி நீளமாகி வருகிறது!  பசிபிக் பெருகடலின் இடைவெளிச் சிறுகச் சிறுகச் சிறுத்துக் கொண்டு வருகிறது!  நிலப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் ஈரோப்பில் ஆல்ப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆஃப்பிரிக்கா ஒட்டிக் கொண்டிருக்கும் செங்கடல் வடமுனையில் அறுந்து பிளக்கப் போகிறது!  ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன!  வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் நகர்ந்து விலகி இடைவெளியை அகற்சி யாக்கி வருகின்றன!  அமெரிக்காவில் காலி·போர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் நகர்ந்து, வடபுறமாகச் சரிந்து கொண்டி ருக்கிறது!  இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டத் தட்டு வடபுறம் அழுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகையாக்கிய வண்ணமா யிருக்கின்றன!  தென்புறத்தில் உள்ள இந்தியக் கடற்தட்டும், வடக்கில் இருக்கும் யுரேசியத் தட்டுடன் முட்டி மோதிக் குதிரை ஏறி, நிலநடுக்கம் உண்டாவது அடிக்கடி நேர்ந்து வரும் இயற்கையின் அபாயத் திருவிளை யாடல்கள்!

    அந்த நகர்ச்சி நியதியில் இந்திய உபகண்டம் ஆண்டுக்கு 1.6 அங்குலம் [40 மில்லி மீடர்] வடபுறம் நோக்கித் தள்ளப்படுகிறது!  இவ்விரு தட்டுகளும் முட்டி மோதும் போது, கீழிருக்கும் அடித்தட்டு [Crust] புடைத்து மேல் எழுகிறது!  அப்போது மலை உச்சிகள் இன்னும் உயர மாகின்றன.  இந்தியத் தட்டு வடக்குத் திசையில் நகரும் போது, அடித்தட்டு தணிந்து யுரேசியத் தட்டை மேலே உயர்த்திக் கீழே நுழைகிறது!  இந்த நியதிதான் “தட்டுக் கீழ்நுழைவு” [Plate Subduction] என்று சொல்லப்படுகிறது. இரண்டு தட்டுகளுக்கு இடையே நிகழும் இந்த குவியழுத்த நகர்ச்சியால் [Compressive Motion] இடை நழுவல் [Slip] ஏற்பட்டுப் பூகம்பங்கள் உண்டாக்கும் புவித்தட்டு உந்துப் பழுதுகள் [Thrust Faults] அமைகின்றன. அவற்றில் நமக்கு நன்கு அறிமுகமான முப்பெரும் பழுதுகள்: 2004 இல் சுனாமி உண்டாக்கிய இந்தோனேசியா கடற்தட்டுப் பழுது, கலிஃபோர்னியாவின் ஆண்டிரியா பழுது,  இமயமலைத் தொடரின் இமயப் பழுது ஆகியவை முக்கியமானவை.

    உலகத்தில் நேர்ந்த பேரிடர் நிலநடுக்கங்கள்

    உலகத்தில் நேர்ந்த பேரிடர் நிலநடுக்கங்கள்

    2010 ஆண்டில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் குடிமக்கள் வசிக்கும் உலகப் பகுதிகளில் பல நில நடுக்கங்கள் நேர்ந்துள்ளன.  நமக்கு வரலாறு அறிந்த காலம் முதல் உலகில் ஏற்பட்ட எரிமலைகள், நில நடுக்கங்கள் செய்த கோர விளைவுகளைப் பதிவு செய்து வந்திருக்கிறோம்.  சைனா கிங்கை மாநிலத்தில் (Qinghai) ஏப்ரல் 14 இல் 6.9 ரிக்டர் அளவில் ஒன்று, எப்ரல் 5 இல் மேற்கு மெக்ஸிகோவில் 7.2 ரிக்டர் அளவில் ஒன்று, ஜனவரி 13 இல் ஹெய்தியில் 7.0 ரிக்டர் அளவில் ஒன்றும், பிப்ரவரி 17 இல் சில்லியில் 8.8 ரிக்டர் அளவில் ஒன்றும் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவை.சில்லியின் கடற்கரைப் பகுதியில் மட்டும் 1973 முதல் 7 ரிக்டர் அளவை மிஞ்சிய 13 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன !  இவை அனைத்தும் பூமியின் உட்பளுவை அங்குமிங்கும் நகர்த்திப் புவி அச்சில் திரிபுகளை உண்டாக்கி வந்துள்ளன !  இவற்றால் நாளின் நீட்சி குன்றியும் மிஞ்சியும் போகலாம் !  அதைத் தவிர பூமிக்கு வேறென்ன சூழ்வெளி மாற்றங்கள் நேரும் என்று இன்னும் நாசா விஞ்ஞானிகள் விளக்கமாய் அறிவிக்கவில்லை !

    அசுரப் பூகம்பம் ஒன்று வரப் போகிறது என்று சில மணிநேரங்களுக்கு முன்பாக மக்களுக்கு அபாய முன்னறிவிப்பு செய்யும் சாதனம் ஒன்று இன்னும் கண்டு பிடிக்கப்பட வில்லை !   இப்போது உள்ள கருவிகள் சில விநாடிகளுக்கு முன் (20 -30 sec) மட்டும் அறிவிக்கக் கூடியவை.   அவை மக்களுக்குப் பாதுகாப்பளிக்கப் போதா !    எரிமலை வெடிப்பு எழுவதற்கு முன்பு எரிமலை வாயிலில் புகை மண்டலம் எழுகிறது !  சுனாமி ஊர்ந்து கடற்கரை நோக்கி வருவதற்குள் பூதள ஆட்டத்தையோ அல்லது அலைகள் பொங்கி எழுவதையோ உளவுக் கருவிகள் மூலம் ஒருவாறு உணர்ந்து இப்போது முன்னெச்சரிக்கை செய்ய முடிகிறது !  ஆனால் பூகம்பம் ஏற்படுவதற்குச் சில மணிநேரம் முன்னால் குடிமக்களுக்கு முன்னறிப்பு செய்யும் அபாய அறிவிப்புச் சாதனம் ஒன்று 21 ஆம் நூற்றாண்டில் இன்னும் உருவாக்கப் படவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஞ்ஞானக் குறைபாடாகும் !

    (தொடரும்)

    தகவல்:

    1. Time Magazine Article, “Nightmare in the Mountains,” By: Tim McGrik (Oct 24, 2005)

    2. The Kashmir Earthquake By Washington Post (Oct 12, 2005)
    3. Himalayan Tectonic Setting Earthquake Program.
    4. Earthquake History & Seismicity in the Northwest Region of Indian Sub-continent. [http://asc-india.org/seismic/pakistan.htm]
    5. New York Times -As Pakistan Reels, Musharraf Pleads for International Aid By: Somini Sengupta
    (Oct 8, 2005)
    6. Quake Homeless in Urgent Need of Tents By: Martin Regg Cohn, Asia Bureau (Oct 17, 2005)
    7. (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40401222&format=html(Earthquake in Gujarat)
    7 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40401292&format=html(Earthquake in Mexico City)
    7 (d) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40401082&format=html(Major Earthquake in Iran
    7 (e) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40510211&format=html(Earthquake in Himalayan Zone) (October 21, 2005)
    7 (f) https://jayabarathan.wordpress.com/2009/04/09/earthquake-in-italy/ (Italian Earthquake 2009)
    8. Techtonics in Italian Earthquake By Chris Rowan Geologist (April 6 2009)
    9. Italian Earthquake Death Toll Rises to 260 & 28,000 Homeless By Reuters Alertnet (Apr 8, 2009)
    10. BBC News Aftershock Hits Italy Quake Zone (April 7, 2009)
    11. Rescue Workers Preparing for Surgical Operation on Buildings (April 7, 2009)
    12 News Desk – Italy Earthquake 2009 -Worst Quake Since 1980 (April 7 2009)
    13 Guardian UK : Italy Earthquake : Stricken L’Quila Suffers Again as Aftershocks Hit By John Hooper (April 7, 2009)
    14. Precession of the Earth’s Axis Coming to Light
    15. BBC News : Chile Counts Costs as Tsunami Ebs (Feb 28, 2010)
    16. Business Week : Chilean Quake Likely Shifted Earth’s Axis, NASA Scientist Says By : Alex Morales (March 1, 2010)
    17 BBC News : Hundreds Die in West China Quake (April 14, 2010)
    18. How the Chile Earthquake Changed the Earth’s Axis By : A.W. Berry (Mar/April 2010)
    19. http://www.bbc.com/news/world-latin-america-26862237 [April 3, 2014]
    20. http://www.cnn.com/2014/04/01/world/americas/chile-earthquake/ [April 2, 2014]
    21. http://en.wikipedia.org/wiki/2010_Chile_earthquake [April 2, 2014]
    22.http://rt.com/news/chile-earthquake-aftershock-evacuated-025/ [April 3, 2014]
    23.http://www.livescience.com/39110-japan-2011-earthquake-tsunami-facts.html[August 22, 2013]
    24.http://www.eurasiareview.com/04042014-ring-of-fire-fears-following-earthquakes-in-california-chile-and-panama/ [April 4, 2014]
    25. http://rt.com/usa/eathquakes-ring-fire-pacific-145/

    26.  http://www.thestar.com/news/world/2015/09/17/1-million-people-evacuated-in-chile-after-83-magnitude-earthquake.html [September 17, 2015]

    27.  http://www.nytimes.com/2015/09/17/world/americas/chile-earthquake.html?_r=0 [September 17, 2015]

    28.  https://en.wikipedia.org/wiki/2015_Illapel_earthquake  [September 19, 2015]

    ********************

    [S. Jayabarathan]  jayabarathans@gmail.com   (September 19 , 2015)

    Attachments area
    Preview YouTube video 8.3 earthquake in chile | chi le earthquake today | chile earthquake tsunami | chile earthquake 2015

    8.3 earthquake in chile | chi le earthquake today | chile earthquake tsunami | chile earthquake 2015

    Preview YouTube video 3/30/2014 — Urgent Earthquake Watch — Yellowstone, California, New Madrid, East Coast, PNW

    3/30/2014 — Urgent Earthquake Watch — Yellowstone, California, New Madrid, East Coast, PNW

    Preview YouTube video Tsunami alert after 8.2 earthquake strikes off the coast of Chile

    Tsunami alert after 8.2 earthquake strikes off the coast of Chile

    Preview YouTube video S0 News March 31, 2014: West Coast Earthquakes

    S0 News March 31, 2014: West Coast Earthquakes

    Preview YouTube video The Ring Of Fire is Heating Up

    The Ring Of Fire is Heating Up

    Preview YouTube video 4/01/2014 — 8.2M Earthquake Strikes Chile — Tsunami warnings were issued

    4/01/2014 — 8.2M Earthquake Strikes Chile — Tsunami warnings were issued
    Share