எஸ். வி. நாராயணன்.

S.V. Narayananஎழுபதுகளின் பிற்பகுதியிலே புதுச்சேரியில் வானொலி நிருபராக நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது, இட்லிக்கடை வைத்துப் பிழைத்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி, வங்கிக்கடன் பெற்று தம்முடைய தொழிலை அபிவிருத்தி செய்ய முனைந்தது பற்றிய ஒரு செய்தியை வானொலி ஒலிபரப்பியது. இட்லிக்கடை பற்றி கூட செய்தியில் வருகிறதே என ஓரிருவர் கிண்டலாகக் கேட்டதுண்டு. ஏழை, எளியோருக்கு உதவும் வகையில் வங்கி சேவைகள் மாற்றமடைந்து வருவதை மக்களுக்குத் தெரிவிப்பதற்காகவே அந்த செய்தி வெளியிடப்பட்டது என குறை கூறியவர்களுக்கு பதிலளித்தோம். முதலில் கேலி செய்தவர்கள், பின்னர் அத்தகைய செய்திகள் வெளியிடுவதன் அவசியத்தைப் புரிந்துகொண்டனர்.

மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் புயலில் சிக்கி மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்ட தகவலை அவரது வாய் மொழியாகவே ஒலிபரப்பியபோது, அந்தச் செய்தி பல நெஞ்சங்களை உருக்கியது. அதேபோல, புதுவை ஜிப்மர் மருத்துவமனையில், அன்றைய கால கட்டத்தில் கடினம் என்று கருதப்பட்ட கண் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது பற்றிய செய்தி ஒலிபரப்பானது. பல நாட்களுக்குப் பிறகும் அந்தச் செய்தியை பலர் நினைவுகூர்ந்தனர்.

புதுவையில் கம்பன் விழா ஒருமுக்கியமான நிகழ்ச்சி. அந்த விழா பற்றிய தகவல்கள் மாநில செய்தியில் மட்டுமன்றி தில்லியிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ் செய்தியிலும் இடம் பெற்றபோது புதுவை தமிழன்பர்கள் பலர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த எளிய உதாரணங்களை இங்கு குறிப்பிடுவதன் நோக்கம், செய்தி என்பது அரசியல்வாதிகளைச் சுற்றி நடப்பது மட்டுமல்ல என்பதைச் சுட்டிக்காட்டவே. அரசியல்வாதிகள் தும்மினாலும், தூங்கினாலும் அவை முதற்பக்க செய்தியாகிவிடுகின்றன. திரையுலகத் தேவதைகளின் கிசுசிசுக்கள் ‘கட்டம்’ போட்டு வெளியிடப்படவேண்டியவை ஆயிற்றே. கொள்ளை, கொலை, கற்பழிப்பு இவை பற்றிய செய்திகள் இல்லாவிட்டால் பத்திரிகைகளின் விற்பனை சரிந்துவிடுமே. இத்தகைய ‘பெரிய பெரிய’ விஷயங்கள் இருக்கும்போது, ‘சின்ன சின்ன’ விஷயங்களை கவனிப்பவர் யார்? தவிர, ‘பெரிய’ விஷயங்களைத் தொகுத்தளிப்பது அவ்வளவு சிரமமான காரியம் அல்ல. அரசியல்வாதிகள் பேட்டி அளிப்பார்கள். பத்திரிகையில் போடுவதற்கு ஏற்றவாறு அறிக்கைகள் தருவார்கள். நிருபர்களுக்குத் தக்க வசதிகளையும் செய்து தருவார்கள். பின்னர் என்ன? அந்தச் செய்திகள் பத்தி பத்தியாக வெளிவருவதில் ஆச்சரியம் என்ன. காவல் துறை அதிகாரிகளை அணுகினால் கொலை, கொள்ளை போன்ற சமுதாய அவலங்கள் பற்றிய செய்திகள் கிடைத்துவிடும். விலாவாரியாகப் போட்டுவிடலாம். ஆனால், எங்கோ ஒரு மூலையில் சப்தமின்றி செயல்பட்டு, சாதனை புரிந்து வரும் சாதாரண மக்களைப் பற்றிய தகவல்களைத் தேடிப்பிடித்துத்தான் போடவேண்டியிருக்கும். அதே போல மக்களுக்குத் தேவையான, அவர்களுக்குப் பயன்படக்கூடிய செய்திகளை திரட்டிட மிகுந்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதற்காக கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.

செய்திகள் திரட்டுவோருக்கு மற்றொரு முக்கிய பொறுப்பும் உண்டு. மக்களின் மேம்பாட்டுக்காக அரசு கோடி கோடியாக ஆண்டுதோறும் செலவழிக்கிறது. ஆனால், இதில் 15 சதவிகிதம் கூட மக்களைச் சென்றடைவதில்லை என்று மூத்த அரசியல் தலைவர்களே கூறியிருக்கிறார்கள். அரசு திட்டங்கள் பற்றி தொடர்ச்சியானதொரு கணிப்பு இருக்கவேண்டாமா? சட்டமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையோடு, ஜனநாயகத்தின் முக்கியமான நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத்துறை இந்தப் பொறுப்பை ஏற்று, அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டவேண்டாமா? அரசு திட்டங்கள் விஷயத்தில் தற்போதைய அணுமுறையை எப்படி இருக்கிறது தெரியுமா? பத்திரிகைகள், ரேடியோ, டெலிவிஷன் போன்ற வெகுஜன தகவல் தொடர்பு அமைப்புகள் பெரும்பாலும் அரசு தரும் தகவல்களை வெளியிடுவதோடு தங்களுடைய பொறுப்பு தீர்ந்துவிட்டதாக நினைக்கின்றன. திட்ட நிறைவேற்றம் பற்றி, நடுநிலையில் நின்று, அவ்வப்போது தக்க செய்திகளை அளிக்க அவை அதிகமாக முன்வருவதில்லை. அரசின் திட்டங்களை விமர்சனம் செய்தால் அரசின் விளம்பர ஆதரவு, மற்றும் கிடைக்கக்கூடிய இதர வசதிகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் ஓரளவு இருக்கலாம். மேலும், அத்தகைய கணிப்புகளை மேற்கொள்ள போதிய வசதியின்மை ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், பொதுவாக ஒருவித அக்கறையின்மை அல்லது மெத்தனம் காரணமாகவே இத்தகைய முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதில்லை என்றே கூறவேண்டும்.

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பு தங்களுக்கு உண்டு என்பதை பத்திரிகை உலகம் உணர்ந்தால் நமது ஜனநாயகம் வலுப்பெறும் என்பதில் ஐயமில்லை. உதாரணமாக, பல ‘இலவச’ திட்டங்களை இன்று காண்கிறோம். இந்த திட்டங்கள் நல்லதா? இவற்றால் மக்களுக்குப் பயன்கிட்டுகிறதா? குளறுபடிகள் ஏதுமின்றி இத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா? இதுபற்றி நடுநிலையிலான ஒரு கணிப்பை பத்திரிகைள் தருவது எவ்வளவு பொருத்தமாக இருக்கும். அரசுப் பணிகள் மட்டுமின்றி, ஒரு சமூகத்தின் செயல்பாடுகளை ஆக்கபூர்வமாக அலசும் தன்மையையும் பத்திரிகைகள் வளர்த்துக் கொள்ளவேண்டும். கல்வியறிவு பெருகிவரும் இந்நாளிலும் பற்பல மூடநம்பிக்கைகள், அருவருக்கத்தக்க பழக்க வழக்கங்கள் இருந்து வருகின்றன. தலையில் தேங்காய் உடைத்தல், குழி மாற்றுத் திருவிழா, வழிபாடு என்றபெயரில் பிராணிகளை பலி கொடுக்கும் போக்கு இவையெல்லாம் இன்னமும் தொடருகின்றன. சாதிப் பிரச்சினைகள் ஓய்ந்தபாடில்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறையவில்லை. குழந்தைகளின் உரிமைகள், சில சமயம், பெற்றோர்களாலேயே பறிக்கப்படுகின்றன. இத்தகைய அவலங்கள் நீங்கினால்தான் ஒரு சமூகம் விரைவாக முன்னேற முடியும். மக்களிடையே விவேகம், பரஸ்பர நல்லுணர்வு, வளமான சிந்தனைகள் இவற்றை ஊக்குவிப்பதில் வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் ஓரளவாவது அக்கறை காட்டவேண்டாமா?

‘மீடியாவின்’ சக்திபற்றி எவரும் எடுத்துக் கூறவேண்டியதில்லை. கத்திமுனையைவிட பேனாவின் முனை வலிமைமிக்கது என்பதை அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், ‘மீடியா’ அமைப்புகள் தங்கள் வலிமையை சமுதாய முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துகின்றனவா என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது.

பத்திரிகைகள், டெலிவிஷன், ரேடியோ அனைத்தும் இப்போது விளம்பர வலையில் சிக்கியிருக்கின்றன. விளம்பரங்கள் தேவைதான். வணிகத் தகவல்கள், வேலை வாய்ப்பு குறிப்புகள், திருமண வாய்ப்புகள் போன்ற பல செய்திகள் விளம்பரங்கள் மூலம் கிடைக்கத்தான் செய்கின்றன. ஆனால், விளம்பரங்களின் ஆக்கிரமிப்பு இப்போது செய்திகளையே மூழ்கடித்துவிடும் போலிருக்கிறது. எந்த ஒரு டெலிவிஷன் சேனலிலும் செய்தி அரை மணி என்றால் அதில் பாதி நேரத்திற்குமேல் விளம்பரங்கள். ஷாம்பூ, மெதுபானங்கள், சிவப்பழகு கிரீம் போன்றவற்றிற்கான விளம்பரங்கள் திரும்பத் திரும்ப, அலுத்துப்போகும் அளவுக்கு வருகின்றன. செய்திகளிடையே விளம்பரம் என்ற நிலைமாறி விளம்பரங்களிடையே செய்தி என்ற மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

விளம்பரங்களைப்பற்றிக் குறிப்பிடுகையில் மற்றெhரு அம்சத்தையும் சொல்ல வேண்டியிருக்கிறது. புகைபிடித்தலும், புகையிலையை உபயோகித்தலும் உடல் நலத்திற்கு தீமை என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்து. புகையிலையின் தீங்குகள் பற்றி பத்திரிகைகள் தலையங்கங்கள் எழுதுகின்றன. நீண்ட கட்டுரைகளையும் வெளியிடுகின்றன. அதே நேரத்தில், கவர்ச்சிமிக்க சிகெரெட் விளம்பரங்களை பெரிய அளவில் வெளியிட பத்திரிகைகள் தயங்குவதில்லை. எந்தவிதத்தில் இது நியாயம் எனத் தெரியவில்லை. ‘படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்’ என்பதுபோல இருக்கிறது இது. மதுபான விளம்பரங்கள் கூடாது என அரசு வலியுறுத்துகிறது. ஆனால், அத்தகைய விளம்பரங்கள் ஏதாவது ஒருவகையில் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

புகைப்படங்களின் உபயோகம் பற்றியும் இங்கு கூறவேண்டும். ஒரு பக்கம் எழுதினால் கூடத்தெரிவிக்க முடியாத ஒரு கருத்தை நல்ல படம் ஒன்று தெளிவாக்கிவிடும் என்பார்கள். ஆனால், இப்போதெல்லாம், செய்திக்காக படம் போடுவதைவிட, வெறும் கவர்ச்சிக்காகவோ, இடத்தை நிரப்புவதற்காகவோ புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் ஒட்டைச்சிவிங்கி குட்டி போட்ட செய்தியும், சீனாவில் மாடு ஒன்று தெருவில் மிரண்டு ஓடிய செய்தியும் டெலிவிஷனில் ஒளிபரப்பப்படுகிறது என்றால் அதற்குக் காரணம் அந்நிய ஏஜன்சிகள் மூலம் அந்தப்படம் கிடைப்பதுதான். படம் கிடைக்கிறது. தேவையா என உரசிப்பார்க்காமல் போட்டு விடுகிறார்கள். இடத்தை நிரப்பி விடுகிறார்கள்.

இன்று மீடியா ஏகமாக வளர்ந்திருக்கிறது. எத்தனை பத்திரிகைகள். எவ்வளவு டெலிவிஷன் சேனல்கள். ரேடியோ அமைப்புகளும் பெருக ஆரம்பித்து விட்டனவன்றோ. இந்த ‘மீடியா’ சக்தி, கவர்ச்சிக்கும், விளம்பரத்திற்கும் பலிபோகாமல் இருந்தால், மக்களுக்கு ஆக்கபூர்வமாக பணியாற்றிட முடியும். இல்லையெனில், பொதுத் தொண்டு ஆற்றவந்த அரசியல் வாதிகள் போல, ‘மீடியாவும்’ திசைமாறிச் சென்றுவிடும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *