நான் அறிந்த சிலம்பு – 180
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக் காதை
கோவலன் கண்ணகியைப் பாராட்டி, ஒரு சிலம்பை எடுத்துச்சென்று விற்று வருவேன்’ என்று கூறி, விடைபெற்றுச் செல்லுதல்
கோவலன் கண்ணகியிடம் கூறினான்:
“பிறந்த குடியின் முதல் சுற்றமாகிய
தாய் தந்தையரையும்,
உடனிருந்து வேலை செய்யும் மகளிரையும்,
அடியார்கள் கூட்டத்தையும்,
நட்பாய் நிற்கும் தோழியரையும் விட்டு விலகி
நல்லோர் விரும்பும் நாணத்தையும் மடத்தையும்
பெருமை வாய்ந்த கற்பினையும் மட்டும் விரும்பி,
அவற்றை மட்டுமே துணையாகக் கொண்டு
இவ்விடத்து என்னுடன் வந்து
என் துன்பம் தீர்த்த
பொன் போன்றவளே!
கொடி போன்றவளே!
மலர்மாலை அணிந்தவளே!
நாணின் பாவையே!
நீள்நில விளக்கே!
கற்பின் கொழுந்தே!
பொற்பின் செல்வியே!
உன் சிறிய பாதங்களுக்கு
அணியாகும் சிலம்புகளுள் ஒன்றை
நான் சென்று விற்று வருவேன்;
நான் வரும் வரையில்
நீ இங்கு வருந்தாது இருப்பாயாக!”
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 81 – 99