சு.கோதண்டராமன்

சப்த விடங்கர்கள்

vallavan-kanavu

நீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றைத்
தாரானே தாமரை மேலயன் தான்றொழுஞ்
சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில்

ஊரானே யென்பவர் ஊனமி லாதாரே

-சம்பந்தர்

உலகிலேயே முதல் முறையாகத் தெய்வத்தை ஆடும் கோலத்தில் கற்பனை செய்த பெருமைக்கு உரியவர் காரைக்கால் அம்மையார். பிரபஞ்சத்தைப் படைத்துக் காத்து அழிக்கும் செயலை அம்மையார் கருத்தில் உருவான ஆடும் கோலமே நன்றாகக் காட்டுவதாகச் சோழ அரசர் செங்கணான் கருதினார். அருவுருவத்தைக் காட்டும் லிங்கம் அன்றியும் இறைவனின் ஆடும் திருக்கோலத்தையும் சிலையாக வடித்து மக்கள் வழிபடும் வகையில் எல்லாக் கோயில்களிலும் அமைக்க வேண்டும் என விரும்பினார். என்றுமுள ஈசற்கு எல்லாமே என்றும் நிலைக்கக் கூடியதாக அமைய வேண்டும் என்ற அவரது முன்னோரின் கருத்தையே அவரும் கொண்டிருந்தார். சோழநாட்டில் கருங்கல்லும் கிடைப்பதில்லை. அதைச் செதுக்கத் தெரிந்தாரும் இல்லை. சுதைச் சிற்பம் செய்பவர்கள்தான் இருந்தார்கள். சுதை விக்கிரகங்கள் சில ஆண்டுகள் கழித்துக் காரை உதிரத் தொடங்கும். எனவே சுதையில் உருவம் அமைக்க அவருக்கு விருப்பமில்லை.

அப்பொழுது குடந்தை நகரில் பித்தளைப் பாத்திரம் செய்யும் தொழில் வளர்ந்து இருந்தது. அதை அடுத்த நாச்சியார்கோவிலில் வெண்கலப் பாத்திரங்கள் செய்யப்பட்டன. அந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இறைவனின் உருவத்தை உலோகத்தில் செய்ய முடியும் என்று அவருக்குத் தோன்றியது. உலோகத்தில் ஆடற்பெருமானின் கோலத்தை வடிப்பவருக்கு ஆயிரம் பொன் தருவதாக நாட்டு மக்களுக்குப் பறையறைந்து அறிவிக்குமாறு ஊர்த்தலைவர்களுக்கு உத்திரவிட்டார் அவர். அத்துடன் உலோகத் தொழில் கற்றுக் கொள்ள முன்வருபவர்களுக்கும் மானியங்கள் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சோழநாட்டின் தில்லைக்குத் தென்மேற்கில் காத தூரத்தில் மண்ணூர் என்று ஒரு சிறு கிராமம். அங்கு மட்பாண்டம் செய்யும் குலத்தில் தோன்றிய ஆதன் என்ற ஒரு இளைஞன் இருந்தான். அவன் தன் தந்தையிடம் மட்பாண்டம் செய்யும் தொழிலையும் ஐயனார் கோயில்களுக்குத் தேவையான யானை, குதிரை, வீரர்கள் பொம்மைகளைச் செய்யும் தொழிலையும் திறம்படக் கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தான். விண்ணகரங்களில் சுதை விக்கிரகங்கள் செய்யவும் கற்றுக்கொண்டிருந்தான்.

ஒரு நாள் அந்த ஊர்த்தலைவர் அவனைக் கூப்பிட்டனுப்பினார். அவனைக் கண்டதும், “தில்லைக் கோட்டத் தலைவரிடமிருந்து ஓலை வந்திருக்கிறது. பொம்மை செய்கிறவர்களுக்கு உலோகத் தொழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறாராம் அரசர். அதைக் கற்றுக் கொண்டு உலோகத்தில் பொம்மை செய்தால் பரிசு உண்டாம். கற்றுக் கொள்கிறாயா?” என்றார்.

“சரிங்க. எங்கேங்க போகணும்?”

“நாச்சியார் கோவிலில் ஆதித்த ஆசாரி என்பவர் கிட்டே கற்றுக் கொள்ள வேண்டும். இன்னொரு விஷயம் இருக்கிறது, கேள். காரைக்கால் அம்மையார் பாட்டைப் படித்து அதில் சொன்னபடி கடவுளுடைய உருவத்தைச் செய்து கொடுத்தால் ஆயிரம் பொன் பரிசு என்று எழுதி இருக்கிறது.  உனக்கு அந்தப் பரிசு கிடைக்கும் என்று தோன்றுகிறது. உன்னால் இந்த ஊருக்கும் பெருமை ஏற்படட்டும்.”

“அம்மையார் பாட்டு யாரிடத்தில் கிடைக்கும்?”

“தில்லையில் சித்ரகூடம் விண்ணகரில் புதிதாக லிங்கம் என்று ஒன்று வைத்துப் பூசை செய்கிறார்களாம். அங்கே ஒருவர் அம்மையார் பாட்டைத் தினமும் படிக்கிறார் என்று கேள்விப்பட்டேன். முதலில் அங்கே போய்ப்ப் பார்.”

ஆதன் புறப்பட்டு முதலில் தில்லையை அடைந்தான். அங்கே இருந்த அந்தணர் வீடுகளில் போய் விசாரித்தான். மகேச சர்மா என்ற இளைஞன் சிவலிங்க சன்னிதியில் அம்மையார் பாடல்களைப் படித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்தான். மகேசனிடம் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

மகேசன் அம்மையார் பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ள இறைவனின் உருவத்தை விளக்கினான். உடனே ஆதன் மண் தரையில் விரலால் படம் வரைந்து காட்டினான். பிறகு அதன் மேல் களிமண் கொண்டு முப்பரிமாண உருவத்தைச் செய்து காண்பித்தான். மிக அற்புதமாக அமைந்திருந்தது அந்தச் சிற்பம். “வெற்றி உனக்கே என்று என் உள் மனது சொல்கிறது. போய்த் தொழிலைக் கற்றுக் கொண்டு வா. நான் உனக்கு எல்லா உதவிகளும் செய்வேன்” என்று உறுதியளித்தான் மகேசன்.

அங்கிருந்து புறப்பட்டு இரண்டு நாள் நடந்து நாச்சியார்கோவிலில் ஆதித்த ஆசாரியின் தொழில் கூடத்தை அடைந்தான். அங்கு சோழநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வேறு ஏழு பேர் வந்திருந்தனர். எல்லாருமே இவனைப் போல் இளைஞர்கள். ஆசாரி வெண்கலப் பாத்திரம் செய்பவர். அவர் இந்த இளைஞர்களுக்கு அரசர் ஆணைப்படி தொழில் கற்றுக் கொடுத்தார்.

வெண்கலப் பாத்திரம் செய்ய வேண்டுமென்றால் செய்ய நினைத்த பாத்திரத்தைப் போல் மெழுகினால் ஒரு அச்சு செய்துகொள்வர். அதன் உள்ளும் புறமும் களிமண்ணால் கனமான பூச்சு இடுவர். அது காய்ந்ததும் அதிலுள்ள ஒரு ஓட்டை வழியாக மெழுகை உருக்கி எடுத்துவிடுவர். பின்னர் அந்த ஓட்டை வழியாக உலோகக் கலவையைக் காய்ச்சி ஊற்றுவர். இடைவெளியில் உலோகம் பரவி உறைந்து விட்டபின் களிமண்ணை உடைத்து எடுத்து விடுவர்.

ஆதித்த ஆசாரி தெளிவாகக் கூறிவிட்டார். “பாத்திரம் செய்வது வேறு, உலோகத்தில் பொம்மை செய்வது வேறு. பாத்திரங்கள் எல்லாம் ஒரு போக்கான வளைவை உடையவை. உருவங்கள் பல வளைவுகள், நெளிவுகள், சுளிவுகள் பல கோணங்களில் உள்ளவை. உலோகத்தை உருக்குவது வார்ப்பது ஆகிய வேலைகள்தான் நான் உங்களுக்குக் கற்றுத் தர முடியும். மற்றவை நீங்களாகத்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.”

இளைஞர்கள் ஒரு மாதத்தில் பாத்திரத் தொழில் கற்றுக் கொண்டனர். பல வளைவுகளை உடைய பொம்மை உருவத்திற்கு ஏற்ற வழி எது என்று யோசிக்கத் தொடங்கினர். தேன் மெழுகினால் பொம்மை செய்து அதன் மீது மண்ணால் மெழுகிவிட்டால் மண் அச்சின் உள்பகுதி அந்தப் பொம்மையின் வடிவத்தை வளைவு நெளிவுகளுடன் காட்டும். மெழுகை உருக்கி வெளியில் எடுத்து விட்டால் அவர்களுக்குத் தேவையான அச்சு கிடைத்துவிடும் என்று அறிந்தனர். ஆதித்த ஆசாரியின் வழிகாட்டுதலில் அவர்கள் இதைச் செயல்படுத்தினர். ஒரு பெண் கையில் விளக்கு வைத்திருப்பது போல மெழுகுப் பொம்மை செய்து அதிலிருந்து ஒரு வெண்கல உருவத்தை அவர்கள் வார்த்து எடுத்த போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. ஆயிரம் பொன் பரிசு பெறுவதில் முதல் படியைக் கடந்து விட்டோம் என நம்பினர். இந்த உருவத்தை அந்த ஊரின் பெயரால் நாச்சியார் விளக்கு என அழைத்தனர்.

தமிழ்நாட்டின் முதல் உலோக பொம்மையான அதை ஆசாரியும் அவரது எட்டு சீடர்களும் பழையாறைக்கு எடுத்துச் சென்றனர். அரசர் இதைப் பார்த்து மகிழ்ந்தார். எல்லோருக்கும் பரிசு கொடுத்துப் பாராட்டினார். அம்மையார் இறைவனைப் ‘பொன்னுரு’ ‘பொன்வரையே போல்வான்’, என்று வர்ணிப்பதால் இந்த வடிவத்தைப் பொன்னால் செய்தால் என்ன என்று தோன்றியது. அரசவைப் பொற்கொல்லரைக் கூப்பிட்டுக் கேட்டார். அவர், “வெண்கலத்திற்குப் பயன்படுத்தும் தாமிரம், துத்தநாகம், ஈயம் இவற்றோடு வெள்ளி, பொன் இவற்றையும் கலந்தால் உருவம் பொன் நிறமாக அமையும். முழுப் பொன்னால் செய்வதை விட இது உறுதியாகவும் இருக்கும்” என்று கூறினார்.

மாணவர்கள் தொழிலை நன்றாகக் கற்றுக் கொண்டுவிட்டனர். இனி அவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருவரும் தனியே முயற்சி செய்து ஆயிரம் பொன் பரிசைத் தானே அடைய வேண்டும் என விரும்பினர். தங்கள் தங்கள் ஊருக்குக் கிளம்பினர். அரசர் அவர்களுக்குத் தேவையான உலோகக் கட்டிகள், மெழுகு முதலான எல்லாப் பொருட்களையும் கொடுக்கச் செய்தார்.

அந்த எட்டுப் பேரில் திருக்காறாயில் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞன் இருந்தான். அவன் ஐந்து உலோகக் கலவையைப் பயன்படுத்தி அழகிய விக்கிரகம் ஒன்று செய்தான். ஆனாலும் ஒரு பெருங்குறை இருந்தது. ஆடற் கோலத்தைக் காட்ட வேண்டுமென்றால் ஒரு காலை மேலே தூக்கவேண்டும். இந்த இளைஞன் செய்த இறைவனின் வடிவத்தில் இரண்டு கால்களும் சேர்ந்து நின்ற நிலையில்தான் வடிக்க முடிந்தது. ஆரூர், நாகை, நள்ளாறு, மறைக்காடு, வாய்மூர், கோளிலி ஆகிய ஊர்களிலிருந்து வந்த மாணவர்களும் அதே போலத் தனித்தனியே முயன்றனர். எல்லோருக்கும் நின்ற கோலம்தான் செய்ய முடிந்ததே தவிர அரசரின் விருப்பப்படி ஆடும் கோலத்தைச் சிலையில் வடிக்க முடியவில்லை. அவற்றில் நடனத்தைக் கற்பனைதான் செய்து கொள்ள வேண்டியிருந்தது. அவற்றைப் பார்த்த அரசர் அந்தச் சிலைகளை அந்தந்த ஊர்க் கோயிலில் வைத்துப் பூசிக்கச் செய்தார். உளி கொண்டு செதுக்காமல் செய்யப்பட்டதால் அந்த உருவங்கள் விடங்க மூர்த்திகள் எனப்பட்டன. திருக்காறாயில் மூர்த்தி ஆதி விடங்கர் எனப்பட்டது.

மாற்று வழிகளை யோசிக்குமாறு இளைஞர்களை அரசர் ஊக்குவித்தார்.

தொடரும்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க