இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (165)
–சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே ,
இனிய வணக்கங்கள்.
அடுத்தொரு மடலில் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன். இவ்வாரம் தன்னுள் இரு பெரும் விடயங்களைத் தாங்கியவாறு பூத்திருக்கிறது.
இங்கிலாந்தின் மகாராணியார் இரண்டாவது எலிஸபெத் மகாராணி 9ம் திகதி ஏறத்தாழ இங்கிலாந்து நேரம் பிற்பகல் 2 மணியளவில் இங்கிலாந்தை ஆண்ட மன்னர், ராணிகளில் அதிக காலம் அதிகாரத்திலிருந்தவர் எனும் மகுடத்தைச் சூடிக் கொள்கிறார்.
மிகவும் அமைதியாக தான் புரியும் சாதனைகளை மெதுவாக தன்னுள் அடக்கிக் கொண்டு அதனைப் பெரிது படுத்தாமல் நடக்கும் பண்பினைக் கொண்ட மகாராணி இன்றும் இவ்விடயத்தைப் பெரிது படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு தனது அன்றாட ராணியாருக்கென ஒதுக்கப்பட்ட நடவடிக்கைகளில் வழமை போல தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
இவ்விடயம் ஒருபுறமிருக்க,
அரசியல் அரங்கம் இருக்கிறதே ! அப்பப்பா ரொம்பவும் விசித்திரமான ஒரு அரங்கம். எந்த இடத்தில் எத்தகைய திருப்பங்கள் வருகின்றன என்பதை எவரும் எப்போதும் அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது.
முன்னைநாள் இங்கிலாந்தின் லேபர் கட்சியின் பிரதமராக இருந்த அமரர் ஹரால்ட் வில்ஸன் அவர்கள் “அரசியலில் இரண்டு கிழமைகள் என்பது மிகப்பெரிய காலம்” என்று ஒரு சமயம் குறிப்பிட்டிருந்தார்.
பொதுவாகவே அரசியலில் அவதானிகள் இரண்டு வகையான தீவிர கொள்கைகளைக் குறிப்பிடுவது வழக்கம்.
அவை முறையே வலது சார்புக் கொள்கைகளும், இடதுசார்புக் கொள்கைகளுமாகும்.
ஆனால் ஒரு சராசரி மனிதனாக அரசியல் அரங்கத்தை நோக்கும் போது இவ்வரசியல் வேறுபாட்டின் அர்த்தம் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. காரணம் அரசியலின் முக்கிய நோக்கம் மக்களின் நலன் என்பதே ஜனநாயக அரசாங்க அமைப்பையுடைய ஒரு நாட்டின் அடிப்படைக் குறிக்கோளாகும்.
மக்களைச் சார்ந்த அரசியலில் எப்படி வலது சார்பு அன்றி இடது சார்பு கொள்கைகளை முதன்மைப் படுத்தி அரசியல் நடத்துவார்கள்?
சரி இது ஒரு புரியாத புதிர் என்றே எடுத்துக் கொள்வோம்.
இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் கன்சர்வேடிவ் கட்சி வலது சார் கொள்கைகளையும், லேபர் கட்சி இடதுசாரிக் கொள்கைகளையும் முதன்மைப் படுத்திய முக்கியமான இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் எனலாம்.
சரி… இதற்கும் இவ்வாரம் தன்னுள் அடக்கியுள்ள முக்கியமான விடயம் என்று நான் முன்பு குறிப்பிட்டதிற்கும் என்ன சம்பந்தம் ? கேள்வி எழுகிறது இல்லையா ?
இவ்வார இறுதியில் அதாவது வருகின்ற சனிக்கிழமை 12ம் திகதி லேபர் கட்சி, யார் தனது புதிய தலைவர் என்பதைத் தெரிவிக்கப் போகிறது .
ஆமாம், இவ்வருட முற்பகுதியில் நடந்து முடிந்த இங்கிலாந்துப் பொதுத்தேர்தலில் வெற்றியீட்டப் போகும் கட்சி லேபர் கட்சி எனும் பொதுக்கருத்துக் கணிப்புகளுக்கு முரணாக டேவிட் காமரனைத் தலைவராகக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் தனியாக அரசமைத்ததும், பதவி விலகினார் லேபர் கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட்.
அதன் காரணமாக முடுக்கி விடப்பட்டது லேபர் கட்சியின் தலைப் பதவிக்கான தேர்தல் இயந்திரம். மூன்று மிதவாத இடதுசாரிக் முன்னணி லேபர் கட்சி அரசியல்வாதிகள் தலைமைப் பதவிக்கு முன்மொழியப்பட்டனர். அனைத்தும் சுமுகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று லேபர் கட்சி அசந்திருந்த சமயம் திடீரென கடைசி நிமிடத்தில் முன்மொழியப்பட்டார் ஜெர்மி கோர்பன்!
யார் இந்த ஜெர்மி கோர்பன் ?
லேபர் கட்சியே இடதுசார்புக் கொள்கையுடைய கட்சியென்றால் அதன் அதிதீவிர இடதுபுறத்தின் முடிவில் நிற்பவர் ஜெர்மி கோர்பன்.
முற்றுமுழுதாக தன்னை சோஸலிஸ்ட் என்று கூறிக் கொள்பவர். இதுவரை லேபர் கட்சியின் தலைமைத்துவம் எடுத்த முடிவுகள் சரியான ஒரு இடதுசார்புக் கொள்கையையுடைய கட்சியின் தலைமைப்பீடம் எடுத்த முடிவுகள் போலல்ல என்று கூறி, எப்போது கட்சிக்குள் ஒரு புரட்சிவாதியாக இனம் காணப்பட்டவர்,
முந்தைய லேபர் கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட் லேபர் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலை இன்னும் ஜனநாயகமாக்குகிறேன் என்று கூறி யார் 3 பவுண்ட்ஸ் செலுத்தி லேபர் கட்சியில் இணைகிறார்களோ அவர்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் எனும் சட்டவிதியைத் தனது கட்சிக்குள் கொண்டுவந்தார்.
போச்சுடா !
ஆமாம் லேபர் கட்சிக்கு எதிரானவர்கள் பலர் இந்த வெறும் 3 பவுண்ட்ஸ் செலுத்தி “ஜெர்மி கோர்பெனுக்கு ” வாக்களிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஏன் லேபர் கட்சிக்கு எதிரானவர்களுக்கு இந்த முயற்சி ?
நாட்டின் பொதுவான கருத்து “ஜெர்மி கோர்பனை” தலைவராகக் கொண்ட லேபர் கட்சி இனி ஆட்சிக்கு வரக் குறைந்தது இருபது வருடங்களாவது பிடிக்கும். ஏனெனில் ஜெர்மி கோர்பனை எப்போதும் இங்கிலாந்து பிரதமராக ஏற்றுக் கொள்ளாது. அது மட்டுமல்ல அவரது அதிதீவீர இடதுசாரிக் கொள்கைகளினால் லேபர் கட்சி மக்கள் மத்தியில் படுமோசமான வீழ்ச்சியையடையும். அதிலிருந்து வேறொரு தலைவர் லேபர் கட்சியை அரசாங்கம் அமைக்கும் அளவிற்கு வலுப்படுத்தக் குறைந்தது 20 வருடங்களாவது பிடிக்கும்.
இதுவே பொதுவான அனுபவமிக்க அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.
ஆகமொத்தம் ஜெர்மி கோர்பன் லேபர் கட்சிக்கு தலைவரானால் இனி ஒரு குறைந்தது இரண்டு தேர்தல்களிலாவது தாம் ஜெயிப்பது மிகவும் சுலபம் என்று கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் எண்ணியதால் அவர்களும் இந்த 3 பவுண்ட்ஸை செலுத்தி வாக்களிக்க முனைவதில் என்ன வியப்பு ?
சரி, இவ்வளவு சொல்கிறாயே அப்படியாயின் ஜெர்மி கோர்பன் தலைவராவது சாத்தியமா? என்று கேட்கிறீர்கள் இல்லையா ? ஆம், சாத்தியமே ! என்னவென்று புரியாத வகையில் ஜெர்மி கோர்பன் மீது ஒரு ஆதரவு அலை லேபர் கட்சியினுள் எழுந்திருப்பது போல் ஒரு உணர்வேற்படுகிறது. இதுவரை வாக்களிக்காத இளைய தலைமுறைக்கு தேர்தலின் மீது ஒருவிதமான விரக்தி கலந்த வெறுப்பு இருந்தது. அரசியல்வாதிகள் அனைவரும் வாக்கைப் பெறுவதற்காக எதையும் கூறுவார்கள், யார் வந்தாலென்ன நிலைமை மாறப் போகிறதா ? எனும் ஒருவகை விரக்தியே அதற்குக் காரணம்.
அடுத்ததாக நாட்டின் செலவு வரவை விட அதிகமாக இருந்ததால் ஏற்பட்ட கடனை அடைக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றி கண்ட கன்சர்வேடிவ் கட்சி தொடர்ந்து கடனைக் குறைத்து செலவிற்கு மேலாக வரவினைக் காட்டும் நிதிநிலையை தமது இலக்காகக் கொண்டதினால் பொருளாதாரக் கொள்கைகளை மேலும் இறுக்கி அரசாங்கம் மக்களுக்குக் கொடுக்கும் உதவிப்பணத்தொகைகளை கட்டுப்படுத்தியுள்ளார்கள்.
ஜெர்மி கோர்பன் இவை அனைத்தையும் மாற்றுவேன். தனியார் மயமாக்கப்பட்ட காஸ், மின்சாரம், குடிநீர் வினியோகம், ரெயில் சேவை அனைத்தையும் மீண்டும் தேசிய மயமாக்குவது தனது திட்டம் என்று மிகவும் அதிதீவிர இடதுசார்பு சோஸலிசக் கொள்கைகளை முழங்குகிறார். உழைப்போர் பக்கமே நான் நிற்பேன், பணமுதலைகளை ஒழிப்பேன் என்று மிகவும் சத்தமாக பிரசாரம் செய்கிறார். லேபர் கட்சி தோல்வியடைந்ததின் காரணம், அது தான் கொண்ட அடிப்படைக் கொள்கைகளின்றும் தடம் புரண்டு விட்டது; அதை மீண்டும் முற்றுமுழுதான சோஸலிஸக் கட்சியாக்குவேன் என்றும் வேறு சவால் விடுகிறார்.
இது எல்லாம் அரசியல் அரங்கத்தில் ஒரு புது நாடகம் மேடையேற்றப் பட்டது போன்ற பரபரப்பைக் கொடுத்திருக்கிறது. முன்னால் லேபர் கட்சியின் தலைவர்களும், முன்னணி அரசியல்வாதிகளும் ஜெர்மி கோர்பன் தலைவரானால் கட்சி எந்த அளவிற்கு பின் தள்ளப்படும் என்று எச்சரிக்கை வேறு விடுத்தது ஜெர்மி கோர்பனுக்கு எதிர்மறையான அனுதாப அலைகளைக் கிளப்பி விட்டது என்று சில ஊடக முன்னணியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அதிமுக்கிய பிரச்சனை வேறொன்று !
ஜெர்மி கோர்பனுக்கும் உலகில் பயங்கரவாத இயக்கங்கள் என்று கணிக்கப்பட்ட அமைப்புகளுக்கும் உள்ள தொடர்பு பலரை இவருக்குக் கிடைத்த அரசியல் முக்கியத்துவம் அச்சமடைய வைத்திருக்கிறது. இங்கிலாந்தின் பிரதமராகும் வல்லமை படைத்த ஒரு கட்சியின் தலைவராகும் இவருக்குச் சர்வதேச அரங்கில் எடுக்க வேண்டிய நிலைப்பாட்டைப் பற்றிய அளவிற்கு சர்வதேச அரசியல் வியூகம் இருக்கிறதா ? எனும் கேள்வி மிகவும் ஆழமாகப் பல அரசியல் அவதானிகளின் உள்ளத்தில் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.
அடுத்து பொருளாதாரத்தில் இவர் கொண்டுள்ள நிலைப்பாடு மக்கள் மனதில் பல கேள்விகளைத் தூக்கிப் போட்டுள்ளது.
இக்காலகட்டம் மிகவும் வித்தியாசமானது. வாழ்க்கையின் சகல மட்டத்தில் இருக்கும் மக்களும் பங்கு சந்தையில் தம்மை ஈடுபடுத்தியுள்ளார்கள். ஜெர்மி கோர்பன் தேசியமயமாக்கப் போகிறேன் என்று கூறும் பல நிறுவனங்களில் செல்வந்தர்கள் இல்லாத பல நடுத்தர வர்க்கத்தினரும் பங்குகளைக் கொண்டுள்ளார்கள். இவரது இந்தத் தேசிய மயமாக்கல் கோஷம் பலருக்குப் பலவகையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆமாம், வருகின்ற சனிக்கிழமை லேபர் கட்சிக்கு ஒரு வரலாற்றுத் திருப்புமுனை என்பதே அரசியல் அவதானிகளின் கருத்து… ஜெர்மி கோர்பன் லேபர் கட்சியின் தலைவரானால் . . . . . . இனி வரும் தேர்தல்களில் லேபர் கட்சி அரசமைப்பது கேள்விக்குறியே !
ஏன், இது எனக்கு ஒரு ஆச்சரியத்தை எதிர்காலத்தில் கொடுக்கலாம் !
அரசியல் அரங்கத்தில் எதுவும் சாத்தியமே ! பொறுத்திருந்து பார்ப்போம்
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan



