இலக்கியம்கவிதைகள்

நம்பிக்கை வாய்த்தும்பிக் கையோன்!

நம்பிக்கை வாய்த்தும்பிக் கையோன்!…(வெண் செந்துறை)

 

நாகினி

 

உந்தி பெருத்து உலகை அளக்கவே
சந்தி நடுவிலுறை சாந்தவேழ வார்ப்போனே!

பந்தி நடுவிலும் பாச விருந்தாக
முந்தி வருகின்ற முத்தமிழ் ஐங்கரனே!

மோதகம் கையில் மொழியும் வாயிலிட்டு
போதகம் செய்திடும் போற்றி அகவலோனே!

பித்தம் தலையேறும் பிள்ளை கலங்கிடாது
சித்தம் வழிநடத்தும் சித்தி விநாயகனே!

தொடங்கும் செயலின் தொடக்கமாய்த் தொடர்ந்து
படரும் அருளெனும் பராசக்தி மைந்தனே!

முத்தமிழின் சாறாகி மூஞ்சுறு வாகனனாய்
எத்திக்கும் வீற்றுள்ள ஏகம்பன் சீராளனே!

தடைகள் இலாவாழ்வு தாரும்
சடைகள் முடிகொண்ட சங்கரன் ஞானமகனே!

பிணக்கு மறையாத பித்தம் தலைக்கேறா
இணக்கு தரும்நல் இளந்தந்தச் சித்தியோனே!

பெற்றோரே உலகெனப் பேசி வலம்வந்த
வற்றாத நம்பிக்கை வாய்த்தும்பிக் கையோனே!

யாண்டும் துயரறுக்க யாக்கைநல் முத்தியாக
வேண்டும் வரந்தரும் வேழ முகத்தோனே!

வினைதீர்த் தெமக்குநேர் வீடுபேறு தாருமய்யா
நினைக்கும் சிந்தை நிறைந்தஉல கானவனே!

… நாகினி

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comment here