Blog

  • மானசீகக் காதல்

    நிர்மலா ராகவன்

    பெரியசாமி தினசரியின் ஞாயிறு பதிப்பைப் பிரித்தார். கொட்டையெழுத்தில் காணப்பட்ட அந்தப் பெயர் அவரை அலைக்கழித்தது. யார் இந்த டி.எஸ்.விஜயலட்சுமி?

    நிச்சயம் ஒரு பெண் இவ்வளவு வெளிப்படையாக எழுதமாட்டாள்.

    ஒரு வேளை, அவளுடைய கணவன் எழுதி, பிரச்னை எதிலும் மாட்டிக்கொள்ள விரும்பாத கோழையாக இருந்ததால், மனைவியின் பெயரில் தனது எழுத்துப் படிவங்களை அனுப்பிவிடுகிறானோ?
    எழுத்துத் துறையில் ஒரு ஜாம்பவான் என்று தன்னைப்பற்றி ஒரு கணிப்பு உண்டு பெரியசாமிக்கு. தான் அறியாத ஓர் எழுத்தாளர் இவ்வளவு பிரபலமாக ஆவதா!

    வழக்கம்போல, `நானும் ஒரு எழுத்தாளன்!’ என்று சொல்லிக்கொள்ளும் நாலுபேரைப் பார்த்துப் பேசும்போது, `டி.எஸ்.வியைத் தெரியாதா! நமக்கு ரொம்ப வேண்டியவங்களாச்சே!’ என்று பெருமை பேசிக் கொள்ளவாவது அவளுடைய அறிமுகம் வேண்டாமா?

    சுறுசுறுப்பாக காரியத்தில் இறங்கினார் பெரியசாமி.

    எப்பவும்போல, கோப்பிக்கடையில் அவர்களுடையஅரட்டை ஆரம்பித்தது. அங்கிருந்த நால்வரில் பெரியசாமி மட்டும்தான் இன்னும் உத்தியோகத்தில் இருந்தார்.

    “இப்போ பத்திரிகையில அடிக்கடி எழுதறாங்களே, டி.எஸ்.விஜயலட்சுமின்னு! அவங்களைத் தெரியுமோ ஒங்களுக்கு?” தன்னை யாராவது கேட்டு அவமானப்படுவதற்குள் முந்திக்கொண்டார் அவர்.

    “அவங்களா! ஆம்பளைங்க சொல்லக் கூசறதைக்கூட பச்சை பச்சையா எழுதுவாங்களே!” நமட்டுச் சிரிப்புடன் ஒரு குரல் எழுந்தது.

    “நல்லாச் சொன்னீங்க! நாம்பளும்தான் இருபது, முப்பது வருஷமா எழுதிக்கிட்டு இருக்கோம். இப்படியா வித விதமா, ஆண்-பெண் உறவு, கவர்ச்சி, மனக்கிலேசம்னு பிட்டுப் பிட்டு வெச்சோம்?”

    தொடர்ந்து அந்த எழுத்தாளினியின் அங்க லட்சணங்கள் விமர்சனத்திற்கு உள்ளாயின. அவளுடைய முகம் தோள்வரையே போட்டோவில் காணப்பட்டாலும், அதை ஆதாரமாக வைத்துக்கொண்டே மிகுந்ததை அவரவர் மூளைக்கு எட்டியபடி கற்பனை செய்து வர்ணிக்க ஆரம்பித்தார்கள்.

    “போட்டோவைப் பாத்தா, முப்பது வயசுக்குள்ளேதான் இருக்கும்னு தோணுது!” என்றார் ஏகாம்பரம்.

    “நீங்க ஒண்ணு! எந்தப் பொண்ணுதான் `எனக்கு வயசாகிடுச்சு’ன்னு ஒத்துக்கும்? அட, நம்ப வீட்டிலேயே பாக்கலியா? நான் சொல்றேன், இது பத்து, பதினஞ்சு வருஷத்துக்கு முந்தி எடுத்ததா இருக்கும். பாக்க சுமாரா இருக்கேன்னு அனுப்பி இருக்காங்க!” அடித்துப் பேசினார் சாமி.

    டி.எஸ்.வி எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. அது வேறு நம்ப முடியாததாக இருந்தது அந்த நண்பர் குழாத்துக்கு.

    எண்ணி, இரண்டு கதைகள் எழுதிவிட்டு, அதன்பின் தமது கதைகளைத் தாங்கும் பேறு பெற்ற சிறுகதைத் தொகுப்பை எங்கு போனாலும் எடுத்துக்கொண்டு போய், எதிர்ப்படுபவர்களிடமெல்லாம் தமது பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருந்ந்தவர்களுக்கு, இப்படி `எழுத்தாள லட்சண’த்திற்கு முரணாக ஒருவர் அமைந்து இருந்தது நம்ப முடியாததாக இருந்தது. தனது வித்தியாசமான போக்காலேயே அந்த ஒருவர் தம்மைத் தட்டிக்கேட்பதுபோல் பயம் உண்டாயிற்று.

    `நம் பெயர் நாலுபேருக்குத் தெரியவேண்டும் என்றுதான் எழுதுகிறோம். இதில் அடக்கம் ஒரு கேடா!’ என்ற எரிச்சல் எழுந்தது.

    “நான் நினைக்கிறேன், இவங்களுக்கு ஒடம்பிலே ஏதோ குறை இருக்கணும்னு. திக்குவாயாக்கூட இருக்கலாம். அதான் சுயமதிப்பைக் கெடுத்துக்க வேணாம்னு ஒதுங்கியே இருக்காங்க!” சின்னக்கண்ணு தன் அனுமானத்தைத் தெரிவித்தார்.
    அதை ஏற்பதுபோல் பெரியசாமி தலையாட்டி ஆமோதித்தார். தன்கூடப் பள்ளியில் படித்த சாங்கின் நினைவு வந்தது அவருக்கு.

    பிறவியிலேயே ஒரு கால் இன்னொன்றைவிட சற்றுக் குட்டையாக இருந்ததால், விந்திதான் நடக்க முடியும் என்ற பரிதாபகரமான நிலை அவனுக்கு. தன்னையே ஏற்றுக்கொள்ள முடியாது, அதனால் கிளர்ந்த ஆத்திரத்தில், எந்த ஓட்டப் பந்தயமானாலும் கலந்துகொண்டு, அதில் முதலாவதாக ஜெயிப்பானே!

    இப்படி டி.எஸ்.வியிடமும் நிவர்த்தி செய்ய முடியாத ஏதோ குறைபாடு இருக்கிறது. அதையே எண்ணி, ஓயாது மறுகாமல் இருக்கவே இப்படி எழுதுவதை வடிகாலாக வைத்துக்கொண்டிருக்கிறாள் என்று உறுதியாகத் தோன்றிப்போயிற்று. சற்று பச்சாதாபம் ஏற்பட்டது.

    அவர்களது விவாதம் தொடர்ந்தது.

    இவள் ஏன் ஆண்-பெண் உறவைப்பற்றியே எழுதுகிறாள்? அட, ஏதோ உள்ளத்தில் புதைந்து கிடக்கும் கனவுகளை வெளிப்படுத்திக் கொள்கிறாளோ, என்னவோ! அப்படியே இருந்தாலும், எல்லார் கண்ணிலும் பட்டு, அவர்கள் வாயிலும் புகுந்து வரும்படி எப்படித்தான் பிரசுரத்திற்கு அனுப்புகிறாளோ!

    “இன்னிவரைக்கும், `ஆம்பளைங்க தப்பு செய்யறாங்க, அவங்களாலேயும் தப்பு செய்ய முடியும்னு ஒருத்தராவது துணிஞ்சு எழுதி இருப்பாங்களா? இது தலையரட்டை!” அவர்களுள் மூத்தவரான ஏகாம்பரம் பொருமினார்.

    “புருஷன்காரன் பாடுதான் பாவம்! எப்படித்தான் இதை சகிச்சுக்கிட்டுப் போறானோ!” என்று ஒருவர் தன் பங்குக்குச் சொல்ல, அந்த நண்பர்களின் கவனம் பூராவும் அந்த அப்பாவி ஆண்மேல் திரும்பியது.

    ஒரு வேளை, குறை அவனிடம்தானோ?

    தாம்பத்திய உறவில் தான் எதிர்பார்த்த சுகம் கிடைக்காதுதான் டி.எஸ்.வி அதை எழுத்தில் தேடுகிறாளோ?

    குறை தன்னிடம் இருக்க, மனைவியைக் கோபிப்பது என்ன நியாயம் என்றுதான் கணவன் அவளை அவள் இஷ்டத்துக்கு விட்டு வைத்திருக்கிறான் என்று முடிவு செய்தார்கள்.

    பெரியசாமி அந்த உரையாடலில் கலந்துகொள்ளாது மௌனமாக இருந்தார். அவளைப்பற்றி நண்பர்கள் தோற்றுவித்த இரக்கம் அவரை ஓயாமல் சிந்திக்க வைத்தது.

    `வேலையிலிருந்து அடுத்த வருடம் கட்டாய ஓய்வு பெறவேண்டுமே!’ என்று அவ்வப்போது தோன்றிய பயமும், குழப்பமும், போதாத குறைக்கு, `உடம்பும் முன்போல இல்லை. கீழே சற்று உட்கார்ந்து எழுந்திருந்தால் தலை சுற்றிப்போகிறது!’ என்று வேறு பல கவலைகளும் அவரை ஆட்டுவித்துக் கொண்டிருந்த நிலையில், ஓயாது தன்னைப்பற்றியே எண்ணிக் கொண்டிராமல், வேறு ஒருவரின் நினைப்பில் மூழ்கி இருப்பது சுகமாக இருந்தது.

    தன்னை இவ்வளவு தூரம் ஆட்டுவிக்கும் அந்த டி.எஸ்.வியின் துயரத்தில் தானும் பங்குகொண்டு, அதைக் குறைக்க முடியவில்லையே என்று துக்கம் பீறிட்டது.

    அந்த வருத்தம், “ராத்திரிக்கு ஒங்களுக்கு என்ன டிபன் செய்யணும்?” என்று கேட்டுக்கொண்டு வந்த நின்ற பார்வதியின்மேல் ஆத்திரமாக மாறியது.

    “நீயும்தான் முப்பது வருஷமா என்னோட குப்பை கொட்டறே! தினமும் என்ன கேள்வி இது! எதையோ பண்ணித்தொலையேன்!” என்று எரிந்து விழுந்தார்.

    சற்று விழித்துவிட்டு, அவள் உள்ளே போனாள்.

    பார்வதி தோசை வார்த்தால், `எப்பவும் தோசைதானா இந்த இழவு வீட்டில்? தாகத்தாலேயே ஆள் செத்துடணும்னு பாக்கறியா?’ என்பார்.

    சரிதான் என்று உப்புமா பண்ணுவாள், மறுநாள்.

    `இது என்ன உப்புமா, களிமண்ணிலே கையை விடறமாதிரி! இட்லி, தோசை எதையாவது செய்யறதுக்கென்ன? அரிசி, உளுந்தை ஊறப்போட்டு அரைக்க நேரம் இல்லியோ மகாராணிக்கு? ஒக்காந்து ஒக்காந்து என்னதான் கிழிக்கறே?’ என்று அதற்கும் வசவு விழும்.

    அவர் என்ன சொன்னாலும் வாயே திறக்கமாட்டாள் தர்மபத்தினி. பதிபக்தி என்றில்லை. பொதுவாகவே ஆண்களின் மனவக்கிரம் புரிந்துபோனதால், `நமக்குக் கொடுத்துவைத்தது இவ்வளவுதான்!’ என்ற விவேகம்.

    சமீப காலமாக கணவர் ஏதோ குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது அவள் அறிந்ததுதான். ஒரு வேளை, தான் அவருக்கு அலுத்துவிட்டோமோ?

    நான்கு பிள்ளைகள் பெற்று, உரிய காலத்தில் உடலைப் பழைய நிலைக்குக் கொண்டுவர எந்தவித முயற்சிகளும் செய்யாததில், பார்வதி ஒரு நிரந்தர கர்ப்பிணித் தோற்றம் அமைந்தவளாக இருந்தாள். ஓயாமல் வீட்டு வேலை செய்ததில், சற்று கூன்வேறு.

    பெரியசாமியும் அப்படியொன்றும் இளமை குன்றாது இருந்துவிடவில்லை. `எனக்கென்ன! வயசானவன்!’ என்று அடிக்கடி கூறிக்கொள்வார். அவ்வார்த்தைகளில் விரக்தி கிடையாது. எல்லாரும் மரியாதையாக, தன் சொற்படி நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் வெளிப்படும்.

    மனைவியின் உயிரை வாங்கி, வித விதமாக அவளைச் சமைக்கவைத்துச் சாப்பிட்டதன் விளைவு பருத்த உடலில் தெரிந்தது. அதனால், வயதுக்கு மீறிய தள்ளாமைவேறு.

    இதையெல்லாம் நன்றாக உணர்ந்திருந்தாலும், பார்வதிக்கு இப்போது அச்சம் ஏற்பட்டது.

    வயதானால் பால்யம் திரும்புமாமே ஆண்களுக்கு? தன் போதாத காலம், யாராவது இளம்பெண்ணைப் பார்த்து மயங்கிவிட்டாரோ?

    பார்வதி அதிகம் குழம்ப வேண்டியிருக்கவில்லை.

    பெரியசாமியே ஒருநாள், சாப்பாட்டுக்குப் பிறகு ஆரம்பித்தார்: “இந்தக் கதையெல்லாம் எழுதறாங்களே, டி.எஸ்.விஜயலட்சுமின்னு..,” மேலே என்ன சொல்வது என்று புரியாமல் அவள் முகத்தையே பார்த்த்தார்.

    என்றும் இல்லாத வழக்கமாக, தன்னையும் ஒரு பொருட்டாகக் கணவர் மதித்துப் பேசிய உற்சாகத்தில், “அவங்களா! என்னமா எழுதறாங்க! ஆபாசம் இல்லாம, ஆனா, உணர்ச்சிபூர்வமா.. ஆம்பளையோ, பொம்பளையோ, அவங்க மனசிலே இருக்கிறதை என்னமோ தானே பாத்துட்டு வந்தமாதிரி..,” என்று பேசிக்கொண்டே போனாள்.

    ஆனால், `உன்னுடைய அபிப்ராயத்தை யார் கேட்டார்கள்?’ என்கிறமாதிரி பொறுமை குன்றிப்போய் அவர் மூக்கைச் சுளிக்கவும், உசிதம்போல் வாயை மூடிக்கொண்டு, அவர் பேசுவதைக் கேட்கத் தயாரானாள்.

    “என்னமோ தெரியல. எனக்கு அவங்கமேல ஒரு.. ஒரு..,” என்றவர் சட்டென நிறுத்தினார்.

    `காதல்’ என்று சொல்லப்போய், இந்த அறிவுகெட்டது எங்கேயாவது அழுது ஆர்ப்பாட்டம் செய்து, ஊரைக் கூட்டி நியாயம் கேட்கப் போய்விட்டால், தன் கௌரவம் என்ன ஆவது!

    “எனக்கும் அவங்க எழுத்துமேல ஒரே இது!” என்று அசடு வழிந்தார்.

    நிம்மதியையும் மீறி பார்வதிக்குச் சிரிப்பு வந்தது. என்னமோ, பதின்மூன்று வயதுப் பையன் தன்னைவிட மூன்று மடங்கு வயதான ஆசிரியையைப் பார்த்து அதீத மோகம் கொண்டு, கற்பனை உலகிலேயே சஞ்சரித்து இன்பம் காண்பதுபோல் அல்லவா இந்த `முக்கால்’ கிழவர் நடந்துகொள்கிறார்!

    காதல் வயப்பட்ட ஒருவர் தன் மனதில் இருப்பவரைப்பற்றிய எண்ணங்களை எவருடனாவது பகிர்ந்துகொண்டால்தான் அமைதி கிட்டும் என்ற மனித இயல்புக்கு ஏற்ப, டி.எஸ்.வியைப்பற்றி மனைவியிடமே ஓயாது பேசலானார் பெரியசாமி.
    இந்தவரைக்கும் நம்மிடம் பிரியமாக நடந்துகொள்கிறாரே என்று அவளும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
    இந்நிலையில், உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்காக பெரியசாமி வெளியூர் போகவேண்டி வந்தது.

    “அங்கதான் ஒங்க டி.எஸ்.வி இருக்காங்க இல்ல?” நினைவுபடுத்தினாள் பார்வதி. “பாத்துட்டு வாங்களேன்!”
    நீண்ட ரயில் பிரயாணம் செய்துகொண்டிருந்தபோது, ` ஒங்க டி.எஸ்.வி’ என்ற வார்த்தைகள் காதில் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருந்த்தில், அவருக்கு அலுப்பே தெரியவில்லை.

    “இவங்கதான் கல்யாணப் பொண்ணோட அக்கா!”
    கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தமாதிரி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார் பெரியசாமி. “நீ.. நீங்க.. டி.எஸ்.விஜயலட்சுமிதானே?”
    ஒரு சிறு முறுவலுடன் அவள் அதை ஆமோதித்தாள்.

    அவளைப் பார்த்தால் ஏதேதோ கேட்கவேண்டும் என்று யோசித்து வைத்திருந்ததெல்லாம் மறந்தே போயிற்று. அவளையே பார்த்தபடி நின்றார்.

    “நீ இங்கேயா இருக்கே, விஜி?” என்று கேட்டபடி வந்தான் ஓர் இளைஞன். பெரியசாமியின் கண்களில் இருந்த சொக்கிய பாவனையைக் கவனித்துவிட்டு, “ஓ! ஒனக்கு ஒரு புது விசிறி கிடைச்சிருக்காருன்னு சொல்லு!” என்றான் உற்சாகமாக.

    “அங்கிள்! இவர்தான் என் ஹஸ்பண்ட்!” அவள் குரலில் ஒலித்த பெருமையும், உரிமையும் பெரியசாமிக்குள் பொறாமையைத் தூண்டிவிட்டது.

    தன்னையும் அறியாமல், ஒரு கணம் அவனோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டார்.

    தொந்தியும், தொப்பையும், வழுக்கைத் தலையுமாக தான் எங்கே, பனியன் விளம்பரத்துக்குப் போஸ் கொடுப்பவன்மாதிரி அகன்ற மார்பும், புஜபலமும், அடர்ந்த முடியும் கொண்ட இவன் எங்கே!

    அவனுடைய உயரத்துடன் ஈடுகொடுக்க, சற்று நிமிர்ந்து நிற்க முயற்சித்தார். இடுப்பில் ஏதோ ஓர் எலும்பு இடக்குப் பண்ண, வலியில் முகம் சுளித்த்து.

    “நின்னுக்கிட்டே இருக்கீங்களே, அங்கிள்!” என்று பரிதாபப்பட்டவளாய், “டியர்! அங்கிளுக்கு ஒரு நாற்காலி கொண்டுவாங்களேன்!” என்று கணவனைப் பணித்தாள் டி.எஸ்.வி.

    “ஒன்னால நிக்க முடியலேன்னு வெளிப்படையா சொல்றது!” கொஞ்சலாக அவளைப் பார்த்துச் சிரித்தபடி, அந்த நிறைமாதக் கர்ப்பிணியின் உத்தரவை நிறைவேற்ற அவன் விரைந்தபோது, பெரியசாமிக்கு ஏதோ புரிந்தமாதிரி இருந்தது.
    மனைவியை விரட்டி, விரட்டி, அதனால் பலம் அடைந்துவிட்டதாக தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் ஆண் இல்லை இவன். விட்டுக்கொடுக்க வேண்டிய சமயத்தில் விட்டுக்கொடுத்து, தன் கௌரவத்தையும் இழக்காமல் இருப்பவன். அதனாலேயே மனைவியின் அன்புடன் தோழமையையும் பெற்றிருக்கிறான். அந்த சுதந்திரம்தான் அவளுடைய எழுத்துக்களில் பிரதிபலிக்கிறது.

    வீடு திரும்பிய கணவரிடம் எடுத்த எடுப்பிலேயே, “டி.எஸ்.வியைப் பாத்தீங்களா? என்று கரிசனத்துடன் விசாரித்தாள் பார்வதி.

    அது காதில் விழாதமாதிரி, “நாலு நாளா கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டு, வயிறே கெட்டுப்போச்சு. ஒன் கையால சாப்பிட்டு எத்தனை நாளாச்சு! பூண்டு, மிளகு, சீரகம் எல்லாத்தையும் தட்டிப்போட்டு நீ ரசம் வைக்கிறமாதிரி யாரால முடியும்!” என்றார்.

    மனக்கண்முன் தோன்றிய `பனியன் அழக’னிடம், `ஒனக்குத்தான் பொண்டாட்டிகிட்டே அருமையா நடந்துக்கத் தெரியுமோ?’ என்று சவால் விட்டார் பெரியசாமி.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ஆழ்ந்த உறக்கம் மனிதம்….
    அதையும் தாண்டிய புனிதம் ஆயர்பாடி சேய் கானம்….

    ”ஆனந்தம் உண்டுதான் ஆழ்ந்த உறக்கமதில்,
    நானந்த ஆதியில்லா நீளுறக்கம்: -கோநந்தன்,
    வாமக்கால் தன்னை வலக்காலிட்(டு) ஊதுகிறான்,
    ஏமத் துயில்விட்(டு) எழு”….கிரேசி மோகன்….

    வாமம் -இடது
    ஏமம் -மயக்கம்

    Share
  • தமிழனென்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

    amuthe_thamilile

    Rasul_Gamzatovடாகெசுதான் என்றொரு நாடு இருக்கிறது. அங்கு முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகிறதாம். அதில் ஒன்று, ‘அவார்’ எனும் மொழி. இந்த மொழியின் மீப்பெரும் கவிஞர் ரசூல் கம்சடோவ் (Rasul Gamzatov)என்பவர். தம் மொழியின் மீது நம் பாரதிக்கு ஈடாக ஆழ்ந்த காதல் கொண்டிருந்தவனாம் ரசூல். ‘ஒருவேளை இந்த அவார் மொழி நாளை இறந்துவிடும் என்ற நிலை வந்தால், நான் இன்றே இறந்துவிடுவேன்’ என்றானாம் அக்கவி! கம்சடோவ் இத்தாலி நகரில் இருந்தபோது, தம் நாட்டினர் ஒருவரைச் சந்தித்தாராம். இந்தச் சந்திப்பு குறித்து தாம் தம் தாய்நாடான டாகெசுதான் திரும்பியவுடன் தாம் சந்தித்த அந்த நபரின் தாயிடம் சென்று குறிப்பிட்டபோது, அவருடைய அன்னையார் அவரிடம் முதலில் கேட்ட கேள்வி, ‘என் மகன் தங்களுடன் அவார் மொழியில்தானே பேசினான்?’ என்பதுதானாம். அதற்கு ரசூல் கம்சடோவ், ‘இல்லையே அம்மா, தங்கள் மகன் பிரெஞ்சு மொழியில்தான் பேசினார். ஏன் என்று எனக்கும் விளங்கவில்லை’ என்றாராம். உடனே அந்தத்தாய் என்ன செய்தார் தெரியுமா? அவர் தாம் அணிந்திருந்த துணியை எடுத்து தம் தலையின்மீது போட்டுக்கொண்டாராம். ஆம், அந்த நாட்டின் கலாச்சார மரபின்படி ஒருவர் இறந்துவிட்டால், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தலையில் துணியை போட்டுக்கொள்வார்களாம். தம் மகன் தமது தாய் மொழியில் பேசவில்லை என்பதால் அவனை இறந்தவனாகக் கருதிய அந்தத் தாயின் மொழிப்பற்றை என்னென்று சொல்வது! நம் நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழ் தாய்மார்களும் இதனை கருத்தில் கொண்டு குழந்தைகளை வழி நடத்தினால் நம் தமிழ் மொழி இன்னும் பல கோடி காலங்கள் நிலைத்து நிற்காதா?

    தமிழனென்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

    Share
  • ராக்கெட் முன்னோடிப் பொறிநுணுக்க அமெரிக்க நிபுணர் ராபர்ட் கோடார்டு

    ajay

    [Robert Goddard]

    (1882-1945)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    மனிதனால் எதைச் சாதிக்க முடியாது என்று தீர்மானம் செய்வது, கடினம்!  ஏனெனில் நேற்றைய தினத்தின் நமது கனவு, இன்றைய தினத்தில் நமக்கு நம்பிக்கை யூட்டி, அது நாளைய தினத்தின் மெய்யான சாதிப்பாக நேர்ந்து விடுகிறது!

    ராபர்ட் கோடார்டு

    வெண்ணிலவுப் பயணத்துக்கு ஓர் ஏவுகணை அமைத்தார்

    1926 ஆம் ஆண்டு மார்ச் 26 இல் அமெரிக்க எஞ்சினியர் ராபர்ட் கோடார்டு, மாஸ்ஸசுஸெட்ஸ் ஆபர்ன் [Auburn, Massachusetts] நகரில் தான் தயாரித்த உலகின் முதல் எரித்திரவ ராக்கெட்டை [Liquid Fuel Rocket] வானத்தில் ஏவி வரலாற்றில் முதல் அமெரிக்க ராக்கெட் வல்லுநர் என்னும் மதிப்பைப் பெற்றார்! அவ்வெற்றி 1903 ஆம் ஆண்டில் முதல் பறக்கும் விமானத்தைத் தயாரித்து அமெரிக்காவின் ரைட் சகோதரர் [Wright Brothers] வட கரோலினா கிட்டி ஹாக்கில் [Kitty Hawk, North Carolina] பயணம் செய்த வெற்றிக்கு ஒப்பான ஓர் உலக நிகழ்ச்சியாகக் கருதப் படுகிறது! 1914 ஆம் ஆண்டில் கோடார்டு இரு அமெரிக்கக் காப்புரிமைகளைத் [U.S. Patents] தனது எரித்திரவப் பீரங்கி ராக்கெட்டுக்குப் [Liquid Fuel Gun Rocket] பெற்றார்! கோடார்டு படைத்த‌ முதல் ராக்கெட் மணிக்கு 60 மைல் வேகத்தில் 21 விநாடிகள் செங்குத்தாக எழுந்து 41 அடி உயரம் ஏறி, 184 அடி தூரத்தில் போய் விழுந்தது! அடுத்து 11 ஆண்டுகள் அயராது உழைத்து, அநேகச் செம்மைப்பாடுகள் அமைத்து 1937 மார்ச் 26 ஆம் தேதி 22 அடி நீளமுள்ள ராக்கெட்டைத் தயாரித்து, மணிக்கு 700 மைல் வேகத்தில் ஏவி முதன் முதல் 9000 அடி உயரம் ஏறும்படி செய்து உலகில் மாபெரும் ராக்கெட் உற்பத்திப் பொறித்துறையை ஆரம்பித்து வைத்தார்!

    ரைட் சகோதரர்களின் முதல் ஊர்திப் பறப்பு ஓர் பிற்போக்கு வெற்றியாகக் [Primitive Achievement] கருதப் பட்டது போல், கோடார்டு ராக்கெட் முயற்சியை எவரும் சிறப்பான சாதனையாகக் கருத‌ வில்லை! அமெரிக்க அரசாங்கம் கோடார்டு ராக்கெட் முன்னோடிச் சாதனையைக் கண்டு கொள்ளாதது போல் முதலில் புறக்கணித்தது! அமெரிக்க மாந்தர் சிலர் கோடார்டு ராக்கெட் சாதனையை எள்ளி நகையாடினர்! ஆயினும் அவரது வெற்றிகரமான எரித்திரவ ராக்கெட்டுகள், ராணுவ ஏவுகணைகள் [Military Missiles] செய்யவும், அண்டவெளிப் பயண முயற்சிகளுக்கும் அடிகோலின!  ஆழ்ந்த நுணுக்க ஆற்றல் கொண்டு, தனித்துவப் படைப்புத் திறன் பெற்ற கோடார்டு, ராக்கெட்கள் மூலம் விண்வெளித் தேடல்களில் அமெரிக்கா ஈடுபடலாம் என்று முன்னறிவித்தார்!  சந்திர மண்டலப் பயணங்களுக்கு 1960-1970 ஆண்டுகளில் ராட்சத ராக்கெட்கள் தயாரித்த ஜெர்மன் ராக்கெட் மேதை வெர்னர் ஃபான் பிரெளனுக்குக் (Werner Von Braun) கோடார்டு ஒரு வழிகாட்டிக் குரு என்பது பலருக்குத் தெரியாது!

    ராபர்ட் கோடார்டு நவீன ராக்கெட் பொறித்துறையின் பிதா

    1907 இல் வொர்செஸ்டர் பாலிடெக்னிக் கூடத்தின் [Worcestor Polytechnic  Institute] பெளதிகத் துறைக் கீழ்த்தள அறையிலிருந்து கிளம்பிய பீரங்கித்  தூள் ராக்கெட் புகை மண்டலம், 25 வயது கோடார்டைப் பலர் அறியும்படிச் செய்தது! பாலிடெக்னிக் அதிகாரிகள் கோபப் பட்டு வெளியே தள்ளாமல், கோடார்டின் ராக்கெட் முயற்சிகளில் ஆர்வம் காட்டி அவருக்கு ஊக்கம் அளித்தனர்! கோடார்டு தன் வாழ்க்கை முழுவதையும் ராக்கெட் விருத்திக்கு அர்ப்பணிக்க அந்த விந்தை நிகழ்ச்சி அவருக்கு உறுதி அளித்தது!

    1914 ஆம் ஆண்டில் கோடார்டு இரு அமெரிக்கக் காப்புரிமைகளைப் [US  Patents] பெற்றார். ஒன்று எரித்திரவம் உயோகித்து எழும் ராக்கெட் [Liquid  Fuel Rocket]. அடுத்தது, எரித்திடவம் உபயோகித்து ஏறும் ஈரடுக்கு ராக்கெட் [Solid Fuel Two Stage Rocket]. தனது நிதியைச் செலவு செய்து கோடார்டு, பல்வேறு வெடிமருந்துத் தூள்களை வாங்கி ராக்கெட் உந்தலில் ஆய்வுகள் பல செய்தார்!

    1916 இல் அவர் தான் எழுதிய ‘அதி உயரத்திற்கு ஏறும் முறைகள்’ [A Method of Reaching Extreme Altitude] என்னும் ராக்கெட் நூலை ஸ்மித்ஸோனியன் கூடத்திற்கு [Smithsonian Institution] அனுப்பித் தனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்த நிதி வேண்டி எழுதி யிருந்தார்.  அந்த நூலில் ராக்கெட் உந்தலின் கணித விபரங்களை விளக்கி யிருந்தார்.  மேலும் அதி உயரத்தில் பறக்கும் ‘உளவு பலூன்களை’ [Sounding Balloons] விட மேற்செல்லும் ராக்கெட்டில், காலநிலை அறிவிப்புக் கருவிகளை  வைத்து, மேலான விபரங்களைச் சேமிக்க முடியும் என்றும் வழிகாட்டி யிருந்தார்!

    ராக்கெட்டுக்குத் தேவையான ‘சுழல் மிதப்பி ஆட்சிக் கருவி'[Gyroscopic Control], ராக்கெட் உதைப்புக்குப் புறத்தே வளைத் தட்டுகள் மூலம் திசை திருப்பி [Steering by Vanes in Rocket Jet Stream], மிதப்புத் திசை திருப்பி [Gimbal Steering], ஆற்றலில் ஓடும் எரித்திரவப் பம்ப்புகள் [Power-driven Fuel Pumps] ஆகியவற்றை எதிர்பார்த்துக், கோடார்டு டிசைன் செய்திருந்தார். 1929 ஜூலையில் அவர் ஆபர்னில் ஏவிய சோதனை ராக்கெட் முதன் முதலாக விஞ்ஞானச் சாதனங்கள் [Scientific Payloads], வாயு அழுத்த மானி [Barometer], மற்றும் காமிரா ஒன்றையும் வெற்றிகரமாகச் சுமந்து சென்று, பொதுமக்கள் பலரது கவனத்தைக் கவர்ந்தது!

    கதிரியக்க மூலகங்களிலிருந்து [Radioactive Elements] வெளியாகும் வெப்ப சக்தியைப் பயன்படுத்தி, ராக்கெட்டின் போக்கை வழிநடத்தி [Navigation] அண்டவெளிப் பயணங்களில் முற்படலாம் என்று 1907 ஆம் ஆண்டில் ஒரு விஞ்ஞான வெளியீட்டை முதன் முதலாகப் பதிப்பித்தார்!  1909 இல் ராக்கெட்டில் திரவ ஆக்ஸிஜன் [LOX, Liquid Oxygen], திரவ ஹைடிரஜன் [Liquid Hydrogen] இரண்டையும் எரித் திரவங்களாய் உபயோகித்து, நவீன ராக்கெட் பொறித்துறைக்குக் கோடார்டு முன்வழி வகுத்தார்!

    தணல்கலனில் [Combustion Chamber] ராக்கெட் எரித்திரவம் எரியத் தொடர்ந்து ஆக்ஸிஜனைப் பரிமாறும் சுரப்பி ஒன்று இருந்தால் மட்டுமே ராக்கெட்டின்  முழு உதைப்பும் சீராகத் தொடர்ந்து உண்டாகும் என்று கண்டறிந்தார்! பல முயற்சிகளின் பின் பெட்ரோலை எரித்திரவமாகத் தேர்ந்தெடுத்தார். பெட்ரோல் ஆக்ஸிஜன் கலவை வீதம் அடுத்துச் சீராகத் தணல்கலனில் செலுத்தப்பட வேண்டும். தணல்கலனில் எழும் அழுத்தத்துக்கும் மேலான அழுத்தத்தில் எரிக்கலவையை அனுப்ப, அடுத்து மிகையான அழுத்தம் கட்டுப்பாடு ஆக வேண்டும். அதற்கு திரவ ஆக்ஸிஜனை வாயுவாக்க ஆல்ககால் தீவிளக்கைப் [Alcohol Burner] பயன்படுத்தி, அழுத்தம் பெருக விட்டுப் பிறகு அந்த அழுத்தமே எரிக்கலவையைக் கலனுள் அனுப்ப ஏற்பாடு செய்தார்.

    ராபர்ட் கோடார்டின் வாழ்க்கை வரலாறு

    1882 அக்டோபர் 5 நாள் மாஸ்ஸசுஸெட்ஸ் வொர்செஸ்டரில் [Worcestor,  Massachusetts] ராபர்ட் கோடார்டு ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். யந்திர சாதன‌க் கடை [Mechanical Shop] ஒன்றின் உரிமையாளரான அவரது தந்தையார் வணிக‌த் தொழிலில் ஈடுபட்டவர். ஓராண்டு கழித்துக் குடும்பம் பாஸ்டன் நகருக்கு மாறியது. 1888-1898 ஆண்டுகளில் பாஸ்டன் மெளன்ட்  பிளஸென்ட் ஹூ ஓ’பிரையன் உயர்நிலைப் பள்ளியில் [Mount Pleasant Hugh O ‘Brien High School] சிறுவன் கல்வி பயின்றான். 1898 இல் மறுபடியும்  வொர்செஸ்டருக்குக் குடும்பம் திரும்பியது. பிறகு நோயில் விழுந்து இரண்டு  ஆண்டுப் படிப்புச் சிறுவனுக்குத் தாமத மானது! அடுத்து மூன்று  ஆண்டுகள் வொர்செஸ்டர் தென்னக‌ உயர்நிலைப் பள்ளியில் படித்தான்!

    அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் [American Civil War] பின்பு உயிர்த் தெழுந்த தொழிற் புரட்சியின் [Industrial Revolution] மலர்ச்சியில் சிறுவன் கோடார்டு புல்லரித்துப் பூரிப்படைந்தான் ! சிறு வயது முதல் பெளதிக விஞ்ஞான‌ நிகழ்ச்சிகளில் வேட்கை மிகுந்து, புதிதாக ஒன்றைப் படைப்பதில் ஆர்வம்  கொண்டான்! யந்திர நுணுக்கங்களிலும், பெளதிக விஞ்ஞானத்திலும் ஈடுபாடு கொண்டு அவற்றைப் பயின்றான். 1904-1908 ஆண்டுகளில் வொர்செஸ்டர் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று B.S. பட்டம் பெற்றார் கோடார்டு.  1909 கிளார்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பெளதிகத்தில் Ph.D. பட்டத்தை 1911 ஆம் ஆண்டில் பெற்றார். அதற்குப் பின் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில்  ஆய்வுப் பயிற்சியாளராகப் [Research Assistant] கோடார்டு பணி செய்தார்.

    பிரிட்டிஷ் மேதை ஹெச்.ஜி. வெல்ஸ் [H.G. Wells] எழுதிய விஞ்ஞானப் புனை நாவல் ‘புவனங்களின் போர்’ [War of the Worlds] 1898 இல் பாஸ்டன் போஸ்ட் பத்திரிக்கையில் தொடராக வந்ததைக் கோடார்டு படித்த போது அவரது கற்பனா சக்தி புத்துயிர் பெற்று மலர்ச்சி அடைந்தது! அதற்குப் பிறகு மெய்யாகவே அவர் ஒரு ‘விண்வெளிப் பறப்பு யந்திரத்தைத்’ [Space Flight Machine] தயாரிக்கக் கனவு கண்டார்! 1899 இல் ஒரு நாள் பின்புறத்து மரத்தின் உச்சியில் ஏறிக் கீழ்த் தளத்தைப் பார்த்து, ‘விண்வெளிப் பயண யந்திரம் ஒன்றைப் படைத்துச் செவ்வாய்க் கோளுக்கு போகும் வாய்ப்புத் தனக்குக் கிடைத்தால் எத்தகைய விந்தையாக இருக்கும்’ என்று கற்பனை செய்து பார்த்தார்!

    கோடார்டின் ‘விண்வெளிப் பயண வேட்கை’ அதற்குரிய ‘வாகனப்  படைப்பு’ ஆகிய இரண்டு குறிக்கோள்களிலும் இருந்த தீராத ஆர்வம், வொர்செஸ்டர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்த பின்பும் நிழலாய்  அவரைத் தொடர்ந்தது! அவருக்கு விஞ்ஞானப் பயிற்சித் திட்டமாக [Science Project] அளிக்கப் பட்ட, ‘1950 ஆண்டுப் பயண யந்திரங்கள்'[Traveling in 1950] என்னும் தலைப்புக் கட்டுரையில், கோடார்டு ‘மின்காந்தக் கவர்ச்சிப் பெயர்ச்சி விசைகளால், சூனியக் குகையில் ஓடும் ஓர் துரித வண்டி’ [The  Fastest Travel inside Steel Vacuum Tube in which Cars driven by the attraction & repulsion of Electromagnets] என்னும் ஏற்பாட்டைப் பற்றி விளக்கி எழுதி யிருந்தார்! பின்னால் ‘உதைப்பு வளர்வேகத் தளர்வேகக் கோட்பாடில்’ [Thrust Acceleration & Deceleration Principle] இயங்கும் ‘சூனியக் குகை வண்டிப் போக்கு வரத்து’ [Vacuum Tube System of Transport] ஏற்பாடு ஒன்றுக்கு அவர் அமெரிக்கக் காப்புரிமை [US Patents] ஒன்றையும் பெற்றார்!


    முதல் உலகப் போரின் சமயத்தில் 1917-1918 ஆண்டுகளில் அமெரிக்க  ராணுவத்துக்கு ராக்கெட் ஆயுதத் தயாரிப்புப் பணிகளில் வொர்செஸ்டர்  பாலிடெக்னிக் கூடத்திலும், அதன்பின் காலிஃபோர்னியா, மெளன்ட் வில்ஸன் நோக்ககத்திலும் வேலை செய்தார். 1923 இல் கிளார்க் பல்கலைக் கழகத்தில் பெளதிக ஆய்வுக் கூடத்தின் ஆணை யாளராய்  [Director] நியமிக்கப் பட்டார். 1924 இல் எஸ்தர் கிரிஸ்டான் கிஸ்க் [Esther Christine Kisk] என்னும் மாதை ராபர்ட் கோடார்டு மணந்து கொண்டார்.

    1920 முதல் 1925 வரை திரவ ஆக்ஸிஜென், பெட்ரோல் [Liquid Oxygen,  Gasoline] இரண்டையும் பயன்படுத்தி முதல் ராக்கெட் மோட்டாரை [Rocket  Motor] விருத்தி செய்ய முற்பட்டு, கிளார்க் பல்கலைக் கழக ஆய்வுக்  கூடத்தில் சுயப் பளுவைத் தூக்கி எழும் சோதனையில் வெற்றி  யடைந்தார். 1929 ஜூலை 17 தேதி ஆபர்னில் முதன்முதல் கருவிகளோடு விருத்தியான‌ அவரது ராக்கெட் செங்குத்தாக ஏறியது, பொது நபர்களின் கவனத்தையும்  கவர்ந்தது. அடுத்து 1935-1937 ஆண்டுகளில் நடத்திய சோதனையில் அவரது 22 அடி நீளமுள்ள முற்போக்கு ராக்கெட் மணிக்கு 700 மைல் வேகத்தில்  கிளம்பி, 9000 அடி உயரத்தை முதலில் தொட்டது!


    நவீன ராக்கெட்டை விருத்தி செய்த முப்பெரும் மேதைகள்

    19-20 நூற்றாண்டுகளில் முப்பெரும் உலக மேதைகள் தனித்தனியாக ராக்கெட் பொறி நுணுக்கத்தை விருத்தி செய்தார்கள். பிரென்ச் புனைநாவல் படைப்பாளி ஜூல் வெர்ன் [Jule Verne (1828-1905)] எழுதிய விஞ்ஞானப் புனைகதையில் ராக்கெட்களைப் பயன்படுத்தி, விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று கருத்தைப் படித்தச் சிலரது சிந்தனா ஊற்று பீறிட்டு எழுந்தது! ரஷ்யாவில் கான்ஸ்டன்டின் ஸியோல்கோவிஸ்கி [Konstantin Tsiolkovsky (1857-1935)], அமெரிக்காவில் ராபர்ட் கோடார்டு, ஜெர்மனியில் ஹெர்மன் ஒபெர்த் [Hermann Oberth (1894-1989)] ஆகிய மூவரும் தற்கால ராக்கெட் முன்னோடிகளாகக் கருதப் படுகிறார்கள். ரஷ்ய நிபுணர் உந்து வாகனம் மூலம் விண்வெளியில் உலவலாம் என்று வழி காட்டினார்! அமெரிக்காவில் கோடார்டு எரித்திரவம், எரித்திடவம் [Liquid & Solid-Propellant Fuels] உந்தும் ராக்கெட்களைத் தயாரிக்கலாம் என்று எடுத்துக் காட்டினார்! மூவரிலும் ஜெர்மன் ராக்கெட் மேதை ஹெர்மன் ஒபெர்த், அவரது உதவி எஞ்சினியர் வெர்னர் ஃபான் பிரெளன் [Wernher Von Braun] ஆகியோர் இருவரும் 1930 இல் ராணுவ V2 ராக்கெட்டை விருத்தி செய்து, இரண்டாம் உலகப் போரில் கட்டளை ஏவுகணைகளாய் [Guided Missiles] ஏவிப் பல ஐரோப்பிய நகரங்களைத் தாக்கித் தரைமட்ட மாக்கி உயிர்ச் சேதம் உண்டாக்கினர்!

    1. ரஷ்ய ராக்கெட் மேதை ஸியோல்கோவிஸ்கி

    விமானப் பணியிலும், விண்வெளிப் பயணத்திலும் ஆராய்ச்சி செய்த  விஞ்ஞானி அவர். விமானப் பறப்பியல் நெறிகளை ஆராய நூறு விதக்  ‘காற்றுக் குகைகளை’ [Wind Tunnels] 1892 இல் அமைத்துச் சோதனை  செய்தவர் அவர். 1895 இல் விமானவியல் ஆய்வின் போது, விண்வெளிப்  பிரச்சனைகள் தோன்றி, அதன் பின் ‘பூமி, வானக் கனவுகள்’ என்னும்  புத்தகத்தை எழுதினார். ‘பிற அண்டங்களில் வாழ்வோரிடம் தொடர்பு’  என்னும் ஓர் அரிய கட்டுரையை 1895 இல் எழுதினார்! அடுத்து அதே  ஆண்டில் அண்டவெளியியலில் [Astronautics] முக்கியமான ‘உந்து சக்தி   வாகனங்கள் மூலம் விண்வெளித் தேடல்’ [Cosmic Space Exploration by Means of Reaction Devices] என்னும் ஓர் அரிய நூலை வெளியிட்டார்! அந்நூலில்  விண்வெளியில் ராக்கெட் எஞ்சின் பிரச்சனைகள், பயணப் போக்கு யந்திர நுணுக்கம் [Navigating Mechanism], எரிப்பண்டம் ஊட்டல் [Fuel Supply], காற்று உராய்வால் ஏற்படும் உஷ்ணம் [Heating due to Air Friction] ஆகியவற்றைப் பற்றி விளக்கங்கள் எழுதப் பட்டிருந்தன. இறப்பதற்கு முன் பதினெட்டு ஆண்டுகள் கடுமையாய் உழைத்து, ஏழுமைல் உச்சி வாயு மண்டல ஆய்வு [Stratospheric Exploration], அண்டவெளிக் கோள்களுக்குப் பயணம்  [Interplanetary Flight] பற்றிய முயற்சிகளில் பங்கெடுத்து, சோவித் ரஷ்யாவின்  விஞ்ஞானப் பேரவைக்கு [Soviet Academy of Science] 1921 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்  பட்டார்.

    2. ஆஸ்டிரிய ஜெர்மன் ராக்கெட் மேதை ஹெர்மன் ஓபெர்த்

    முதல் உலகப் போருக்குப் பின் 1922 இல் ஜெர்மனியின் ஹைடல்பர்க்  பல்கலைக் கழகத்தில் [University of Heidelberg] Ph.D. பட்டம் பெற ஹெர்மன் ஓபெர்த் எழுதிய ‘அண்டவெளிப் பயணத்திற்கு ராக்கெட்’ என்னும் ஓர் ஆய்வுப் பதிவுநூல் [Thesis] நிராகரிக்கப் பட்டது! ராக்கெட் டிசைன் பற்றிய பொறி  நுணுக்கமான அந்நூல் பல்கலைக் கழகத்தால் விலக்க‌ப் பட்டது, ஒரு விந்தையே! ராக்கெட் எவ்விதம் பூமியின் ஈர்ப்பியல் கவர்ச்சியைத் [Earth’s Gravitational Pull] தாண்டி, விடுதலை வேகத்தை [Escape Velocity] எட்டும் என்ற கணித விளக்கங்கள் அந்நூலில் இருந்தன! புறக்கணிக்கப் பட்ட அந்த அரிய ஆய்வு நூலை ஹெர்மன் புத்தகமாக வெளி யிட்டதும், அவரது புகழ் ஓங்கியது!

    1922 ஆண்டு வரை ஹெர்மனுக்கு அமெரிக்க ராக்கெட் முன்னோடி, ராபர்ட்  கோடார்டைப் பற்றி எதுவும் தெரியாது! அதே போல் 1925 வரை ரஷ்ய  ராக்கெட் முன்னோடி ஸியோல்கோவிஸ்கியைப் பற்றி அறிய ஹெர்மனுக்கு வாய்ப்பில்லாமல் போனது! அமெரிக்க, ரஷ்ய ராக்கெட் மேதைகளைப் பற்றி அறிந்தபின் இருவருக்கும், ஹெர்மன் கடிதம் எழுதித் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்! அவர் இருவருடன் அளவளாவிய பின், ஹெர்மன் அவர்களது ராக்கெட் முன்னோடிச் சாதனைகள் தன்னை விட முந்தியவை என்று ஒப்புக் கொண்டார்!

    1929 இல் ஹெர்மன் ஓபெர்த் எழுதிய ‘விண்வெளிப் பறப்புக்கு வழிமுறைகள் ‘ [Ways to Spaceflight] என்னும் நூல் பிரான்ஸின் 10,000 பிராங்க் முதற்  பரிசைப் பெற்றது! 1931 இல் அவரது முதல் எரித்திரவ சோதனை ராக்கெட் பெர்லினுக்கு அருகில் ஏவப்பட்டது! இரண்டாம் உலகப் போரின் சமயம் 1940 இல் ஜெர்மன் குடிநபராகி, 1941 இல் ஜெர்மன் ராக்கெட் ஏவுதளத்துக்கு  அழைத்துச் செல்லப் பட்டார்!

    நவீன ராக்கெட் பொறிநுணுக்கத்தை விருத்தி செய்து, இரண்டாம் உலகப்  போரில் ஹிட்லரின் ஆணைக்குப் பணிந்து, ஜெர்மன் எஞ்சினியர் வெர்னர்  ஃபான் பிரெளன் என்பவரின் கீழ்க் கட்டளை ஏவுகணைகளைப் படைத்து,  ஐரோப்பிய நாடுகளை நோக்கி வீசி அழிவை உண்டாக்கியவர்!  ஒருகாலத்தில் வெர்னர் ஃபான் பிரெளன், ஹெர்மன் ஓபெர்த்தின் உதவியாளராகப் பணிபுரிந்து ராக்கெட் பொறிநுணுக்கத்தைக் கற்றவர்! அமெரிக்காவில் 1955 முதல் 1958 வரை ‘விண்வெளி முற்போக்கு ஆய்வாளராகப்’ [Advanced Space Research] பணி புரிந்து, பின் மீண்டும் ஜெர்மனிக்கு வந்து நூரன்பர்க்கில் தனது ஓய்வுக் காலத்தைத் தள்ளினார்!

    3. அமெரிக்க ஜெர்மன் ராக்கெட் மேதை வெர்னர் பிரெளன்

    1925 இல் ஹெர்மன் ஓபெர்த் எழுதிய ‘அண்டவெளிக் கோள்களுக்கு ராக்கெட் ‘ என்னும் நூலைப் படித்து பிரெளனின் வேட்கை ராக்கெட் மீது  ஈடுபட்டது! 1932 இல் எஞ்சினியரிங் பட்டம் பெற்ற பிறகு ராக்கெட் எஞ்சின் ஆய்வுகள் செய்து, ‘எரிமுறைச் சோதனைகள்’ என்னும் ஆய்வு நூல் எழுதி Ph.D. பட்டமும் பெற்றார். அந்நூல் 300, 660 பவுண்டு உதைப்பு  [Thrust] ராக்கெட் எஞ்சின்களின் டிசைன், அமைப்பாடு ஆகியவற்றை விளக்கின. 1934 இல் பிரெளனின் சோதனைக் குழு முதன் முதல் 1.5 மைல் உச்சிக்கு ஏறும் இரண்டு ராக்கெட்களை ஏவியது. அவை 47 அடி நீளமுடன், 1600 பவுண்டு பளுவை [Payload] ஏந்திக் கொண்டு, ஆல்ககால், திரவ ஆக்ஸிஜனை [Alcohol, Liquid Oxygen] எரித்திரவமாக உபயோகித்து 60,000  பவுண்டு உதைப்பு கொண்ட V2 ராக்கெட்கள். மேலும் அவை ஒலி வேகத்தைத் தாண்டி 50 மைல் உயரத்தில் எழும்பி, 200 மைல் தூரம் சென்று தாக்கும் வல்லமை பெற்றவை! அவற்றின் திடீர்ப் பாய்ச்சலைக்  காணவும் முடியாது! அவற்றின் திடீர்த் தாக்குதலைத் தடுக்கவும் முடியாது!  அத்தகைய அசுர வல்லமை பெற்றவை V2 ராக்கெட்கள் !

    இரண்டாம் உலகப் போரில் அவரது குழு ஹிட்லரின் ஆணைக்குக் கீழ்,  பயங்கர V2 ராக்கெட்களை ஏவி, பேர‌ழிவுச் சேதத்தை உண்டாக்கியது! முதல்  ராணுவ ராக்கெட் 1942 அக்டோபர் 3 இல் ஏவப்பட்டு வெற்றிகரமாகச்  சோதனை முடிந்ததும், 1944 செப்டம்பர் 6 ஆம் தேதியில் முதல் V2  கட்டளை ஏவுகணை [Guided Missile] பாரிஸின் மீது வீசப்பட்டது!

    அதன் பின் லண்டன் மீது 1000 ஏவுகணைகள் அடுத்தடுத்து அனுப்பப் பட்டு அங்கே  உயிர்ச் சேதத்தையும், பொருட் சேதத்தையும் பேரளவில் உண்டாக்கின! யுத்த முடிவிற்குள் ஜெர்மனி 4000 V2 ஏவுகணைகளை ஐரோப்பிய பகை நாடுகள்  மீது ஏவியதாக அறியப்படுகிறது!

    1945 இல் இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் வெர்னர் ராக்கெட் குழுவினர் அமெரிக்கரிடம் சரணடைந்தனர்! 1952 ஆம் ஆண்டு ஹன்ட்ஸ்வில், அலபாமாவில் [Huntsville, Alabama] அமெரிக்க ராணுவக் கட்டளை ஏவுகணை ஆயுதத் திட்டத்தில் [US Army Ballistic Weapon Program] பணி செய்ய அனைவரும் அனுப்பப் பட்டனர்!  1957 அக்டோபர் 4 ஆம் தேதி ரஷ்யா ஸ்புட்னிக்கை விண்வெளியில் ஏவி, அண்டவெளி யுகத்தை ஆரம்பித்து வைத்தது! அதன் பின் வெர்னர் பிரெளன் குழுவினர் விண்வெளி ராக்கெட் பணியில் தள்ளப் பட்டு அமெரிக்காவில் மகத்தான விண்வெளி விந்தைகள் புரிந்தனர்! வெர்னர் பிரெளன் நாசா [National Aeronautics & Space Administration] நிறுவனம் தோன்றிய‌தும் மார்ஸெல் விண்வெளிப் பயண மையத்தின் ஆணையாளராக [Director, George Marshall Space Flight Center] நியமிக்கப் பட்டார்! அப்போது வெர்னர் சந்திர மண்டலப் பயணத்துக்குப் பலவித ராட்சத ராக்கெட்களை [Saturn I, Saturn IB, Saturn V] டிசைன் செய்து, பல விண்வெளித் தீரர்களை நிலவில் இறக்கிப் பாதுகாப்பாக பூமிக்கு மீளச் செய்திருக்கிறார்!

    அமெரிக்காவில் ராபர்ட் கோடார்டு பெற்ற மதிப்புகள்

    1942 ஆம் ஆண்டு ராபர்ட் கோடார்டு அமெரிக்கக் கடற்படை விமானவியல்  ஆராய்ச்சி ஆணையாளராக [Director of Research, Navy Dept, Bureau of Aeronautics] நியமிக்கப் பட்டார். அமெரிக்க ராக்கெட் குழுவின் [American Rocket Society] ஆணையாளர் பதவியை 1944 இல் ஏற்றார். கிளார்க் பல்கலைக் கழகம் D.Sc. கெளரவரப் பட்டத்தை 1945 இல் கோடார்டுக்கு அளித்து அவரைப்  பாராட்டியது! 1959 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கத்தின் 86 ஆவது காங்கிரஸ்  பேரவைக் காலஞ் சென்ற பேராசிரியர் டாக்டர் ராபர்ட் கோடார்டுக்குத் தங்கப் பதக்கம் அளிக்க அனுமதித்தது! 1945 ஆம் ஆண்டு மேரிலாண்டு பால்டிமோரில் ராபர்ட் கோடார்டு காலமாகி, வொர்செஸ்டரில் அவரது உடல் அடக்க மானது.

    உன்னத முன்னோடி ராக்கெட் மேதை கோடார்டு நினைவாக 1959 மே  மாதம் முதல் தேதி, மேரிலாண்டு கிரீன்பெல்டில் உள்ள நாசாவின் [NASA] மாபெரும் விஞ்ஞான விண்வெளி ஆய்வுத்தளம் [Space Science Laboratory]’ கோடார்டு விண்வெளிப் பயண மையம்’ [Goddard Space Flight Center] எனப் பெயரிடப் பட்டுள்ளது.

    *********************

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    நம்பாளை வரைந்ததற்கு நன்றி கேசவ்….

    கிரேசி மோகன்

    crazy

    அஞ்சும் அருச்சுனர்க்கு ஆறுதல் கூறியன்று
    அஞ்சரசு ஆளவைக்க, ஆண்டதேர்மேல் -அஞ்சனை
    சேய்பறக்கக் கையில், சவுக்கெடுத்த சாரதி,
    ஆய்க்குல சிங்கா அருள் ….

    பாலுக்கும் காவலாய், பூனைக்கும் தோழனாய்அப்,
    பாலுக்கும் அப்பாலே பாதுகாக்கும் -மாலே,
    பழகிடப் பூனையே, பாய்ந்தால் புலியே,
    அழகிய சிங்கா அருள் ….

    நாணமின்றி யுத்தத்தில், நாலுகால் ஜந்துக்கள்,
    சாணமள்ளிக் கொட்டும் ஜனார்த்தனனை, -ஞானமள்ளி
    உண்ணென கீதையை, ஊட்டியதே ரோட்டியை,
    கண்ணனை நெஞ்சே கருது ….

    காலை எழுந்தவுடன், கண்ணன் பெயர்சொல்லி,
    மூளை அடுப்பை மூட்டிடு, -மாலை,
    மலைவனம் சென்றாயர், மாடுகள் மேய்க்க
    அலைபவன் பேரால், அணை(SWITCH OFF) ….

    மூப்பிழைய, மூச்சடைக்க, சாப்பாடே நஞ்சாக,
    கூப்பிடாத காலன் கரம்குலுக்க, -ஆப்பழியும்,
    அந்திம நாளேனும் ,அய்யோ மறவாது,
    நந்த குமாரனை நம்பு ….

    பலன் -வேதவல்லித் தாயார் அருள்….
    ————————————————————————–
    வேதவல்லித் தாயே, வினைதீர்க்கும் செங்கமலப்
    பாதவல்லி, பார்த்தன்தன் சாரதியின் -கீதவல்லி,
    ஏதமில்லா ஞானத்தை, ஏதுமில்லா மோனத்தை,
    சாதகனென் சிந்தையில் சேர் ….கிரேசி மோகன்….

    Share
  • சாவியின் கதை

    —கவிஜி.

    kavijiஎன்னால் அடங்கி இருக்க முடியவில்லை. கையில் கிடைத்த சாவி என்னைத் திறந்து கொண்டே இருந்தது. நானும் என்வீட்டுக் கதவு பூட்டுக்கு பொருத்திப் பார்த்தேன். திறக்க முடியவில்லை. பின், வீட்டுக்குள் இருந்த உள் அறைக்கான பூட்டில்பொருத்திப் பார்த்தேன். ம்ஹும், சரியாக மாட்டிக் கொள்ள வில்லை.

    “அப்படி என்றால் இந்தச் சாவி யாருடையது? எதற்கு என் கையில் கிடைத்திருக்கிறது! என்னால் தூங்க முடியவில்லை.இரவுகளின் கும்மாளம் நிறமற்றுக் கிடந்த கருவிழிக்குள் கருமை அடித்தது போலவே நினைத்துக் கொண்ட நான்மெல்லவெளியே கிளம்பினேன். சாவி இருக்கிறதென்றால் கண்டிப்பாக பூட்டும் இருக்கும். இல்லாமல் போவது போல ஒரு பிரமைஇப்போது இருந்தாலும் இல்லாமல் போகாது. பூட்டு மாயப் பூட்டுகளுக்கு கூட மாயச் சாவிகள் உண்டு என்பதில் திண்ணமாய்ஒரு முறை சாவியை எடுத்துப் பார்த்துக் கொண்டேன். மாயங்களின் சாவியோ என்று மனம் மயங்கியது. ஒருவேளை இதில்திறக்கும் பூட்டுக்குப் பின் ஒரு பூதம் கூட இருக்கலாம் தேய்க்க தேய்க்கத் தங்க மழையாகக் கொட்டலாம். பணம் புரளும்ஆற்றைக் கூட நான் திறக்க போகும் பூட்டு தரலாம் என்று கற்பனையின் திறவுகோலைத் திறந்து கொண்டே நடந்தேன்.

    அடுத்த வீதியில் ஒரு கதவு பூட்டப் பட்டிருக்க. மெல்ல அருகில் சென்றேன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நின்றேன்.நிலா மட்டுமே சாட்சி. அதைக் கூட பூட்டிதான் வைத்திருக்கிறார்கள் போல என்பது போல ஒரு புன்னகையோடு அருகில்சென்று திறக்கத் தொடங்கினேன்.

    கரக். சடக் என்று சத்தம் வந்ததே தவிர பூட்டுத் திறந்தபாடில்லை. எனக்கு நெற்றியில் கோடாய் வியர்வை சூடாய் வழிந்தது.வேகமாய் எழுந்து கொண்டேன். “இந்தப் பூட்டுக்கு பின் வெறும் வீடுதான்”என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே மீண்டும்நடக்கத் தொடங்கினேன். அடுத்த வீதியில் ஒரு கதவு வெறுமனே சாத்தி இருந்தது.

    ஆர்வம் உந்தித் தள்ள. மெல்ல கதவைத் தொட்டேன் அது தானாக திறந்து கொண்டது ஒரு பேய் வீட்டுக் கதவு போல.

    ‘திக்‘- என்று உணர்ந்து சுதாரித்துக் கொண்ட நான் மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தேன். அது வராண்டாவாக நீண்டு கிடக்கமெல்ல, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே உள் நோக்கி நடக்கத் தொடங்கினேன். இடது பக்கம், வலது பக்கம்என்று அறைகள் பூட்டிக் கிடந்தன எல்லாக் கதவுகளிலும் வித விதமான பூட்டுக்கள் தொங்க… எனக்கு மனம் வலுத்தது

    “சரிதான், காரணம் இல்லாமல் இந்தச் சாவி நம் கையில் எப்படி இருக்கும்? இவற்றில் ஒரு பூட்டுக்கு இந்தச் சாவி சொந்தம்திறந்த பின் கண்டிப்பாக அதியசம் ஏதோ நடக்கப் போகிறது”- என்று என் மூளை யோசிக்க யோசிக்க கை வேலை செய்தது.

    இது நான்காவது பூட்டு. ம்ஹும்… திறக்க வில்லை அடுத்து… அடுத்து… அடுத்து … என்று என் உடல் தெப்பலாக நனைந்துவிட்டது. பயம் இருந்தும் பரவசம் மேலோங்கிக் கொண்டே போக, இதோ… இதோ… இந்தப் பூட்டு திறக்கப் போகிறது. அதோ…அதோ… அந்தப் பூட்டு திறக்கப் போகிறது என்று மனம் ஊசலாடிக் கொண்டே இருந்ததில், தவிப்பும் பயமும் மாறி மாறிமனதை நிறைத்தன.

    சோர்வு மட்டுமே மிச்சம் வெளியே வந்தேன். மனம் ஒரு முறை திரும்ப சொன்னது. மெல்லத் திரும்பினேன்.

    திக்… திக்… திக்… மனதுக்குள் சம்மட்டிக் கொண்டு அடித்தது போல இருந்தது. நான் கடைசியாக திறந்து கொண்டு வெளியேவந்த கதவு. அதாவது முன்பு உள்ளே செல்லும் போது பூட்டாமலே இருந்த கதவு, இப்போது பூட்டிக் கிடந்தது. நான்அனிச்சையாக இரண்டடி பின்னால் நகர்ந்தேன். மனம் மாயைக்குள் சுழன்றது. இல்லை, நன்றாக ஞாபகம் இருக்கிறது.முன்பு உள்ளே போகும் போது இந்தக் கதவில் பூட்டு இல்லை. பூட்டியிருக்கவும் இல்லை. பின் எப்படி இப்போது? நான்மெல்லப் பயத்துக்குள் போனேன். திரும்பி வீட்டை நோக்கி வந்து விடத் தோன்றியது . சரி, இந்தப் பூட்டையும் திறந்துபார்த்து விடலாமா என்றும் தோன்றியது. மெல்லப் பூட்டின் அருகே சென்றேன். மனதுக்குள் பயம் தவணை முறையில்அதிகரித்துக் கொண்டேயிருக்க, சட்டெனத் திரும்பி வீடுநோக்கி ஓடி வந்தேன்.

    அந்தப் பூட்டிய கதவுக்குள் பணக் கட்டுகள் பறந்து கொண்டிருந்தன. இதே போல ஒரு கதாப்பாத்திரம் நாளை இந்தச் சாவிக்குதகுந்தாற் போல ஒரு பூட்டைத் தூக்கிக் கொண்டு சுற்றுவதாக இதே கதையாசிரியன் வேறு ஒரு கதை கூட எழுதலாம்இன்றோ நாளையோ.

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 10

    – புலவர் இரா. இராமமூர்த்தி.

    ஓர் அரசனுக்குப் பொருள் இன்றியமையாதது! பொருளாதாரம் அரசாட்சிக்குத் தேவை! இந்தப் பொருளை அரசன் எவ்வாறெல்லாம் ஈட்டலாம் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்! நாட்டின் பொருளாதாரத்தைப் பெருக்க அரசன் இயற்கைச்செல்வத்தை முறைப்படி, தேவையான பொருளாக மாற்றிக் கொள்ளலாம்!

    பொருள் என்பதற்குப் பரிமேலழகர் தரும் விளக்கம் சிறந்தது! நாட்டால் ஆக்கவும், அரணால் காக்கவும் படுவதாகியபொருள் என்கிறார் அவர்! நாட்டின் இயற்கை வளங்களால் உருவாக்கப்படும் பொருள், நாட்டால் ஆக்கப்படுவது; நாட்டின்மக்களின் உழைப்பால், வயலிலும், கடலிலும், தொழிற்சாலைகளிலும் ஈட்டப் பெறுவது! இப்பொருளை அறவழியில் ஈட்டவேண்டும்! அறவழியில் பொருளீட்டி அறவழியில் இன்பத்தை நுகரவேண்டும் என்பதைக் காட்டுவதற்குத்தான், அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்கள் அதேவரிசையில் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன!

    இந்தப் பொருள் உருவாதற்கு உரிய செயல்களை அரசன் ஊக்குவிக்க வேண்டும்! நாட்டுமக்கள் வரிப்பணமாக வேளாண்மை வருவாயில் ஆறில் ஒரு பங்கைச் செலுத்துவர் அந்த ஆறில் ஒருபங்கு என்பது

    ”தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான்என்றாங்கு
    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை”(43)

    என்ற குறட்பாவில் கூறிய ஐந்துடன், ஆறாவது பங்காகக் கருதப் பெற்றது! இந்த வரியையும் நிலம் விளையாதவிடத்தும், பஞ்சகாலத்திலும் வாங்காமல் வரி விலக்களித்து, அரசன் பொருள் ஈட்டவேண்டும் என்கிறார் திருவள்ளுவர். இதனை திறனறிந்து, தீதின்றி வந்தபொருள் என்ற பாடற்பகுதியால் விளக்குகிறார்!

    ”இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
    வகுத்தலும் வல்லது அரசு ” (385)

    என்ற திருக்குறள் அரசன் தொழிலை வளர்த்தல், பொருளை ஈட்டல், சேமித்தல், உரியவாறு நாட்டின் நலனுக்காகப் பிரித்துஅளித்தல் ஆகிய பொருளியல் சிந்தனையைக் கூறுகிறது! ஆக, ஓர் அரசன் தனது நாட்டை மேம்படுத்துவதற்குப் பொருள்சேர்த்தல் தேவை! அதற்கு வயல் வளமும் அதனைச் சார்ந்த தொழில்களும் தேவை! இதற்கு அடிப்படை நீர்வளம் என்கிறார்!

    ”இருபுனலும் வாய்த்த மலையும் வருபுனலும்
    வல்லரணும் நாட்டிற் குறுப்பு ”(737)

    என்ற குறளில் இருபுனல் என்பது கீழ்நீர், மேல்நீர் ஆகியவை என்கிறார் பரிமேலழகர்! அவற்றுள் கீழ் நீர் கிணறு, குளங்களையும், மேல்நீர் ஏரி , ஆறுகளையும் குறிக்கும்! வாய்த்த மலை என்பது அரணாகவும், மலைவளத்தின்அடிப்படையாகவும், மழைக்காலத்தில் சேர்த்த நீரை அருவியாகத் தருவதாகவும் அமைந்துள்ளது!மலையிலிருந்து வரும்நீர், ”வருபுனல்”! இவை பஞ்சகாலத்திலும் உதவுபவை! இவற்றால் முறையாக வரும் வருவாய் உள் நாட்டிலிருந்துவருபவை !

    ஆறிலொரு பங்காகிய வரி வருவாயுடன், மேலும் மூன்று வழிகளில் அரசனிடம் பொருள் வந்து சேரும் என்கிறார்திருவள்ளுவர்! அவை உறுபொருள் அதாவது, உடையவர் இல்லாத நிலையில் யாருக்கும் உரிமையின்றிக் கிடந்தபுதையல், வாரிசற்ற செல்வம் ஆகியவை. அடுத்து உல்கு பொருள், அதாவது நாட்டின் பொருளாதாரச் சமநிலையைத் தடுமாறவைக்கும் வகையில், நாட்டின் செல்வத்தை எடுத்துச் செல்லும் வணிகர்களிடம், சுங்கவரி, முதலான வரிகளைவிதித்து ஈட்டும் செல்வம்; அடுத்து, ஒன்னார்த் தெறு பொருள் அதாவது பகைவரை எதிர்த்துப் போரில் வென்று பெறும்பொருள் ஆகிய மூன்றும் வேந்தனின் பொருள் என்கிறார்!

    அண்டை நாட்டின்மேல் படையெடுத்து வென்ற அரசன், அந்த நாட்டின் பொருளை அடைவதே, ”ஒன்னார்த் தெறு பொருள்”!திருவள்ளுவர் ஒரு வேந்தன் கொடுங்கோலனாக மக்கள் செல்வத்தைப் பறிக்கக் கூடாது என்கிறார்! அறமற்ற வழியில்பொருளீட்டல் தவறு என்கிறார். ஆனால் அடுத்த நாட்டு அரசன் மேல் படையெடுத்து வென்றதால் வரும் பொருளைக்கவர்ந்து கொள்வதை மட்டும் ஏற்றுக் கொள்கிறாரே! அஃது எவ்வாறு சரியானதாகும்?

    ”உறுபொருளும் உல்குபொருளும் தன் ஒன்னார்த்
    தெறு பொருளும் வேந்தன் பொருள்” (756)

    என்ற பாட்டு நம்மை வியக்கவும் திகைக்கவும் வைக்கிறது ! அண்டை நாட்டை ஆக்கிரமித்து அந்த நாட்டுச் செல்வத்தைவாரி விழுங்கும் ஏகாதிபத்தியச் செயலைத் திருவள்ளுவர், அரசனுக்குப் பொருள் வந்து சேரும் வழியாக ஏன் கூறுகிறார்? சிந்திக்க வேண்டும்! அறவழியில் வாராத பொருளை அரசன் ஏற்றல் தவறு என்பதை,

    ”அருளோடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
    புல்லார் புரள விடல் ” (755)

    என்ற பாட்டில் விளக்கும் அவர், அடுத்தநாட்டுக்கு உரிய பொருளை ”வேந்தன் பொருள்” என்று ஏற்பது எவ்வாறு?அவ்வாறாயின் இதற்கு வேறு பொருள் உள்ளதா? இந்தக் குறட்பாவை மீண்டும் ஒருமுறை எழுத்தெண்ணிப் படிப்போம்!

    இக்குறட்பாவில் ஒன்னார்த் தெறுபொருள் என்ற தொடருக்கு முன், தன் என்ற முன்னொட்டு அமைந்திருப்பதைநோக்குங்கள்! தான் ஒன்னாரைத் தெறுதல் என்பது தானே அண்டை நாட்டார் மேல் படைஎடுத்தலைக் குறிக்கும் ஆனால்தன் ஒன்னார்த் தெறுதல் என்பது தன்மேல் அண்டை நாட்டார் படையெடுத்துவரும்போது அவரைத் தற்காப்புக்காகஎதிர்ப்பதைக் குறிக்கும்! ஆகவே அண்டை நாட்டின் மேல் ஆதிபத்தியம் செலுத்துவது வேறு;அண்டை நாட்டார்படையெடுத்து வந்தபோது எதிர்ப்பது வேறு! இவ்வகையில் தம், மேல் படையெடுத்து வந்த ஒன்னாரை எதிர்த்துப் போரிட்டுவெல்லும் போது, அவர்கள் வீழ்ந்தால், அந்த நாட்டை ஆளும் உரிமையை மேற்கொண்டு அந்தநாட்டின் வருவாயை எடுத்துஅவர்களுக்கே தந்து ஆளும் வகையில், ‘தன்’ ஒன்னார்த்தெறுபொருளை, வென்ற வேந்தன் தன் பொருளாகக் கொள்வதுதவறாகாதல்லவா?

    மக்கள் அளிக்கும் ஆறில் ஒருபங்கு வருவாயைத் தவிர மக்களைத் துன்புறுத்திப் பொருள் சேர்க்க மாட்டான்; மற்றும்தன்னுடன் மாறுபட்ட மனம் கொண்டு படையெடுத்து வரும் பகைவர்களை எதிர்த்து அடிமைப்படுத்துவானேயன்றி, தானேஎவர்மீதும் படையெடுத்துச் சென்று அழிப்பதில்லை!” என்ற பொருளில் சூளாமணி என்ற தோலாமொழித் தேவரின்இலக்கியம் கூறும் பாடலாகிய

    ”ஆறிலொன்றறமென அருளினல்லதொன்று
    ஊறுசெய்து உலகினில் உவப்பதில்லையே!
    மாறுகொண் டெதிர்ப்பவர் வணக்கின் அல்லதை
    சீறி நின்று எவரையும் சிதைப்ப தில்லையே!” 

    என்ற பாடல் இக்கருத்துக்கு அரண் செய்வதைக் காணலாம்! ”தான்” என்பது-” தன்” என்று குறுகியதால், விரிந்த புதிய பொருள்இது!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் 45

    இசைக்கருவிகள் அருங்காட்சியகம், ப்ரஸ்ஸல்ஸ், பெல்ஜியம் (2)

     

    சுபாஷிணி

    ​இந்த அருங்காட்சியகத்தில் உலகின் பல நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட இசைக்கருவிகள் இருப்பதாக முந்தைய பதிவில் தெரிவித்திருந்தேன். இந்த வடிவத்தில்தான் ஒரு இசைக்கருவி இருக்கும் என்ற நமது பழகிப் போன கண்களுக்கு சவால்விடும் வகையில் இங்கிருக்கும் இசைக்கருவிகள் இருக்கின்றன என்பது தான் ஆச்சரியம்.

    ​1

    பியானோவில் பழங்காலத்து வகையிலிருந்து இக்காலம் வரை என பலவேறுபாடுகளைக் கொண்ட பியானோக்கள்; வயலினில் சிறியது பெரியது நடுத்தர அளவு என வித்தியாசங்கள்; மேள வகை இசைக்கருவிகளில் தோலினால் செய்யப்பட்டவை, மரத்தால் செய்யப்பட்டவை- சிறியவை பெரியவை என வேறுபாடுகள் என ஒவ்வொன்றும் தனித்துவத்துடன் விளங்குகின்றன. சாக்ஸஃபோன் கருவிகளில் வெவ்வேறு வகைகள். அதன் பளபளக்கும் வெளிப்பகுதிகள் இசைப்பிரியர்கள் மட்டுமல்ல.. கண்காட்சிக்கு வந்திருக்கும் எல்லோரையும் கவரக்கூடியதாக இருக்கின்றது.

    2​
    இவைதான் இசைக்கருவிகள் என அடையாளம் காணமுடியாத வகையில் தூக்கணாங்குருவிக் கூடுகளை ஒத்த வடிவிலான சில இசைக்கருவிகள் ஆச்சரியமூட்டுகின்றன. குழல் வகை கருவிகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. பறை வடிவ இசைக்கருவிகள் மொத்தமான வடிவத்தில் மெலிதான வடிவத்தில் சிறியவை பெரியவை என பல நாடுகளிலிருந்தும் சேகரிக்கப்பட்டவை இங்கு காட்சிக்கு உள்ளன. மனித குல வரலாற்றில் குழல் போன்ற இசைக்கருவிகளும் தாள இசைக்கருவிகளும் மிகப் பழங்காலம் தொட்டே உள்ளன என்பதை நேரில் இங்கு வந்து பார்ப்பதன் வழி நிச்சயம் அறிந்து கொள்ள முடியும்.

    ​3

    இந்த அருங்காட்சியகத்தை அடைவது மிகச் சுலபம். பிரஸ்ஸல்ஸ் அரச மாளிகையின் இடப்புறத்தில் இருக்கும் Rue Montagne de la Cour/Hofberg 2 சாலையில் Old England department store கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கின்றது. 18ம் நூற்றாண்டின் புதிய அமைப்பை பிரதிபலிக்கும் இக்கட்டிடம் 1899ம் ஆண்டில் கட்டப்பட்டது.

    ​4

    இசைக்கருவிகளை பார்ப்பது மட்டுமல்லாது ஒவ்வொரு இசைக்கருவியையும் இசைத்தால் வெளிப்படும் ஓலியையும் கேட்டு மகிழும் வகையில் இங்கே கட்டிட அமைப்பே அமைந்துள்ளது. கண்காட்சிப் பகுதி ஒவ்வொன்றிலும் அங்கு காட்சிக்கு உள்ள இசைக்கருவிகளின் முன்னே நின்று தரையில் இருக்கும் சென்சர் பட்டனை அழுத்தினால் நமது காதில் நாம் பொறுத்திக் கொள்ளும் headset வழியாக நாம் இசையைக் கேட்டு ரசிக்க முடியும். என் கண்களுக்கு வித்தியாசமாக எனக்குத் தெரிந்த இசைக்கருவிகளையெல்லாம் கேட்கும் எண்ணத்தில் நான் இதனை முயற்சி செய்து பார்த்து மாறுபட்ட இசை ஒலிகளைக் கேட்டு வியப்படைந்தேன்.

    ​

    எத்தனை எத்தனை இசைக்கருவிகள்.. அவை எழுப்பும் ஒலிகள் தான் எத்தனை எத்தனை..!

    மனித வாழ்வில் பல்வேறு சிந்தனைகளால் இழுத்தடிக்கப்படும் மனம் அமைதியுற இசைக்கருவி வாசித்தல் உதவும். சிலருக்கு இயற்கையாகவே இசைக்கருவிகளில் ஏதேனும் ஒன்றினை வாசிக்க விருப்பம் இருக்கின்றது. பலருக்கு பெற்றோர் அல்லது சுற்றுச்சூழல் ஆகியவற்றின் தாக்கத்தால் ஏற்படும் ஆர்வம் தூண்டுதலாக அமைகின்றது. எப்படியாகினும் ஏதாகினும் ஒரு இசைக்கருவியை பயிற்சி செய்தலை வாழ்க்கையின் ஒரு அங்கமாகப் பழக்கிக் கொள்வது அதிலும் குறிப்பாக இளம் வயதினில் இருந்தே இவ்வகை பயிற்சிகளில் ஈடுபடுவது இசைக்கருவிகளில் திறமையைப் பெருக்கிக் கொள்ள மிக உதவும். பள்ளிக் கூட பாட நடவடிக்கைகளோடு இசைக் கருவிகளிலும் குழந்தைகளின் நாட்டத்தை பெற்றோரும் ஆசிரியரும் செலுத்த வழிகாட்ட வேண்டியதும் மிக முக்கியம்.

    ​5

    பெல்ஜியம் வருபவர்கள் தவறாது வந்து பார்க்க வேண்டிய ஒரு கூடம் என்றால் இந்த அருங்காட்சியகத்தை கூறுவேன். இந்த அருங்காட்சியகத்தை விட்டு வெளியே வரும் போது நம் மனம் மாறுபட்ட சிந்தனையில் மூழ்கியிருப்பதை நிச்சயம் உணர்வோம்.

    அடுத்த பதிவில்.. மற்றுமொரு நாட்டில் .. மற்றுமொரு அருங்காட்சியகத்தைக் காண்போமா..?

    சுபா

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(162)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்கள்.
    ஒருநாட்டில் நாம் எத்தனைக் காலம் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல. அந்நாட்டின் இயற்கை வளங்களை, அந்நாட்டின் சிறப்புத்தன்மைகளை, அந்நாடு தன்னுள் அடக்கியிருக்கும் வனப்புகளைச் சரியான வகையில் உள்வாங்கியிருக்கிறோமா ? என்பதுவே முக்கியம்.

    அப்படியான சுகிப்புகளின் அடிப்படையில்தான் வாழ்க்கையின் சுவையை எவ்வாறு நாம் நுகர்ந்துள்ளோம் என்பது தெளிவாகும். நான் இங்கிலாந்தில் சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறேன். இங்கிலாந்து நாட்டின் சரித்திரப் பிரசித்தி பெற்ற இடங்கள் அனைத்தையும் பார்த்து விட்டேனா ? அல்லது, இங்கிலாந்து தன்னுள் அடக்கியிருக்கும் பல பிரமிப்புக்களைச் சரியான வகையில் உள்வாங்கியிருக்கின்றேனா எனும் கேள்வி என்னை நோக்கிக் கேட்கப்பட்டால் அதற்கு உண்மையான பதில் இல்லை என்பதுவேயாகும்.

    அதற்குப் பல காரணங்கள் உண்டு. நான் இங்கு வந்த ஆரம்பக்காலங்களில் மாணவனாக எனது அன்றாட வாழ்க்கையுடன் போராடிக் கொண்டிருந்தேன். அதன் பின்னால் திருமணமானதும் நாம் எமது வாழ்வைச் சைபர் எனும் இடத்தில் ஆரம்பிக்க வேண்டியதாக இருந்ததினால் முழுக்கவனமும் வாழ்வைக் கட்டியெழுப்புவதிலும் வேறு சில பயனற்ற முயற்சிகளிலும் செலவழித்தது மற்றொரு காரணம். இப்படிப் பல காரணங்களுடன், நான் வாழும் நாட்டின் முழு வளத்தினையும் பார்த்து பரவசிக்க வேண்டும் எனும் நினைவுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது இன்னொரு காரணம்.

    ஆனால் இடையிடையே சுற்றுலா மேற்கொள்ள வரும் நண்பர்கள் எனைத்தேடி வரும்போது அவர்களை அழைத்துச் சென்றதால் சில சில அரிய இடங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டாமல் போகவில்லை.

    சில நாட்களின் முன்னால் என் மனைவி தனது பணி நிமித்தம் இங்கிலாந்தின் வடக்குப் பகுதிக்கு விஜயம் செய்ய வேண்டி வந்தது. விருப்ப ஓய்வு எடுத்து இருப்பதால் நேரம் இருக்கிறதே நீங்களும் வாருங்கள் என்று அழைத்தாள் என் மனைவி. சரி, என்று நானும் புறப்பட்டேன், நான் சென்றது இங்கிலாந்தின் வடபகுதியில் இருக்கும் “செபீல்ட் (Sheffield)” எனும் இடமாகும். இது நான் வாழும் பகுதியில் இருந்து சுமார் 210 மைல்கள் தொலைவிலுள்ளது. மோட்டார்காரில் பயணிக்கும் போது சுமார் நான்குமணி முப்பது நிமிடங்கள் வரை எடுக்கும். அதிகாலை 5.30 மணிக்குப் புறப்பட்ட நாங்கள் சுமார் மூன்று மணித்தியாலங்கள் பிரயாணித்து விட்டு ஒரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உணவுவிடுதியில் சிற்றுண்டி அருந்துவதற்காக நிறுத்தியதனால், சுமார் 10. 30 மணியளவில் நாம் செல்ல வேண்டிய இடத்தைச் சென்றடைந்தோம்.

    hv4எனது மனைவி ஒரு ப்ராஜெக்ட் மீட்டிங்க்கு சென்றதினால் மனைவியை அங்கு இறக்கி விட்டு நான் அவ்விடத்தைச் சற்றுச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டேன். இங்கிலாந்தின் கிராமியச் சூழலின் முழு அழகும் அங்குதான் தெரிந்தது. அழகாக இருமருங்கும் பச்சைப் பசலென அழகிய புதர்களினூடாக அரைமணி நேரம் பயணித்தால் மற்றொரு கிராமம். இங்கிலாந்தின் கிராமங்கள் அநேகமாக சில அடிப்படை வசதிகளைக் கொண்டிருக்கும் அதாவது ஒரு கடைகளடங்கிய பிரதான தெரு, ஒரு பாடசாலை, ஒரு சர்ச், ஒரு மதுபான பார் (பப்), ஒரு தபால் ஆஃபிஸ். அவைகளினூடாக அமைதியாகச் செல்லும் மக்கள், அவர்களின் போக்கில் எந்தவித அவசரமும் காணப்படவில்லை, வாழ்க்கையின் ஒவ்வொரு கணங்களையும் அனுபவித்துக் கொண்டே நடப்பார்கள் போலும் !

    லண்டன் எனும் அந்தப் பெரிய நகரின் அவசரமான வாழ்க்கை முறைக்கும், இக்கிராமங்களின் அமைதியான அந்நடைமுறை வாழ்க்கைக்கும் இடையில் காணப்பட்ட வித்தியாசம் ஏன் பல ஆங்கிலேயர்கள் இக்கிராமிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து லண்டனை விட்டு ஓடுகிறார்கள் என்பதைப் பரிபூரணமாக விளக்கியது. இங்கிலாந்து அரசியல்வாதிகள் அநேகமாக தமது உரைகளில் “வடக்கிற்கும், தெற்கிற்கும் உள்ள பிரிவு” ( The North South divide ) என்று பேசுவார்கள். இவ்விரு வாழ்க்கைமுறைகளையும் நேரில் கண்டவர்களுக்குத்தான் அதன் உண்மையான அர்த்தம் புரியும் போலிருக்கிறது.

    இக்கிராமங்களில் சிறிய வாசகசாலை உண்டு அதனுள் அமைதியாக மக்கள் அமர்ந்து பத்திரிக்கைகள் படித்துக் கொண்டிருந்தார்கள். இக்கிராமம் ஒன்றில் நான் எனது காரை நிறுத்தி விட்டு நடந்தபோது நான் ஒருவன் மட்டுமே அங்கு ஒரு ஆசிய இணத்தவனாக நின்றிருந்தேன். தெருவில் போவோர் வருவோர் என்னை ஏறிட்டுப் பார்த்தார்கள் ஆனால் அவர்கள் தமக்கேயுரிய பண்பாட்டு வழக்கப்படி ஒரு சிறிய புன்முறுவல் பூத்தார்கள்.

    hv5என் மனைவி சென்ற இடத்திற்குப் பெயர் “ஹோப் வெளி” ( Hope Valley ) என்பதாகும். இங்கிலாந்தின் வனப்பு மிகுந்த பகுதிகளில் ஒன்று ” பீக் டிஸ்ரிக்ட்” (Peak District) ஆகும். இந்த ஹோப் வெளி என்னும் இடம் அதன் மத்தியப் பகுதியாகும். இது இயற்கையாகத் தோன்றிய ஒரு பள்ளத்தாக்கு ஆகும். இப்பகுதியில் இங்கிலாந்தின் பல சரித்திர முக்கியத்துவம் நிறைந்த இடங்கள் அடங்கியுள்ளன.

    hv6இப்பகுதி இங்கிலாந்துக்கு வரும் பல ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் விரும்பி ரசிக்கும் பகுதியாகும். மெய்மறந்து ரசிக்க வைக்கும் அழகிய இயற்கை வனப்பு நிறைந்த அழகிய பகுதியே இது, இங்கு அமைக்கப்பட்டிருக்கும் தெருப்பகுதி மதில்கள், மற்றும் வீட்டுச் சுவர்கள் ஆகியன இப்பகுதியிலிருந்து எடுக்கும் பழமை வாய்ந்த கற்களினாலேயே அமைக்கப் பட்டிருக்கின்றன.

    இப்பகுதியின் முழுவனப்பினையும் கண்டுகளித்து ரசிக்க ஓர்நாள் போதாது எனும் முடிவுக்கே என்னால் வரமுடிந்தது. இன்னுமொருமுறை வந்து பார்க்க வேண்டிய இடம் என்று என் மனதில் குறித்து வைத்துக் கொண்டு நானும் என் மனைவியும் திரும்ப எமது அவசர வாழ்வினை நோக்கிப் புறப்பட்டோம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • தங்கரதம் வந்தது வீதியிலே …

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    thangaratham1அன்பின் முழுமைதனை அனுபவிப்போர் எவருமில்லை என்றுகூட சொல்லிவிடலாம் போலிருக்கிறது. அதுசரி, அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திலே அன்பு என்பதை நினைவில் கொண்டிருப்பதே பெரும்பாடு என்கிற நிலையில், எப்படி முழுமையை எட்ட முடியும் என்கிற கேள்வியில் நியாயமிருக்கிறது. கதையில், கவிதையில், திரைப்படங்களில் மட்டுமே, சித்தரிப்புகளால் சில உயரங்களைத் தொட்டுவிட முடிகிறது. அதுவும் கூட்டணி முயற்சியில் நடைபெறும் இந்தச் சித்துவிளையாட்டு சிலநேரம் மகோன்னதப் படைப்புகளாய் அமைந்துவிடுவதுண்டு.

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களது தயாரிப்பில் உருவான படம் கலைக்கோயில், வியாபார ரீதியாக இந்தப் படம் வெற்றியடையவில்லை என்றாலும் கூட இசையைப் பொறுத்தவரை, ஆத்மதிருப்தி தந்த படம் என்றே சொல்வார் மெல்லிசை மன்னர்.

    இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான திரைச்சித்திரம்! இன்பத்தை ஏந்திவரும் சொற்களா, இசையா, அல்லது கதாநாயக நாயகி ‘பாவ’ங்களா? மொத்தத்தில் இந்தப் பாடல் கேட்கும்போது ஒரு இன்ப உலகத்திற்கு கடத்தப்பட்டுவிடுவது மட்டும் உண்மை! சுகமான ராகமிது, கர்நாடக சங்கீத சாம்ராஜ்ஜியத்தின் ஒரு அங்கமிது! தங்கத்தில் பதித்திடும் வைரத்தை பாசுரமாக்கி, நம் காதுகளுக்கு தந்து மகிழச் செய்திருக்கிறார்கள், பிரபல கர்நாடக சங்கீத வித்வான் பத்மஸ்ரீ பாலமுரளிகிருஷ்ணா மற்றும் பி.சுசீலா குரல்களில் பொழியும் சங்கீத அருவியிது!

    கவியரசு கண்ணதாசன் பாடலில் உள்ள பொருள்பற்றி எடுத்துரைக்க கடவுள்தான் வரவேண்டும், சிருங்கார ரசமென்று வந்துவிட்டால் கவிஞரின் கற்பனை உச்சம் தொடும்! முத்தமிழும் மோகனமும் தக்கதொரு விகிதத்தில் கலந்தினிக்கும் இப்பாடல் அற்புதம் என்பதன்றி வேறேது நான் சொல்ல?

    மாசில் வீணையும் மாலை மதியமும்
    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
    ஈச னெந்தை யிணையடி நீழலே.
    என்கிற தேவாரத்தில் உள்ள சுகம் அத்தனையும் ஒருதுளியும் குறைவின்றி கிட்டும் தேவகானம்! தெய்வீகமும் காதலும் ஒரே சமதளப்புள்ளியில்தான் இருக்கின்றன! மனிதன் காதலை மட்டும் கவனம் செலுத்துகிறான், பக்தன் தெய்வீகத்தில் மட்டும் ஆழ்ந்துவிடுகிறான், கவிஞன் மட்டுமே இரண்டையும் இங்கே கலந்து தருகிறார்! ஆன்மதரிசனம் காட்டுகின்ற நிலையை பக்தி தந்துவிடுவது உண்மையென்றால் நான் சத்தியம் செய்வேன் காதலிலும் அது சாத்தியமே!!

    இப்பாடலில் மற்றுமொரு விசேஷம் – வீணையிசை – சிட்டிபாபு அவர்கள், முத்துராமன் அவர்களுடன் திரையில் தோன்றும் தாரகை சந்திரகாந்தா, (நினைவுக்கு வருகிறதா, சரவணப் பொய்கையில் நீராடி …அதே நாயகிதான்).

    திரைப் படம்: கலைக்கோவில்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே ராமமூர்த்தி
    பாடியோர்: டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா, பி. சுசீலா

    காணொளி: https://youtu.be/a48iEYo3LQc

    ஆ ஆஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆ
    ஆ ஆஆஆஆ ஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ

    தங்கரதம் வந்தது வீதியிலே
    ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
    மரகதத் தோரணம் அசைந்தாட
    நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
    மரகதத் தோரணம் அசைந்தாட
    நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
    தங்கரதம் வந்தது வீதியிலே
    ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
    தங்கரதம் வந்தது வீதியிலே ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ

    செவ்விளநீரின் கண் திறந்து
    செம்மாதுளையின் மணி வாய் பிளந்து
    முளைவிடும் செந்நெல் கோலமிட்டு
    மூவருலா வந்த காலங்கள் போலே

    தங்கரதம் வந்தது வீதியிலே ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

    மாங்கனிக் கன்னத்தில் தேனூற
    சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீன் ஆட
    தேன் தரும் வாழைகள் போராட
    தேவியின் பொன் மேனி தள்ளாட ஆட

    தங்கரதம் வந்தது வீதியிலே ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

    https://youtu.be/a48iEYo3LQc

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy
    ”நாக்கால் நவநீதன், மூக்கால் மணிவண்ணன்,
    கேட்கும் இருசெவியில் கோவிந்தன் -நோக்கும்
    விழியால் வரதன், விரலால் அரியென்(று)
    ஒழிந்தபோ(து) எல்லாம் ஒழுகு”….கிரேசி மோகன்….

    Share
  • அவன்,அது,ஆத்மா (26)

    ஒரு எளிய மனிதனின் சுயசரிதை

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 26

    “செங்கோட்டைச் சித்தப்பா”

    amv

    முன்பெல்லாம் விடுமுறை நாட்களில் மாமா, அத்தை, சித்தப்பா என்று உறவினர் வீடுகளுக்குச் செல்வது குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. வீட்டுப் பெரியவர்கள் அவர்களை ஆசையோடு வரவேற்று அணைத்துக் கொஞ்சி மகிழ்வார்கள். குழந்தைகள் செய்யும் விஷமத்தனத்தையும், விளையாட்டுக்களையும் செல்லக் கண்டிப்போடு ரசித்துக் களிப்பார்கள். எளிய வாழ்க்கையையும், கூட்டுக் குடும்பத்தின் சிறப்பையும் அந்தக் குழந்தைகள் அறிவதற்கு அந்த முறை மிகவும் பயனாக இருந்தது. இப்பொழுது மெல்ல மெல்ல அப்பழக்கம் மறைந்து வருவது வருத்தமாகத்தான் இருக்கிறது.

    அவன் சிறுவயதில் பள்ளிக் கால விடுமுறை நாட்களில் அவனுக்கு மாமா, அத்தை, சித்தப்பா வீடுகளுக்கு அவனுக்கு அக்காவுடன் சென்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்து விட்டு வருவான். அப்படி அவன் அடிக்கடிச் செல்லுமிடம் “செங்கோட்டை”ச் சித்தப்பா என்று அவனால் அன்போடு அழைக்கப்பட்ட அவனுக்கு அப்பாவின் ஒன்று விட்ட சகோதரர் இரா. அனந்தனாராயணனின் இல்லம். அவர் கடையம், தச்சநல்லூர், செங்கோட்டை, குற்றாலம் போன்ற ஊர்களில் “போஸ்ட் மாஸ்டராக” வேலை பார்த்து வந்தவர். மிகவும் நாணயமான மனிதர். உபகாரி. ஒல்லியான, உயரமான தேகம். கொஞ்சம் கரகரத்த குரலில் பேசுவார். அவனது குடும்பத்தில் அந்தக் காலத்தில் கல்லூரிக்குச் சென்று படித்து பி.எஸ்.சி. பட்டம் வாங்கிய முதலாளவர். கடையத்தில் இருந்த பொழுது அவனுக்குச் சித்தப்பா அனந்தனாராயணனும், மீனாக்ஷிச் சித்தியும் அவனை அழைத்துக் கொண்டு சென்று நான்கைந்து நாட்கள் தங்களுடன் வைத்துக் கொண்டிருந்தனர். தெருவுக்குப் பின்னல் ஓடும் வாய்க்காலில் அவனை நீந்தச் சொல்லி ரசிப்பார் சித்தப்பா. கடையத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் அழைத்துச் சென்று ஒவ்வொரு சந்நிதியாக நின்று அவனுக்கு சுலோகங்கள் சொல்லித்தருவார். அவன் ஒரு இடத்தில் நிற்க மாட்டான். கோவிலுக்குள் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டே இருப்பான். அவர் அவனை அன்போடு கையைப் பிடித்து அழைத்து வருவார். ஒருநாளும் கடிந்து பேசியது கிடையாது. அவரோடு அவனும் பூஜைக்குப் பூக்கள் பறித்துத் தருவான். சித்தப்பாவின் வீட்டில் அவரது தகப்பனாரும், அவனுக்குச் சின்னத்தாத்தாவுமான ராமலிங்க ஐயரும், பார்வதிப் பாட்டியும் இருந்தனர். அவனது விஷமத்தனம் தாங்காமல்,” கண்ணா நீ ரொம்பப் பொசுக்கி எடுத்துப் பொட்டில வாரறாய்..வா..வா. ஊருக்குப்போய் ஒன்னோட அம்மாட்டச் சொல்லறேன்” என்று பார்வதிப்பாட்டி அவனிடம் சொல்லுவாள். ஒவ்வொரு நாளும் மதிய வேளையில் பஜ்ஜி, முறுக்கு, தட்டை என்று ஏதேனும் பக்ஷணம் தின்பதற்குத் தருவாள்.

    சித்தப்பாவுக்கு , அவனுக்கு அப்பாவின் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் உண்டு. அவர், அவனுக்கு அப்பாவின் ஒன்று விட்ட சகோதரர் என்று யாருமே சொல்ல முடியாது. “சுந்தரம் அண்ணா, சுந்தரம் அண்ணா” என்று அப்படிப் பாசத்தோடு பழகுவார். தனக்கு அண்ணா சொன்னதை மறுவார்த்தை பேசாமல் கேட்கும் குணம் அவருக்கு இருந்தது. அதையெல்லாம் பார்த்து வளர்ந்த அவனும், அவனுக்கு அக்கா “பாலாவும்” அப்பாவைப் போலவே அவர்களது சித்தப்பவிடமும் பாசத்தோடு இருந்து வருகின்றனர். “கோந்தே” என்றுதான் அவனையும், அவனது அக்காவையும் செங்கோட்டைச் சித்தப்பாவும், மீனாக்ஷிச் சித்தியும் அழைப்பார்கள். உங்களுக்கு எத்தனை வயசானாலும் எங்களுக்கு குழந்தைதானே என்று சொல்வார்கள்.

    “சிறுசேமிப்பும் சித்தப்பாவும்”

    சித்தப்பா தச்சநல்லூரில் “போஸ்ட்மாஸ்டராக” வேலை பார்த்து வந்த சமயம் அவனும், அவனுக்கு ஒன்று விட்ட அத்தையின் (சகுந்தலா அத்தை) மகன் ஸ்ரீதரும் விடுமுறைக்குச் சென்றிருந்தனர். போஸ்ட்ஆபீஸ்சும், அவரது வீடும் ஒரே இடத்தில் இருந்தது. வீட்டின் முன்புறம் அலுவலகமும், பின்புறம் வீடும் இருந்தது. அப்பொழுதெல்லாம் மாலை ஏழுமணிக்கு மேல் “தந்தி” வந்தால் அதை அந்த சரியான நபரிடம் கொண்டு சேர்க்கும் வேலையை அவனுக்கும், அவனது அத்தை மகன் ஸ்ரீதருக்கும் தருவார். ஸ்ரீதர் அவருக்கு மருமகன். சரியாக விலாசம் சொல்லி அவர்களை அனுப்பி வைத்து, அவர்கள் அந்த வேலையைச் செய்து முடித்து விட்டு வரும்பொழுது “இருவருக்கும் ஐம்பது” காசுகள் தருவார். எப்படி? இரண்டு இருபத்தைந்து பைசாக்களுக்கான “ஸ்டாம்ப்” தந்து அவனது பெயரிலும், ஸ்ரீதர் பெயரிலும் “சிறுசேமிப்புக் கணக்கை”த் துவக்கி வைத்தார். ஒவ்வொரு முறையும் அவர்தரும் காசுகள் இருபத்தைந்து பைசா “ஸ்டாம்ப்”பாக அவனது சிறுசேமிப்புக் கணக்குப் புத்தகத்தில் ஒட்டப்பட்டு தபால் அலுவலக முத்திரையும் பதிக்கப்பட்டுவிடும். “என்னடா..சித்தப்பா இப்படி ஸ்டாம்பா ஒட்டித் தராரே..அவர் தரும் காசுக்குக் கடலை மிட்டாய் வாங்க முடியவில்லையே” என்று முதலில் அவனுக்கு அது வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு இரண்டாண்டுகள் சென்ற பின்பு அவனது சிறுசேமிப்புக் கணக்கில் இருந்து சுமார் முன்னூறு ரூபாய்கள் வந்தது. அதில் அவனது பத்தாவது வகுப்பிற்குத் தேவையான புத்தகங்களையும், அருமையான பேனாவும், அழகான சீருடைகளும், சந்தன நிறத்தில் “சான்டக்” செருப்பும் வாங்கித் தந்து,”இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாச் சேத்துண்டுவா.. அது பின்னால ஒனக்கு ரொம்ப உபயோகமாருக்கும்” என்று அவனுக்கு அம்மா அவனிடம் சொன்னாள். திருமணமானபின் அவனும், அவனுக்கு மனைவியும் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தில் சென்னையில் ஒரு வீடு வாங்கினார்கள். அந்த சேமிக்கும் பழக்கத்தை சிறுவயதிலேயே மனதில் விதைத்த “செங்கோட்டைச் சித்தப்பாவை” அவன் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கிறான்.

    “திருக்குற்றால மலையில்”

    amv1
    திருக்குற்றால மலை பார்க்கப் பார்க்க மீண்டும் பார்க்கத் தூண்டும் அழகிய மலை. அந்த மலைக்கு இறைவன் பாலபிஷேகம் செய்வதுபோல அருவி விழும் அழகைக் கண்டு எழுத எந்தக் கவிஞனாலும் முடியாது. ஒன்பதாவது வகுப்பில் அவனுக்கு திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய “திருக்குற்றாலக் குறவஞ்சி”யில் உள்ள சில பாடல்கள் பாடமாக இருந்தது. அதில் “வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும், மந்தி சிந்தும் கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்” என்ற வரிகளை மிகுந்த இலக்கிய ரசத்தோடு அவனுக்கு தமிழாசிரியராக இருந்த கே.ஏ. நீலகண்டையர் விளக்குவார். அவன் அப்பொழுது மானசீகமாகவே குற்றால மலைகளில் அந்த வானரங்களோடு திரிவது போலவும், மலைகளில் பழங்களைப் பறித்து ருசித்து உண்பது போலவும், அருவிகளில் நீராடிக் களிப்பதுபோலவும் கற்பனை செய்து கொள்வான். அப்படி அந்தக் கவிதையை அவனது ஆசிரியர் விளக்கிக் கூறுவார். அதிலிருந்து அவனுக்கு அந்த மலைமீது ஏறிப் பார்க்கவேண்டும் என்ற கனவு உள்ளுக்குள் இருந்து கொண்டே இருந்தது. அப்படி ஒரு சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைத்தது. செங்கோட்டைச் சித்தப்பாவுக்குக் குற்றாலம் போஸ்ட் மாஸ்டராக மாற்றல் ஆனது. அங்கே போஸ்ட் ஆபீஸ்சும் வீடும் ஒரே இடமாகத்தான் இருந்தது. நல்ல பெரிய வீடு. அதுவும் குற்றாலம் பெரிய அருவிக்கு மிக அருகிலேயேதான் இருந்தது. அந்த வருட விடுமுறைக்கு அவனும், அவனுக்கு அத்தை மகன் ஸ்ரீதரும் குற்றாலத்திற்குச் சென்றார்கள். அவனும், ஸ்ரீதரும் தினமும் காலையில் எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து, காப்பி குடித்து விட்டு போஸ்ட் ஆபீஸ் வாசலில் வந்து நின்று அந்த பெரிய அருவியின் அழகைப் பார்த்து ரசிப்பார்கள். பின்பு அங்கிருந்து மெதுவாக நடந்து குற்றாலநாதர் கோவிலுக்குச் சென்று வெளி மதில்களில் அமர்திருக்கும் குரங்குகளின் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்தக் கோவிலின் உள்ளும், வெளியிலும் நிறையக் குரங்குகள் இருக்கும். அப்படியே காலை எட்டு மணிக்கு வீட்டிற்கு வந்து குளித்து விட்டு, இட்டிலி சாப்பிட்டவுடன், “இங்க பார்க் வரை போயிட்டு வரோம்” என்று சொல்லி,

    வீட்டின் பின்புற மலைவழியாக மேலே ஏறிச் சென்று அந்தக் காட்டுப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்து வருவார்கள். அவனை விட ஸ்ரீதர் மூன்று வயது இளையவன். ஸ்ரீதருக்கு முதலில் அப்படிக் காட்டுப் பகுதிகளில் தனியாகச் செல்ல பயமாகத்தான் இருந்தது. “கண்ணா..திரும்பப் போயுடலாம் வா..” என்று ஸ்ரீதர் சொல்லும் போது,”ஒண்ணும் பயப்படாதே…தைரியமா வா…” என்று அவன் ஸ்ரீதரின் கையைப் பிடித்துக் கொண்டு மலையில் நடப்பான். எங்கு பார்த்தாலும் நெடிய மரங்களும், பெயர் தெரியாத பூக்களும், முகம் தெரியாத அற்புதமான வாசனையும், பஞ்சு பஞ்சாக கருப்பும், வெளுப்புமாக மேகங்களும் அவனைத் தொட்டுக் கெஞ்சும். “அடப் பட்டுக் குஞ்சலங்களா” என்று அவன் மனது அந்த இயற்கை வனப்பை ஆச்சரியமாகப் பார்த்துப் பார்த்துக் கொஞ்சும். அப்படி ஒரு நாள் காலையில் அந்த மலையில் அவன் ஸ்ரீதரையும் அழைத்துக் கொண்டு “செண்பகாதேவி” அருவிவரை சென்று விட்டான். அது ஒரு அற்புதமான இடம். அந்த அருவியில் குளிக்க ஆனந்தமாக இருக்கும். ஆனால் அன்று அவர்கள் அதில் குளிக்கவில்லை. அதை ரசித்துக் கொண்டே இருந்ததில் பொழுது போனது அவர்களுக்குத் தெரிய வில்லை. வீட்டில் தேடுவார்கள் என்று பயந்து ஓடியேதான் அந்த மலையில் திரும்பி வந்தார்கள். வீட்டிற்க்குள் நுழையும் பொழுது மதியம் மணி ஒன்று. அவர்களைக் காணாமல் தேடி இருக்கிறார்கள். கண்டதும் அன்போடு கடிந்து கொண்டு, அவர்கள் செண்பகாதேவி அருவிக்குச் சென்று வந்ததை அறிந்து பதறிப் போனார்கள். “இந்த ரெண்டும் மகாப்பொல்லாதா இருக்கு…ஒன்னு கெடக்க ஒன்னானா நாங்க என்னடா பதில் சொல்லுவோம்” என்று சித்திம்மா (பார்வதிப் பாட்டி) சத்தம் போட்டாள். “நீ சும்மா வாய மூடிண்டிருடி..கொழந்தைகள் இப்படித்தான் தைர்யமா இருக்கணும்” என்று சின்னத்தாத்தா அவர்களைக் கட்டிக் கொண்டார். பாட்டி, தாத்தாவின் செல்லச் சண்டைக்கு நடுவில் அவர்களுக்கு மீனாக்ஷி சித்தி சாதம் போட்டாள். நல்ல பசி. ருசித்துச் சாப்பிட்டான். “கோந்தே..இனிமே இப்படி சொல்லிக்காம தனியா போக்கூடாது…அந்தக் காட்டுல பாம்பு, மிருகங்கள் இருக்கும்…அதனாலதான் சொல்லறேன்…இன்னிக்கு சாயங்காலமா சித்தப்பாவோட கோவிலுக்குப் போயிட்டு வாங்கோ…” என்று அன்போடு சித்தி சொன்னாள். இப்படி அவனும், ஸ்ரீதரும் பல நாட்கள் அந்தக் குற்றால மலையிலும், அருவிக்கரையிலும் கவலை இன்றித் திரிந்தனர் என்றால் அதற்கு அந்த செங்கோட்டைச் சித்தப்பா, சித்தியின் அன்புதான் காரணம். அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால் சித்தப்பாவின் சகோதரி சகுந்தாலா அத்தையின் இளைய மகன் “ஹரிஹரனை” தத்தெடுத்துக் கொண்டார். அந்த வழியில் பேரனும் பேத்தியும் பெற்று மகிழ்ச்சியாக எண்பது வயதுவரை வாழ்ந்தனர் அந்தச் செங்கோட்டைச் சித்தப்பாவும் சித்தியும். அவர்கள் ஆரோக்கியமாக இருந்தவரை அவனது குடும்பத்தில் நடந்த அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் அவர்கள் மிகுந்த உள்ளன்போடு கலந்து கொண்டது அவர்களது நல்ல பண்பைக் காட்டியது. அப்படித்தானே நல்ல உறவுகள் நமக்குப் பாடம் சொல்லி நம்மை வழி நடத்துகிறது. அவனும் அந்த உறவின் வலிமையை அறிந்து கொண்டு நடப்பதால் அவனது அடுத்த தலைமுறைக்கும் அத்தெய்வ குணங்களே வழித் துணையாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் உண்டோ?.

    20.08.2015
    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • வளவன் கனவு-12

    சு.கோதண்டராமன்

    திருஷ்டி பட்டது

     vallavan-kanavu1111111

    உடம்புபோர் சீவரர் ஊண்தொழிற் சமணர்கள்
      விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்
    வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலுந்
          தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே.

    -சம்பந்தர்

    ஹரதத்தருக்கு உறவினர்கள் எவரும் இல்லை. திருமணத்துக்கு அக்கம்பக்கத்தில் ஐந்தாறு கிராமங்களில் இருந்த வடமர்களை அழைத்திருந்தார். அவர்கள் வந்து நடத்திக் கொடுத்து வாழ்த்திச் சென்றனர்.

    முருகையனுக்கோ ஜனக்கட்டு மிகுதி. உள்ளூரிலும் அக்கம் பக்கத்துக் கிராமங்களிலும் அவருக்கு உறவினர்கள் நிறைய இருந்தனர். திருமணத்துக்குப் பின் அவர்கள் ஒவ்வொருவராக புது தம்பதிகளைத் தத்தம் வீட்டிற்கு அழைத்து விருந்தளித்து உபசரித்தனர்.

    திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆயிற்று. இன்னும் விருந்து ஓய்ந்தபாடில்லை. மல்லிகையின் தாய் மாமன் இடும்பன் இரு நாழிகைத் தொலைவில் உள்ள தீபங்குடி* என்னும் கிராமத்தில் ஊர்த்தலைவராக இருந்தார். அவர் விருந்துக்குக் கூப்பிட்டிருந்தார். முருகையன் ஒரு வண்டி கட்டி இருவரையும் அனுப்பினார்.  விருந்து முடிந்தது. ‘போய்ட்டு வரோம், மாமா’ என்று சொல்லிக் கொண்டு மல்லிகை வண்டியில் ஏறினாள். பின்னால் வாயில் வெற்றிலையை மென்றுகொண்டு பசுபதியும் ஏறினான். வண்டி புறப்பட்டது.

    பசுபதி பேசாமல் கண்ணை மூடிக் கொண்டு வந்தான். உண்ட மயக்கம் தூங்குகிறார் போலும் என்று மல்லிகை எண்ணினாள். வீடு சமீபித்தபோது அவனைத் தட்டி எழுப்ப வேண்டியிருந்தது. அரை மயக்கமாக இருந்தான். இறங்கியவுடன் வாந்தி எடுத்தான். தள்ளாடிக் கொண்டே வந்த அவனைப் படுக்க வைத்தார்கள்.

    சாப்பிட்டதும் சாப்பிடாததுமாக வண்டியில் குலுங்கிக் குலுங்கி வந்ததுதான் வாந்திக்குக் காரணமாக இருக்கும் என்று நினைத்த அவனுடைய அம்மா ‘சுக்கு வெந்நீர் போட்டுத் தருகிறேன், சாப்பிட்டால் சரியாகிவிடும்’ என்று சொல்லிக் கொண்டு உள்ளே போனாள்.

    மாமியார் போட்டு எடுத்து வந்த வெந்நீரை மல்லிகா அவன் வாயில் விட்டாள். அது வழிந்து விட்டது. இது சாதாரண அஜீரணம் இல்லை என்று எல்லோருக்கும் பட்டது. முருகையனும் அங்கே இருந்தார். வைத்தியரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பினார். வைத்தியர் வந்து பார்த்தார். ‘நாடி விழுந்து விட்டது. உடம்பெல்லாம் நீலம் பாரித்து இருக்கிறது. ஏதோ விஷகடி’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். எல்லோருக்கும் இடி விழுந்தாற்போல் இருந்தது.

    சற்று நேரத்தில் ஊர் மக்கள் எல்லோரும் அங்கே கூடினர். ஊரே சோகத்தில் மூழ்கியது. ‘ஐயோ, எவ்வளவு நல்ல பிள்ளை, எவ்வளவு நல்ல பெண், இவர்களுக்கா இப்படி ஆகவேண்டும்’ என்று பரிதாபப்பட்டனர். ‘நேற்று தாழம்பூ பறித்து வந்து மனைவிக்குக் கொடுத்தான். அதில் இருந்த பூநாகம் ஏதாவது தீண்டி இருக்குமோ?’ என்றார்கள் சிலர். ‘வண்டியிலே விரிப்பின் கீழே போட்டிருந்த வைக்கோலுக்குள் தேள், நண்டுவாக்காளி எதாவது இருந்து கொட்டியிருக்கும்’ என்றார்கள் சிலர். பசுபதியின் நண்பர் பட்டாளம் வந்து கதறியது. உறவினர்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பப்பட்டது. ஹரதத்தர் திருமணத்திற்கு வந்திருந்த வடமர்களுக்குச் செய்தி அனுப்பினார்.

    சுடுகாட்டில் ஏகப்பட்ட கூட்டம். பிரேதத்தைச் சிதையில் அடுக்கினார்கள். வடமப் பிராமணர் ஒருவர் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். நடைப்பிணமாகத் தென்பட்ட ஹரதத்தர் கண்களில் நீர் வழிய அவர் சொல்லியபடி சடங்குகளைச் செய்து கொண்டிருந்தார். அருகில் முருகையன் வாயில் துணியைப் புதைத்துக் கொண்டு நின்றுகொண்டிருந்தார்.

    இந்த அகால மரணம் அனைவரையும் உலுக்கி எடுத்துவிட்டது. வாழ்க்கையின் நிலையாமையை மனிதன் பிரத்தியட்சமாக உணரும் தருணம் அது. ‘பதினெட்டு வயது என்பது சாகக்கூடிய வயதா, எந்த நிமிஷம் யாருக்கு என்ன ஆகும் என்பது தெரியவில்லை. இன்று இவர், நாளை யாரோ’ என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். அவரை எதிரொலிப்பது போல, ஆனால் தணிந்த குரலில் இடும்பன் தன் பக்கத்தில் நின்றிருந்தவரிடம், ‘இன்று இவர், நாளை அவர்’ என்று சொல்லிக் கண்களால் சைகை காட்டினார். அவர் பேசியதையும் அவர் கண் காட்டிய திசையில் இரு வடமர்கள் நின்றுகொண்டிருந்ததையும் பசுபதியின் நண்பன் ஒருவன் கவனித்துவிட்டான். இடும்பன் முகத்திலும் அவரது நண்பர் முகத்திலும் ஒரு விஷமத்தனமான புன்னகை தோன்றி மறைந்ததும் அவன் பார்வையிலிருந்து தப்பவில்லை. உடனே முருகையனிடம் சென்று தான் கவனித்ததைக் கூறினான்.

    முருகையன் சீறிக்கொண்டு வந்தார். “மகாபாவி, என் மருமகனை நீயாடா கொன்றாய்?” என்று கேட்டுக் கொண்டே அவர் முகத்தில் மாறி மாறிக் கைகளால் ஆக்ரோஷமாகக் குத்தினார். எதிர்பாராத தாக்குதலால் நிலை குலைந்த இடும்பன் கீழே விழுந்தார். சிலர் அவரையும் முருகையனையும் பிரித்தனர். விஷயம் பரவியது.

    “உண்மையாக இருந்தாலும் இருக்கும், வடமர்களை எல்லாம் நாட்டை விட்டுத் துரத்தணும்னு இவர் எப்பவும் சொல்லிக்கிட்டு இருப்பாரு.”

    “அதுக்காக இப்படியா, சொந்தத் தங்கச்சி மருமகனையா விஷம் வெச்சுக் கொல்வாங்க?”

    “இந்தப் பொண்ணை இடும்பன் தன் மகனுக்குக் கட்டி வெக்கணும்னு நினைச்சிருப்பார் போல. அது நடக்கல்லைன்னதும் இப்படிப் பழி வாங்கிட்டாரு.”

    “ஒரு வருசமா ஒரு சமணத்துறவியும் வேறு சில ஆளுங்களும் இவரை வந்து அடிக்கடி பார்த்துப் பேசிக்கிட்டு இருக்காங்க. அதிலிருந்து இவர் இந்தப் பிராமணர்களை எல்லாம் நாட்டை விட்டுத் துரத்தணும்னு சொல்லிக்கிட்டு இருப்பாரு.”

    ஊர் மக்கள் பலவாறாகப் பேசிக் கொண்டார்கள். கூட்டத்தில் இருந்த ஊர்த்தலைவருக்கு விஷயம் எட்டியது. சிதை எரியத் தொடங்கியதும் எல்லோரும்  திரும்ப எத்தனித்தபோது ஊர்த்தலைவர், “யாரும் இந்த இடத்தை விட்டுப் போகக் கூடாது. யார் யாருக்கு என்ன தெரியுமோ அதை எல்லாம் பஞ்சாயத்தார் முன்னிலையில் தெரிவித்துச் சத்தியப் பிரமாணம் செய்து விட்டுத்தான் போகவேண்டும்” என்று அறிவித்தார். ஓலைகளும் எழுத்தாணிகளும் தருவிக்கப்பட்டன.

    அங்கு வந்த மக்களை ஒவ்வொருவராக விசாரித்தார். அவரவர் தனக்குத் தெரிந்ததைச் சொன்னார்கள். அவை ஏட்டில் எழுதப்பட்டு கையொப்பம் பெறப்பட்டன. இடும்பன் அடிக்கடி சமணத் துறவியுடன் சுற்றியதைப் பலரும் கவனித்திருந்தார்கள். சமணத் துறவிக்கும் உங்களுக்கும் நெருக்கத்திற்குக் காரணம் என்ன என்பதற்கு இடும்பனால் சரியான விடை அளிக்க முடியவில்லை. பல கோணங்களில் அவரை நெருக்கிய பிறகு, தான் பசுபதிக்கு வெற்றிலையில் விஷம் தடவிக் கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.

    கடைசியில் ஊர்த்தலைவர் சொன்னார், “இவர்கள் சொல்வதை எல்லாம் பார்த்தால்  இது கொலை வழக்கு என்று தெரிகிறது. அதனாலும், குற்றம் சாட்டப்பட்டவரும் ஒரு ஊர்த்தலைவர் என்பதாலும் நாங்கள் இதில் விசாரித்துத் தீர்ப்பு வழங்க முடியாது. இதை அரசர்தான் விசாரிக்க வேண்டும், அவருக்குத் தகவல் அனுப்புகிறேன்” என்று அறிவித்தார்.

    ———————————————————– ————————————————————————

    * திருவாஞ்சியம் அருகில் உள்ள தீபங்குடி ஒரு சமணக் கேந்திரமாக இருந்திருக்கிறது. இன்றும் அங்கு ஒரு ஜினாலயம் உள்ளது.

    Share
  • உடையது!

    உடையது!

    உடையது உடையது
    பெண்ணுக்கு ஆர்வம் உடையது
    கட்டுக் கட்டாய்
    அடுக்கி ௮டுக்கி வைத்தும் தீராது
    உடையது மீதே கண் உடையது!

    தடையது இல்லை
    உடையது மீதே
    கடையது சென்றால் பார்வை
    உடையது உடையது வேண்டுமென உடையது!

    அள்ளி வாங்கி வந்த
    உடையது போதாமல் உடையது வேறு
    பெண் அணிந்த உடையது மீதே
    உடையது உடையது போல்
    தனக்கில்லையென்ற ஏக்கம்
    உடையது மீதே பெண்பார்வை உடையது!

    அளவுக்கு மீறியதாக ஆசை
    உடையது தனக்கு உடையது
    சிறப்பு உடையது இல்லை என்றே
    மற்றோர் உடையது நோக்கி
    நடனம் புரியும் ஆசை
    உடையது உடையது பெண்ணுக்கே
    உடையது மனதிலென்றும் உடையது!

    உடையது தீரா ஆவல்
    உடையது மீதில் இருப்பதை உடை யது
    உடையது வேளைக்கொருரக உடையே பெருமை
    உடையது என்றெண்ணத்தை உடை யது
    உடையது பெண்ணுக்குப் பெருமை உடை அது!

    … நாகினி

    Share
  • காலம் (19)

    மீ. விசுவநாதன்

    vallamai111-300x1501111111111
    ஓடைக் கரையோராம் ஓடுகின்ற பாம்புதனின்
    வாடை தெரிந்தால் வலைக்குள்ளே ஓடுகின்ற
    நண்டிடம் கற்றேன், “நமைத்தேடும் சூததனைக்
    கண்டிபாய் கண்டு கட”. (191) 09.07.2015

    பெண்களைப் பூசிக்கப் பிள்ளைமனம் வேண்டுமாம் !
    அண்மையில் அம்மாவாய் , அன்புடைய உண்மை
    மனைவியாய்த் தோழியாய் வந்த திருவை
    நினைவில் நிறுத்தல் நெறி. (192) 10.07.2015

    பிறந்தே(ன்) இருந்தேன் பிரியமாய் வாழ
    மறந்தே(ன்) இதற்காநான் வந்தேன் – சிறந்தே,
    உறவை மதித்தே உயர்குரு தாளை
    மறவா திருக்கவே தான்.. (193) 11.07.2015

    வாயாற வாழ்த்தவும் வந்தோர்கள் உள்ளத்து
    நோயாறப் பேசவும் நூலோரைப் போற்றவும்
    மேலான ஞானியர்கள் மெச்சவுமே வாழ்வோர்க்கு
    பூலோகம் இன்ப புரி. (194) 12.07.2015

    பொன்வண்டு பூவறியும் பூங்காற்று காடறியும்
    முன்கொண்ட நட்பை முகமறிந்து நன்றாய்ச்
    சிரித்தே ஒளிவீசும் ! தீராநோய் “நானைத்”
    தெரிந்தறிந்தோர் நாளெலாம் தேன். (195) 13.07.2015

    கட்டுகட்டாய்ப் புத்தகங்கள் காட்சிக்காய் வைத்தாலும்
    சொட்டாசை வந்தால்தான் புத்தகத்தைத் தொட்டெடுத்துப்
    பார்ப்பார்கள் ! தெய்வப் பழக்கமும் அப்படித்தான் !
    பார்பார்நீ உள்ளே பழகு. (196) 14.07.2015

    மெல்லிசை மன்னர் விசுவநாதன் சங்கீதம்
    நல்லிசையாய் என்றுமே நம்முள்ளே மெல்லியதாய்
    கேட்டிடுமே ! அந்தசுகம் கொட்டியவர் ஈசனருள்
    விட்டு விலகா விசு. (197) 15.07.2015

    வானவில் வண்ணம் மனதில் அழகினைத்
    தானாகத் தூண்டும் ; தவசிகள் ஞானவண்ணம்
    மூர்க்கத்தைப் போக்கி முழுஅறிவைத் தூண்டிவிடும் !
    சேர்க்கை நலமே சிறப்பு. (198) 16.07.2015

    கண்ணன் நிறமோ கருப்பென்றேன் ; தின்னுகிற
    வெண்ணை நிறமோ வெளுப்பென்றாள் – மண்ணுண்ட
    வாய்க்குள் சிவப்பென்றேன் ; மாறாத வண்ணனே
    தாய்க்குள்ளே பாலென்றா ளே ! (199) 17.07.2015

    இளமையும் மூப்பும் எதிர்மறைத் தோழர் !
    வளமையும் ஏழ்மையும் வாழ்வின் விளைவுகள்!
    வித்தையும் பண்பும் விலகிய பாதைகள் !
    சுத்தறிவே தூய துணை. (200) 18.07.2015

    Share