அரசமரத்தடியில் ஆண்டவன் தந்த பாடம்

0

 

க. பாலசுப்ரமணியன்

images

அரச மரத்தடியில் ஆடாமல்
அசையாமல் ஓர் உருவம் !
போவோர் வருவோரைப்
பார்த்தபடி இருக்கும்! (அரச..)

குட்டிக் குட்டி மண்டையை
குறைகள் பலவும் சொன்னாலும்
கோணங்கி போல் குனிந்து நிமிர்ந்து
கைகூப்பிக் கூட வரச் சொன்னாலும் .. (அரச..)

கேள்விக்குப் பதில் கேட்டால்
ஆனைபோல் இருக்கு மெந்தன்
மேனியைப் பார்த்துச் செல்லேனென
மேனியசைக்காமல் பதில் சொல்லும் … ( அரச..)

பெரிய தலை சொன்னது
பாரில் கற்க நிறைய உள்ளது :
பாட்டி அவ்வை காலம் தொட்டு
படிக்க நிறைய உள்ளது … !! ( அரச)

நீண்ட காது சொன்னது
கேள்வி ஞானம் நல்லது ,
நீண்ட காது வழியாய்
ஞானப் பேழையை யிறக்கு !! (அரச,,)

வளைந்து கட்டும் தும்பிக்கை
வாழ்க்கை தரும் நம்பிக்கை
மரங்கள் பல அசைத்தாலும்
குழந்தை போல வாழும் ! (அரச…)

பெரிய தொந்தி பார்த்தாயோ?
நல்லது கெட்டது உள்ளேதள்ளி
நாளும் ஜீரணம் பண்ணும்
இனிப்பும் கசப்பும் ஓரிடம் செல்லும் (அரச..)

சின்ன வாகனம் போதும்
சிறுகக் கட்டி பெருக வாழ,
சிந்தையை நிறுத்தி பார்த்தாலே
சிறிதுகூடப் பெரிதாய்த் தோன்றும்! (அரச..)

கையினுள்ளே ஒரு கொழுக்கட்டை
கையளவாய் சாப்பிடச் சொல்லும்
காசினியில் பசியால் வாடும்
கைகளில் ஒன்றை வைக்கச் சொல்லும் ! (அரச..)

நீரும் காற்றும் நீல வானும்
இயற்கை தரும் இன்பம் !
நித்தம் இதனுடன் வாழ்ந்தால்
அரசமரத்தடியும் ஆலயமாகும் ! (அரச..)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *