‘அந்த நாள் ஞாபகம் வந்ததே’

எஸ்.வி.நாராயணன்.

எண்பது வயதை எட்ட இன்னும் ஓரிரு ஆண்டுகளே உள்ள இந்நிலையில், கடந்து வந்த காலத்தை சற்று நினைத்துப் பார்க்கிறேன். பள்ளியிலும், கல்லூரியிலும் படித்த நாட்களை மறக்க முடியுமா?

முதலில், மேற்கு மாம்பலத்தில், அப்போது இருந்த ஸ்ரீதேவி பாடசாலை என்ற ஆரம்பப் பள்ளியில் ஐந்தாவது வகுப்பு வரை படித்தேன். பின்னர், தியாகராயநகரில் பனகல் பார்க் எதிரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் உயர்நிலைப்பள்ளியில் பத்தாவது வகுப்பு வரை. அடுத்து தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பு. அந்த நாளைய ஸ்தாபனங்கள் கல்வி போதிப்பதை பெரும்பாலும் ஒரு தொண்டாகவே செய்து வந்தன. சொன்னால் நம்பமாட்டீர்கள்! அப்போதெல்லாம் ஆரம்ப வகுப்புகளுக்கான மாத கட்டணம் மூன்று ரூபாய்க்கு மேல் இருக்கவில்லை; உயர்நிலைப்பள்ளியில் மாத கட்டணம் பத்து ரூபாய்க்கும் குறைவு. கல்லூரியில், காலாண்டுக் கட்டணம் 80 ரூபாய் அளவில் இருந்ததாக நினைவு.

மாணவர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கும் பழக்கமே அப்போது இருந்ததில்லை. சீருடை புத்தகம், நோட்டு இத்யாதிகள் பெயரில் மாணவர்களிடமிருந்து பணம் பிடுங்கும் போக்கு அப்போது இல்லை. பள்ளியிலும், கல்லூரியிலும் சேருவதற்காக குறுக்கு வழிகளை நாடும் போக்கு அப்போது அனேகமாக இருந்ததில்லை. பத்தாம் வகுப்பு வரை, ஆங்கில மொழி பாடத்தைத் தவிர, இதர பாடங்கள் அனைத்தும் தமிழிலேயே நடத்தப்பட்டன. பள்ளியில் தினமும் நடந்த காலைக் கூட்டத்தில், பிரார்த்தனைக்குப் பிறகு, தலைமையாசிரியரோ, வேறு பெரியவர்களே நல்ல விஷயங்களை, உபயோகமான கருத்துக்களை அழகாக எடுத்துச் சொல்வர், அப்படியிருந்தன அந்த நாட்கள்.

ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் பள்ளியிலும், கிறிஸ்துவக் கல்லூரியிலும் பயின்ற நல்ல விஷயங்களை இன்றும் பெருமையுடன் நினைத்துப் பார்க்கிறேன். அன்று, கிறிஸ்துவக் கல்லூரியில் ஒரு இளம் விரிவுரையாளர் மூலம் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டோம். அந்த இளம் விரிவுரையாளர் தாம்பரத்திலிருந்து அடிக்கடி கிண்டிக்குச் செல்வார். அப்போது மாணவிகளின் ஹாஸ்டல் அங்கு இருந்தது. சில குறும்புத் தன்மை கொண்ட மாணவர்கள் விரிவுரையாளரை, அவர் அறியாமல், பின்பற்றிச் சென்றனர். அவர்கள் கண்டது அவர்களைப் பிரமிக்க வைத்தது. அந்த விரிவுரையாளர் காட்டிய அன்பு ஒரு பெண்ணிடம் அல்ல; கிண்டியில், ஒரு தொண்டு இல்லத்தில் இருந்த நோயாளிக்கு அவர் அன்புடன் பணி செய்ததை அவர்கள் கண்டனர். அன்றைய தினத்திலிருந்து, அவர் எப்போது வகுப்பு எடுக்க வந்தாலும் அவரிடம் ஒரு தனி மரியாதையுடன் மாணவர்கள் நடந்து கொண்டனர். மணிக்கணக்காகப் போதனைகள் செய்தாலும் மனதில் படியாத ஒரு விஷயத்தை மனித நேயப் பண்பை, அந்த விரிவுரையாளர் தம்முடைய தன்னலமற்ற செயல் மூலம் மாணவர்களுக்குப் புரிய வைத்தார்.

அப்போதிருந்த ஆசிரியர்கள், பாடங்களை நடத்துவதோடு இலக்கியம், இசை, விளையாட்டு போன்ற விஷயங்களிலும் மாணவர்கள் ஈடுபட ஊக்கம் அளித்தனர். அதனால், படிப்பு ஒரு சுமையாக இருக்கவில்லை. நூற்றுக்கு நூறு மார்க் வாங்குவதுதான் மாணவர்களின் லட்சியமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் ஆசிரியர்கள் வற்புறுத்தியதில்லை. மாணவர்களின் இயற்கையான திறமையை வளர்ப்பதில் கூடியமட்டும் அக்கறை காட்டினார்கள். அப்போதெல்லாம் நூற்றுக்கு அறுபது மதிப்பெண்கள் பெற்றாலே ஆசிரியர்களும் பெற்றோர்களும் பாராட்டுவர். இப்போது 90 சதவீத மதிப்பெண்கள் பெற்றாலும் திருப்தி ஏற்படுவதில்லை.

படிப்புக்குப் பிறகு வேலை. நல்ல உத்தியோகம் கிடைப்பது. இப்போது போல், அப்போதும் குதிரைக் கொம்பாகத்தான் இருந்தது. மாதம் இருநூறு ரூபாய் சம்பளம் கிடைத்தாலே பெரிய விஷயம். ஆயிரம் ரூபாய் சம்பளம் எல்லாம் அபூர்வம். ஆனால், அந்த நாட்களில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. அன்றைய விலைவாசி நிலையைப் பற்றிக் கேட்டால் வியப்படைவீர்கள். மத்திய அரசுப் பணியில் சேருவதற்காக 1962-63-ல் நான் புதுதில்லி சென்றேன். அங்கு கரோல் பாக் பகுதியிலிருந்த ஒரு விடுதியில் (Mess என்பர்) நான் தங்கினேன். இருப்பதற்கு இடம், காலையில் காப்பி, தயிர், அப்பளம், பொரியலுடன் இரண்டு வேளை முழுச்சாப்பாடு – இதற்காக நான் கொடுத்த மாத கட்டணம் எவ்வளவு தெரியுமா? எண்பதே ரூபாய் தான். இன்று அத்தொகை ஒரு வேளை சிற்றுண்டிக்குக் கூட போதாது எனலாம். 1990 வரை விலைவாசி ஒரு கட்டுக்குள்தான் இருந்தது. 1975 முதல் 1981 வரை நான் புதுச்சேரியில் வானொலி நிருபராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். வீட்டு வாடகையாக (தனி வீடு) ரூ.75- கொடுத்ததாக ஞாபகம். ஐந்து பேர் அடங்கிய எங்கள் குடும்பத்திற்கு மாத மளிகைச் செலவு நூறு ரூபாய்க்கு மேல் போனதில்லை. அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் வகைகள் அனைத்தும் நியாயமான விலையில் கிடைத்தன. காய்கறிகள் மலிவான விலையில் கிடைத்தன. அரை லிட்டர் பாலின் விலை ஒரு ரூபாய்க்கும் குறைவு. கையில் ஒரு ரூபாய் இருந்தால் போதும்; ஹோட்டல்களில் திருப்தியாகச் சாப்பிடலாம்.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வரை, விலைவாசி சற்று ஏறுமுகமாக இருந்தது என்றாலும், நிலைமை இப்போது இருப்பது போல் அவ்வளவு மோசமாக இல்லை. 1995-ல் என்னுடைய மகளின் திருமணம் நடந்தது. நகைகள், துணிமணி, சத்திரத்துக்கான கட்டணம், சீர்செனத்தி முதலிய அனைத்துக் கல்யாணச் செலவும் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் போகவில்லை. அந்தக் கல்யாணத்திற்கான மளிகைச் செலவு பத்தாயிரம் ரூபாய்தான். கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாகத்தான் எல்லாப் பொருள்களின் விலைகளும் விஷம் போல் ஏறிக் கொண்டே வந்திருக்கின்றன. நாளுக்கு நாள் இது இன்னும் கூடிவருகிறதே தவிர குறைவதாகக் காணோம்.

