-செண்பக ஜெகதீசன்

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவே லேந்த லினிது.   (திருக்குறள்-772: படைச்செருக்கு)

புதுக் கவிதையில்…

உருவில் சிறிய
வனத்து முயலை
வீழ்த்த எய்திடும் அம்பைவிட,
உருவில் பெரிய
யானைமேல்
எய்து தவறிய அம்பை
ஏந்துதலே சிறப்பு!

குறும்பாவில்…

படைச்செருக்கு இதுதான்,
முயலை வீழ்திடும் அம்பைவிட
யானையில் தவறியதே சிறந்தது!

மரபுக் கவிதையில்…

அம்புகள் எல்லாம் ஒன்றேதான்
–அழிக்கும் தொழிலைக் கொண்டதுதான்,
வம்பாய் வராத முயலினையே
–வீழ்த்தும் அம்பில் சிறப்பில்லை,

தெம்பாய் நடந்து வந்தேதான்
–திடமாய் எதிர்க்கும் யானையதன்
தும்பிக் கைவிழ எய்தவம்பு
–தவறி வீழினும் சிறப்பன்றோ!

லிமரைக்கூ…

வனத்து முயலை வீழ்த்திடும் அம்பு,
இதைவிட யானையில் தவறிய
அம்பதுவே சிறந்தது என்றுநீ நம்பு!

கிராமிய பாணியில்…

அம்பு அம்பு வில்லம்பு
ஆள அடிக்கும் வில்லம்பு,
எல்லா அம்பும் அம்பில்ல
எதயும் அடிச்சா செறப்பில்ல…

காட்டு மொசலு கீழவுழ
போட்ட அம்பு பெரிசில்ல,
காட்டு யான மேலவுட்டு
காயப் படுத்தாம உழுந்தாலும்
அந்த அம்பு ஒசத்திதான்
அதுக்குப் பெரும அதிகந்தான்…

அம்பு அம்பு வில்லம்பு
ஆள அடிக்கும் வில்லம்பு!

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க