-மேகலா இராமமூர்த்தி

இவ்வாரத்திற்குரிய படக்கவிதைப் போட்டியின் புகைப்படத்தை எடுத்துத் தந்திருக்கும் திருமிகு. திவ்யா பிள்ளைக்கும், இப்படத்தைப் போட்டிக்கு ஏற்றது எனத் தேர்வுசெய்து தந்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமையின் நன்றி.

raindrops

அடடா! வான்தரும் அமிழ்தத்தை அங்கையில் ஏந்துவதில் கிட்டும் இன்பமே அலாதிதான்! விசும்பின் துளி வீழாமல்போனால் பசும்புல்லின் தலையும் காண்பது அரிதன்றோ?

’மாமழை போற்றுதும்’ என்றார் இளங்கோவடிகள். ஆகவே மழையைப் போற்றிவிட்டுக் கவிமழையில் நனையப் புகுவோம்!

’வான்மழை பொழியத் தவறினாலும், வீட்டில் அன்னையவள் தன் பிள்ளைகள்மீது பொழியும் முத்தமழை தவறுவதே இல்லை!’ என்று வியக்கிறார் திரு. விக்னேஷ்.

வானம் இல்லை
மேகம் இல்லை
மழை பெய்வதற்கான 
எந்தஒரு அறிகுறியும் இல்லை
ஆனால்
வீட்டுக்குள்
நித்தம் மழை 
குழந்தைகளின் மேல்
அம்மா பொழியும்
முத்த மழை !

***

’கடல்நீர் யாங்கணும் நிறைந்திருந்தும் பயனென்ன? குடிநீர்ப் பஞ்சத்தால் அழிந்துபடும் ஊர்களுக்கோர் அளவில்லை’ என்ற தன் மனத்துயரை நயமான வார்த்தைகளில் வடித்துள்ளார் திரு. ஜெயபாரதன்.

கடல்நீர் பேரளவில்
முடங்கிக் கிடந்தாலும்,
குடிநீர் இல்லாத
ஊர்கள்
கோடி கோடி !
பசுஞ் சோலை இல்லா
பாலை வனங்கள் உண்டு. 
நேற்று
சிரித்தோடிய 
சிற்றாறு
இன்று
விதவை போல் 
வெந்நிற ஆடை உடுத்தி
மண் குவாரி
ஆனது !
நாளைய தினம்
அடுப்பில் கூழ் கிண்ட 
நீரில்லை !
குடிக்க நீரில்லை !
கிணறுகள்
தோண்டப் பூதங்கள்
எங்கே ?

***

கடந்துசென்ற மழையின் வண்ணத்தைத் தன் என்ண தூரிகையால் வரைந்து காட்டியிருக்கின்றார் திரு. கவிஜி.

தினம் ஒரு 
வண்ணத்தில் 
வந்த மழையில் 
நனைதல் பற்றிய 
குறியீட்டுக்குள் 
ஒரு சங்கேத பாஷையாக 
நிறமற்ற வெளியின் 
குடை கொண்டு 
தடுக்கும் 
உறுத்தலின் கைக்குள் 
தங்காமலே கடந்த பின்னும் 
மிச்சமிருக்கிறது 
கடந்த மழையின் 
வண்ணம்…

***

’உள்ளங்கையில் பட்டுத்தெறிக்கும் இந்தத் தண்ணீர்…தண்ணீரன்று! அஃது ஏழையின் கண்ணீர்!’ என்று அருமையாய் விளக்கமளிக்கின்றார் திரு. தமிழ்த்தேனீ.

உள்ளங்கையில் பட்டுத் தெறித்து
உள்ளொளி பெற்று ஒளியாய்ப்
பொறிந்து வெண்மை ஒளியாய்ச்
சிதறி எழுந்து நான் உள்ளே
வந்தால் முழுதும் நிரம்பிய
அணைக்கட்டும் உடைந்தே
தெறிக்கும் என்றே உணர்த்தும்
ஒரு துளி தண்ணீர் – அது
வெள்ளை உள்ளம் கொண்டே
வாழுகின்ற ஏழையின் கண்ணீர்
 
***

’ஓர் உயிரின் பயணத்தைக் கடந்தகாலம், சிதையில் கிடந்தகாலம், மழையாய்க் கொட்டிய கார்காலம், மனம் குதூகலித்த மகிழ்காலம்’ எனப் பல்வேறு நிலைகளில் பகுத்துக்காட்டியிருக்கிறார் திரு. விஎஸ்கே.

கட்டுக்கடங்காப் பருவத்தில் – உடல்
விட்டகலாத மோஹத்தில் – தினம்
மெட்டுக்கடங்காக் கவிதையைப்போல் -நானும்
சிட்டாய்த் திரிந்தேன் ஒருகாலம்.
[…]
விட்டுப்பறந்தது ஆவியிங்கு -உடல்
விட்டுப்பிரிந்தது உயிர்க்கோடு – நால்வர்
தொட்டுத்தூக்கிட சிதையினிலே -நானும்
சுட்டுக்கரிந்தேன் ஒருகாலம்.
[…]
சுட்டிடும்சூரிய ஒளியாலே – வெளி

எட்டிப்பறந்தேன் ஆவியாய் – மேகக்
கூட்டில்சேர்ந்து மழையெனவே – நானும்
கொட்டிக்குவிந்தேன் கார்காலம்.

நீட்டியகரத்தின் குவியலிலே – பல‌
சொட்டுத்திரளாய் வீழ்கையிலே – சற்று
எட்டிப்பார்த்தேன் யாரெனவே -நானென்
துணையினைக்கண்டேன் மகிழ்காலம்…

***

’பாசனத்திற்குச் சொட்டுத் தண்ணீர் கொடேன்!’ எனச் சண்டையிடும் அண்டை மாநிலங்களை வைத்துக்கொண்டு ’இந்தியா ஒரே தேசம்!’ என்று முழக்கமிடுவது நகைப்பிற்கிடமானது என்று சீறுகிறார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

காவேரியை வழி மறித்து
தமிழகத்தைத் தவிக்கவிட்டு
சட்டம் பேசி
சண்டித்தனம் செய்கிறது 
கர்நாடகம்
[…]
ஒவ்வொரு ஆண்டும்

துப்பாயத் தூவும் மழை
தப்பாது பெய்யுமாவென
தலை மேல் கைவைத்து
காத்திருக்கிறது தமிழகம்

மேட்டூர் வற்றும் பொழுதெல்லாம்
பாலைவனமாவது
பாசன வயல்கள் மட்டுமல்ல
ஏழைகளின் வாழ்வும்தான்!

உங்களுக்கு
உரிமையுள்ள நீரென்றாலும்
விரல்களைக் கழுவக் கூட
விட மாட்டோமென
அடம் பிடிக்கின்றன
அண்டை மாநிலங்கள்

இதில் 
இடக்கரடக்கலாய்
எங்கிருந்தோ ஒரு குரல்
இந்தியா ஒரே தேசம்
இந்தியர் அனைவரும் சகோதரர்

***

’மூன்றாம் உலகப்போர் நீருக்காகத்தான் நடைபெறப்போகிறது!’ என்ற சமூகவியல் அறிஞர்களின் கருத்தை வழிமொழிந்து, அந்நிலையைத் தடுக்க முயலவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது திரு. இளவல் ஹரிஹரனின் கவிதை.

 உள்ளங்கையில் தாங்கும்
ஒவ்வொரு துளிகளாய்
ஒவ்வொன்றும் உயிர்த் துளிகளாய்…
[…]
ஒரு துளி  குடிக்க,
ஒரு துளி குளிக்க,
ஒரு துளி களிக்க,
ஒரு துளி கழிக்க…..

அறிந்தும் அறியாமலும்…
தெரிந்தும் தெரியாமலும…
நீர்நிலைகளில்
மனிதர் செய்த பிழைகளை
மறந்தும் மன்னிக்க
இயற்கை தயாரில்லை…..

மூண்டெழும்
மூன்றாம் உலகப் போர்
வேண்டிடும் நீருக்காக
விளையும் உண்மையை
உணர்ந்தால் மனிதர்
 
உள்ளங்கைகளில் தான்
உயிர்த்துளிகளாய் மனிதர்
தாங்கிட வேண்டும் நன்றாய்…

***

குடிநீருக்காய்க் கையேந்தும் முதுமையைப் பாடுபொருளாக்கியுள்ளார் திரு. செண்பக ஜெகதீசன்.

அன்று மழையைக் கையிலேந்த
அம்மா தடுத்து விடவில்லை,
அன்பு பாசம் அனைத்தும்நிறை
அன்னை உருவம் அதுதானே,
இன்று முதுமைத் துணைதவிர
இல்லை எவரும் துணையெனவே,
என்றும் தன்கை தனக்குதவி
ஏந்திடும் என்கை குடிநீர்க்கே…!

***

மழையின் நல்வரவில் மனமகிழ்ந்து மணம்பரப்பும் அன்னை பூமியை நம் கண்முன் காட்சிப்படுத்துக்கின்றார் திருமிகு. தமிழ்முகில்.

…மழை அது – மண் சேர்ந்த மாத்திரத்தில்
பரவுமே உள்ளங்கவர் வாசம் !
வாசனையில் இலயித்து
நாசியும் உள்ளிழுக்குமே
புத்துணர்வு நிறை சுவாசம் !
உள்ளங்கைதனில் ஏந்தி மகிழ்ந்திட
உள்ளமும் புதிதாய் பிறந்து
குதூகலிக்குமே – சிறு கிள்ளையென !
மழைதனை புறக்கணிக்காது
வரவேற்போம் மழையை
மண் நோக்கி ! மழையின் வரவில்
மகிழ்ந்து மணம் பரப்பட்டும்
அன்னை பூமி !

***

’அடுக்ககவாசிகளின் அசுரப்பசிக்கு இரையானது இயற்கை! உணவுப்பொருள் பங்கீட்டுக்கு ரேஷன்கடை வாயிலில் நிற்பதுபோல் குடிநீருக்கும் காத்துநிற்கும் அவலநிலை வாய்த்துவிடுமோ?’ எனும் தன் மனக்குமுறலைக் கனல்கக்கும் கவிதையில் பதியவைத்திருக்கிறார் திருமிகு. லட்சுமி.

….மரம் நட மறந்த
பூகம்ப வருகை விரும்பி
அடுக்ககவாசிகளின்
இயந்திரத் தேடலின்
அசுரப் பசியில்
தொலைந்து போன
சுவைநீர்
[…]
உப்பு நீரால் சூழப்பட்டு
கண்ணீர்க் கடலில்
வாழும் மதுக்குடிசைவாசிகளின்
தொலைந்து போன
சிரிப்பைத் தேடி
கூற்றுவனாய்
அமில மதுத் தண்ணீர்
உள்ளங்கையில் ஏந்தி
நிற்பது யார்?
கால் கடுக்க உணவுப் பொருளுக்கு
ரேஷனில் நின்ற காலம் போய்
தண்ணீருக்கும் வண்ணக்குடங்களில்
நீர் வரையறை அளக்கும்
காலம் வரும்வரை
உள்ளங்கையில் இடும் கணக்கீடு
சொட்டு நீருக்காக
ஓட்டை லாரியின்
வருகைக்காக குளிக்கக் காத்திருக்கும்
தார் பூசிய 
சாலை கணக்காய்
உழவு மறந்த மனிதனாய்
காத்திருப்போம்!

***

’மழைநீரில் கைநனைத்து மகிழ்வதைவிட அவசியமானது அதனைத் தேக்கிவைப்பது!’ என அறிவுறுத்துகின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

அவசர நடவடிக்கைஏரிகள் எல்லாம்
கான்கீரீட் கட்டடமாயின
[…]
நீரின்றி அமையாது உலகு
வேர்றுருந்து போனால்
விளையும் பயிரில்லை
சோர்ந்து நிற்கும் மக்கள்
சார்ந்து நிற்பது வானத்தை
விழும் மழை நீரை
மகிழ்ந்து கையிலேந்தி
வேடிக்கை பார்க்காமல்
மழை நீரை சேமிக்க
மழை நீரைவிதைப்போம்
தயாராவோம் அடுத்த
தலைமுறைக்கு
பணத்தைவிட
தண்ணீர் அவசியம்
அவசரகால நடவடிக்கை
எடுப்போம்!

***

வழக்கம் போலவே, சிந்திக்கவைத்த சிறந்த கவிதைகள்! கவிச்சுவையில் திளைத்த மனத்தோடு இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைத் தேர்ந்தெடுத்துத் தந்துவிடுகிறேன்.

தவறுதல் மனித இயற்கை; தன் தவற்றை எண்ணி வருந்துதல் அறம். அவ்வாறு வருந்துபவனை மன்னித்தல் மனிதமாண்பு என்பது நாமறிந்ததே. அதே குணநலன்களை மழையிடமும் ஏற்றி, மரங்களையழித்ததனால் பட்டுப்போன பூமியில் தனித்துத் தவிக்கும் இறுதிமனிதனுக்குப் பாவமன்னிப்பு வழங்கி அவன் கைகளில் வெள்ளமாய்ப் பொழியும் (கருணை)மழையை எழிலோவியமாய்ச் சமைத்துள்ளது ஓர் கவிதை.

அக்கவிதை…

இந்தப் பிரபஞ்சத்தின்
இறுதி மனிதனின் கைகள்
அதன் சுருக்கம் சொல்லும்
அவன் வாழ்ந்தகாலங்களை
நடை தளர்ந்து தள்ளாடி வருகிறான்
கண்ணுக்கெட்டியதூரம் வரை வறட்சி
பட்டமரங்கள் விதவைகள் போல் மூளியாக
நெருப்பில் எரிந்தபூமி
புல் பூண்டுக்கும் இடமில்லை
வானத்தைப் பார்க்கிறான்
எந்தசலனமுமில்லை
பிடி தளரநிலத்தில் விழுந்து
கதறி அழுகிறான்
இவன் கைகள் வெட்டிய
மரங்களை நினைவு கூருகிறான்
சிட்டுக் குருவிகள் போட்டசாபமோ
இன்றும் நீர் இல்லையெனில்
இவன் மரணம் இன்று தீர்ப்பிடப்பட்டிருக்கும்
பூஞ்சையானகண்களில் நீர் துளித்தது
வெடித்து இரத்தம் வடித்தஉதடுகளால்
சிரிப்பொன்றைக் கோடி காட்டினான்
சுடலை ஞானமோ?
என்றோ ஒரு நாள்
தவித்த வாய்க்குத் தண்ணீர்
கொடுத்ததாய் ஞாபகம்
இடி இடித்தது சடசடவெனகோரமழை
நடுங்கும் கரங்களில்
இறைவனின் கருணையை ஏந்தினான்.

வளமார் சிந்தனைகளோடு வனப்பாய் அமைந்துள்ள இந்தக் கவிதையின் ஆசிரியர் திருமிகு. ராதா மரியரத்தினத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

***

அடுத்து, உழவனோடு தோழமைகொண்டு உரையாடும் மழைத்துளியின் தன்னம்பிக்கையூட்டும் வைரவரிகளை அழகான கவிதைப் படையலாக்கியிருக்கின்றது மற்றொரு கவிதை…

நேற்று நான் விளையாடிய 
காடுகளை அழித்துக்
கட்டிடம் கட்டி என் கனவுகளை 
சிதைத்தவர்களால் 
ஆங்காங்கே அடைமழைஎன்று 
ருத்ர தாண்டவமாடினாலும்  
என்னைக் கொண்டு பசுமை செய்யும் 
உழவுத் தோழா நான் 
உன்கையில் விழும்போதுதான் 
மீண்டும் குழந்தையாகி விடுகிறேன் 
[…]
விண்ணுக்கும் மண்ணுக்குமான 
தொப்புள் கொடியுறவல்லவா 
உனக்கும் எனக்கும்.
புரட்சி புரட்சி என்று 
போர்க்கொடி பிடித்து 
மார்தட்டிக் கொள்ளும் இந்த பூமியில் 
நீயும் நானும் கைகோர்த்த புரட்சி 
இல்லாமல் போனால் 
வரட்சியல்லவா அவர்கள் 
வயிறும் வாழ்வும்.

என் வருகைக்கு 
எதிப்புக் காட்டும் முகமாய் 
குடையும் கூரையும் போட்டு 
மறைந்து போகும் அவர்கள் மீதில்லா 
அன்பும் ஆனந்தமும் 
உன்மீது எனக்கதிகம் என்பதாலேயே 
உன் ஓட்டைக்கூரை வழியே 
உன் வீட்டுக்குள் வந்துவிடுகிறேன்.
[…]
ஏய் உழவுத் தோழா 
எதிர்பார்ப்பு இல்லாமல் 
உனக்குதவி செய்தாலும் இன்னும் 
ஏழ்மை என்னும் நிலையில் நின்று நீ 
என்றென்றும் என்னை மட்டுமே 
எதிர்பாத்து நிற்கிறாய் 
[…]
நீ என்னை நம்பி
கையை விட்டாலும் 
மறையும் நான் உனக்காக
நாளையும்  வருவேன். 
நன்றிக் கெட்ட உலகத்தில் 
நம்பிக்கையை விட்டு விட்டால்
கைகொடுக்க யாருமில்லை புரிந்துகொள்.

திரு. மெய்யன் நடராஜின் நம்பிக்கை விதைதூவும் இந்த நற்கவிதையைப் பாராட்டுக்குரியது எனத் தெரிவிக்கின்றேன். 

போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் நன்றி!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 30-இன் முடிவுகள்

  1.  நன்றி சொல்ல நா எழ​ முன்பே கண்கள் சொல்லி விட்டன​ நீர் சொரிந்து , தன்னம்பிக்கை தருகிறது இந்தப் பாராட்டு கர்வம் தரவில்லை …இன்னும் நல்ல​ படைப்புக்கள் தரவேண்டும் என்ற​ வேட்கை….இதில் பங்குபற்றியவர்கள்  சாதாரணமானவர்கள் இல்லை…சிறந்த​ கவிதைகள் தந்திருந்தார்கள் ….என் கவிதையை இவ் வாரத்தின் சிறந்த​ கவிஞராகத் தேர்ந்தெதுத்ததற்கு வல்லமை ஆசிரியக் குழுவுக்கும், சகோதரி பவளசங்கரிக்கும் என் மனமார்ந்த​ நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *