தங்கரதம் வந்தது வீதியிலே …
–கவிஞர் காவிரிமைந்தன்.
அன்பின் முழுமைதனை அனுபவிப்போர் எவருமில்லை என்றுகூட சொல்லிவிடலாம் போலிருக்கிறது. அதுசரி, அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திலே அன்பு என்பதை நினைவில் கொண்டிருப்பதே பெரும்பாடு என்கிற நிலையில், எப்படி முழுமையை எட்ட முடியும் என்கிற கேள்வியில் நியாயமிருக்கிறது. கதையில், கவிதையில், திரைப்படங்களில் மட்டுமே, சித்தரிப்புகளால் சில உயரங்களைத் தொட்டுவிட முடிகிறது. அதுவும் கூட்டணி முயற்சியில் நடைபெறும் இந்தச் சித்துவிளையாட்டு சிலநேரம் மகோன்னதப் படைப்புகளாய் அமைந்துவிடுவதுண்டு.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களது தயாரிப்பில் உருவான படம் கலைக்கோயில், வியாபார ரீதியாக இந்தப் படம் வெற்றியடையவில்லை என்றாலும் கூட இசையைப் பொறுத்தவரை, ஆத்மதிருப்தி தந்த படம் என்றே சொல்வார் மெல்லிசை மன்னர்.
இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான திரைச்சித்திரம்! இன்பத்தை ஏந்திவரும் சொற்களா, இசையா, அல்லது கதாநாயக நாயகி ‘பாவ’ங்களா? மொத்தத்தில் இந்தப் பாடல் கேட்கும்போது ஒரு இன்ப உலகத்திற்கு கடத்தப்பட்டுவிடுவது மட்டும் உண்மை! சுகமான ராகமிது, கர்நாடக சங்கீத சாம்ராஜ்ஜியத்தின் ஒரு அங்கமிது! தங்கத்தில் பதித்திடும் வைரத்தை பாசுரமாக்கி, நம் காதுகளுக்கு தந்து மகிழச் செய்திருக்கிறார்கள், பிரபல கர்நாடக சங்கீத வித்வான் பத்மஸ்ரீ பாலமுரளிகிருஷ்ணா மற்றும் பி.சுசீலா குரல்களில் பொழியும் சங்கீத அருவியிது!
கவியரசு கண்ணதாசன் பாடலில் உள்ள பொருள்பற்றி எடுத்துரைக்க கடவுள்தான் வரவேண்டும், சிருங்கார ரசமென்று வந்துவிட்டால் கவிஞரின் கற்பனை உச்சம் தொடும்! முத்தமிழும் மோகனமும் தக்கதொரு விகிதத்தில் கலந்தினிக்கும் இப்பாடல் அற்புதம் என்பதன்றி வேறேது நான் சொல்ல?
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
என்கிற தேவாரத்தில் உள்ள சுகம் அத்தனையும் ஒருதுளியும் குறைவின்றி கிட்டும் தேவகானம்! தெய்வீகமும் காதலும் ஒரே சமதளப்புள்ளியில்தான் இருக்கின்றன! மனிதன் காதலை மட்டும் கவனம் செலுத்துகிறான், பக்தன் தெய்வீகத்தில் மட்டும் ஆழ்ந்துவிடுகிறான், கவிஞன் மட்டுமே இரண்டையும் இங்கே கலந்து தருகிறார்! ஆன்மதரிசனம் காட்டுகின்ற நிலையை பக்தி தந்துவிடுவது உண்மையென்றால் நான் சத்தியம் செய்வேன் காதலிலும் அது சாத்தியமே!!
இப்பாடலில் மற்றுமொரு விசேஷம் – வீணையிசை – சிட்டிபாபு அவர்கள், முத்துராமன் அவர்களுடன் திரையில் தோன்றும் தாரகை சந்திரகாந்தா, (நினைவுக்கு வருகிறதா, சரவணப் பொய்கையில் நீராடி …அதே நாயகிதான்).
திரைப் படம்: கலைக்கோவில்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே ராமமூர்த்தி
பாடியோர்: டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா, பி. சுசீலா
காணொளி: https://youtu.be/a48iEYo3LQc
ஆ ஆஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆ
ஆ ஆஆஆஆ ஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
மரகதத் தோரணம் அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
மரகதத் தோரணம் அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
தங்கரதம் வந்தது வீதியிலே ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ
செவ்விளநீரின் கண் திறந்து
செம்மாதுளையின் மணி வாய் பிளந்து
முளைவிடும் செந்நெல் கோலமிட்டு
மூவருலா வந்த காலங்கள் போலே
தங்கரதம் வந்தது வீதியிலே ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ
மாங்கனிக் கன்னத்தில் தேனூற
சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீன் ஆட
தேன் தரும் வாழைகள் போராட
தேவியின் பொன் மேனி தள்ளாட ஆட
தங்கரதம் வந்தது வீதியிலே ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ
https://youtu.be/a48iEYo3LQc