தாராளமய பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் என்று நாம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்க ஆரம்பித்தோமோ, அந்த நாளிலிருந்தே நம்முடைய பொருளாதாரம் திசைமாறிச் சென்றுவிட்டது. ஒரு காலத்திலே குறைந்த செலவு பொருளாதாரம் தான் (Low cost Economy) இந்தியா போன்ற நாட்டுக்கு உகந்தது என்ற கருத்தில் நமது தலைவர்கள் உறுதியாக இருந்தார்கள். இன்று அதிகச் செலவு பொருளாதாரமே (High cost Economy) கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. விலைவாசியைக் குறைப்போம் என்று சூளுரையுடன்தான் அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு, பதவி நாற்காலியில் அமர்கின்றன. நாற்காலியைப் பிடித்தவுடன் சூளுரையை மறந்து விடுகிறார்களோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.

அந்த நாட்களிலே, மருத்துவத் தொழில் இப்போது போல் ஒரு பெரிய வியாபாரமாக (Business) இருக்கவில்லை. இன்று மருத்துவ வசதிகள் பெருகியிருக்கின்றன என்ற போதிலும் மனிதநேயம் குறைந்து விட்டதோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது. முன்பு, பெரும்பாலான மருத்துவர்கள் மனிதாபிமானத்துடன் செயல்பட்டார்கள். உதாரணமாக, ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். ஒரு கால கட்டத்தில் (1950-60-ல் என்று எண்ணுகிறேன்) தியாகராய நகரில் நல்ல அனுபவமும், தேர்ச்சியும், ஆற்றலும் மிக்க ஒரு விசேஷ மருத்துவர் இருந்தார். அவரிடம் மருத்துவ ஆலோசனை பெற நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருப்பர். மருத்துவ ஆலோசனைக்காக அவர் நிர்ணயித்திருந்த கட்டணம் இரண்டு ரூபாய்தான்; மேலும் வசதியற்ற நோயாளிகளிடம் அவர் பணமே வாங்கமாட்டார் என்றும் சொல்லுவார்கள். அத்தகைய மனிதநேயம் இன்றும் எங்காவது பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கும். ஆனால், அதைக் கஷ்டப்பட்டு, தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

அந்த நாட்களிலே, டிவி, தொலைபேசி, செல்போன், கம்ப்யூட்டர் போன்ற வசதிகள் இருக்கவில்லை. அதுவும் ஐம்பதுகளிலே, ரேடியோ, தொலைபேசி இரண்டும் கூட அபூர்வம். நாங்கள் இருந்த மேற்கு மாம்பலத்திலே அப்போதெல்லாம் பாதாள சாக்கடை கிடையாது. சாலைகளும் ஏனோ, தானோ என்று தான் இருக்கும். வீடுகளும் அதிகம் இல்லை. அந்தப் பகுதியிலே, அன்றைய நாட்களில், ஒரே ஒரு வீட்டில்தான் ரேடியோ இருந்ததாக நினைவு. தொலைபேசியும் ஒரே ஒரு வீட்டில்தான் இருந்தது என நினைக்கிறேன். ஆனால், இந்த வசதியின்மை எங்களை அதிகம் பாதிக்கவில்லை. மக்கள் இருப்பதைக் கொண்டு திருப்தியாக மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினார்கள். நாள், பண்டிகை என்றால் வருவோரும், போவோருமாக எல்லா வீடுகளும் கோலாகலத்துடன் விளங்கும். நண்பர்களோ, உறவினர்களோ வந்தால் வீட்டிலுள்ள அனைவரும், வயது வித்தியாசமில்லாமல் அவர்களை உற்சாகத்துடன் வரவேற்பார்கள்.

அன்று நடந்த ஒரு சம்பவம் என் மனதில் இன்றும் பசுமையாக நிற்கிறது. ஒரு நாள், ஒரு உறவினர் இரவு 12 மணிக்கு எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்போது என் தாய், தந்தையர் அவரை மனமார வரவேற்று. உட்காரவைத்து, அந்த நடு இராத்திரியில் மணக்க மணக்க ரவா கேசரி செய்து அவள் கையில் கொடுத்தனர். என் தந்தையும், அந்த உறவினரும் எல்லையற்ற சந்தோஷத்துடன் நின்ற அந்தக் காட்சி அன்று போல் இன்றும் என் மனதில் நிலைபெற்றிருக்கிறது. விருந்தோம்பலுக்கு இதைவிட வேறொரு இலக்கணம் தேவையா?

கடந்து வந்த வாழ்க்கையில் மனதை நெகிழ வைத்த சம்பவங்கள் பல உண்டு. அவற்றில் ஓரிரண்டை குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.

1956-ல் எனது தங்கையின் திருமணம் நடந்தது. மேற்கு மாம்பலம் ஜூபிலி சாலையில் இருந்த எங்கள் வீட்டிலேயே முன்னே ஒரு பெரிய பந்தல் போட்டு, கல்யாணத்தை நடத்தினர் எங்கள் பெற்றோர். அப்போது, நன்கு நாதஸ்வரம் வாசிக்கக்கூடிய உள்ளூர் கலைஞர் ஒருவரை என் தந்தை ஏற்பாடு செய்திருந்தார். அக்காலத்தில் ஜானவாச ஊர்வலம் பிரசித்தம். அருகிலிருந்த கோவிலிலிருந்து கல்யாணம் நடக்கும் இடத்திற்கு மாப்பிள்ளையை அழைத்து வருவார்கள். நாதஸ்வரமும் மேளமும் முன்னே முழங்கிச் செல்ல, மாப்பிள்ளை ஒரு அலங்கரிக்கப்பட்ட திறந்த காரில் பவனி வருவார்.

கல்யாணத்திற்கு முதல் நாள், ஜானவாச ஊர்வலம் துவங்கி சற்று நேரத்திற்கெல்லாம் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. ஆகவே, அரைகுறையாக ஜானவாசம் முடிந்து ஊர்வலக் காரை எப்படியோ தள்ளிக்கொண்டு திருமணவீட்டுக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள், திருமணம் முறையாக முடிந்தவுடன், அந்த நாதஸ்வரக்காரர் என் தந்தையிடம் சொன்னார். “ஐயா, மழை காரணமாக ஜானவாச ஊர்வலத்தில் வாசிக்காதது எனக்கு ஒரு பெரிய குறையாக இருக்கிறது. ஒரு காரியம் செய்யலாமா? மாப்பிள்ளையையும், பெண்ணையும் திருமணக்கோலத்தில் தெருக்கோடியிலிருந்து மணவீட்டுக்கு நடந்து வரச் சொல்ல முடியுமா? எனது நாதஸ்வர கோஷ்டி அவர்கள் முன்னே வாசித்துச் செல்ல அனுமதிப்பீர்களா?” இவ்வாறு எழுந்த வித்தியாசமான கோரிக்கையைக் கேட்ட என் தந்தை, புன்முறுவலுடன் அதற்கு இசைந்தார். மாப்பிள்ளையும் பெண்ணும் மணக்கோலத்தில் சேர்ந்து நடைபோட, நாதஸ்வர கோஷ்டி முன்னே வாசித்துக் கொண்டு சென்றதை அனைவரும் கண்டு மகிழ்ந்தனர். அந்த நாதஸ்வரக்காரரின் உன்னதப் பண்பை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

அடுத்ததாக ஒரு சம்பவம். மறக்க முடியாத, நெகிழ வைத்த நிகழ்ச்சி 1965-ல், நான் தில்லியில், பெரிய பதவியில் இருந்த ஒரு மூத்த அதிகாரியின் உதவியாளனாக இருந்தேன். ஒரு நாள் அந்த அதிகாரி என்னைத் தன் அறைக்கு அழைத்தார். என் பணியில் ஏதோ ஒரு பெரிய தவறு நடந்திருப்பதை அவர் சுட்டிக் காட்டி, வெகுவாக என்னைக் கோபித்துக் கொண்டார். என்ன செய்வது என்று அறியாமல் நான் திகைத்து நின்றேன். திடீரென, அந்த உயர் அதிகாரி தம் இருக்கையை விட்டு எழுந்தார். என் தோள்கள் இரண்டையும் பற்றி, என்னை அவருடைய இருக்கையில் அமர வைத்தார். அவர் சொன்னார், “எத்தகைய முட்டாள் நான்! இன்று நான் இந்த நாற்காலியில் இருக்கிறேன்; நாளை (வருங்காலத்தில்) நீயே இந்த நாற்காலியில் அமரும் வாய்ப்பைப் பெறக்கூடும். உன் மீது அனாவசியமாகக் கோபப்பட்டு விட்டேன். i am sorry”, இவ்வாறு அவர் கூறியதைக் கேட்ட நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். காலில் விழாத குறையாக நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, என் பணியிடத்திற்கு வந்தேன். மிகுந்த பெருந்தன்மையுடனும், பண்புடனும் நடந்து கொண்ட அந்த அதிகாரியை மறக்க முடியுமா?

மற்றொரு சம்பவம், 1974-ல் நடந்தது என நினைக்கிறேன் அப்போது தில்லியில் கரோல்பாக் பகுதியில் இருந்தேன். வீட்டு வேலைக்காக, முக்கியமாகப் பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு உதவ ஒரு வயதான பெண்மணி வந்து கொண்டிருந்தார். தினமும் சுமார் அரை மணி நேரம் வேலை இருக்கும். மாதச் சம்பளம் பதினைந்து ரூபாய். ஒரு நாள் என் மனைவி அந்தப் பெண்மணிக்கு ஒரு ரூபாய் இனாமாகக் கொடுத்தாள். ஆனால், அந்தப் பெண்மணி அதை வாங்க மறுத்துவிட்டார். அவள் சொன்னாள், “அம்மா, என் வேலைக்குத் தகுந்த கூலியை நான் வாங்கிக் கொள்கிறேன். இதற்கு மேல் எதற்கு இனாம்? அந்தப் பணம் எனக்கு ஒட்டாது”. இவ்வாறு கூறிய அந்தப் பெண்மணியின் வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

மனித நேயமும், பண்பும், எளிமையும் நிறைந்த அந்த நாட்களை நினைத்தே காலத்தை ஒட்ட வேண்டியிருக்கிறது. ஏனெனில், இன்று இளைஞர்களின் வெளிநாடு மோகம் காரணமாகவும், கணவன்-மனைவி-குழந்தை என்ற குறுகிய வட்டத்தில் அவர்கள் தங்களை அடைத்துக் கொள்ளும் போக்கு காரணமாகவும் பல குடும்பங்களில் வயதான பெற்றோர்கள் தனித்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. தனியே வாழமுடியாதவர்கள், காளான் போல் பெருகி வரும், முதியோர் இல்லங்களை நாடிச் சேருகிறார்கள். வேறு வழியின்றி அவர்கள், அந்த நாள் ஞாபகம் வந்ததே என்று பழைய நாட்களை அசைபோட்டுக்கொண்டு, என்று விடுதலை கிடைக்கும் என்ற ஒரு ஏக்கத்துடன் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலை என்று மாறுமோ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *