உணவுண்ணும் முறையும் உடல் நலமும்
— முனைவர் சி.சேதுராமன்.
இறைவன் அளித்த இந்த அற்புதமான உடலைக் காத்துப் பேணுவது நம்மிடம் தானுள்ளது. இளமையைப் பாழாக்கிக் கொடிய நோய்களைப் பெற்று அற்ப ஆயுளில் இறந்து போவது அறிவீனம். உடலுக்கு ஊறு நேர்விக்காத உணவை உண்டால் நோய் என்பது நம்மை அணுகாது.
அவசரகதியில் இயங்கும் இன்றைய உலகில் கிடைத்த உணவை உண்டு நோயை நாமே வலிய வரவழைத்துக் கொள்கின்றோம். உணவிற்கும் உடல் நலத்திற்கும் மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நல்ல உணவாக இருந்தாலும் அதனை உண்ணுகின்ற முறைப்படி உண்ண வேண்டும். இல்லையென்றால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அவரவர் உடலின் தன்மைக்கு ஏற்ப ஏற்ற உணவை உண்ணுதல் வேண்டும்.
சிலர் உண்ணும்போது சலசலவென்று பேசிக் கொண்டே உண்பார்கள். இன்னும் சிலர் நின்று கொண்டும் அங்குமிங்கும் அலைந்து கொண்டும் உண்பார்கள். அமைதியாக அமர்ந்து உணவைத் தந்த இறைவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு விரும்பி உண்ண வேண்டும். அவ்வாறு உண்ணும் உணவே உடலுக்கு நலத்தைச் சேர்க்கும். அதைவிடுத்து ஏனோதானே என்று உண்ணும் உணவு உடலுக்கு நலத்தைத் தருவதைவிட கேட்டையே விளைவிக்கும். இதனை உணர்ந்து அனைவரும் உண்ணுதல் வேண்டும்.
அதிலும் சிலர் தமக்குப் பிடித்த உணவாக அமைந்துவிட்டால் அதனை அதிகமாக உண்பர். அவ்வாறு எந்த உணவையும் அளவுக்கு அதிகமாக உண்ணுதல் கூடாது. அவ்வாறு உண்டால் அவ்வுணவே நஞ்சாக மாறிவிடும். வள்ளுவப் பெருந்தகை உணவை உண்ணும் முறையினையும் உடல் நலத்தைப் பேணும் முறையினையும் திருக்குறளில் தெளிவுற எடுத்துரைத்துள்ளார்.
உணவு உண்ணும் முறை:
உணவினை நாம் முறையாக உண்ணல் வேண்டும். மனம் போன போக்கில் உண்ணுதல் கூடாது. சிலர் நினைத்த போதெல்லாம் நினைத்ததை உண்டு கொண்டே இருப்பர். இது உடலில் சேர்ந்து நோய்க்கு இடங்கொடுக்கும். சரி எத்தனை முறை வேண்டுமென்றாலும் உண்ணலாமா? என்றால் மூன்று முறை மட்டும் உண்ணலாம் என்று பொதுவாகக் கூறுவர். அதாவது காலை, நண்பகல், மாலை என்று மூன்று வேளை உணவு உண்டு வரவேண்டும் என்ற பொருள்படக் கூறுவார்கள்.
ஆனால் “முப்போது உண்பான் ரோகி” என்று பழம்பாடல் ஒன்று கூறுகிறது. தினம் மூன்று வேளை உண்டு வருபவன் வாழ்நாள் முழுவதும் நோயாளியாகத்தான் இருப்பான் என்று அந்தப் பாடல் தெளிவுறுத்துகின்றது.
முதலில் உண்ட உணவு செறிமானம் ஆகி நன்கு பசி எடுத்த பின்னர்தான் அடுத்த வேளைக்குரிய உணவை உண்ண வேண்டும். அவ்வாறு உண்பதால் நோய் என்பது நம்மை அணுகாது. நம் உடலுக்கு மருந்து என்பது தேவைப்படாது.
இத்தகைய உணவு உண்ணும் முறையினை,
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”
என்று குறிப்பிடுகிறார்.
முன் உண்ட உணவு நன்கு செறிமானம் ஆகிவிட்ட பிறகு, நன்கு பசி எடுத்த பின்புதான் அடுத்த வேளைக்கு உரிய உணவை உண்ண வேண்டும். இவ்விதம் உண்டு வருவதால் நோய் ஏற்படாது. நோயின்றி இருந்தால் நமக்கு மருந்தே தேவை இல்லை என்கிறார் வள்ளுவர்.
கிராமப்புறங்களில் கூலி வேலை செய்பவர்கள், மலைகளுக்குச் சென்று விறகு கொண்டு வந்து பிழைப்பவர்கள், விடிந்ததும் போனால் பொழுது சென்ற பிறகு வீடு திரும்புவர்கள். நல்ல உடற்கட்டுடன் மட்டுமன்றி நீண்ட நாள் வாழ்வதற்குக் காரணம் அவர்கள் இரு வேளை உணவு மட்டுமே உண்டு வருவதுதான், காலையில் எதையாவது சாப்பிட்டுவிட்டுப் பின்னர் மாலையில் சூரியன் மறையும்போதுதான் எதையாவது சாப்பிட முடிகிறது.
அவர்களுக்குச் சாப்பிட வழியில்லை. எனவே இந்த இருவேளை என்ற முறை இயற்கையாகவே அமைந்து விட்டது. எனவே அவர்களால் நீண்ட காலம் வாழ முடிகிறது. எண்பது வயதைத் தாண்டியவர்களும் நோய் நொடியின்றிக் கண்பார்வை பழுதுபடாத வண்ணம் நீண்ட நாள் வாழ்கிறார்கள். எந்தவிதமான நாகரிக நோய்களும் அவர்களை அண்டுவதில்லை. காரணம் அவர்கள் பசியை நன்கு உணர்ந்து அனுபவித்து அதன் பின்னரே உண்ணுகிறார்கள்; அவர்களால் உண்ணவும் முடிகிறது என்பதே சரியானதாகும்.
வேளைக்கு வேளை மணியைப் பார்த்தவர்களாய், வயிறு பசிக்கிறதோ இல்லையோ குறிப்பிட்ட நேரத்தில் கண்டிப்பாகச் சாப்பிட்டுத் தீர வேண்டும் என்ற எண்ணமுடன் சாப்பிட்டு வருபவர்களுக்கு நோயானது பெரிதும் துன்பத்தைக் கொடுக்கும். இவர்கள் அனைவரும் பசியை அறியாது உண்பார்கள். அதிகப்படியாக – அதாவது அளவுக்கு மீறி உண்ணுதல் என்பது இழிவாகும் என்பதை உணர்ந்து, மிதமாக உண்பவர்களிடம் இன்பம் நிலைத்து நிற்பதுபோல், அளவு மிகுந்து உண்பதே இன்பம் என்று நினைப்பவர்களிடம் தீராத நோய்களே நிலைத்து நிற்கும் என்பதை,
“இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்”
என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
வயிறு புடைக்க உண்ணுதல் இழிவைத் தரும். அதாவது கொடிய துன்பத்தைத் தரும் என்று உணர்ந்து உண்பவனிடம் நோய் தங்கவே தங்காது. இங்ஙனம் நோய் தங்காதவனிடம்தான் இன்பம் நிலைத்து நிற்கும். மிகுதியாக உண்பவனிடம் நோய் நிலைத்து நிற்கும். அவனால் மகிழ்வாக வாழ்க்கையை நடத்த முடியாது. எப்போதும் நோய் என்ற துன்பத்திற்கு ஆளாகியே மடிவர் என்பதையே இக்குறள் எடுத்தியம்புகிறது. அளவுக்கு அதிகமாக உண்ணாமல் தேவையான அளவு அறிந்து உண்ணுதல் வேண்டும் என்று உண்ணுகின்ற முறைமையினை, அளவினை இக்குறளில் வள்ளுவர் தெளிவுறுத்துகிறார்.
அளவுடன் உண்ணுதல் வேண்டும்:
கடும் உடலுழைப்பு இல்லாதவர்கள் மூன்று வேளை உண்டாலும் அளவறிந்து உண்ணுதல் வேண்டும். தன் தேவைக்கு மேல் உண்பவர்கள்தான் இன்று அவதியுற்று மருத்துவரை அடிக்கடி நாடுகின்றனர். மேலும் மருத்துவர்களிடம் பெரும்பணத்தைக் கொடுத்துப் பயனின்றி விரைவில் இவ்வுலகை விட்டே சென்றுவிடுகிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான அளவு என்பது எல்லாவற்றிலும் உண்டு. அவ்வளவானது உணவிலும் உண்டு. அளவறிந்து உண்டு வாழ்பவன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வள்ளுவர் இதனை,
“அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு”
என்று குறிப்பிடுகின்றார்.
அளவறிந்து உண்பவனை நோய் நாடாது. அதனால் அவனது பொருள் விரையமாகாது. அவன் வாழுகின்ற வாழ்க்கையே அர்த்தமுள்ளதாக விளங்கும். உடல் நலத்தோடு இருந்தால் மட்டுமே ஒருவன் மற்றவர்களுக்கு உதவ முடியும். இல்லையெனில் அவன் பிறருக்குச் சுமையாக இருக்க நேரிடும். அதனால் நீண்ட நாள்கள் நோயின்றி வாழலாம் என்று இக்குறள் வழி வள்ளுவர் தெளிவுறுத்தியிருப்பது நோக்கத்தக்கது.
பசித்துப் புசித்தல்:
பசித்தால் மட்டுமே நாம் எதனையும் உண்ண வேண்டும். கிடைக்கிறதே என்று எதனையும் பசி எடுக்காமல் இருக்கும்போது உண்ணுதல் கூடாது. நாம் உண்ணும் உணவிலும் நமக்கு நன்மை செய்வன தீமை செய்வன என்னும் பிரிவுகள் உண்டு. நமக்குப் பிடித்தமான உணவாக இருந்தாலும் அதனை அதிகமாக உண்ணுதல் கூடாது. அதே நேரத்தில் குறைவாகவும் உண்ணக் கூடாது. எந்த ஒன்றையும் அளவோடு உண்ணுதல் வேண்டும். அளவுக்கு மீறி உண்டால் அவ்வுணவே நஞ்சாக மாறி நோயினை ஏற்படுத்தும். இத்தகைய உண்ணும் நெறிமுறையை,
“அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்கத் துவரப் பசித்து”
என்று எடுத்துரைக்கின்றார்.
நாம் முன்னர் உண்ட உணவு நன்கு செறிமானம் ஆனதை அறிந்து நன்கு பசித்த பிறகு நம் உடலுக்கு துன்பம் தருகின்ற உணவுகளைத் தவிர்த்து நன்மை தருகின்ற உணவுகளை அளவோடு உண்ணுதல் வேண்டும் என்று இக்குறட்பாவில் வள்ளுவர் பசித்துப் புசித்தல் வேண்டும் என்ற உணவு உண்ணும் கோட்பாட்டை விளக்கியிருக்கிறார்.
இயற்கையுடன் இயைந்த உணவு:
நாம் உண்ணும் உணவானது இயற்கையுடன் இயைந்த உணவாக இருத்தல் வேண்டும். அதென்ன இயற்கையுடன் இயைந்த உணவு? அதிகக் காரமோ, உப்புச் சுவையோயின்றி குறைந்த அளவு உப்பினைக் கொண்டதாகவும் எண்ணெய் அதிக அளவில் சேர்க்கப்படாமலும் இருக்க வேண்டும். நல்ல பழங்கள், பால், கீரைகள் இவையும் இயற்கையோடு இயைந்த உணவுகளாகும். இவ்வுணவுகள் கிளர்ச்சியை ஏற்படுத்தாது. இவை சத்துவ குணம் நிறைந்த உணவுகளாகும். இத்தகைய உணவு வகைகளே நம்மை அமைதியான வாழ்க்கையை வாழச் செய்யும்.
கூடுதலான வாசனைப் பொருட்கள் மட்டுமின்றி அதிகப்படியான புளிப்பு, காரம் போன்றவைகளை இட்டுத் தயாரிக்கப்படும் உணவு வகைகள் ஆரவாரமான தன்மையைத் தரும். இவ்வகையான உணவுகளுக்கு ராஜஸ குணத்தை ஏற்படுத்தும் தன்மைகள் அதிகம். அதே போன்று அளவுக்கு மீறி உணவினை உண்டால் மந்தமான நிலை ஏற்படும். இம்மந்தமான நிலைக்கு தாமச குணம் என்று பெயர்.
