Featuredஇலக்கியம்பத்திகள்

தோழமையுடன் ஒரு பயணம் – 4

ஸ்ரீலங்கா (பகுதி 4)

நிர்மலா ராகவன்

அடுத்து கண்டியில் இரு தினங்கள்.

போகும் வழியில் ஸீக்ரி என்ற சிவந்த மலையைக் கண்டோம். 180 மீட்டர் உயரம். நான்கு புறமும் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருந்தது. மேலே அரண்மனை இருந்ததாம்.

anir
கண்டி மலைப்பாங்கான ஊர். சாமான்கள் கொழும்புவைவிட மிக மலிவாகக் கிடைக்கின்றன. உள்ளூர் பருத்தித் துணி அழகாக இருக்கிறது. யாரும் `வாங்கிப் போங்கள்,’ என்று கட்டாயப்படுத்தவில்லை. விலை கூறிவிட்டு, மரியாதையாக ஒதுங்கி நிற்கிறார்கள்.

பெண்கள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட நைலக்ஸ் அல்லது பருத்திப் புடவைகளை அணிகிறார்கள். புடவையின் முன்தலைப்பு ஆறுபோல் மார்பகத்தின் நடுவில் செல்கிறது. தோளுக்குப் பின்னால் தொங்கும் தலைப்பு தெருவில் இடிக்கும் நீளம்! மூன்றங்குல அகலமாக விட்டிருக்கிறார்கள். பார்க்க மிக அழகாக இருந்தது. சிலரது ஜாக்கெட் பின்னால் ஓரிரு அங்குலம்தான். முன்னாலும் கழுத்துப்பகுதி தாராளமாக இறங்கியிருந்தது. அது அவர்கள் பாணியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததாலோ, என்னவோ, ஒரு ஆணும் அவர்களை விறைத்துப் பார்க்கவில்லை என்பதை மகிழ்வுடன் கண்டோம்.

ஒரு துணிக்கடையில், நான் பேச ஆரம்பித்ததும், `தமிழா?’ என்று பலர் ஓடி வந்தார்கள். பார்க்க வேண்டிய இடங்களைப்பற்றி நிறைய தகவல் கொடுத்தார்கள். அங்கேயே பிறந்து வளர்ந்தவர்களாம். தமிழ்ப்பள்ளியில் படித்தவர்கள். தினமும் அருகிலிருந்த கோயிலுக்குப்போய் நெற்றியில் குங்குமம் தரித்துக்கொண்டுதான் வேலைக்கு வருவதாக ஒருவர் கூறினார்.

akoi
அவர்கள் வழி சொல்ல, அக்கோயிலுக்குப் போனேன். அதன் பின்னால், அதே வளாகத்தில் ஒரு புத்தர் கோயிலும் இருந்தது.
நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகேயே புத்தருடைய பல் இருக்கும் பிரசித்தி பெற்ற கோயில் (Temple of the tooth relic) இருந்தது. அது தெரியாது, ஒரு ஆட்டோக்காரரிடம் எங்களை அங்கே கொண்டுவிடும்படி கேட்க, `வாக்!’ என்றார்! கோயிலுக்கு முன்னாலிருந்த பூக்கடைக்காரர் புன்சிரிப்புடன், அவருடைய அன்பளிப்பாக ஒரு ஊதா நிற அல்லிப் பூவை என் கையில் கொடுத்தார்.

அந்தக் கோயிலுக்கு சீனர், ஜப்பானியர் போன்ற அயல் நாட்டு பௌத்த மதத்தினர் பெருவாரியாக வருகிறார்கள். என் மகள் கையில்லாத சட்டை அணிந்திருந்தாள். இரு விரல்களை தோளுக்குக் கொஞ்சம் கீழே வைத்து, `உள்ளே நுழைய முடியாது,’ என்று காட்டினார் டிக்கட் கொடுப்பவர்.

தேயிலைத் தோட்டங்கள் எங்களுக்கு அபூர்வமில்லை என்பதால், அதை விடுத்து, தாவரவியல் தோட்டத்திற்குப் (botanical gardens) போனோம். பார்த்து ரசிக்க எவ்வளவோ இருந்தன. நாலாயிரம் வகை தாவர வர்க்கங்கள்.

எங்களை அங்கு கொண்டுவிட்ட ஆட்டோக்காரர், `காத்திருக்கட்டுமா?’ என்று கேட்டார்.
எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று சொல்லத் தெரியாததால், மரியாதையாக மறுத்தேன். அவர் எனக்கு ஆதரவாக, `இங்ஙன வண்டி பிடிக்கலாம்,’ என்று சொல்லிச் சென்றார்.

மொழி தெரியாது நாங்கள் திண்டாடப் போகிறோமோ என்ற கவலையுடன் என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி போனவரைப் பார்த்துக் கையாட்டிச் சிரித்தேன். அப்பப்பா! அவர் முகத்தில்தான் எவ்வளவு மகிழ்ச்சி!

திரும்பம் வழியில், கொழும்புவிலிருந்து ஏழு மைல் தொலைவிலிருந்த களனி (Kelaniya) கோயிலுக்குப் போனோம். இங்குதான் ராமர் விபீஷணனைச் சந்தித்தாகச் சொல்லப்படுகிறது.

இந்நாட்டில் ஆட்டோக்காரர்கள் மீட்டருக்குமேல் கேட்காததுடன், மீட்டர் இல்லாவிட்டாலும் அதே கட்டணத்தையே கேட்டது வியப்பூட்டியது. தமிழ் தெரியாதவர்கள் சைகையிலேயே விளக்கினார்கள். `Coconut tree!” என்று சுட்டிக் காட்டினார் ஒரு ஆட்டோக்காரர்! தலையாட்டி வைத்தேன்.

தெருக்களைக் கூட்டுபவரிலிருந்து, எந்தத் தொழில் புரிபவர்களாக இருந்தபோதும், ஆன்மதிருப்தியுடன், குறுக்கு வழி தேடாது செய்ததைப் பார்க்க முடிந்தது. இவர்களுக்குத் தம் உழைப்பில் பெருமை இருக்கிறது. மனித நேயம் அதிகம்.

கம்போடியாவிலும் இப்படிப்பட்டவர்களைச் சந்தித்து இருக்கிறேன். `எங்கள் தந்தை, மாமா எல்லாரும் போரில் மடிந்துவிட்டார்கள். நீங்கள்தாம் எங்கள் உறவினர்!’ என்று எங்களை ஏற்ற ஒரு வழிகாட்டியின் நினைவு வந்தது.

இயல்பான நமது மனிதத் தன்மையை நம்முள்ளிருந்து வெளிக்கொணர யுத்தமும், இனக்கலவரமும் அவசியமோ?

முற்றும்

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க