Blog

  • விளக்கு விருது – 2014

    பொன்.வாசுதேவன்
    ஒருங்கிணைப்பாளர் – விளக்கு அமைப்பு

    ……………………………………………………………………………………………………………………………………

    விளக்கு விருது – 2014

    அமெரிக்கத் தமிழர்களின் கலாச்சார அமைப்பாகிய ‘விளக்கு‘ புதுமைப்பித்தன் நினைவு இலக்கியப் பரிசொன்றை நிறுவி தமிழ்ப் படைப்பிலக்கிலக்கியத்துக்கு சிறப்பான பங்களிப்புகள் செய்துவரும் படைப்பாளிகளுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கிக் கெளரவித்து வருகிறது.

    1995ல் தொடங்கி இதுவரை சி.சு.செல்லப்பா,பிரமிள்,கோவை ஞானி, நகுலன்,ஹெப்சிபா ஜேசுதாசன்,பூமணி,சி.மணி, பேராசிரியர் ராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், வைதீஸ்வரன், விக்ரமாதித்யன், திலீப்குமார், தேவதச்சன், நுஹ்மான், பெருமாள் முருகன், கோணங்கி ஆகிய படைப்பாளிகள் விளக்கு அமைப்பால் கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

    2014ம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் சி.மோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எழுத்தாளர்கள் வைதீஸ்வரன், வெளி ரங்கராஜன், அம்ஷன்குமார் ஆகியோர் கொண்ட நடுவர் குழு விளக்கு விருதுக்கான இத்தேர்வை செய்துள்ளது.

    எழுத்தாளர் சி.மோகன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமான கலை, இலக்கியத்தளத்தில் இயங்கி வருபவர். பதிப்பாளராகவும், பத்திரிகை ஆசிரியராகவும், புனைவு எழுத்தாளராகவும்,மொழிபெயர்ப்பாளராகவும், நுண்கலை விமர்சகராகவும் தமிழ் இலக்கியத்துக்கு சிறப்பான பங்களிப்புகள் செய்துவருபவர். அவருடைய அண்மைக்கால நாவல்களான `விந்தை ஓவியனின் உருவச் சித்திரம்` மற்றும் `ஓநாய் குலச்சின்னம்(மொழிபெயர்ப்பு) ஆகிய படைப்புகள் தமிழ்ச்சூழலில் பெரும் வரவேற்பையும், கவனத்தையும் பெற்றவை.

    ரூ.75000/- க்கான காசோலையும்,பாராட்டுப் பத்திரமும் அடங்கிய இவ்விருது இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் விழாவொன்றில் எழுத்தாளர் சி.மோகனுக்கு வழங்கப்படும்.

    •

    பொன். வாசுதேவன்
    ஒருங்கிணைப்பாளர்
    விளக்கு அமைப்பு

    Share
  • புலியே! புலியே!

    – தேமொழி.

    tiger

    புலியே! புலியே!

    –வில்லியம் ப்ளேக்
    புலியே! புலியே! கவின்மிகு கானக
    இருளில் சுடரென ஒளிரும் புலியே
    தெய்வீக கரமோ விழியோ கொண்டுன்
    அச்சமூட்டும் வடிவைச் செதுக்கியவர்தான் யாரோ?

    அகிலத்தின் ஆழ்தொலைவிலுள்ள எந்த ஆற்றல்
    கனல் உமிழும் கங்காக்கியது உன் கண்களை?
    உன் கண்களின் கனலைக் கண்டும் விரும்பி
    துணிவுடன் உன்னைப் படைத்ததும்தான் ஏனோ?

    எத்தகைய உறுதியான தோள்களும், வித்தையும்
    துடிக்குமுன் இதயத்தை இயங்கவைத்திருக்கும் ?
    உயிர்த்தெழுந்த உன்னைக் கண்டு அஞ்சி ஓடிடாது
    தொடர்ந்துன்னைப் படைத்திட்ட துணிவுதான் என்ன?

    சுத்தியலா, சம்மட்டியா? கனல்கக்கும் கொதிக்கும்
    உலைகலன்தானா? எதுவழங்கியது ஆற்றலுனக்கு?
    கொல்லன்பட்டறையின் எந்தத் திறமை துணிந்தது
    உன்போன்றதொரு ஆபத்தினை உருவாக்கிட ?

    அச்சமூட்டும் ஆபத்தான உன் ஆற்றலினால்
    அகண்டமும் அகிலமும் கலங்கியதைக் கண்டு
    படைத்தவர் உன்னைப் படைத்ததற்கு மகிழ்ந்தாரா?
    ஆட்டையும் படைத்து உன்னையும் படைத்ததேனோ?

    புலியே! புலியே! கவின்மிகு கானக
    இருளில் சுடரென ஒளிரும் புலியே
    தெய்வீக கரமோ விழியோ கொண்டுன் போன்ற
    அபாயத்தைத் தோற்றுவித்தவர் துணிவுதான் என்னே!

    லண்டனில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர் வில்லியம் பிளேக் (1757 – 1827) அவர்கள் எழுதிய “தி டைகர்” என்ற கவிதை.
    மொழிபெயர்ப்பு: தேமொழி

    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

    The Tyger

    –William Blake

    Tyger Tyger, burning bright,
    In the forests of the night;
    What immortal hand or eye,
    Could frame thy fearful symmetry?

    In what distant deeps or skies.
    Burnt the fire of thine eyes?
    On what wings dare he aspire?
    What the hand, dare seize the fire?

    And what shoulder, & what art,
    Could twist the sinews of thy heart?
    And when thy heart began to beat,
    What dread hand? & what dread feet?

    What the hammer? what the chain,
    In what furnace was thy brain?
    What the anvil? what dread grasp,
    Dare its deadly terrors clasp!

    When the stars threw down their spears
    And water’d heaven with their tears:
    Did he smile his work to see?
    Did he who made the Lamb make thee?

    Tyger Tyger burning bright,
    In the forests of the night:
    What immortal hand or eye,
    Dare frame thy fearful symmetry?

     

     

    Share
  • குற்றமும் தண்டனையும்! (புறநானூறு)

    பாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார்.
    பாடப்பட்டோன் : சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி.
    திணை : பாடாண்.
    துறை : இயன்மொழி.

    purananooru

    வழிபடு வோரை வல்லறி தீயே!
    பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
    நீமெய் கண்ட தீமை காணின்,
    ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
    வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
    தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே;
    அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
    வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
    மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
    மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!
    செய்து இரங்காவினைச், சேண்விளங் கும்புகழ்,
    நெய்தருங் கானல் நெடியோய்!
    எய்த வந்தனம்யாம்; ஏத்துகம் பலவே!

    பொருளுரை:

    தம்மை வணங்கி வழிபடுபவர்களை, அவர்தம் முகக்குறிப்பால் மனநிலையை தாமே அறிந்து அவருக்கு உதவுவீராக! பிறர்மீது குற்றம் சொல்பவரின் சொற்களையும் ஆய்ந்தறிந்து தெளிவு கொள்வீராக! உமது மனத்தால் ஆய்ந்தறிந்து அதன் உண்மையுணர்ந்து பின் உறுதியாக அது குற்றம்தான் என்பதைக் கண்டறிந்தால், நீதி நூற்களில் கூறியுள்ளபடி அதற்கான தண்டனையைத் தருவீராக! மனம் திருந்திய அவர் மீண்டும் வந்து உன் பாதத்தில் வீழ உன் முன்னால் நிற்பாரானால் இயல்பாகவே கருணையுள்ளம் கொண்ட நீவிர், அதனினும் அதிகமாக அருள்காட்டி அவருக்களித்த தண்டனையையும் குறைப்பீராக! உம்மை நாடி வரும் விருந்தினர்க்கு அமிழ்தினும் இனிய சுவையுடன் கூடிய, நறுமணமுடைய தாளிப்பு பொருட்களுடன் கூடிய உணவை, குறைவில்லாமல் வழங்கி மற்றவரால் குறை சொல்ல முடியாத வாழ்க்கையையும், உமது மகளிர் உம்மோடு ஊடல் செய்வதன்றி, பகை வேந்தரும் உம்மோடு போர் செய்யத் துணியாத, அதாவது மகளிர்பால் மென்மையும், பகைவர்பால் வன்மையும் காட்டும் இயல்பினையுடைய, இந்திர விற்போன்ற மாலையையுடைய மார்ப! ஒரு தொழிலைச் செய்து பின் பிழைக்கச் செய்தோம் என்று கருதாத செய்கையையும், நெடுங்காலம் புகழுடன் விளங்கும் நெய்தலங்கானலென்னும் ஊரையுடைய நெடியோனே; நின் பல நற்குணங்களையும் புகழவே வந்தோம் யாம்.

    ஜென் கதை பார்க்கலாமா…

    சீத்சூதர் என்னும் ஒரு மகான் அன்றாடம் மாலை நேரத்தில் தம் சீடர்களுக்கு நன்னெறிகள் உபதேசம் செய்வது வழக்கம். ஒரு நாள் திருடன் ஒருவன் கத்தியுடன் வந்தவன், அத்துறவியிடம், “பணத்தைக் கொடு அல்லது உயிரை எடுத்துவிடுவேன்” என்று மிரட்டினான். ஆனால் அம்மகானோ சற்றும் பதட்டமடையாமல், “என்னை தொந்திரவு செய்யாதே.. பணப்பெட்டி அதோ பார் அங்கே இருக்கிறது. சத்தமில்லாமல் எடுத்துக்கொண்டு போ” என்று சொல்லிவிட்டு பாடத்தைத் தொடர்ந்தார். அந்தத் திருடனும் ஆகா வந்த வேலை இவ்வளவு எளிதாக முடிந்துவிட்டதே என்று மகிழ்ச்சியுடன் பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பினான். வெளியில் செல்ல காலை எடுத்து வைத்தவனை அத்துறவியின் குரல் நிறுத்தியது. “ஏனப்பா பணத்தையெடுத்துக் கொண்டாயே, அந்தப் பரிசிற்கு ஒரு நன்றி கூட சொல்லத் தெரியாதா உனக்கு” என்று கேட்டார். அவனும், “அது சரி. ஒரு நன்றிதானே.. இந்தாங்க.. வாங்கிக்கோங்க..” என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியாக ஓடிவிட்டான். அடுத்த முறை எங்கோ திருடப் போனவன் காவலர்களிடம் மாட்டிக்கொண்டான். அதுவரை அவன் திருடிய பணத்திற்கெல்லாம் கணக்கு கொடுக்க வேண்டிவந்தது. அப்போது அவன் நீதிபதியிடம் துறவியிடம் எடுத்த பணத்தையும் கணக்கு சொன்னான். நீதிபதியும் அத்துறவியை வரவழைத்து அப்பணத்திற்கான கணக்கைக் கேட்டார். அப்போது அத்துறவியார் நீதிபதியிடம், “நான் அவருக்கு அப்பணத்தை பரிசாகத்தான் கொடுத்தேன். அதற்காக அவர் நன்றியும் சொல்லிவிட்டார். அதனால் என்னை சேர்க்க வேண்டியதில்லை” என்று சொல்லிச் சென்றுவிட்டார். சில ஆண்டுகள் சிறை வாசத்திற்குப் பிறகு அத்திருடன் நேராக அத்துறவியாரிடம் வந்து சீடனாகச் சேர்ந்தவன், இறுதி வரை நல்ல மனிதனாக வாழ்ந்தான்..

    Share
  • அறிந்துகொள்வோம் – 17 (இராபர்ட் கால்டுவெல்)

    -மேகலா இராமமூர்த்தி

    தமிழின் பெருமையைத் தரணிக்கு உணர்த்தியவர்

    நம் அன்னை பூமியாம் பாரதம் பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற மக்களைத் தன்னகத்தே கொண்டது. வேற்றுமைகளுக்கிடையே காணக்கிடைக்கின்ற இந்த ஒற்றுமைப் பண்பே அதன் சிறப்பாகும் என்பது அறிஞர்கள் துணிபு.

    மகாகவி பாரதியும், ‘செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என இந்தியத்தாயின் இயல்பை விதந்தோதியிருக்கின்றார். எனினும், எல்லா மொழிகளுக்கும் ஒரே மாதிரியான மதிப்பும் செல்வாக்கும் மக்களிடத்து நிலவுகின்றதா என்று சிந்தித்துப் பார்த்தால் ’இல்லை’ என்ற விடையை எளிதில் சொல்லிவிடலாம்.

    தேவ பாஷையான வடமொழியே (சமஸ்கிருதம்) உயர்ந்தது; அதிலிருந்துதான் தமிழ் உள்ளிட்ட பிற திராவிட மொழிகளனைத்தும் தோற்றம் பெற்றன என்ற எண்ணம் முற்காலத்தில் நம் மக்கள் மனத்தில் ஆழ வேரூன்றியிருந்தது. அந்தோ! பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை இந்நிலையே நீடித்தது.

    தாய்மொழியின் தகுதியறியாத தம் புதல்வர்களின் அவலநிலைகண்டு கவலையோடு கண்ணீர் பெருக்கிக்கொண்டிருந்த தமிழன்னையின் துயர்துடைத்து, அவளின் தன்னேரிலாச் சிறப்பை, பிற மொழிகளின் தயவின்றித் தனித்தியங்கும் தகைமையைத் தரணிக்கு உணர்த்தினார் ஓர் மொழியியல் அறிஞர்!

    Robert-Caldwellஅச்சான்றோர் வேறுயாருமல்லர்! 1814-ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்து, ஸ்காட்லாந்தில் கல்வி பயின்று, 1838-ஆம் ஆண்டு (தம்முடைய 24-ஆம் அகவையில்) கிறித்தவச் சங்கத்தொண்டராய் (An Evangelist Missionary) சென்னை மாநகருக்கு வந்து, 53 ஆண்டுகள் தமிழகத்தின் திருநெல்வேலியிலுள்ள ’இடையன்குடி’ எனும் சிற்றூரிலேயே தங்கிச் சமயத்தொண்டோடு அருந்தமிழுக்கும் அளப்பரிய தொண்டாற்றிய இராபர்ட் கால்டுவெல் (Bishop Robert Caldwell) எனும் பெருமகனாரே அவர்.

    பெற்ற மகவைப்போல் தம்மைப் போற்றிப்பேணிய நெல்லைச்சீமையின் வரலாற்றை (A Political and General History of the District of Tinnevelly) வரன்முறையாக முதன்முதலில் எழுதிய பெருமைக்குரியவர் அவரே. பாண்டிய நாட்டின் பழம்பெருமையினைப் பரக்கப் பேசுகின்றது அந்நூல்.

    அந்நூலிலிருந்து சில பகுதிகள் நம் கவனத்திற்கு…

    பாண்டிய நாட்டின் முக்கியத்தொழிலாய் முற்காலத்தில் திகழ்ந்தது முத்துக் குளித்தலே (முத்துச் சலாபம்) ஆகும். நெல்லையைச் செல்லமாய் ஊட்டி வளர்த்த தாயான தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தருகேதான் பாண்டியரின் புகழ்பெற்ற கொற்கைத் துறைமுகம் அன்று அமைந்திருந்தது. உலகறிந்த பெருந்துறைமுகமான கொற்கையிலே நன்முத்துக்கள் மிகுதியாய் விளைந்தன. அழகாய் உருண்டு திரண்டிருந்த அம்முத்துக்களின் அழகில் உள்ளூர் அரிவையர் தொடங்கி உரோமாபுரி அரசிகள்வரை மனம் மயங்கினர். புலவர்பெருமக்களும் ‘பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து’ என்று அதன் சிறப்பைப் போற்றினர். இத்துணைப் புகழ்வாய்ந்த கொற்கைத் துறைமுகம் பின்னாளில் தூர்ந்துபோனபின் ’காயல்’ எனும் கடற்கரையூர் சிறந்த துறைமுக நகரமாயிற்று. அத்துறைமுகத்திற்கு அரேபிய, சீனக் கப்பல்கள் வந்துசென்றிருக்கின்றன என்று குறிப்பிடும் கால்டுவெல், அத்துறைமுகத்தில் பரதவர் முத்துக்குளிப்பதையும் விவரமாகத் தன் நூலில் பதிவுசெய்திருக்கின்றார் என அறிகின்றோம்.

    அதுபோல், காவிரியாறு கடலோடு கைகுலுக்கும் இடத்தில் அமைந்திருந்த செழிப்பான துறைமுக நகரம் காவிரிப்பூம்பட்டினம். அத்துறைமுகத்தின் வழியாக அன்று வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதியாயிற்று. அரிசி என்று நாம் தமிழில் வழங்குவதையே கிரேக்க மொழியில் ‘அருஸா’ எனச் சிதைத்து வழங்குகின்றனர். இதன் அடியாகத் தோன்றியதே ஆங்கிலச் சொல்லான ’ரைஸ்’ என்பதையெல்லாம் முதலில் நமக்கு ஆய்ந்துசொன்னவர் கால்டுவெல் ஆவார்.

    மயிற்தோகையும் அன்று தமிழகத்திலிருந்து பிறநாடுகளுக்கு ஏற்றுமதி ஆயிற்று; கூடவே ’தோகை’ என்ற சொல்லும்! ஹீப்ரு மொழியிலுள்ள பைபிளில் காணப்படும் ’துகி’ என்ற சொல் நம் தமிழ்ச்சொல்லான ’தோகை’யின் திரிபே என்று விளக்கியுள்ளார் கால்டுவெல். அவ்வாறே பிறமொழிகளில் சிதைந்து வழங்கும் பல தமிழ்ச்சொற்களை நம்மவர்க்கு அடையாளம் காட்டினார் அவர்.

    கால்டுவெல் பன்மொழிகள் கற்ற பேரறிஞர். மேனாட்டுச் செம்மொழிகளான கிரீக், இலத்தீன், ஹீப்ரு ஆகியவற்றை இளம் வயதிலேயே கற்றிருந்த அவர், இந்தியா வந்ததும் ஆரியத்தையும், தென்மொழியான தமிழையும் ஆர்வத்தோடு பயின்றார். ஜெர்மானிய அறிஞர்கள் இந்திய மொழிகள் குறித்து எழுதியிருக்கும் ஆராய்ச்சி நூல்களைக் கற்கவேண்டும் எனும் வேட்கை உந்தித்தள்ள, ஜெர்மானிய மொழியையும் அவர் கற்றுத்தேர்ந்தார்.

    மொழிநூல் ஆராய்ச்சி என்பது இயல்பிலேயே அவருக்கு விருப்பமான ஒன்று. ஆதலால் தென்னிந்திய மொழிகள் குறித்து ஆராயத் தலைப்பட்டார். அவ்வாராய்ச்சியின் விளைவே இன்று நமக்குக் கிடைத்திருக்கும் ஒப்பற்ற ஒப்பிலக்கண நூலான ’திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages) எனும் அரிய புதையல்!

    ஆரிய மொழிகளின் இலக்கணம் வேறு; திராவிட மொழிகளின் இலக்கணம் வேறு என்பதைத் தம் ஒப்பிலக்கணத்தில் தெள்ளத்தெளிவாய் விளக்கியுள்ள கால்டுவெல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளுக்கும் அடிப்படை இலக்கணம் ஒன்றே; ’இவையனைத்தினும் மூத்தமொழி தமிழே’ என்பதையெல்லாம் தக்க சான்றுகளுடன் இந்நூலில் நிறுவியுள்ளார். தென்னிந்திய மொழிகளைக் குறிக்கும் பொதுச்சொல்லாக ’திராவிட மொழி’ என்ற பதத்தை அவர் உருவாக்கினார். அன்றுமுதல் ’திராவிடம்’ என்ற சொல் (It is a Sanskrit word for ‘southern’) மொழிநூல் உலகில் நிலைபேறடைந்துவிட்டது. (இன்று அந்தச்சொல் படும்பாட்டை நல்லவேளை கால்டுவெல் பார்க்காது போய்விட்டார்!)

    தமிழின் தற்சார்புத் தன்மையை விளக்க விரும்பிய கால்டுவெல், சங்க காலத்தில் தமிழ்நூல்களில் ஆரியச் சொற்களின் கலப்பு அருகியிருப்பதையும் பிற்காலத்தில் அச்சொற்களின் கலப்பு மிகுந்திருப்பதையும் சுட்டிக்காட்டி, ”எல்லாக் கருத்துக்களையும் வெளியிட ஏற்ற சொற்கள் தமிழிலேயே நிறைந்திருந்தும் அவற்றைப் புறந்தள்ளிவிட்டு ஆரியச் சொற்களையே நம் தமிழ்மக்கள் தேடிப் பயன்படுத்தியதால்தான் காலப்போக்கில் பல தமிழ்ச்சொற்கள் இறந்தொழிந்தன” என்று குறிப்பிடுகின்றார்.

    இவைபோல் இன்னும்பல ஆழமான கருத்துக்களைத் தம் ஒப்பிலக்கண நூலில் ஆய்ந்து வெளியிட்டிருக்கும் கால்டுவெல், திராவிட மொழிகளுக்குப் புத்துயிரூட்டிய தீரர்; திராவிட மொழிகளின் தொன்மையை, அவற்றின் மாண்புகளை மேனாட்டார்க்கும் செப்பமாய் எடுத்துக்காட்டிய செம்மல்
    எனில் சற்றும் மிகையில்லை.

    அடிப்படை வசதிகள்கூட அற்ற, அனல்பறக்கும் வறள்நிலமான ‘இடையன்குடி’ எனும் கிராமத்தில் ஓர் கூரைவீட்டில் வாழ்ந்தவண்ணம் பெரிய ஆராய்ச்சிகளைச் செய்து, அரிய உண்மைகளை கால்டுவெல் வெளியிட்டிருப்பது வியக்கற்பாலது. அத்தோடு அங்கிருந்த விளிம்புநிலை மக்களுக்கு எழுத்தறிவித்த இறைவனாகவும் அவர் திகழ்ந்திருக்கின்றார். மேனாட்டாரான அவர், மாமிசம் புசிக்காது காய்கனிகளையே உணவாக உண்டு எளிமையாய் வாழ்ந்திருக்கின்றார்.

    தமிழகத்திலிருந்தபோது, மொழியாராய்ச்சியோடு அகழ்வாராய்ச்சியிலும் ஈடுபட்ட கால்டுவெல், கொற்கைக்கு அருகில் புதையண்ட கட்டடங்களின் அடிப்பகுதி, பாண்டிய நாட்டு மீன்சின்னம் பொறித்த நாணயங்கள், உலோகக் கலயங்கள் போன்ற பல தொல்பொருள்களை வெளிக்கொணர்ந்திருக்கின்றார் என்று கூறப்படுகின்றது.

    அயலகத்தில் பிறந்தாலும் தம் ஆர்வத்தின் காரணமாக அரிதின் முயன்று தமிழ் பயின்று, ’தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழியே; அஃது ஆரியத்தைச் சார்ந்ததன்று’ என்பதைத் தம் மொழிநூல் ஆராய்ச்சிகளின் வாயிலாய் அறிந்து அதனை வையத்து மாந்தர்க்கும் ஐயமற விளக்கிய கால்டுவெல்லின் அருந்தொண்டு தமிழ்கூறு நல்லுலகில் குன்றிலிட்ட விளக்காய் என்றும் சுடர்விட்டு ஒளிரும்.

    ***

    கட்டுரைக்குத் துணைநின்றவை:

    https://en.wikipedia.org/wiki/Robert_Caldwell

    http://nakkeran.com/Drcaldwel.htm

    http://www.missionariesbiography.com/May/07.robert_caldwell.html

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 14

    – புலவர் இரா. இராமமூர்த்தி.

    ஒருவனுக்கு அறிவு இயல்பாகவே இருக்கும். அதனைத் திருவள்ளுவர் உண்மையறிவு என்கிறார்!

    “நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை அறிவே மிகும்” (373)

    என்ற திருக்குறள் அதனைக் குறிக்கிறது! உயிர் மரபு வழிப்பட்ட அறிவினைப் பிறவிதோறும் தொடர்ந்து பெறும். ஆனால் கல்வி கேள்விகளால் ஒரு மனிதன் பெறுகின்ற அறிவு அவனை இம்மையில் உயர்த்தும். மறுமைக்கும் உதவும். இந்த அறிவைப் பற்றித் திருவள்ளுவர், கல்வி, கல்லாமை , கேள்வி ஆகிய மூன்று அதிகாரங்களில் மிகவும் செப்பமாகக் கூறுகிறார்!

    அவர் கல்வி என்ற அதிகாரத்தின் முதற் குறட்பாவாக,

    ”கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக ”(391)

    என்ற பாடலைக் கூறுகிறார். இந்தக் குறட்பாவுக்கு உரை வரைந்தோர் அனைவரும் மிகச்சிறப்பாகவே உரையெழுதியுள்ளனர். அவற்றுடன் இங்கு நான் அளிக்கும் புதிய பொருளும் அன்பர்களுக்குச் சுவையுடையதாகவே அமையும் என நம்புகிறேன். திருவள்ளுவர் முதலில் ‘கற்க’ என்று விருப்பத்துடன் கேட்டுக் கொள்கிறார்! அவர் கற்க என்று சொல்வது யாரை? அக்காலத்தில் அரசனும், அமைச்சனும், அந்தணனும் கல்வி கற்பார்கள்! அவர்களையே கற்க என்று வள்ளுவர் கூறினார் ஆனால், இக்காலத்தில் எல்லாருமே அரசுபுரியும் தகுதி பெறலாம்; அமைச்சுப்பணியைப் புரியலாம்; அந்தணராக வேதம் ஓதலாம்; அனைத்துத் தொழில்களையும் வாணிகத்தினையும் கற்றறியலாம்! ஆகவே கல்வி எல்லாருக்கும் உரியது என்று இன்று ஆகிவிட்டது.

    ஆகவே ‘கற்க’ என்பது இப்போது கட்டாயம் ஆக்கப் பெற்றது அவ்வகையில் எந்த எதிர்வினாவுமின்றிக் கற்க என்கிறார் வள்ளுவர். அதாவது நம் ஆரம்பக் கல்வியில் ஆசிரியர் சொல்லவதை அப்படியே கேட்டுக் கற்கிறோம். ஆகவே கற்க என்பதன் பொருள் ஆரம்பக் கல்வியைக் குறிக்கிறது!

    அடுத்துக் ‘கசடறக் கற்’ என்கிறார்! இதற்கு இருவகையான பொருள் உண்டு. கற்கும் கல்வியை ஐயம் திரிபின்றித் தெளிவாகக் கற்க என்பதொன்று; கல்வியால் நாம் உள்ளத்தின் மாசுகள் நீங்கும்படிக் கற்க என்பது மற்றொன்று. இது உயர்பள்ளிக் கல்வியில் சாத்தியமாகும். ஆகவே கசடற என்பது, உயர்நிலைப் பள்ளிக் கல்வியைக் குறிக்கும்; இக்கல்வியின் தொடர்ச்சி மேல்நிலை, மற்றும் கல்லூரிக் கல்வி. ஆதலால் கற்பவை கற்க என்ற வள்ளுவர் விழைவு, நம் அறிவுக்குத் தேவையான, நமக்கு ஏற்றக் கல்வி பகுதியைத் தேர்ந்தெடுத்துக் கற்கும் மேல்நிலை, மற்றும் கல்லூரிக் கல்வியைக் குறிக்கிறது! அடுத்து ‘கற்றபின் நிற்க அதற்குத் த’ என்பது பட்டமேற்படிப்பு , மற்றும் வாழ்க்கைப் பணி குறித்தது.

    இவ்வகையில் கற்க என்பது தொடக்கக் கல்வியையும், கசடற என்பது உயர்பள்ளிக் கல்வியையும், கற்பவை என்பது மேல்நிலை, மற்றும் கல்லூரிக் கல்வியையும், கற்றபின் நிற்க அதற்குத் தக என்பது பட்டமேற்படிப்பு, மற்றும் வாழ்க்கையையும் தொடர்ச்சியாகக் குறிக்கிறது! இந்தப் பொருள் பதிய கல்விநிலைக்குப் பொருத்தமாக உள்ளதல்லவா?

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 47 (2)

    கார்ல் மார்க்ஸ் அருங்காட்சியகம் (2), ட்ரியா, ஜெர்மனி

    சுபாஷிணி

    ​கார்ல் மார்க்ஸ் பிறந்த ஊரான ட்ரியா ​மிக அழகிய ஒரு நகரம். மோஸல் நதிக்கரையில் அமைந்திருக்கும் நகரங்களில் ஒன்று இது. இன்றும் இந்த நகரில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ரோமானியப் பேரரசின் கட்டிடங்களின் எச்சங்களைக் காணலாம். போர்ட்டோ நியாக்ரா, 2ம் நூற்றாண்டின் மிகப் பழமையான கேத்திட்ரல், ரோமானிய மாவீரர்களான க்ளேடியேட்டர்கள் போர் செய்யும் அம்ஃபிதியேட்டர் , ரோமானிய அரண்மனையில் பாதாள நீச்சல் குளம் ஆகியவற்றை இவ்வகை உதாரணங்களாகக் கூறலாம். இத்தகைய வரலாற்றுச் சிறப்புக்களோடு அரசியல் தனிச்சிறப்பையும் இந்த நகர் பெறுவதற்குக் கார்ல் மார்க்ஸ் ஒருவர் போதாதா?

    asub
    ​

    கார்ல் மார்க்ஸ் இளம் வயதிலேயே லத்தீன், க்ரீக், டோய்ச், ப்ரென்சு ஆகிய மொழியில் புலமை பெற்றிருந்தார். இளமைக் கல்வி முடிந்து பல்கலைக்கழகக் கல்வியை முதலில் அவர் தொடக்கியது போன் (Bonn) பல்கலைக்கழகத்தில் தான். ஆனால் ஓராண்டு மட்டுமே அவரது படிப்பு அங்கு அமைந்தது. பின்னர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் இவர் தன் கல்வியைத் தொடர்ந்தார். பெர்லினில் படிக்கும் காலத்தில் கோடை விடுமுறைக்கு வந்திருந்த ஒரு நாளில் தான் தன் வாழ்க்கை துணையான ஜென்னியை இவர் சந்திக்க நேர்ந்தது.

    ஜென்னி பணக்கார குடும்பத்துப் பெண் என்பதோடு அவர் தந்தை அரசாங்கத்தில் முக்கியப்பதவி வகித்தவர் என்பதும் அவரது குடும்பச் செழுமையைச் சொல்லும். ஆனால் பிற்காலத்தில் திருமணத்திற்குப் பின்னர் கார்ல் மார்க்ஸுடன் அவர் இணைந்திருந்த காலகட்டத்தில், அதிலும் குறிப்பாக இங்கிலாந்தில் இருந்த காலத்தில் அவர்களது குடும்பத்திற்கு ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனைகள் எல்லாவற்றையும் பொறுமையுடன் சமாளித்து, வறுமையில் வாடினாலும் கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்கள் எந்த வகையிலும் பலம் இழக்கா வண்ணம் அவருடன் உற்ற துணையாக இருந்தவர் என்ற பெருமை ஜென்னிக்கு உண்டு.

    மார்க்ஸூக்கும் ஜென்னிக்கும் பிறந்த குழந்தைகளில் இறந்த குழந்தைகள் போக எஞ்சியவர்கள் 4 பேர். அவர்களில் 3 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் அடங்குவர். இவர்கள் திருமணம் முடித்து குழந்தையும் குடும்பமுமாக ஆகிப்போயினர். ஆனால் வாழ்க்கையின் பிற்பகுதியில் பெரும்பாலும் வருமையிலேயே கழித்த ஜென்னி உடல் நோய் முற்றி அதற்கு சரியான மருத்துவம் செய்வதற்கு வசதியில்லாத நிலையில் 1881ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி இவ்வுலகை விட்டு உயிர் நீத்தார். தனது வாழ்வின் திருமணத்திற்குப் பிந்தைய எல்லா கால நிலையிலும் ஜென்னியுடனேயே கழித்து வந்த மார்க்ஸுக்கு இது ஒரு பேரிழப்பு. ஜென்னி இறந்த போதே கார்ல் மார்க்ஸின் சக்தியும் பிரிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதற்குப் பின்னர் கார்ல் மார்க்ஸ் வாழ்ந்தது அடுத்த 15 மாதங்கள் தான். இடையில் இவரது மூத்த பெண் மரணமும் நிகழ அதுவும் மார்க்ஸின் உடல் நிலையையும் மன நிலையையும் மிகப் பாதித்தது. இந்தத் துக்கங்களுடன் 1883ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி கார்ல் மார்க்ஸின் உயிர் உடலிலிருந்து பிரிந்தது. அதே மாதம் 17ம் தேதி லண்டன் ஹைகேட் மயானத்தில் அவரது பூத உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    ​asub1

    ​உலகில்​ தோன்றிய, சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்த முக்கிய மனிதர்களில் ஒருவர் கார்ல் மார்க்ஸ் என்பது மிககையற்ற கூற்று. புதிய கருத்துக்களை உருவாக்குவதிலும் தத்துவங்களை அலசுவதிலும் நூல்களை வாசிப்பதிலும் அவரது நாட்கள் பல கழிந்தன. அவரது அறை முழுவதுமே புத்தகங்களின் குவியலும், ஒழுங்குபடுத்தப்படா எழுத்துக்கள் அடங்கிய காகிதங்களும் நிரம்பியிருக்குமாம். தன் வாழ்க்கையின் மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு தன் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி எப்போதும் எவ்வேளையும் முதலாளித்துவத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் சமுதாய அமைப்பினால் உருவாக்கப்பட்டிருக்கும் அரசுகளின் சித்தாந்தங்களை மாற்றுவதற்கான வழிமுறைகளைத் தேடுவதிலும் அவற்றை எங்கனம் செயல்படுத்தி தொழிலாளர்களுக்கு உரிய வகையில் அவர்கள் உழைப்பு மதிப்பைப் பெறும் நிலையைப் பெற்றுக் கொடுப்பது என்பதிலுமாகவே அவர் சிந்தனை இருந்தது.

    கார்ல் மார்க்ஸ் தான் வாழ்ந்த காலத்தில் அரசாலும் சரி அரசாங்க பெரு மனிதர்களாலும் சரி வெறுக்கப்பட்டார் என்று தான் சொல்ல வேண்டும். நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கு இவரது சித்தாந்தங்கள் கேடு விளைவிக்கும் என்று சொல்லி ஜெர்மனி, பிரான்சு, பெல்ஜியம் என இந்த நாடுகள் எல்லாம் அவரை நாட்டிலிருந்து துரத்தின. இதனால் தன் இறுதிக் காலத்தில் இங்கிலாந்தில் தான் இவரது வாழ்க்கை அமைந்தது.

    கார்ல் மார்க்ஸின் சித்தாந்தத்தின் நூல் வடிவம் Das Kapital. டோய்ச் மொழியில் இதனை, “அரசியல் பொருளாதாரத்தின் மீது வைக்கப்படும் விமர்சனம்” எனக் கொள்ளலாம்.

    இந்த நூல் 1967ம் ஆண்டில் அச்சாகி லண்டனிலிருந்து வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளிவந்த காலத்தில் கார்ல் மார்க்ஸ் அனுபவித்து வந்த கஷ்டங்களுக்கு ஒரு அளவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏகப்பட்ட கடன். தினமும் கடன் கேட்டு வீட்டு வாசலில் வந்து நிற்கும் கடன்காரர்களின் வசைமொழிகளுக்கிடையேயும், வறுமையில் வாடி பசியால் நலிந்து வாடிக்கொண்டிருந்த தன் மனைவி குழந்தைகளின் உடல் நிலை நலிவினைக் கண்ணுற்றவாறே தான் தனது சிந்தனையின் கருவூலமான இந்த நூலை அவர் படைத்தார். இத்தகைய இன்னல்களுக்கிடையில், ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி 1867 ஆண்டு இந்த புரட்சி சிந்தனை நிறைந்த நூல் வெளிவந்தது என்பதை நினைக்கும் போது மனம் சிலிர்க்கின்றது.

    கார்ல் மார்க்ஸின் சித்தாந்தம் ஏற்படுத்திய சிந்தனை அலை மிகப் பெரிது. அது தொழிலாள வர்க்கத்தினிடையே பெறும் வரவேற்பை பெற்ற கருத்தாக புரட்சியாக வெடித்தது. ஜெர்மனி, பிரான்சு என்று மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றில் மிக ஆழமாக மார்க்ஸின் சித்தாந்தங்கள் பரவ ஆரம்பித்தன என்றாலும் முதலாளி வர்க்கத்தினரின் எதிர்ப்பை எளிதில் பெற்றன என்பதும் உண்மையே.

    ​asub2

    இந்த கார்ல்ஸ் மார்க்ஸ் அருங்காட்சிகம் மிக நன்கு சீரமைக்கப்பட்டு ஒவ்வொரு தளத்திலும் கார்ல் மார்க்ஸ் தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இளமை காலத்துத் தகவல்கள் முதல் பகுதியில் அமைக்கப்படிருக்கின்றன. இரண்டாம் தளத்தில் ஜென்னியைப் பற்றிய விபரங்கள், குழந்தைகளின் புகைப்படம், அவர்கள் பற்றிய தகவல்கள் என உள்ளன. அதே தளத்தில் 19ம் நூற்றாண்டு தொழிலாளர் புரட்சி, கார்ல் மார்க்ஸ் பணியாற்றிய பத்திரிக்கை செய்திகள், அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் ஆகியன புகைப்படங்களோடு வழங்கப்பட்டுள்ளன. கார்ல் மார்க்ஸின் கையெழுத்துப் பதிவுகள், ஜென்னியின் கையெழுத்துப் பதிவாக சில கடிதங்கள், மார்க்ஸின் சில கடிதங்கள் ஆகியனவும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

    ​asuba3

    அதற்கடுத்த தளத்தில் மார்க்ஸிய சிந்தனை ஜெர்மனியில் மட்டுமன்றி ஏனைய நாடுகளில் உருவாக்கிய தாக்கத்தை விளக்கும் அரிய வரலாற்றுச் செய்திகள் நிறைந்திருக்கின்றன. உலக வரலாற்றில் ஜெர்மனியை நினைப்பவர்களுக்கு நாஸி சித்தாந்தம் என்பது தான் உடனுக்குடன் நினைவுக்கு வரும். ஆனால் கார்ல் மார்க்ஸ் என்ற சிறந்த அறிஞனைத் தந்த நாடும் இதே ஜெர்மனிதான் என்பதை உலகம் மறந்து விடக் கூடாது.

    கார்ல் மார்க்ஸ் என்ற மனிதரின் வாழ்க்கையின் நோக்கமே das Kapital நூலை உருவாக்குவதற்காகத்தானோ என்ற சிந்தனை தோன்றுவதில் மறுப்பதற்கேதுமில்லை. ஆனால் இந்த நூலை வடிப்பதற்கு வாழ்நாளில் அவர் அனுபவித்த இன்னல்களை நோக்கும் போது, இவை எல்லோருக்கும் நல்ல கற்றல் அனுபவமாக நிச்சயம் அமையும். கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது சித்தாந்தங்களின் தொகுப்பான das Kapital நூலையும் இளைஞர் சமூகம் ஒதுக்காமல் கட்டாயமாகக் கற்க வேண்டும்.

    ​asuba4

    அடுத்த பதிவில் மேலும் ஒரு அருங்காட்சியகத்தை அறிமுகப்படுத்துகின்றேன். அதற்காக நாம் மலேசியா செல்லலாம். காத்திருங்கள்!!

    Share
  • அவன்,அது,ஆத்மா – 30

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 30

    ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி

    amv
    அவன் பள்ளி இறுதி ஆண்டில் 58 சதவிகிதம் மதிப்பெண்கள் வாங்கி பாஸ் செய்தான். அது அவனது வீட்டில் உள்ளவர்களுக்கு வருத்தமாக இருந்தாலும் அவன் அதுபற்றி கவலைப் படவே இல்லை. அவனுக்கு எழுத்தாளனாக வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. பாடங்களை மனனம் செய்து தேர்வில் எழுதுவது என்பது அவனுக்குப் பிடிக்க வில்லை. ஆனால் அப்படித்தான் எழுத வேண்டும், அதனால் நிறைய மதிப்பெண்கள் கிடைக்கும் என்பது எழுதப் படாத விதியாக இருக்கிறது. அவன் இருக்கும் தெருவில் ஒரு மாணவன் காலையில் தன் வீட்டு வாசலில் உட்கார்ந்து தன் பாடங்களை சத்தமாகப் படிப்பதை அவன் கேட்டிருக்கிறான். எப்படித் தெரியுமா ? மகாகவி பாரதியார் “கி” புள்ளி “பி” புள்ளி 1882ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினொன்றாம் தேதி பிறந்தார். அதாவது கிறிஸ்து பிறந்த பின் என்பதைத்தான் அப்படிப் புள்ளி விபரமாகப் படித்து மனப்பாடம் செய்வான். அதுபோல அவனால் படிக்க முடிய வில்லை. ஆசிரியர் பாடம் நடத்தும் பொழுது அவன் அந்தக் காலத்திற்கே சென்று விடுவான். ரசிப்பான். நண்பர்களோடு அதன் சுவையைச் சொல்லி மகிழ்வான். வீட்டில் இரவிலும், பகலிலும் பாடங்களைப் மனப்பாடம் செய்யாமல், படித்துக் கொண்டே போவான். அதன் அர்த்தத்தை மனதில் வாங்கிக் கொள்வான். சுயமாக எழுதிப் பார்ப்பான். அந்தப் பழக்கத்தில் தேர்வும் எழுதுவான். அது பாடப்புத்தகத்தின் அச்சாக இருக்காது. அதன் கருத்தை உள்வாங்கி சுயமாக எழுதுவான். அப்படி எழுதுவதை ஊக்கப் படுத்தியவர், அவனுக்குத் தமிழாசிரியராக இருந்த கே.ஏ.நீலகண்ட ஐயர். “விஸ்வநாதா …நிறைய புத்தகங்கள் படி..தினமும் நூலகத்திற்குச் சென்று உனக்கு விருப்பமான புத்தகங்களைப் படித்துப் பழகு” என்பார். அவனுக்கு அது பிடித்திருந்தது. அப்பொழுதெல்லாம் அவன் விரும்பிப் படிப்பது தினமணிச் சுடரில் வரும் கட்டுரைகள், அதில் வரும் தலையங்கம், சினிமாச் செய்திகள், ஆனந்த விகடனில் வரும் சிறுகதைகள், தாமரைப் பத்திரிகையில் வரும் கதைகள் எல்லாம்தான். இந்து பத்திரிகையில் வரும் (Letters to the Editor) வாசகர்களின் கடிதங்களைப் படிப்பதிலும் ஆர்வம் உண்டு.

    அப்பொழுதெல்லாம் ஆழ்வார்குறிச்சியில் இருக்கும் “பரமகல்யாணி கல்லூரி”யில் படிப்பதுதான் கௌரவமாகக் கருதுவார்கள். அத்தனை கவனிப்பு அந்தக் கல்லூரியில் உண்டு. ஆனால் எளிதில் அதில் இடம் கிடைக்காது. நல்ல மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களுக்குத்தான் இடம் எளிதாகக் கிடைக்கும். மற்றவர்களுக்கு அவர்களது விதியிருந்தால் கிடைக்கும். அவனுக்கு அப்படி ஒரு விதி இருந்தது. அவன் வாங்கிய 58 சதவிகிதம் மதிப்பெண்களை வைத்துக் கொண்டு அந்தக் கல்லூரியில் எப்படிச் சேர முடிந்தது. அதற்குக் காரணம் அந்தக் கல்லூரியில் உடற்பயிற்சியாளராக வேலை செய்து வந்த V. சங்கரராமன் அவர்கள்தான். அவனுக்கு அப்பா அவருக்கு மாமா முறை. அவனுக்கு அப்பா V. சங்கரராமன் அவர்களிடம் அவன் P .U .C. யில் சேர்த்து விடக் கேட்டார். குறைந்த மதிப்பெண்களே அவன் பெற்றிருந்தாலும் அவருக்கு அவனுக்கு அப்பாவின் மீதும், அவரது குடும்பத்தின் மீதும் இருந்த மதிப்பினால் அவனுக்கு ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியில் P .U .C. வகுப்பு சேர்த்து விட்டார். V. சங்கரராமன் அவனிடம்,” இதோ பாரு விஸ்வநாதா…அன்னன்னிக்கு நடக்கும் பாடங்களை அப்பொழுதே படி. அனாவசியமாக ஊரைச் சுத்தாதே. உங்கப்பா ஒன்ன கஷ்டப் பட்டு படிக்க வைக்கறார்…அத மறக்காதே” என்று மிகுந்த அன்போடு அவனிடம் சொன்னார்.

    பள்ளியின் டிராயர், சட்டையில் இருந்து கல்லூரிக்காக வேட்டியும், சட்டையுமாக மாறினான். வேட்டியை விட “பேண்ட்டு” விலை அதிகம். அப்பொழுது இருந்த குடும்ப நிலையில் அது ஒரு ஆடம்பரச் செலவுதான். காலையில் கல்லூரி பஸ்ஸில்தான் கல்லூரிக்குச் செல்வான். அனேகமாக அவன் சன்னலோரமாகத்தான் அமருவான். கல்லிடைக்குறிச்சியில் இருந்து ஆழ்வார்குறிச்சி வரை சாலையின் இரு புறமும் பசுமை தாண்டவமாடும். காற்று ஆளையே தள்ளி விடும். அத்தனை வேகம் அதற்கு. அம்பாசமுத்திரம் ரயில்வே கிராசிங் கடந்து மன்னார்கோவில் வழியாகச் செல்லும் பொழுது அவன் அங்கு தெரியும் பாபநாச மலையின் அழகில் சொக்கிப் போவான். ஆம்பூர் ஏற்றம் கழிந்து அதற்கும் , ஆழ்வார்குறிச்சிக்கும் இடையில் பாயும் கடனாநதி பாலத்தைக் கடந்து வரும் இறக்கத்தில் இருந்து ஆழ்வார்குறிச்சி நுழைவில் உள்ள அழகான குளம்வரை இரண்டு புறமும் சாலையில் தென்னை மரங்கள் வரிசையாக இருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். நிறைய திரைப்படங்களில் இந்த இடம் வந்திருக்கிறது. இந்தப் பயணத்தை ரசிப்பதற்கே அவனும் அவனுக்கு நண்பன் வீரமணியும் வாடகை சைக்கிளில் கல்லூரிக்கு வந்திருக்கிறார்கள். கல்லூரி பஸ் சரியாக எட்டு மணிக்கு ஊரிலிருந்து புறப்பட்டுவிடும். பஸ்ஸைத் தவற விட்ட நாட்களில் சைக்கிள் பயணம்தான். ஒரு நாள் சைக்கிள் வாடகை ரூபாய் ஒன்று மட்டுமே.

    அந்தக் கல்லூரி மிக அழகாக இருக்கும். காற்றோட்டமான சூழ்நிலை. படிக்கத்தூண்டும் அமைப்பு. அவனது வகுப்பறைகள் நல்ல காற்றோட்டமாக இருந்தது. அவன் சன்னல் வழியாகத் தெரியும் சிவசைலம் மலையழகை ரசிப்பான். கவிதை எழுதி நண்பகளிடம் காட்டுவான். முதல் நாள் வகுப்பில் கணக்கு ஆசிரியர் ஜானகிராமன் வந்தார். அவர் கணக்கில் நிபுணர். நன்றாகச் சொல்லித் தருவார். வேடிக்கையாகப் பேசுவார். முதல் பெஞ்சில் அமர்திருக்கும் மாணவர்களிடம் அவர்களின் ஊர் , பெயர் எல்லாம் கேட்பார். கொஞ்சம் அப்பாவியாக இருந்தால் அவனைப் பார்த்து,” என்னடா அம்பி…பயந்துட்டயா…முகமே பேய் அரஞ்சமாதிரி இருக்கே…போய் வேப்பலை அடிச்சுண்டு வா..” என்று சொல்ல வகுப்பில் அனைவருமே சிரித்து விடுவார்கள். அவனுக்கு தமிழ்ப் பாடத்திற்கு, பேராசிரியர் லக்ஷ்மிநாராயணன் இருந்தார். அவரை அனைவருமே தமிழ் ஐயா என்றுதான் மரியாதையாக அழைப்பார்கள். அவரது தமிழ் உச்சரிப்பே அழகாக இருக்கும். மாணவர்கள் சுயமாக எழுதவும், தைரியமாகப் பேசவும் வேண்டும் என்று ஊக்கப் படுத்துவார். அவரே நிறைய பட்டி மன்றங்களில் பேசவும் செய்வார். அவனே அதைக் கேட்டு ரசித்திருக்கிறான். நா.பார்த்தசாரதியின் “பிறந்த மண்” நாவல் பாடமாக இருந்தது. அதைப் பாடமாக நடத்தியவர் ஆழ்வான் சார். நகைச்சுவையோடு பாடம் நடத்துவார். பிறந்த மண் நாவலின் ஒவ்வொரு கதாப் பாத்திரத்தையும் நடித்துக் காட்டி கதையின் போக்கை விளக்குவார். அதனாலேயே பிறந்த மண் நாவலை மீண்டும் மீண்டும் அவன் படித்தான். நா.பா.வின் அந்த நடைக்காகவே அவரது மற்ற படைப்புகளைத் தேடித் தேடிப் படித்தான். பாடத்தில் மார்க் வாங்க வேண்டும் என்று படிக்காமல், அது போன்று, ஏன் அதைவிட இன்னும் சிறப்பாகத் தானும் எழுத வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவன் படித்தான். அவனது மனதுக்கு ஏற்றாற்போல் ஆங்கிலப் பாடத்தின் கதைப் பகுதிக்கு ஆர்.சங்கரன் என்பவர் ஆசிரியராக இருந்தார். ஆர்.கே.நாராயணனின் “சுவாமி அண்ட் பிரண்ட்ஸ்” நாவலை மிக சுவாரஸ்யமாக அவர் நடத்தினார். அவனுக்கு “சுவாமி அண்ட் பிரண்ட்ஸ்” நாவல் பிடிக்கக் காரணமே அதில் வரும் சுவாமியின் சுட்டித் தனங்கள்தான். ஆர்.கே.நாராயணனின் அற்புதப் படைப்பு அது.

    ஸ்ரீ சிவசைலபதி

    amv1

    கல்லூரிக்கு மிக அருகில் சிவசைலம் என்ற மலையடிவாரத்தில் மிக அழகான சிவன் கோவில் இருக்கிறது. அது கடனாநதிக் கரையில் அமைந்திருக்கிறது. அவன் அந்தக் கோவிலுக்கு நண்பர்களுடன் அடிக்கடி சென்று வருவான். அக்கோவிலின் மூலவரான ஸ்ரீ சிவசைலபதியையும், ஸ்ரீ பரமகல்யாணி அம்மனையும் விட மிகப்பிரசித்தம் அங்குள்ள நந்திகேஸ்வரர். பிரதோஷ வழிபாடும், வருடாந்திரத் தேரோட்டத் திருவிழாவும் நன்றாக இருக்கும். இங்கிருக்கும் ஸ்ரீ பரமகல்யாணி அம்மனை பக்கத்து ஆம்பூரில் இருக்கும் கிராமத்திற்கு அழைத்து வந்து மீண்டும் சிவசைலத்திற்கே கொண்டுவிடும் திருவிழாவுக்கு அந்த கிராமத்து மக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு அருள் பெறுவார்கள். அதனால் ஆம்பூரை அம்மனின் பிறந்த வீடாகக் கருதுகின்றனர் இங்கு வாழும் மக்கள்.

    கல்லூரியில் மதியம் உணவு வேளை முடிந்தவுடன் அவன் அந்தக் கல்லூரி வளாகத்திலும், அதன் வெளிப்புறங்களிலும் நடந்தபடி அதன் அழகை ரசிப்பான். அப்படி ஒரு நாள் அவன் நடந்து கொண்டிருக்கும் பொழுது, அந்த வளாகத்தின் ஒரு ஓரத்தில் நாற்காலி போட்டு ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவர் அவனை அழைத்து,” நீ ஹாஸ்டல் பையனா, வெளிலேந்து வரையா” என்றார். “கல்லிடைக்குறிச்சி” என்றேன். “நெனெச்சேன்…என்ன அப்பாவுக்கு தோட்டம் தொறவு இருக்கோ” என்றார். “இல்லை” என்றான். “அப்போ நேரத்த வீணாக்காம புத்தகத்தைப் படிக்கலாமோல்லியோ…” என்று அவனைத் திருப்பி அனுப்பினார். அங்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த காவலாளியிடம்,” இந்தப் பெரியவர் யாரு?” என்று அவன் கேட்டான். “அவர்தான் இந்தக் கல்லூரிக்கு செகரட்டரி சங்கரநாராயணன் சார்…” என்றார். அந்த வயதிலும் அதனை கவனிப்பு. கலூரியில் படிக்கும் ஒவ்வொரு மாணவர்களிடமும் அத்தனை அக்கறை அவருக்கிருந்தது.

    தோல்விதான் நல்ல பாடம்

    அவன் அந்தக் கல்லூரியின் படித்தது ஒரு வருடம் தான். அதில் அவன் கற்றது கரையில்லாதது. P .U .C. இறுதித் தேர்வு நாளும் வந்தது. அவன் தேர்வு எழுதினான். அதன் முடிவு ஒரு “மே” மாதத்தின் முதல் வாரத்தில் “தினமலரில்” வெளியானது. காலை ஏழு மணிக்கு அவனுக்கு எதிர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து தினமலரில் அவனது நம்பரைத் தேடினான். அது இல்லை. அவன் P .U .C. பெயில். அதுதான் அவனுக்கு மனதில் உறைத்த முதல் தோல்வி. அவன் கவலை கொள்ளவில்லை. அவனது நண்பர்கள் அவனுக்கு உற்சாகம் தரும் வார்த்தைகளைக் கூற, அவன் சிரித்துக் கொண்டு அவனுடைய வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்தான். அவனுக்கு அம்மா வழித் தாத்தா ஆற்றங்கரைக்குக் குளிக்கச் செல்லும் முன்பு அவன் வீட்டு வாசலில் நிற்பதைப் பார்த்து.”விஸ்வம்..நீ பாசா” என்றார். “பெயில்” என்றான். சரி. மறுபடியும் எழுது என்றார். சரி என்றான். ஆனால் அவன் எழுத வில்லை.

    18.09.2015

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    படம்  உதவி  K.V.அன்னபூர்ணா

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (166)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்கள்.

    இவ்வார மடலில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.

    வரலாற்றுத் திருப்புமுனைகள் ஒரு நாட்டின் சரித்திரத்தை மாற்றியமைப்பதற்கு இன்றியமையாத காரணமாகிறது.

    எங்கோ பிறந்தோம், எங்கோ வளர்ந்தோம் இன்று எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் நாட்டில் எமது வாழ்க்கையை அமைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    நமது வாழ்வும், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு இன்று இருந்ததற்கும், முந்தைய காலத்தில் அது தன்னுடைய இன்றைய நிலையை அடைவதற்கும் முன்னால் எத்தகைய சரித்திர திருப்புமுனைகளினால் இன்றைய நிலையை அடைந்துள்ளது என்பதைப் படிக்கப் படிக்க, நாம் வாழும் நாட்டு மக்களின் குணாதிசயங்களின் அடிப்படைக் காரணிகள் புலர்கின்றன.

    இங்கிலாந்து நாட்டில் இந்நாட்டு மக்கள் தமது நாட்டின் போர்களின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்நாளை நினைவுகூர்வதன் அடிப்படை புரிகிறது. இன்றைய இங்கிலாந்து என்பது இப்போதிருக்கும் இதே வசதிகளை உள்ளடக்கித்தான் காலமெல்லாம் வாழ்ந்திருக்கிறது என்ற எண்ணம் எமக்கு வருமானால் அவர்களது கடந்தகால சரித்திர திருப்புமுனைகளை பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

    ஒரு நாட்டின் மக்கள் எதற்காக, எப்படி ஒரு நிகழ்வை அல்லது முக்கிய பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள் என்பதற்கான காரணத்தை நாம் அறிந்து கொள்ளும் போதுதான் அவர்களது அபிப்பிராயங்களின் அர்த்தம் புரிகிறது. வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்து வாழ்வை அமைத்துக் கொண்டிருப்போருக்கு இந்நாட்டு மக்களோடு இணைந்து செயற்படுவதற்கு அவர்களது சரித்திரப் பின்னணிகளை அறிந்து கொள்வது இன்றியமையாததாகிறது.

    இங்கிலாந்து நாட்டின் வரலாற்று முக்கிய திருப்பங்களின் வரை கோட்டை பார்க்கும்போது, பல நிகழ்வுகள் பல முக்கிய காலகட்டங்களில் நடந்திருப்பது புலனாகும். இந்நாட்டு மக்கள் பல சக ஐரோப்பிய நாட்டு மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதும், அத்தாக்குதல்களை எதிர்த்துப் போரிட்டு அவர்கள் தம்மை விடுவித்ததும் புலப்படும்.

    இங்கிலாந்து நாட்டு மக்கள் ஒரு தனிப்பட்ட இனமாக தம்மை இனங்காட்டிக் கொண்டவர்களல்ல. அவர்களின் சரித்திரப் பின்னணிகளின்படி பல சமயங்களில் இந்நாட்டை ஊடுருவிய பல கலாச்சாரங்களின் கலப்பாகவே இன்றைய இங்கிலாந்து மக்கள் காணப்படுகிறார்கள். இவர்களுக்கென இருக்கும் தனிப்பட்ட அடையாளங்கள் ஆங்கிலம் எனும் மொழியும், “சர்ச் ஆஃப் இங்கிலாந்து” ( Church of England ) எனும் ரோமன் கத்தோலிக்க சமயத்தில் இருந்து பிரிந்த மதமுமேயாகும்.

    இத்தகைய வரலாற்றுத் திருப்புமுனைகளில் ஒன்றான “ஸ்டாம்ஃபோர்டு பிரிட்ஜ் யுத்தம்” (Battle of Stamford Bridge) என்றழைக்கப்படும் ஒரு முக்கியத்துவமான போரைக் குறிப்பதாகும். இந்த ஸ்டாம்ஃபோர்டு பிரிட்ஜ் யுத்தம் என்பது என்ன ?

    2004_Ente_BritHer02

    1066ம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அரசரான எட்வர்டு என்பவரின் மரணத்தை அடுத்து King Harold Godwinson என்பவர் அரசரானார். இவரின் ஆட்சி பொறுப்பை முற்றாக வெறுத்தவர் இவரது தம்பி Toswig Godwins என்பவராவார். அச்சமயம் இங்கிலாந்தின் மீது “வைக்கிங்ஸ்” என்றழைக்கப்படும் நோர்வே மன்னர்கள் படையெடுத்து நாட்டைக் கைப்பற்ற முனைந்தார்கள்.

    அவர்களில் ஒருவர் Harald Sigurdsson ஆவார். இவரது 7000 முதல் 9000 வரையிலான படையினரும், 1066ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆங்கிலக் கரையை அடைந்தார். ஏற்கனவே தனது அண்ணன் மன்னரானதால் வெறுப்படைந்திருந்த Toswig Godwins இவருடன் இணைந்து தனது சகோதரனுக்கெதிராக யுத்தம் புரிய முனைந்தார்.

    செப்டெம்பர் 1066ம் ஆண்டு சில வட இங்கிலாந்து நகரங்களை வென்ற இப்படையினர் “யார்க்” (York) என்னும் இடத்தைச் சிலகாலம் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அச்சமயம் இங்கிலாந்து மன்னரான Haraold Godwins, இங்கிலாந்தின் தென்பகுதியில் இங்கிலாந்தை ஃபிரான்சு முற்றுகையிடப் போகிறது எனும் எதிர்பார்ப்பில் படைகளுடன் முகாமிட்டிருந்தார்.

    நோர்வே மன்னர் தனது தம்பியுடன் நாட்டினுள் ஊடுருவி யார்க் நகரம் வரை வந்ததை அறிந்து, தனது படைகளுடன் இந்த யார்க் நகரம் நோக்கி விரைந்தார். லண்டனிலிருந்து 185 மைல்களை அந்நாளைய குதிரை வண்டிகளில் நான்கு நாட்களில் கடந்து எதிரிப்படைகள் எதிர்பாராத சமயத்தில் அவர்களை எதிர் கொண்டார். யார்க் நகரத்திற்குச் சற்று வெளியே அமைந்திருந்த ஸ்டாம்ஃபோர்டு பிரிட்ஜ் எனும் இடத்தில் இவர்களின் யுத்தம் நிகழ்ந்தது.

    இது நிகழ்ந்த திகதி 1066ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ம் திகதி. பல வியூகங்களை வகுத்த நோர்வே படையினரை இங்கிலாந்து மன்னரின் படைகள் தோற்கடித்தன. படையெடுத்து வந்த நோர்வே மன்னர் Harald காற்றுக்குழாயைத் தாக்கிய அம்பினால் கொல்லப்பட்டதாகவும், இங்கிலாந்து மன்னரின் தம்பி Toswig வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

         BSB1BSB2BSB3

    பெரும்பான்மையான நார்வே படையினர் கொல்லப்பட்டனர். எஞ்சியிருந்த சிலரையும், காயப்பட்டோரையும் இங்கிலாந்து மன்னர் சமாதான உடன்படிக்கையில் திரும்பிச் செல்ல அனுமதித்தார். அப்படி அனுமதிக்கப்பட்டவர்களில் படையெடுத்து வந்த நார்வே மன்னரின் மைந்தனும் அடங்கினார். இனி ஒருபோதும் இங்கிலாந்தின் மீது படையெடுப்பதில்லை எனும் நிபந்தனையின் பேரிலேயே அவர்கள் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். நோர்வே படையினரின் அழிவு பாரதுரமானது. 300 கப்பல்களில் படையெடுத்து வந்த அவர்களில் திரும்பிச் செல்வோரைக் கொண்டு செல்ல 24 கப்பல்களே தேவைப்பட்டது என்பதே அவர்களது அழிவுக்கு எடுத்துக் காட்டாகிறது.

    இத்தகைய சரித்திர திருப்புமுனைகளே இன்றைய இங்கிலாந்தின் வடிவமைப்புக்குக் காரணம் என்பதும், இத்தகைய சரித்திர நிகழ்வுகளுக்கு இங்கிலாந்து கொடுக்கும் முக்கியத்துவம் நாம் வாழும் நாடுகளின் பெருமையை உணர்ந்து அவற்றின் தனித்தன்மையைப் பாதுகாக்க, வாழும் அனைவரும் தமது ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்பதுமே எனது இத்தகைய மடலுக்குக் காரணம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    ( நன்றி – விக்கிப்பீடியா )

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • வளவன் கனவு-16

    சு.கோதண்டராமன்

    சப்த விடங்கர்கள்

    vallavan-kanavu

    நீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றைத்
    தாரானே தாமரை மேலயன் தான்றொழுஞ்
    சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில்

    ஊரானே யென்பவர் ஊனமி லாதாரே

    -சம்பந்தர்

    உலகிலேயே முதல் முறையாகத் தெய்வத்தை ஆடும் கோலத்தில் கற்பனை செய்த பெருமைக்கு உரியவர் காரைக்கால் அம்மையார். பிரபஞ்சத்தைப் படைத்துக் காத்து அழிக்கும் செயலை அம்மையார் கருத்தில் உருவான ஆடும் கோலமே நன்றாகக் காட்டுவதாகச் சோழ அரசர் செங்கணான் கருதினார். அருவுருவத்தைக் காட்டும் லிங்கம் அன்றியும் இறைவனின் ஆடும் திருக்கோலத்தையும் சிலையாக வடித்து மக்கள் வழிபடும் வகையில் எல்லாக் கோயில்களிலும் அமைக்க வேண்டும் என விரும்பினார். என்றுமுள ஈசற்கு எல்லாமே என்றும் நிலைக்கக் கூடியதாக அமைய வேண்டும் என்ற அவரது முன்னோரின் கருத்தையே அவரும் கொண்டிருந்தார். சோழநாட்டில் கருங்கல்லும் கிடைப்பதில்லை. அதைச் செதுக்கத் தெரிந்தாரும் இல்லை. சுதைச் சிற்பம் செய்பவர்கள்தான் இருந்தார்கள். சுதை விக்கிரகங்கள் சில ஆண்டுகள் கழித்துக் காரை உதிரத் தொடங்கும். எனவே சுதையில் உருவம் அமைக்க அவருக்கு விருப்பமில்லை.

    அப்பொழுது குடந்தை நகரில் பித்தளைப் பாத்திரம் செய்யும் தொழில் வளர்ந்து இருந்தது. அதை அடுத்த நாச்சியார்கோவிலில் வெண்கலப் பாத்திரங்கள் செய்யப்பட்டன. அந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இறைவனின் உருவத்தை உலோகத்தில் செய்ய முடியும் என்று அவருக்குத் தோன்றியது. உலோகத்தில் ஆடற்பெருமானின் கோலத்தை வடிப்பவருக்கு ஆயிரம் பொன் தருவதாக நாட்டு மக்களுக்குப் பறையறைந்து அறிவிக்குமாறு ஊர்த்தலைவர்களுக்கு உத்திரவிட்டார் அவர். அத்துடன் உலோகத் தொழில் கற்றுக் கொள்ள முன்வருபவர்களுக்கும் மானியங்கள் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    சோழநாட்டின் தில்லைக்குத் தென்மேற்கில் காத தூரத்தில் மண்ணூர் என்று ஒரு சிறு கிராமம். அங்கு மட்பாண்டம் செய்யும் குலத்தில் தோன்றிய ஆதன் என்ற ஒரு இளைஞன் இருந்தான். அவன் தன் தந்தையிடம் மட்பாண்டம் செய்யும் தொழிலையும் ஐயனார் கோயில்களுக்குத் தேவையான யானை, குதிரை, வீரர்கள் பொம்மைகளைச் செய்யும் தொழிலையும் திறம்படக் கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தான். விண்ணகரங்களில் சுதை விக்கிரகங்கள் செய்யவும் கற்றுக்கொண்டிருந்தான்.

    ஒரு நாள் அந்த ஊர்த்தலைவர் அவனைக் கூப்பிட்டனுப்பினார். அவனைக் கண்டதும், “தில்லைக் கோட்டத் தலைவரிடமிருந்து ஓலை வந்திருக்கிறது. பொம்மை செய்கிறவர்களுக்கு உலோகத் தொழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறாராம் அரசர். அதைக் கற்றுக் கொண்டு உலோகத்தில் பொம்மை செய்தால் பரிசு உண்டாம். கற்றுக் கொள்கிறாயா?” என்றார்.

    “சரிங்க. எங்கேங்க போகணும்?”

    “நாச்சியார் கோவிலில் ஆதித்த ஆசாரி என்பவர் கிட்டே கற்றுக் கொள்ள வேண்டும். இன்னொரு விஷயம் இருக்கிறது, கேள். காரைக்கால் அம்மையார் பாட்டைப் படித்து அதில் சொன்னபடி கடவுளுடைய உருவத்தைச் செய்து கொடுத்தால் ஆயிரம் பொன் பரிசு என்று எழுதி இருக்கிறது.  உனக்கு அந்தப் பரிசு கிடைக்கும் என்று தோன்றுகிறது. உன்னால் இந்த ஊருக்கும் பெருமை ஏற்படட்டும்.”

    “அம்மையார் பாட்டு யாரிடத்தில் கிடைக்கும்?”

    “தில்லையில் சித்ரகூடம் விண்ணகரில் புதிதாக லிங்கம் என்று ஒன்று வைத்துப் பூசை செய்கிறார்களாம். அங்கே ஒருவர் அம்மையார் பாட்டைத் தினமும் படிக்கிறார் என்று கேள்விப்பட்டேன். முதலில் அங்கே போய்ப்ப் பார்.”

    ஆதன் புறப்பட்டு முதலில் தில்லையை அடைந்தான். அங்கே இருந்த அந்தணர் வீடுகளில் போய் விசாரித்தான். மகேச சர்மா என்ற இளைஞன் சிவலிங்க சன்னிதியில் அம்மையார் பாடல்களைப் படித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்தான். மகேசனிடம் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

    மகேசன் அம்மையார் பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ள இறைவனின் உருவத்தை விளக்கினான். உடனே ஆதன் மண் தரையில் விரலால் படம் வரைந்து காட்டினான். பிறகு அதன் மேல் களிமண் கொண்டு முப்பரிமாண உருவத்தைச் செய்து காண்பித்தான். மிக அற்புதமாக அமைந்திருந்தது அந்தச் சிற்பம். “வெற்றி உனக்கே என்று என் உள் மனது சொல்கிறது. போய்த் தொழிலைக் கற்றுக் கொண்டு வா. நான் உனக்கு எல்லா உதவிகளும் செய்வேன்” என்று உறுதியளித்தான் மகேசன்.

    அங்கிருந்து புறப்பட்டு இரண்டு நாள் நடந்து நாச்சியார்கோவிலில் ஆதித்த ஆசாரியின் தொழில் கூடத்தை அடைந்தான். அங்கு சோழநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வேறு ஏழு பேர் வந்திருந்தனர். எல்லாருமே இவனைப் போல் இளைஞர்கள். ஆசாரி வெண்கலப் பாத்திரம் செய்பவர். அவர் இந்த இளைஞர்களுக்கு அரசர் ஆணைப்படி தொழில் கற்றுக் கொடுத்தார்.

    வெண்கலப் பாத்திரம் செய்ய வேண்டுமென்றால் செய்ய நினைத்த பாத்திரத்தைப் போல் மெழுகினால் ஒரு அச்சு செய்துகொள்வர். அதன் உள்ளும் புறமும் களிமண்ணால் கனமான பூச்சு இடுவர். அது காய்ந்ததும் அதிலுள்ள ஒரு ஓட்டை வழியாக மெழுகை உருக்கி எடுத்துவிடுவர். பின்னர் அந்த ஓட்டை வழியாக உலோகக் கலவையைக் காய்ச்சி ஊற்றுவர். இடைவெளியில் உலோகம் பரவி உறைந்து விட்டபின் களிமண்ணை உடைத்து எடுத்து விடுவர்.

    ஆதித்த ஆசாரி தெளிவாகக் கூறிவிட்டார். “பாத்திரம் செய்வது வேறு, உலோகத்தில் பொம்மை செய்வது வேறு. பாத்திரங்கள் எல்லாம் ஒரு போக்கான வளைவை உடையவை. உருவங்கள் பல வளைவுகள், நெளிவுகள், சுளிவுகள் பல கோணங்களில் உள்ளவை. உலோகத்தை உருக்குவது வார்ப்பது ஆகிய வேலைகள்தான் நான் உங்களுக்குக் கற்றுத் தர முடியும். மற்றவை நீங்களாகத்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.”

    இளைஞர்கள் ஒரு மாதத்தில் பாத்திரத் தொழில் கற்றுக் கொண்டனர். பல வளைவுகளை உடைய பொம்மை உருவத்திற்கு ஏற்ற வழி எது என்று யோசிக்கத் தொடங்கினர். தேன் மெழுகினால் பொம்மை செய்து அதன் மீது மண்ணால் மெழுகிவிட்டால் மண் அச்சின் உள்பகுதி அந்தப் பொம்மையின் வடிவத்தை வளைவு நெளிவுகளுடன் காட்டும். மெழுகை உருக்கி வெளியில் எடுத்து விட்டால் அவர்களுக்குத் தேவையான அச்சு கிடைத்துவிடும் என்று அறிந்தனர். ஆதித்த ஆசாரியின் வழிகாட்டுதலில் அவர்கள் இதைச் செயல்படுத்தினர். ஒரு பெண் கையில் விளக்கு வைத்திருப்பது போல மெழுகுப் பொம்மை செய்து அதிலிருந்து ஒரு வெண்கல உருவத்தை அவர்கள் வார்த்து எடுத்த போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. ஆயிரம் பொன் பரிசு பெறுவதில் முதல் படியைக் கடந்து விட்டோம் என நம்பினர். இந்த உருவத்தை அந்த ஊரின் பெயரால் நாச்சியார் விளக்கு என அழைத்தனர்.

    தமிழ்நாட்டின் முதல் உலோக பொம்மையான அதை ஆசாரியும் அவரது எட்டு சீடர்களும் பழையாறைக்கு எடுத்துச் சென்றனர். அரசர் இதைப் பார்த்து மகிழ்ந்தார். எல்லோருக்கும் பரிசு கொடுத்துப் பாராட்டினார். அம்மையார் இறைவனைப் ‘பொன்னுரு’ ‘பொன்வரையே போல்வான்’, என்று வர்ணிப்பதால் இந்த வடிவத்தைப் பொன்னால் செய்தால் என்ன என்று தோன்றியது. அரசவைப் பொற்கொல்லரைக் கூப்பிட்டுக் கேட்டார். அவர், “வெண்கலத்திற்குப் பயன்படுத்தும் தாமிரம், துத்தநாகம், ஈயம் இவற்றோடு வெள்ளி, பொன் இவற்றையும் கலந்தால் உருவம் பொன் நிறமாக அமையும். முழுப் பொன்னால் செய்வதை விட இது உறுதியாகவும் இருக்கும்” என்று கூறினார்.

    மாணவர்கள் தொழிலை நன்றாகக் கற்றுக் கொண்டுவிட்டனர். இனி அவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருவரும் தனியே முயற்சி செய்து ஆயிரம் பொன் பரிசைத் தானே அடைய வேண்டும் என விரும்பினர். தங்கள் தங்கள் ஊருக்குக் கிளம்பினர். அரசர் அவர்களுக்குத் தேவையான உலோகக் கட்டிகள், மெழுகு முதலான எல்லாப் பொருட்களையும் கொடுக்கச் செய்தார்.

    அந்த எட்டுப் பேரில் திருக்காறாயில் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞன் இருந்தான். அவன் ஐந்து உலோகக் கலவையைப் பயன்படுத்தி அழகிய விக்கிரகம் ஒன்று செய்தான். ஆனாலும் ஒரு பெருங்குறை இருந்தது. ஆடற் கோலத்தைக் காட்ட வேண்டுமென்றால் ஒரு காலை மேலே தூக்கவேண்டும். இந்த இளைஞன் செய்த இறைவனின் வடிவத்தில் இரண்டு கால்களும் சேர்ந்து நின்ற நிலையில்தான் வடிக்க முடிந்தது. ஆரூர், நாகை, நள்ளாறு, மறைக்காடு, வாய்மூர், கோளிலி ஆகிய ஊர்களிலிருந்து வந்த மாணவர்களும் அதே போலத் தனித்தனியே முயன்றனர். எல்லோருக்கும் நின்ற கோலம்தான் செய்ய முடிந்ததே தவிர அரசரின் விருப்பப்படி ஆடும் கோலத்தைச் சிலையில் வடிக்க முடியவில்லை. அவற்றில் நடனத்தைக் கற்பனைதான் செய்து கொள்ள வேண்டியிருந்தது. அவற்றைப் பார்த்த அரசர் அந்தச் சிலைகளை அந்தந்த ஊர்க் கோயிலில் வைத்துப் பூசிக்கச் செய்தார். உளி கொண்டு செதுக்காமல் செய்யப்பட்டதால் அந்த உருவங்கள் விடங்க மூர்த்திகள் எனப்பட்டன. திருக்காறாயில் மூர்த்தி ஆதி விடங்கர் எனப்பட்டது.

    மாற்று வழிகளை யோசிக்குமாறு இளைஞர்களை அரசர் ஊக்குவித்தார்.

    தொடரும்

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 14

    –சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

     

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    குழந்தைக்குக் கற்பித்தாய் நீ

     

    குழந்தைக்குக் கற்பித்தாய் நீ
    __________________________

    அச்சங்கள் என்னை விட்டு
    அகன்றன !
    அமைதி நிலையை மிகையாய்
    அடைந்து விட்டேன்
    பறவைகளைக் காட்டிலும் !
    கரங்களில்
    என்னைத் தூக்கி அணைத்து
    என் கண்கள் நோக்கவும்,
    என் காதுகள் கேட்கவும்,
    உதடுகள் பேசவும்,
    பிறர் வெறுப்பதை
    என் இதயம் நேசிக்கவும்,
    பிறர் விரும்புவதை நான்
    வெறுக்கவும்
    எனக்குக் கற்பித்தாய் நீ !

    __________________________

    உன் மெல்லிய விரல்களால்
    என் சிந்தனையைத் தொடுகிறாய் !
    ஆழ்ந்த என் வழிபாடு
    பாய்ந்தோடும்
    ஆற்று வெள்ளம் போல் !
    உன் அக்கினி உதடுகளால்
    முத்தம் ஒன்றைத்
    என் ஆத்மாவின் இதழ்களில்
    அளித்து விட்டு
    ஒளி விளக்காய் நீ அதை
    உன்னத மாக்குவாய் !
    உனக்கு இணையாய்
    உன் பின்னே சென்றேன்
    இருவர் நாம்
    ஒருவர் ஆகும் வரை !
    உன்னை நான் நேசித்தேன்
    உன்னுருவத்தில்
    என்னுருவம்
    குட்டை யாய்ப் போய்க்
    குறுகும் வரை !

    __________________________

    “ஒரு மதக் குருவின் புனிதத்தை நாட்டுப்புறத்தான் ஒருவன் சந்தேகப்பட்டால், அவனுக்குக் கிடைக்கும் பதில் : “அவரது உபதேசத்தை மட்டும் கேட்டுக் கொள். அவரது தவறுகளைக் குறைபாடுகளைப் புறக்கணித்து விடு.”
    கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)
    __________________________

     

    Share
  • வாழ்வு தந்த தெய்வங்கள்!

     –ஆர். எஸ். கலா

    இடை பெருக்க
    நடை  குறைய
    உடல் தளர
    வயிறு உப்ப
    பல உணவுக்குத்
    தடை போட்டுக்
    கருவில் எனைச்
    சுமந்தாள் தாய்!

    வாந்தியால்
    வதைக்கப்பட்டு
    மசக்கைக்குள்
    சிக்குண்டு மருந்தை
    விருந்தாக்கி
    மாதங்கள் பல
    என்னை உடலிலே
    தாங்கியவள் தாய்!

    கருவான நான்
    உருவெடுத்து
    உலகத்துக்கு வருகை
    தரும் வேளை அம்மா
    பட்ட வலியை நான்
    உணரவே பல ஆண்டு
    காத்திருக்கவேண்டியதாயிற்று
    அன்று உணர்ந்தேன் தாயின்
    வலியையும் பெருமையையும்
    தியாகத்தையும்!

    என் வருகையால்
    நெகழ்ந்து மெதுவாக
    முத்தமிட்டுத் தொட்டு
    மகிழ்ந்த தந்தை என்
    தேவைகளைப் பார்த்துப்
    பார்த்து பூர்த்தி செய்தார்!

    ஓடாகத் தேய்ந்து கூலி
    வேலை செய்தார்
    தோள் வலிக்கச் சுமப்பார்
    சுகமெனச் சிரிப்பார்
    கை வலிக்க உழைப்பார்
    கை சிவக்க அள்ளிக்
    கொடுத்து என் ஆசைகளை
    நிறைவு  செய்வார்!

    கடல்கடந்து சென்று
    பல ரணங்கள் சுமந்து
    சுகமான வாழ்வு இழந்து
    சுமை என்று எனை
    நினையாது அன்புச்
    செல்லமென நினைத்துச்
    சொத்தாகக் குவித்தார்!

    ஈருடலுக்கும் நான்
    ஓர் உயிரானேன்
    அன்பு விழியானேன்
    என்றும் எங்கள் உயிர்
    மகளே என்று புலம்பும்
    பாசமான பெற்றோருக்கு
    அடங்கிய மகளானேன்!

    தாய் தந்தை காட்டிய
    பாதைக்குத் தடம் மாறாப்
    பிள்ளையானேன்
    பார்ப்போர் போற்ற
    கேட்போர் வியக்க
    நானும் நல்ல
    நிலையிலானேன்!

    முதியோர் இல்லம்
    தேடமாட்டேன்
    ’சீ’ என்று விரட்ட
    மாட்டேன்
    சுமை என்று
    புலம்பமாட்டேன்
    சுகமாக  நானும்
    சுமப்பேன் தடி கொடுத்துப்
    பிடி கொடுத்து உறவு என்று!

    என்  பேசும்  தெய்வங்கள் இவர்கள்
    என்று போற்றிப் பராமரிப்பேன்
    பெற்றவர் உள்ளத்தை அன்பால்
    வெள்ளமாக்க நான் உழைப்பேன்
    இது சாத்தியமோ நான் அறியேன்…
    சத்தியமாகக் கைவிடேன்!

     

    Share
  • மனச் சிறகு

    -கவிஜி 

    சுழன்று சென்ற
    கல்லுக்குப்
    பயந்து
    அத்தனைக் காகங்களும்
    மரம்விட்டுப் பறந்தன…

    எதற்கும் பயப்படாமல்
    அமர்ந்திருந்த
    ஒரே ஒரு காகத்தையும்
    விரட்ட விரும்பினால்
    கல்லை
    உங்களை நோக்கி
    எறியுங்கள்…!

     

    Share
  • அம்மாவின் கரங்கள்!

    -ச.துரை

    கனத்த போர்வைக்குள்ளே
    நடுங்கிக் கொண்டிருக்கிறேன்
    இந்தக் கருப்புப் போர்வையின்
    மேல்புறம் முழுக்கப் பனிப்பிரதேசம்
    உருவாகி இருப்பதை என்னால் உணரமுடிகிறது

    போர்வைக்குள்
    உலாவும் வெப்பக்காற்றைப்
    பிடிக்க இருகால்களுக்கு
    இடையே ஒரு கையும்
    கழுத்துப் பரப்பில் மற்றொரு
    கையுமாய் என் நெற்றியைச்
    சுருக்கி நானே என்னைப்
    பொருத்தியிருக்கிறேன்!

    உளறல்களை எனக்குள்ளே
    பரப்பி உறங்கும் இந்தக்
    காய்ச்சலுக்கு  இப்போது
    அம்மாவின் விரல்கள்
    தேவையாய் இருக்கிறது
    அம்மாவை  அழைக்கும்
    வார்த்தைகளை அவ்வளவு
    எளிதே வெளியிட வைப்பதில்லை
    இந்தக் காய்ச்சல்கள்!

    இந்தக் காய்ச்சல்களுக்குத் தெரியும்
    அம்மாவின் கைபட நெற்றி
    வைக்கும் ஈரத்துணியும் கழுத்தைத்
    தொட்டுக் காய்ச்சலின் அளவைச்
    சொல்லும் அம்மாவின்
    கணிப்புக்களும் தங்களைப்
    பாதி முடக்கிவிடுவது!

     

    Share
  • ஜடாமுனியும் சிவப்புக்கத்தியும் – 1

    — கவிஜி.

    அத்தியாயம் 1:

    கவுண்டம் பாளையம் சிக்னல் …

    புற்றீசல் போல சாய்பாபா கோயிலில் இருந்து வாகனங்கள் மேட்டுப்பாளைய சாலையை கடத்திக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. இதோ… இதோ… இதோ… பச்சை விளக்கு மறைந்து மஞ்சள் விளக்கு விழ, அதை ஓடிக் கொண்டிருக்கும் சிக்னலின் எண்ணை வைத்து முடிவெடுத்து விட்ட ஜடாமுனி கண்டிப்பாக சிக்னலைத் தாண்டி விட முடியாது என்பது உணர்ந்தபடி தன் இரு சக்கர வாகனத்தை சிக்னல் கோட்டுக்கு முன்னாலேயே நிறுத்தினான். தலையில் ஹெல்மெட்டோடு வண்டியில் அமர்ந்திருந்தான். ஜடாமுனியின் கண்களில் சிவப்பு விளக்கின் எண் ஓடிக் கொண்டிருந்தது.

    “மஞ்ச மாக்கான். இவுனுங்களும் போக மாட்டாங்க. போறவனையும் விட மாட்டாங்க,” என்று பின்னால் கிட்டத்தட்ட ஜடாமுனியின் பைக்கில் முட்டி விட்ட ஒரு பைக்கில் கிருதாவை மீசையாக்கி அமர்ந்திருந்த கல்லூரி மாணவன் ஒருவன் பேசுவது பைக்கோடு சற்று குலுங்கிய ஜடாமுனிக்கு நன்றாகவே கேட்டது.

    சட்டென பைக்கை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தி, வண்டியை விட்டு இறங்கினான். ஹெல்மட்டைக் கழற்றி பைக்கின் சீட்டில் வைத்து விட்டு. ஒரு அடி பின்னால் சென்று… பளார் என்று ஒரு அறை வைத்தான் அந்த கிருதாக் கோமாளியை.

    “முட்டாக் கிறுக்கனாடா நீ, மஞ்ச லைட் விழுந்தா எப்டிடா போக முடியும்? போக கூடாதுங்கறக்குதாண்டா மஞ்ச லைட்டு, “என்று கூறியவன் அவனையே உற்றுப் பார்த்து விட்டு மீண்டும் தொடர்ந்தான், “மரியாதை இல்லாம பேசற புண்ணாக்கு மண்டையா, “என்று இன்னொரு அறை விட்டான்.

    காற்றில் முன்னால் வந்து விழுந்த கூந்தலை பின்னால் தூக்கி போட்டான் ஜடாமுனி.

    “ஏம்பா, இப்போ என்ன ஆச்சுனு அடிக்கற? கை நீட்ற வேலையெல்லாம் தப்பு. ஏதோ அவசரம். எல்லாரும் அப்டி இப்டி தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிட்டே இருக்கணும்,” என்று கூறிய சொட்டைத் தலையன் ஒருவனிடம் சென்றான் ஜடாமுனி.

    அருகில் நின்றவர்கள் எல்லாரும் ஜடாமுனியையே பார்த்தார்கள், பேசலாமா வேண்டாமா என்பது போல ஒரு உடல்மொழியுடன்.

    தீர்க்கமாகப் பார்த்த ஜடாமுனி பின் பேசத் தொடங்கினான்.

    “என்ன அட்ஜஸ்ட்மெண்ட், எனக்கு உன் பைக்க இன்னைக்கு மட்டும் குடேன், பாக்கலாம், ஒரு சின்ன அட்ஜஸ்ட்மெண்ட்தான?” என்றவன் கண்களில் தீப் பார்வை.

    சொட்டை கண்கள் சுருக்கி யோசிக்க… சொட்டை மண்டை மேல் ஒரு குட்டை நங்கென்று போட்டபடியே பேசத் தொடங்கினான் ஜடாமுனி.

    “கிழட்டுப் புண்ணாக்கு, உன்ன மாதிரி க்ரௌண்டுக்கு அலையற ஆளுங்கனாலதாண்டா இந்த மாதிரி கோமாளிங்க நிறைய பேர் இருக்கானுங்க” என்றபடியே பார்வையை சற்று இடது பக்கவாட்டில் விட்டான்.

    இப்போது நின்றிருந்தவர்கள் கண்களில் கொஞ்சம் கலக்கம் அனைவருமே காற்றினில் தன் தலையை இழுத்துக் கொள்ள முயற்சித்தார்கள்.

    3, 4, 5, 6, 7 ம்ம்ம்… 10 பேர், தண்டாக் கூடாது என்பதற்காக போட்ட கோட்டை தாண்டி வண்டிகளை நிறுத்தி இருந்தார்கள். சட்டென முன்னால் போய் கோட்டைத் தாண்டி நின்றவர்களை ஒரு சேரப் பார்த்தான். ஏதோ முடிவெடுத்த உடல்மொழியோடு, ஒவ்வொருவனுக்கும் பளார், பளார்னு அறை விட்டான்.

    “போடா பின்னால. டேய். மண்வெட்டி தலையா. போடா. என்னடா முறைக்கற? கோட்டைத் தாண்டக் கூடாதுன்னுதாண்டா கோடு போடறாங்க, அதை மதிக்க மாட்டியா? அவரசம் கிவசரம்னு எவனாது பேசுனீங்க,” என்றபடியே முகம் முழுக்க துணியால் சுற்றிக் கொண்டு டூ வீலரில் இருவரை உட்கார வைத்துக் கொண்டு பின்னால் நகர தடுமாறிக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு பத்து முறை தலையில் நங்கு நங்கென்று குட்டினான். குட்டி முடித்த அவளையே பார்த்தான். முகம் முழுக்க சுற்றி இருந்த துணியைத் தாண்டி கண்களில் நீர் ஓடியது. பின்னால் அமர்ந்திருந்த இருவரும் கையை அவரவர் தலைக்கு வைத்து நடுங்கிக்கொண்டிருந்தார்கள். கண்கள் உருண்டு விழுந்து விடும் போல.

    “வாட்ஸ் அப், ஃபேஸ் புக், ட்விட்டர்ன்னு அப்டேட் ஆக்கத் தெரியுதுல்ல, பைக்ல மூணு பேர் போக கூடாதுன்னும், ஹெல்மெட் இல்லாம ஓட்டக் கூடாதுன்னும், ரியர் மிர்ரர் இல்லாம வண்டிய எடுக்க கூடாதுன்னும் தெரியாதா? சுண்ணாம்பு… வெண்ணை…போடி பின்னால” என்று விரட்டினான்.

    ஜடாமுனி செய்யும் செயல்கள் அங்கு இருந்தவர்களை நடுங்க செய்தது. ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பார்த்துக் கொண்டே பின்னால் நகர்ந்து நகர்ந்தபடியே இருக், ஒரு வித சலசலப்பும் குழப்பமும் அங்கு படரத் தொடங்கின. முன்னால். சிக்னல் போட்டும் வண்டி நகராததைக் கண்ட பின்னால் நின்ற ஒருவன் “யோவ் மூவ் பண்ணுங்கையா” என்று அங்கு நடக்கும் எதுவும் தெரியாமல் கத்த.

    “டே, கத்தறவனே, மூடுடா. என் டுங்குறு, அவுங்க வாராங்க இவுங்க வராங்கன்னு மணிக்கணக்கா வாய பொளந்துகிட்டு ரோட்ல நிக்கும் போது தெரியலையா? மூடிட்டு கொஞ்ச நேரம் நில்லு” என்று கத்தினான் ஜடாமுனி

    “யார்டா அது கலாட்டா பண்றது?” என்று பின்னால் வந்து நின்றது ட்ராபிக் போலீஸ். மெல்ல திரும்பினான் ஜடாமுனி.

    அதற்குள் ஆளாளுக்கு, “சார், இந்த ஆள் ஓவரா ரவுஸ் விடறான், அடிக்கறான், குட்டறான், என்னன்னு கேளுங்க, முன்னால நின்னுட்டு நகராம வம்பிழுக்கறான்” என்று ஒருவன் கூற. அவனைப் பார்த்து “இன்னைக்கு நீ செத்த” என்று நாக்கை துருத்தி சொல்லியபடியே பார்வையை அவனிடம் இருந்து திருப்பி போலீசைப் பார்த்தான்.

    நிற்கும் போலீசைப் பார்த்த ஜடாமுனி, “நீ யார்டா?” என்றான் தலையை கோதியபடி, அவன் கண்களில் சிறு சலனம் கூட இல்லை.

    இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பாக்காத போலிஸ், “என்ன! நான் யாரா? அதும் “டா” வேறயா” என்றபடியெ ஓங்கி ஒரு அறை விட கையைத் தூக்க, வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டான் முந்திக் கொண்ட ஜடாமுனி.

    “அடிங் … என் தொப்ப மவனே. அவன் வயித்த பாரு. எத்தன மாசம்டா நீ? டேய்… பத்து ரூபா லஞ்சம் வாங்கறவனே, நீ யார்டா? உன் பேர் என்ன? நீ மட்டும் “டா” போடலாம் நான் போடக் கூடாதா? சொல்டா? நீ யாரு?” என்று மாற்றி மாற்றி நாலு அறை விட்டான் ஜடாமு.

    அடி வாங்கிய தொப்பை போலிஸ் பயந்து ஒடுங்கி ஒரு ஓரமாய் உட்கார, “இந்த முடி வேற மூஞ்ச மறைக்குது” என்ற முணங்கியபடியே, “மகா ஜனங்களே, எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கறேன். மரியாதையா, பச்சை விளக்கு, மஞ்சள் விளக்கு, சிவப்பு விளக்குன்னு பார்த்து பார்த்து போகணும். மீறி போறத பார்த்தேன்” என்றபடியே தன்னை போட்டுக் கொடுத்த அந்த ஒருவனைப் பார்த்தபடியே “என்ன பண்ணுவேன்னு பாக்கறியா?” என்று சற்று யோசித்தவன், “டே… டுபுக்கு மண்டயா, நீ செத்தனு சொன்னேன்ல இப்போ பாரு…” என்றபடியே உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ‘பட்’ என்று சுட்டான். அவ்ளோதான் காக்கா கூட்டம் போல சிதறியது கூட்டம். என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாத கூட்டம் மிரண்டு கத்திக் கொண்டு சிதறியது.

    “என்னடா ஒருத்தன சுட்டதும் எதுத்து நிப்பீங்கன்னு பார்த்தா இப்டி ஓடறீங்க? உங்க புரட்சி எல்லாம் முகப்புத்தகத்துல மட்டும்தானா? முகமே இல்லாத மண்டுகளா நில்லுங்கடா” என்று சுற்றும் முற்றும் பார்த்தவன், ஆங்காங்கே சிதறிய ஓடிக் கொண்டிருந்தவர்களில் ‘லொள்ளு’ பேசிய சிலரைப் பார்த்து பார்த்து சுட்டான். சிக்னலே ஸ்தம்பித்தது கூட்டம் ஒன்றும் விவரம் புரியாமல் அங்கும் இங்கும் அலைமோதியது.

    “இதாண்டா உங்ககிட்ட இருக்கற பிரச்சனை. சுயநலவாதி கூட்டங்களா. எவனாது உப்பு போட்டு சாப்டற மனுசனா இருந்தா என்னைய எதுத்து நில்லுங்கடா பாக்கலாம். பயந்தாங்கொல்லி பசங்களா, ஒற்றுமைய கிரிக்கெட்டுல மட்டும், அதும் ஒரே ஒரு நாடு கூட விளையாடற அன்னிக்கு மட்டும் வாய தொறந்துகிட்டு கத்திட்டு கிடக்கற கூட்டம் தான. பொறம்போக்குகளா, நான் செத்தாலும் பரவாயில்ல இனி ஒருத்தன சாக விட மாட்டேன்னு எவனாது சொல்றீங்களா? பொருளாதாரமும் தெரியாது, உலக மயமாக்கலும் புரியாது. மாடு மாதிரி உழைக்க வேண்டியது. வாரக் கடைசியல நல்லா குடிக்க வேண்டியது” என்று கத்திக் கொண்டே ஒரு பெண் பின்னால் ஓடி ஒளிந்தவனை எட்டி பார்த்து குறி வைத்து சுட்டான் ஜடாமுனி.

    அப்படியே திரும்பியவன், “டேய் கிருதா, இங்க வா” என்று அந்தக் கல்லூரி மாணவனிடம் செல்ல, அவன், நடுங்கிக் கொண்டே நின்றான். கை மட்டும் செல்லில் ஏதோ டைப் பண்ணிக் கொண்டே இருந்தது.

    அவனையும் செல்லையும் மாறி மாறிப் பார்த்த ஜடாமுனி. இந்தியன் கமல் ஸ்டைலில், துப்பாக்கியை தலையில் அடித்த படியே”நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்கடா” என்றபடியே, “சட்டையத் தூக்குடா தறுதலை” என்றான்.

    அவன் நடுங்கிக் கொண்டே தூக்கினான் பேண்ட், பாதி டிக்கியில் இதோ விழப்போறேன் என்பது போல நிற்க, ஜட்டி தெரிந்தது.

    “கருமம்டா” என்று யோசிக்கும் அளவுக்கு நேரம் எடுத்துக் கொண்டு, பின் “இந்த கம்பெனிக்கு நீ விளம்பர தூதுவனா? சொல்லுடா? இடுப்புல பேண்ட் நிக்காதவனே, சொல்லுடா?” என்று டிக்கியிலேயே சுட்டான் ஜடாமுனி”இப்போ செல்பி எடுத்து போடு, ஆளும்… அவன் மண்டையும். இதுல தாவாங்கட்டை வரை கிருதா வேற” என்று குப்புற விழுந்து வலியில் துடித்துக் கொண்டிருந்த கிருதாவை ஓங்கி ஒரு மிதி வைத்து விட்டு, “எல்லாரும் திருந்திக்கோ… அந்நியன் மாதிரி தனியா கூட்டிட்டு போய் எண்ணையில போட்டு வறுக்கவெல்லாம் மாட்டேன். எண்ணை விலை வெண்ணை விலை விக்குது. சுட்டுட்டு போயிட்டே இருப்பேன்” என்றபடியே பைக்கில் ஏறிப் பறக்கத் தொடங்கினான் ஜடாமுனி.

    எத்தனை முறை ஓட்டிப் பார்த்தாலும். சிக்னலில் இருந்த கேமராவில் அவன் உருவம் மட்டும் பதியவே இல்லை.

    “சார், இது எதோ அமானுஷ்யம் போல இருக்கு. சார் இன்னோர் விஷயம். சுடப்பட்ட எல்லாருமே அடுத்த 2 மணி நேரத்துல பிழைச்சுகிட்டாங்க. ஆனா குண்டு பட்ட இடத்துல காயம் இருக்கு. எல்லாமே போலியான குண்டுகள். ஆனா வலி உயிர் போகுதாமா. ஒன்னும் புரியலயே சார். யார் என்ன ஒன்னும் தெரிலையே ஒரு க்ளூவும் கிடைக்கல”

    போலிஸ் சங்கம் எப்போதும் போல மீசை முறுக்கி பேசிக் கொண்டிருக்க; ஜடாமுனி அவன் அறையில் பப்பரபான்னு தூங்கிக் கொண்டு இருந்தான். ஜடாமுனி போன வரம் வரை ஒரு சாராசரி மனிதன்தான். நடக்கும் தவறுகளைக் கண்டு வெகுண்டு எழுந்து, கவிதை எழுதி, அவனே படித்து, சுவற்றில் முட்டி மோதி, வாழ்க்கையை, தத்துவம் பேசி வீணடித்துக் கொண்டு இருந்தவன்தான்.

    அவனுக்கு ஒரு கத்தி கிடைத்தது. அது எங்கிருந்து கிடைத்தது, ஏன் கிடைத்தது என்று இனிதான் நான் யோசிக்க வேண்டும்.

    கத்தியைக் கொண்டு ஒரு நாள் முதுகு சொரியும் போது அதிலிருந்து ஒரு வகையான புகை கிளம்பியது. மிரண்டு, என்ன ஏது என்று யோசித்து தடுமாறிக் கொண்டிருக்கும் போதே அந்த புகையில் இருந்து ஒரு குட்டி மனிதன் உருவம் வெளியே வந்தது.

    ஜடாமுனி இன்னும் மிரண்டு போனான். கத்தி கூச்சலிட்டு கட்டிலில் ஏறி நின்று அதகளம் பண்ணிக் கொண்டிருக்கும் போது. “ஆலம்பனார், நான் உங்கள் அடிமை என் பெயர் சிவப்பு, நீங்கள் இந்தக் கத்தியை எப்போது தேய்த்தாலும் நான் உங்கள் முன் தோன்றுவேன்,” என்றது அந்த குட்டி மனிதன் உருவம்.

    ஜடாமுனி அங்கும் இங்கும் தேடி, பயந்து, கடைசியில் தனக்கு கீழே குட்டியாக நின்ற மனிதனைப் பார்த்து முதலில் நம்ப மறுத்து, மிரட்சியில் வேர்த்து பூத்து, பின் ஒருவழியாக நம்பி, அருகில் சென்று அமர்ந்தான்.

    சிவப்பு அவனைப் பார்த்து கண்ணடித்து, “நீங்கள் என்ன சொன்னாலும் செய்வேன்” என்றது.

    சற்று அதையே உற்றுப் பார்த்தவன், சற்று தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு, இந்த காட்சியை எங்கோ பார்த்தது போல இருக்கிறதே என்று யோசித்த படியே ஒரு முடிவுக்கு வந்தவனாய், “ஓ… அப்டியா எங்க, எனக்கு நூறு ரூபாய், சில் பீர் ஒன்னு, நூறு ரூபாய்க்கே வாங்கிட்டு வா பாக்கலாம்” என்றான்.

    அடுத்த கணம் முகத்தை தொங்க போட்டுக் கொண்டு வந்தது சிவப்பு.

    “என்ன சிவப்பு?” என்றான்

    “அஞ்சு ரூபாய் அதிகம் வாங்கி விட்டார்கள் ஆலம்பனார். மன்னிக்கவும். ஆனால் வாங்கியவன் கையை பிய்த்து எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்” என்றது.

    ஜடாமுனி சிரித்துக் கொண்டே, “ஆமா சிவப்பு நீங்க பொதுவா ரெம்ப பெருசாத்தானே இருப்பீங்க?” சந்தேகத்தோடு கேட்டான். அவன் மனக் கண்ணில் பெரிய பூதம் தெரிந்தது.

    “ஆலம்பானார், அது எங்க தாத்தா காலம். இது கணிப்பொறி உலகம் அதுதான் நானும் சுருங்கி விட்டேன்” என்று சொல்லி சிரித்தது ஜடாமுனியும் சிரித்தான்.

    “சரி சிவப்பு. உன்னையும் இந்த கத்தியையும் வைத்து எனக்கு நிறைய வேலை இருக்கிறது. இந்த பூமியை சரி செய்ய வேண்டும் திட்டம் போடுகிறேன். நீ இப்போது போ” என்றான்.

    சிவப்பு, தலையை சொரிந்து கொண்டு நின்றது.

    “என்ன சிவப்பு?” என்றான்.

    “இல்லை. வேறு ஏதாவது வேண்டுமா ஆலம்பனார்?”

    “வேண்டும் என்றால் கூப்டுகிறேன், சிவப்பு.”

    “இல்லை… பிசின், பின்ஷிகா, குருஷ்கா என்று நடிகைகள் யாராவது?”

    “எதற்கு? நான் ஒன்றும் கட்சி ஆரம்பிக்க போவதில்லையே?”

    “ஐயோ… ஆலம்பனார் நீங்கள் சிறு பிள்ளையாகவே இருக்கிறீர்கள்” என்று கண்ணைக் காட்டியது சிவப்பு.

    “அடிங்… கொய்யால” என்று ஜடாமுனி கத்த கணத்தில் காணாமல் போனது சிவப்பு.

    இனி சிவப்பு தான் எங்கும்.

    Share
  • வெளிநாட்டுப் பணி

    —ஆர். எஸ். கலா

    வறுமையின் பிடியால்
    பெண்கள் எடுக்கும்
    திடீர்முடிவு
    அயல்நாட்டுப்  பணி!

    பலகதை கூறித்
    தன் மக்களைப்
    பாரப்படுத்துவது
    உறவிடம்!

    பல ஏக்கங்களையும்
    கவலைகளையும்
    சுமந்து கலங்கிய
    கண்ணுடன் விடை
    பெறுகின்றனர்!

    அறிமுகம் இல்லா உறவு
    அறியாத இடம்
    புரியாத மொழி
    நடுங்கிய உள்ளத்தோடு
    அவர்கள் இல்லம் போய்
    சேருகின்றாள்!

    தாயான அவள்
    ஆயாவாக மாறினாள்
    பெற்ற பிள்ளையைவிட்டுப்
    பிறர் பிள்ளையைத்
    தாங்கினாள்!

    உள்ளத்தில் பொங்கிவரும்
    வேதனையை விழிநீராலே
    அணை கட்டினாள்!

    அன்பு காட்ட யாரும் இல்லை
    உரிமையும் முழுமையாக
    இல்லை,  ஊரார் வீட்டில்
    எடுப்பார் கைப்பிள்ளை
    ஆனாள்!

    தாங்கிய பிள்ளையை
    ஆசையாக இறுக்கமாக
    அணைக்க முடியவில்லை
    கோபத்தில் இரண்டு தட்டு
    முதுகில் போட முடியவில்லை
    பிள்ளையின் சிவந்த உடல்
    பார்த்தால் மறு நொடியே
    தனக்கு  மரணம் நிச்சயம்!

    பயத்தில் பாதி பணத்துக்காக
    மீதி என்று அக்கறை காட்டுகிறாள்
    பிள்ளைமேல் தொடருகின்றது
    ஆயாப் பணி!

    தனி அறையில் என்றும்
    கண்ணீர் மழை பொழிகிறாள்
    தான் பெற்ற பிள்ளையை
    நினைத்து!

    தன் பிள்ளை அம்மா
    நினைவில் பொம்மையைக்
    கட்டி அணைத்துத் தூங்கும்
    கதை கேட்டதும் புழுவாகத்
    துடிக்கிறாள்!

    இறைவன் மட்டும்
    அறியும் ரகசியம் இது!

    நெஞ்சினிலே குடி
    இருக்கும் வறுமை
    நினைவு வரவே
    அனைத்தையும்
    ஒதுக்கிவிட்டு மன
    வலியுடன் தொடருவாள்
    பணியை!

    கடலில் தத்தளிக்கும்
    படகாய்  அவள் மனம்
    உள்ளத்தில் மகிழ்ச்சி இல்லை
    நிறைவான உணவு இல்லை
    நிம்மதியான உறக்கம் இல்லை
    சதா மனமும் மூளையும் பல
    கதைகள் கூறும் தனக்குள்ளே!

    உதடு சிரிக்கும் உள்ளம்
    உள்ளே அழும் உடலோ
    நடிக்கும் புத்தியோ
    சிந்தனையில் சிறைப்பட்டுவிட
    வாழ்க்கைப் பயணத்தைத்
    தொடர்கின்றாள் இரண்டாண்டை
    எதிர்பார்த்தவண்ணம் ஆயாவாக!

     

    Share