பேரவஸ்தை
-பத்மநாபபுரம் அரவிந்தன்
உன் நினைவிலிருந்து
மனதைப் பிரித்தெடுக்கப்
பூத்துக் குலுங்கும் கொன்றையை,
குலை தள்ளிய வாழையை
வயலை, மலையை
பார்த்து நின்றும்…
இவையனைத்தையும் புறந்தள்ளிக்
கருநீலப் பாவாடையும்
வெளிர்மஞ்சள் தாவணியுமாய்
ஈரமுலராக் கூந்தல் விரிந்த
உன் முகம் மனதைப் பிசையும்…
இன்றாவது உன்னைப்
பார்ப்பதைத் தவிர்த்து
என் மன அவஸ்தைகளை
அடக்க நினைத்தபடி
எதிர்வரும் உன்னைத்
தலை நிமிராமல் கடந்ததும்
மனம் முன்னேறும்
என் கைவிட்டு உனை நோக்கி…
பிறகு தினம்போல்
இன்றும் தந்து செல்கிறாய்
இனம்புரியா உணர்வுடன்
ஒரு பேரவஸ்தையை…!