Blog

  • தியானம்

    தமிழ்த்தேனீ

    images

    நீங்கள் தியானம் செய்ய வேண்டும் என்று முழுமனதோடு விரும்பினாலும் உங்கள் வேலைகள், நேரமின்மை போன்ற காரணங்களால் இது வரை தியானத்திலேயே ஈடுபட்டதில்லை என்கிற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா ? கவலைப்படாதீர்கள் நீங்கள் தினமும் தியானம் செய்துகொண்டுதான் இருக்கிறீர்கள். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை.

    நீங்கள் அன்றாடம் செய்ய வேண்டிய அல்லது செய்யாவிட்டால் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வேலைகளை நேரம் தவறாமல் நேர்த்தியான முறையில் ஒழுங்காக செய்கிறீர்களா?

    1. அல்லது நான்கு வேலைகளில் மூன்றை சரியாகச் செய்துவிட்டு ஏதேனும் ஒரு வேலையில் குறை வைத்துவிடுகிறீர்களா? உங்கள் கவனம் குறைந்திருக்கிறது என்பதை உணர்த்தும் முதல் காரணி இது

    2. அல்லது நான்கு வேலைகளில் இரண்டைச் சரியாகச் செய்துவிட்டு இரண்டு வேலைகளை அரைகுறையாக செய்கிறீர்களா? உங்கள் கவனம் பாதியாகக் குறைந்திருக்கிறது என்பதை உணர்த்தும் இரண்டாம் காரணி இது

    3. அல்லது உங்கள் வேலைகளில் ஒன்றை மட்டுமே சரியாகச் செய்துவிட்டு மூன்று வேலைகளை முறையாகச் செய்யாமல் அதன் விளைவுகளால் அவதிப்படுகிறீர்களா? உங்கள் கவனம் முக்கால் பங்கு குறைந்திருக்கிறது என்பதை உணர்த்தும் மூன்றாம் காரணி இது

    4. அல்லது உங்கள் நான்கு வேலைகளையுமே சரியாகச் செய்யாமல் குழப்பிக் கொண்டு மற்றவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிறீர்களா? உங்கள் கவனம் முழுமையாக விலகிவிட்டது என்பதை உணர்த்தும் முழுக்காரணி இது

    இந்த நிலை மிகவும் மோசமான நிலை நீங்கள் தியானம் செய்தே ஆகவேண்டும், அப்போதுதான் உங்கள் கவனத்தை நீங்கள் மீட்கமுடியும், ஆகவே நீங்கள் தியானம் செய்து உங்கள் கவனத்தை மீட்டே ஆகவேண்டும்.

    இப்படியெல்லாம் மேற்கூறிய நான்கு நிலையையும் நீங்கள் எட்டாமல் உங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படாமல் இருக்கிறதா? நீங்கள் தியானம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது பொருள்.

    ஏனய்யா நீங்கள் உங்கள் வேலைகளை முறையாகச் செய்கிறீர்கள் என்றால் தியானம் செய்கிறீர்கள் என்பது பொருள் என்று நான் சொல்வதை நம்ப முடியவில்லையா? உண்மை !

    தியானம் என்பது என்ன என்பதை முதலில் பார்ப்போம்

    தியானித்தல் என்றால் மனதை ஒருமுகப்படுத்துதல் , மனதை ஒருமுகப்படுத்துதல் என்றால் அலைபாயவிடாமல் ஒரு நிலையான இடத்தில் நிறுத்துதல் என்பது பொருள், இந்த மனதை ஆழ் கடலுக்கு ஒப்பிடுவார்கள் , ஏன் தெரியுமா? எல்லாக் கடலும் ஓரத்திலே அலைகளைக் கொண்டிருந்தாலும் நடுக்கடலில் அலைகளில்லாமல், சலனமில்லாமல் அமைதியாய் இருக்கும்.

    நம் மனமும் பலவிதமான சிந்தனை அலைகளை ஓரத்திலே கொண்டிருந்தாலும் ஆழ் மனதில் அமைதியாய் நடுக்கடல் போல் இருக்கும்.

    இந்த ஆழ் மனதில் மனதின் மையத்துக்கு நம் எண்ணங்களை சிதறவிடாமல் திரட்டி ஒரு புள்ளியில் குவித்து அந்தப் புள்ளியை நோக்கி நம் கவனத்தை கொண்டு செல்லுதலே ,அப்படிப் பட்ட பயிற்சியே தியானம், இப்படிப் பட்ட தியானத்தை நாம் அன்றாடம் செய்து கொண்டிருக்கிறோம் என்று நான் ஏற்கெனவே சொன்னேன் , மிகச் சாதாரணமாக நாம் செய்யும் அன்றாட வேலைகளில் சிலதை உதாரணமாகக் கொண்டு மிக எளிமையாக அலசுவோம்

    நம் வீட்டில் நாம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வேலைக்கு செல்பவராக இருந்தால் , அல்லது பள்ளிக்கு செல்பவராக இருந்தால் அன்றாடம் எழுந்து பல்துலக்கிவிட்டு காலையில் ஒரு புத்துணர்ச்சி தரும் பானத்தை குடித்துவிட்டு , காலைக் கடன்களை முடித்துவிட்டு குளித்துவிட்டு காலை உணவை முடித்துவிட்டு பள்ளிக்கோ கல்லூரிக்கோ, அல்லது அலுவலகத்துக்கோ செல்வோம்.

    இரவு வெகு நேரம் கழித்து படுக்கைக்குப் போய்த் தூங்கியதன் காரணமாக காலையில் வெகு நேரம் கழித்து எழுந்து நேரக் குறைவால் பதட்டமாக காரியங்களைச் செய்யும் போது தவறு ஏற்படுதல் இயல்பு, அப்படியில்லாமல் சரியான நேரத்துக்கு எழுந்தும் இயல்பாகக் காரியங்களை செய்யாமல் தடுமாறினால் அது ப்ரச்சனைகளைத் தரும், அப்படி இல்லாமல் முறையாக இயல்பாக எல்லாவற்றையும் செய்தால் உங்கள் கவனம் சிதறவில்லை என்பது பொருள்.

    காலைக் கடன்களை மறக்காமல்முடித்துவிட்டு குளியலைறைக்கு செல்லும் முன் உடலைத் துடைத்துக் கொள்ள துவாலையை எடுத்துக் கொண்டு போகிறீர்கள், அங்கே சென்று மறக்காமல் உங்கள் சோப்பை உபயோகித்து குளிக்கிறீர்கள், வழுக்கி கீழே விழுந்துவிடாமல் கவனமாக நடந்து வந்து உங்கள் துவாலையால் துடைத்துக் கொண்டு வெளியே வந்து உங்கள் ஆடைகளை அணிந்துகொண்டு காலை உற்சாக பானத்தைக் குடித்துவிட்டு அல்லது காலை உணவை முடித்துவிட்டு உங்கள் வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு ,உங்களுக்கு வேண்டிய புத்தகங்களோ, அல்லது கோப்புக்களையோ எடுத்துக்கொண்டு, சாலைப் போக்குவரத்துக்கேற்ப பயண நேரத்தையும் உங்கள் பாதுகாப்பையும் கருதி லாவகமாக வாகனத்தை இயக்கி மிகச் சரியான நேரத்தில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைந்து அங்கே நீங்கள் செய்ய வேண்டிய பணிகளை திறமையாக முடித்துவிட்டு மீண்டும் மாலை வீட்டுக்கு அதே போல் பத்திரமாக வருகிறீர்கள் என்றால் உங்கள் மனதை நீங்கள் ஒருமுகப்படுத்தி காரியமாற்றி இருக்கிறீர்கள் என்பது புலனாகிறது. அப்படியானால் நீங்கள் தியானத்தில் இருந்தீர்கள் என்று பொருள் அல்லவா?

    மேலும் மாலையில் வீட்டுக்கு வேண்டிய பொருள் ஏதேனும் வாங்க வேண்டியிருந்தாலோ அல்லது வரும் வழியில் யாரையாவது காணவேண்டும் என்று திட்டமிட்டிருந்தாலோ அவற்றையும் மிகச் சரியாக செய்து முடித்து வீட்டுக்கு வருகிறீர்கள் என்றால், மனதை ஒருமுகப் படுத்தி இருந்தீர்கள் என்றுதானே பொருள், மனதை ஒரு முகப்படுத்தவே தியானம் எனும் போது நீங்கள் ஏற்கெனவே மனதை ஒருமுகப்படுத்திக் காரியமாற்றுவதால் தியானத்தில் இருந்தீர்கள் என்றுதானே பொருள்.

    மறதி ஏற்படும் போது ஞாபக சக்தியைத் தூண்டுவதற்கு,. மனம் சலனப்படும் போது, எண்ணக் குவிப்பு சிதறும் போதுதான் மனதை ஒருமுகப்டுத்துவதற்கு தியானம் என்பது தேவைப்படுகிறது. ஆகவே நாம் நம் கடமைகளை ஒழுங்காகச் செய்கிறோம் என்றாலே தியானம் செய்து கொண்டே இருக்கிறோம் என்றுதான் பொருள்.

    Share
  • விதையொன்றுபோட….

    சரஸ்வதி ராசேந்திரன்

    சந்தானமும் ,காஞ்சனாவும் ஊரை எதிர்த்து,உறவை பகைத்து திருமணம் செய்துகொண்டவர்கள் ,அதனால் ஒன்றும் பாதகமில்லை சந்தானம் ரியல் எஸ்டேட் பிஸினெஸ் பண்ணி லட்சம் லட்சமாய் சம்பாதித்து வீடு ,கார் என சமூக அந்தஸ்தோடு இருக்கிறான்.

    அவர்களுக்கு ஒரே மகள். ஊரே வியக்கும் வண்ணம் நூறு பவுன் போட்டு விமர்சையாக திருமணம் செய்ய ஆசைபட்டான் சந்தானம் .

    மனைவியிடம் தன் விருப்பத்தை சொன்னபோது,
    ‘’இப்ப என்ன அவசரம் அவளுக்கு?’’

    ‘’உனக்குத் தெரியாது காஞ்சனா ,பெண்ணும் ,கீரைத்தண்டும் முற்றினால் விலை போகாது இதுதான் சரியான வயது ’’

    ‘’இல்லை அவள் ..வேலைக்குபோகனும்னு ..’’

    ‘’அதுக்கெல்லாம் அவசியமில்லை ..போற இடத்திலே நல்ல வசதி’’

    கேட்டுக்கொண்டே வந்த அகிலா ’’ யாருக்கப்பா திருமணம் ?’’கேட்டாள்
    ‘’உனக்குத்தான் அகிலா ‘’

    ‘’ எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம் ‘’

    ‘’ நான் என் நண்பனிடம் வாக்கு கொடுத்திட்டேன் அகிலா’’

    ‘’சாரி ப்பா ‘,பெற்றவர்களை நான் மதிப்பவள் தான் ஆனால்..அதுக்காக நான் சுயத்தை இழக்க முடியாது ‘’

    ‘’’’சுயமா அதென்ன ?’’

    ‘’ நீங்க உங்க மனசுக்கேத்த பெண்ணைத்தானே எல்லா தடைகளையும் மீறி பண்ணிகிட்டீங்க,உஙளுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா?

    ‘’அப்ப நீ யாரையாவது லவ் பண்றியா?சொல்லு ‘’

    ‘’இது வரை யாரையும் காதலிக்கலே அந்த நேரம் வரும்போது சொல்றேன், அது வரை பொறுமையா இருங்க ‘’ சொல்லி விட்டு போனாள்.

    வாயடைத்து நின்றார் சந்தானம் .விதையொன்று போட சுரைஒன்றா முளைக்கும்?

    Share
  • மறக்க.. முடக்கு..கூவு!

    நாகினி

     

     

    குலத்தை அழித்துக் குடிதான் பேணும்
    நலத்தைச் சிதைத்து நல்மதிப்பு மாய்க்கும்
    குடியை ஒழித்திடக் கூவு!

    மதுவைக் குடித்து மதிமயங்கிச் சந்தை
    பதுக்கல் தொழிலென பாவப்பயன் ஈனும்
    மதுதான் வேண்டாம் மற!

    குடித்தே அடகாய்க் குடலும் கெட்டுப்
    படித்தும் முடங்கிநலன் பாழாதல் நோயாம்
    மதுவைத் தொடுதல் முடக்கு!

     

    Share
  • தினைப்புனம்

    -பத்மநாபபுரம் அரவிந்தன்

    தோழியோடு கையில்
    கவண் கல் கொண்டு
    தலைவி வந்தாள்
    தினைப்புனம் காவல் காக்க…

    குருவிகள் விரட்டப்
    பரண் மேலேறிப்
    பார்த்துப் பார்த்துச்
    சலித்துப் போனவள்
    செல்ஃ போன் எடுத்துத்
    தந்தைக்குச் சொன்னாள்
    ”அப்பா… ஒரு குருவியைக் கூட
    காணும்” என்று!

     

    Share
  • பேரவஸ்தை

    -பத்மநாபபுரம் அரவிந்தன் 

    உன் நினைவிலிருந்து
    மனதைப் பிரித்தெடுக்கப்
    பூத்துக் குலுங்கும் கொன்றையை,
    குலை தள்ளிய வாழையை
    வயலை, மலையை
    பார்த்து நின்றும்…

    இவையனைத்தையும் புறந்தள்ளிக்
    கருநீலப் பாவாடையும்
    வெளிர்மஞ்சள்  தாவணியுமாய்
    ஈரமுலராக் கூந்தல் விரிந்த
    உன் முகம் மனதைப் பிசையும்…

    இன்றாவது உன்னைப்
    பார்ப்பதைத் தவிர்த்து
    என் மன அவஸ்தைகளை
    அடக்க நினைத்தபடி
    எதிர்வரும் உன்னைத்
    தலை நிமிராமல் கடந்ததும்
    மனம் முன்னேறும்
    என் கைவிட்டு உனை நோக்கி…

    பிறகு தினம்போல்
    இன்றும் தந்து செல்கிறாய்
    இனம்புரியா உணர்வுடன்
    ஒரு பேரவஸ்தையை…!

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 46

    கார்ல் மார்க்ஸ் அருங்காட்சியகம், ட்ரியா, ஜெர்மனி

    சுபாஷிணி

    ஐரோப்பிய அரசியல் சிந்தனையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சிறப்பு மார்க்சியத்திற்கு உண்டு. அரசாட்சியை மட்டுமே தொடர்ந்து பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த ஐரோப்பிய நாடுகளில் மக்களின் சிந்தனையில் மாற்றுக் கருத்தை விதைத்த சித்தாந்தங்களில் மார்க்சியம் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. மார்க்சியம் என இன்று அழைக்கப்படுகின்ற இந்த அரசியல் சித்தாந்தத்தை வழங்கியவர் கார்ல் மார்க்சு. 19ம் நூற்றாண்டின் ஐரோப்பிய சரித்திரத்தை மார்க்சின் சித்தாந்தங்களிலிருந்து பிரித்து வைத்துப் பார்ப்பது இயலாத ஒன்று. அத்தகைய ஆளுமையான கார்ல் மார்க்சு பற்றிய வரலாற்றுச் செய்திகளை வருகை தருகின்ற பார்வையாளர்களுக்கு வழங்கும் கார்ல் மார்க்சு அருங்காட்சியகம் பற்றிய தகவல்களே இன்றைய பதிவாக அமைகின்றது.

    asuba
    ​

    கார்ல் மார்க்சு அருங்காட்சியகம் ஜெர்மனியின் ட்ரியா நகரில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் மிகப் பழமை வாய்ந்த உரோமானிய பேரரசு கோட்டை கட்டி வாழ்ந்த ஒரு அரச நகர்ப்பகுதி என்ற தனிச்சிறப்பும் கொண்டது. ட்ரியா நகர் அமைந்திருக்கும் இடம் ஏனைய பிற அண்டை நாடுகளான பிரான்சு, லுக்சம்பர்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு அருகாமையில் அமைந்திருப்பது அக்காலத்தில் கார்ல் மார்க்சு மட்டுமன்றி ஜெர்மானிய தொழிற்சங்கவாதிகளும், அரசுக்கு எதிர்மறையான அரசியல் சிந்தனைப் போக்கு கொண்டோருக்கும் ஓர் பெரும் நகரத்திலிருந்து மற்றொரு நகரம் சென்று கலந்துரையாடல்களையும் சந்திப்புகளையும் நிகழ்த்த மிக ஏதுவாக அமைந்திருந்தது என்பது ஒரு முக்கிய விசயம்.

    asub5​

    கார்ல் மார்க்சு ஜெர்மனியில் பிறந்து தன் இளம் பிராயத்தை ட்ரியா நகரில் கழித்து பின்னர் பெர்லினில் தனது பட்டப்படிப்பை முடித்து தனது இளம் வயதில் குடும்ப வாழ்க்கையை மீண்டும் ட்ரியாவில் தொடங்கினாலும் அவர் தன் வாழ்நாளில் ஜெர்மனியை விட்டு ஏனைய நாடுகளில் செலவழித்த ஆண்டுகள் தான் அதிகம். ஜெர்மனியில் தனது அரசியல் சித்தாந்தத்திற்கான அடித்தளத்தை அவர் உருவாக்கிக் கொண்டார். பிரான்சில் பணியாற்றிய காலத்தில் புறச் சூழலும் தன் நட்பு வட்டாரமும் ஏற்படுத்திய தாக்கத்தால் ஒரு புரட்சியாளராக வடிவெடுத்தார். பின்னர் பெல்ஜியத்தில் சில நாட்கள் அகதி நிலை போன்ற வாழ்க்கை அவரை மட்டுமன்றி ஒட்டுமொத்த குடும்பத்தையும் தாக்கினாலும் தனது கொள்கையில் அவர் எந்த மாற்றத்தையும் செய்து கொள்ளவில்லை. இறுதியில் அவரது இங்கிலாந்து வாழ்க்கை அவரை உலகம் போற்றும் ஒரு பெரும் அறிஞராக வடிவமைத்தது.

    ​asub4

    கார்ல் மார்க்சின் வாழ்க்கை சரித்திரத்திலிருந்து பிரிக்க முடியாத இருவர் என்றால் அது அவரது மனைவி ஜெனியும் அவரது நண்பர் ஃப்ரெடெரிக் எங்கெல்சும் என்று தயங்காது கூறலாம். இவர்கள் இருவரும் அவரோடு இணைந்து இருந்தவர்கள் மட்டும் அல்ல. கார்ல் மார்க்சிற்கு எல்லா சிரம காலங்களிலும் உடன் துணையாக இருந்து அவரை உள்ளமும் உடலும் சோர்வடையாது இருக்க உதவியவர்கள். வரலாறு இவர்களை மறக்காது!

    ​asub3

    கார்ல் மார்க்சு அடிப்படையில் ஒரு யூத இனத்தவர். அவரது தந்தையார் ஹைன்ரிக் மார்க்சு பின்னர் கிறிஸ்துவ மதத்தை தழுவிக் கொண்டு ட்ரியா நகரிலே வழக்கறிஞராகத் தொழில் புரிந்து வந்தார். மத நம்பிக்கைகள் மிக ஆழமாக வேறூன்றிய காலகட்டத்தில் ஜெர்மனி அப்போது இருந்தது. இன்றைய ஜெர்மனியிலிருந்து மாறுபட்ட சிந்தனையைக் கொண்ட மக்கள் இருந்த காலகட்டம் அது. வக்கீல் தொழில் மட்டுமல்லாது அரசியலிலும் ஈடுபட்டு வந்தார் ஹைன்ரிக்மார்க்சு. ஹென்ரிட்டே என்னும் பெண்மணியை மணந்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடந்தி வந்தார். இவர்களுக்கு 1818 மே மாதம் 5ம் தேதி பிறந்தவர் தான் கார்ல் மார்க்சு. பிறந்து வளர்ந்து தன் இளமை காலத்தை கார்ல் என்னும் இளைஞன் கழித்த அந்த இல்லமே இப்போது கார்ல் மார்க்சு அருங்காட்சியகமாக இருக்கின்றது.

    ​asub2

    ஒரு நாட்டின் எல்லா வளங்களுக்கும் அடிப்படையில் மனித சக்தியே இருக்கிறது. ஆனால் அந்த உழைப்பாளிகளை விட அவர்களை வைத்து வேலை வாங்கும் முதலாளிகளே பெரும் அளவில் லாபத்தை அனுபவிப்பவர்களாக இருக்கின்றனர். உழைத்து வளத்தைப் பெருக்கும் உழைப்பாளி வர்க்கமோ அந்த வளத்தை அனுபவிக்க இயலாத ஒரு சமூகமாகவே இருக்கின்றது. இது மனித இனத்தில் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் வகையில் அமைகின்றது.

    கார்ல் மார்க்ஸ் கையெழுத்து

    asub1

    மக்கள் வாழ்க்கையில் பொருளாதார சமன்பாடு என்பது நடந்தால்தானே ஒட்டு மொத்த சுபிட்சத்தை ஒரு நாடு அனுபவிக்க முடியும்?

    மக்களில் பெருவாரியானோர் சுபிட்சமாக இருந்தால் தானே நாடு வளமுடன் இருக்கும்?

    ஒரு சிலர் மட்டுமே பொருளாதார அனுகூலங்களை அனுபவிப்பதும் ஏனையோர் வருமையில் வாடி துன்பத்திலும் நோயிலும் கிடந்து அல்லல் படுவதும் மட்டும் நிகழ்ந்தால் அந்த நாட்டில் அமைதி எவ்வாறு நிலவும்?

    மக்களின் தொடர்ச்சியான அதிருப்தியானது சமூகப் பிரச்சனைகளான கொள்ளை, போராட்டம் பொருள் சேதம் ஆகியவற்றில் தான் ஒரு நாட்டை கொண்டு வந்து சேர்க்கும். இது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சிக்குப் பெரும் தடையாக அல்லவா அமையும்?

    தொடரும்..

    ​​

    Share
  • தோழமையுடன் ஒரு பயணம் – 4

    ஸ்ரீலங்கா (பகுதி 4)

    நிர்மலா ராகவன்

    அடுத்து கண்டியில் இரு தினங்கள்.

    போகும் வழியில் ஸீக்ரி என்ற சிவந்த மலையைக் கண்டோம். 180 மீட்டர் உயரம். நான்கு புறமும் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருந்தது. மேலே அரண்மனை இருந்ததாம்.

    anir
    கண்டி மலைப்பாங்கான ஊர். சாமான்கள் கொழும்புவைவிட மிக மலிவாகக் கிடைக்கின்றன. உள்ளூர் பருத்தித் துணி அழகாக இருக்கிறது. யாரும் `வாங்கிப் போங்கள்,’ என்று கட்டாயப்படுத்தவில்லை. விலை கூறிவிட்டு, மரியாதையாக ஒதுங்கி நிற்கிறார்கள்.

    பெண்கள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட நைலக்ஸ் அல்லது பருத்திப் புடவைகளை அணிகிறார்கள். புடவையின் முன்தலைப்பு ஆறுபோல் மார்பகத்தின் நடுவில் செல்கிறது. தோளுக்குப் பின்னால் தொங்கும் தலைப்பு தெருவில் இடிக்கும் நீளம்! மூன்றங்குல அகலமாக விட்டிருக்கிறார்கள். பார்க்க மிக அழகாக இருந்தது. சிலரது ஜாக்கெட் பின்னால் ஓரிரு அங்குலம்தான். முன்னாலும் கழுத்துப்பகுதி தாராளமாக இறங்கியிருந்தது. அது அவர்கள் பாணியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததாலோ, என்னவோ, ஒரு ஆணும் அவர்களை விறைத்துப் பார்க்கவில்லை என்பதை மகிழ்வுடன் கண்டோம்.

    ஒரு துணிக்கடையில், நான் பேச ஆரம்பித்ததும், `தமிழா?’ என்று பலர் ஓடி வந்தார்கள். பார்க்க வேண்டிய இடங்களைப்பற்றி நிறைய தகவல் கொடுத்தார்கள். அங்கேயே பிறந்து வளர்ந்தவர்களாம். தமிழ்ப்பள்ளியில் படித்தவர்கள். தினமும் அருகிலிருந்த கோயிலுக்குப்போய் நெற்றியில் குங்குமம் தரித்துக்கொண்டுதான் வேலைக்கு வருவதாக ஒருவர் கூறினார்.

    akoi
    அவர்கள் வழி சொல்ல, அக்கோயிலுக்குப் போனேன். அதன் பின்னால், அதே வளாகத்தில் ஒரு புத்தர் கோயிலும் இருந்தது.
    நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகேயே புத்தருடைய பல் இருக்கும் பிரசித்தி பெற்ற கோயில் (Temple of the tooth relic) இருந்தது. அது தெரியாது, ஒரு ஆட்டோக்காரரிடம் எங்களை அங்கே கொண்டுவிடும்படி கேட்க, `வாக்!’ என்றார்! கோயிலுக்கு முன்னாலிருந்த பூக்கடைக்காரர் புன்சிரிப்புடன், அவருடைய அன்பளிப்பாக ஒரு ஊதா நிற அல்லிப் பூவை என் கையில் கொடுத்தார்.

    அந்தக் கோயிலுக்கு சீனர், ஜப்பானியர் போன்ற அயல் நாட்டு பௌத்த மதத்தினர் பெருவாரியாக வருகிறார்கள். என் மகள் கையில்லாத சட்டை அணிந்திருந்தாள். இரு விரல்களை தோளுக்குக் கொஞ்சம் கீழே வைத்து, `உள்ளே நுழைய முடியாது,’ என்று காட்டினார் டிக்கட் கொடுப்பவர்.

    தேயிலைத் தோட்டங்கள் எங்களுக்கு அபூர்வமில்லை என்பதால், அதை விடுத்து, தாவரவியல் தோட்டத்திற்குப் (botanical gardens) போனோம். பார்த்து ரசிக்க எவ்வளவோ இருந்தன. நாலாயிரம் வகை தாவர வர்க்கங்கள்.

    எங்களை அங்கு கொண்டுவிட்ட ஆட்டோக்காரர், `காத்திருக்கட்டுமா?’ என்று கேட்டார்.
    எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று சொல்லத் தெரியாததால், மரியாதையாக மறுத்தேன். அவர் எனக்கு ஆதரவாக, `இங்ஙன வண்டி பிடிக்கலாம்,’ என்று சொல்லிச் சென்றார்.

    மொழி தெரியாது நாங்கள் திண்டாடப் போகிறோமோ என்ற கவலையுடன் என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி போனவரைப் பார்த்துக் கையாட்டிச் சிரித்தேன். அப்பப்பா! அவர் முகத்தில்தான் எவ்வளவு மகிழ்ச்சி!

    திரும்பம் வழியில், கொழும்புவிலிருந்து ஏழு மைல் தொலைவிலிருந்த களனி (Kelaniya) கோயிலுக்குப் போனோம். இங்குதான் ராமர் விபீஷணனைச் சந்தித்தாகச் சொல்லப்படுகிறது.

    இந்நாட்டில் ஆட்டோக்காரர்கள் மீட்டருக்குமேல் கேட்காததுடன், மீட்டர் இல்லாவிட்டாலும் அதே கட்டணத்தையே கேட்டது வியப்பூட்டியது. தமிழ் தெரியாதவர்கள் சைகையிலேயே விளக்கினார்கள். `Coconut tree!” என்று சுட்டிக் காட்டினார் ஒரு ஆட்டோக்காரர்! தலையாட்டி வைத்தேன்.

    தெருக்களைக் கூட்டுபவரிலிருந்து, எந்தத் தொழில் புரிபவர்களாக இருந்தபோதும், ஆன்மதிருப்தியுடன், குறுக்கு வழி தேடாது செய்ததைப் பார்க்க முடிந்தது. இவர்களுக்குத் தம் உழைப்பில் பெருமை இருக்கிறது. மனித நேயம் அதிகம்.

    கம்போடியாவிலும் இப்படிப்பட்டவர்களைச் சந்தித்து இருக்கிறேன். `எங்கள் தந்தை, மாமா எல்லாரும் போரில் மடிந்துவிட்டார்கள். நீங்கள்தாம் எங்கள் உறவினர்!’ என்று எங்களை ஏற்ற ஒரு வழிகாட்டியின் நினைவு வந்தது.

    இயல்பான நமது மனிதத் தன்மையை நம்முள்ளிருந்து வெளிக்கொணர யுத்தமும், இனக்கலவரமும் அவசியமோ?

    முற்றும்

    Share
  • பொறாமை

    -ஆர். எஸ். கலா

    மனிதன் மனதிலே
    மறைத்து வைத்து
    வளர்க்கும்  மரம்
    பொறாமை

    இரத்தத்தை நீராக
    ஊற்றி எலும்பை
    வேலியாகக் கட்டி
    பாதுகாத்து வைக்கும் மரம்
    பொறாமை

    பிறர் வாழ்க்கைமேல்
    கல் எறிந்து
    அவர்கள் சந்தோசத்தை
    உரமாகப் போட்டு
    வளர்க்கும் மரம்
    பொறாமை

    மனம் என்னும்
    மண்ணிலே வளர்ந்து
    முகத்திரையைக் கிழித்து
    ஒரு நாள் வெளியாகும் மரம்
    பொறாமை

    சிறுகச் சிறுகச் சேர்ப்பவனையும்
    சிதைத்துத் துவைக்க
    வரும் மரம்
    பொறாமை

    உறவாடிக் கெடுக்கப்
    பாலம் போட
    முன்வரும் மரம்
    பொறாமை

    உள்ளே ஒன்று
    வெளியே  ஒன்று
    வைத்து மறைக்கக்
    காரணமாகும் மரம்
    பொறாமை

    ஒருவன் வளர்ச்சியைப்
    பார்த்ததும் கெட்டவனின்
    உள்ளத்தில்
    முளையிடும் மரம்
    பொறாமை

    மனிதன் மனிதனாக
    வாழ விடாமல்
    தடுக்கும் மரம்
    பொறாமை

    எத்தனைப் போட்டியிலும்
    திட்டம் போட்டு
    நுழைகின்ற மரம்
    பொறாமை

    பொதுவாகப் பொறாமை
    விதையிடுவது
    எல்லோரிடமும்
    உண்மை…
    முளையிலே
    கிள்ளினால்   நன்மை!

     

    Share
  • சிகரம் நோக்கி – 22

     சுரேஜமீ

    எளிமை

    peak11
    பிறக்கும் போது அனைவரும் வெறுமையாகத்தான் பிறக்கின்றோம் . ஆனால், அவரவர் வாழ்க்கைக்கு ஏற்ப வசதிகள்,

    வாய்ப்பினை ஏற்படுத்த,

    சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் சில வேற்றுமைகளை விதைக்கிறது.

    இதன் விளைவாக ஒரு அந்நியப்படுதல் என்பது தெரிந்தோ தெரியாமலோ சிந்தையில் புகுந்து விடுகிறது.

    எப்பொழுது நாம் அன்னியப்படுகிறோம் என்ற உணர்வு மேலோங்குகிறதோ,

    எது நம்மைச் சாதாரண நிலையிலிருந்து சற்றே விலகி இருக்க உந்துகிறதோ,

    நெருங்கிப் பழகிய நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ தொடர்பிலிருந்து பிரித்து நம்மை மிகுதிப் படுத்துகிறதோ,

    அத்தகைய சூழலைக் கையாளும் கலையைக் கற்றுக் கொள்வதும்; நம் நிலையிலிருந்து மாறாதிருத்தலுமே

    எளிமையின் இலக்கணம் எனலாம்!

    வசதிகள் பெருகலாம்; தவறில்லை! ஆனால், வளர்ந்து வந்த பாதையை விட்டு விலகாமல், வசதிகளை வாய்ப்புக்களாக உருவாக்கி, அடுத்த மனிதனுக்கு எடுத்துச் செல்வதுதான் வாழ்வின் பயனாகும்.

    மாட மாளிகைகளோ, வைத்திருக்கும் பல சொகுசுக் கார்களோ, இன்ன பிற செல்வங்களோ,

    நம் உழைப்பில் வாங்கியதாக இருந்தாலும், கைக்கு கை மாறிச் செல்லும் இயல்பானது; இல்லையேல், இயற்கை அழிவுக்கு உட்பட்டது!

    ஆனால், நாம் தேடும் மனிதம் மட்டுமே, தன் அத்தியாயத்தை நம்மோடு முடித்துக் கொள்வது என்றால்;

    அதை நாம் வாழ்வில் சரியாகப் புரிந்து கொள்ளத் தயங்குவதற்குத் தடையாக இருக்கும் மனநிலையைத் தவிர்த்தால்,

    நாம் அனைவராலும் விரும்பப்படும் எளிமையான மனிதராக வாழ முடியும்.

    ஆனால் அவ்வாறாக இருக்கும் மனிதர்கள் சிலரே!

    கேள்வியில்தான் தெளிவு பிறக்கும் என்றாலும், நாம் தகுதியான கேள்விக்கு என்றுமே நம்மை உட்படுத்துவதும் இல்லை!

    நிலைமறந்து நிலவைத் தொட்டு என்ன பயன்?

    கற்ற கல்வியும்; கல்வியால் பெற்ற செல்வமும் மட்டும் காரணம் அல்ல; மாறாக உழைப்பு தரும் கௌரவம்; தேடி வரும் பட்டஙகள்; பதவி தரும் புகழ் என பட்டியலை அடுக்கிச் செல்லலாம்

    கவியரசரின் வரிகளில் சொல்லவேண்டும் என்றால்;

    வந்த நாள் முதல் இந்த நாள் வரை
    வானம் மாறவில்லை
    வான் மதியும் மீனும் கடல் காற்றும்
    மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
    நதியும் மாறவில்லை
    மனிதன் மாறிவிட்டான்……….

    செடி கொடிகள்; புள்ளினங்கள் மற்றும் இயற்கை, எத்தன்மையிலும், ஒரே நிலையில் இருக்க,

    மனிதன் மற்றும் ஒவ்வொரு நிலையிலும், வெவ்வேறாகப் பிரதிபலிக்கத் துவங்குகிறான்.

    இதற்கான அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்தால்,

    மனிதன் மட்டும்தான் ‘தான்’ என்றும்; ‘தனது’ என்றும் சுருக்கிக் கொள்கிறான். அதன் பயனாக, வாழ்வில் பெரும்பான்மையிலிருந்து விலகிச் சிறுபான்மை தொகுப்போடுத் தன்னை ஐக்கியப்படுத்தி, வாழ்வின் நோக்கத்தைச் சிறுமைப் படுத்தி விடுகிறான்.

    எளிமைக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்த பலரில் மிகவும் குறிப்பிடத் தக்க தலைவர்கள்,

    kamraj

    கர்ம வீரர் காமராஜர் மற்றும் சமீபத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களும்!

    abdul

    இரு எடுத்துக் காட்டுகள் இவர்களின் எளிமைக்குச் சான்றாக!

    முதலில் தமிழகத்தின் பொற்கால ஆட்சியாகக் கருதப்பட்ட கருப்பு காந்தி காமராசர்,

    முதல்வராகப் பொறுப்பேற்ற நேரம். பாதுகாப்பிற்காக முன்னும் பின்னும் காவல்துறை சார்ந்த சிவப்பு விளக்குப் பொருத்திய மற்றும் பாதுகாப்பு ஊர்திகள் வர,

    தலைவர் காமராசர் உடனடியாக உயர் காவல்துறை அதிகாரியை அழைத்து,

    எனக்கு எதற்கு இவ்வளவு ஆடம்பரம்? மக்கள்தான் உயரிய பாதுகாப்பு; ஆகவே, இத்தகைய பாதுகாப்பை உடனடியாக விலக்குங்கள் என்று உத்தரவிட்டாராம்!

    அடுத்ததாக, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரின் எளிமையைச் சொல்ல வேண்டும் என்றால்,

    மிகச் சாதாரணமானவர்! இப்படியும் ஒரு மனிதரா என்று வியக்க வைக்கும் மனிதர் இக்காலத்தில் வாழ்ந்தார் என்பதே

    நாம் எப்படி எளிமையாக இருக்க வேண்டும் எனக் கற்றுக் கொடுத்த மாமனிதர்!

    குடியரசுத் தலைவராக இருக்கும்போது ஒரு விழாவுக்குச் செல்கிறார். ஆங்கே அமைக்கப் பட்டிருந்த மேடையிலே,

    எல்லா இருக்கையும் சாதரணமாக இருக்க,

    ஒன்று மட்டும் வித்தியாசமாக இருக்கிறது. அதுதான் டாக்டர் அப்துல் கலாமுக்கான இருக்கை என்று சொல்லக் கேட்டதுமே

    இருக்கையை அகற்றச் சொன்னதோடு மட்டுமல்லாமல்,

    அவருக்கும் சாதாரண இருக்கையையே அமர்த்துமாறு வேண்டுகிறார்!

    இவர்களின் வாழ்வு சொல்லும் நீதி என்ன?

    இவர்கள் வாழ்ந்தால் மக்களின் மனதில் நிரந்தரமாக இருக்கலாம் என்ற செய்தி மட்டுமல்ல…..

    இயற்கை வாழ்வின் பின்னும் இருந்து வாழலாம் என்றல்லவா சொல்லாமல் செய்திருக்கிறார்கள்!

    எளிமையாக இருந்தால், சக மனிதனின் உணர்வுகள் புரியும்; எளிதில் நம்மை அடுத்தவர்கள் அணுகவும்; நாம் மற்றவரை அணுகவும் இயலும்!

    இலக்கு நோக்கி எளிதாகப் பயணப்பட முடியும்!

    புறநானூற்றுப் பாடல் ஒன்று இப்படிச் சொல்கிறது….

    பல்சான் றீரே! பல்சான் றீரே!
    …………..
    ………….

    நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
    அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
    எல்லாரும் உவப்பது; அன்றியும்,
    நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே!

    குறிப்பாக நம்மால் மற்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும், நிச்சயம் தீங்காவது இழைக்காமல் இருக்க முடியும்! அதுதான் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியது என்றும்;

    நல்வழியும் அதுதான் என்றும் சொல்கிறதென்றால்,

    எளிமையை விரும்புங்கள்! எளிமையாக இருக்கக் கற்றுக் கொண்டால்,

    நமக்கான தேவைகள் புலப்படும்! மற்றவர்களின் தேவைகளையும் நம்மால் நிறைவேற்ற முடியும்!

    ஒவ்வொரு நகர்வாகத் தொடர்வோம் சிகரத்தை நோக்கி…….

    Share
  • வறுமை

    -ச.துரை

    என்னுள்
    நூறு ஆசைகள்
    உன்னுள்
    ஐம்பது ஆசைகள்
    நம் பிள்ளைக்கு
    இருபது ஆசைகள்
    அவன் பொம்மைக்குப்
    பத்து ஆசைகள்
    புலம்பித் தீர்க்கிறேன்
    மௌன ஓசையில்!

    இறுகப் பற்றிக்
    கொண்டோமே
    நாம் வறுமை எனும்
    பசையை!

     

    Share
  • ‘அந்த நாள் ஞாபகம் வந்ததே’

    —எஸ்.வி.நாராயணன்.

    எண்பது வயதை எட்ட இன்னும் ஓரிரு ஆண்டுகளே உள்ள இந்நிலையில், கடந்து வந்த காலத்தை சற்று நினைத்துப் பார்க்கிறேன். பள்ளியிலும், கல்லூரியிலும் படித்த நாட்களை மறக்க முடியுமா?

    முதலில், மேற்கு மாம்பலத்தில், அப்போது இருந்த ஸ்ரீதேவி பாடசாலை என்ற ஆரம்பப் பள்ளியில் ஐந்தாவது வகுப்பு வரை படித்தேன். பின்னர், தியாகராயநகரில் பனகல் பார்க் எதிரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் உயர்நிலைப்பள்ளியில் பத்தாவது வகுப்பு வரை. அடுத்து தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பு. அந்த நாளைய ஸ்தாபனங்கள் கல்வி போதிப்பதை பெரும்பாலும் ஒரு தொண்டாகவே செய்து வந்தன. சொன்னால் நம்பமாட்டீர்கள்! அப்போதெல்லாம் ஆரம்ப வகுப்புகளுக்கான மாத கட்டணம் மூன்று ரூபாய்க்கு மேல் இருக்கவில்லை; உயர்நிலைப்பள்ளியில் மாத கட்டணம் பத்து ரூபாய்க்கும் குறைவு. கல்லூரியில், காலாண்டுக் கட்டணம் 80 ரூபாய் அளவில் இருந்ததாக நினைவு.

    மாணவர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கும் பழக்கமே அப்போது இருந்ததில்லை. சீருடை புத்தகம், நோட்டு இத்யாதிகள் பெயரில் மாணவர்களிடமிருந்து பணம் பிடுங்கும் போக்கு அப்போது இல்லை. பள்ளியிலும், கல்லூரியிலும் சேருவதற்காக குறுக்கு வழிகளை நாடும் போக்கு அப்போது அனேகமாக இருந்ததில்லை. பத்தாம் வகுப்பு வரை, ஆங்கில மொழி பாடத்தைத் தவிர, இதர பாடங்கள் அனைத்தும் தமிழிலேயே நடத்தப்பட்டன. பள்ளியில் தினமும் நடந்த காலைக் கூட்டத்தில், பிரார்த்தனைக்குப் பிறகு, தலைமையாசிரியரோ, வேறு பெரியவர்களே நல்ல விஷயங்களை, உபயோகமான கருத்துக்களை அழகாக எடுத்துச் சொல்வர், அப்படியிருந்தன அந்த நாட்கள்.

    ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் பள்ளியிலும், கிறிஸ்துவக் கல்லூரியிலும் பயின்ற நல்ல விஷயங்களை இன்றும் பெருமையுடன் நினைத்துப் பார்க்கிறேன். அன்று, கிறிஸ்துவக் கல்லூரியில் ஒரு இளம் விரிவுரையாளர் மூலம் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டோம். அந்த இளம் விரிவுரையாளர் தாம்பரத்திலிருந்து அடிக்கடி கிண்டிக்குச் செல்வார். அப்போது மாணவிகளின் ஹாஸ்டல் அங்கு இருந்தது. சில குறும்புத் தன்மை கொண்ட மாணவர்கள் விரிவுரையாளரை, அவர் அறியாமல், பின்பற்றிச் சென்றனர். அவர்கள் கண்டது அவர்களைப் பிரமிக்க வைத்தது. அந்த விரிவுரையாளர் காட்டிய அன்பு ஒரு பெண்ணிடம் அல்ல; கிண்டியில், ஒரு தொண்டு இல்லத்தில் இருந்த நோயாளிக்கு அவர் அன்புடன் பணி செய்ததை அவர்கள் கண்டனர். அன்றைய தினத்திலிருந்து, அவர் எப்போது வகுப்பு எடுக்க வந்தாலும் அவரிடம் ஒரு தனி மரியாதையுடன் மாணவர்கள் நடந்து கொண்டனர். மணிக்கணக்காகப் போதனைகள் செய்தாலும் மனதில் படியாத ஒரு விஷயத்தை மனித நேயப் பண்பை, அந்த விரிவுரையாளர் தம்முடைய தன்னலமற்ற செயல் மூலம் மாணவர்களுக்குப் புரிய வைத்தார்.

    அப்போதிருந்த ஆசிரியர்கள், பாடங்களை நடத்துவதோடு இலக்கியம், இசை, விளையாட்டு போன்ற விஷயங்களிலும் மாணவர்கள் ஈடுபட ஊக்கம் அளித்தனர். அதனால், படிப்பு ஒரு சுமையாக இருக்கவில்லை. நூற்றுக்கு நூறு மார்க் வாங்குவதுதான் மாணவர்களின் லட்சியமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் ஆசிரியர்கள் வற்புறுத்தியதில்லை. மாணவர்களின் இயற்கையான திறமையை வளர்ப்பதில் கூடியமட்டும் அக்கறை காட்டினார்கள். அப்போதெல்லாம் நூற்றுக்கு அறுபது மதிப்பெண்கள் பெற்றாலே ஆசிரியர்களும் பெற்றோர்களும் பாராட்டுவர். இப்போது 90 சதவீத மதிப்பெண்கள் பெற்றாலும் திருப்தி ஏற்படுவதில்லை.

    படிப்புக்குப் பிறகு வேலை. நல்ல உத்தியோகம் கிடைப்பது. இப்போது போல், அப்போதும் குதிரைக் கொம்பாகத்தான் இருந்தது. மாதம் இருநூறு ரூபாய் சம்பளம் கிடைத்தாலே பெரிய விஷயம். ஆயிரம் ரூபாய் சம்பளம் எல்லாம் அபூர்வம். ஆனால், அந்த நாட்களில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. அன்றைய விலைவாசி நிலையைப் பற்றிக் கேட்டால் வியப்படைவீர்கள். மத்திய அரசுப் பணியில் சேருவதற்காக 1962-63-ல் நான் புதுதில்லி சென்றேன். அங்கு கரோல் பாக் பகுதியிலிருந்த ஒரு விடுதியில் (Mess என்பர்) நான் தங்கினேன். இருப்பதற்கு இடம், காலையில் காப்பி, தயிர், அப்பளம், பொரியலுடன் இரண்டு வேளை முழுச்சாப்பாடு – இதற்காக நான் கொடுத்த மாத கட்டணம் எவ்வளவு தெரியுமா? எண்பதே ரூபாய் தான். இன்று அத்தொகை ஒரு வேளை சிற்றுண்டிக்குக் கூட போதாது எனலாம். 1990 வரை விலைவாசி ஒரு கட்டுக்குள்தான் இருந்தது. 1975 முதல் 1981 வரை நான் புதுச்சேரியில் வானொலி நிருபராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். வீட்டு வாடகையாக (தனி வீடு) ரூ.75- கொடுத்ததாக ஞாபகம். ஐந்து பேர் அடங்கிய எங்கள் குடும்பத்திற்கு மாத மளிகைச் செலவு நூறு ரூபாய்க்கு மேல் போனதில்லை. அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் வகைகள் அனைத்தும் நியாயமான விலையில் கிடைத்தன. காய்கறிகள் மலிவான விலையில் கிடைத்தன. அரை லிட்டர் பாலின் விலை ஒரு ரூபாய்க்கும் குறைவு. கையில் ஒரு ரூபாய் இருந்தால் போதும்; ஹோட்டல்களில் திருப்தியாகச் சாப்பிடலாம்.

    சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வரை, விலைவாசி சற்று ஏறுமுகமாக இருந்தது என்றாலும், நிலைமை இப்போது இருப்பது போல் அவ்வளவு மோசமாக இல்லை. 1995-ல் என்னுடைய மகளின் திருமணம் நடந்தது. நகைகள், துணிமணி, சத்திரத்துக்கான கட்டணம், சீர்செனத்தி முதலிய அனைத்துக் கல்யாணச் செலவும் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் போகவில்லை. அந்தக் கல்யாணத்திற்கான மளிகைச் செலவு பத்தாயிரம் ரூபாய்தான். கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாகத்தான் எல்லாப் பொருள்களின் விலைகளும் விஷம் போல் ஏறிக் கொண்டே வந்திருக்கின்றன. நாளுக்கு நாள் இது இன்னும் கூடிவருகிறதே தவிர குறைவதாகக் காணோம்.

    தாராளமய பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் என்று நாம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்க ஆரம்பித்தோமோ, அந்த நாளிலிருந்தே நம்முடைய பொருளாதாரம் திசைமாறிச் சென்றுவிட்டது. ஒரு காலத்திலே குறைந்த செலவு பொருளாதாரம் தான் (Low cost Economy) இந்தியா போன்ற நாட்டுக்கு உகந்தது என்ற கருத்தில் நமது தலைவர்கள் உறுதியாக இருந்தார்கள். இன்று அதிகச் செலவு பொருளாதாரமே (High cost Economy) கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. விலைவாசியைக் குறைப்போம் என்று சூளுரையுடன்தான் அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு, பதவி நாற்காலியில் அமர்கின்றன. நாற்காலியைப் பிடித்தவுடன் சூளுரையை மறந்து விடுகிறார்களோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.

    அந்த நாட்களிலே, மருத்துவத் தொழில் இப்போது போல் ஒரு பெரிய வியாபாரமாக (Business) இருக்கவில்லை. இன்று மருத்துவ வசதிகள் பெருகியிருக்கின்றன என்ற போதிலும் மனிதநேயம் குறைந்து விட்டதோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது. முன்பு, பெரும்பாலான மருத்துவர்கள் மனிதாபிமானத்துடன் செயல்பட்டார்கள். உதாரணமாக, ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். ஒரு கால கட்டத்தில் (1950-60-ல் என்று எண்ணுகிறேன்) தியாகராய நகரில் நல்ல அனுபவமும், தேர்ச்சியும், ஆற்றலும் மிக்க ஒரு விசேஷ மருத்துவர் இருந்தார். அவரிடம் மருத்துவ ஆலோசனை பெற நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருப்பர். மருத்துவ ஆலோசனைக்காக அவர் நிர்ணயித்திருந்த கட்டணம் இரண்டு ரூபாய்தான்; மேலும் வசதியற்ற நோயாளிகளிடம் அவர் பணமே வாங்கமாட்டார் என்றும் சொல்லுவார்கள். அத்தகைய மனிதநேயம் இன்றும் எங்காவது பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கும். ஆனால், அதைக் கஷ்டப்பட்டு, தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

    அந்த நாட்களிலே, டிவி, தொலைபேசி, செல்போன், கம்ப்யூட்டர் போன்ற வசதிகள் இருக்கவில்லை. அதுவும் ஐம்பதுகளிலே, ரேடியோ, தொலைபேசி இரண்டும் கூட அபூர்வம். நாங்கள் இருந்த மேற்கு மாம்பலத்திலே அப்போதெல்லாம் பாதாள சாக்கடை கிடையாது. சாலைகளும் ஏனோ, தானோ என்று தான் இருக்கும். வீடுகளும் அதிகம் இல்லை. அந்தப் பகுதியிலே, அன்றைய நாட்களில், ஒரே ஒரு வீட்டில்தான் ரேடியோ இருந்ததாக நினைவு. தொலைபேசியும் ஒரே ஒரு வீட்டில்தான் இருந்தது என நினைக்கிறேன். ஆனால், இந்த வசதியின்மை எங்களை அதிகம் பாதிக்கவில்லை. மக்கள் இருப்பதைக் கொண்டு திருப்தியாக மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினார்கள். நாள், பண்டிகை என்றால் வருவோரும், போவோருமாக எல்லா வீடுகளும் கோலாகலத்துடன் விளங்கும். நண்பர்களோ, உறவினர்களோ வந்தால் வீட்டிலுள்ள அனைவரும், வயது வித்தியாசமில்லாமல் அவர்களை உற்சாகத்துடன் வரவேற்பார்கள்.

    அன்று நடந்த ஒரு சம்பவம் என் மனதில் இன்றும் பசுமையாக நிற்கிறது. ஒரு நாள், ஒரு உறவினர் இரவு 12 மணிக்கு எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்போது என் தாய், தந்தையர் அவரை மனமார வரவேற்று. உட்காரவைத்து, அந்த நடு இராத்திரியில் மணக்க மணக்க ரவா கேசரி செய்து அவள் கையில் கொடுத்தனர். என் தந்தையும், அந்த உறவினரும் எல்லையற்ற சந்தோஷத்துடன் நின்ற அந்தக் காட்சி அன்று போல் இன்றும் என் மனதில் நிலைபெற்றிருக்கிறது. விருந்தோம்பலுக்கு இதைவிட வேறொரு இலக்கணம் தேவையா?

    கடந்து வந்த வாழ்க்கையில் மனதை நெகிழ வைத்த சம்பவங்கள் பல உண்டு. அவற்றில் ஓரிரண்டை குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.

    1956-ல் எனது தங்கையின் திருமணம் நடந்தது. மேற்கு மாம்பலம் ஜூபிலி சாலையில் இருந்த எங்கள் வீட்டிலேயே முன்னே ஒரு பெரிய பந்தல் போட்டு, கல்யாணத்தை நடத்தினர் எங்கள் பெற்றோர். அப்போது, நன்கு நாதஸ்வரம் வாசிக்கக்கூடிய உள்ளூர் கலைஞர் ஒருவரை என் தந்தை ஏற்பாடு செய்திருந்தார். அக்காலத்தில் ஜானவாச ஊர்வலம் பிரசித்தம். அருகிலிருந்த கோவிலிலிருந்து கல்யாணம் நடக்கும் இடத்திற்கு மாப்பிள்ளையை அழைத்து வருவார்கள். நாதஸ்வரமும் மேளமும் முன்னே முழங்கிச் செல்ல, மாப்பிள்ளை ஒரு அலங்கரிக்கப்பட்ட திறந்த காரில் பவனி வருவார்.

    கல்யாணத்திற்கு முதல் நாள், ஜானவாச ஊர்வலம் துவங்கி சற்று நேரத்திற்கெல்லாம் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. ஆகவே, அரைகுறையாக ஜானவாசம் முடிந்து ஊர்வலக் காரை எப்படியோ தள்ளிக்கொண்டு திருமணவீட்டுக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள், திருமணம் முறையாக முடிந்தவுடன், அந்த நாதஸ்வரக்காரர் என் தந்தையிடம் சொன்னார். “ஐயா, மழை காரணமாக ஜானவாச ஊர்வலத்தில் வாசிக்காதது எனக்கு ஒரு பெரிய குறையாக இருக்கிறது. ஒரு காரியம் செய்யலாமா? மாப்பிள்ளையையும், பெண்ணையும் திருமணக்கோலத்தில் தெருக்கோடியிலிருந்து மணவீட்டுக்கு நடந்து வரச் சொல்ல முடியுமா? எனது நாதஸ்வர கோஷ்டி அவர்கள் முன்னே வாசித்துச் செல்ல அனுமதிப்பீர்களா?” இவ்வாறு எழுந்த வித்தியாசமான கோரிக்கையைக் கேட்ட என் தந்தை, புன்முறுவலுடன் அதற்கு இசைந்தார். மாப்பிள்ளையும் பெண்ணும் மணக்கோலத்தில் சேர்ந்து நடைபோட, நாதஸ்வர கோஷ்டி முன்னே வாசித்துக் கொண்டு சென்றதை அனைவரும் கண்டு மகிழ்ந்தனர். அந்த நாதஸ்வரக்காரரின் உன்னதப் பண்பை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

    அடுத்ததாக ஒரு சம்பவம். மறக்க முடியாத, நெகிழ வைத்த நிகழ்ச்சி 1965-ல், நான் தில்லியில், பெரிய பதவியில் இருந்த ஒரு மூத்த அதிகாரியின் உதவியாளனாக இருந்தேன். ஒரு நாள் அந்த அதிகாரி என்னைத் தன் அறைக்கு அழைத்தார். என் பணியில் ஏதோ ஒரு பெரிய தவறு நடந்திருப்பதை அவர் சுட்டிக் காட்டி, வெகுவாக என்னைக் கோபித்துக் கொண்டார். என்ன செய்வது என்று அறியாமல் நான் திகைத்து நின்றேன். திடீரென, அந்த உயர் அதிகாரி தம் இருக்கையை விட்டு எழுந்தார். என் தோள்கள் இரண்டையும் பற்றி, என்னை அவருடைய இருக்கையில் அமர வைத்தார். அவர் சொன்னார், “எத்தகைய முட்டாள் நான்! இன்று நான் இந்த நாற்காலியில் இருக்கிறேன்; நாளை (வருங்காலத்தில்) நீயே இந்த நாற்காலியில் அமரும் வாய்ப்பைப் பெறக்கூடும். உன் மீது அனாவசியமாகக் கோபப்பட்டு விட்டேன். i am sorry”, இவ்வாறு அவர் கூறியதைக் கேட்ட நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். காலில் விழாத குறையாக நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, என் பணியிடத்திற்கு வந்தேன். மிகுந்த பெருந்தன்மையுடனும், பண்புடனும் நடந்து கொண்ட அந்த அதிகாரியை மறக்க முடியுமா?

    மற்றொரு சம்பவம், 1974-ல் நடந்தது என நினைக்கிறேன் அப்போது தில்லியில் கரோல்பாக் பகுதியில் இருந்தேன். வீட்டு வேலைக்காக, முக்கியமாகப் பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு உதவ ஒரு வயதான பெண்மணி வந்து கொண்டிருந்தார். தினமும் சுமார் அரை மணி நேரம் வேலை இருக்கும். மாதச் சம்பளம் பதினைந்து ரூபாய். ஒரு நாள் என் மனைவி அந்தப் பெண்மணிக்கு ஒரு ரூபாய் இனாமாகக் கொடுத்தாள். ஆனால், அந்தப் பெண்மணி அதை வாங்க மறுத்துவிட்டார். அவள் சொன்னாள், “அம்மா, என் வேலைக்குத் தகுந்த கூலியை நான் வாங்கிக் கொள்கிறேன். இதற்கு மேல் எதற்கு இனாம்? அந்தப் பணம் எனக்கு ஒட்டாது”. இவ்வாறு கூறிய அந்தப் பெண்மணியின் வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

    மனித நேயமும், பண்பும், எளிமையும் நிறைந்த அந்த நாட்களை நினைத்தே காலத்தை ஒட்ட வேண்டியிருக்கிறது. ஏனெனில், இன்று இளைஞர்களின் வெளிநாடு மோகம் காரணமாகவும், கணவன்-மனைவி-குழந்தை என்ற குறுகிய வட்டத்தில் அவர்கள் தங்களை அடைத்துக் கொள்ளும் போக்கு காரணமாகவும் பல குடும்பங்களில் வயதான பெற்றோர்கள் தனித்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. தனியே வாழமுடியாதவர்கள், காளான் போல் பெருகி வரும், முதியோர் இல்லங்களை நாடிச் சேருகிறார்கள். வேறு வழியின்றி அவர்கள், அந்த நாள் ஞாபகம் வந்ததே என்று பழைய நாட்களை அசைபோட்டுக்கொண்டு, என்று விடுதலை கிடைக்கும் என்ற ஒரு ஏக்கத்துடன் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலை என்று மாறுமோ?

    Share
  • உணவுண்ணும் மு​றையும் உடல் நலமும்

    — மு​னைவர் சி.​சேதுராமன்.

    இ​றைவன் அளித்த இந்த அற்புதமான உட​லைக் காத்துப் ​பேணுவது நம்மிடம் தானுள்ளது. இள​மை​யைப் பாழாக்கிக் ​கொடிய ​நோய்க​ளைப் ​பெற்று அற்ப ஆயுளில் இறந்து ​போவது அறிவீனம். உடலுக்கு ஊறு ​நேர்விக்காத உண​வை உண்டால் ​நோய் என்பது நம்​மை அணுகாது.

    அவசரகதியில் இயங்கும் இன்​றைய உலகில் கி​டைத்த உண​வை உண்டு ​நோ​யை நா​மே வலிய வரவ​ழைத்துக் ​கொள்கின்​றோம். உணவிற்கும் உடல் நலத்திற்கும் மனதிற்கும் ​நெருங்கிய ​தொடர்பு உள்ளது. நல்ல உணவாக இருந்தாலும் அத​னை உண்ணுகின்ற மு​றைப்படி உண்ண ​வேண்டும். இல்​லை​யென்றால் அது உடலுக்கு தீங்கு வி​ளைவிக்கும். அவரவர் உடலின் தன்​மைக்கு ஏற்ப ஏற்ற உண​வை உண்ணுதல் ​வேண்டும்.

    சிலர் உண்ணும்​போது சலசல​வென்று ​பேசிக் ​கொண்​டே உண்பார்கள். இன்னும் சிலர் நின்று ​கொண்டும் அங்குமிங்கும் அ​லைந்து ​கொண்டும் உண்பார்கள். அ​​மைதியாக அமர்ந்து உண​வைத் தந்த இ​றைவனுக்கு நன்றி​யைத் ​தெரிவித்துக் ​கொண்டு விரும்பி உண்ண ​வேண்டும். அவ்வாறு உண்ணும் உண​வே உடலுக்கு நலத்​தைச் ​சேர்க்கும். அ​தைவிடுத்து ஏ​னோதா​னே என்று உண்ணும் உணவு உடலுக்கு நலத்​தைத் தருவ​தைவிட ​கேட்​டை​யே வி​ளைவிக்கும். இத​னை உணர்ந்து அ​னைவரும் உண்ணுதல் ​வேண்டும்.

    அதிலும் சிலர் தமக்குப் பிடித்த உணவாக அ​மைந்துவிட்டால் அத​னை அதிகமாக உண்பர். அவ்வாறு எந்த உண​வையும் அளவுக்கு அதிகமாக உண்ணுதல் கூடாது. அவ்வாறு உண்டால் அவ்வுண​வே நஞ்சாக மாறிவிடும். வள்ளுவப் ​பெருந்த​கை உண​வை உண்ணும் மு​றையி​னையும் உடல் நலத்​தைப் ​பேணும் முறையி​னையும் திருக்குறளில் ​தெளிவுற எடுத்து​ரைத்துள்ளார்.

    உணவு உண்ணும் மு​றை:
    உணவி​னை நாம் மு​றையாக உண்ணல் ​வேண்டும். மனம் ​போன ​போக்கில் உண்ணுதல் கூடாது. சிலர் நி​னைத்த​ போ​தெல்லாம் நி​னைத்த​தை உண்டு ​கொண்​டே இருப்பர். இது உடலில் ​சேர்ந்து ​நோய்க்கு இடங்​கொடுக்கும். சரி எத்த​னை மு​றை ​வேண்டு​மென்றாலும் உண்ணலாமா? என்றால் மூன்று மு​றை மட்டும் உண்ணலாம் என்று ​பொதுவாகக் கூறுவர். அதாவது கா​லை, நண்பகல், மா​லை என்று மூன்று ​வே​ளை உணவு உண்டு வர​வேண்டும் என்ற ​பொருள்படக் கூறுவார்கள்.

    ஆனால் “முப்​போது உண்பான் ​ரோகி” என்று பழம்பாடல் ஒன்று கூறுகிறது. தினம் மூன்று ​வே​ளை உண்டு வருபவன் வாழ்நாள் முழுவதும் ​நோயாளியாகத்தான் இருப்பான் என்று அந்தப் பாடல் ​தெளிவுறுத்துகின்றது.

    முதலில் உண்ட உணவு ​​செறிமானம் ஆகி நன்கு பசி எடுத்த பின்னர்தான் அடுத்த ​​வே​ளைக்குரிய உண​வை உண்ண ​வேண்டும். அவ்வாறு உண்பதால் ​நோய் என்பது நம்​மை அணுகாது. நம் உடலுக்கு மருந்து என்பது ​தே​வைப்படாது.

    இத்த​கைய உணவு உண்ணும் மு​றையி​னை,
    “மருந்​தென ​வேண்டாவாம் யாக்​கைக்கு அருந்தியது
    அற்றது ​போற்றி உணின்”
    என்று குறிப்பிடுகிறார்.

    முன் உண்ட உணவு நன்கு ​செறிமானம் ஆகிவிட்ட பிறகு, நன்கு பசி எடுத்த பின்புதான் அடுத்த ​வே​ளைக்கு உரிய உண​வை உண்ண ​வேண்டும். இவ்விதம் உண்டு வருவதால் ​நோய் ஏற்படாது. ​நோயின்றி இருந்தால் நமக்கு மருந்​தே ​தே​வை இல்​லை என்கிறார் வள்ளுவர்.

    கிராமப்புறங்களில் கூலி ​வே​லை ​​செய்பவர்கள், ம​லைகளுக்குச் ​சென்று விறகு ​கொண்டு வந்து பி​ழைப்பவர்கள், விடிந்ததும் ​போனால் ​பொழுது ​சென்ற பிறகு வீடு திரும்புவர்கள். நல்ல உடற்கட்டுடன் மட்டுமன்றி நீண்ட நாள் வாழ்வதற்குக் காரணம் அவர்கள் இரு ​வே​ளை உணவு மட்டு​மே உண்டு வருவதுதான், காலையில் எ​தையாவது சாப்பிட்டுவிட்டுப் பின்னர் மா​லையில் சூரியன் ம​றையும்​போதுதான் எ​தையாவது சாப்பிட முடிகிறது.

    அவர்களுக்குச் சாப்பிட வழியில்​லை. என​வே இந்த இரு​வே​ளை என்ற மு​றை இயற்​கையாக​வே அ​மைந்து விட்டது. என​வே அவர்களால் நீண்ட காலம் வாழ முடிகிறது. எண்பது வய​தைத் தாண்டியவர்களும் ​நோய் ​நொ​டியின்றிக் கண்பார்​​வை பழுதுபடாத வண்ணம் நீண்ட நாள் வாழ்கிறார்கள். எந்தவிதமான நாகரிக ​நோய்களும் அவர்க​ளை அண்டுவதில்​லை. காரணம் அவர்கள் பசி​யை நன்கு உணர்ந்து அனுபவித்து அதன் பின்ன​ரே உண்ணுகிறார்கள்; அவர்களால் உண்ணவும் முடிகிறது என்ப​தே சரியானதாகும்.
    ​
    வே​ளைக்கு ​வே​ளை மணி​யைப் பார்த்தவர்களாய், வயிறு பசிக்கிற​தோ இல்​லை​யோ குறிப்பிட்ட ​நேரத்தில் கண்டிப்பாகச் சாப்பிட்டுத் தீர ​வேண்டும் என்ற எண்ணமுடன் சாப்பிட்டு வருபவர்களுக்கு ​நோயானது ​பெரிதும் துன்பத்​தைக் ​கொடுக்கும். இவர்கள் அ​னைவரும் பசி​யை அறியாது உண்பார்கள். அதிகப்படியாக – அதாவது அளவுக்கு மீறி உண்ணுதல் என்பது இழிவாகும் என்ப​தை உணர்ந்து, மிதமாக உண்பவர்களிடம் இன்பம் நி​லைத்து நிற்பது​போல், அளவு மிகுந்து உண்ப​தே இன்பம் என்று நி​னைப்பவர்களிடம் தீராத ​நோய்க​ளே நி​லைத்து நிற்கும் என்ப​தை,
    “இழிவறிந்து உண்பான்கண் இன்பம்​போல் நிற்கும்
    கழி​பேர் இ​ரையான்கண் ​நோய்”
    என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

    வயிறு பு​டைக்க உண்ணுதல் இழி​வைத் தரும். அதாவது ​கொடிய துன்பத்​தைத் தரும் என்று உணர்ந்து உண்பவனிடம் ​நோய் தங்க​வே தங்காது. இங்ஙனம் ​நோய் தங்காதவனிடம்தான் இன்பம் நி​லைத்து நிற்கும். மிகுதியாக உண்பவனிடம் ​நோய் நி​லைத்து நிற்கும். அவனால் மகிழ்வாக வாழ்க்​கை​யை நடத்த முடியாது. எப்​போதும் ​நோய் என்ற துன்பத்திற்கு ஆளாகி​யே மடிவர் என்ப​தை​யே இக்குறள் எடுத்தியம்புகிறது. அளவுக்கு அதிகமாக உண்ணாமல் ​தே​வையான அளவு அறிந்து உண்ணுதல் ​வேண்டும் என்று உண்ணுகின்ற மு​றை​மையி​னை, அளவி​னை இக்குறளில் வள்ளுவர் ​தெளிவுறுத்துகிறார்.

    அளவுடன் உண்ணுதல் ​வேண்டும்:
    கடும் உடலு​ழைப்பு இல்லாதவர்கள் மூன்று ​வே​ளை உண்டாலும் அளவறிந்து உண்ணுதல் ​வேண்டும். தன் ​தே​வைக்கு ​மேல் உண்பவர்கள்தான் இன்று அவதியுற்று மருத்துவ​ரை அடிக்கடி நாடுகின்றனர். ​மேலும் மருத்துவர்களிடம் ​பெரும்பணத்​தைக் ​கொடுத்துப் பயனின்றி வி​ரைவில் இவ்வுல​கை விட்​டே ​சென்றுவிடுகிறார்கள்.

    ஒவ்​வொருவருக்கும் ஒருவிதமான அளவு என்பது எல்லாவற்றிலும் உண்டு. அவ்வளவானது உணவிலும் உண்டு. அள​வறிந்து உண்டு வாழ்பவன் வாழ்க்​கை மகிழ்ச்சியாக இருக்கும். வள்ளுவர் இத​னை,
    “அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
    ​பெற்றான் ​​நெடிதுய்க்கு மாறு”
    என்று குறிப்பிடுகின்றார்.

    அளவறிந்து உண்பவ​னை ​நோய் நாடாது. அதனால் அவனது ​பொருள் வி​ரையமாகாது. அவன் வாழுகின்ற வாழ்க்​கை​யே ​அர்த்தமுள்ளதாக விளங்கும். உடல் நலத்​தோடு இருந்தால் மட்டு​மே ஒருவன் மற்றவர்களுக்கு உதவ முடியும். இல்​லை​யெனில் அவன் பிறருக்குச் சு​மையாக இருக்க ​நேரிடும். அதனால் நீண்ட நாள்கள் ​நோயின்றி வாழலாம் என்று இக்குறள் வழி வள்ளுவர் ​தெளிவுறுத்தியிருப்பது ​நோக்கத்தக்கது.

    பசித்துப் புசித்தல்:
    பசித்தால் மட்டு​மே நாம் எத​னையும் உண்ண ​வேண்டும். கி​டைக்கிற​தே என்று எத​னையும் பசி எடுக்காமல் இருக்கும்​போது உண்ணுதல் கூடாது. நாம் உண்ணும் உணவிலும் நமக்கு நன்​மை ​செய்வன தீ​மை ​செய்வன என்னும் பிரிவுகள் உண்டு. நமக்குப் பிடித்தமான உண​வாக இருந்தாலும் அத​னை அதிகமாக உண்ணுதல் கூடாது. அ​தே ​நேரத்தில் கு​றைவாகவும் உண்ணக் கூடாது. எந்த ஒன்​றையும் அள​வோடு உண்ணுதல் ​வேண்டும். அளவுக்கு மீறி உண்டால் அவ்வுண​வே நஞ்சாக மாறி ​நோயி​னை ஏற்படுத்தும். இத்த​கைய உண்ணும் ​நெறிமு​றை​யை,
    “அற்றது அறிந்து க​டைப்பிடித்து மாறல்ல
    துய்க்கத் துவரப் பசித்து”
    என்று எடுத்து​ரைக்கின்றார்.

    நாம் முன்னர் உண்ட உணவு நன்கு ​செறிமானம் ஆன​தை அறிந்து நன்கு பசித்த பிறகு நம் உடலுக்கு துன்பம் தருகின்ற உணவுக​ளைத் தவிர்த்து நன்​மை தருகின்ற உணவுக​ளை அள​வோடு உண்ணுதல் ​வேண்டும் என்று இக்குறட்பாவில் வள்ளுவர் பசித்துப் புசித்தல் ​வேண்டும் என்ற உணவு உண்ணும் ​கோட்பாட்​டை விளக்கியிருக்கிறார்.

    இயற்​கையுடன் இ​​யைந்த உணவு:
    நாம் உண்ணும் உணவானது இயற்​கையுடன் இ​யைந்த உணவாக இருத்தல் ​வேண்டும். அ​தென்ன இயற்​கையுடன் இ​யைந்த உணவு? அதிகக் கார​மோ, உப்புச் சு​வை​யோயின்றி கு​றைந்த அளவு உப்பி​னைக் ​கொண்டதாகவும் எண்​ணெய் அதிக அளவில் ​சேர்க்கப்படாமலும் இருக்க ​வேண்டும். நல்ல பழங்கள், பால், கீரைகள் இ​வையும் இயற்​கை​யோடு இ​யைந்த உணவுகளாகும். இவ்வுணவுகள் கிளர்ச்சி​யை ஏற்படுத்தாது. இ​வை சத்துவ குணம் நி​றைந்த உணவுகளாகும். இத்த​கைய உணவு வ​கைக​ளே நம்​மை அ​மைதியான வாழ்க்​கை​யை வாழச் ​செய்யும்.

    கூடுதலான வாச​னைப் ​பொருட்கள் மட்டுமின்றி அதிகப்படியான புளிப்பு, காரம் ​போன்ற​வைக​ளை இட்டுத் தயாரிக்கப்படும் உணவு வ​கைகள் ஆரவாரமான தன்​மை​யைத் தரும். இவ்வ​கையான உணவுகளுக்கு ராஜஸ குணத்​தை ஏற்படுத்தும் தன்​மைகள் அதிகம். அ​தே ​போன்று அளவுக்கு மீறி உணவி​னை உண்டால் மந்தமான நி​லை ஏற்படும். இம்மந்தமான நி​லைக்கு தாமச குணம் என்று ​பெயர்.

    இயற்​கை​யோடு இ​யைந்த உணவாக இருந்தாலும் கூட நாம் அள​வோடுதான் உண்ண ​வேண்டும். அள​வோடு மாறுபாடில்லாத உண​வை உண்டால்தான் நாம் உணவு உண்டதன் பய​னை முழு​மையாகப் ​பெற முடியும். வயிறு நி​றைய உண்டு திணறிக் ​கொண்டிருப்பதில் எந்தவிதமான நன்​மையும் ஏற்படாது. மாறுபாடு இல்லாத இயற்​கை​யோடு இ​யைந்த உணவி​னை உண்ண ​வேண்டும் என்ப​தை,
    “மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
    ஊறுபாடு இல்​லை உயிர்க்கு”
    என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

    வள்ளுவர் மாறுபாடு இல்லாத உண்டி என்று குறிப்பிடுவது நமது உடலுக்கு ஏற்ற உண​வேயாகும். பீட்ஸா, டின்களில் அ​டைக்கப்பட்ட உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, வி​ரைந்து தயாரிக்கப்படும் உணவு, நூடுல்ஸ் உள்ளிட்ட ​வெளிநாட்டு உணவு வ​கைகள் நமக்கு, நாம் வாழும் சூழலுக்குப் ​பொருந்தாத மாறுபட்ட உணவு வ​கைகளாகும். இத்த​கைய உணவு வ​கைக​ளை உண்ணுதல் கூடாது.

    அவ்வாறு உண்டால் உயிருக்கு ஊறு ​நேரும். இயற்​கையான நம் உடலுக்கு ஏற்ற உணவி​னை உண்டால் நமக்கு எந்தவிதமான ​நோயும் ஏற்படாது. உயிருக்கு ஊறு ​நேராது. இத​னை அறிந்து நம்மு​டைய மரபு சார்ந்த உணவு வ​கைக​ளுக்கு முக்கியத்துவம் ​கொடுத்து, அத​னை நாம் உண்ண ​வேண்டும்.
    ​
    தே​வையறிந்து உண்ணுதல்:
    ஒருவருக்கு எப்​போது உண்ண ​வேண்டும் என்பது அவருக்​கே ​​தெரியும். அவர் தனது உடற்​தே​வைக்​கேற்ப அள​வோடு உண்ணுதல் ​வேண்டும். நமக்கு ​வேண்டியவர்கள் ​கொடுக்கிறார்கள், தட்டமுடியாது என்​றெல்லாம் கூறிக்​கொண்டு நம் உடலுக்கு ஒவ்வாத​தை உண்ணக் கூடாது. பசித்த பின்னர் நமக்குத் ​தே​வையான அளவுடன் உண்ணுதல் ​வேண்டும். சிலர் மற்றவர்கள் மனம் ​நோகக் கூடாது என்பதற்காக அவர்கள் ​கொடுக்கும் உண​வைத் தங்களுக்குப் பசியில்​லை என்றாலும்கூட உண்பார்கள். இத​னைத் தவிர்த்தல் ​வேண்டும். அவ்வாறு தவிர்க்காவிட்டால் ​நோய்க்கு ஆளாக ​நேரிடும்.

    இன்னும் சிலர் இன்று ஒருநாள்தா​னே! ஒரு நாள் உண்டால் ஒன்றும் ஆகிவிடாது என்று கூறி உண்ணுமாறு கூறுவார்கள். ஒரு நாள் சாப்பிட்டால் மறுநாள் ஒவ்வாத உணவால் ஒவ்வா​மை ​நோய் ஏற்பட்டு துன்புற ​நேரிடும். அதனால் பசித்தீயின் அள​வையும் உடலின் ​தே​வை​யையும் அறிந்து உண்ணுதல் ​வேண்டும் என்ப​தை,
    “தீயளவு அன்றித் ​தெரியான் ​பெரிது உண்ணின்
    ​நோயளவு இன்றிப் படும்”
    என்று குறிப்பிடுகின்றார்.

    பசித்தீயின் அள​வை அறிந்து உண்ணுதல் ​வேண்டும். அவ்வாறு உண்ணும் அ​ள​வை அறியாமல் மிகுதியாக உணவி​னை உண்பவன் கணக்கில்லாத ​நோயால் துன்புறுவான் என்பது உண்​மை. அளவறிந்து உண்ணல் ​வேண்டும். எ​தையும் கி​டைக்கிற​தே என்பதற்காக உண்ணுதல் கூடாது. சிலர் பசிக்காக அல்லாது ருசிக்காக​வே அளவுக்கு அதிகமாக உண்பர்.

    இவ்வாறு அளவு ​தெரியாமல் உண்டுவிட்டுப் பின்னர் ​வாந்தி எடுப்பர். வயிற்று ​நோயால் துன்பப்படுவர். அவ்வாறில்லாமல் தங்களின் பசித்​தே​வை அறிந்து உணவி​னை உண்ணுதல் ​வேண்டும்.

    வள்ளுவர் கூறும் உணவு உண்ணும் மு​றையானது வாழ்க்​கை​யை இனி​மையாக வாழ்வதற்குரிய ​நெறிமு​றையாகும். உணவி​னை வீணாக்காது நமது உடலின் ​தே​வையறிந்தும், நன்கு பசித்த பின்னரும் அள​வோடு உண்டு வளமாக வாழ்​வோம். உணவி​னை உண்ணும் மு​றையி​னை அறிந்து உடல் ​பேணு​வோம். அது​வே இன்பமான வாழ்வாகும்.

    _________________________________________________________________________

    மு​னைவர் சி.​சேதுராமன்,
    தமிழாய்வுத்து​றைத் த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி),
    புதுக்​கோட்​டை-1
    Malar.sethu@gmail.com

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 13

    –சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     ஓ இரவே !

     

    ஓ இரவே

    __________________________

    உன் சினத்தைக் காண்கிறேன்
    வெல்வெட் மெத்தையில் உறங்கும்
    வேந்தர் மீது !
    கள்வரைக் காண்கிறேன் !
    தூங்கும் சிசுக்களைக் காத்து
    விழித்திருக்கும்
    உன் கண்முன்னே
    மெய்க் காதலர்
    கண்ணீர்த் துளிகள் மீது
    பொதுவின் மகளிர் பொழியும்
    போலிப் புன்னகை
    நோக்கி நீ
    ஓலமிடுவதைக் காண்கிறேன் !
    தீயவரை மிதிக்கும்
    உந்தன் பாதமும்
    நல்லவர்க் குதவ ஓடும்
    உனது வலக் கரமும்
    எனக்குத் தெரிகிறது !

    __________________________

    இரவே ! அங்கே
    உன்னைக் காண்பேன்
    என்னைக் காண்பாய் நீயும் !
    பயங்கர மாயினும் நீ
    தந்தை போல் தெரியுது எனக்கு !
    என்னை
    உனது மகவாய்க் கற்பனித்துக்
    கனவு காண்பேன் !
    நம்பிக்கைத் திரை
    நம்மிடையே நீக்கப் பட்டது !
    உன் ரகசியங்கள் –
    படைப்புகளை என்ன வென்று
    உரைத்திடு !
    என் இச்சைகள் –
    எதிர்பார்ப்புகளை
    என்ன வென்று
    எடுத்துச் சொல்வேன் நானுனக்கு !
    உன் கோரச் செயல்கள்
    மாறிடும் இன்சுவைக் கானமாய் !
    ஆறுதல் அளித்து நெஞ்சை
    பேரமைதி யாக்கும்
    பூக்களின் மெல்லிய
    முணு முணுப்புக்கு மேலாய் !

    __________________________

    பலவீனமான ஒருவன் வலுத்தவனின் கொடுமைகளைப் பற்றிப் புகார் செய்யும் போது அண்டை வீட்டுக்காரன் இப்படிச் சொல்லி அவனை அமைதிப்படுத்துவான்: “மெதுவாய்ப் பேசு இதனைக் கேட்கும் மன அழுத்தக்காரரின் இதயம், வேகமாய் ஈட்டி தாக்குவதைத் தாங்கிக் கொள்ளாது.”
    கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)

    __________________________

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே: 23

    — இன்னம்பூரான்.

    BL27_snail_jpg_2257904f

    சமுதாயத்தில் இயல்பாகவே கடமையாற்றலும், கடமை தவறினால், ஏற்புடைய நிவாரணமும், தவறு செய்தவர்களுக்கு தண்டனையும் இருக்கவேண்டும். நிவாரணம் உரிய நேரத்தில், சிக்கலும், பிரச்சினையும் இல்லாமல் கிடைக்கவேண்டும். இன்றைய நடைமுறையில் தவறு செய்தவர்கள் வீண்வாதம் செய்வதை, அதுவும் கோர்ட்டார் முன்னிலையில், அடிக்கடி காண்கிறோம். சான்றாக, போபால் நச்சு வாயு, கும்பகோணம் பள்ளி தீ விபத்து, டில்லி உபஹார் சினிமா தியேட்டர் இடிபாடு ஆகியவற்றைக் கூறலாம். என்ன தான் சால்ஜாப்பு சொல்லி தப்பிக்கப் பார்த்தாலும், குற்றம் குற்றமே. ஆனாலும் அளவுகடந்த தாமதங்களுக்குப் பிறகு தீர்வுகள் கிடைப்பதால், நாம் பழங்கஞ்சி குடிப்போர் கழக உறுப்பினர் ஆகிவிடுகிறோம்.

    ஒரு பார்வை:
    சென்னை எழும்பூர் பகுதியில் இருக்கும் தொன்மையான பெண்பாலாருக்கும், குழவிகளுக்கும் ஆன ஆஸ்பத்திரி பிரபலமானது. அதற்கு நல்ல பெயருண்டு. ஆனால், அங்கு ஒரு மாபெரும் தவறு நடந்துவிட்டது, 1996ல். அவ்வருடம் ஆகஸ்டு மாதம் கிருஷ்ணகுமார் தம்பதிக்கு பத்து மாதங்கள் பொறுத்திருக்காமல், பத்து வாரம் முன்னமே, குழந்தை பிறந்து விட்டது. அத்தகைய குழவிகளுக்குக் கண்பார்வை பாதிப்பு இருக்கக்கூடும் என்று பெற்றோர்களுக்கு எச்சரிக்கை செய்து, உடனே சிகிச்சை செய்யவேண்டும் என்பதை டாக்டர்கள் அவர்களிடம் சொல்லவில்லை.

    விளைவு: அந்தப் பெண்குழந்தை ஒரு வருடத்துக்குள் கண்பார்வை இழந்தது. பெற்றோர்களும் அலையாத இடம் இல்லை. அமெரிக்கா போய் செய்யாத அறுவை சிகிச்சைகள் இல்லை. பயன் யாதும் இல்லை.

    1998லியே அந்தப் பெண்ணின் தந்தை தேசீய நுகர்வோர் மையத்தில் கேட்டது நியாயமான நிவாரணம் (ரூபாய் 20 லட்சம் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த வகையில் + 30 லட்சம் வருங்கால மருத்துவ செலவுக்காக + 50 லட்சம், பட்ட கஷ்டம், மனவலி, உடல் வேதனை ஆகியவற்றுக்காக) மொத்தம் ஒரு கோடி. உலக பிரபலம் பெற்ற அகில இந்திய மருத்துவ மையம், எழும்பூர் ஆஸ்பத்திரி கடமை தவறி மாபெரும் அநீதி இழைக்கப்பட்டதை உறுதிப் படுத்திய பிறகும், தேசீய நுகர்வோர் மையம் மொத்தமாக ரூ. 5 லட்சம் நிவாரணம் அளித்தது எந்த விதத்திலும் உகந்ததாகப் படவில்லை. எதிர் தரப்பு தமிழக அரசு. அவர்கள் பொறுப்பை தட்டிக்கழிக்கலாமா?

    தந்தை உச்சநீதிமன்றத்துக்கு விண்ணப்பம் செய்தார். அவருடைய வழக்கறிஞர் நிக்கில் நய்யார் அவர்கள் தங்கள் கேட்ட நிவாரணத்தைத் தொகையின் நியாயத்தை எடுத்துக்கூற, உச்ச நீதி மன்றம் ரூ.1.80 கோடி நிவாரணம் கொடுக்கவேண்டும் என்று தீர்வு அளித்தது, ஜூன் 24, 2015 அன்று.

    அதற்குள் அந்தப் பெண்ணுக்கு வயது 18 ஆகிவிட்டது. அவள் கண்ணொளி இழந்த ஒரு யுவதி.

    இனி ஒரு விதி செய்வோம்: நீதிமன்றங்களை மக்கள் மிகவும் மதிப்பதால், அவை தீர்வு அளிக்கும்போது, தாமதம் யாரால் ஏன் ஏற்பட்டது என்ற தகவலை ஒரு பட்டியலாக தரவேண்டும்.

    சித்திரத்துக்கு நன்றி: http://www.thehindubusinessline.com/multimedia/dynamic/02257/BL27_snail_jpg_2257904f.jpg

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    Share
  • கடவுள் ஏன் கல்லானான்?

    — கவிஞர் காவிரிமைந்தன்.
    “அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
    ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்!
    ஆண்டவன் சற்றே அருகே நெருங்கி
    அனுபவம் என்பதே நான்தான் என்றான்….!!!!”
    –கவியரசு கண்ணதாசன்

    இந்த அனுபவக் கவிஞனின் தத்துவப் பாடலில் இதுவும் ஒன்று!

    நல்லவன் கெட்டவன் என்று இரண்டு வகையிலும் மனிதர்கள் உண்டு. இதிலே கெட்டவன் செயல்களால் நல்லவன் பாதிக்கப்படுகிறபோது, படைத்த கடவுளை அழைத்துக் கேள்விகேட்பது கண்ணதாசனுக்குக் கைவந்த கலையே!

    Kadavul Yen Kallanan video screenshotநேரில் வாழும் தெய்வங்களுக்கெல்லாம் நிம்மதி கிடையாது.
    அந்த நிம்மதி தேடி ஓடியதெய்வம் கல்லாய் மாறியது!
    என்கிற வரிகளை நான் எழுதத் தொடங்கிய காலத்தில் என் சிந்தனையில் உதித்தது, ஏதோ ஒரு அழுத்தம் மனதை இப்படியெல்லாம் எழுத வைக்கிறது என்று மட்டும்தான் சொல்வேன்.

    பகுத்தறிவுப் பார்வையில் கடவுளை மனிதன் தேடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், மனசாட்சியும் கூட கடவுள்தான் என்று கண்ணதாசன் இப்பாடலில் அனுபவத்திலிருந்து மர்மமுடிச்சுக்களை அவிழ்க்கிறார்!

    தவறு செய்யாமலே தண்டனை பெறுவது எத்தனைச் சுமையானது? அதுவும் தவறு செய்தவன் யார் என்று தனக்குத் தெரிந்திருந்தும் சட்டரீதியான சாட்சிகள் சாதகமாக இல்லையாதலால், ஆண்டுக் கணக்கில் தண்டனையை அனுபவிக்கும்போது மனம் என்ன பாடுபடும்? யாரிடம் நீதி கேட்கும்? படைத்தவனிடம்தானே? அந்த உணர்வுகளின் ஓங்காரம் இந்தப் பாடல்!

    மக்கள் திலகம் திரையில் தோன்றி எளிமையாய், இனிமையாய், கே.வி.மகாதேவன் வழங்கிய இசையில், கண்ணதாசன் வரிகளில் எதிரொலிக்கும் இக் கேள்விகள் நியாயத்தராசு பேசிடும் மொழியோ?

    Kadavul Yen Kallanan video screenshot2நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி
    அது நீதி தேவனின் அரசாட்சி
    அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
    மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி!!!

    கடவுள் ஏன் கல்லானான் – சற்று சிந்தித்துப் பாருங்கள்.

    சதிச் செயல் செய்தவன் புத்திசாலி – அதை
    சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி
    உண்மையைச் சொல்பவன் சதிகாரன் – இது
    உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் !!!

     

    கடவுள் ஏன் கல்லானான்?
    மனம் கல்லாய் போன மனிதர்களாலே (கடவுள்)

    கொடுமையைக் கண்டவன் கண்ணை இழந்தான் – அதை
    கோபித்துத் தடுத்தவன் சொல்லை இழந்தான்
    இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் …
    இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் – இங்கு
    எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
    எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் (கடவுள்)

    நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி
    அது நீதி தேவனின் அரசாட்சி
    அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
    அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி …
    மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
    அரங்கத்தில் வராது அவன் சாட்சி (கடவுள்)

    சதி செயல் செய்தவன் புத்திசாலி
    அதைச் சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
    உண்மையைச் சொல்பவன் சதிகாரன்
    உண்மையைச் சொல்பவன் சதிகாரன் …
    இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
    இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் (கடவுள்)

    காணொளி: https://www.youtube.com/watch?v=DrtNhx9XcKM

    Share