-சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுபோல்
எனக்கும் சிறிது கவித்திறன் தந்து
ஏனிந்த ஈனச் சமூகத்தில் உலவவிட்டாய்
தமிழன்னையே?

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம் எனும்
முண்டாசுக் கவியின் பொன்மொழி கொன்று
மாதரைக் காமத்திற்காகக் கொளுத்துகிறான் இன்று!

அன்னையே கண்கண்ட தெய்வம்
அக்கா அவளோ இரண்டாம் தாய்
தங்கை அவளோ தான்பெறாத குழந்தை
தாரம் அவளோ பத்தினித் தெய்வம்
உண்மையான காதல் இவர்களிடம் இருக்க,
உதவாக்கரை சிலரோ
இக் கலிகாலக் காதல்பேயைப் பற்றிக்
கண்டபடி அலைகிறார் பெண் பின்னால் சுற்றி!
காதல் என்பதன் உண்மை அர்த்தம் உணராது
ஐ லவ் யூ என அரற்றுவதேன் சில ஈனப் பதர்கள்?

இருபதில் காதலி ஐ லவ் யூ சொல்வது வேதம்
அதே
நாற்பதில் சகோதரி ஐ லவ் யூ சொல்வது நாராசம்
அறுபதிலோர் அன்னை ஐ லவ் யூ சொல்வது ஆபாசம்
நன்றிகெட்ட சமூகத்தின் நிலைதான் இது!
தாய்க்கும் தாரத்திற்கும் தங்கைக்கும் அக்காவிற்கும்
வித்தியாசம் உணராது அறிவு விளையாத களர்நிலத்தில்
ஈனப் பதர்களாய்ச் சில கருங்காலிகள்!

முண்டாசுக் கவியோ இன்றிருந்தால் அம்
முண்டாசால் தூக்கிட்டு மாண்டிருப்பான்!
துண்டு துண்டாய்த் தன்னை வெட்டித்
தானே கீழே தவித்தபடி சாய்ந்திருப்பான்!
அதனால்…
பெண்களே விழித்தெழுங்கள்!
முண்டாசுக் கவிஞனுக்கு நீர் ’பிண்டம்’ வைக்கவில்லை எனினும்
இந்த அண்டம் காக்க அலைகடலெனத் திரண்டு ஒன்றுபடுங்கள்!
பெண்ணே,
பெண்ணாய் நீ பிறந்ததற்குப் பெருமைப்படு அடி என் கண்ணே!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *