நிர்மலா ராகவன்.

நல்லவனாக இரு

உனையறிந்தால்

 

நல்லவனாக இரு …

ஒரு மாணவன் என்னிடம் கேட்ட கேள்வி: `நல்லவனாக இரு! (BE GOOD) என்று எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால், நல்லவனாக இருப்பதென்றால் எப்படியென்று தெரியவில்லையே!’

விளக்கம்: எது நல்லது என்பது வீட்டுக்கு வீடு மாறுபடும்.

உதாரணம் 1: பிள்ளைச் செல்வத்தில் சிறந்து, ஆனால் பொருட்செல்வமின்றி வாடும் குடும்பத்தில் பெற்றோர் இருவரும் கடுமையாக உழைக்க வேண்டிய நிலை. அதனால், மூத்த குழந்தை வீட்டு வேலைகளைச் செய்வதுடன், தன் தம்பி தங்கைகளையும் பார்த்துக்கொண்டால், `நல்ல, பொறுப்பான பிள்ளை’.

இவன் பெரியவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு, அத்துமீறாமல் நடக்கிறான். சுயநலனைப்பற்றி நினைத்தும் பாராது, பிறருக்காக உழைக்கிறான். பள்ளியிலும் பிறருக்கு உதவுவானே தவிர, தான் முன்னுக்கு வரவேண்டும் என்ற வெறியோ, சுயநலமோ கிடையாது. இத்தகைய மாணவர்களால் நிறைய மதிப்பெண்கள் பெறமுடியாது. சிலர் அதைப் பெரிது பண்ணாமல் ஏற்பார்கள். வேறு சிலருக்குத் தம் பெற்றோர்மீது ஆத்திரம் எழும் — தம்மை இப்படி வளர்த்ததற்காக.

இப்படிப்பட்டவர்களில் ஒருவன் என்னைக் கேட்டான்: `நாங்கள் நிறைய மதிப்பெண்கள் வாங்குவதில்லை என்று ஆசிரியர்கள் எங்களைக் கேலி செய்கிறார்கள், திட்டுகிறார்கள். அதெப்படி மற்றவர்கள் நிறைய மார்க் வாங்குகிறார்கள், டீச்சர்?’

ஒரு முறை, நான் உடல்நிலை சரியில்லாதபோது அந்த வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தேன். ஏதோ எழுத்து வேலை கொடுத்தபோது, பலரும் அதைச் செய்யாது, உரக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். `டீச்சருக்குத்தான் குரல் கம்மி இருக்கிறதே! எப்படித் திட்ட முடியும்!’ என்ற மிதப்புடன். ஒரு மாணவன், அவர்களைவிட உரக்க, `ஹேய்! டீச்சருக்கே, பாவம், உடம்பு சரியாக இல்லை. நீங்கள் எல்லாம் சத்தம் போட்டு, அவர்களை இன்னும் கஷ்டப்படுத்துகிறீர்களே!’ என்று இரைந்தான். அதன்பின், வகுப்பில் அப்படி ஒரு நிசப்தம்! உரக்கப் பேசியவர்களின் தலை குனிந்தது.
(அதுவே `சிறந்த’ மாணவர்களின் வகுப்பில் ஆசிரியைகளுக்கு மைக்ரெய்ன் தலைவலியோ, காய்ச்சலோ, `பாடம் நடத்துங்கள்!’ என்று பிடிவாதம் பிடிப்பார்கள். அவர்களுக்கு மார்க்கு குறைந்துவிட்டால் என்ன செய்வது!)

இப்போது, நான்: வாழ்க்கையில் கல்வியும், பெரிய உத்தியோகமும் அனைத்துமில்லை. மனிதாபிமானம் என்று ஒன்று இருக்கிறது. அது உங்களிடம் நிறைந்திருக்கிறது. வருங்காலத்தில் உங்கள் குடும்பம் உங்களால் மகிழ்ச்சியாக விளங்கும்!

உதாரணம் 2: பணக்காரக் குடும்பத்தில் பிறந்த ஒரே பிள்ளையாக இருந்தால், தாய் கரிசனமாக, வயிறு கொள்ளாத அளவுக்கு உணவு போட்டு, எல்லாவற்றையும் அவன் சாப்பிட்டு முடித்தால், மகிழ்ந்து பாராட்டுகிறாள்: `நல்ல பிள்ளை!’

ஆனால், பார்ப்பவர்கள் `குண்டு!’ என்று கேலி செய்வதால் ஒடுங்கிப் போகிறான். பிறருடன் கலந்து பழகத் தெரியாது போகிறது. இப்படியெல்லாம் வித்தியாசமாக வளர்க்கப்பட்டுவிட்டு, பள்ளிக்கூடத்துக்குப் போனால், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு வேறு விதமாக இருக்கும். புத்தகங்களைக் கரைத்துக் குடித்த மாணவன் பாராட்டுக்கு உரியவனாகிறான். ஏனெனில், அவன் பரீட்சைகளில் நிறைய மதிப்பெண்கள் பெற்றால், நாளிதழ்களில் போடுவார்கள். அதனால் பள்ளியின் மதிப்பும், ஆசிரியர்களின் மதிப்பும் உயருமே!

கதை: நான் குறுகிய காலம் வேலை பார்த்த பள்ளியில் ஒரு மாணவி (16) வகுப்பறையில் மின்விசிறியைச் சுழலவிட்டால், உடனே எழுந்துபோய் நிறுத்தி விடுவாள். ஒரு முறை எங்கள் வகுப்பிற்கு வந்திருந்த மேலதிகாரிக்காக நான் மின்விசிறியைச் சுழலவிட்டபோதும் அப்படியே செய்தாள்.

நான் கேட்டபோது, `எனக்குப் பிடிக்காது!’ என்றாள் திமிராக. `பிடிக்காவிட்டால், இடத்தை மாற்றிக்கொள்!’ என்றேன். அவள் முகத்தில் ஒரே ஆத்திரம் — தன் விருப்பு வெறுப்பை மீறி ஒருவர் நடக்கலாமா என்பதுபோல். பிற ஆசிரியைகளிடம் விசாரித்தபோது, `அவள் பள்ளியிலேயே மிகச் சிறந்த மாணவி!’ என்றார்கள் சர்வ சாதாரணமாக. அதனால், எல்லாரும் அவளுக்கு விட்டுக்கொடுத்தே பழகிவிட்டார்கள்.

நான் தலைமை ஆசிரியையிடம், `உங்கள் பள்ளி சிறந்தது என்று பெயர் வாங்கியிருக்கலாம். ஆனால், குணமில்லாமல், கல்வி இருந்து பயனில்லை. யாராக இருந்தாலும், தவறு செய்தால் திருத்தியாக வேண்டும்,’ என்று சொன்னேன். தலைமை ஆசிரியை என்னை எதிர்க்கவில்லை. தானும் பிற ஆசிரியைகளும் செய்த தவற்றை ஒத்துக்கொண்டாள் போலும்! முகத்தில் ஆழ்ந்த வருத்தம் தெரிந்தது.

சில குழந்தைகள் சிறு வயதிலிருந்தே புகழப்பட்டு வளர்ந்திருப்பார்கள். தம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டு, எந்தக் காரியத்தையும் பிறரைவிட மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைத்துச் செயல்படுவார்கள். இவர்களால் தோல்வியை ஏற்கவே முடியாது. உடைந்து போய்விடுவார்கள்.
மாணவ மாணவிகளின் திறமைக்கு ஏற்ப, வெவ்வேறு வகுப்புகளில் பிரிக்கப்பட்டால், அத்தகைய வகுப்பில் நுழையும்போதே ஒரு வித பதற்றத்தை உணரமுடியும்.

நான் காரணத்தைக் கேட்டபோது, `எல்லா ஆசிரியர்களும், `உங்களைத்தான் இந்தப் பள்ளி பெரிதும் நம்பி இருக்கிறது. நீங்கள் எல்லா பாடங்களிலும் 80%-க்குமேல் வாங்கவேண்டும்! என்று சொல்கிறார்கள். பயமாயிருக்கிறது!’ என்றார்கள். இந்தமாதிரி எதிர்பார்ப்பே அவர்களை சராசரிக்குச் சற்றுக் குறைவாகவே தேர்ச்சி பெற வழிவகுக்கும். வேறு சிலர் அறிவாளிகளாக இருந்தாலும், எல்லாவற்றிலும் பிறரைத் தோற்கடிப்பதை விரும்ப மாட்டார்கள். போட்டி மனப்பான்மை வெறியாக மாறிவிடும்போது நட்பு கிடைப்பது துர்லபம் என்று அறிந்தவர்கள் இவர்கள்.

`எனக்கு வகுப்பில் முதல் மாணவியாக ஆகப் பிடிக்காது. தலையை நிமிர்த்திக்கொண்டு, எல்லாரையும் அலட்சியப் பார்வை பார்த்துக்கொண்டு! ஐயே!’ புத்திகூர்மையான மாணவ மாணவிகள் இப்படிக் கூறுவதைக் கேட்டுச் சிரித்திருக்கிறேன்.

பிறருக்கு உதவினால் நல்லவர் என்று பெயர் வாங்கலாம். ஆனால், நாம் உடலில் வலுவின்றி இருக்கும்போது, `பிறர் கேட்கிறாரே!’ என்று உதவ முற்படுவது அறிவீனம். நம்மை நன்றாகக் கவனித்துக்கொண்டால்தானே பிறரைக் கவனித்துக்கொள்ள சக்தி இருக்கும்! அது சுயநலம் என்று அர்த்தமில்லை.

`நீங்கள் யாரைப்போல் எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?’ என்று என்னை ஒரு பேட்டியில் கேட்டிருக்கிறார்கள். `என் போட்டி என்னுடன்தான்!’ என்று பதிலளித்தேன். போட்டி வெறி, அதனால் உண்டாகும் பதற்றம், பகைமை இவையெல்லாம் இன்றி நாம் வாழ்வில் முன்னேற முடியாதா, என்ன! இம்மாதிரியான எதிர்மறைக் குணங்களுக்கு ஆளாகும்போதுதான் நோய்வாய்ப்படுகிறோம்.

சமையலோ, எழுதுவதோ, சித்திரம் வரைதலோ, எதுவாக இருந்தாலும், எப்போதையும்விட நாம் இன்று செய்வது இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று உறுதி செய்து கொள்ளுங்கள். இது நம்முடனேயே போட்டி போடுவது. நாம் விரும்பியபடியே நடந்தால், நிறைவாக இருக்கும்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க