புலவர் இரா. இராமமூர்த்தி.

திருக்குறள் கடவுள் வாழ்த்துப் பாக்கள், தனிச்சிறப்பு வாய்ந்தவை! ஒரு மதத்திற்கோ, ஓர் இனத்துக்கோ, ஒரு நாட்டுக்கோ உரியதான கடவுளைப் பெயர் கூறி வாழ்த்தாமல், எல்லா மதத்துக்கும், எல்லா இனத்துக்கும், எல்லா நாட்டுக்கும் உரிய கடவுளுக்கு அவர் வாழ்த்துக் கூறுகிறார்! அவர் கடவுளை உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் எண்ணி வணங்கும், அருமையை அவரது ‘கடவுள் வாழ்த்து’ அதிகாரத்தில் காணலாம்!

இந்த அதிகாரப் பாடல்களில் நற்றாள், மாணடி, அடி, தாள் என்றெல்லாம் கூறியமையால் இறைவன் ‘உருவத்திருமேனி’ உடையநிலையில் அவனுடைய திருவடிகள் இவை எனக் காட்டப் பெறுகின்றன! “நின்னிற்சிறந்தன, நின் திரு வடியவை” என்று பரிபாடல் கூறுகிறது! நாம் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும், அதற்கும் மேலே பன்னிரண்டங்குலம் உயர்ந்த இடத்தில், அதாவது ”துவாதசாந்தப் பெருவெளியில்” இறைவன் திருவடி உயர்ந்து நிற்கும் என்பது ஞானிகளின் துணிபு! ‘பொறிவாயில் ஐந்து அவித்தான்’ என்று போற்றப் பெறும் நிலையில் விளங்கும் இறைவன் பொறி, புலன்களுக்கு அகப்படாமையால் ‘அருவத் திருமேனி’ உடையவன் என்பதை உணர்கிறோம் இறைவன் என்பதற்கு எங்கும் நிறைந்தவன் என்பது பொருள்; அறிவே உருவான அவனை ”வாலறிவன்” என்றும் கூறுகிறார். ஆகவே அறிவால் அறிந்து கொள்ளத் தக்க உருவமற்றவனாகவும், எங்கும் நிறைந்த உருவம் உடையவனாகவும் இறைவன் விளங்குவதால், அவன் ‘அருவுருவத் திருமேனியை ‘ உடையவன் என்பதும் விளங்குகின்றது,

முதல் அதிகாரத்தில் இறைவன் எல்லாவற்றுக்கும் முதன்மையானவன் என்கிறார். இதனை அனைத்துலகுக்கும் முதல்வனான ‘ஆதிபகவன்’ என்ற பெயரால் குறிப்பிடுகிறார்! இறைவனை நாம் வணங்கும் நம் மதங்கள் காட்டும் திருவுருவங்களில் அவர் காணவில்லை. இறைவனைப் பேரறிவுடையவனாகத் திரு வள்ளுவர் காட்டுகிறார்! ‘வாலறிவன்’ என்பது அவர் இறைவனை அழைக்கும் பெயர்! வேண்டுவார்களின் மனமாகிய பீடத்தில் விரைந்து வந்து அவன் அமர்ந்து கொள்கிறான்! அவனை ‘மலர்மிசை ஏகினான்’ என்று போற்றுகிறார் வள்ளுவர்! எல்லாவுயிர்களிடத்தும் ஒரே தன்மைத்தான அருளை வழங்குபவன் இறைவன்! அவனுக்குத் தனித்த விருப்பமோ, வெறுப்போ சற்றும் இல்லை, இதனை ‘வேண்டுதல் வேண்டாமை இலான்’ என்ற தொடரால் குறிப்பிடுகிறார்! சிறந்த பொருளை உடைய புகழைக் கூறாமல், வேண்டாத இழிந்த பொருளுடைய புகழ்ச்சியை எப்போதும் கூறலாகாது! அதனால் இருள் நிறைந்த நரகத்துள் உழல வேண்டியிருக்கும்; ஆதலால் உயர்ந்த, உண்மையான, சிறந்த பொருளை உடைய புகழ்ச்சியாகிய இறைவனைப் புகழும் புகழ்ச்சியையே எப்போதும் பேசி இருவகை வினைகளாகிய நல்வினை, தீவினைகளிலிருந்து நீங்க வேண்டும்; இதனை, ‘இருள்சேர் இருவினையும் சேரா’ என்ற குறட்பாவில் வள்ளுவர் கூறுகிறார்.

இறைவன் நம்மைப் போல ஐம்புலன்களின் வழியே அறிவைச் செலுத்தி அலைபாயும் உள்ளம் கொண்டவர் அல்லர்; அவர் ‘பொறிவாயில் ஐந்தவித்தவர்!’ என்கிறார்! தம்முடைய அறிவுக்கும், ஆற்றலுக்கும், அருளுக்கும் இணையாக வேறு எவரையும் கூறவியலாத, தனித் தன்மை வாய்ந்த தலைவர் அவர். இவரைத் திரு வள்ளுவர், ‘தனக்குவமை இல்லாதான்’ என்று போற்றுகிறார்! இறைவன் எல்லா அறங்களும் பாய்ந்து நிரம்பிய கடல் போன்றவன்! ஆனால் நாம் காணும் உப்புக்கடலை விடச் சிறந்தவன்! தம்மையே பிறருக்கு வழங்கி மகிழும் தன்மை வாய்ந்த கடல் போன்றவன் அவன்! தம்மை அடைந்தாரைச் சுழலில் சிக்கவைத்து, ஆழத்தில் அழுத்தி, ஆபத்து விளைவிக்கும் கடலை விடப் பலவகைகளில் சிறந்தவன்! அறத்தை அருளிப் பொருளையும் இன்பத்தையும் தருபவன், ஆதலால் இறைவனை வள்ளுவர், ‘அறவாழி அந்தணன் ” என்கிறார்!

இறைவன், எட்டுவகையான குணங்கள் கொண்டவன் என்று சமய இலக்கியங்கள் கூறுகின்றன! இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன், முற்றறிவுடையவன், வரம்பில் ஆற்றல் உடையவன், வரம்பில் இன்பமுடையவன், முதலான எட்டுக் குணங்கள் அவனுக்கு உண்டு என்று பரிமேலழகர் எழுதுவார். பிங்கலந்தை நிகண்டு பிறப்பின்மை, இறப்பின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை , ஒருவினையின்மை, குறைவில் அறிவுடைமை என்ற எட்டு குணங்கள் பெற்றவன் கடவுள். என்று கூறுகிறது.
அதனை,

“பவமின்மை இறவின்மை பற்றின்மை பெயரின்மை
உவமை யின்மை ஒருவினை யின்மை
குறைவிலறிவுடைமை கோத்திரமின்மை என்று
இறைவனிடத்தில் எண்குணம் இவையே.” (பிங்கலந்தை)

என்ற நூற்பாவால் அறியலாம்.

நாம் இங்கே இதே கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வள்ளுவர் காட்டும் ஒரு நுட்பத்தைக் காணத் தவறுகிறோம்! இறைவனின் குணங்கள் எட்டினையும் கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் முதல் எட்டுப்பாக்களிலும் அவரே குறிப்பிட்டிருக்கிறார்! அவை, 1 அனைத்துக்கும் முதன்மை, 2.சிறந்த ஞானம் உடைமை, 3. அடைதற்கு எளிய நிலை, 4. பற்றற்ற நிலை, 5.எங்கும் நிறைந்தநிலை, 6. பொய்தீர் ஒழுக்கமுடைமை, 7. தனக்குவமை இன்மை , 8. அறத்தின் இருப்பிடமான நிலை ஆகிய எண்வகைப் பண்புகளையும் வரிசையாக அவரே குறிப்பிட்ட பின்னர், ஒன்பதாம் குறட்பாவில், தாம் முன் கூறியவற்றைத் தொகுத்து ”எண் குணத்தான் ” என்று கூறும் நுட்பம் சிந்தித்து மகிழ்தற்குரியது! ஆதலால் திருவள்ளுவர் குறிக்கும் எண்குணமும் முதல் எட்டுக்குறட்பாக்களில் குறிப்பிடப் பெற்றனவே என்பதைப் புரிந்து கொண்டு ஒன்பதாம் குறட்பாவைப் படிக்கிறோம்!

”கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை”

என்ற குறட்பாவின், எண்குணத்தான் ‘ என்ற தொடர் , நமக்குப் புதிய பொருளைத் தந்து மகிழ்விக்கின்றது ! பின்னர் எண்குணத்தான் திருவடியாகிய புணையைச் சேர்ந்தவரே பிறவிக் கடலைக் கடந்து கரையேறுவர் என்பதைப் பத்தாம் பாடலில் புரிந்து கொண்டு வழிபாடு செய்யலாம்!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருக்குறளுக்குப் புது விளக்கம் – 13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *