(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 30

ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி

amv
அவன் பள்ளி இறுதி ஆண்டில் 58 சதவிகிதம் மதிப்பெண்கள் வாங்கி பாஸ் செய்தான். அது அவனது வீட்டில் உள்ளவர்களுக்கு வருத்தமாக இருந்தாலும் அவன் அதுபற்றி கவலைப் படவே இல்லை. அவனுக்கு எழுத்தாளனாக வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. பாடங்களை மனனம் செய்து தேர்வில் எழுதுவது என்பது அவனுக்குப் பிடிக்க வில்லை. ஆனால் அப்படித்தான் எழுத வேண்டும், அதனால் நிறைய மதிப்பெண்கள் கிடைக்கும் என்பது எழுதப் படாத விதியாக இருக்கிறது. அவன் இருக்கும் தெருவில் ஒரு மாணவன் காலையில் தன் வீட்டு வாசலில் உட்கார்ந்து தன் பாடங்களை சத்தமாகப் படிப்பதை அவன் கேட்டிருக்கிறான். எப்படித் தெரியுமா ? மகாகவி பாரதியார் “கி” புள்ளி “பி” புள்ளி 1882ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினொன்றாம் தேதி பிறந்தார். அதாவது கிறிஸ்து பிறந்த பின் என்பதைத்தான் அப்படிப் புள்ளி விபரமாகப் படித்து மனப்பாடம் செய்வான். அதுபோல அவனால் படிக்க முடிய வில்லை. ஆசிரியர் பாடம் நடத்தும் பொழுது அவன் அந்தக் காலத்திற்கே சென்று விடுவான். ரசிப்பான். நண்பர்களோடு அதன் சுவையைச் சொல்லி மகிழ்வான். வீட்டில் இரவிலும், பகலிலும் பாடங்களைப் மனப்பாடம் செய்யாமல், படித்துக் கொண்டே போவான். அதன் அர்த்தத்தை மனதில் வாங்கிக் கொள்வான். சுயமாக எழுதிப் பார்ப்பான். அந்தப் பழக்கத்தில் தேர்வும் எழுதுவான். அது பாடப்புத்தகத்தின் அச்சாக இருக்காது. அதன் கருத்தை உள்வாங்கி சுயமாக எழுதுவான். அப்படி எழுதுவதை ஊக்கப் படுத்தியவர், அவனுக்குத் தமிழாசிரியராக இருந்த கே.ஏ.நீலகண்ட ஐயர். “விஸ்வநாதா …நிறைய புத்தகங்கள் படி..தினமும் நூலகத்திற்குச் சென்று உனக்கு விருப்பமான புத்தகங்களைப் படித்துப் பழகு” என்பார். அவனுக்கு அது பிடித்திருந்தது. அப்பொழுதெல்லாம் அவன் விரும்பிப் படிப்பது தினமணிச் சுடரில் வரும் கட்டுரைகள், அதில் வரும் தலையங்கம், சினிமாச் செய்திகள், ஆனந்த விகடனில் வரும் சிறுகதைகள், தாமரைப் பத்திரிகையில் வரும் கதைகள் எல்லாம்தான். இந்து பத்திரிகையில் வரும் (Letters to the Editor) வாசகர்களின் கடிதங்களைப் படிப்பதிலும் ஆர்வம் உண்டு.

அப்பொழுதெல்லாம் ஆழ்வார்குறிச்சியில் இருக்கும் “பரமகல்யாணி கல்லூரி”யில் படிப்பதுதான் கௌரவமாகக் கருதுவார்கள். அத்தனை கவனிப்பு அந்தக் கல்லூரியில் உண்டு. ஆனால் எளிதில் அதில் இடம் கிடைக்காது. நல்ல மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களுக்குத்தான் இடம் எளிதாகக் கிடைக்கும். மற்றவர்களுக்கு அவர்களது விதியிருந்தால் கிடைக்கும். அவனுக்கு அப்படி ஒரு விதி இருந்தது. அவன் வாங்கிய 58 சதவிகிதம் மதிப்பெண்களை வைத்துக் கொண்டு அந்தக் கல்லூரியில் எப்படிச் சேர முடிந்தது. அதற்குக் காரணம் அந்தக் கல்லூரியில் உடற்பயிற்சியாளராக வேலை செய்து வந்த V. சங்கரராமன் அவர்கள்தான். அவனுக்கு அப்பா அவருக்கு மாமா முறை. அவனுக்கு அப்பா V. சங்கரராமன் அவர்களிடம் அவன் P .U .C. யில் சேர்த்து விடக் கேட்டார். குறைந்த மதிப்பெண்களே அவன் பெற்றிருந்தாலும் அவருக்கு அவனுக்கு அப்பாவின் மீதும், அவரது குடும்பத்தின் மீதும் இருந்த மதிப்பினால் அவனுக்கு ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியில் P .U .C. வகுப்பு சேர்த்து விட்டார். V. சங்கரராமன் அவனிடம்,” இதோ பாரு விஸ்வநாதா…அன்னன்னிக்கு நடக்கும் பாடங்களை அப்பொழுதே படி. அனாவசியமாக ஊரைச் சுத்தாதே. உங்கப்பா ஒன்ன கஷ்டப் பட்டு படிக்க வைக்கறார்…அத மறக்காதே” என்று மிகுந்த அன்போடு அவனிடம் சொன்னார்.

பள்ளியின் டிராயர், சட்டையில் இருந்து கல்லூரிக்காக வேட்டியும், சட்டையுமாக மாறினான். வேட்டியை விட “பேண்ட்டு” விலை அதிகம். அப்பொழுது இருந்த குடும்ப நிலையில் அது ஒரு ஆடம்பரச் செலவுதான். காலையில் கல்லூரி பஸ்ஸில்தான் கல்லூரிக்குச் செல்வான். அனேகமாக அவன் சன்னலோரமாகத்தான் அமருவான். கல்லிடைக்குறிச்சியில் இருந்து ஆழ்வார்குறிச்சி வரை சாலையின் இரு புறமும் பசுமை தாண்டவமாடும். காற்று ஆளையே தள்ளி விடும். அத்தனை வேகம் அதற்கு. அம்பாசமுத்திரம் ரயில்வே கிராசிங் கடந்து மன்னார்கோவில் வழியாகச் செல்லும் பொழுது அவன் அங்கு தெரியும் பாபநாச மலையின் அழகில் சொக்கிப் போவான். ஆம்பூர் ஏற்றம் கழிந்து அதற்கும் , ஆழ்வார்குறிச்சிக்கும் இடையில் பாயும் கடனாநதி பாலத்தைக் கடந்து வரும் இறக்கத்தில் இருந்து ஆழ்வார்குறிச்சி நுழைவில் உள்ள அழகான குளம்வரை இரண்டு புறமும் சாலையில் தென்னை மரங்கள் வரிசையாக இருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். நிறைய திரைப்படங்களில் இந்த இடம் வந்திருக்கிறது. இந்தப் பயணத்தை ரசிப்பதற்கே அவனும் அவனுக்கு நண்பன் வீரமணியும் வாடகை சைக்கிளில் கல்லூரிக்கு வந்திருக்கிறார்கள். கல்லூரி பஸ் சரியாக எட்டு மணிக்கு ஊரிலிருந்து புறப்பட்டுவிடும். பஸ்ஸைத் தவற விட்ட நாட்களில் சைக்கிள் பயணம்தான். ஒரு நாள் சைக்கிள் வாடகை ரூபாய் ஒன்று மட்டுமே.

அந்தக் கல்லூரி மிக அழகாக இருக்கும். காற்றோட்டமான சூழ்நிலை. படிக்கத்தூண்டும் அமைப்பு. அவனது வகுப்பறைகள் நல்ல காற்றோட்டமாக இருந்தது. அவன் சன்னல் வழியாகத் தெரியும் சிவசைலம் மலையழகை ரசிப்பான். கவிதை எழுதி நண்பகளிடம் காட்டுவான். முதல் நாள் வகுப்பில் கணக்கு ஆசிரியர் ஜானகிராமன் வந்தார். அவர் கணக்கில் நிபுணர். நன்றாகச் சொல்லித் தருவார். வேடிக்கையாகப் பேசுவார். முதல் பெஞ்சில் அமர்திருக்கும் மாணவர்களிடம் அவர்களின் ஊர் , பெயர் எல்லாம் கேட்பார். கொஞ்சம் அப்பாவியாக இருந்தால் அவனைப் பார்த்து,” என்னடா அம்பி…பயந்துட்டயா…முகமே பேய் அரஞ்சமாதிரி இருக்கே…போய் வேப்பலை அடிச்சுண்டு வா..” என்று சொல்ல வகுப்பில் அனைவருமே சிரித்து விடுவார்கள். அவனுக்கு தமிழ்ப் பாடத்திற்கு, பேராசிரியர் லக்ஷ்மிநாராயணன் இருந்தார். அவரை அனைவருமே தமிழ் ஐயா என்றுதான் மரியாதையாக அழைப்பார்கள். அவரது தமிழ் உச்சரிப்பே அழகாக இருக்கும். மாணவர்கள் சுயமாக எழுதவும், தைரியமாகப் பேசவும் வேண்டும் என்று ஊக்கப் படுத்துவார். அவரே நிறைய பட்டி மன்றங்களில் பேசவும் செய்வார். அவனே அதைக் கேட்டு ரசித்திருக்கிறான். நா.பார்த்தசாரதியின் “பிறந்த மண்” நாவல் பாடமாக இருந்தது. அதைப் பாடமாக நடத்தியவர் ஆழ்வான் சார். நகைச்சுவையோடு பாடம் நடத்துவார். பிறந்த மண் நாவலின் ஒவ்வொரு கதாப் பாத்திரத்தையும் நடித்துக் காட்டி கதையின் போக்கை விளக்குவார். அதனாலேயே பிறந்த மண் நாவலை மீண்டும் மீண்டும் அவன் படித்தான். நா.பா.வின் அந்த நடைக்காகவே அவரது மற்ற படைப்புகளைத் தேடித் தேடிப் படித்தான். பாடத்தில் மார்க் வாங்க வேண்டும் என்று படிக்காமல், அது போன்று, ஏன் அதைவிட இன்னும் சிறப்பாகத் தானும் எழுத வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவன் படித்தான். அவனது மனதுக்கு ஏற்றாற்போல் ஆங்கிலப் பாடத்தின் கதைப் பகுதிக்கு ஆர்.சங்கரன் என்பவர் ஆசிரியராக இருந்தார். ஆர்.கே.நாராயணனின் “சுவாமி அண்ட் பிரண்ட்ஸ்” நாவலை மிக சுவாரஸ்யமாக அவர் நடத்தினார். அவனுக்கு “சுவாமி அண்ட் பிரண்ட்ஸ்” நாவல் பிடிக்கக் காரணமே அதில் வரும் சுவாமியின் சுட்டித் தனங்கள்தான். ஆர்.கே.நாராயணனின் அற்புதப் படைப்பு அது.

ஸ்ரீ சிவசைலபதி

amv1

கல்லூரிக்கு மிக அருகில் சிவசைலம் என்ற மலையடிவாரத்தில் மிக அழகான சிவன் கோவில் இருக்கிறது. அது கடனாநதிக் கரையில் அமைந்திருக்கிறது. அவன் அந்தக் கோவிலுக்கு நண்பர்களுடன் அடிக்கடி சென்று வருவான். அக்கோவிலின் மூலவரான ஸ்ரீ சிவசைலபதியையும், ஸ்ரீ பரமகல்யாணி அம்மனையும் விட மிகப்பிரசித்தம் அங்குள்ள நந்திகேஸ்வரர். பிரதோஷ வழிபாடும், வருடாந்திரத் தேரோட்டத் திருவிழாவும் நன்றாக இருக்கும். இங்கிருக்கும் ஸ்ரீ பரமகல்யாணி அம்மனை பக்கத்து ஆம்பூரில் இருக்கும் கிராமத்திற்கு அழைத்து வந்து மீண்டும் சிவசைலத்திற்கே கொண்டுவிடும் திருவிழாவுக்கு அந்த கிராமத்து மக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு அருள் பெறுவார்கள். அதனால் ஆம்பூரை அம்மனின் பிறந்த வீடாகக் கருதுகின்றனர் இங்கு வாழும் மக்கள்.

கல்லூரியில் மதியம் உணவு வேளை முடிந்தவுடன் அவன் அந்தக் கல்லூரி வளாகத்திலும், அதன் வெளிப்புறங்களிலும் நடந்தபடி அதன் அழகை ரசிப்பான். அப்படி ஒரு நாள் அவன் நடந்து கொண்டிருக்கும் பொழுது, அந்த வளாகத்தின் ஒரு ஓரத்தில் நாற்காலி போட்டு ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவர் அவனை அழைத்து,” நீ ஹாஸ்டல் பையனா, வெளிலேந்து வரையா” என்றார். “கல்லிடைக்குறிச்சி” என்றேன். “நெனெச்சேன்…என்ன அப்பாவுக்கு தோட்டம் தொறவு இருக்கோ” என்றார். “இல்லை” என்றான். “அப்போ நேரத்த வீணாக்காம புத்தகத்தைப் படிக்கலாமோல்லியோ…” என்று அவனைத் திருப்பி அனுப்பினார். அங்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த காவலாளியிடம்,” இந்தப் பெரியவர் யாரு?” என்று அவன் கேட்டான். “அவர்தான் இந்தக் கல்லூரிக்கு செகரட்டரி சங்கரநாராயணன் சார்…” என்றார். அந்த வயதிலும் அதனை கவனிப்பு. கலூரியில் படிக்கும் ஒவ்வொரு மாணவர்களிடமும் அத்தனை அக்கறை அவருக்கிருந்தது.

தோல்விதான் நல்ல பாடம்

அவன் அந்தக் கல்லூரியின் படித்தது ஒரு வருடம் தான். அதில் அவன் கற்றது கரையில்லாதது. P .U .C. இறுதித் தேர்வு நாளும் வந்தது. அவன் தேர்வு எழுதினான். அதன் முடிவு ஒரு “மே” மாதத்தின் முதல் வாரத்தில் “தினமலரில்” வெளியானது. காலை ஏழு மணிக்கு அவனுக்கு எதிர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து தினமலரில் அவனது நம்பரைத் தேடினான். அது இல்லை. அவன் P .U .C. பெயில். அதுதான் அவனுக்கு மனதில் உறைத்த முதல் தோல்வி. அவன் கவலை கொள்ளவில்லை. அவனது நண்பர்கள் அவனுக்கு உற்சாகம் தரும் வார்த்தைகளைக் கூற, அவன் சிரித்துக் கொண்டு அவனுடைய வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்தான். அவனுக்கு அம்மா வழித் தாத்தா ஆற்றங்கரைக்குக் குளிக்கச் செல்லும் முன்பு அவன் வீட்டு வாசலில் நிற்பதைப் பார்த்து.”விஸ்வம்..நீ பாசா” என்றார். “பெயில்” என்றான். சரி. மறுபடியும் எழுது என்றார். சரி என்றான். ஆனால் அவன் எழுத வில்லை.

18.09.2015

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

படம்  உதவி  K.V.அன்னபூர்ணா

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அவன்,அது,ஆத்மா – 30

  1. தங்கள் வாழ்க்கையை திறந்து வைத்த புத்தகமாக கொட்டி இருக்கிறீர்கள். நானும் ஒரு வருடம் தான் அந்த கல்லூரியில் பீ யு சி படித்தேன். கல்கத்தா சென்று விட்டதால் அங்கே பீ காம் படித்தேன். ஆழ்வான் சார் தான் அட்வான்ஸ் தமிழ் வாதியார். வட்டில் சுமந்து கொட்டிக்கிழங்கு விற்கும் பெண்ணின் அழகை அபிநயனத்துடன் விவரிப்பார் :

    இட்ட அடி நோக 
    எடுத்த அடி கொப்பளிக்க
    வட்டில் சுமந்த மருங்கசைய 
    கொட்டிக்கிழங்கோ கிழங்கு 
    என்று கூறுவாள் நாவில் 
    வழங்கோசை வையம் பெறும் !

    அவர் ஒருநாளும் என்னுடன் பேசியதில்லை. ஆனால் “என்னையா எங்கிட்ட சொல்லிக்காம கல்கத்தா பொய் விடுவாயோ ” என்று நக்கல் பண்ணினார். அவர் கூறிய படியே திடீர் என்று நடந்துவிட்டது. அவர்கள் மறைமுகமாக ஏதோ தீக்ஷை நமக்கு கொடுத்ததால் தான் நாம் இன்று இப்படி நன்றாக இருக்கிறோம் என தோன்றுகிறது .

  2. தமிழ் பேராசிரியர் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் அவர்கள் ஹாஸ்டல் இன்சார்ஜ் ஆகவும் இருதார் என்று நினைக்கிறேன். நாங்கள் கல்லூரி  காண்டீனில் சாப்பிடும் போது எப்படி கீழே சிந்தாமல் ஒழுகாக சாப்பிடவேண்டும் என்று சொல்லிக்கொடுப்பார். ஒருமுறை அவர் பேசிய ‘நொண்டி நாடகம்’ patriya பேச்சு வானொலியில்  ஒலிபரப்ப இருப்பதாகவும் அதை கேட்கும்படியும் எங்களுக்கு சொன்னார். நாங்கள் கேட்டோம். சுவையாக இருந்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *