Blog

  • காலம் – 22

    மீ. விசுவநாதன்

    vallamai-300x150

    அத்தா னழித்தஅத் தானைத் தலைவனே
    அத்தா னகத்தி(ல்) அமர்ந்தானே – அத்தானின்
    சித்தாலே சித்தமெலாம் சித்தன் நினைவாகி
    சித்தாகி னானே சிவன். (221) 08.08.2015

    (“தான்” எனும் அகந்தையை அழித்த குருநாதனே
    எங்கு அந்தத் “தான்” அகந்தை இருந்ததோ அங்குவந்தமர்ந்தார்.
    அந்த குருவின் திறத்தாலே சித்தம் என்ற அடிமனது சிவனையே
    நினைத்திருந்து சிவமானது)

    நீண்ட மலைத்தொடரும், நீலவானத் தாரகையும்,
    தீண்டுகிற பாம்பினது தீவிடமும் ஆண்டவனின்
    அற்புதந்தான் ! ஆனாலும் அம்மாவைத் தந்ததற்குக்
    கற்பூரம் காட்டுகிறேன் காண். (222) 09.08.2015

    விருப்பமே இல்லாத வீட்டில் நுழைந்து
    வெறுப்பைச் சுமக்கவும் வேண்டாம் – நெருங்கி
    விளையாடி ஓர்நாள் விலகியோட வேண்டாம் ;
    முளையிலே கண்டு முடி. (223) 10.08.2015

    மேகம்போல் துன்பம் மிகுந்து வரும்போது
    வேகமாய் தெய்வம் விரைந்துவந் தேந்துமே !
    சோதனை வந்தாலும் சுத்த மனிதமனம்
    வேதனைக் காணும் விளக்கு.. (224) 11.08.2015

    (வேதனை – வேதமான இறைவனை)

    இசையில் கரைந்தே இதயம் தொலைத்தே(ன்);
    அசைவை மறந்தே அமைதித் திசையி(ல்)
    அழகை ரசித்தேன் ; அடடா அடடா
    விழைவே(ன்) அதுபோல் வினை.. (225) 12.08.2015

    அவரைக் கொடிபோ(ல்) அழகாய்ப் படர
    அவரை மணந்தா(ள்); அதனால் சுகமா(ய்)
    இருந்தாள் ; கலந்த இருவர் மனத்தி(ல்)
    இருந்தாள் அருளா(ய்) இறை. (226) 13.08.2015

    பாணதீர்த்தப் பேரருவி பார்த்தாலே போதுமே
    ஆணவம் தீர்ந்து அகத்திலே பூணுமே
    ஆனந்தம் ; அந்த அருமைக்கே நாம்பிறக்கத்
    தானந்தத் தீர்த்தமே தாய். (227) 14.08.2015

    (இன்று ஆடி அமாவாசை. பாபநாசம் தாமிரபரணி
    பாணதீர்த்தத்தில் நீராடுவதும், நினைப்பதும் புண்ணியம்)

    சுதந்திரம் என்பது சுத்த மனத்தின்
    இதமான எண்ணம்; பிறரின் இதயத்தைக்
    குத்திக் கிளராத கொள்கை உணர்வாலே
    உத்தமமாய் வாழும் உறவு. (228) 15.08.2015

    ஆண்டாளின் பாட்டில் அமுதுண்டு வந்தோர்க்கு
    வேண்டாம லுள்ளே வெளிச்சமு(ம்) ஆண்டவனின்
    நட்பும் அதுவாய் நலமா(ய்) அமையுமே ;
    உட்புறம் பார்த்தே உணர். (229) 16.08.2015

    (இன்று ஆடிப்பூரம். ஆண்டாளின் பிறந்ததினம்)

    சாம்பார் வடைதோசை சாப்பாட்டில் காலத்தை
    நாம்வாழ்ந்து தேகத்தை நன்றாக வீம்புடன்
    ஓங்கி வளர்க்கின்றோம் ; உத்தமனாம் ஈசனைத்
    தாங்காத நெஞ்சோ தவிடு. (230) 17.08.2015

    Share
  • சத்தியமே லட்சியமாய் கொள்ளடா

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    SATHTHIYAMEY LATCHIYAMAAIK KOLLLLADAA  VIDEO SCREEN SHOT1 “நீலமலைத் திருடன்” திரைப்படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் அ. மருதகாசி இயற்றிய பாடலிது. ரஞ்சன் என்கிற நடிகர் கதாநாயகன் (பலருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் இவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை). டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் கம்பீரக் குரலில் உச்சஸ்தாயில் ஒலிக்கும் பாடல். திரையில் கூட ஒரு குதிரைப் பயணத்தோடு நாயகன், அந்த குளம்படிச் சத்தம் இன்றும் நம் செவிகளில் கேட்டுக்கொண்டே இருக்கும்.

    SATHTHIYAMEY LATCHIYAMAAIK KOLLLLADAA  VIDEO SCREEN SHOT1தேவர் பிலிம்சாரின் தயாரிப்பில் கருப்பு வெள்ளை வண்ணத்திலேயே ஒவ்வொரு திரைப்படமும் நீதியைச் சொல்லவும், அது நம் நெஞ்சினில் தங்கவும், பொற்காலமது … மீண்டும் வருமா? எண்ணவும் ஏங்கவும் வைக்கிற அக்காலம். குறைந்த பட்சம் தொலைக்காட்சிகளிலும், வானொலியிலும் ஒளி-ஒலித்த வண்ணம் உள்ளது ஓரளவு ஆறுதல் தருகிறது.

    கவிஞர் மருதகாசி, மண்ணின் மனம் கமழ பாடல்கள் தந்த திருமகன். கொள்கை முழக்கமிடும் இதுபோன்ற பாடல்களும் தந்துள்ளார். கே.வி.மகாதேவன் இசை இன்னும் மெருகேற்ற, டி.எம்.சௌந்தரராஜன் முன்னணியில் நினைவுக்கு வருகிறார்.

    வளரும் தலைமுறைகளுக்கு இதுபோன்ற நீதிகளைச் சொல்லித் தர பாடல்கள் இன்று அதிகம் இல்லையே. பொற்காலப் பாடல்களென விளங்கும் இப்பாடல்களே அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் போதுமானவை என்று சொல்லத்தக்க அளவு எழுதிக்குவித்திருக்கிறார்கள்.

    நம்பிக்கையும் தைரியமும் ஒருசேர உருவாக்கும் பாடலை நம் பிள்ளைகளுக்கு சொல்லித் தருவோமா?

    சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
    தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
    சத்தியமே லட்சியமாய் கொள்ளடா

    எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
    இடர வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே
    எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
    இடர வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே
    அத்தனையும் தாண்டி காலை முன் வையடா
    அத்தனையும் தாண்டி காலை முன் வையடா- நீ
    அஞ்சாமல் கடமையிலே கண் வையடா

    சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
    தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
    சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
    தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா

    குள்ள நரி கூட்டம் வந்து குறுக்கிடும்
    நல்லவர்க்கு தொல்லை தந்து மடக்கிடும்
    குள்ள நரி கூட்டம் வந்து குறுக்கிடும்
    நல்லவர்க்கு தொல்லை தந்து மடக்கிடும் – நீ
    எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா
    எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா – அவற்றை
    எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா

    சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
    தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா….. செல்லடா…..

    காணொளி: https://youtu.be/nKnO5xuiId4

    Share
  • காலமெல்லாம் காப்பவன்

    -செண்பக ஜெகதீசன்

    இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!

    பரமன் மகனாம் பெரியவனைப்                              lord-ganesha
    –பானை வயிற்றுக் கரிமுகனை,
    உருவில் பெரிய கணபதியை
    –ஊரெலாம் காக்கும் குணநிதியை,
    வரும்பகை யழிக்கும் வல்லவனை
    –வானவர்க் கெல்லாம் மேலவனை,
    கரமது கூப்பி வணங்கிடுவாய்
    –காலமும் காப்பான் ஐங்கரனே!

     

    Share
  • கடலோடி கழுகு

    சூர்யா

    கடலும் கடல் சார்ந்த இடம்  பரத நிலப்பரப்பு என தமிழ் இலக்கியங்கள் கூறுகிறது.அந்த நிலப்பரப்பின் சொந்தக்காரர்கள் பரதவர் என அழைக்கப்பட்னர். இங்கு உப்பும் மீனும் பிரபலம்.தமிழகத்தின் கடலோர பகுதி அது. இராமேஸ்வரம் என அழைக்கப்படும் பகுதி.அன்று சாதாரண நாளாகவே பொழுது விடிந்திருந்தது.”ச்சே என்ன வாழ்க்கைடா” என்ற வார்த்தைகளோடு அவன் தன் குலத்தொழிலுக்கு புறப்பட்டான் கடல் அன்னையை வணங்கிவிட்டு. வாலிபன் அவன்..அதே ராமேஸ்வரத்தில் அவன் ஊரில் அதிகம் படித்தவன் அவன் தான்.அதாவது நாலாம் வகுப்பு.அவனை அனைவரும் மைக்கேல் என அழைப்பர்.கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது ஒவ்வொரு மீன் பிடி பயணத்தின் போதும். ஆனாலும் அவன் பின்வாங்கியதில்லை. தினமும் கடல்க்கு  மீன் பிடிக்க செல்வது அவன் பழக்கம் . மீன்களுக்கு அவன் வலைகளுக்கு மாட்டால் தப்பிச்செல்வது பழக்கம்.வருமானம் பெரிதாக இல்லை ஆனால் அவன் தன் தொழிலை விட்டதில்லை.கோடைக்கால மீன்பிடிதடைகால அறிவிப்பு.அதற்கு முன் நடந்த கதை அதிகம் .இந்தியாவின் கால்களில் தொங்கிகொண்டிருப்பது போன்று உலக வரைபடத்தில் இருக்கும் தேசம் இலங்கை.அங்கு தமிழர்களுக்கு எதிரான இனவெறியும், இந்திய பெருங்கடலே என் அப்பன்வீட்டு சொத்து என எண்ணும் சிங்கள இனத்தவர் மிகுதியாய் ஆக்கிரமித்திருந்த தேசம்.அதுபோல தான் மகாஇந்திய சாம்ராஜ்யத்தின் கடல் எல்லையை மதிக்காமல் எல்லைதாண்டி வந்து இந்திய தேசத்தின் பிரஜையை  சுட்டுக்கொன்றும்,கைது செய்தும் அறிவிக்கப்படாத யுத்தத்தை தொடர்ந்து வரும் தேசம் அது.இது நிலை ராமேஸ்வரத்திலும் இருந்தது.தமிழக அரசியல் நிலையோ ஏதோ ஐ.நா சபை மாதிரி தீர்மானங்களும் காரசார விவாதங்களும்,தத்தம் ஆதாயங்களுக்காக இந்த பிரச்சினையை பயன்படுத்தி கொண்டன.தினசரி ஏதாவது ஒரு செய்தியாவது மீனவர் கைது பற்றி இருந்தே ஆகும்.மீன்பிடி தடைக்காலம் மட்டும் யாரும் கடலுக்கு செல்லாமல் இருப்பதால் கைது இருக்காது. மற்றபடி மீன்பிடி தடைக்காலம் நீக்கப்பட்டதும் சிங்கள கடற்படையினருக்கும் கைது செய்ய போடப்பட்ட தடைக்காலம் நீக்கப்பட்டதாக அர்த்தம்.மைக்கேல் செய்தி தாள் படிப்பதுண்டு.அங்கு சாலையோர டீக்கடைகளில் உள்ள பிரான்சிஸ்,டேவிட்,மிலிட்டிரிகாரர் அல்போன்ஸ் ஆகியோர் தான் அவரது தோழர்களும் பட்டிமன்ற பேச்சாளர்கள். பிரான்சிஸ் ஒரு கடலோர பொதுவுடமை காரன்.சற்று உலக அரசியல் பற்றி அறிந்தவன்.டேவிட் ஒரு முற்றிலும் துறந்த ஞானி போல பேசுவர்.ஒரு தத்துவ ஞானி.போதைக்காரர்.கண்ணதாசன் பாடல்களை சதா கேட்டுக்கொண்டுஇருப்பார்.மிலிட்டிரிகாரர் அல்போன்ஸ் போர்வீரர். நாட்டுக்காக பாக்கிஸ்தானிக்கு எதிராக போரில் போரிட்டு ஈடுபட்டு ஒய்வு பெற்றவர்.கொஞ்சம் இல்லை நிறையவே முரடர்.எப்போதும் வேலையில்லாத ஒய்வு நேரங்களில் மேரி டீஸ்டாலில் ஒரு பட்டிமன்றத்தையும் இங்கிருந்து கொண்டே காசில்லாமல் இலவசமாக ஐ.நா சபைக்கு ஆலோசனை வழங்குபவர்கள் இவர்கள்.மைக்கேலுக்கு ஒரு விரோதி உண்டு அவள் பெயர் ஆச்சரியமாக இருக்கிறதா அவள் பெயர் மகதலினா. ஏனெனில் ஆண்களின் வெறுப்பை சம்பாதிக்க தெரியாதவன் மைக்கேல். மேலும் அவன் ஒரு அழகன்.சிறுவயதில் இருந்தே மைக்கேல் மீது மகதலினாவுக்கு ஒரு கண்.அதாவது ஒரு அழகிய கிராமத்து காதல்.கண்ணால் பேசிவிடுவாள் அவள் ஆனால் அவன் பேசி கண்ணைமூடிவிடுவான்.கேட்டால் காதல் என்பால் அவள்.அவனோ ஒன்னும் இல்லை தூரப்போ என்பான்.காதலின் ஏமாற்றம் பகையாய் மாறுவதில் சந்தேகம் இல்லை.அது போலத்தான் மகதலினா வாழ்க்கையும்.அவள் வெறுப்பு பகைமையை அவன் அடுத்த இளம் பெண்களிடம் பேசும் போது வெளிப்படுத்தினாள்.ஆனால் இறைவன் என்பவன் விசித்திரமான ஒரு விலங்கு என்பதை நிருபிக்க அங்கு காலம் ஒரு கணக்கு போட்டது.மகதலினா ஒரு கடலோர அழகி. அழகிய கண்கள்.அவள் கண்சிமிட்டல் மின்னல்கள் வெட்டுவதைபோலவும்,அவள் உதடுகள் ஒரு தேன்சிந்தும் வளைகுடா போல அழகாக பார்ப்பவரை சுண்டியிழுத்துவிடும் அழகு.இடையோ வளைந்த வில் போல பார்ப்பவர்களின் மீது அம்பை ஏய்து கொண்டே செல்லும். அவள் நடை ஒரு அழகு.அவள் உடை இத்தனை அழகையும் புதையலை மூடுவது போல இருக்கும். இப்படி வர்ணிக்கும்படியான அழகு தேவதை.யாருக்கு தான் காதல் வராது அவள் மீது.ஆனால் மைக்கேலுக்கு இதில் விருப்பம் இல்லை.மகதலினாவுக்கு அவன் மீது விருப்பம் உண்டு.பிரான்சிஸ் ஒர் இளைஞன் . பொதுவுடமைக்காரன்.உலகம் அறிந்தவன்.அவனுக்கும் காதலில் விருப்பம் உண்டு.ஒரு வேளை பிரான்சிஸ்ன் வைரமுத்து காதல் கவிதைகளை படிக்கும் ஆர்வத்தால் காதலில் விருப்பம் வந்திருக்கலாம்.பிரான்சிஸ் மகதலினாவை ஒருதலையாக காதலித்து வந்தான்.ஏனெனில் ஒரு தலைஉள்ள அனைவருக்கும் வருமல்லவா இந்த ஒரு தலைக்காதல்.பொறாமை வளர்ந்தது நண்பர்களான மைக்கேல் மற்றும் பிரான்சிஸ் இடையே.ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே சும்மாவா சொன்னாங்க.ஒரு நாள் டீக்கடையில் காரசார விவாதம் காதல் திருமணங்களால் வன்முறை ஏற்படுகிறது  ஏன் என்பது. இதில் வாக்குவாதம் முற்றி வழக்கு போல மைக்கேல் பெண்களை இழிவுபடுத்தி பேச,அதாவது மகதலினாவை பற்றி தவறாக பேச கைகலப்பானது.இது மகதலினாவுக்கு தெரிய வர அவள் மனவருத்தத்தில் மைக்கேலை மறப்பதாக நடித்தாள்.உயிர்நண்பர்கள் பகைவர்களாக மிலிட்டரிகாரர் அல்போன்ஸ் சமாதானபடுத்த முயற்சி செய்து தோல்வியில் முடிவு பெற பகைமை தொடர்ந்தது.இருவரும் வெவ்வேறு பாதைகளை தேர்ந்தெடுக்க மைக்கேல் பிரான்சிஸின் கொள்கையை எதிர்ப்பதென முடிவெடுத்தான்.ஏனெனில் பிரான்சிஸ் ஒரு பொதுவுடமை வாதி.அவனுக்கு எதிராக இருக்க முதலாளித்துவ வாதியாக அவனுக்கு எதிராக இருக்க முதலாளித்துவ வாதியாக மாறினான்.அந்த ஊரில் ஒரு சிறு பனிப்போரே நடத்தினர்.இதில் மகதலினா,அல்போன்ஸ் நடுநிலைமை வகித்தனர்.எப்போதுமே பொதுவுடமைவாதியிடம் வேகம்,மூர்க்ககுணம் அதிகமாக இருக்கும்.அன்று மீன்பிடி தடைகால இறுதி நாள்.மைக்கேல்க்கு அங்கு இருந்த அகதிகள் முகாமில் இருந்த சில அமெரிக்க நண்பர்களின் நட்பு கிடைத்தது.அவர்கள் இந்தியாவை வேவுபார்க்கவந்த சி.ஐ.ஏ உளவாளிகள்.அவர்கள் தமிழகத்தில் அதாவது இலங்கைக்கு அருகாமை பகுதியில் பொதுவுடமைவாதத்தை வீழ்த்த வந்தவர்கள்.அவர்கள் மைக்கேலின் பொதுவுடமை வெறுப்பை பயன்படுத்தி தங்கள் வேலையை செய்ய முடிவு செய்தனர்.ஆனால் அதே நேரம் பிரான்சிஸ் தமிழகத்தில் உள்ள பொதுவுடமை இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தான்.ஆனால் அவன் தன் மீன்பிடித்தொழிலை விடவில்லை.இரு கொலைமுயற்சி அவனுக்கு எதிராக.ஆனால் அவன் அதில் இருந்து மீண்டிருந்தான்.அமெரிக்க உளவுத்துறை பிரான்சிஸ்ஐ கொலைசெய்ய முடிவு செய்திருந்தது.அதற்கு மைக்கேலை பகடைக்காயாக பயன்படுத்த திட்டம் தீட்டிருந்தது.மைக்கேலுக்கு சி.ஐ.ஏ உறுப்பினர் அட்டை வழங்கி அவனுக்கு பணம் அளித்தது.மீன் பிடி தடை காலம் முடிவடைந்தது.காலையில் கதிரவன் மீனவர்களை வரவேற்றான் கடலுக்கு வரும்படி.மைக்கேலுக்கு மீன்பிடிக்கும் ஆசையில்லை ஆனால் கடலுக்கு செல்ல ஆயத்தமானான் பிரான்சிஸ்ஸை வீழ்த்தி பொதுவுடமை வேரை அறுக்க. ஆனால் பிரான்சிஸ்ஸோ கண்முழுவதும் மீன்களை பற்றிய கனவு.இருவரும் கடலுக்கு புறப்பட்டனர்.ஆனால் மகதலினாவுக்கு புரிந்து போனது மைக்கேல் மாறிவிட்டான்.காதல் அழிக்க இயலாததது.அவள் மனதில் இருந்தது அவனை நீக்க இயலவில்லை என.இருவரும் கடலுக்கு சென்றனர் நவீன படகேறி. நடுகடலில் சி.ஐ.ஏ. திட்டப்படி பிரான்சிஸ்ஸை கொல்ல முயன்ற வேளையில்,அங்கு தடைகாலம் நீங்கியதால் சிங்கள ராணுவம் எல்லோரையும் கைது செய்யதது.அவர்களை செய்த சோதனையில் மைக்கேல் ஒரு உளவாளி என கண்டறிந்தனர்.இலங்கையில் மெல்ல சீனா தன் ஆதிக்கத்தை நுழைதந்துகொண்டிருந்த நேரம் இந்த உளவு விவகாரம் சீன-இந்திய-அமெரிக்க உறவில் ஒரு நிழல்பாதிப்பை நுழைத்தது.அன்றில் இருந்து மைக்கேல் உலகம் அறியும் உளவாளியாகவும்,தேச துரோகியாகவும் அறியப்பட்டான்.மைக்கேலை தவிர அனைவரையும் இலங்கையில் இருந்த மீட்டது.மைக்கேல் தன் சிறைவாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் தொடர்வதாகவேண்டியாயிற்று.எங்கோ இருந்து வந்த இளைஞன் உலகம் பேசும் உளவாளிகள் வரிசையில் இடம்பெற்றான்.தன் முன்னாள் காதலனை எண்ணி மகதலினா,கடலோரம் பறக்கும் கழுகுகளை பார்த்து கண்ணீர் சிந்தி கொண்டிருந்தாள்.அந்த கடலோரம் எங்கும் பொதுவுடமை கொடி மைக்கேலின் வீழ்சியில் ஆர்பரித்து கடலோர கழுகளை பார்த்து சுடர் விட்டு பறந்து கொண்டிருந்தது மகதலினாவின் கண்ணீருடன்.

    Share
  • ஆனை முகனைக் கேட்டேன்

    மீ.விசுவநாதன்

    Aneguddi-Ganesh
    ஆனை முகனைக் கேட்டேன் -மன
    ஆழம் காட்டு என்று !
    தானை விட்டு வந்தால் – அது
    தானே தெரியும் என்றான் ! (1)

    நாளில் ஒன்று பேசும் – என்
    நாவைக் கட்டு என்றேன் !
    தாளின் பற்று வைத்தால் – அது
    தனியே போகும் என்றான் ! (2)

    உன்னை எனக்குக் காட்டு-என்
    உயிரே நீதான் என்றேன் !
    என்னை உலகாய்ப் பார்க்க -குரு
    இருபைத் தேடு என்றான் ! (3)

    நீயே குருதா னென்று – மனம்
    நெகிழ்ந்து வீழ்ந்து கேட்டேன் !
    வாயை மூடிக் கொண்டு – என்
    வாக்கில் அமர்ந்து கொண்டான் ! (4)
    (17.09.2015)

    Share
  • பிள்ளையார் பிறப்பு

    கிரேசி மோகன்

    crazy

    பிள்ளையார் பிறப்பு
    ———————————–
    ”நீராடும் வேளை, நிலைவாசல் காவலுக்கு,
    ஓராளைத் தேடினாள் ஓங்காரி -சேறாக
    மேனியில் பூசிய மஞ்சளால் செய்தனள்
    ஞானி வினாயக னை”….

    ”ஆதியே ஆனாலும் அன்னை குளிக்கையில்
    பாதியில் வந்த பரம்பொருளை -வீதியில்
    தள்ளிய பிள்ளை தலையைத் தகப்பனரன்
    கிள்ளியங்கு வைத்தான் கஜம்”….

    ”COWசுகள் பேணிடும் கண்ணன் மருகோனே
    MOUSEயிக வாகனா மோதகா -HOUSEனுள்
    வாராய் வினாயகா வேளை சதுர்த்தியில்
    தாராய் அறிவில் தெளிவு….

    ”சோமன்த னைச்சென்னி சூடும் சிவகுடும்ப
    சீமந்த மைந்தன் சதுர்த்தியின்று -மாமன்தன்
    சக்கரத்தை உண்டுமிழ்ந்த சித்தி வினாயகனை
    வக்கிர துண்டனை வாழ்த்து”….

    ”அரச மரத்தடியில் ஆகாசம் பார்த்து
    உரசும் எலியோடு ஒண்டி -பெருசாய்
    எதிர்பார்ப்பு ஏதுமின்றி ஏழெட்டு தேங்காய்
    சதிராக யாதுமருள் வான்”….

    ”கமர்கட் கடலையுண்டை குச்சிஐஸ் மூன்றும்
    சமர்பிப்பேன் நானுக்கு என்றும் -அமர்ந்திட்டு
    செங்கழுநீர் பிள்ளையாரே சாப்பிட்டு த்ருப்தியாய்
    சங்கத் தமிழ்மூன்றும் தா”….கிரேசி மோகன்….

    Share
  • அரசமரத்தடியில் ஆண்டவன் தந்த பாடம்

     

    க. பாலசுப்ரமணியன்

    images

    அரச மரத்தடியில் ஆடாமல்
    அசையாமல் ஓர் உருவம் !
    போவோர் வருவோரைப்
    பார்த்தபடி இருக்கும்! (அரச..)

    குட்டிக் குட்டி மண்டையை
    குறைகள் பலவும் சொன்னாலும்
    கோணங்கி போல் குனிந்து நிமிர்ந்து
    கைகூப்பிக் கூட வரச் சொன்னாலும் .. (அரச..)

    கேள்விக்குப் பதில் கேட்டால்
    ஆனைபோல் இருக்கு மெந்தன்
    மேனியைப் பார்த்துச் செல்லேனென
    மேனியசைக்காமல் பதில் சொல்லும் … ( அரச..)

    பெரிய தலை சொன்னது
    பாரில் கற்க நிறைய உள்ளது :
    பாட்டி அவ்வை காலம் தொட்டு
    படிக்க நிறைய உள்ளது … !! ( அரச)

    நீண்ட காது சொன்னது
    கேள்வி ஞானம் நல்லது ,
    நீண்ட காது வழியாய்
    ஞானப் பேழையை யிறக்கு !! (அரச,,)

    வளைந்து கட்டும் தும்பிக்கை
    வாழ்க்கை தரும் நம்பிக்கை
    மரங்கள் பல அசைத்தாலும்
    குழந்தை போல வாழும் ! (அரச…)

    பெரிய தொந்தி பார்த்தாயோ?
    நல்லது கெட்டது உள்ளேதள்ளி
    நாளும் ஜீரணம் பண்ணும்
    இனிப்பும் கசப்பும் ஓரிடம் செல்லும் (அரச..)

    சின்ன வாகனம் போதும்
    சிறுகக் கட்டி பெருக வாழ,
    சிந்தையை நிறுத்தி பார்த்தாலே
    சிறிதுகூடப் பெரிதாய்த் தோன்றும்! (அரச..)

    கையினுள்ளே ஒரு கொழுக்கட்டை
    கையளவாய் சாப்பிடச் சொல்லும்
    காசினியில் பசியால் வாடும்
    கைகளில் ஒன்றை வைக்கச் சொல்லும் ! (அரச..)

    நீரும் காற்றும் நீல வானும்
    இயற்கை தரும் இன்பம் !
    நித்தம் இதனுடன் வாழ்ந்தால்
    அரசமரத்தடியும் ஆலயமாகும் ! (அரச..)

    Share
  • நம்பிக்கை வாய்த்தும்பிக் கையோன்!

    நம்பிக்கை வாய்த்தும்பிக் கையோன்!…(வெண் செந்துறை)

     

    நாகினி

     

    உந்தி பெருத்து உலகை அளக்கவே
    சந்தி நடுவிலுறை சாந்தவேழ வார்ப்போனே!

    பந்தி நடுவிலும் பாச விருந்தாக
    முந்தி வருகின்ற முத்தமிழ் ஐங்கரனே!

    மோதகம் கையில் மொழியும் வாயிலிட்டு
    போதகம் செய்திடும் போற்றி அகவலோனே!

    பித்தம் தலையேறும் பிள்ளை கலங்கிடாது
    சித்தம் வழிநடத்தும் சித்தி விநாயகனே!

    தொடங்கும் செயலின் தொடக்கமாய்த் தொடர்ந்து
    படரும் அருளெனும் பராசக்தி மைந்தனே!

    முத்தமிழின் சாறாகி மூஞ்சுறு வாகனனாய்
    எத்திக்கும் வீற்றுள்ள ஏகம்பன் சீராளனே!

    தடைகள் இலாவாழ்வு தாரும்
    சடைகள் முடிகொண்ட சங்கரன் ஞானமகனே!

    பிணக்கு மறையாத பித்தம் தலைக்கேறா
    இணக்கு தரும்நல் இளந்தந்தச் சித்தியோனே!

    பெற்றோரே உலகெனப் பேசி வலம்வந்த
    வற்றாத நம்பிக்கை வாய்த்தும்பிக் கையோனே!

    யாண்டும் துயரறுக்க யாக்கைநல் முத்தியாக
    வேண்டும் வரந்தரும் வேழ முகத்தோனே!

    வினைதீர்த் தெமக்குநேர் வீடுபேறு தாருமய்யா
    நினைக்கும் சிந்தை நிறைந்தஉல கானவனே!

    … நாகினி

    Share
  • நல்லது எல்லாம் தருவாயே!

    -சரஸ்வதி ராசேந்திரன்

    ஆற்றங்      கரை        ஓரத்திலும்
    அரச         மரத்தடி        கீழும்
    அமர்ந்தி   ருக்கும்        நந்தி மகனே!                   lordganesh
    அன்னை    பராசக்தி    மைந்தனே
    உன்னைத்     தினம்        பணிந்தேனே
    சங்கரன்      மகனே     சட்டென வந்து
    சங்கடம்      தீர்த்திடு    ஐங்கரனே!

    யானை        முகம்    கொண்டவனே
    யானுனைத்    தினம்     தொழுதேனே
    வருவாய்    தருவாய்    அருள்தனை
    வடிவேல்     அன்புச்       சோதரனே
    குவலயம்     போற்றும்    குண நாதா
    குருவாய்      வருவாய்    அருள்வாயே!

    முழுமுதற்      கடவுள்   மூஷிகனே
    கொழுக்        கட்டை    வடையுடன்
    அப்பமோடு    அவல்       பொரியும்
    தப்பாமல்       நான்       படைப்பேன்
    வல்லபை     நாதா         வருவாயே
    நல்லதை     எல்லாம்    தருவாயே!

     

    Share
  • கலியுகத்தில் சிக்கிக் கொண்ட கடவுள்

    –மு. கோபி சரபோஜி.

    Ganesh-chaturthi-Hd-images

    காஸ்யப முனிவருக்கும், மாயைக்கும் பிறந்த சூரபத்மன் வரங்கள் வேண்டி சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவத்தை மேற்கொண்டான். ஆண்டுகள் பலவாகியும் சிவபெருமான் காட்சி தராததால் கடுப்பானவன் தன் உடல் உறுப்புகளை ஒன்றன் பின் ஒன்றாய் அறுத்து யாக குண்டத்தில் போட்டு எரித்துக் கொண்டு தானும் அதிலேயே விழுந்தான். அவனின் தம்பிகளான சிங்கமுகன், தாரகன் ஆகியோரும் அவ்வாறே செய்ய சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி காட்சியளித்ததோடு தேவர்களுக்கெல்லாம் தலைவனாக வேண்டும், எத்திசையும் செல்ல இந்திரஞாலத் தேர் வேண்டும், அழியாத யாக்கை வேண்டும் என சூரபத்மன் கேட்ட வரங்களையும் கொடுத்தார்.

    வரம் வாங்கியதும் கடலுக்குள் தனக்கான தலைநகரான வீரமகேந்திரபுரத்தை அமைத்தான். தேவலோகத்தின் மீது படையெடுத்து வென்றான். அவனிடமிருந்து தப்பிய தேவலோகத் தலைவனான இந்திரன் தன் மனைவியோடு சீர்காழிக்கு வந்து சேர்ந்தான். அங்கு ஒரு நந்தவனத்தை அமைத்து மூங்கில் மரத்தில் மறைந்து வாழ்ந்த படியே தன்னைக் காத்தருளுமாறு தன் பதவிக்கே வேட்டு வைத்த சிவபெருமானை வேண்டி நின்றான்.

    இந்திரனின் மனைவியான இந்திராணியின் அழகைப் பற்றி அறிந்த சூரபத்மன் தனக்கு ஏவல் செய்ய அவளையும், அவளோடு சேர்த்து இந்திரனையும் அரண்மனைக்குப் பிடித்து வாருங்கள் என தன் படைத் தளபதிகளுக்கு உத்தரவிட்டான். கைது ஆணைப் பிறப்பிக்கப்பட்டதும் நான்கு திசைகளிலும் தேடுதல் வேட்டையை சூரபத்மன் படைகள் மேற்கொண்டிருந்த நிலையில் கலகக்காரரான நாரதர் இந்திரனைச் சந்தித்து வளரொளி நாதரை அணுகி அவர் பாதம் பணிந்தால் மட்டுமே உன் தலை தப்பும் எனச் சொல்ல தேவேந்திரன் உள்ளிட்ட தேவர்கள் தங்களின் குடும்பத்தோடு வளரொளி நாதரிடம் வந்து தஞ்சம் புகுந்தனர். தஞ்சம் அடைந்தவர்களின் தலைக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டதும் மகிழ்ந்து போன தேவேந்திரன் தேவதச்சனை அழைத்து வளரொளி நாதருக்கு ஒரு கோயில் கட்டும் படி பணித்தான். அந்த இடம் தான் இன்று காரைக்குடி பக்கத்தில் இருக்கும் ”வயிரவன் பட்டி”!

    அடையாளம் காட்டிக் கொள்ளாத உளவாளிகளாய் எங்கும் ஊடுருவி தேடுதல் வேட்டையை நடத்திய சூரபத்மனின் ஒற்றர்கள் தேவேந்திரனோடு தேவர்கள் அனைவரும் வயிரவன் பட்டியில் தஞ்சம் அடைந்திருப்பதை அறிந்து தலைமைக்குத் தகவல் அனுப்பினார்கள். தகவல் கிடைத்த உடனேயே சூரபத்மனின் படைத்தளபதிகள் தத்தம் அசுரப்படைகளை வயிரவன்பட்டியை நோக்கிச் செலுத்தினர். செய்தியறிந்த தேவர்கள் பயந்து போய் ஆலயத்திற்குள் சென்று பதுங்கினர். தான் உயிர் உத்தரவாதம் கொடுத்திருக்கும் தேவர்களைத் தன் எல்லைக்குள்ளேயே நுழைந்து தாக்க தயாராகி நின்ற அசுரப்படைகளின் மீது பதில் தாக்குதல் நடத்த வளரொளி நாதர் முடிவு செய்தார். தன் படைகளுக்குத் தலைமையேற்றுச் செல்ல ஒப்புக் கொண்ட நந்தி தேவர் போர்க்களத்தில் விநாயகர் முன்னே செல்ல அவரின் பின்னால் படைகள் அணிவகுத்தால் நன்றாக இருக்கும் என அபிப்ராயம் சொல்ல உடனடியாக விநாயகரிடம் பேசி ஒப்புதல் பெற்றுக் கொடுத்த வளரொளி நாதர் தன் படைகளுக்கு வயிரவர் கோலம் தாங்கிய திருவுருவம் காட்டி களத்திற்கு அனுப்பி வைத்தார். நந்தி தேவரின் தலைமையில் நால்வகைப் படைகளும் அணிவகுத்து நிற்க விநாயகர் தன் பூதப்படைகள் சூழத் தேர் ஏறினார். நந்தி தேவரின் தலைமையிலான படைகளும், விநாயகரின் பூதப் படைகளும் போர்க்களத்தில் முகாமிட்டிருந்த அசுரப்படைகளைச் சுற்றி வளைத்துத் தாக்க ஆரம்பித்தன.

    தன் பூதப்படைகளுடன் விநாயகர் களத்திற்கு வந்திருப்பதை அறிந்து கோபம் கொண்ட கும்பாண்டகன் என்ற அசுரப் படைத்தளபதி நேரடியாக பூதப்படைகளைத் தாக்கும் படி தேவகண்டன் என்ற தன் துணைத்தளபதிக்கு உத்தரவிட்டான். அவன் தலைமையில் களம் புகுந்த அசுரப்படைகளின் தாக்குதலில் சிக்கி பூதப்படைகள் சிதறி ஓடத் துவங்கின. பூதப்படையில் இருந்த விநாயகரின் தொண்டனான பிரளயனின் தேரை தேவகண்டன் அம்பால் வீழ்த்திச் சாய்த்தான். தன் பக்தர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் விடுவாரா விநாயகர்? தேரில் ஏறி நேரே அப்பகுதிக்குள் நுழைந்தார். அதுவரையில் உள்ளூர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து வம்பு செய்து கொண்டு இருக்கும் கலவரக் கும்பல் அதிரடிப்படை வந்ததும் தெறித்து ஓடுவதைப் போல விநாயகர் கூடுதல் படைகளோடு வந்து சேர்ந்ததும் பூதப்படைகளின் தாக்குதலில் அசுரப்படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின. தன் பக்தனை அம்பால் வீழ்த்திய தேவகண்டனைத் தாக்கிய விநாயகர் அவனின் ஆயுதங்களை இழக்க வைத்து நிராயுதபாணியாக்கினார்.

    தனித்து நிற்பவனைத் தாக்கி அழிப்பது போர் தர்மம் அல்ல என்கிறபோது தான் செய்தால் அது தர்மமாகவே இருக்காது என நினைத்த விநாயகர் ”இன்று போய் நாளை வா” என அவனை உயிரோடு அனுப்பி வைத்தார். இப்படித் தனக்குத் தரப்பட்ட உயிர்ப்பிச்சை தன் திறமைக்கே அவமானம் என நினைத்த தேவகண்டன் ஆயுதமில்லாவிட்டால் என்ன? அசுரபலத்தைக் காட்டுகிறேன் பார் என அருகில் இருந்த ஒரு மலைக்குன்றைப் பிடுங்கி விநாயகரை நோக்கி எறிந்தான். உயிர்ப்பிச்சை கொடுத்தது எவ்வளவு முட்டாள்தனம் என நினைத்த விநாயகர் தன்னை நோக்கி வந்த மலையை உடைத்தெறிந்த கையோடு அவன் தலையையும் கொய்து எறிந்தார்.

    துணைத்தளபதியின் தலை கொய்து எறியப்பட்ட செய்தி அறிந்து அங்கு வந்த கும்பாண்டகன் பின் வாங்கி நின்ற அசுரப் படைகளை முன்நோக்கிச் சென்று தாக்குமாறு கட்டளையிட்டான். தளபதியின் நேரடி உத்தரவு என்பதால் அசுரப்படைகள் முன்னிலும் வேகமெடுத்துப் பாய்ந்தன, அந்தப் பாய்ச்சலில் விநாயகரின் பூதப்படைகளோடு நந்தி தேவரும் நடுநடுங்கிப் போனார். நிலைமை சிக்கலானதால் மீண்டும் களத்துக்கு வந்த விநாயகர் அசுரப்படைகளின் தாக்குதலை தடுத்து நிறுத்தியதோடு இம்முறை உயிர்ப் பிச்சை எல்லாம் தரமுடியாது எனச் சொல்லி விட்டு கும்பாண்டகன் தலையை வெட்டி எறிந்தார்.

    தங்கள் தளபதிகளின் தலைகளைக் காவு கொடுத்து விட்டு அசுரப்படைகள் கலங்கிப் போய் நிற்க விக்கிரதமிட்டிரன் என்ற அசுரத்தலைவன் தன் வலிமை முழுவதையும் திரட்டி மிகப்பெரிய மலை ஒன்றைப் பிடுங்கி விநாயகரின் மீது எறிந்தான். அம்மலை அவரின் மீது மோதி விடாமல் தடுத்து நிறுத்திய பூதப்படைகள் அம்மலையைக் குகை போல வடிவமைப்புச் செய்ய அதில் எழுந்தருளி தன் படை வீரர்களுக்குக் காட்சி தந்து அருள்பாளித்த விநாயகர் இப்படி ஒரு சிம்மாசனம் தந்ததற்குக் கைமாறாக விக்கிரதமிட்டிரனையும் போட்டுத் தள்ளினார். ஆனாலும், ஓயாத அலையாய் அடுத்தடுத்து அசுரப்படைகள் வந்த படியே இருந்தன.

    எத்தனை பேரைத் தான் தானே போட்டுத் தள்ளுவது? தலைமையேற்று வரும் தளபதிகளை எல்லாம் தானே அழித்து விட்டால் படைகளை வழிநடத்தி வந்த நந்தி தேவருக்குக் களங்கம் வந்து விடாதா? என நினைத்த விநாயகர் வயிரவப் படைகளுக்கு உதவியாகத் தன் பூதப்படைகளின் ஒரு பிரிவைக் களத்திலேயே இருக்கச் செய்து விட்டுத் தான் எழுந்தருளிய மலைக்குன்றிலேயே தங்கி விட்டார். அப்படி அவர் தங்கிய தலம் தான் “பிள்ளையார் பட்டி”!

    காரைக்குடியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இவ்வூரில் எழுந்தருளியிருக்கும் இந்த விநாயகர் ”கற்பக விநாயகர்” என்றழைக்கப்படுகிறார். ”கல்” என்றால் ”பாறை”, ”பகு” என்றால் ”பகுத்தல்” – ”பிளத்தல்”. பாறையைப் பிளந்து எழுந்தருளி இருப்பவர் என்பதால் கற்பக விநாயகர் எனப் பெயர் பெற்றார். நவக்கிரகங்களால் பிடிக்க முடியாத இரு கடவுளர்களுள் ஒருவர் விநாயகர். இன்னொருவர் ஆஞ்சநேயர். நவக்கிரகங்களால் பிடிக்க முடியாத விநாயகரைப் பக்தன் சாணத்திலோ, மஞ்சளிலோ, சர்க்கரையிலோ பிடித்து விட முடியும் என்பதால் தான் ”பிடித்து வைத்தால் பிள்ளையார்” என்றழைக்கப்பட்டார்.

    தனக்குத் தானே நாயகராய், கடவுளுக்கெல்லாம் முதல்வராய் இருந்தும் குளத்தங்கரையிலும், முச்சந்தியிலும், தெருமுனைகளிலும் ”ஏழை”க் கடவுளாய் எழுந்தருளி பக்தனுக்காகத் தன்னை எளிமைப் படுத்திக் கொண்ட விநாயகருக்கு உகந்த பல விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி நாளில் அவரை மண்ணில் செய்து நீர்நிலைகளில் கரைப்பதற்குப் பெயர் “விசர்ஜனம்”. மனதில் நாம் பல உருவங்களைச் செய்து கொள்கிறோம். அவற்றை ஒரு காலத்தில் உடைத்தெறிய வேண்டும். உருவங்களை வழிபடுபவன் வழிபடு பொருளின் நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற உன்னதத்தைத் தன்னையே விசர்ஜனம் செய்து கொண்டு விநாயகர் நமக்கு உணர்த்துகிறார். நாமோ அதையெல்லாம் உணராமல் அந்நாளில் பூஜை அறையில் இருக்கும் விநாயகரைச் சாலைகளில் இறக்கிக் கலர், கலர் மையிட்டு அழகுபடுத்தி சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறோம். கடற்கரைக்குக் கரைக்கக் கொண்டு போகிறேன் பேர்வழி எனக் கலவரங்களை உண்டு பண்ணுகிறோம். ”ஏழை”க் கடவுளை “ஏழரை”க் கடவுளாக ஆக்கியதன் விளைவு பக்தனைக் காக்க வேண்டிய கடவுளை காவலர்கள் காக்க வேண்டிய நிலை உருவானது.

    பக்தனுக்குச் சோதனை வந்தால் கடவுளிடம் முறையிடலாம். அந்தக் கடவுளுக்கே சோதனை வந்தால் அவர் யாரிடம் போய் முறையிடுவார்? இதையெல்லாம் யோசித்தால் பக்தனுக்கு மட்டுமல்ல அவன் வழிபடும் கடவுளுக்கும் அது நல்லது. பக்தனோடு கடவுளும் சிக்கிக் கொண்ட கலியுகத்தில் இறைவழிபாட்டை மத வெறியாக மாற்றிக் கொண்டிருப்பவர்களிடம் இதை எப்படிச் சொல்லி புரிய வைப்பது?

    Share
  • என்றும் இன்சொல் பேசுவோம்!

    பவள சங்கரி

    ஒரு பிடியும் எழு களிரும்!

    புறநானூறு

    பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
    பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
    திணை :பாடாண். துறை : செவியறிவுறூஉ.

    நீயே, பிறர் ஓம்புறு மறமன் னெயில்
    ஓம்பாது கடந்தட்டு, அவர்
    முடி புனைந்த பசும் பொன்னின்
    அடி பொலியக் கழல் தைஇய
    வல் லாளனை, வய வேந்தே!
    யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்தடங்கப்,
    புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற,
    இன்றுகண் டாங்குக் காண்குவம், என்றும்
    இன்சொல் எண்பதத்தை ஆகுமதி; பெரும!
    ஒருபிடி படியுஞ் சீறிடம்
    எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே!

    உரை: பகைவர்கள் பாதுகாத்துவந்த அரண்களை ஒருபொருட்டாக சிறிதும் மதியாது, அவையனைத்தையும் அழித்து, பகைவர்தம் முடியில் சூடிய பொன்மகுடங்களை உருக்கி அவைகளை உன் கால்களில் வீரக் கழல்களாக அணிந்த வலிய ஆண்மையுடைய வேந்தே! ஒரு பெண்யானை படுக்கும் சிறிய இடத்தில் ஏழு யானைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் விளையும் நாட்டுக்கு உரியவனே! தலைவனே! நீ இன்சொல் உடையவனாகவும் காட்சிக்கு எளியவனாகவும் இருப்பாயாக. உன்னை இகழ்ந்து பாடுவோர் தலைகுனியவும், உன்னைப் புகழ்ந்து பாடுவோர் பெருமிதத்தால் தலை நிமிர்ந்து நிற்கவும், இன்று கண்டதுபோன்றே என்றும் காண்போமாக.

    ஒரு சென் கதை பார்ப்போமா

    விழுதுகள் புடைசூழ தழைத்தோங்கிய ஒரு பெரிய ஆலமரம். அதன் அடியில் கண் பார்வையற்ற துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வழிப்போக்கன், ” ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?” என்று சற்றும் மரியாதை இல்லாமல் அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அத்துறவி “அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லையே” என்று பதிலளித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, மற்றொருவர் வந்து “ஐயா, இதற்கு முன் யாராவது இந்தப்புறம் சென்றார்களா?” என்று கேட்டார். அதற்கு அத்துறவியார் “ஆம், சற்று முன் இதே கேள்வியைக் கேட்டுக்கொண்டு ஒருவன் சென்றான்” என்றார். மீண்டும் சற்று நேரம் கழித்து இன்னொருவர் வந்தார். அவரும் அத்துறவியிடம் “வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் தங்களுக்குக் கேட்டதா சுவாமி?” என்று பணிவுடன் கேட்டார். உடனே அத்துறவி “மாமன்னரே, வணக்கம். இவ்வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே தாங்கள் கேட்ட அதேக் கேள்வியை கேட்டுச் சென்றனர்.” என்றார். அப்போது ஆச்சரியத்துடன் மன்னர் “துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சரும் கேட்டுச் சென்றார்கள் என்பதைச் சரியாக சொல்கிறீர்கள்” என்று கேட்டான். அதற்கு அத்துறவி “இதை அறிவதற்கு பார்வை தேவையில்லை அரசே. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்” என்று சொல்லி, “முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றி பேசினான். அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரம் இருந்தது. தங்களது பேச்சில் மட்டுமே பணிவும் தென்பட்டது” என்று எடுத்துக் கூறினார்.

    இன்சொல் பேசுபவரே பெரியோர்!

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: பசி பெரிது ஆயினும் புல் மேயாதாகும் புலி

     

    ஒற்கந்தாம் உற்ற விடத்தும் உயர்ந்தவர்
    நிற்பவே நின்ற நிலையின்மேல் – வற்பத்தால்
    தன்மேல் நலியும் பசிபெரி தாயினும்
    புன்மேயா தாகும் புலி.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ஒற்கம் தாம் உற்ற இடத்தும், உயர்ந்தவர்
    நிற்பவே, நின்ற நிலையின்மேல்;-வற்பத்தால்
    தன்மேல் நலியும் பசி பெரிதுஆயினும்,
    புல் மேயாது ஆகும், புலி.

    பொருள் விளக்கம்:
    வறுமை தனக்கு ஏற்பட்ட பொழுதும், உயர் பண்புள்ள சான்றோர், சற்றும் மாறாது நிற்பார் தாம் கொண்ட நற்பண்பின் நிலையிலேயே. (இப்பண்பானது) பஞ்சகாலத்தில் தனது உடலை நலிவடையச் செய்யும் பசி பெரிதும் வருத்தினாலும் புல்லை உண்ணாத புலியின் பண்பினை ஒத்ததாகும்

    பழமொழி சொல்லும் பாடம்:
    சான்றோர் எத்தகைய நிலையிலும் தனது நற்பண்பை இழக்கமாட்டார். வறுமை நேரினும் அதற்காகத் தனது தரம் தாழ்ந்து போகமாட்டார். “புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்று இந்நாளும் வழக்கில் இருக்கும் இந்தப் பழமொழி விளக்குவது போல, தனது வாழ்வே சீரழிந்து போயிருப்பினும், நற்பண்பின் இருப்பிடமானோர் சிறுமை தரும் ஒழுக்கமற்ற செயல்களைச் செய்யவும் முற்படுவதில்லை. இத்தகைய  நற்பண்பின் இருப்பிடமானவரின் பண்பை கூற வரும் வள்ளுவர்,

    அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
    குன்றுவ செய்தல் இலர். (குறள்: 954)

    கோடி கோடியாக செல்வத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் நற்பண்பு கொண்ட சான்றோர் சிறுமை தரும் கீழ்த்தரமான செயல்களைச் செய்யார், எத்தகைய சூழலிலும் நற்பண்பைக் கைவிடுவது சான்றோர் இயல்பு அல்ல என்று சுட்டிக் காட்டுகிறார்.

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – இணையவழி ஒலிப்பதிவு

    —சிவானந்தம் கனகராஜ்.

    இணையவழி குரல் பதிவு மற்றும் ஒலிக் கோப்புகள் உருவாக்கத்திற்கான தளங்கள்

    சில வருடங்களுக்கு முன் வரை ஒலிப்பதிவு பெட்டியின்(tape recorder) உதவியுடன் ஒலிகளையும், குரல்களையும் பதிவு செய்து கேட்டு மகிழ்ந்தோம். சமீப காலமாக கைபேசிகளிலும் (cellular phones) கூட இந்தக் குரல் பதிவு வசதி கிடைக்கிறது. அந்த ஒலிக் கோப்புகளை கணினிகளில் பதிவிறக்கி சேமித்துப் பயன்படுத்தலாம். இப்போது, கணினியுடன் இணைய இணைப்பும், கணினியுடன் இணைக்கப்பட்ட மின்சார ஒலிபெருக்கி அல்லது ஒலிவாங்கி (microphone) இருந்தால், நம் கணினியில் ஒலிப்பதிவு செய்து ஒலிக் கோப்புகளாக சேமித்துக் கொள்ளலாம். இத்தகைய சேவைகளை வழங்கும் இணையதளங்கள் மற்றும் மென்பொருட்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

    1) Audacity :

    Audacity-image-600x337
    இந்த வசதி நமக்குத் தனி மென்பொருள் வாயிலாகக் கிடைக்கிறது. இந்த மென்பொருளை நமது கணினியில் தரவிறக்கி, குரல் பதிவு, ஒலிப்பதிவு செய்து அவற்றை தனிக் கோப்புகளாக கணினிகளில் சேமித்து பயன்படுத்தலாம். பிறருடன் பகிர்ந்தும் கொள்ளலாம். அத்தகைய ஓர் மென்பொருள் தான் ஆடேசிட்டி (Audacity). இந்த மென் பொருளை நமது கணினியில் தரவிறக்கி (Download), நிறுவி (Install) பயன்படுத்தலாம்.

    இம்மென்பொருளைக் கீழ்காணும் இணையதளத்தில் இருந்து தரவிறக்கி பயன்படுத்தலாம்.
    http://audacityteam.org/

    இனி, மென்பொருட்களைக் கணினிக்கு தரவிறக்கம் செய்யாது, இணையத்திலேயே ஒலிப்பதிவு செய்து, கோப்புகளாகவே நமக்குக் கணினிகளில் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கும் இணையதளங்கள் குறித்து காணலாம்.

    2) Sound cloud:

    soundcloud-logoஇணையத்தில் ஒலிக்கோப்புகளைத் தரவேற்றம் செய்து, அந்தக் கோப்புகளை எந்தத் தளங்களில் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளும் வசதியை அளிக்கிறது இந்த sound cloud இணையதளம். இசை மற்றும் ஒலிக் கோப்புகளை ஃபேஸ் புக் (facebook), ட்விட்டர் (twitter), டம்ப்ளர் (tumblr) மற்றும் இணையத்தில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் வசதியை இந்த இணையதளம் வழங்குகிறது.

    இந்த மென்பொருள் பலவகையான ஒலிக்கோப்பு வடிவங்களைப் பயன்படுத்த வழிவகை செய்கிறது. இந்த இணையதளத்தில் AIFF, WAVE (WAV), FLAC, OGG, ALAC, MP2, MP3, AAC, AMR, WMA ஒலிக் கோப்பு வடிவங்களைப் பயன்படுத்தலாம். தரவேற்றம் செய்யப்படும் ஒலிக் கோப்புகளின் அதிகபட்ச அளவு 5GB ஆக இருக்கலாம்.

    ஒலிக்கோப்புகளைத் தரவேற்றம் செய்து பிறருடன் பகிர்ந்து கொள்ள தனி பயனர் கணக்கு தொடங்குதல் அவசியம்.

    இந்த மென்பொருளைக் கீழ்காணும் இணையதள முகவரியில் பயன்படுத்தலாம்.
    https://soundcloud.com/

    3) Audio expert:

    AudioExpert-Free-Online-Voice-Recorder
    ஆடியோ எக்ஸ்பர்ட் என்ற இந்த இலவச இணைய மென்பொருளின் உதவியுடன் ஒலிக் கோப்புகளை (Audio files) உருவாக்கலாம், ஏற்கனவே இருக்கும் ஒலிக்கோப்புகளில் மாற்றங்கள், திருத்தங்கள் (Edit) செய்யலாம். கோப்புகளை ஒரு வடிவிலிருந்து மற்றோர் ஒலி வடிவிற்கு (file convert / format convert ) மாற்றலாம். இரு வேறு ஒலிக் கோப்புகளை ஒன்றாக இணைக்கலாம். குரல் பதிவு செய்து, கோப்புகளாக சேமித்துக் கொள்ளும் வசதியும் கிடைக்கிறது.

    100 Mb அளவு வரை இருக்கும் கோப்புகளை ஒரு ஒலி வடிவிலிருந்து மற்றோர் ஒலி வடிவிற்கு மாற்றலாம். இணையதளங்களில் இருக்கும் ஒலிக் கோப்புகளையும் நமக்குத் தேவையான ஒலி வடிவ கோப்புகளாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு, நமக்குத் தேவையான ஒலிக் கோப்பு இருக்கும் வலைப்பக்கத்தின் சரியான முகவரியைக் கொடுத்தாலே போதுமானது.

    வலைப்பக்க முகவரிகள் கொடுக்கையில், http (hyper text transfer protocol), https (http secure), ftp (file transfer protocol) என்று துவங்கும் வலைப்பக்க முகவரிகளை வழங்குதல் அவசியம்.

    இம்மென்பொருளினை பயன்படுத்தி கீழ்க்கண்ட ஒலிக் கோப்பு வகைகளை ஒரு வடிவிலிருந்து மற்றோர் வடிவிற்கு மாற்ற இயலும்.
    AAC – Advanced Audio Coding
    AMR – Adaptive Multi Rate (Audio Compression format)
    AU – Audio file format by Sun Micro systems
    FLAC – Free Lossless Audio Codec
    M4A – Mpeg 4 Audio
    WMA – Windows Media Audio
    MKA – Matroska file extension for audio files only.

    இம்மென்பொருளைக் கீழ்கண்ட இணையப் பக்கத்தில் பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்த ஓர் பயனர் கணக்கு மட்டும் துவங்கினால் போதுமானது.
    http://audioexpert.com/

    4) Audio Pal :
    ஒலிப்பதிவிற்கான மற்றுமோர் இலவச இணையதளம் தான் இந்த Audio Pal. இந்த மென்பொருளின் உதவியுடன் ஒலிப்பதிவு செய்து, பயன்படுத்தலாம். மேலும், 25 ற்கும் மேலான மொழிகளில் எழுத்து வடிவத்திலிருந்து ஒலி வடிவத்திற்கு (Text to Speech) மாற்ற இயலும். தொலைபேசியின் உதவியுடன் குரல் அல்லது ஒலிப்பதிவு செய்யலாம்.

    internet 3

    கணினியில் சேமித்து வைத்திருக்கும் ஒலிக்கோப்புகளையும் தரவேற்றம் செய்து கொள்ளலாம்.

    internet 2

    மேற்கூறிய நான்கு முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் ஒலிப்பதிவு செய்த பின், அந்தக் கோப்புகள், எங்ஙனம் பதிவாகி உள்ளன என்றும் அறிந்து கொள்ளலாம். ஒலிப்பதிவு செய்த கோப்புகளை, நமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி மின்னஞ்சலில் சேமித்தும் வைத்துக் கொள்ளலாம்.

    இந்த மென்பொருளைக் கீழ்க்கண்ட இணையதளத்தில் பயன்படுத்தலாம்.
    http://www.audiopal.com/editor.html

    5) Vocaroo :
    இணையத்தில் இலவசமாக ஒலிப்பதிவு செய்ய உதவும் வலைத்தளம் Vocaroo.com.

    internet 1

    வலைத்தளத்தை திறந்ததுமே, மேற்காட்டியுள்ளதைப் போன்று தான் பக்கம் திறக்கிறது. இதில் காணப்படும், ” Click to Record” என்கிற பொத்தானை சொடுக்கியதும், குரல் பதிவு அல்லது ஒலிப்பதிவு ஆரம்பமாகிறது. இந்தத் தளத்தினூடாக ஒலிப்பதிவு செய்ய ஒலிவாங்கி (microphone) தேவை. ஒலிவாங்கியின் உதவியுடன், குரல்பதிவு செய்து முடித்ததும், பதிவு செய்ததை மீண்டும் கேட்கலாம். நமக்குத் தேவையெனில் அதனை ஒலிக்கோப்பாக நமது கணினியில் சேமித்துக் கொள்ளலாம்.

    இந்தச் சேவை வழங்கும் இணையதளம்
    http://vocaroo.com/

    *** Please Note: Picture courtesy of their respective service providers’ sites

     

    Share
  • ஐந்து கை ராந்தல் – 30

    வையவன்

    வெற்றிவேல் வரவில்லை. அவன் திருப்பத்தூர் வரை வந்து இருவரையும் ரயில் ஏற்றினான்.
    அம்மாவை சாமான்கள் எல்லாம் மூட்டை கட்டி ஒரேயடியாக எடுத்துப் போகலாம் என்று வற்புறுத்தினான் சிவா.

    “இப்ப வேணாம்! இப்ப வேற ஒரு விஷயத்துக்குப் போறோம். அது நல்லபடியா நடத்துட்டா நாம்பளே வேற வீடு பார்க்க வேண்டியதா இருக்கும். நீயும் நானுமா ஒரு வீட்டைத் தேடுவோம். கெடைச்சப்புறம் சாமான்களை எடுத்துட்டுப் போவோம்.”
    பளிச்சென்று பிசிறு அறுந்த மாதிரி இருந்தது சிவாவுக்கு.

    ரயில்வே ஸ்டேஷனை விட்டு இறங்கியதுமே சென்னை அம்மாவுக்கு பிடிக்கப் போவதில்லை என்று பயந்து கொண்டே வந்தான் சிவா, அவளுக்கு எல்லாம் சகஜமாயிருந்தது.

    “பெரிய ஊருண்ணா கூட்டம் ரொம்ப. நெரிசல் ரொம்ப. இப்படித்தான் இருக்கும்… சுறுசுறுப்பா ஜனங்க ஓடறதும் நடக்கறதும் நல்லாத்தான் இருக்கு.”
    அம்மா அதையும் ரசித்தாள்.

    ராயப்பேட்டையில் பஸ் இறங்கி நடந்தனர். பிரீதா க்வார்ட்டர்ஸில் இருந்தாள்.

    ஒரு சூட்கேஸுடன் மட்டும் வந்து நிற்கும் சிவாவைப் பார்த்துவிட்டு “எவிடயாணு அம்ம?” என்று வெளியே வந்தாள்.
    ஒரு நூல் சேலையில் நெற்றியில் குங்குமம் பளிச்சிட, சிவாவின் அம்மா நான் தான் என்று அச்சடித்து வைத்த மாதிரி ஒரு முகக் களையோடு புன்னகையோடு வந்து நிற்பவளைப் பார்த்ததுமே சட்டென்று ஒட்டிக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது.

    அவள் அருகில் போய் சிரித்துக் கொண்டே நின்றாள். அம்மாவைத் தொட வேண்டும் போலிருந்தது.
    அவள் கையைப் பிடித்து “அம்மா” என்றாள்.

    பிடித்த கையை அம்மாவும் பற்றிக் கொண்டாள்.

    “நீ தான் பிரீதாவா?”
    அம்மாவுக்கு ஏனோ மனசு சுரந்தது.

    இதென்ன இது! இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரியில் பெரிய நர்ஸ்.

    யாரோ முன் பின் தெரியாதவள். பேச்சு வேறே. நாடு வேறே. ஜாதி வேறே!
    ஏதோ தெருவில் நடந்து போகிற எவளோ ஒருத்தியைப் பார்த்து முகம் மலரச் சிரித்துக் கொண்டு ஓடி வந்து காலைக் கட்டிக கொள்கிற குழந்தை மாதிரி வந்து கையைப் பிடித்துச் சிரிக்கிறாள்.

    அம்மா சட்டென்று அவள் முகத்தை இரண்டு கைகளாலும் நீவி வழித்து திருஷ்டி முறித்தாள்.
    “இது எந்தினாணு?”
    “கண் திருஷ்டி படக்கூடாது” சிவா விளக்கினான்.

    பிரீதாவுக்குப் புரிந்தது. சிரிப்பு வந்தது. குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். அது அம்மாவைப் புண்படுத்தவில்லை. அவள் அப்படிச் செய்வதற்கு அப்படி என்ன நான் அவ்வளவு அழகா என்ற கேள்வி வந்து இப்படி யாரோ ஒருவர் திருஷ்டி முறிக்கிற சொந்தத்திற்கு வந்து சேர்ந்த பூரிப்பு வந்தது.

    ஏதோ வெகு நாட்களுக்கு முன் விட்டுப் போன- ஜென்மங்களுக்கு முன்னால் பிரிந்து போன உறவெல்லாம் இணைந்த குதூகலம் வந்து அவள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

    அந்தச் சிரிப்பில் என்ன விடுதலை!
    சிவா ரிஷிகேஷில் பிரீதா பாபா ஓம்கார்நாத்தின் முன்பு அழுததை நினைத்தான். அங்கே பிரீதா அழுது விடுதலையானாள். இன்று அம்மாவிடம் சிரித்து விடுதலையாகிறாள்.

    இரண்டு நாட்களாக பிரீதாவிற்குச் செய்வதற்கு வேலை இல்லாமல் போய் விட்டது.
    எதற்கெடுத்தாலும் அம்மா ஓடி ஓடி முன் வந்தாள். கிராமீயமான எளிமையில் அவள் செய்யும் சிறு பிழைகள் கூட மகிழ்ச்சியாக இருந்தன.

    வந்த முதல் நாளே சிவா அம்மா வந்திருக்கும் காரணத்தைச் சொன்னான். வெற்றிவேலின் உத்தேசத்தைச் சொன்னான்.
    பிரீதா முகம் வாடாமல் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டாள். பதில் சொல்லவில்லை.

    அன்று மாலை அம்மாவை அழைத்துக் கொண்டு பீச்சுக்குப் போவதாக பிளான். நாலு மணிக்கு உத்தரவு வாங்கிக் கொண்டு வருவதாகச் சொன்ன பிரீதா மூன்று மணிக்கெல்லாம் வந்தாள்.
    “என்ன பிரீதா?” என்று சட்டைக்கு அயர்ன் போட்டுக் கொண்டிருந்த சிவா கேட்டான்.

    “ரேடியாலஜி டிபார்மெண்ட்டுக்கு புதிய கருவிகள் வந்திருக்கு. சி.எம்.சிக்கு நான் டிரெய்னிங் போனேன் இல்லே! அது சம்பந்தமான அபாரடஸ், இப்ப நம்ப ஹாஸ்பிடல்லே ‘இன்ஸ்டல்’ பண்ணப் போறாங்க. ராத்திரி பத்து பதினொண்ணு ஆயிடும். ஐ ஆம் சாரி சிவா. அம்மாவை நீ பீச்சுக்கு அழைச்சுட்டுப் போய்ட்டு வந்துடு.”
    “ஆல்ரைட்” சிவா ஒத்துக் கொண்டான்.

    சொன்னபடியே பிரீதா வீடு திரும்ப பதினொன்று ஆகிவிட்டது. அவளுக்காக டிபன் செய்து பத்திரமாக மூடி வைத்து விட்டுத் தானும் சாப்பிடாமல் காத்திருந்தாள் அம்மா.

    “அம்மா கழிக்கணும். எனிக்கு சமயம் கிட்டான் அல்பம் போகும்”
    “கழிக்கணுமா?”
    “ஓ… சாப்பிடணும். முன்னாடி சாப்பிடணும். வெயிட் பண்ண வேண்டாம்”
    “எனக்கு பசிக்கல்லே கொழந்தே!”
    அம்மா பரிமாறிவிட்டு கூடச் சாப்பிட உட்கார்ந்தாள்.

    அன்றிரவு அம்மா பக்கத்திலேயே கட்டிலை விட்டுக் கீழே தரையில் மெத்தை விரிப்பைப் போட்டுப் படுத்துக் கொண்டாள் பிரீதா.
    இரவு அவள் ஒரு கனவு கண்டாள்.

    அந்தக் கனவில் தாமு அவர்கள் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்தான். ரேடியாலஜி டிபார்ட்மெண்டில் டாக்டருக்கு உதவியாக அவள் நின்றிருந்தாள்.

    தாமுவை ரேடியாலஜி டிபார்ட்மெண்டுக்குள் கொண்டு வந்தார்கள்! படுக்க வைத்து டாக்டர் பரிசோதிக்கும் போது வெளியே இருந்து ‘பிரீதா பிரீதா’ என்று ஒரு குரல் அழைத்தது. அவள் அதைப் பொருட்படுத்தவில்லை.

    ஒரு குரல் பல குரல்கள் ஆயிற்று. நூறு நூறு குரல்கள் கூப்பிட்டான். அவள் எதையும் பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருக்கும் போது கூச்சல்கள் அதிகரித்தன.

    அவள் வெளியே ஓடிப் போய் கத்துவது யார் என்று கேட்பதற்காகப் போக நினைக்கிறாள். கால்கள் நகரவில்லை. நகர முடியவில்லையே… ஏன். ஏன்?
    பளிச்சென்று கனவு கலைந்து பிரீதா எழுந்து உட்கார்ந்தாள்.

    “என்னம்மா கனவு கண்டியா?” என்று சிவாவின் தாய் கேட்டபோது, அந்தப் பரிவிலும் பிரியத்திலும் அவளுக்கு வெட்கம் வந்து விட்டது.

    “ஆமாம்மா… ஏதோ கெட்ட கனவு”
    அம்மா திருநீற்றுச் சம்புடம் கொண்டு வந்திருந்தாள் அதிலிருந்து கொஞ்சம் எடுத்து நெற்றியில் இட்டாள்.

    அடுத்த நாள் அம்மாவும் அவளும் கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போய் வந்தனர். வெகு நேரம் வரை கோயிலுக்குள் நிறைந்து வழிந்த கூட்டத்தை அம்மா ரசித்தாள். அவள் ரசிப்பதை பிரீதா ரசித்தாள்.

    பின்பு இருவரும் மயிலாப்பூர் குளக்கரைக்கு வந்தனர். வரிசை வரிசையாக இறங்கும் அந்த படிக்கட்டைப் பார்த்து, “இங்கே கொஞ்சம் உட்கார்ந்து போகலாமே பிரீதா என்றாள் அம்மா.

    பிரீதாவுக்கு அந்தப் பகுதியில் தான் பல பேருக்கும் முகம் தெரிந்த நர்ஸ் என்று முதலில் ஒரு தயக்கம் வந்தது.
    அவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள் என்பதை விட அம்மா என்ன நினைப்பாள் என்பது முக்கியமாகப் படவே அவளும் இசைந்தாள்.

    சிவாவின் அம்மா என்பதற்கு மேலாக அவளிடம் ஏதோ ஒரு பாந்தப் பிடிப்புத் தன்னை அணைத்து ஆசுவாசப்படுவதை இந்த இரண்டு நாட்களில் அவள் நன்கு அனுபவித்திருந்தாள்.

    மலையாளமும் தமிழும் கலந்த பிரீதாவின் கொச்சை மொழி அம்மாவுக்கு பிடித்துப் போயிற்று.
    உட்கார்ந்து கொஞ்ச நேரம் கழித்து அம்மா ஆரம்பித்தாள்.
    “சிவா சொன்னானாம்மா?”
    “சொல்லுச்சு”
    “நீ எங்கிட்டே சொல்லவே இல்லியே”
    பிரீதா தன் நகப் பூச்சையே மௌனமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தாள்.

    “ஒன் மனசை தொறந்து சொல்லும்மா?”
    “………”
    “சிவா மாதிரியே வெற்றிவேலும் நல்லபிள்ளை எதைச் சொன்னாலும் மனசு வருத்தப்படாமே ஏத்துக்குவான்!…”
    பிரீதா கண்ணை உயர்த்த உண்மைப் பாசமும் அக்கறையும் நெகிழ்ந்து பரவிய அம்மாவின் முகத்தைப் பார்த்தாள்.
    “உனக்கு இஷ்டமில்லேண்ணா வேண்டாம்”
    என்ன பதில் சொல்வது என்று பிரீதா யோசித்தாள்.

    “வீட்டிலே பெரியவங்களைக் கேக்கணுமா?”
    நர்ஸ் டிரெயினிங்கில் அவளைச் சேர்த்து விட்டு டேராடூனுக்கு மனைவியை அழைத்துச் சென்ற அண்ணன் ஒருவன் தான் கேட்க உரிமையுள்ள பெரியவன்.

    மற்றவர்கள், மாண்டது போக மீதியிருந்தவர்கள். அபிப்பிராயம் சொல்லி விட்டு வேலையைக் கவனிக்கும் பெரியவர்கள்தான். டேராடூனுக்குப் போனவன் என்னமோ பெரிய ஆபீசராகி பிரான்ஸிலிருந்து வருஷத்துக்கு ஒரு கடிதமும் ஓணத்தன்று ஒரு பரிசும் அனுப்புவதோடு சரி.

    “இப்பவே சொல்லணும்ணு ஒண்ணும் அவசரமில்லே. நாலு நாள்… பத்து நாள். ஒரு மாசம்கூட யோசி… அப்புறமா சொல்லு! ரிஷிகேசத்திலே பாபா ஓம்கார்நாத் ஒன் பொறுப்பை இவனுங்க ரெண்டு பேரு கிட்டேயும் ஒப்படைச்சாராம்.”
    சட்டென்று பிரீதா அம்மாவின் முகத்தை வியப்போடு பார்த்தாள்.

    “என்ன சொன்னாராம்?”
    “ஒங்க ரெண்டு பேர்லே யாராவது அவளை ஏத்துக்கறவன் ஆசிர்வதிக்கப்படுவாண்ணு சொன்னாராம்.”
    பிரீதாவுக்கு மார்பு திரண்டு உடைந்து விடும்போல் விம்மி தொண்டையில் ஒரு துக்கம் மோதியது.

    ஒரு பார்வையில் அவள் மனசு முழுவதையும் புரிந்து கொண்ட பாபாவா இதைச் சொன்னார். அவர் எதை உத்தேசித்து அப்படிச் சொன்னார்?
    அம்மா எதிரில் அழவேண்டாம் என்று அவள் தன் மனசைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

    “சிவா கிட்டே எல்லாம் தெரிஞ்சுக் கிட்டீங்களா அம்மா?”
    “எதைப் பத்தி?”
    “என்னைப் பத்தி!”
    “ஏன் அப்படிக் கேக்கறே?”
    “சிவா எல்லாம் சொல்லிச்சா”
    “சொன்னான்.”

    “தாமுவுக்கும் எனக்கும் இருந்த ஸ்நேஹம்… அதுக்கு முன்னாடி சின்ன வயசிலே பிரபாகர வர்மாவோட இருந்த ஸ்நேஹம்…”
    “எல்லாம் சொன்னான். எனக்கு மட்டுமில்லே. வெற்றிவேலுக்கும் சொன்னான்.”
    “அதுக்கு அப்புறமும் வெற்றிவேலுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கத் தோணுதாம்மா?”

    “அவனுக்கு மட்டுமில்லேம்மா, எனக்கும் கூடத்தான் ஒன்னைப் பாத்தப்புறம் ரொம்ப பிடிச்சிருக்கு. ஒரு பொம்பளைக்கு இன்னொரு பொண்ணு என்னண்ணு சட்டுனு தெரிஞ்சிடும். எது உத்தமம் எது நீசம்ணு பளிச்சுணு புரிஞ்சிடும்… நா என்ன பண்ணுவேன்? வெற்றிவேல் தான் மொதல்லே ஆசைப்பட்டு சொன்னான்?”
    அவள் புகழ்வதைக் கேட்டு பிரீதாவுக்கு நாணமாயிருந்தது. அந்த புகழ்ச்சி வஞ்சனையில்லாத வெள்ளை மனசிலிருந்து வருவதால் பால் மாதிரி பிரீதாவின் நெஞ்சை நனைத்தது.

    “அம்மா… சிவா எனக்கு சகோதரன். நீ என்டெ அம்மா”
    பிரீதாவுக்கு அம்மா மடியில் படுத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
    ஓர் அன்னையின் மடி எப்படியிருக்கும்?
    அது குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்த பிரீதாவுக்குத் தெரியாது. மடி மீது படுத்துக் கொண்டாள்.

    “எனக்கு வெற்றிவேலைப் பிடிக்காம இல்லேம்மா… அவர் ஒரு ஜென்டில்மேன்”
    “அப்புறம் என்ன…”
    “எனிக்குச் சொல்லத் தெரியலேம்மா…”
    “எப்பவும் தொணை ஒண்ணு தேவை பிரீதா… அது இப்ப தெரியாது… வயது ஆக ஆகத் தெரியும்.”
    “நீ என்னிக்குத் துணையில்லையாம்மா”
    பிரீதாவின் தலைமீது அம்மா கை வைத்தாள். அதை மெதுவாகப் பிடித்து விடுவது போல் நீவிக் கொடுத்தாள்.

    “நான் இருக்கற வரைக்கும் ஒனக்குத் துணை உண்டு. போனப்பறம்?”
    “நீ போகாதேம்மா… சிவா கல்யாணமாய்ப் போகட்டும். நீ வேண்டாம். நீ என்னோட இரும்மா”
    “இருக்கேம்மா… நான் ஒன்னோடவே இருக்கேன்” அம்மா நெடுமூச்செறிந்தாள்.
    பெண் மனசு அவளுக்குப் புரிந்தது.

    அது சீக்கிரம் மாறாது. அங்கே காயங்கள் லேசில் ஆறாது.
    மரம் சாய்ந்து வேரற்றுப் போன பள்ளத்தில் விதை விழுந்து மீண்டும் மழை பொழிந்து ஈரம் இறங்கி செடி எழுப்பும். ‘ஒரு வேளை எழும்பாமலும் போகும்.’
    காத்திருக்க வேண்டியது தான்.
    காத்திருப்பது யார்?
    வெற்றிவேலா?
    அம்மாவின் முகத்தில் படர்ந்த வினாக் குறையைக் கண்டு பிரீதா தொடர்ந்தாள்.

    “நான் என்னம்மா சொல்லட்டும்?”
    “ஒண்ணும் சொல்லாதே. எனக்குப் புரியுது… வெற்றிவேலுக்குப் புரியறாப்பிலே நான் சொல்லிக்கறேன்.”
    அவர்கள் இருவரும் எழுந்தனர்.

    வேடிக்கை பார்த்தவாறே நடந்தே க்வார்ட்டர்ஸுக்கு போய்விடலாம் என்று அம்மா வற்புறுத்தினாள்.
    “அம்மாவுக்கு திஷ்யா தெரியுமா?”
    “திஷ்யாவா… அது யாரு”
    “சிவா ஸ்நேஹிக்கிறவள்.”
    திஷ்யாவைப் பற்றி மெதுவாக சொல்லிக் கொண்டே வந்தாள் பிரீதா. சினிமாவில் நடிக்க மறுத்தவள் என்று சொன்னதுமே அம்மாவுக்கு அவளைப் பளிச்சென்று பிடித்து விட்டது.

    தன் சிவா தப்பு செய்ய மாட்டான் என்ற நம்பிக்கை அவளுக்கு எப்போதும் உண்டு.
    இதெல்லாம் ஏன் இன்னும் என்னிடம் சொல்லவில்லை?
    நேரம் வரும் என்று காத்திருக்கிறானோ? ஒருவேளை நான் சம்மதிக்க மாட்டேன் என்று தயங்குகிறானோ?
    அவள் மனசில் முழுச் சம்மதம் உதயமாகி விட்டது.

    தொடரும்

    Share
  • ஈழம்

    நாகினி

     

    இலங்கை தீவு
    தனி தமிழ் ஈழம் கேட்கும்
    தமிழர் நிறைந்த பாவு..

    இலக்கியத்திலும் தமிழரோடு
    பழங்காலத்தில் ஈழம் தொடர்பு
    அடையாளம் காட்டும் பட்டினப்பாலை
    சொல்லும் ஈழத்து உணவு..

    குருதியில் வரைந்த தமிழர் காவியம்
    முள்ளிவாய்க்கால் படுகொலை
    அரங்கேற்றம் நித்தம் இனவெறியர்களால்
    இலங்கை தமிழர் சாவு..

    தமிழீழ விடுதலைப்புலி தலைமையை
    தலைமேல் ஏற்று புரட்சிப்பாதை விடியலில்
    தனித் தமிழீழம் வேண்டுவதே
    தமிழ்மக்கள் எழுச்சி திணவு..

    ஊர் உறவு சுற்றம் நட்பு இழந்து
    நாடு விட்டு அகதியாய் உழலும்
    ஈழத்தமிழர் உரிமை நாடும் ஈழம் மலர
    வாழ்த்தும் மனதார உலகோர் நாவு!

     

    Share