இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(162)

–சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள்.
ஒருநாட்டில் நாம் எத்தனைக் காலம் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல. அந்நாட்டின் இயற்கை வளங்களை, அந்நாட்டின் சிறப்புத்தன்மைகளை, அந்நாடு தன்னுள் அடக்கியிருக்கும் வனப்புகளைச் சரியான வகையில் உள்வாங்கியிருக்கிறோமா ? என்பதுவே முக்கியம்.

அப்படியான சுகிப்புகளின் அடிப்படையில்தான் வாழ்க்கையின் சுவையை எவ்வாறு நாம் நுகர்ந்துள்ளோம் என்பது தெளிவாகும். நான் இங்கிலாந்தில் சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறேன். இங்கிலாந்து நாட்டின் சரித்திரப் பிரசித்தி பெற்ற இடங்கள் அனைத்தையும் பார்த்து விட்டேனா ? அல்லது, இங்கிலாந்து தன்னுள் அடக்கியிருக்கும் பல பிரமிப்புக்களைச் சரியான வகையில் உள்வாங்கியிருக்கின்றேனா எனும் கேள்வி என்னை நோக்கிக் கேட்கப்பட்டால் அதற்கு உண்மையான பதில் இல்லை என்பதுவேயாகும்.

அதற்குப் பல காரணங்கள் உண்டு. நான் இங்கு வந்த ஆரம்பக்காலங்களில் மாணவனாக எனது அன்றாட வாழ்க்கையுடன் போராடிக் கொண்டிருந்தேன். அதன் பின்னால் திருமணமானதும் நாம் எமது வாழ்வைச் சைபர் எனும் இடத்தில் ஆரம்பிக்க வேண்டியதாக இருந்ததினால் முழுக்கவனமும் வாழ்வைக் கட்டியெழுப்புவதிலும் வேறு சில பயனற்ற முயற்சிகளிலும் செலவழித்தது மற்றொரு காரணம். இப்படிப் பல காரணங்களுடன், நான் வாழும் நாட்டின் முழு வளத்தினையும் பார்த்து பரவசிக்க வேண்டும் எனும் நினைவுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது இன்னொரு காரணம்.

ஆனால் இடையிடையே சுற்றுலா மேற்கொள்ள வரும் நண்பர்கள் எனைத்தேடி வரும்போது அவர்களை அழைத்துச் சென்றதால் சில சில அரிய இடங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டாமல் போகவில்லை.

சில நாட்களின் முன்னால் என் மனைவி தனது பணி நிமித்தம் இங்கிலாந்தின் வடக்குப் பகுதிக்கு விஜயம் செய்ய வேண்டி வந்தது. விருப்ப ஓய்வு எடுத்து இருப்பதால் நேரம் இருக்கிறதே நீங்களும் வாருங்கள் என்று அழைத்தாள் என் மனைவி. சரி, என்று நானும் புறப்பட்டேன், நான் சென்றது இங்கிலாந்தின் வடபகுதியில் இருக்கும் “செபீல்ட் (Sheffield)” எனும் இடமாகும். இது நான் வாழும் பகுதியில் இருந்து சுமார் 210 மைல்கள் தொலைவிலுள்ளது. மோட்டார்காரில் பயணிக்கும் போது சுமார் நான்குமணி முப்பது நிமிடங்கள் வரை எடுக்கும். அதிகாலை 5.30 மணிக்குப் புறப்பட்ட நாங்கள் சுமார் மூன்று மணித்தியாலங்கள் பிரயாணித்து விட்டு ஒரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உணவுவிடுதியில் சிற்றுண்டி அருந்துவதற்காக நிறுத்தியதனால், சுமார் 10. 30 மணியளவில் நாம் செல்ல வேண்டிய இடத்தைச் சென்றடைந்தோம்.

hv4எனது மனைவி ஒரு ப்ராஜெக்ட் மீட்டிங்க்கு சென்றதினால் மனைவியை அங்கு இறக்கி விட்டு நான் அவ்விடத்தைச் சற்றுச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டேன். இங்கிலாந்தின் கிராமியச் சூழலின் முழு அழகும் அங்குதான் தெரிந்தது. அழகாக இருமருங்கும் பச்சைப் பசலென அழகிய புதர்களினூடாக அரைமணி நேரம் பயணித்தால் மற்றொரு கிராமம். இங்கிலாந்தின் கிராமங்கள் அநேகமாக சில அடிப்படை வசதிகளைக் கொண்டிருக்கும் அதாவது ஒரு கடைகளடங்கிய பிரதான தெரு, ஒரு பாடசாலை, ஒரு சர்ச், ஒரு மதுபான பார் (பப்), ஒரு தபால் ஆஃபிஸ். அவைகளினூடாக அமைதியாகச் செல்லும் மக்கள், அவர்களின் போக்கில் எந்தவித அவசரமும் காணப்படவில்லை, வாழ்க்கையின் ஒவ்வொரு கணங்களையும் அனுபவித்துக் கொண்டே நடப்பார்கள் போலும் !

லண்டன் எனும் அந்தப் பெரிய நகரின் அவசரமான வாழ்க்கை முறைக்கும், இக்கிராமங்களின் அமைதியான அந்நடைமுறை வாழ்க்கைக்கும் இடையில் காணப்பட்ட வித்தியாசம் ஏன் பல ஆங்கிலேயர்கள் இக்கிராமிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து லண்டனை விட்டு ஓடுகிறார்கள் என்பதைப் பரிபூரணமாக விளக்கியது. இங்கிலாந்து அரசியல்வாதிகள் அநேகமாக தமது உரைகளில் “வடக்கிற்கும், தெற்கிற்கும் உள்ள பிரிவு” ( The North South divide ) என்று பேசுவார்கள். இவ்விரு வாழ்க்கைமுறைகளையும் நேரில் கண்டவர்களுக்குத்தான் அதன் உண்மையான அர்த்தம் புரியும் போலிருக்கிறது.

இக்கிராமங்களில் சிறிய வாசகசாலை உண்டு அதனுள் அமைதியாக மக்கள் அமர்ந்து பத்திரிக்கைகள் படித்துக் கொண்டிருந்தார்கள். இக்கிராமம் ஒன்றில் நான் எனது காரை நிறுத்தி விட்டு நடந்தபோது நான் ஒருவன் மட்டுமே அங்கு ஒரு ஆசிய இணத்தவனாக நின்றிருந்தேன். தெருவில் போவோர் வருவோர் என்னை ஏறிட்டுப் பார்த்தார்கள் ஆனால் அவர்கள் தமக்கேயுரிய பண்பாட்டு வழக்கப்படி ஒரு சிறிய புன்முறுவல் பூத்தார்கள்.

hv5என் மனைவி சென்ற இடத்திற்குப் பெயர் “ஹோப் வெளி” ( Hope Valley ) என்பதாகும். இங்கிலாந்தின் வனப்பு மிகுந்த பகுதிகளில் ஒன்று ” பீக் டிஸ்ரிக்ட்” (Peak District) ஆகும். இந்த ஹோப் வெளி என்னும் இடம் அதன் மத்தியப் பகுதியாகும். இது இயற்கையாகத் தோன்றிய ஒரு பள்ளத்தாக்கு ஆகும். இப்பகுதியில் இங்கிலாந்தின் பல சரித்திர முக்கியத்துவம் நிறைந்த இடங்கள் அடங்கியுள்ளன.

hv6இப்பகுதி இங்கிலாந்துக்கு வரும் பல ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் விரும்பி ரசிக்கும் பகுதியாகும். மெய்மறந்து ரசிக்க வைக்கும் அழகிய இயற்கை வனப்பு நிறைந்த அழகிய பகுதியே இது, இங்கு அமைக்கப்பட்டிருக்கும் தெருப்பகுதி மதில்கள், மற்றும் வீட்டுச் சுவர்கள் ஆகியன இப்பகுதியிலிருந்து எடுக்கும் பழமை வாய்ந்த கற்களினாலேயே அமைக்கப் பட்டிருக்கின்றன.

இப்பகுதியின் முழுவனப்பினையும் கண்டுகளித்து ரசிக்க ஓர்நாள் போதாது எனும் முடிவுக்கே என்னால் வரமுடிந்தது. இன்னுமொருமுறை வந்து பார்க்க வேண்டிய இடம் என்று என் மனதில் குறித்து வைத்துக் கொண்டு நானும் என் மனைவியும் திரும்ப எமது அவசர வாழ்வினை நோக்கிப் புறப்பட்டோம்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

1 thought on “இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(162)

Leave a Reply

Your email address will not be published.