“வாஸ்த்தாவான் வந்த விரஜநிலம் வாழ்ந்திட
தோஸ்த் தாவான் பார்த்தனுக்கு தோள்கொடுத்து
ஆஸ்த்தான -ஆவுக்கு ஞானம் அடிநீட் டியளிப்பான்
பூவைத்து வைப்பான்செம் பொன் “….கிரேசி மோகன் ….
Blog
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
நாதமற்ற நல்வீணை!
-சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்
நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுபோல்
எனக்கும் சிறிது கவித்திறன் தந்து
ஏனிந்த ஈனச் சமூகத்தில் உலவவிட்டாய்
தமிழன்னையே?மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம் எனும்
முண்டாசுக் கவியின் பொன்மொழி கொன்று
மாதரைக் காமத்திற்காகக் கொளுத்துகிறான் இன்று!அன்னையே கண்கண்ட தெய்வம்
அக்கா அவளோ இரண்டாம் தாய்
தங்கை அவளோ தான்பெறாத குழந்தை
தாரம் அவளோ பத்தினித் தெய்வம்
உண்மையான காதல் இவர்களிடம் இருக்க,
உதவாக்கரை சிலரோ
இக் கலிகாலக் காதல்பேயைப் பற்றிக்
கண்டபடி அலைகிறார் பெண் பின்னால் சுற்றி!
காதல் என்பதன் உண்மை அர்த்தம் உணராது
ஐ லவ் யூ என அரற்றுவதேன் சில ஈனப் பதர்கள்?இருபதில் காதலி ஐ லவ் யூ சொல்வது வேதம்
அதே
நாற்பதில் சகோதரி ஐ லவ் யூ சொல்வது நாராசம்
அறுபதிலோர் அன்னை ஐ லவ் யூ சொல்வது ஆபாசம்
நன்றிகெட்ட சமூகத்தின் நிலைதான் இது!
தாய்க்கும் தாரத்திற்கும் தங்கைக்கும் அக்காவிற்கும்
வித்தியாசம் உணராது அறிவு விளையாத களர்நிலத்தில்
ஈனப் பதர்களாய்ச் சில கருங்காலிகள்!முண்டாசுக் கவியோ இன்றிருந்தால் அம்
முண்டாசால் தூக்கிட்டு மாண்டிருப்பான்!
துண்டு துண்டாய்த் தன்னை வெட்டித்
தானே கீழே தவித்தபடி சாய்ந்திருப்பான்!
அதனால்…
பெண்களே விழித்தெழுங்கள்!
முண்டாசுக் கவிஞனுக்கு நீர் ’பிண்டம்’ வைக்கவில்லை எனினும்
இந்த அண்டம் காக்க அலைகடலெனத் திரண்டு ஒன்றுபடுங்கள்!
பெண்ணே,
பெண்ணாய் நீ பிறந்ததற்குப் பெருமைப்படு அடி என் கண்ணே! -
மகாகவி பாரதியார்
-சேது சுப்ரமணியம்
பாரறியாதிருந்த எட்டையபுரந்தன்னைப்
பாரறியச் செய்தான் சுப்ரமணிய
பாரதி என்னும் மகா கவிஞன் – கலைவாணி
பாரதி அருள் பெற்ற கலைஞன்
பாரதிரச் செய்த சுதந்திர வேட்கைப்
பாடல்கள் புனைந்திட்ட இளைஞன்!
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று கலங்கி நின்ற கவிஞன்
நெஞ்சு பொறுக்குதில்லையே என்று எழுதி
நெஞ்சம் கலங்க வைத்த கவிஞன்!உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
இச்சகத்துளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சமென்பதில்லை என்று முழங்கினான்!
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று
உளமார வாழ்த்திய போதிலே – வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோமென்று
வெகுண்டு வெறுப்பினைக் காட்டினான்!
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் என்று
நதிநீர் இணைப்பே நாட்டின் வளர்ச்சிக்குக்
கதியாகும் என்றவன் கூறினான்!புதுமைப் பெண்களைப் போற்றினான் – அவர்
புவியாள வேண்டியே ஏற்றினான்
ஓடி விளையாடு பாப்பா என்று
குழந்தைகளுக் கறிவுரை கூறினான்!
பாஞ்சாலி சபதம் இயற்றியே – மகா
பாரதத்தின் புகழ் பரப்பினான்
பாரத மாதாவைப் போற்றியே அவன்
வந்தே மாதரம் பாடினான்!பக்தியுடன் சக்தியைப் பாடினான் – தேச
பக்தியின் சிறப்பையும் பாடினான்
கண்ணனைக் கண்ணம்மா ஆக்கியே – பல
பொன்னான பாடல்கள் பாடினான்!
புதிய ஆத்திசூடி இயற்றினான் – மனதில்
பதியும்படி எளிமையாக்கினான்
குயில் பாட்டின் மூலம் காதல் கதையொன்று
நெடுங்கவிதையாகவே நல்கினான்
சாதிக் கொடுமைகளைச் சாடினான் – சம
நீதி கிடைக்க வழி தேடினான்!’வாழ்க நீ எம்மான்!’ என்று காந்தியைப் போற்றினான்
வஞ்சக எண்ணம் கொண்டோரைத் தூற்றினான்
பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பற்றியும்
புரட்சிகள் பற்றியும் கூறினான்!
கவிதைகள் கட்டுரைகள் கருத்துப் படங்களால்
சுதந்திர வேட்கையைத் தூண்டினான்
வறுமையில் தவித்த போதிலும் – தலை
வணங்காது வாழ்ந்து காட்டினான்
வெள்ளையர் விரட்டிய போதிலும் – மனம்
எள்ளளவும் கலங்காது நின்றவன்!
பாரதத்தாயின் விலங்கினை உடைத்து
சுதந்திரத் தாயாய்க் காண நினைத்தவன்
பார்த்தசாரதி கோயில் யானையால்
பரமனடியினைச் சேர்ந்தான்
பாரதத்தாய் மனம் சோர்ந்தாள்!பாரதியின் புகழ் பாடிடுவோம்
பாரதியாரின் வழி நடப்போம்
பாரத தேசத்தின் பெருமைதனைப்
பாரது உணரச் செய்திடுவோம்! -
பாரதி – ஒரு நினைவாஞ்சலி
பாரதி!
உனக்கும் எனக்கும் தான் எத்தனை ஒற்றுமை !நீ பிறந்த அதே நெல்லைச்சீமையிலே
நான் பிறந்தேன் !
உன் வீட்டுக்கும் என் வீட்டுக்கும்
எட்டுக்(ம்) கல் தூரம்!நீ பிறந்த அதே நட்சத்திரத்தில்
நான் பிறந்தேனாம் !
ஜோதிடர்கள் சொல்லுகிறார்கள் !நீ வாழ்ந்த அல்லிக்கேணியிலே
நானும் வளர்ந்தேன் !உன் பெயரை
என் பெயர் கடன் வாங்கிக்கொண்டது!கூடலிலே நீ தமிழ் ஊட்டி வளர்த்த
பள்ளியிலே நான் மாணவன்!ஆனால், பாரதி,
நீயோ ஒரு கான மயில்!
நானோ ஒரு வான்கோழி :
சிறகடிக்கிறேன், சிந்திக்காதே,
என்னை மன்னித்துவிடு!பாரதி!
பராசக்தியைத் தவிர
யாருக்கும் தலை வணங்க மறுத்த
தலையை நிறுத்தும் ஒரு முண்டாசு!பறங்கியர் நெஞ்சம் பதைபதைக்க
‘நெற்றி அடி’ கொடுக்கும்
ஓர் பரந்த நெற்றி !பாற்கடலில் அமுதம் தேடுவதுபோல்
பாலுண்ட கண்களில் மேருவினைப்போல்
இரு கரு விழிகள் !எரிமலை மூச்சு விட்டாற்போல்
தகிக்கும் மூச்சுக்காற்று – அது
மீசையில் மோதி “மாகாளி, மாகாளி ” யென
மோனத்தில் சொல்லும் மந்திரம் !உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
உதட்டினை முத்தமிடப்
பிறந்த தமிழ்க் கவிதை!காக்கை குருவி யெங்கள் ஜாதியென
கருணை கொண்ட உள்ளம் !
கருப்பு அங்கியில்
வெள்ளை நெஞ்சம்!பூமியைத் தட்டிய அவன் தடிகள்
பூதேவிக்குப் பூபாளம் பாடின!மண்ணை முரசாக்கி அவன்தன்
தடியால் தட்டியபோது
“யாமிக்கப் பயமேனென்று”
பாரதத் தாய்க்கு பலம் கொடுத்தது !துடிக்கும் மீசையைக் கண்டு
துவண்ட பரங்கியர்
தங்களைத் தாங்களே கொட்டிக் கொண்டனர்!வீசு நடையைக்கண்டு
ஆசை கொண்ட தோள்கள்
கைவீச்சுக் தோள் கொடுத்தன !பாஞ்சாலிக்கு சபதம் கொடுத்தவனின்
அஞ்சாத தேச மதம் கண்ட
யானை கூட அச்சத்தில் மதம் கொண்டது !காலடியில் வீழ்ந்தாலும்
கலங்கிடாத பாரதி
காந்திக்கும் குருவானான் !! -
எப்போதும் நினைவை ஆட்கொள்பவரின் நினைவலைகள்…….
எஸ் வி வேணுகோபாலன்
தமிழர் வாழ்க்கையில் திருவள்ளுவரும், மகாகவி பாரதியும் இளமைக்காலம் தொட்டுக் கூடவே வருகின்றனர். இயற்கையின் காட்சியானாலும், ஆட்சியாளர்மீது கோபம் என்றாலும் பாரதி உடனிருக்கிறார் எப்போதும். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு பொருள் கிடைக்கச் செய்பவை சிறந்த இலக்கிய வாசிப்பை வழங்குகின்றன. கம்யூனிஸ்ட் அறிக்கை ஓர் இலக்கிய பிரதி என்று சொல்லப்படுவது இங்கே நினைவுக்கு வருகிறது. குயில் பாட்டையும், பாஞ்சாலி சபதத்தையும் அதனால் தான் ஒவ்வொரு ரசிகரும் ஒவ்வொரு முறையில் கொண்டாடி வாசித்துக் கொண்டிருப்பது.
சென்னை புறநகர் ரயில் பயணத்தின்போது ஏதேனும் பொருள்களை விற்றுக் கொண்டுவரும் சுவாரசியமான சிலரைப் பார்க்கலாம். வரைபடங்களை விற்பவர் ஒருவர், அதுபற்றி விவரிப்பதே வித்தியாசமாக இருக்கும். தேசத்தின் ஆறுகள் எத்தனை, என்னென்ன இயற்கை வளம், மாநிலத் தலைநகரங்கள் பெயர் எல்லாம் தரப்பட்டிருக்கிறது என்று ஒவ்வொன்றாக சுவையாக சொல்லிக் கொண்டே செல்பவர், கொஞ்சம் நிறுத்தி, நான் இந்திய வரைபடத்தைத் தான் விற்கிறேன், தப்பில்லை, நாட்டைத் தான் விற்கக் கூடாது என்பார். அவரது விற்பனைக்கான கவன ஈர்ப்பு அது. ஆனால் உண்மையில் எத்தனை முக்கியமான கவன ஈர்ப்பு!
சம கால நடப்புகள்தானே நமது அன்றாடப் பேச்சில் சாதாரணமாக பிரதிபலிக்கிறது ! நாடாளுமன்றக் கூட்டுத் தொடர் நீட்சி இல்லை என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதை நாளேட்டில் வாசிக்கும் அன்பர் ஒருவர், நல்ல வேளை நாடு தப்பியது என்று மனத்திற்குள் சொல்லிக் கொள்கிறார். அடுத்த நிமிடம், அய்யோ, பாவிகள் அவசர சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வார்களே என்று முணுமுணுக்கிறார். இப்போதைக்குத் தலை தப்பி இருந்தாலும் நிலப் பறிப்பு விஷயத்தில் இன்னும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டி இருக்கிறதே. மகாகவியின் பாஞ்சாலி சபதம் நம் நெஞ்சில் சுழலத் தொடங்குகிறது.
கடந்த சில பத்தாண்டுகளில் நாட்டில் அதிகம் சுதேசி சுதேசி என்று பேசியவர்கள்தான் இப்போது ஆட்சியில் அமர்ந்தபடி எல்லாவற்றையும் விற்றுக் கொண்டிருப்பவர்கள். நடிப்பு சுதேசிகள் என்ற சொற்களை மகாகவி அப்போதே வைத்துப் புனைந்திருக்கிறார். அற்ப பிரச்சனைகளுக்காக பிரிந்து கிடப்பவர்களை எண்ணித் தான் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று வெடித்தார் அவர். பயமெனும் பேய்தனை அடிக்கவும், பொய்மைப் பாம்பைப் பிளந்து உயிரைக் குடிக்கவும் அறிவுறுத்திய அவரது குரல் இன்றும் எவ்வளவு தேவைப்படுகிறது! இங்கே திரும்பினாலும், அங்கே பார்த்தாலும் எங்காவது வாசிக்கப்பட்டோ, ரசிக்கப்பட்டோ, மேற்கோள் காட்டப்பட்டோ கலந்திருக்கின்றன அவரது கவிதைகள்.
நமது பண்பாட்டு வெளியைப்போல் புண்பட்டுக் கிடக்கும் இடம் வேறு ஒன்று உண்டா தெரியவில்லை. காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு என்று யாரை வழக்கப்படுத்துவது இப்போது? படிப்பு என்பது பாடச் சுமை என்று பொருள்படும் காலத்தில் வாழ்கிறோம் நாம். குழந்தைகளைக் கொட்டடியில் அடைப்பதும் ஒன்றுதான், வெளிச்சமோ, காற்றோ புக முடியாத வகுப்பறைகளில் சிறைப்படுத்துவதும் ஒன்றுதான். வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ, வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ என்றார் அவர். தமிழ் மண்ணில் தாய்மொழியில் பேசினால் அபராதம் விதிக்கும் பள்ளியில் படிக்கின்றனர் நமது குழந்தைகள். இன்புறும் வேளையில் மட்டுமல்ல, எதிர்கொள்ளும் மோசமான நடப்புகளின் போதும் அவர் பாடல்களில்தான் நாம் முட்டிக் கொள்கிறோம்.
அறிவியல், வரலாறு, கதைகள், கவிதை தொகுதிகள் என்று விரிந்திருக்கும் புத்தகக் கடையில் தற்செயலாக பத்து நிமிடங்கள் நின்று கவனித்தால் ராசி பலன் புத்தகங்களே சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. சோதிடம் தனை இகழ் என்றார் மகாகவி. பொருளாதார ஏற்றத் தாழ்வு, நிச்சயமற்ற எதிர்காலம்…. பந்தயக் குதிரைகளாக வெறியூட்டப்பட்ட வாழ்க்கைக் களத்தில் மூட நம்பிக்கைகளும், ஜாதக பலன்களுமே புகலிடமாகின்றன. நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்கள் எல்லாம் சொப்பனம் தானோ, பல தோற்ற மயக்கங்களோ என்று பாடிய பாரதி, அந்தக் கவிதைக்கான முன்னுரையில் இவ்வுலகம் மாயை என்று சொல்வோரைப் பகடி செய்கிறார். நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் தேடித் தேடிக் கும்பிட்டுக் கொண்டிருக்கும் நமது நவீன சாமியார்களோ மாயை என்று சொல்லிக் கொண்டே சொகுசான ‘கார்பொரேட்’ குடில்களில் அமர்ந்து அருள் புரிந்து கொண்டிருக்கின்றனர்.
பிள்ளைகள் பெற்றதப் பூனை, அவை பேருக்கொரு நிறமாகும் என்று ஒரு வெள்ளை நிறப் பூனையை வருணித்த மகாகவி, எந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ, இதில் ஏற்றம் என்ன தாழ்வு என்ன என்றும் கேட்டார். சாதியின் பெயரால் இன்றும் இரத்த வெள்ளத்தில் மனிதம் மூழ்கடிக்கப்படுகிறது. ஆதிக்க உணர்வும், ஒடுக்குமுறையும் மரபணுவிற்குள் ஊன்றப்பட்டிருக்கிறது. கீழ்சாதிப் பயலைப் பற்றி பாடத்தில் என்னத்துக்குப் படிக்க என்று பாட புத்தகங்களில் இருந்து வரலாறு கிழித்தெடுத்துக் கொளுத்தப் படுகிறது.
பாலின சமத்துவம், அரசியல் சமூக பண்பாட்டுப் பள்ளியில் தேர்வுக்குக் கேள்விகள் வராது என்று ஒதுக்கப்பட்ட பாடம். சுவாரசியம் அற்ற விவாதப் பொருள். நிறைவேற்ற வேண்டாத தீர்மானம். நடைமுறைப் படுத்த வற்புறுத்தல் அற்ற விதிமுறை. கவிழ்த்து வைக்கப் பட்டிருக்கும் உணவுத் தட்டு. எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை, ஆனால் இணையில்லை என்று மகாகவியின் கவிதை எப்போதோ உரு மாற்றி வாசிக்கப்படுகிறது.
ஆனால், சோர்வுக் கஞ்சி காய்ச்சும் கலயம் அல்ல மகாகவியின் கவிதை அடுப்பு. அது வெம்மையைத் தணித்து உற்சாகத் தெம்பூட்டும் ஆடி மாதக் கூழ் வார்க்கும் அமுத சுரபி! போராட்டக் கனலை ஊதி எழுப்பும் குழல். நம்பிக்கை நாற்றுக்கு வார்க்கும் நீர். அதன் வாசிப்பு அனுபவம், மாற்றங்களுக்கான தேடலுக்கு வாசல் வரை வந்து வழியனுப்பும் ஒரு தாயின் பரவச வழியனுப்புதல்.
இந்த நினைவு நாளில் மட்டுமல்ல, எப்போதும் நினைவில் இருப்பவை பாரதி குறித்த சிந்தனை அலைகள்.
&&&&&&&&&&&&&&&
-
பாரதியாரின் இறுதிக் காலம்
— தஞ்சை வெ.கோபாலன்.
(மகாகவி பாரதியாரின் இளைய மகள் சகுந்தலா “பாரதி — என் தந்தை” எனும் நூலில் தரும் தகவல்களிலிருந்து திரட்டப்பட்டது.)
பாரதியார் புதுச்சேரியிலிருந்து வெளியேறி கைதாகி கடலூர் சிறையில் சில நாட்கள் இருந்த பிறகு விடுதலையாகித் தன் மனைவியின் ஊரான கடையத்தில் போய் இருந்து வந்த நேரம். அவ்வூர் வாசம் பாரதிக்கு எந்தவிதத்திலும் ஒத்துப் போகவில்லை. அங்கு அவருக்கு இருந்த ஒரே நண்பரான நாராயண பிள்ளை என்பவரோடு அவருக்கு ஒரு மனவருத்தம் ஏற்பட்டுவிட்டது. அதன் பிறகு அந்த ஊரில் இருக்க அவருக்குப் பிடிக்கவில்லை. அப்போது பாரதியாரின் மைத்துனர் அப்பாத்துரை பாரதி இனி சென்னையில் வசிப்பதே நல்லது என்று அவரை சென்னை அனுப்ப வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்.
சிறையிலிருந்து விடுதலையாகும்போது இவருக்கு அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஒருக்கால் இவர் கடையத்தைவிட்டு வெளியேறி சென்னைக்குச் செல்வதை அரசு தடுத்தால் என்ன செய்வது? ஆனால் கடையத்தில் இருந்த காலத்தில் இவர் ஊரைவிட்டு வெளியேறி மதுரை, காரைக்குடி, கானாடுகாத்தான் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று சில நாட்கள் தங்கி வந்திருக்கிறார். அதையெல்லாம் அரசாங்கம் தடைசெய்யவில்லை என்பதால், இப்போது சென்னைக்குச் செல்வதையும் அவர்கள் தடை செய்ய மாட்டார்கள் என்று நினைத்தார்கள். முதல் உலக யுத்தம் முடிந்த பின்னர் புதுச்சேரியில் வந்து தங்கியிருந்த சுதேசிகளையும் வெளியேற அனுமதித்து விட்டார்கள். ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த மகான் அரவிந்தரின் சகோதரரும், வீர சாவர்க்கரும்கூட தீவாந்தர தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்கள். இந்தச் சூழ்நிலையில் தானும் சென்னைக்குப் போவதில் எந்தத் தடையும் இருக்காது என்றுணர்ந்து பாரதியாரும் சென்னைக்குப் புறப்பட்டு விட்டார்.
சென்னை செல்வதற்கு பாரதி புறப்பட்டபோது அவருடன் செல்லம்மாவும் மகள் சகுந்தலாவும் புறப்பட்டார்கள். கையில் பணம் இல்லாததால் ரயிலில் இவர்களுக்கு மூன்றாம் வகுப்புப் பயணத்துக்கான டிக்கெட்டுகள் வாங்கப்பட்டுவிட்டன. ரயில் பெட்டியில் கூட்டம் அதிகமாயிருந்தபடியால் ஒருவரோடொருவர் இடித்து மோதிக்கொண்டு, மரியாதையின்றி வசை பாடிக்கொண்டு வரும் கூட்டத்துக்கிடையில் தான் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்வது பாரதிக்கு அறவே பிடிக்கவில்லை.
“அடடா! கையில் பணமில்லை என்பதால் உயர்ந்த மெத்தை தைத்த ரயில் பெட்டியில் பயணம் செய்ய முடியவில்லை. சரி! அதற்காக ஆடுமாடுகளைப் போல ஒரே வண்டியில் கூட்டமாக ஏறிக்கொண்டு, நிற்கக்கூட இடமின்றி ஒருவரையொருவர் வசைபாடிக்கொண்டு சண்டையிட வேண்டுமா? அமைதியாக ஒருவருக்கொருவர் இடம்விட்டு விலகியிருந்து, உதவி செய்து பயணம் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அட! புதுத்துணி, பட்டுடைகள் வாங்கத்தான் பணம் இல்லை, இருக்கிற துணியையாவது அழுக்கு இல்லாமல், நாற்றமடிக்காமல் தோய்த்து உடுத்தக் கூடாதா? என்ன இழிவு நிலை நம் பாரத தேசத்துக்கு!” என்று மனம் வருந்திக்கொண்டிருந்தார் பாரதியார். அந்தச் சூழ்நிலை அவருக்குத் தலைவலியை உண்டாக்கிவிட்டது.
ரயில் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போது வெயிலும் கொளுத்திக் கொண்டிருந்தது. இவர்கள் பயணம் செய்த ரயில் வண்டி ஒரு நிலையம் தவறாமல் எங்கும் நின்று நின்று சென்றுகொண்டிருந்தது. அலுப்பு தரும் இந்தப் பயணம் சென்னை வரை எப்படி இருக்கும். செல்லம்மாள் மதுரை வந்ததும் விரைவாகச் செல்லும் ரயிலுக்கு மாறிவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டாள். இவர்கள் ரயில் மதுரை நிலையத்துக்குள் நுழையும் அதே நேரத்தில் சென்னைக்குச் செல்லும் விரைவு ரயில் நிலையத்தைவிட்டுப் புறப்பட்டுவிட்டது. பெட்டி படுக்கைகளுடன் அதைப் பிடிக்க ஓடியும் பிடிக்க முடியாததால் பாரதியார் குடும்பம் மீண்டும் தங்கள் சுமைகளுடன் பழைய வண்டிக்கே வந்து சேர்ந்தது.
அவசரத்தில் ரயில் பெட்டிக்குள் ஏறும்போது எங்கோ அடிபட்டு செல்லம்மாள் காலிலிருந்து ரத்தம் கசியத் தொடங்கியது. பயணக் களைப்பு, சூழ்நிலையின் வெறுப்பு, இவை பாரதிக்குக் கோபத்தை உண்டாக்கியது. கோபம் வந்து என்ன செய்வது? அல்லது யாரை நோவது? உடன் பயணம் செய்தவர்கள் இவர்கள் படும் துன்பங்களையும், பாரதியாரின் கவுரவமான பேச்சு, உடல் நிலை இவற்றைக் கவனித்து இவர்களுக்கு உட்கார இடம் கொடுத்தனர். இரவும் வந்துவிட்டது. பாரதி சற்று கண் அயர்ந்தார், செல்லம்மா மட்டும் உடைமைகளை கவனித்துக் கொண்டு விழித்துக்கொண்டிருந்தார்.
அப்போது மதுரையிலிருந்து சென்னை செல்ல ‘மெயின் லைன்’ எனப்படும் தஞ்சாவூர், கும்பகோணம், மாயூரம் வழியாகத்தான் போக வேண்டும். அரியலூர் விருத்தாசலம் வழியான குறுக்குவழி அப்போது போடப்படவில்லை. அவர்கள் ரயில் பயணத்தில் வண்டி தஞ்சாவூருக்கு முன்னதாக ஒரு நிலையத்தில் நின்ற சமயம் அங்கு ஏழெட்டுப் பெண்களும், இரண்டு ஆண்களும் ஏராளமான சாமான்களுடன் பெட்டியில் ஏறினார்கள். அவர்களுள் ஒருவர் ஒரு பெஞ்சில் படுத்திருந்த பாரதியாரிடம் வந்து தன் கைத்தடியால் அவர் காலில் தட்டி “ஏய்! எழுந்திரு; உட்கார இடமில்லை, அதிலே படுக்கை என்ன?” என்று அதட்டினார்.
பாரதியார் அவரைக் கண்விழித்துப் பார்த்தார். அவர் பேசிய தோரணை, தட்டி எழுப்பிய அலட்சியம், குரலில் இருந்த அதிகாரம் இவை பாரதியாருக்குக் கோபத்தை உண்டாக்கிவிட்டது. அவர் எழுந்து “தூ”வென்று அவர் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டுத் திரும்பப் படுத்துக் கொண்டுவிட்டார். அந்த மனிதருக்கு அதிர்ச்சி, அதிர்ந்து போய் நின்றுவிட்டார். சிறிது அதிர்ந்து போய் நின்றுவிட்டுக் கூச்சல் போட்டு பெருங்குரலெடுத்துத் திட்டத் தொடங்கிவிட்டார். அவரோடு உடன் வந்த பெண்களும் என்ன பேசுகிறார்கள் என்பதே தெரியாதபடிக்கு ஏதோ பெரும் கலவரம் செய்யத் தொடங்கி விட்டார்கள். இத்தனைக்கும் பாரதியார் எந்த எதிர்ப்புமின்றி அவர் பாட்டுக்குப் படுத்துக் கொண்டிருந்தார். உடன் பயணித்த மற்ற பயணிகளுக்கு இவர் மீது மரியாதையும் அன்பும் ஏற்பட்டிருந்தது. ஆகவே மற்றவர் எவரும் புதிதாக வந்தவர்கள் செய்த அமளியில் பங்கேற்கவில்லை. அந்த நிலையில் அடுத்த ரயில் நிலையம் வந்துவிட்டது. பாரதியாரை அவமதித்த அந்த மனிதன் கீழே இறங்கிப் போய் ஒரு போலீஸ்காரரை அழைத்துக் கொண்டு வந்து பாரதியாரைக் காட்டி அவரைக் கைது செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அப்போது அந்த ரயிலின் ‘கார்டு’ (Guard) அங்கு வந்து சேர்ந்தார். அவர் பாரதியாரைப் பார்த்துவிட்டு அங்கு வந்த போலீஸ்காரரிடம் ஏதோ மெல்லச் சொன்னார், உடனே அவர்கள் அனைவரும் அங்கிருந்து போய்விட்டனர் (அந்த ரயில் அதிகாரி பாரதியாரை அடையாளம் கண்டுகொண்டு, அவர் மிகப் பிரபலமானவர், கவிஞர் அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லி எல்லோரையும் கலைந்து போகச் சொல்லிவிட்டார்). போலீஸ்காரர் பாரதியாரை அழைத்துக்கொண்டு போய்விடுவார்களோ என்று பயந்து போயிருந்த செல்லம்மாளுக்கும், சகுந்தலாவுக்கும் மனதில் நிம்மதி பிறந்தது. இவர்கள் பயணம் மட்டும் தடைப்படாது இரவு முழுவதும் தொடர்ந்து நடந்தது.
மறுநாள் விடியற்காலை ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வந்து நின்றது. அப்போது சென்னை சைதாப் பேட்டையில் ஆசிரியர் பயிற்சியில் இருந்த பாரதியாரின் தம்பி விஸ்வநாத ஐயர் வந்து இவர்களை சைதாப் பேட்டையில் இறங்கும்படியும், தன்னுடன் வந்துவிடும்படியும், வற்புறுத்தினார். தம்பியின் வற்புறுத்தலுக்கிணங்க இவர்கள் எழும்பூர் வரை டிக்கெட் வாங்கியிருந்தும் சைதாப் பேட்டையில் இறங்கிவிட்டனர்.
சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விஸ்வநாத ஐயர் அப்போது படித்துக் கொண்டிருந்தார். அவருடன் அவரது தாய்மாமனும், அவர் தாயார் வள்ளியம்மாளும் வசித்து வந்தனர். பாரதியாரின் தந்தை சின்னச்சாமி ஐயருக்கு இந்த வள்ளியம்மாள் இளைய மனைவி. தன்னுடைய மூத்தாள் மகன் என்று வித்தியாசம் பார்க்காமல் இந்த வள்ளியம்மாள் பாரதியாரிடமும், அவர் மனைவி செல்லம்மா, மகள் சகுந்தலா ஆகியோரிடம் அன்போடு நடந்து கொண்டார். அந்த வள்ளியம்மாள் வேண்டிக்கொண்டதால் பாரதியார் தான் சமஸ்கிருத மொழியில் எழுதியிருந்த “தேஹிமுதம் தேஹி ஸ்ரீராதே ராதே” எனும் பாடலைப் பாடிக் காண்பித்தார். வள்ளியம்மாளுக்கு அளவற்ற மகிழ்ச்சி.
இவர்கள் சில நாட்கள் சைதாப் பேட்டையில் தங்கியிருந்தார்கள். அப்போது பாரதியார் “சுதேசமித்திரன்” அலுவலகத்துக்குப் போய் ஆசிரியர் ஏ.ரங்கசாமி ஐயங்காரைச் சந்தித்தார். அவர், “பாரதி! இங்கே எப்போதும் உனக்கு ஒரு வேலை உண்டு. இப்போதே வேண்டுமானாலும் நீ பணிசெய்யத் தொடங்கலாம்” என்று சொல்லிவிட்டார். அங்கே அப்போதே பாரதியார் மீண்டும் “சுதேசமித்திரனில்” உதவி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். தொடர்ந்து பாரதி தினந்தோறும் காலையில் சைதாப் பேட்டையில் ரயில் ஏறி ஜார்ஜ் டவுனில் இறங்கி, எர்ரபாலு செட்டித் தெருவில் இருந்த ‘சுதேசமித்திரன்’ காரியாலயம் செல்லத் தொடங்கினார்.
தினமும் இவ்வளவு தூரம் பயணம் செய்வதைக் குறைத்துக் கொள்வதற்காக டவுனில் தம்பு செட்டித் தெருவில் ஒரு வீட்டின் பகுதியில் மாதம் பதினைந்து ரூபாய் வாடகைக்குக் குடிபோனார். அந்த இடம் மிகச் சிறிய இடம், பாரதிக்குப் பிடிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் சுரேந்திரநாத் ஆர்யா பாரதியாருக்கு உதவ முன்வந்தார். ஆர்யா முதலில் அதிகம் சிரமங்களைச் சந்தித்து, ஒருவேளை சோற்றுக்குக்கூடக் கையேந்தும் நிலைமையில் உடல்நலம் கெட்டு மருத்துவ மனையில் கிடந்து அவதியுற்றவர். ஒரு டேனிஷ் மிஷன் கிறிஸ்தவ பாதிரியார் அவரை மதமாற்றம் செய்து பாதிரியாராக ஆக்கி, அமெரிக்காவுக்கு அனுப்பி மீண்டும் சென்னை வந்தவர். அமெரிக்காவில் இருந்தபோது ஒரு சுவிஸ் மாதைத் திருமணம் செய்து கொண்டிருந்தார். இவர் மனைவியுடன் சென்னை வேப்பேரியில் ரண்டால்ஸ் சாலையில் ஒரு பங்களாவில் வசித்து வந்தார்.
ஆர்யாவின் மனைவி பெயர் மார்த்தா. இந்திய பாணியில் உடை அணிவார். மார்த்தாவுக்கு தமிழ் தெரியாது, பாரதியாரின் மனைவி மகள் இவர்களுக்கு அவள் மொழி தெரியாது. இவர்கள் ஜாடைசெய்துதான் பேசிக் கொண்டார்கள். அந்த மார்த்தா இவர்களை மிகவும் அன்போடு கவனித்துக் கொண்டாள். வேறு வீடு கிடைக்கும் வரை வேப்பேரியில் அவர்களுடன் வசிக்க முடிவு செய்தனர் பாரதி குடும்பத்தினர். செல்லம்மாவின் ஆசாரத்துக்கு அந்த இடம் ஒத்துப் போகவில்லை. பிறகு குவளை கிருஷ்ணமாச்சாரியின் முயற்சியால் சென்னை திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் ஒரு வீட்டின் முன்பகுதியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அங்குக் குடிபெயர்ந்தார்கள். அந்த வீட்டில் இவர்கள் தவிர மேலும் மூன்று குடும்பங்கள் குடியிருந்தார்கள். இங்கு எல்லாக் குடித்தனக்காரர்களுமே அன்போடும் சண்டை சச்சரவு இல்லாமல் இருந்து வந்த நேரத்தில் தான் பாரதியை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை தள்ளி சிலகாலம் உடல்நலம் கெட்டு பின்னர் உடல் தேறி வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது வயிற்றுக் கடுப்பு நோய் வந்து அதனால் அவர் அதே திருவல்லிக்கேணி இல்லத்தில் காலமானார். அப்போது அவருக்கு வயது 39. பாரதி அமரரான இடம் இப்போது அவரது நினைவு இல்லமாகத் திகழ்ந்து வருகிறது.
-
பாரதி என்று மிருப்பான்!
-மீ.விசுவநாதன்
ஒருசொல்லில் எழவைப்பான்
ஒருசொல்லில் அழவைப்பான் – அவன்
ஒருகவி ராஜ சிங்கம்!தமிழ்நாட்டில் பிறந்தோர்கள்
தமிழ்ப்பேச்சில் சிறந்தோர்கள் – எனும்
தரம்வர வேண்டு மென்பான்!தன்நாட்டு மக்களுக்காய்த்
தன்மான வாழ்வினுக்காய் – வரும்
தவகவி வாக்குச் சொன்னான்!ஆவேசம் வந்தாலும்
ஆனந்தம் என்றாலும் – நல்
அழகிய கவிதை தந்தான்!உண்மைக்கே உடன்நின்றான்
பெண்மைக்கோ உயிரானான் – ஒரு
பெரும்பழ மைக்கவன் பாலம்!நியாயத்தின் தராசினிலே
நிமிர்த்தேதன் கருத்ததனை – சுய
நினைவுடன் நிறுத்த மனிதன்!பாரதத்தாய்த் திருமகளின்
பரம்பரையை உருவாக்க – ஒளி
பாரதி என்று மிருப்பான்!(11.09.2015 மகாகவி பாரதியார் நினைவுதினம்)
-
பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி முடிவுகள்
அன்பினிய நண்பர்களே,
வணக்கம். சென்ற [ஆகஸ்ட், 2015] மாதத்திற்கான, ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ கட்டுரைப் போட்டிக்கான, நடுவர் திரு ஐயப்பன் கிருஷ்ணன் அவர்களின் முடிவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். பரிசு பெற்ற நித்திய லஷ்மிக்கு வாழ்த்துகள். இந்த மாத போட்டிக்குத் தயாராகிவிட்டீர்களா? விரைவில் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டுகிறோம். வாழ்த்துகள்.
ஐயப்பன் கிருஷ்ணன்
கட்டுரையாளர் தந்திருக்கும் தகவல் மிக முக்கியமானது. தினசரி பயன்பாட்டில் நாம் தவறுதலாக இழக்கும் கோப்புகளைத் திரும்பப் பெற இந்தக் கட்டுரையில் சொல்லப் பட்டிருக்கும் மென்பொருட்கள் உதவும். நல்லதொரு கட்டுரை வழங்கிய எஸ்.நித்திய லக்ஷ்மிக்கு வாழ்த்துகள்.
-
பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்
தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில்
அமரா ததனை அகற்றலே வேண்டும்
அமையாரும் வெற்ப! அணியாரே தம்மைத்
தமவேனும் கொள்ளாக் கலம்.(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
தமரேயும், தம்மைப் புகழ்ந்து உரைக்கும் போழ்தில்,
அமராததனை அகற்றலே வேண்டும்;
அமை ஆரும் வெற்ப! அணியாரே தம்மை,
தமவேனும், கொள்ளாக் கலம்.பொருள் விளக்கம்:
தனது சுற்றத்தாராகவே இருப்பினும், தன்னைப் புகழ்ந்து பேசும் பொழுதில், அவை பொருத்தமற்ற புகழுரைகளாக இருக்கும் பொழுது தடுத்துவிடல் வேண்டும். மூங்கில் செறிந்திருக்கும் மலைநாட்டைச் சேர்ந்தவரே, ஒருவரும் அணிய விரும்புவதில்லை, அவை தன்னுடையதாகவே இருப்பினும் பொருந்தாத அணிகலன்களை.பழமொழி சொல்லும் பாடம்:
தனக்குப் பொருத்தமற்ற புகழுரைகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது. இதனை,வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. (குறள்: 439)எந்தக் காலத்திலும் தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டு நன்மை தராத செயல்களை விரும்பக்கூடாது என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
-
திருக்குறளுக்குப் புது விளக்கம் – 13
– புலவர் இரா. இராமமூர்த்தி.
திருக்குறள் கடவுள் வாழ்த்துப் பாக்கள், தனிச்சிறப்பு வாய்ந்தவை! ஒரு மதத்திற்கோ, ஓர் இனத்துக்கோ, ஒரு நாட்டுக்கோ உரியதான கடவுளைப் பெயர் கூறி வாழ்த்தாமல், எல்லா மதத்துக்கும், எல்லா இனத்துக்கும், எல்லா நாட்டுக்கும் உரிய கடவுளுக்கு அவர் வாழ்த்துக் கூறுகிறார்! அவர் கடவுளை உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் எண்ணி வணங்கும், அருமையை அவரது ‘கடவுள் வாழ்த்து’ அதிகாரத்தில் காணலாம்!
இந்த அதிகாரப் பாடல்களில் நற்றாள், மாணடி, அடி, தாள் என்றெல்லாம் கூறியமையால் இறைவன் ‘உருவத்திருமேனி’ உடையநிலையில் அவனுடைய திருவடிகள் இவை எனக் காட்டப் பெறுகின்றன! “நின்னிற்சிறந்தன, நின் திரு வடியவை” என்று பரிபாடல் கூறுகிறது! நாம் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும், அதற்கும் மேலே பன்னிரண்டங்குலம் உயர்ந்த இடத்தில், அதாவது ”துவாதசாந்தப் பெருவெளியில்” இறைவன் திருவடி உயர்ந்து நிற்கும் என்பது ஞானிகளின் துணிபு! ‘பொறிவாயில் ஐந்து அவித்தான்’ என்று போற்றப் பெறும் நிலையில் விளங்கும் இறைவன் பொறி, புலன்களுக்கு அகப்படாமையால் ‘அருவத் திருமேனி’ உடையவன் என்பதை உணர்கிறோம் இறைவன் என்பதற்கு எங்கும் நிறைந்தவன் என்பது பொருள்; அறிவே உருவான அவனை ”வாலறிவன்” என்றும் கூறுகிறார். ஆகவே அறிவால் அறிந்து கொள்ளத் தக்க உருவமற்றவனாகவும், எங்கும் நிறைந்த உருவம் உடையவனாகவும் இறைவன் விளங்குவதால், அவன் ‘அருவுருவத் திருமேனியை ‘ உடையவன் என்பதும் விளங்குகின்றது,
முதல் அதிகாரத்தில் இறைவன் எல்லாவற்றுக்கும் முதன்மையானவன் என்கிறார். இதனை அனைத்துலகுக்கும் முதல்வனான ‘ஆதிபகவன்’ என்ற பெயரால் குறிப்பிடுகிறார்! இறைவனை நாம் வணங்கும் நம் மதங்கள் காட்டும் திருவுருவங்களில் அவர் காணவில்லை. இறைவனைப் பேரறிவுடையவனாகத் திரு வள்ளுவர் காட்டுகிறார்! ‘வாலறிவன்’ என்பது அவர் இறைவனை அழைக்கும் பெயர்! வேண்டுவார்களின் மனமாகிய பீடத்தில் விரைந்து வந்து அவன் அமர்ந்து கொள்கிறான்! அவனை ‘மலர்மிசை ஏகினான்’ என்று போற்றுகிறார் வள்ளுவர்! எல்லாவுயிர்களிடத்தும் ஒரே தன்மைத்தான அருளை வழங்குபவன் இறைவன்! அவனுக்குத் தனித்த விருப்பமோ, வெறுப்போ சற்றும் இல்லை, இதனை ‘வேண்டுதல் வேண்டாமை இலான்’ என்ற தொடரால் குறிப்பிடுகிறார்! சிறந்த பொருளை உடைய புகழைக் கூறாமல், வேண்டாத இழிந்த பொருளுடைய புகழ்ச்சியை எப்போதும் கூறலாகாது! அதனால் இருள் நிறைந்த நரகத்துள் உழல வேண்டியிருக்கும்; ஆதலால் உயர்ந்த, உண்மையான, சிறந்த பொருளை உடைய புகழ்ச்சியாகிய இறைவனைப் புகழும் புகழ்ச்சியையே எப்போதும் பேசி இருவகை வினைகளாகிய நல்வினை, தீவினைகளிலிருந்து நீங்க வேண்டும்; இதனை, ‘இருள்சேர் இருவினையும் சேரா’ என்ற குறட்பாவில் வள்ளுவர் கூறுகிறார்.
இறைவன் நம்மைப் போல ஐம்புலன்களின் வழியே அறிவைச் செலுத்தி அலைபாயும் உள்ளம் கொண்டவர் அல்லர்; அவர் ‘பொறிவாயில் ஐந்தவித்தவர்!’ என்கிறார்! தம்முடைய அறிவுக்கும், ஆற்றலுக்கும், அருளுக்கும் இணையாக வேறு எவரையும் கூறவியலாத, தனித் தன்மை வாய்ந்த தலைவர் அவர். இவரைத் திரு வள்ளுவர், ‘தனக்குவமை இல்லாதான்’ என்று போற்றுகிறார்! இறைவன் எல்லா அறங்களும் பாய்ந்து நிரம்பிய கடல் போன்றவன்! ஆனால் நாம் காணும் உப்புக்கடலை விடச் சிறந்தவன்! தம்மையே பிறருக்கு வழங்கி மகிழும் தன்மை வாய்ந்த கடல் போன்றவன் அவன்! தம்மை அடைந்தாரைச் சுழலில் சிக்கவைத்து, ஆழத்தில் அழுத்தி, ஆபத்து விளைவிக்கும் கடலை விடப் பலவகைகளில் சிறந்தவன்! அறத்தை அருளிப் பொருளையும் இன்பத்தையும் தருபவன், ஆதலால் இறைவனை வள்ளுவர், ‘அறவாழி அந்தணன் ” என்கிறார்!
இறைவன், எட்டுவகையான குணங்கள் கொண்டவன் என்று சமய இலக்கியங்கள் கூறுகின்றன! இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன், முற்றறிவுடையவன், வரம்பில் ஆற்றல் உடையவன், வரம்பில் இன்பமுடையவன், முதலான எட்டுக் குணங்கள் அவனுக்கு உண்டு என்று பரிமேலழகர் எழுதுவார். பிங்கலந்தை நிகண்டு பிறப்பின்மை, இறப்பின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை , ஒருவினையின்மை, குறைவில் அறிவுடைமை என்ற எட்டு குணங்கள் பெற்றவன் கடவுள். என்று கூறுகிறது.
அதனை,“பவமின்மை இறவின்மை பற்றின்மை பெயரின்மை
உவமை யின்மை ஒருவினை யின்மை
குறைவிலறிவுடைமை கோத்திரமின்மை என்று
இறைவனிடத்தில் எண்குணம் இவையே.” (பிங்கலந்தை)என்ற நூற்பாவால் அறியலாம்.
நாம் இங்கே இதே கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வள்ளுவர் காட்டும் ஒரு நுட்பத்தைக் காணத் தவறுகிறோம்! இறைவனின் குணங்கள் எட்டினையும் கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் முதல் எட்டுப்பாக்களிலும் அவரே குறிப்பிட்டிருக்கிறார்! அவை, 1 அனைத்துக்கும் முதன்மை, 2.சிறந்த ஞானம் உடைமை, 3. அடைதற்கு எளிய நிலை, 4. பற்றற்ற நிலை, 5.எங்கும் நிறைந்தநிலை, 6. பொய்தீர் ஒழுக்கமுடைமை, 7. தனக்குவமை இன்மை , 8. அறத்தின் இருப்பிடமான நிலை ஆகிய எண்வகைப் பண்புகளையும் வரிசையாக அவரே குறிப்பிட்ட பின்னர், ஒன்பதாம் குறட்பாவில், தாம் முன் கூறியவற்றைத் தொகுத்து ”எண் குணத்தான் ” என்று கூறும் நுட்பம் சிந்தித்து மகிழ்தற்குரியது! ஆதலால் திருவள்ளுவர் குறிக்கும் எண்குணமும் முதல் எட்டுக்குறட்பாக்களில் குறிப்பிடப் பெற்றனவே என்பதைப் புரிந்து கொண்டு ஒன்பதாம் குறட்பாவைப் படிக்கிறோம்!
”கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை”என்ற குறட்பாவின், எண்குணத்தான் ‘ என்ற தொடர் , நமக்குப் புதிய பொருளைத் தந்து மகிழ்விக்கின்றது ! பின்னர் எண்குணத்தான் திருவடியாகிய புணையைச் சேர்ந்தவரே பிறவிக் கடலைக் கடந்து கரையேறுவர் என்பதைப் பத்தாம் பாடலில் புரிந்து கொண்டு வழிபாடு செய்யலாம்!
-
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (165)
–சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே ,
இனிய வணக்கங்கள்.
அடுத்தொரு மடலில் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன். இவ்வாரம் தன்னுள் இரு பெரும் விடயங்களைத் தாங்கியவாறு பூத்திருக்கிறது.
இங்கிலாந்தின் மகாராணியார் இரண்டாவது எலிஸபெத் மகாராணி 9ம் திகதி ஏறத்தாழ இங்கிலாந்து நேரம் பிற்பகல் 2 மணியளவில் இங்கிலாந்தை ஆண்ட மன்னர், ராணிகளில் அதிக காலம் அதிகாரத்திலிருந்தவர் எனும் மகுடத்தைச் சூடிக் கொள்கிறார்.மிகவும் அமைதியாக தான் புரியும் சாதனைகளை மெதுவாக தன்னுள் அடக்கிக் கொண்டு அதனைப் பெரிது படுத்தாமல் நடக்கும் பண்பினைக் கொண்ட மகாராணி இன்றும் இவ்விடயத்தைப் பெரிது படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு தனது அன்றாட ராணியாருக்கென ஒதுக்கப்பட்ட நடவடிக்கைகளில் வழமை போல தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
இவ்விடயம் ஒருபுறமிருக்க,
அரசியல் அரங்கம் இருக்கிறதே ! அப்பப்பா ரொம்பவும் விசித்திரமான ஒரு அரங்கம். எந்த இடத்தில் எத்தகைய திருப்பங்கள் வருகின்றன என்பதை எவரும் எப்போதும் அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது.
முன்னைநாள் இங்கிலாந்தின் லேபர் கட்சியின் பிரதமராக இருந்த அமரர் ஹரால்ட் வில்ஸன் அவர்கள் “அரசியலில் இரண்டு கிழமைகள் என்பது மிகப்பெரிய காலம்” என்று ஒரு சமயம் குறிப்பிட்டிருந்தார்.
பொதுவாகவே அரசியலில் அவதானிகள் இரண்டு வகையான தீவிர கொள்கைகளைக் குறிப்பிடுவது வழக்கம்.
அவை முறையே வலது சார்புக் கொள்கைகளும், இடதுசார்புக் கொள்கைகளுமாகும்.
ஆனால் ஒரு சராசரி மனிதனாக அரசியல் அரங்கத்தை நோக்கும் போது இவ்வரசியல் வேறுபாட்டின் அர்த்தம் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. காரணம் அரசியலின் முக்கிய நோக்கம் மக்களின் நலன் என்பதே ஜனநாயக அரசாங்க அமைப்பையுடைய ஒரு நாட்டின் அடிப்படைக் குறிக்கோளாகும்.
மக்களைச் சார்ந்த அரசியலில் எப்படி வலது சார்பு அன்றி இடது சார்பு கொள்கைகளை முதன்மைப் படுத்தி அரசியல் நடத்துவார்கள்?
சரி இது ஒரு புரியாத புதிர் என்றே எடுத்துக் கொள்வோம்.
இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் கன்சர்வேடிவ் கட்சி வலது சார் கொள்கைகளையும், லேபர் கட்சி இடதுசாரிக் கொள்கைகளையும் முதன்மைப் படுத்திய முக்கியமான இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் எனலாம்.
சரி… இதற்கும் இவ்வாரம் தன்னுள் அடக்கியுள்ள முக்கியமான விடயம் என்று நான் முன்பு குறிப்பிட்டதிற்கும் என்ன சம்பந்தம் ? கேள்வி எழுகிறது இல்லையா ?
இவ்வார இறுதியில் அதாவது வருகின்ற சனிக்கிழமை 12ம் திகதி லேபர் கட்சி, யார் தனது புதிய தலைவர் என்பதைத் தெரிவிக்கப் போகிறது .
ஆமாம், இவ்வருட முற்பகுதியில் நடந்து முடிந்த இங்கிலாந்துப் பொதுத்தேர்தலில் வெற்றியீட்டப் போகும் கட்சி லேபர் கட்சி எனும் பொதுக்கருத்துக் கணிப்புகளுக்கு முரணாக டேவிட் காமரனைத் தலைவராகக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் தனியாக அரசமைத்ததும், பதவி விலகினார் லேபர் கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட்.
அதன் காரணமாக முடுக்கி விடப்பட்டது லேபர் கட்சியின் தலைப் பதவிக்கான தேர்தல் இயந்திரம். மூன்று மிதவாத இடதுசாரிக் முன்னணி லேபர் கட்சி அரசியல்வாதிகள் தலைமைப் பதவிக்கு முன்மொழியப்பட்டனர். அனைத்தும் சுமுகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று லேபர் கட்சி அசந்திருந்த சமயம் திடீரென கடைசி நிமிடத்தில் முன்மொழியப்பட்டார் ஜெர்மி கோர்பன்!
யார் இந்த ஜெர்மி கோர்பன் ?
லேபர் கட்சியே இடதுசார்புக் கொள்கையுடைய கட்சியென்றால் அதன் அதிதீவிர இடதுபுறத்தின் முடிவில் நிற்பவர் ஜெர்மி கோர்பன்.முற்றுமுழுதாக தன்னை சோஸலிஸ்ட் என்று கூறிக் கொள்பவர். இதுவரை லேபர் கட்சியின் தலைமைத்துவம் எடுத்த முடிவுகள் சரியான ஒரு இடதுசார்புக் கொள்கையையுடைய கட்சியின் தலைமைப்பீடம் எடுத்த முடிவுகள் போலல்ல என்று கூறி, எப்போது கட்சிக்குள் ஒரு புரட்சிவாதியாக இனம் காணப்பட்டவர்,
முந்தைய லேபர் கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட் லேபர் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலை இன்னும் ஜனநாயகமாக்குகிறேன் என்று கூறி யார் 3 பவுண்ட்ஸ் செலுத்தி லேபர் கட்சியில் இணைகிறார்களோ அவர்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் எனும் சட்டவிதியைத் தனது கட்சிக்குள் கொண்டுவந்தார்.
போச்சுடா !
ஆமாம் லேபர் கட்சிக்கு எதிரானவர்கள் பலர் இந்த வெறும் 3 பவுண்ட்ஸ் செலுத்தி “ஜெர்மி கோர்பெனுக்கு ” வாக்களிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஏன் லேபர் கட்சிக்கு எதிரானவர்களுக்கு இந்த முயற்சி ?
நாட்டின் பொதுவான கருத்து “ஜெர்மி கோர்பனை” தலைவராகக் கொண்ட லேபர் கட்சி இனி ஆட்சிக்கு வரக் குறைந்தது இருபது வருடங்களாவது பிடிக்கும். ஏனெனில் ஜெர்மி கோர்பனை எப்போதும் இங்கிலாந்து பிரதமராக ஏற்றுக் கொள்ளாது. அது மட்டுமல்ல அவரது அதிதீவீர இடதுசாரிக் கொள்கைகளினால் லேபர் கட்சி மக்கள் மத்தியில் படுமோசமான வீழ்ச்சியையடையும். அதிலிருந்து வேறொரு தலைவர் லேபர் கட்சியை அரசாங்கம் அமைக்கும் அளவிற்கு வலுப்படுத்தக் குறைந்தது 20 வருடங்களாவது பிடிக்கும்.
இதுவே பொதுவான அனுபவமிக்க அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.
ஆகமொத்தம் ஜெர்மி கோர்பன் லேபர் கட்சிக்கு தலைவரானால் இனி ஒரு குறைந்தது இரண்டு தேர்தல்களிலாவது தாம் ஜெயிப்பது மிகவும் சுலபம் என்று கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் எண்ணியதால் அவர்களும் இந்த 3 பவுண்ட்ஸை செலுத்தி வாக்களிக்க முனைவதில் என்ன வியப்பு ?
சரி, இவ்வளவு சொல்கிறாயே அப்படியாயின் ஜெர்மி கோர்பன் தலைவராவது சாத்தியமா? என்று கேட்கிறீர்கள் இல்லையா ? ஆம், சாத்தியமே ! என்னவென்று புரியாத வகையில் ஜெர்மி கோர்பன் மீது ஒரு ஆதரவு அலை லேபர் கட்சியினுள் எழுந்திருப்பது போல் ஒரு உணர்வேற்படுகிறது. இதுவரை வாக்களிக்காத இளைய தலைமுறைக்கு தேர்தலின் மீது ஒருவிதமான விரக்தி கலந்த வெறுப்பு இருந்தது. அரசியல்வாதிகள் அனைவரும் வாக்கைப் பெறுவதற்காக எதையும் கூறுவார்கள், யார் வந்தாலென்ன நிலைமை மாறப் போகிறதா ? எனும் ஒருவகை விரக்தியே அதற்குக் காரணம்.
அடுத்ததாக நாட்டின் செலவு வரவை விட அதிகமாக இருந்ததால் ஏற்பட்ட கடனை அடைக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றி கண்ட கன்சர்வேடிவ் கட்சி தொடர்ந்து கடனைக் குறைத்து செலவிற்கு மேலாக வரவினைக் காட்டும் நிதிநிலையை தமது இலக்காகக் கொண்டதினால் பொருளாதாரக் கொள்கைகளை மேலும் இறுக்கி அரசாங்கம் மக்களுக்குக் கொடுக்கும் உதவிப்பணத்தொகைகளை கட்டுப்படுத்தியுள்ளார்கள்.
ஜெர்மி கோர்பன் இவை அனைத்தையும் மாற்றுவேன். தனியார் மயமாக்கப்பட்ட காஸ், மின்சாரம், குடிநீர் வினியோகம், ரெயில் சேவை அனைத்தையும் மீண்டும் தேசிய மயமாக்குவது தனது திட்டம் என்று மிகவும் அதிதீவிர இடதுசார்பு சோஸலிசக் கொள்கைகளை முழங்குகிறார். உழைப்போர் பக்கமே நான் நிற்பேன், பணமுதலைகளை ஒழிப்பேன் என்று மிகவும் சத்தமாக பிரசாரம் செய்கிறார். லேபர் கட்சி தோல்வியடைந்ததின் காரணம், அது தான் கொண்ட அடிப்படைக் கொள்கைகளின்றும் தடம் புரண்டு விட்டது; அதை மீண்டும் முற்றுமுழுதான சோஸலிஸக் கட்சியாக்குவேன் என்றும் வேறு சவால் விடுகிறார்.
இது எல்லாம் அரசியல் அரங்கத்தில் ஒரு புது நாடகம் மேடையேற்றப் பட்டது போன்ற பரபரப்பைக் கொடுத்திருக்கிறது. முன்னால் லேபர் கட்சியின் தலைவர்களும், முன்னணி அரசியல்வாதிகளும் ஜெர்மி கோர்பன் தலைவரானால் கட்சி எந்த அளவிற்கு பின் தள்ளப்படும் என்று எச்சரிக்கை வேறு விடுத்தது ஜெர்மி கோர்பனுக்கு எதிர்மறையான அனுதாப அலைகளைக் கிளப்பி விட்டது என்று சில ஊடக முன்னணியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அதிமுக்கிய பிரச்சனை வேறொன்று !
ஜெர்மி கோர்பனுக்கும் உலகில் பயங்கரவாத இயக்கங்கள் என்று கணிக்கப்பட்ட அமைப்புகளுக்கும் உள்ள தொடர்பு பலரை இவருக்குக் கிடைத்த அரசியல் முக்கியத்துவம் அச்சமடைய வைத்திருக்கிறது. இங்கிலாந்தின் பிரதமராகும் வல்லமை படைத்த ஒரு கட்சியின் தலைவராகும் இவருக்குச் சர்வதேச அரங்கில் எடுக்க வேண்டிய நிலைப்பாட்டைப் பற்றிய அளவிற்கு சர்வதேச அரசியல் வியூகம் இருக்கிறதா ? எனும் கேள்வி மிகவும் ஆழமாகப் பல அரசியல் அவதானிகளின் உள்ளத்தில் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.
அடுத்து பொருளாதாரத்தில் இவர் கொண்டுள்ள நிலைப்பாடு மக்கள் மனதில் பல கேள்விகளைத் தூக்கிப் போட்டுள்ளது.
இக்காலகட்டம் மிகவும் வித்தியாசமானது. வாழ்க்கையின் சகல மட்டத்தில் இருக்கும் மக்களும் பங்கு சந்தையில் தம்மை ஈடுபடுத்தியுள்ளார்கள். ஜெர்மி கோர்பன் தேசியமயமாக்கப் போகிறேன் என்று கூறும் பல நிறுவனங்களில் செல்வந்தர்கள் இல்லாத பல நடுத்தர வர்க்கத்தினரும் பங்குகளைக் கொண்டுள்ளார்கள். இவரது இந்தத் தேசிய மயமாக்கல் கோஷம் பலருக்குப் பலவகையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆமாம், வருகின்ற சனிக்கிழமை லேபர் கட்சிக்கு ஒரு வரலாற்றுத் திருப்புமுனை என்பதே அரசியல் அவதானிகளின் கருத்து… ஜெர்மி கோர்பன் லேபர் கட்சியின் தலைவரானால் . . . . . . இனி வரும் தேர்தல்களில் லேபர் கட்சி அரசமைப்பது கேள்விக்குறியே !
ஏன், இது எனக்கு ஒரு ஆச்சரியத்தை எதிர்காலத்தில் கொடுக்கலாம் !
அரசியல் அரங்கத்தில் எதுவும் சாத்தியமே ! பொறுத்திருந்து பார்ப்போம்
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan -
அறிந்துகொள்வோம் – 16 (ஹைப்பாட்டியா (Hypatia))
-மேகலா இராமமூர்த்தி
மதவெறியால் மாய்ந்த மாதரசி!
புவியையே புரட்டிப்போட்ட புரட்சியாளர், தத்துவத்துறையில் முத்திரை பதித்த வித்தகர், பல்கேள்வித் துறைபோகிய நல்லறிஞர் என்றெல்லாம் போற்றப்படுவோர் யார் என்று ஆராய்ந்தால் அவர்களில் அநேகர் ஆண்களாகவே இருந்துவிடக் காண்கிறோம். இவற்றைக் காண்கையில், ஏன்…பெண்களில் சீரிய சிந்தனை வாய்க்கப்பெற்றோர், அறிவுத்தளத்தில் ஆற்றலோடு இயங்கக்கூடியோர் யாருமே இல்லையா? என்றொரு ஏக்கம் நம் மனத்தின் ஓரம் மெலிதாய் எட்டிப்பார்க்கின்றது.
அந்த ஏக்கத்தைப் போக்கிப் பெண்ணினத்தைப் பூரிக்கச்செய்யும் பெயர்தான் ’ஹைப்பாட்டியா’ (Hypatia). ஆம்! பேரறிவோடும், பெரும் புலமையோடும், தன் கருத்துக்களைத் துணிச்சலாகவும், சுதந்திரமாகவும் வெளியிட்ட பெண்ணறிஞர்தான் ஹைப்பாட்டியா!
எகிப்தின் பெருநகரங்களில் ஒன்றான அலெக்சாண்டிரியாவில் (it was founded by Alexander the Great, in 331 B.C.) கி.பி. 300-களின் இறுதியில் பிறந்தவர் ஹைப்பாட்டியா. அலெக்சாண்டிரியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராய்ப் பணியாற்றிவந்த புகழ்பெற்ற கணிதவியலாளரும், வானியலறிஞருமான தியோன் அலெக்சாண்டிரிகஸ் (Theon Alexandricus) என்பவரின் அருமை மகள்தான் இவர்.
தொடக்கத்தில், ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த பிரபல வரலாற்றாசிரியரும், கட்டுரையாளருமான புளுடார்ச்சிடம் (Plutarch the younger) கல்வி பயின்றார் ஹைப்பாட்டியா. பின்பு தன் தந்தையிடம் கணிதம், வானியல் துறைகளைக் கற்றுத்தேர்ந்தார். இவையேயன்றித் தத்துவத்துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு அதிலும் ஆழ்ந்தபுலமை பெற்றவரானார்.
கி.பி. 400-களின் வாக்கில் அலெக்சாண்டிரியாவின் நவபிளேட்டோனியப் பள்ளி (Neo-Platonic School) ஒன்றை நிறுவி அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஹைப்பாட்டியா, அங்கு பிளேட்டோ (Plato), அரிஸ்டாட்டில் (Aristotle) போன்றோரின் செறிவான சிந்தனைகளையும், பிளேட்டோவின் சிந்தனைகளில் புதிய வளர்ச்சிநிலையை ஏற்படுத்தியவரும், நவபிளேட்டோனியத்தைத் (Neo-Platonism) தொடங்கிவைத்தவருமான பிளோட்டினஸின் (Plotinus) சித்தாந்தங்களையும், தம்மிடம் கல்விபயின்ற கிறித்தவ, பேகனிய (people who follow the religions other than Christianity or Judaism) மற்றும் இதர பிரிவைச் சார்ந்த மாணாக்கர்களுக்குக் கற்பித்தார்.அவரிடம் பயின்ற மாணாக்கர்களில் குறிப்பிடத்தக்கவர் ’சைரின்’ என்ற நகரைச் சேர்ந்த ’ஸைனிசியஸ்’ (Synesius of Cyrene) ஆவார். பிற்காலத்தில், கிரேக்கத்திலுள்ள தோலிமெய்ஸ் என்ற பகுதியின் தலைமைக் குருவாய்ப் (Bishop of Ptolemais) பதவியேற்ற ஸைனிசியஸ், தன் ஆசிரியையான ஹைப்பாட்டியாவிடம் தான் கற்றறிந்த நவபிளேட்டோனியச் சிந்தனைகளைத் தோலிமெய்ஸில் பரப்பினார் என்று கூறப்படுகின்றது. பல கடிதங்களைத் தன் ஆசிரியருக்கு எழுதியிருக்கின்றார் ஸைனிசியஸ். அக்கடிதங்கள், தன் ஆசிரியர்பால் அவர் கொண்டிருந்த மட்டற்ற மதிப்பையும் மரியாதையையும் புலப்படுத்துவனவாகவும், ஆசிரியரின் அறிவியல் புலமையைப் பெரிதும் போற்றுவனவாகவும் அமைந்திருப்பதாய் அறிகின்றோம்.
ஸைனிசியஸ் தன் கடிதங்களில் குறிப்பிட்டபடி, அறிவியல் துறையில் ஆழங்காற்பட்ட புலமையுடனேயே ஹைப்பாட்டியா திகழ்ந்திருக்கின்றார் என்பதை அவரின் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மெய்ப்பிக்கின்றன. திரவங்களின் அடர்த்தியை நீரோடு ஒப்பிட்டு அறிய உதவும் திரவமானி (Hydrometer), நீருக்கு அடியிலிருக்கும் பொருள்களை ஒளிவழியாய்க் காண உதவும் சோதனைக்கருவி (hydroscope), வானியலாளர்கள் சூரியன், சந்திரன், மற்றும் பிற கோள்களின் இடத்தைக் கண்டறிய உதவும் கருவி (astrolabe) முதலியவை ஹைப்பாட்டியாவின் கண்டுபிடிப்புக்களே என்று சொல்லப்படுகின்றது.
சிறந்த கணிதவியலாளராகவும் திகழ்ந்த ஹைப்பாட்டியா, ’அல்ஜீப்ராவின் தந்தை’ என்று புகழப்படும் தியோஃபாந்தஸ் (Diophantus) எனும் கிரேக்கக் கணிதவியலாளரின் நூலான அரித்மெட்டிகாவுக்கு (Diophantus’s Arithmatica) விளக்கக் குறிப்புகள் வரைந்துள்ளார். அக்காலத்தில், அலெக்சாண்டிரியாவில் வாழ்ந்த புகழ்வாய்ந்த வானியலறிஞர் ’தாலமி’யின் (Claudius Ptolemy) வானியல் நூலுக்கும் அவர் உரை எழுதியுள்ளார். இவையேயன்றி, தன் தந்தை தியோனின் நூலெழுதும் பணிகளுக்கும் ஹைப்பாட்டியா பேருதவி புரிந்திருக்கின்றார்.
புகழ்பெற்ற ஆசிரியராகவும், பிற அறிஞர்களின் நூல்களுக்கு உரையாசிரியராகவும் திகழ்ந்ததோடல்லாமல் சிறந்த பேச்சாளராகவும் அலெக்சாண்டிரியா மக்களைக் கவர்ந்தவர் ஹைப்பாட்டியா. ஓர் ஆசிரியருக்கு ஏற்ற வகையில் மிகவும் கண்ணியமான உடையுடனேயே எப்போதும் காட்சியளித்த அவர், தனக்கென்று வைத்திருந்த தேரைத் (Chariot) தானே செலுத்திக்கொண்டு வீதிகளில் கம்பீரமாக வலம்வருவாராம். தெளிந்த அறிவும், தேர்ந்த சிந்தனையும் பெற்றிருந்த ஹைப்பாட்டியாவைப் ’பெண்ணியச் சிந்தனையாளர்களின் முன்னோடி’ என்று பெருமையோடு சுட்டுகின்றனர் இன்றைய பெண்ணியவாதிகள்.
அளவற்ற திறனும் மாணாக்கர்களின் மட்டற்ற அன்பும் வாய்க்கப்பெற்றிருந்தும், ஹைப்பாட்டியாவின் மரணம் என்னவோ இயற்கையானதாய் அமையவில்லை. மாறாக, நம்மால் கனவிலும் கற்பனை செய்யவியலாத வகையில் மிக்கொடூரமான ஒன்றாக அதனை அமைத்துவிட்டது விதி! இல்லை..வஞ்சகர்களின் சதி!
ஆம்! அவருடைய சிந்தனைகள் கிறித்தவத்திற்கு எதிரானவை, பேகனியத்திற்கு (Paganism) ஆதரவானவை என்று கருதிய அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த (கிறித்தவ மதவெறி மிகுந்த) சிரில் (Cyril) என்ற மதகுரு, கலகக்காரர்களை ஹைப்பாட்டியாவுக்கு எதிராக ஏவிவிட, அக்கூட்டமோ வீதியில் தேரில் சென்றுகொண்டிருந்த அப்பெண்ணரசியை வழிமறித்தது. தேரினின்றும் அவரைப் பலவந்தமாகக் கீழிறக்கி, அவர் ஆடைகளைக் கிழித்துக் கொடூரமாகத் தாக்கிக் கொலைசெய்திருக்கின்றது இரக்கமற்ற அந்த அரக்கக் கூட்டம்!
அத்தோடு விட்டதா? அலெக்சாண்டிரியாவில் அவரால் நிர்மாணிக்கப்பட்டிருந்த நூலகத்தையும், அவருடைய ஆக்கங்களையும் தீக்கிரையாக்கி ஆனந்தக் கூத்தாடியது. அறிவுக்கண்ணை முழுக் குருடாக்கிவிட்ட மதவெறியானது, நற்பண்பாளரும், சிறந்த அறிஞருமான பெண்மணி ஒருவரின் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கிக் கோரமாய்ச் சிதைத்திருப்பதை இப்பயங்கர நிகழ்வு நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றது.
ஹைப்பாட்டியாவின் சமகாலத்தவரும் வரலாற்றறிஞருமான (historiographer) சாக்ரடிஸ் ஸ்கோலாஸ்டிகஸ் (Socrates Scholasticus) என்பவர், ஹைப்பாட்டியாவைப் பற்றிப் பின்வருமாறு பதிவுசெய்திருக்கிறார்:
“அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த பெண்மணியும், தியோன் எனும் அறிஞரின் மகளுமான ஹைப்பாட்டியா, இலக்கியம், அறிவியல், தத்துவம் போன்ற பல்துறைகளிலும் தன்காலத்தைச் சேர்ந்த அனைத்து அறிஞர்களினும் விஞ்சிய திறன்வாய்ந்தவராய்த் திகழ்ந்தார். பிளேட்டோ, மற்றும் புளோட்டினஸின் சிந்தனைகளைக் கற்பிக்கும் பள்ளியொன்றை நிறுவி, அச்சிந்தனைகளை மக்கள் மன்றத்தில் துணிச்சலோடும் ஆற்றலோடும் கொண்டுசேர்த்தார். ஆண்களின் சபைகண்டு அவர் அஞ்சியதில்லை; அவருடைய கண்ணியமும், உயர்ந்த ஒழுக்கமும் அனைவராலும் மெச்சப்பட்டது.”
நண்பர்களே! சாக்ரடீஸை விஷமருத்திக் கொன்றது கிரேக்கம்; அதுபோல் ஹைப்பாட்டியாவைக் கொடூரமாய்த் தாக்கிக்கொன்றது அலெக்சாண்டிரியா. இவ்விரு அறிஞர்களின் மரணத்திற்கும் அடிப்படைக் காரணம், அப்பகுதி மக்களின் இறைநம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை இவர்கள் பரப்பிவந்தனர் என்ற மதவாத எண்ணமே!
இதில் விந்தை என்னவென்றால்…அனைத்து மதங்களும் ’தம் ஆண்டவர் அன்பே வடிவானவர்’ என்றுதான் சொல்லிக்கொள்கின்றன. ’அன்புவழியே அறவழி’ என்று முழக்கமிடுகின்றன. ஆனால், அம்மதங்களைப் பின்பற்றும் மக்களோ அன்புவழியைப் பிரசாரம் செய்கின்ற அளவிற்கு வாழ்வில் பின்பற்றுவதில்லை என்பதையே இச்சிந்தனையாளர்களின் மரணங்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஆயினும், செயற்கரிய செய்யும் சான்றோர் என்றுமே அழிவதில்லை; தம் சாதனைகளாலும், போதனைகளாலும், அரிய கண்டுபிடிப்புக்களாலும் மன்னாவுலகத்தில் மன்னுபுகழ் பெற்றுவிடுகின்றனர்.
அவ்வகையில், 20-ஆம் நூற்றாண்டின் முண்டாசுக் கவிஞன் படைத்துக்காட்டிய புதுமைப்பெண்ணாய் 4-ஆம் நூற்றாண்டிலேயே வாழ்ந்து காட்டிய அறிவுலகமேதை ஹைப்பாட்டியா அம்மையார், வையத்து மா(ந்)தரனைவரும் என்றும் நினைந்து போற்றவேண்டிய மாதரசியே அல்லவா!
***
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
https://en.wikipedia.org/wiki/Hypatia
http://www.britannica.com/biography/Hypatia
http://oregonstate.edu/instruct/phl201/modules/Philosophers/Hypatia/hypatia.html
100 Philosophers – Peter J King
http://www.smithsonianmag.com/womens-history/hypatia-ancient-alexandrias-great-female-scholar-10942888/?no-ist
-
அவன், அது , ஆத்மா (29)
(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)
மீ.விசுவநாதன்
அத்யாயம்: 29
“N. வெங்கடசுப்ரமணியன் என்ற N. V .S”
அவன் உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்தில் அவனுக்கு ஒன்பதாவது, பத்தாவது, பதினொன்றாவது வகுப்புகளுக்கு ஆங்கில ஆசிரியராக இருந்தவர் N. வெங்கடசுப்ரமணியன் என்ற N. V .S அவர்கள். மிகவும் கண்டிப்பானவர். நன்றாக மனதில் பதியும் படியாகப் பாடம் நடத்துவார். ஆங்கில இலக்கணத்தை அவர் கற்றுத்தரும் முறையே அருமையாக இருக்கும். ஒரு பாடம் நடத்தினால் அதன் உட்பொருள் அனைவருக்கும் புரிந்தால்தான் அடுத்த பாடமே எடுப்பார். ஒவ்வொரு மாணவனாகக் கேள்வி கேட்டுத் தெளிய வைப்பார். அவரது வகுப்பில் அவனையும், சுப்பாமணி என்ற பாலசுப்ரமணியனையும் அவருக்கு நேராகக் கீழேதான் உட்காரச் சொல்லுவார். அவர் பாடம் நடத்தும் பொழுது அவர்களிருவரும் பேசாமல், அவர்களது முழு கவனமும் பாடத்தில் இருக்க வேண்டும் என்றுதான் இந்த ஏற்பாடு. அவனுக்கு விளையாட்டு புத்தி அதிகம் என்றாலும் N. V .S. சார் வகுப்பில் அவன் கவனம் செலுத்துவான். அவரது உச்சரிக்கும் முறையைக் கூர்ந்து கவனித்து அதன்படி பேச அவன் முயர்ச்சி செய்வான். எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும், அது எப்படி இருந்தாலும் அன்போடு சொல்லித்தருவார். சரியாக வரும்வரைச் சொல்லித் திருத்துவார். தேர்வில் மார்க்குக் குறைவாக எடுத்திருந்தால் ,” என்னடா மார்க்கு வாங்கறாய் ஒரே “டென்மார்கா”ன்னா இருக்கு” என்று சத்தம் போடுவார். அப்படி ஒரு சராசரி மாணவனான அவனே S. S. L. C. தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் அறுபது சதவிகிதம் மதிப்பெண் வாங்கினான் என்றால் அவர் கற்றுத்தரும் முறைக்குத்தான் வெற்றி.அவர் திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து ஒய்வு பெற்ற பின்பு, அவன் சொந்த ஊருக்குச் செல்லும் பொழுதெல்லாம் முதலியப்பபுரம் தெருவில் வசித்து வந்த அவரைச் சென்று பார்த்து வணங்கி வருவான். அவனுக்குத் திருமணத்தன்று அவனையும், மனைவி சீதாலக்ஷ்மியையும் வாழ்த்தும் பொழுது, அவனுக்கு மனைவியிடம்,” இவனுக்கும் நான் ஆசிரியர், ஒன்னோடு அம்மா “சங்கரிக்கும்” நான்தான் ஆசிரியராக இருந்தேன்…” என்று பெருமிதமாகச் சொல்லி ஆசீர்வதித்தார். அவரது சதாபிஷேகத்திற்கு ஒரு வாரம் முன்பு அவனும், அவனுக்கு மனைவியும் அவரது இல்லத்திற்க்குச் சென்று அவரை வணங்கினார்கள். அப்பொழுது அவன் எழுதிய “மனித நேயம்” என்ற கவிதைத் தொகுதியை அவருக்குக் கொடுத்தான். ரொம்பவும் மகிழ்ச்சியோடு அதை வாங்கிக் கொண்டு ,” என்னோடு மாணவன் ஒரு கவிஞன் பாத்தயா ” என்று அவரது வீட்டில் இருந்த உறவினர்களிடம் கூறிப் பெருமைப் பட்டுக் கொண்டார். அவரது மகள் முத்துலட்சுமி அவனுக்கு வகுப்புத் தோழி. மிகச் சிறந்த படிப்பாளி. வகுப்பில் அவள்தான் அனேகமாக முதல் “ராங்கில்” இருப்பாள் இல்லையேல் அவனக்கு நண்பன் வீரமணி முதலாவதாக வருவான். சமீபத்தில்தான் அவரது மகள் முத்துலக்ஷ்மியும் அம்பாசமுத்திரத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் கணக்கு ஆசிரியராக இருந்து ஒய்வு பெற்றிருக்கிறார் என்று சொன்னார்கள்.
“J. பாண்டியராஜ் ஐசக்”
அவனுக்கு பாண்டியராஜ் சார் அதிகம் வகுப்பு எடுக்காவிட்டாலும், அவரது அன்பும், கண்டிப்பும் அவனை கவர்ந்திருந்தது. மனித நேயம் மிக்க நல்லாசிரியர் அவர். சில ரேரங்களில் அவனுக்கு “பூகோள” வகுப்பு எடுத்திருக்கிறார். பாடத்தை நடத்தும் பொழுதே, மாணவர்களுக்கு ஒழுக்க நெறியையும் அவர் போதிக்கத் தவறுவதில்லை. அவனுக்கு அப்பாவிடம் பாண்டியராஜ் சாருக்கு நல்ல நட்புண்டு. அவனுக்கு சகோதரி பாலாவுக்கும் அவர் வகுப்பு எடுத்திருக்கிறார். மாணவ, மாணவியர்களைத் தன் குழந்தைகளைப் போல நடத்துவார். பெற்றோர்களின் கண்டிப்பும், குருவின் தெளிவும் அவரைப் போன்ற நல்லாசிரியர்களிடம் அவன் நேரில் கண்டிருக்கிறான். அவரும் தலைமை ஆசிரியராக இருந்துதான் ஒய்வு பெற்றார். சர்மாஜி சாலையில் உள்ள “மேரிஸ்டோர்”ரில் மாலை நேரத்தில் அவரைக் காண முடியும். அவனைப் பார்க்கும் போதெல்லாம்,” அம்பி…நல்ல பையனா இரு…ஒழுக்கம்தான் முக்கியம் அம்பி” என்று கனிவோடு கூறுவார்.நெல்லை மாவட்டத்தில் ஒருமுறை சாதிக்கலவரம் வந்து, அனாவசியமாகப் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியும், அப்பாவி மனிதர்களை அடித்தும் ரகளை செய்தனர். அந்த நேரம் அவன் ஊருக்கு வந்திருந்தான். சென்னைக்குத் திரும்பிச்செல்ல வேண்டிய “பஸ்” செல்லவில்லை. அதனால் அன்று அவனால் சென்னைக்குத் திரும்ப முடியவில்லை. அந்தக் கலவர நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு “சாதீ” என்றொரு சிறுகதை எழுதினான். அந்தக் கதை “தாமரை” மாத இதழில் வெளியானது. அந்தக் கதையில் ஒரு ஆசிரியர், கலவரக்காரர்களை தடுத்து அமைதிப் படுத்த முயற்சிப்பார். அந்த ஆசிரியரின் பெயரை “பாண்டியராஜ்” என்று வைத்திருந்தேன் . அது ஒரு நன்றிக் கடன்.
“ஓவியர் அப்துல் மஜீத் “
மேல்நிலைப் பள்ளியில் அவனுக்கு ஓவிய ஆசிரியராக “அப்துல் மஜீத்” அவர்கள் இருந்தார்கள். அழகாகப் படங்கள் வரைவார். அதுபோலவே எயளிமையாகக் கற்றும் தருவார். கையில் ஒரு சாக்பீஸ் வைத்தபடியேதான் வருவார். வந்தவுடனே கரும்பலகையில் “சடக்கென” சில கோடுகளை வரைந்து, வண்ணம் தீட்டுவார். ஒரு அழகிய ஓவியம் ரெடி. “ஏலே..இந்தப் படத்த போடுங்க பாக்கலாம்” என்று ஒவ்வொரு மாணவனின் பக்கமும் வந்து அவர்கள் வரையும் முறையைத் தெரிந்து கொண்டு, திருத்த வேண்டிய இடங்களில் திருத்திக் கொடுப்பார். மாணவர்கள் நல்ல ஓவியங்களைப் பார்த்துப் பார்த்துப் பழக வேண்டும் என்று சொல்லுவார். அவன் பார்க்க அவர் வரைந்த முதல் ஓவியம் “தாமரை மலர்”. ஒன்பதாவது வகுப்பிற்குப் பாடம் எடுக்க வந்த முதல் நாளில் கரும்பலகையில் அவர் வரைந்த அந்த தாமரைப்பூவின் ஒவ்வொரு இதழ்களும் அவனுக்கு இன்றும் மஞ்சளும், இளஞ்சிவப்புகாக நினைவில் நிற்கிறது.
அவரது தந்தையார் “ஷேக் பீர் முகமது” அவர்கள் ஒரு தேசபக்தர். தியாகி கோமதி சங்கர தீட்சிதரின் சீடர் . திருவள்ளுவர் ஸ்டோர் என்ற பெயரில் ஜவுளிக்கடை வைத்திருந்தார். அவனுக்கு அப்பவும் மஜீத் சாரும் நல்ல நண்பர்கள். இங்கே ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியைப் பதிவு செய்ய விரும்புகிறேன். அவனுக்கு அப்பாவின் “சதாபிஷேகம்” 20.04.2008 அன்று சென்னையில் வைத்து நடைபெற்றது. அன்று காலையில் பூஜை ஆரம்பிக்கும் முன்பாக அவனுக்கு அப்பாவின் நெருங்கிய நண்பர் எம்.ஆர்.ஆதிவராகன் மாமா எட்டு மணிக்கெல்லாம் தொலைபேசியில் அப்பாவுக்கு வாழ்த்துக் கூறினார். அவர் பேசி முடித்த ஐந்து நிமிடங்களில் “பாண்டியராஜ் சார்” தொடர்புகொண்டு ,” அம்பி..அப்பாட்ட என்னோட வாழ்த்தச் சொல்லணும்” என்று கூறி அவனுக்கு அப்பாவுடன் பேசினார். அவர் வைத்த சில நொடிகளில் ,”விஸ்வநாதா…ஒங்கப்பா ..மீனாட்சிசுந்தரம் பக்கத்துல இருக்காரா…” என்று கேட்டு அவரும் அப்பாவுக்கு வாழ்த்துச் சொன்னார். ஒய்வு பெற்று பலவருடங்கள் ஆனாலும் அந்த நட்பு இன்றும் பலமாகவே இருக்கிறது. எப்பொழுது கல்லிடைகுறிச்சிக்குச் சென்றாலும் அவன் அவனது ஆசிரியர்களைப் பற்றி விசாரிப்பான். நேரிலும் சந்தித்துப் பேசி மகிழ்வான். அதுவும் வாழ்வில் ஒரு பேறு தானே.
10.09.2015
அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..
-
ஆழ்வார்களை ஆட்கொண்ட கண்ணன் – 3
— எஸ். வி. நாராயணன்.
ஆழ்வார்களை, முக்கியமாக நம்மாழ்வாரை, மிகவும் ஈர்த்தது, அந்த வெண்ணையுண்ட கண்ணனின் நீர்மை, அந்த செளலப்யம்.கண்ணனின் நீர்மை வெளிப்படுவதற்காகவே கண்ணனின் குறும்புகள் கூடின போலும். வீட்டில் உள்ள தயிர், வெண்ணெய் உண்டது காணாது என்று ஊரார் வீட்டு வெண்ணையை, சிறுவர் ஜமா சேர்த்துகொண்டு, எட்டாத உறிகளில் வைத்தாலும், தட்டாது விழுங்கிச் சென்றான். கண்ணனின் சேஷ்டைகளும் கூடின. ஊரார் புகாரும் பெருகியது.
கன்றுக்குட்டிகளின் காதில் கட்டெறும்பை விட்டு வேடிக்கை பார்ப்பது, கோபிகைளின் வளைகளை ஏமாற்றி வாங்கிக் கொண்டு போய் நாவற்பழம் வாங்கித்தின்றது, வீடுகளில் புகுந்து அவர்கள் செய்து வைத்திருக்கும் ‘கன்னல் இலட்டு வத்தோடு சீடை, காரெள்ளின் உண்டை” மற்றும் அக்கார அடிசில் போன்றவற்றை விழுங்கிவிட்டு ‘இன்னம் உகப்பன்’ என்று சொல்லி நிற்பது – இத்தகைய புகார்கள் ஓங்கிவந்த வேளையிலே யசோதைக்கு கோபம் வந்தது. ஆனால் அந்த தெய்வக் குழந்தையை அடிக்க மனம் வரவில்லை.
அவனைத் திருத்த வேண்டி உரலில் பிணைக்க எண்ணம் கொண்டாள். எனவே ஒரு தாம்புக் கயிறை எடுத்து அவன் இடுப்பில் கட்டி உரலில் பிணைத்துக் கட்டச் சென்றாள். முதலில் எடுத்த கயிறு போதவில்லை. அதற்காக ஆயர் மனைகளில் உள்ள கயிறுகளை எல்லாம் கொண்டு பொருத்திப் பார்த்தும் அவன் இடைக்கு அது போதாததாக இருந்தது. எல்லாத் தாம்புகளையும் ஒன்றாக முடித்து முயற்சி செய்தாள். அப்போதும் அவனைக் கட்டுவதற்கு அது போதவில்லை. யசோதை களைப்படைந்தாள். கை சலித்தது. வியர்வை கொட்டியது. கண்ணன் தாயின் அவஸ்தையைப் பார்த்தான்.
தேவேந்திரனுக்கும், பிரமனுக்கும், ஞானி களுக்கும், முனிவர்களுக்கும் லேசில் அகப்படாத அந்தப் பெரியோன், தாயின் கைத்தாம்பினால் உரலில் கட்டுண்டான். நம்மாழ்வார் வாய்மணக்கப் பாடுகிறார்:
‘பத்துடை அடியவர்க்கு எளியவன்
பிறர்களுக்கு அரிய வித்தகன்
மலர்மகள் விரும்பும் நம்அரும்பெறல் அடிகள்
மத்துஉறு கடைவெண்ணைய் களவினில்
உரலிடை யாப்புண்டு எத்திறம்
உரவினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே’பக்தி உடைய அடியார்களுக்கு எளியவனாயும், பிறருக்கு அணுக முடியாதவனாயும், திருமகளின் செல்வ நாயகனாகவும், பெறற்கரிய நம் தலைவனாகவும் உள்ள அந்தக் கண்ணன் என்னும் கருந்தெய்வம், வெண்ணைய் திருடியதால் கட்டப்பெற்று, உரலுடன் இணைந்து, அங்கேயே இருந்து ஏங்கிய அவன் எளிமைதான் என்னே! என்னே!
நம்மாழ்வார் இந்த எளிமைச் செயலை எண்ணி எண்ணி ஆறுமாத காலம் அப்படியே மோகித்துக் கிடந்தாராம். பக்தர்களால் தான் பகவானைக் கட்ட முடியும். பரம பக்தையான தாய் யசோதையினால் அந்தப் பரந்தாமன் கட்டுண்டான். வடவரையை மத்தாக்கி, வாசுகி என்னும் பாம்பை கயிறாகப் பூட்டி, பாற்கடலை கலங்கச் செய்தவன் அவன். அவ்விதம் கலக்கிய கையே யசோதையார் கடைகயிற்றால் கண்டுண்ட கை. இது என்ன மாயமோ என வியக்கிறார் சிலப்பதிகார ஆசிரியர்.
பேயாழ்வார் இந்த நீர்மையை மிகவும் போக்யமாக அனுபவிக்கிறார்.
“மண்ணுண்டும் பேய்ச்சிமுலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு, ஆய்ச்சி
கண்ணிக் கயிற்றினால் கட்டத்
தான் கட்டுண்டிருந்தான் வயிற்றினோடு ஆற்றாமகன்’.வயிற்றினோடு ஆற்றா மகன் என்ற விசித்திரமான தொரு விருதை அவர் கண்ணனுக்குச் சூட்டுகிறார். இதை ஒட்டியே நம்மாழ்வாரும் ”காரேழ் கடலேழ் மலையேழ் உலகுண்டும் ஆராவயிற்றேனை அடங்கப்பிடித்தேன்’ என்று திருவாய் மொழியில் பாடுகிறார் போலும். கடல்களை யெல்லாம் நிரப்ப வல்ல பெரு மேகங்களையும், ஏழு சமுத்திரங்களையும், ஏழு பர்வதங்களையும் விழுங்கியும் வயிறு நிரம்ப வில்லை. பேய்முலை நஞ்சுண்டான். அதுவும் போதவில்லை. ஆய்ச்சிமார் கடைந்த வெண்ணை யனைத்தையும் விழுங்கினான். அப்படியும் திருப்தி பிறக்கவில்லை.
இப்படி ஒரு அடங்காத ஆசையுடையவனை யசோதை தனது அன்பு என்னும் அஸ்திரத்தால் கட்டிவைத்தாளன்றோ. ‘உபநிஷதர்த்தம் உலூகலே நிபத்தம்’ ‘வேதத்தின் உச்சிப் பொருள் ஒரு உரலிலே கட்டுண்டிருந்தது காணிர்’ என்று ஆச்சரியப்பட்டார்கள் ரிஷிகள். அன்னை யசோதை கட்டியதால் உதரத்திலே பெருமாளுக்கு தழும்பு ஏற்பட்டதாம். தாமோதரன் எனும் திருநாமத்திற்கு வயிற்றிற் தழும்பை பொருளாகச் சொல்வதுண்டு. இன்றும் இத்தழும்பை ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வயிற்றில் காணலாம் என்பார் ஸ்ரீபராசரபட்டர்.
பெருமாளுக்கு பல தழும்புகளாம். பொய்கை யாழ்வார் கூறுகிறார். தாம்பினால் ஆர்ந்த தழும்பு ஒன்று. சாரங்கவில் உராய்ந்ததினால் கையில் தழும்பு. சகடம் உதைத்ததினால் காலில் தழும்பு. இப்படி பெருமாள் திருமேனியெல்லாம் தழும்பேறிக்கிடக்கிறதே, இவையெல்லாம் அவனுடைய ஆச்ரித தன்மையினால் ஏற்பட்டவை அன்றோ.
கண்ணனின் குழந்தைப் பருவத்தை, அவன் ஆடிப்பாடி வளர்ந்த அந்த காணக் கிடைக்காத காட்சியை, யசோதைபோல் தன்னால் பெற முடியவில்லையே என தேவகி புலம்புவது போல குலசேகர ஆழ்வார் அருமையான பாசுரங்களை அமைத்துள்ளார்.
முழுதும் வெண்ணெய் அனைந்து தொட்டுண்ணும்
முகிழ் இளம் சிறுத்தாமரைக்கையும்
எழில்கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கும்
நிலையும், வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும், அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறு வாய்தெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட யசோதை
தொல்லையின்பத்தின் இறுதி கண்டாளே.யசோதை அடைந்த அந்த எல்லையில்லா இன்பத்தை தான் அடையவில்லையே என்று தேவகி பட்ட விசனம் வார்த்தைகளுக்குள் அடங்குமோ?
உரலில் கட்டுண்ட அந்த மாயக்கண்ணன் வெறுமே இருந்தானா? நாரதரின் சாபத்தினால் இரு மருத மரங்களாய், பல ஆண்டுகாலம் இருந்த குபேரனின் புத்திரர்கள் நளகூபரன், மணிக்ரீவன் ஆகியோரின் சாபவிமோசனத்திற்காக, உரலுடன் தவழ்ந்து சென்று அந்த இரு மருத மரங்களுக் கிடையே போய் அவற்றை வீழ்த்தினான். குபேரன் புத்திரர்கள் சாப விமோசனம் பெற்று கண்ணனை தொழுதேத்திச் சென்றனர். குழந்தையைக் கடவுள்தான் காத்தார் என மரம் விழுந்த ஓசையைக் கேட்டு ஓடி வந்த யசோதை, குழந்தையை அள்ளி எடுத்துக் கொண்டாள்.
தமது ஆசாரியனான நம்மாழ்வாரை மட்டுமே பாடினார் மதுரகவி ஆழ்வார். ஆனால் ஆசார்யனை பாட ஆரம்பித்தவர் ‘கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்’ என்றுதான் துவங்குகிறார்.
அந்த பால கிருஷ்ணன் வெண்ணெய் மீது வைத்திருந்த அபரிமிதமான ப்ரீதியை எல்லா ஆழ்வார்களுமே பெரிதும் போற்றிக் கொண்டாடு கிறார்கள். அரங்கனைப் பாடிய திருப்பாணாழ்வார், ‘கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணைய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தான் எனப்பாடுகிறார்.
இப்படி வெண்ணெய் உண்டது குறித்து நம்மாழ்வார் ஒரு கேள்வி எழுப்புகிறார். மாயோனே, முன்பு ஒரு கால் உலகங்களை உண்டாய். பின்பு ஒரு கால் அதனை உமிழ்ந்தாய்.
ஒரு வேளை முதலில் உண்டு, பின்னர் உமிழும் போது, உலகத்தோர் போலே, அந்த மண்ணில் கொஞ்சம் உனது வயிற்றில் தங்கி விட்டதோ? அதனால் நோய் ஏதும் வராமல் காத்துக்கொள்ள, அந்த மண்ணுக்கு மருந்தாக வெண்ணையை வாரி விழுங்கினையோ? ‘மண்கரைய நெய்யூண் மருந்தோ?’ என்று வினவுகிறார் நம்மாழ்வார்.
கண்ணனின் வெண்ணெய்தின்ற சாகசங்களை நினைவு கூறும்போது ததிபாண்டனுக்குக் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டத்தைச் சொல்லவேண்டும். ஒரு நாள் அந்த நவநீத கிருஷ்ணன், வீட்டில் இருந்த வெண்ணெய்த் தாழியை உடைத்து, தான் வாரி அள்ளி வாயில் போட்டுக் கொண்டதல்லாமல், தரையிலே பாலையும், தயிரையும், வெண்ணெயையும் ஆறாகப் பெருக்க விட்டான்.
இதனைக் கண்ட யசோதை அவனை அடிப்பதற்காக துரத்திச் சென்றாள். தாய் அடிக்க வருவதைக் கண்ட கண்ணன் வெளியே ஓடினான். யசோதையும் துரத்திச் சென்றாள். தாய் தன்னை நெருங்கும் சமயத்தில், ததிபாண்டன் என்ற ஆயன் இல்லத்தில் புகுந்துவிட்டான் கண்ணன். யசோதை விரைந்து வருவதைப் பார்த்த கண்ணன், ததிபாண்டனை நோக்கி, “என்தாய் கோபத்துடன் வருகிறாள். உன் பக்கத்தில் உள்ள தயிர்த்தாழியை என் மேல் கவிழ்த்து என்னை ஒளித்துவை’ என்று வேண்டினான்.
ததிபாண்டன் அதன்படியே தாழியை கண்ணன் மேல் மூடிவிட்டான். யசோதை வந்து கேட்டபோது, ‘கண்ணனா! அவன் இங்கு வர வில்லையே’ என்று கூறிவிட்டான். யசோதையும் முணுமுணுத்துக்கொண்டே சென்று விட்டாள். ததிபாண்டன் ஞானவான். கண்ணன் யார் என்பதை நன்கறிந்தவன். யசோதை அகன்றவுடனே தாழியின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டான் ததிபாண்டன்.
தாய் சென்று விட்டதால் தன்னை வெளியே விடும்படி கண்ணன்ததிபாண்டனை வேண்டினான். பரம்பொருளே கண்ணனாக அவதரித்திருக்கிறது என்பதை அறிந்த ததிபாண்டன், கண்ணனை நோக்கி ‘எனக்கு மோட்சம் அளித்தால் ஒழிய நான் உன்னை வெளியில் விட மாட்டேன்’ என்கிறான். ததி பாண்டனுக்கு அருள்புரிய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே கண்ணன் அந்த ஆயன் வீட்டுக்கு வந்ததால், ‘உனக்கு மோட்சம் அளித்தேன். என்னை விடு’ என்று கூறினான். ஆனால் ததிபாண்டன் நகரவில்லை. அவன் கூறினான் : ‘கண்ணனே, உன்னுடைய கிருபை எனக்குக் கிட்டுவதற்கு இந்த தயிர்த்தாழி மிகவும் உதவியாக இருந்தது. இதனை விட்டு நான் பிரிய மாட்டேன். இந்தத் தாழிக்கும் நீ மோட்சம் கொடுக்க வேண்டும்’ என்றான். கண்ணபிரான் ததிபாண்டனின் சாதுர்யத்தை மெச்சி, உமக்கும் மோட்சம், உமது தயிர்த்தாழிக்கும் மோட்சம் கொடுத்தேன் என்று கூறினான்.
அவ்வளவில் கண்ணனை ததிபாண்டன் வெளியே விட, ததிபாண்டனும் அவனது தாழியும் மோட்சலோகம் எய்தினர். ஆசார்ய ஹ்ருதயமும், அதன் வியாக்கியானமும் ததி பாண்டன் வரலாற்றைக் கூறுகின்றன.
வைணவ உலகமும், தமிழ் இலக்கிய உலகும் போற்றுகிற அஷ்டப் பிரபந்தம் என்ற எட்டு நூல்கள் அடங்கிய தொகுப்பை அருளிய பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் சொல்லுவார்: பண்டங்களை வைப்பதற்கன்றி, சிந்திப்பதற்கு நெஞ்சும், திருநாமங்களை கூற நாவும், விழுந்து சேவிக்கத் திருமேனியும் இல்லாத அசித்தாயிருக்கிற மண்பாண்டம் மோஷம் பெற்றது. ஆனால், நெஞ்சும், நாவும், உடலும் உள்ள நமக்கெல்லாம் எளிதில் மோக்ஷம் கிடைக்காது இருக்கிறதே. இது எதனால்? என்று பெருமாளையே அவர் கேட்கிறார். ஆனால் பதில் அவருக்கே தெரியும்.
ராமபிரான் பிறந்த அயோத்தியிலே புல், எறும்பு ஆதி ஒன்றின்றியே அனைத்தும் நற்கதி பற்றன என்பார் நம்மாழ்வார். அதுபோல கண்ணனின் தர்சனமும், கண்ணனின் ஸ்பர்சமும் பெற்ற ததிபாண்டனும், அவனது தாழியும் மோகூடிம் பெற்றதில் அதிசயமென்ன? இதுபற்றி பெரியோர்கள் ரசமான கருத்து ஒன்றைச் சொல்லுவர். கிருஷ்ணதரிசனம், கிருஷ்ண கைங்கர்யம் இவற்றைச் செய்தவுடனேயே ததிபாண்டனுக்கு மோட்சம் உறுதியாகி விட்டது.
கிருஷ்ண ஸ்பர்ஸம் ஏற்பட்ட உடனேயே தாழிக்கும் நற்கதி கிடைத்துவிட்டது. ததிபாண்டன் அதைக் கேட்டுப் பெறுவதற்கு அவசியமே இல்லை. இருந்தாலும் அவன் அப்படிச் செய்தான் என்றால் அதற்கு முக்கிய காரணம் கிருஷ்ணனின் அந்த எளிமையை, பக்தர்களுக்கு அருள்புரியும் அந்த மேலான குணத்தை, உலகத்திற்கு எடுத்துக் காட்டவேதான் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.
[தொடரும் …]
-
இரவில் கற்ற பாடம்
-மீ.விசுவநாதன்
இரவில் ஆந்தைகள்
காக்கையின் கூட்டைக் கலைத்தன…
குஞ்சுகளைக் கொன்று தின்றன…விடிந்தது…
காக்கைகள் ஆந்தையை
கொத்திக்கொதிக் கொன்றன…இரவைப் பார்த்துப்
பாடம் கற்றவன்
அஸ்வத்தாமன்…!தூங்கிக்கொண்டிருந்த
பாண்டவக் குழந்தைகளைக் கொன்றான்…
தர்மத்திற்காக
அதில் ஒன்று தப்பியது…!பகலில்…
அவனைக் கொல்லப்
பார்த்தன் துடித்தான்…
விழிப்போடிருந்த கண்ணன்
”அஸ்வத்தாமா நீ சிரஞ்சீவியாக
என்றுமே இருப்பாய்
துன்பத்தோடு” என்று சபித்தான்!இன்றும் தெருக்களில்
பலர் அஸ்வத்தாமனாக
அலைகின்றனர் துன்பத்தில்…
தப்பிய தர்மவானின் கைகள்தான்
பகைமறந்து அவர்களை அணைக்கிறது!