இயற்கையோடு இயைந்த உணவாக இருந்தாலும் கூட நாம் அளவோடுதான் உண்ண வேண்டும். அளவோடு மாறுபாடில்லாத உணவை உண்டால்தான் நாம் உணவு உண்டதன் பயனை முழுமையாகப் பெற முடியும். வயிறு நிறைய உண்டு திணறிக் கொண்டிருப்பதில் எந்தவிதமான நன்மையும் ஏற்படாது. மாறுபாடு இல்லாத இயற்கையோடு இயைந்த உணவினை உண்ண வேண்டும் என்பதை,
“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு”
என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
வள்ளுவர் மாறுபாடு இல்லாத உண்டி என்று குறிப்பிடுவது நமது உடலுக்கு ஏற்ற உணவேயாகும். பீட்ஸா, டின்களில் அடைக்கப்பட்ட உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, விரைந்து தயாரிக்கப்படும் உணவு, நூடுல்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு உணவு வகைகள் நமக்கு, நாம் வாழும் சூழலுக்குப் பொருந்தாத மாறுபட்ட உணவு வகைகளாகும். இத்தகைய உணவு வகைகளை உண்ணுதல் கூடாது.
அவ்வாறு உண்டால் உயிருக்கு ஊறு நேரும். இயற்கையான நம் உடலுக்கு ஏற்ற உணவினை உண்டால் நமக்கு எந்தவிதமான நோயும் ஏற்படாது. உயிருக்கு ஊறு நேராது. இதனை அறிந்து நம்முடைய மரபு சார்ந்த உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை நாம் உண்ண வேண்டும்.
தேவையறிந்து உண்ணுதல்:
ஒருவருக்கு எப்போது உண்ண வேண்டும் என்பது அவருக்கே தெரியும். அவர் தனது உடற்தேவைக்கேற்ப அளவோடு உண்ணுதல் வேண்டும். நமக்கு வேண்டியவர்கள் கொடுக்கிறார்கள், தட்டமுடியாது என்றெல்லாம் கூறிக்கொண்டு நம் உடலுக்கு ஒவ்வாததை உண்ணக் கூடாது. பசித்த பின்னர் நமக்குத் தேவையான அளவுடன் உண்ணுதல் வேண்டும். சிலர் மற்றவர்கள் மனம் நோகக் கூடாது என்பதற்காக அவர்கள் கொடுக்கும் உணவைத் தங்களுக்குப் பசியில்லை என்றாலும்கூட உண்பார்கள். இதனைத் தவிர்த்தல் வேண்டும். அவ்வாறு தவிர்க்காவிட்டால் நோய்க்கு ஆளாக நேரிடும்.
இன்னும் சிலர் இன்று ஒருநாள்தானே! ஒரு நாள் உண்டால் ஒன்றும் ஆகிவிடாது என்று கூறி உண்ணுமாறு கூறுவார்கள். ஒரு நாள் சாப்பிட்டால் மறுநாள் ஒவ்வாத உணவால் ஒவ்வாமை நோய் ஏற்பட்டு துன்புற நேரிடும். அதனால் பசித்தீயின் அளவையும் உடலின் தேவையையும் அறிந்து உண்ணுதல் வேண்டும் என்பதை,
“தீயளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின்
நோயளவு இன்றிப் படும்”
என்று குறிப்பிடுகின்றார்.
பசித்தீயின் அளவை அறிந்து உண்ணுதல் வேண்டும். அவ்வாறு உண்ணும் அளவை அறியாமல் மிகுதியாக உணவினை உண்பவன் கணக்கில்லாத நோயால் துன்புறுவான் என்பது உண்மை. அளவறிந்து உண்ணல் வேண்டும். எதையும் கிடைக்கிறதே என்பதற்காக உண்ணுதல் கூடாது. சிலர் பசிக்காக அல்லாது ருசிக்காகவே அளவுக்கு அதிகமாக உண்பர்.
இவ்வாறு அளவு தெரியாமல் உண்டுவிட்டுப் பின்னர் வாந்தி எடுப்பர். வயிற்று நோயால் துன்பப்படுவர். அவ்வாறில்லாமல் தங்களின் பசித்தேவை அறிந்து உணவினை உண்ணுதல் வேண்டும்.
வள்ளுவர் கூறும் உணவு உண்ணும் முறையானது வாழ்க்கையை இனிமையாக வாழ்வதற்குரிய நெறிமுறையாகும். உணவினை வீணாக்காது நமது உடலின் தேவையறிந்தும், நன்கு பசித்த பின்னரும் அளவோடு உண்டு வளமாக வாழ்வோம். உணவினை உண்ணும் முறையினை அறிந்து உடல் பேணுவோம். அதுவே இன்பமான வாழ்வாகும்.
_________________________________________________________________________
முனைவர் சி.சேதுராமன்,
தமிழாய்வுத்துறைத் தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி),
புதுக்கோட்டை-1
Malar.sethu@gmail.com