இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (166)

0

–சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள்.

இவ்வார மடலில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.

வரலாற்றுத் திருப்புமுனைகள் ஒரு நாட்டின் சரித்திரத்தை மாற்றியமைப்பதற்கு இன்றியமையாத காரணமாகிறது.

எங்கோ பிறந்தோம், எங்கோ வளர்ந்தோம் இன்று எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் நாட்டில் எமது வாழ்க்கையை அமைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நமது வாழ்வும், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு இன்று இருந்ததற்கும், முந்தைய காலத்தில் அது தன்னுடைய இன்றைய நிலையை அடைவதற்கும் முன்னால் எத்தகைய சரித்திர திருப்புமுனைகளினால் இன்றைய நிலையை அடைந்துள்ளது என்பதைப் படிக்கப் படிக்க, நாம் வாழும் நாட்டு மக்களின் குணாதிசயங்களின் அடிப்படைக் காரணிகள் புலர்கின்றன.

இங்கிலாந்து நாட்டில் இந்நாட்டு மக்கள் தமது நாட்டின் போர்களின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்நாளை நினைவுகூர்வதன் அடிப்படை புரிகிறது. இன்றைய இங்கிலாந்து என்பது இப்போதிருக்கும் இதே வசதிகளை உள்ளடக்கித்தான் காலமெல்லாம் வாழ்ந்திருக்கிறது என்ற எண்ணம் எமக்கு வருமானால் அவர்களது கடந்தகால சரித்திர திருப்புமுனைகளை பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

ஒரு நாட்டின் மக்கள் எதற்காக, எப்படி ஒரு நிகழ்வை அல்லது முக்கிய பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள் என்பதற்கான காரணத்தை நாம் அறிந்து கொள்ளும் போதுதான் அவர்களது அபிப்பிராயங்களின் அர்த்தம் புரிகிறது. வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்து வாழ்வை அமைத்துக் கொண்டிருப்போருக்கு இந்நாட்டு மக்களோடு இணைந்து செயற்படுவதற்கு அவர்களது சரித்திரப் பின்னணிகளை அறிந்து கொள்வது இன்றியமையாததாகிறது.

இங்கிலாந்து நாட்டின் வரலாற்று முக்கிய திருப்பங்களின் வரை கோட்டை பார்க்கும்போது, பல நிகழ்வுகள் பல முக்கிய காலகட்டங்களில் நடந்திருப்பது புலனாகும். இந்நாட்டு மக்கள் பல சக ஐரோப்பிய நாட்டு மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதும், அத்தாக்குதல்களை எதிர்த்துப் போரிட்டு அவர்கள் தம்மை விடுவித்ததும் புலப்படும்.

இங்கிலாந்து நாட்டு மக்கள் ஒரு தனிப்பட்ட இனமாக தம்மை இனங்காட்டிக் கொண்டவர்களல்ல. அவர்களின் சரித்திரப் பின்னணிகளின்படி பல சமயங்களில் இந்நாட்டை ஊடுருவிய பல கலாச்சாரங்களின் கலப்பாகவே இன்றைய இங்கிலாந்து மக்கள் காணப்படுகிறார்கள். இவர்களுக்கென இருக்கும் தனிப்பட்ட அடையாளங்கள் ஆங்கிலம் எனும் மொழியும், “சர்ச் ஆஃப் இங்கிலாந்து” ( Church of England ) எனும் ரோமன் கத்தோலிக்க சமயத்தில் இருந்து பிரிந்த மதமுமேயாகும்.

இத்தகைய வரலாற்றுத் திருப்புமுனைகளில் ஒன்றான “ஸ்டாம்ஃபோர்டு பிரிட்ஜ் யுத்தம்” (Battle of Stamford Bridge) என்றழைக்கப்படும் ஒரு முக்கியத்துவமான போரைக் குறிப்பதாகும். இந்த ஸ்டாம்ஃபோர்டு பிரிட்ஜ் யுத்தம் என்பது என்ன ?

2004_Ente_BritHer02

1066ம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அரசரான எட்வர்டு என்பவரின் மரணத்தை அடுத்து King Harold Godwinson என்பவர் அரசரானார். இவரின் ஆட்சி பொறுப்பை முற்றாக வெறுத்தவர் இவரது தம்பி Toswig Godwins என்பவராவார். அச்சமயம் இங்கிலாந்தின் மீது “வைக்கிங்ஸ்” என்றழைக்கப்படும் நோர்வே மன்னர்கள் படையெடுத்து நாட்டைக் கைப்பற்ற முனைந்தார்கள்.

அவர்களில் ஒருவர் Harald Sigurdsson ஆவார். இவரது 7000 முதல் 9000 வரையிலான படையினரும், 1066ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆங்கிலக் கரையை அடைந்தார். ஏற்கனவே தனது அண்ணன் மன்னரானதால் வெறுப்படைந்திருந்த Toswig Godwins இவருடன் இணைந்து தனது சகோதரனுக்கெதிராக யுத்தம் புரிய முனைந்தார்.

செப்டெம்பர் 1066ம் ஆண்டு சில வட இங்கிலாந்து நகரங்களை வென்ற இப்படையினர் “யார்க்” (York) என்னும் இடத்தைச் சிலகாலம் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அச்சமயம் இங்கிலாந்து மன்னரான Haraold Godwins, இங்கிலாந்தின் தென்பகுதியில் இங்கிலாந்தை ஃபிரான்சு முற்றுகையிடப் போகிறது எனும் எதிர்பார்ப்பில் படைகளுடன் முகாமிட்டிருந்தார்.

நோர்வே மன்னர் தனது தம்பியுடன் நாட்டினுள் ஊடுருவி யார்க் நகரம் வரை வந்ததை அறிந்து, தனது படைகளுடன் இந்த யார்க் நகரம் நோக்கி விரைந்தார். லண்டனிலிருந்து 185 மைல்களை அந்நாளைய குதிரை வண்டிகளில் நான்கு நாட்களில் கடந்து எதிரிப்படைகள் எதிர்பாராத சமயத்தில் அவர்களை எதிர் கொண்டார். யார்க் நகரத்திற்குச் சற்று வெளியே அமைந்திருந்த ஸ்டாம்ஃபோர்டு பிரிட்ஜ் எனும் இடத்தில் இவர்களின் யுத்தம் நிகழ்ந்தது.

இது நிகழ்ந்த திகதி 1066ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ம் திகதி. பல வியூகங்களை வகுத்த நோர்வே படையினரை இங்கிலாந்து மன்னரின் படைகள் தோற்கடித்தன. படையெடுத்து வந்த நோர்வே மன்னர் Harald காற்றுக்குழாயைத் தாக்கிய அம்பினால் கொல்லப்பட்டதாகவும், இங்கிலாந்து மன்னரின் தம்பி Toswig வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

     BSB1BSB2BSB3

பெரும்பான்மையான நார்வே படையினர் கொல்லப்பட்டனர். எஞ்சியிருந்த சிலரையும், காயப்பட்டோரையும் இங்கிலாந்து மன்னர் சமாதான உடன்படிக்கையில் திரும்பிச் செல்ல அனுமதித்தார். அப்படி அனுமதிக்கப்பட்டவர்களில் படையெடுத்து வந்த நார்வே மன்னரின் மைந்தனும் அடங்கினார். இனி ஒருபோதும் இங்கிலாந்தின் மீது படையெடுப்பதில்லை எனும் நிபந்தனையின் பேரிலேயே அவர்கள் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். நோர்வே படையினரின் அழிவு பாரதுரமானது. 300 கப்பல்களில் படையெடுத்து வந்த அவர்களில் திரும்பிச் செல்வோரைக் கொண்டு செல்ல 24 கப்பல்களே தேவைப்பட்டது என்பதே அவர்களது அழிவுக்கு எடுத்துக் காட்டாகிறது.

இத்தகைய சரித்திர திருப்புமுனைகளே இன்றைய இங்கிலாந்தின் வடிவமைப்புக்குக் காரணம் என்பதும், இத்தகைய சரித்திர நிகழ்வுகளுக்கு இங்கிலாந்து கொடுக்கும் முக்கியத்துவம் நாம் வாழும் நாடுகளின் பெருமையை உணர்ந்து அவற்றின் தனித்தன்மையைப் பாதுகாக்க, வாழும் அனைவரும் தமது ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்பதுமே எனது இத்தகைய மடலுக்குக் காரணம்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

( நன்றி – விக்கிப்பீடியா )

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *