Blog

  • லம்போகினி கார்

    –கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    wptv 3_luxury_cars_hit__tires_stolen_from _carமைத்துனருக்குக் கலியாணம். ரொறன்ரோ விமான நிலையத்திற்கு என்னை அழைக்க வந்திருந்தார். தனது லம்போகினி வாகனத்தைப் புகழ்ந்தபடியே வந்தார். வீட்டை அண்மித்ததும் ஹோட்டலிற்கு முன்னால் காரை நிற்பாட்டினார்.

    உணவை வாங்கி, காரில் ஏறியபோது ஸ்ராட் செய்ய மறுத்தது.

    “லம்போகினியும் பழுதாகுமா?”

    முழுசிப் பார்த்தான்.

    இரவு பதினொன்று. காரை அங்கேயே நிறுத்திவிட்டு, ஹோட்டலின் உரிமையாளரான மைத்துனரின் நண்பருடன் வீடு வந்தோம்.

    மறுநாள் காரை எடுக்கச் சென்றபோது, நான்குபக்கமும் செங்கல் அடுக்கப்பட்டு ரயர்கள் கழற்றப்பட்டிருந்தன.

     

     

     

    படம் உதவி: http://www.wptv.com/news/region-c-palm-beach-county/palm-beach/thieves-stole-tires-and-a-car-from-palm-beach-driveways

    Share
  • நான் ஓர் அகதி

    –கே.எஸ்.சுதாகர்.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    World Refugee Day 2013நான் சமீபத்து அகதி. நண்பன் 16 வருட அதிதி, பொறியியலாளன், (கொழுத்த) மனைவி சீதனம்.

    ஒருநாள் சந்தித்துக் கொண்டோம்.

    வாடகை வீட்டிலா இருக்கிறாய்? காசு தருகின்றேன். வீட்டை வாங்கு. கொஞ்ச வட்டிதான்.

    வீடு வாங்கினேன். காலம் மாறியது. வட்டி ஏறியது. வேலை நின்றது.

    மகனுக்கு வருத்தம், காசைத் தா மனமறியப் பொய் சொன்னான்.

    அற விலைக்கு வீட்டை விற்று தன் பணத்தை எடுத்தான்.

    மீண்டும் வாடகை வீட்டில் நான்.

     

     

     

    படம் உதவி: http://rabble.ca/multimedia/2013/06/world-refugee-day-2013

     

     

     

    Share
  • பொழுதெல்லாம் பேசச் சொல்லும் …

    — கவிஞர் காவிரிமைந்தன். 


    thangath thambi

    அண்மையில் நான் இணையதளமொன்றில் கேட்கக் கிடைத்த புதையல் இந்தப் பாடல் என்பேன்! எத்தனை அருமையான இப்பாடல் இதுவரை கேட்டது கிடையாது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை! ‘தங்கத் தம்பி’ என்கிற திரைப்படத்தில் தமிழ்த்திரையில் என்றும் வலம்வந்துகொண்டிக்கிற டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா ஆகியோரின் வளமையான குரல்களில்.. கேளுங்கள் புதிய உலகம் நுழைந்ததுபோலிருக்கும்!

    பல்லவி தொடங்கி சரணங்கள் எல்லாம் செந்தமிழின் சுகமிருக்கிறது! இசையோ நம்மைக் கட்டி இழுக்கிறது! திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அமைத்த இசையில் இதயங்கள் கட்டுண்டு போவது சகஜம்தான் என்றாலும் இந்தப் பாடல் அதற்கும் மேலே என்றே சொல்லத் தோன்றுகிறது!

     

     

    ஆண்:
    பொழுதெல்லாம் பேசச் சொல்லும்
    கதையொன்று கண்ணில் உண்டு

    பெண்:
    இரவெல்லாம் பாடச்சொல்லும்
    பாட்டொன்று நெஞ்சில் உண்டு

    ஆண்:
    அம்புலிபோல் பெண்ணைக் கண்டேன்
    அம்புவிழிக் கண்ணைக் கண்டேன்
    அழகுரதம் ஆடக் கண்டேன்
    ஆடைகொண்டு மூடக் கண்டேன்

    பெண்:
    கோடையிலே நிழலைக் கண்டேன்
    கானலிலே நீரைக் கண்டேன்
    அன்னை போலே நெஞ்சம் கண்டேன்
    பிள்ளைபோல் தஞ்சம் என்றேன்.

    [பொழுதெல்லாம் பேசச் சொல்லும்]

    ஆண்:
    காற்றுக்கு கண் கிடையாது
    நடப்பதெல்லாம் பார்ப்பதற்கு..
    கட்டிலுக்கு வாயுமில்லை
    கவிதைகளை வரைவதற்கு..

    பெண்:
    விடிந்தபின்பு வண்ணம் காட்டும்
    மன்னன்தந்த சின்னம் காட்டும்
    செந்தமிழே பண்ணில் திகழும்
    காண்பவர்க்கு தன்னால் புரியும்!

    [பொழுதெல்லாம் பேசச் சொல்லும்]

    காணொளி: http://youtu.be/qjh5KdPub38

    படம்: தங்கத் தம்பி
    பாடல்: வாலி
    இசை: கே. வி. மகாதேவன்
    குரல்: டி எம் சௌந்தரராஜன், பி. சுசீலா

     

    அருமையான வரிகளில் ஆனந்தமழையடிப்பதைப்போல் இன்பம் கொள்ளை கொள்ளையாகக் கொட்டிக்கிடக்கிறது! இசைப்பாடலுக்குத்தானே இத்தனைப் பெருமை அமைகிறது! இயல்தமிழாய் இருக்கும்போது அது கவிதை என்று மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுகிறது! பாடல் பாடப்படுகிற சூழல், பாடும் குரல்கள், பாடல் காட்சிகள் என்று பல காரணிகள் இருந்தாலும் பெளர்ணமி வெளிச்சம் பரவிக்கிடக்கிற பாடலாய் இப்பாடல் பவனிவருகிறது!

    ரவிச்சந்திரன் – பாரதி இணைசேர கண்ணுக்கு விருந்தளிக்கும் இதமான ஜோடியாய் இவர்கள் நடிப்பில் பண்ணும் இசையும் பவித்ரமாய் கலக்கின்றன! ஒன்றிணையும் இருவர் இப்படி அமைய வேண்டும் என்கிற எண்ணம்கூட நெஞ்சில் பதிகிறது! கண்களை மூடிக்கொண்டு கேட்டுப்பார்த்தால் கவிதை மஞ்சம் விரிக்கிறது! கன்னித்தமிழின் வெள்ளம் பாய்ந்துவந்து இதயத்தை இன்ப அலைகள் நனைக்கிறது!

    இன்பத்தை வளரச்செய்ய இணைசேரும் வார்த்தைப்பூக்கள் மொத்தமாக அணிவகுக்க.. அன்னைபோல நெஞ்சம் கண்டேன் ..உன்னிடத்தில் பிள்ளைபோல் தஞ்சம் என்றேன் என்கிற கனிந்த சொற்களால் இப்பாடல் தரத்தில் உயர்ந்துநிற்கிறது! இனிய தம்பதியர் வாழ்வில் இப்பாடல் நிதந்தோறும் கேட்க வேண்டிய கானமாக.. என்றென்றும் ஒலிக்கட்டுமே!!

    Share
  • இன்று பிரதோஷ நன்னாள்!

    -மீ.விசுவநாதன்

    இருண்ட மனதில் ஒளியானாய்; இயற்கை நியதிப் பொருளானாய்;
    உருண்டு புரண்டு அழுதாலும் உயிருள் குளிர்ந்த சுகமானாய்;
    சுருண்டு கிடக்கும் பாம்பினையே தொட்டு எழுப்பும் குருவானாய்;
    மருண்மா அகந்தை அழிந்திடவே மனதை ஒடுக்கும் சிவமானாய்!

    சிறகை விரித்துப் பறக்கின்ற சிந்தை யதனில் கவியானாய்;
    பிறவி எடுத்த பயன்சொல்லி பிறர்க்கு தவிடும் கையானாய்;
    இறக்கும் வரைக்கும் எளியோனாய் இருந்து பழக வழியானாய்;
    மறக்கும் பொருளாய் அமையாமல் மதியை அணிந்த அரனானாய்!

    (அறுசீர் விருத்தம் வாய்பாடு: மா, மா, காய் , மா, மா, காய்)

     

    Share
  • படக் கவிதைப் போட்டி – 2

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    Robins_click

    ராபின் ராஜ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (07.03.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை முனைவர் அண்ணாகண்ணன் தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    Share
  • முதலாவது படக் கவிதைப் போட்டியின் முடிவுகள்

    அண்ணாகண்ணன்

    முதலாவது படக் கவிதைப் போட்டியில் உற்சாகமாகப் பங்கேற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் பாராட்டுகள். ஒரு படத்தைப் பார்த்தவுடன் உங்களுக்குள் இருக்கும் படைப்புத் திறன் வெளிப்படுகிறது எனில், நீங்கள் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறீர்கள் என்பது பொருள். அந்த ஒன்றுக்காகவே முதலில் உங்களைப் பாராட்டுகிறேன்.

    padakkavithai - 1

    அனிதா சத்யம் அவர்களின் அழகிய படம், சிறப்பான தூண்டுதலை அளித்துள்ளது. இதற்காக அனிதாவுக்கும் அவரது படத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த சாந்தி மாரியப்பனுக்கும் நம் நன்றிகள்.

    20 பேர்களின் 25 பின்னூட்டங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளும் பங்கேற்ற சிலர், புதுக்கவிதை, வெண்பா, விருத்தம் என விதவிதமான வடிவங்கள், அதிலும் பல்வேறு வட்டார வழக்குகள், இரண்டு வரிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட வரிகள் என வெவ்வேறு அளவுகள் என்று போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. கவிதைகளில் எழுத்துப் பிழைகளும் வரி ஒழுங்கமைவுக் குறைவுகளும் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல், சொன்ன செய்திகளையும் சொல்லிய விதத்தையும் மட்டுமே கவனத்தில் கொண்டேன்.

    ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொரு வகையில் வித்தியாசமாக இருந்தது. அனைவருமே சிரிப்பை விரும்புகிறார்கள் என்பதே பொது ஒற்றுமை. சிரிப்பைத் தொலைத்த சூழ்நிலைகளை, வலிகளைச் சில கவிதைகள் நினைவுகூர்ந்தாலும் ஒரு சிரிப்புக்குப் பின் இருக்கும் சக்தியையும் அழகையும் வசீகரத்தையும் ஆளுமையையும் பற்பல கவிதைகளும் சிறப்பாக வெளிப்படுத்தின.

    இதில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையில், பல்வேறு கவிதைகளையும் பரிசீலித்ததில் புனிதா கணேசனின் கவிதையை இந்த வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கிறேன். அவரது கவிதை இங்கே-

    இயற்கையின் தூய சுவாசங்கள்
    இயம்பிய இனிய கூடுதல்
    பயத்திட்ட பழமை நட்புகள்
    வியந்து மகிழ்ந்ததில்
    தூய இதயங்கள் கொட்டின
    தூ வெண் முத்துக்கள்
    பரல்களாய் இதழ்களில் விரவின,
    அவை விரைந்து பரப்பின
    பிரபஞ்சம் முழுவதும் வரையற்ற மகிழ்வை!

    பாரங்கள் குறைந்ததால் துயரங்கள் பகிர்ந்ததால்
    இலகுவாய்ப் போன இதயங்கள் நெகிழ்ந்ததில்
    சிதறின சிரிப்புகள்!!
    சிட்டுகள் ஆயினர் பெண்கள்!

    இன்பத்தின் இறக்கைகள் கொண்டு துன்பத்தை மறந்தே..
    மனத்தில் இனிய பொழுதுகள் கனிந்து போயின…
    கனத்த பொழுதுகள் காற்றாய்க்… கரைந்ததில்
    இதழ்கள் முகிழ்த்தன முத்துப் பரல்கள்……
    கொத்துக் கொத்தாக சத்தமாய் சிரிப்பு…
    எங்கும் நிறைந்தது
    மனம் விட்டுச் சிரிக்கும் மங்கைகளாலே…

    சிட்டுகள் ஆயினர் பெண்கள்! என்ற ஒற்றை வரியில் அபாரமான கவித்துவம் வெளிப்படுகிறது.

    ரேவதி நரசிம்மனின்

    ஓடிய நரிக்கு ஒரு சிரிப்பு, பொங்கும் சோறுக்கு ஒரு சிரிப்பு.
    சிரித்தே வாழ்ந்திடுவீர் நலமாக

    என்ற வரிகளும் எனக்குப் பிடித்திருந்தன.

    புனிதா கணேசனை இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகவும் ரேவதி நரசிம்மனை குறிப்பிடத்தக்க கவிஞராகவும் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகிறேன்.

    பங்கேற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    மார்ச் 2, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு முனைவர் எல்மார் நிப்ரத் அவர்கள்

     

    Elmar Kniprath

    வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுபவர், பண்டைய தமிழ் வட்டெழுத்து எழுத்துருவை உருவாக்கி தமிழுலகிற்கு அளித்துள்ள, ஹாம்பர்க்கில் வசிக்கும் முனைவர் எல்மார் நிப்ரத் (Elmar Kniprath, Hamburg) அவர்கள். தமிழ் ஆர்வலர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வண்ணம் திரு. எல்மார் நிப்ரத் செய்துள்ள இப்பணியை வல்லமை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர் பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆய்வு மையத்தின் மொழியியல் ஆய்வாளரான முனைவர் “ழான்” (Jean-Luc Chevillard of France, French National Centre for Scientific Research/CNRS – Paris) அவர்கள்.

    தமிழ் வட்டெழுத்து பற்றியும் நிப்ரத் வடிமைத்த வட்டெழுத்து மற்றும் அதன் பயன்பாடு பற்றியும் வல்லமையின் வாசகரும் எழுத்தாளருமான, ஈழத்தின் மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் வல்லமை இதழில் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் கல்வெட்டுகளில் எழுதப்பட்ட வட்டெழுத்து தமிழையும், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட தமிழ் எழுத்தையும் நாம் இப்பொழுது கணினி வழியே எழுதவும், படிக்கவும் முடிவதை வியப்புடன் பாராட்டியதுடன், அந்த எழுத்துருக்களைக் கொண்டு எழுதியும் காண்பித்துள்ளார்.

    அவர் வழங்கிய மிகச் சிறப்பான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் தகவலறிய பார்க்க: பழன் தமிழ் எழுத்துகள் உங்கள் கணிணியில் – http://www.vallamai.com/?p=54582

    பாண்டியர் சோழர் பயன்படுத்திய வட்டெழுத்தை இப்பொழுது உங்கள் கணிணியில் நீங்களே எழுதலாம். அடுத்துள்ள இணைப்புக்குச் செல்க, எழுத்துருவைத் தரவிறக்குக. தமிழ் ஒருங்குறியில் தட்டச்சிடுக. ஒருங்குறி எழுத்துருவாக e-Vatteluttu OT தேர்க. 35 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்துருவுக்கு e-Tamil 100 தேர்க.

    வட்டெழுத்து

     

    என்னே… என்னே…. என்னே….
    செய்தி தந்த புதுவைப் பேராசிரியர் இழான் அவர்களுக்கும், அரிதின் முயன்று எழுத்துரு உருவாக்கிய ஆம்பேர்க்கு வாழ் பேராசிரியர் எல்மார் இணிப்பிராதருக்கும் தமிழ் மக்கள் என்றென்றும கடமைப்பட்டவர்கள்.

    திரு. நிப்ரத் அவர்கள் வடிவமைத்த வட்டெழுத்து எழுத்துருக்களை தரவிறக்கம் செய்ய இத்தளத்திற்கு செல்க:

    http://www.aai.uni-hamburg.de/indtib/vatteluttu.html

    திரு. நிப்ரத் அவர்கள் தமிழ் வட்டெழுத்து மட்டுமன்று, இதுவரை; தமிழ், அஸ்ஸாம், வங்கம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, ராஜஸ்தானி, சமஸ்கிரதம், தெலுங்கு எனப் பற்பல இந்திய மொழிகளிலும், சிங்கள மொழியிலும் எழுத உதவும் பொருட்டு, அந்தந்த மொழிகளுக்குமான “இந்தோலிபி” (Indolipi) எழுத்துருக்களை உருவாக்கி விலையற்று வழங்கி அனைவரும் பயன்பெறும் வகையில் உதவியுள்ளார்.

    இவர் உருவாக்கிய Elmar’s Indic எழுத்துருக்களான e-Tamil , e-Telugu , e-Kannada , e-Malayalam , e-Oriya , e-Panjabi , e-Asamiya, e-Bengali, e-Gujarati, e-Nagari, e-Devanagari, e-Grantha,  e-Sanskrit, e-Sinhala ஆகிய எழுத்துருக்கள் கிடைக்கும் இணைய தளத்தின் முகவரி: http://elmar-kniprath.software.informer.com/

    திரு. நிப்ரத் உருவாக்கிய வட்டெழுத்துக்களில் எழுதிப் பழகி, படித்துப் பழகி தேர்ச்சி பெறும் தமிழர் யாவரும் அடுத்த முறை தமிழக தொல்பொருள் காட்சியகங்களுக்கோ, கோவில்களுக்கோ செல்லும் பொழுது வட்டெழுத்தில் உருவாக்கப்பட்ட கல்வெட்டுகளையும் ஓலைச்சுவடிகளையும் படிக்க ஆர்வம் கொள்வார்கள் என்பது உறுதி. தமிழின் தொன்மையைப் பாராட்டும் வண்ணம் அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் அக்கறையுடன் ஈடுபடுவார்கள் என்பதையும் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போம்.

    திரு. நிப்ரத் தமிழர்களுக்கு அளித்த பரிசுக்காக அவரை வாழ்த்தி, வல்லமை குழுவினர் அவரை வல்லமையாளாராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    தொடர்புக்கு: “Elmar Kniprath” மின்னஞ்சல் முகவரி: kniprath@online.de

    படங்களும் தகவல்களும்:
    முனைவர் “ழான்” அவர்களின் சமூக வலைத்தளங்களில் இருந்து திரட்டப்பட்டன.

    Share
  • குறளின் கதிர்களாய்…(61)

    -செண்பக ஜெகதீசன்

    அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார்
    தமரின் தனிமை தலை.
    (திருக்குறள்:814 – தீ நட்பு)

    புதுக் கவிதையில்…

    போரில் வீரனைப்
    புறந்தள்ளிவிட்டுப்                                            horse
    பாதியில் ஓடிடும்
    பரி போல,
    துன்ப காலத்தில்
    துணையாயின்றித்
    தனியே விட்டுச்செல்லும்
    தீய நட்பைவிட,
    தனிமை மேலானதே…!

    குறும்பாவில்…

    போரில் களம்விட்டோடும் குதிரைபோல்
    துன்பத்தில் துணைவரா நட்பைவிட,
    தனிமை தலையாயதே…!

    மரபுக் கவிதையில்…

    அமரது நடந்திடும் வேளையிலே
    ஆற்றும் கடமையை விட்டுவிட்டு,
    சுமையென வீரனைத் தள்ளிவிட்டே
    சுகம்பெற ஓடிடும் குதிரையேபோல்,
    நமக்குத் துன்பம் வருகையிலே
    நம்மைச் சிறிதும் பாராமல்
    தமது நலனே பார்த்தோடும்
    தீய நட்பினும் தனிமைமேலே…!

    லிமரைக்கூ…

    வீரனைப் புறந்தள்ளியோடும் குதிரை போரில்,
    இதுபோல் கைவிட்டோடும் நட்பைவிட
    இடர்வரினும் தனிமையே மேலானது பாரில்…!

    கிராமிய பாணியில்…

    குதுரவோடும் குதுரவோடும்
    குப்புறத்தள்ளிட்டு குதுரவோடும்,
    சண்டையில வீரன உட்டுட்டு
    சத்தமில்லாம ஓடிப்போவும்,
    குதுரவோடும் குதுரவோடும்
    குப்புறத்தள்ளிட்டு குதுரவோடும்…

    வேண்டாம்வேண்டாம் நட்புவேண்டாம்
    குதுரபோல நட்புவேண்டாம்
    கைவுடுற நட்புவேண்டாம்,
    போதும்போதும் தனிமபோதும்
    பொய்யில்லாத் தனிமபோதும்…

    குதுரவோடும் குதுரவோடும்
    குப்புறத்தள்ளிட்டு குதுரவோடும்…!

     

    Share
  • வெற்றியும் தோல்வியும்!

    -விஜயகுமார் வேல்முருகன்

    நூறு வெற்றிகளைப்
    பெற்றவன்தான் ஆனால்
    அதற்காக…
    ஆயிரம் தோல்விகளை
    அடைந்தவன் நான்!

    வெற்றிதனைப் பெற்றதனால்
    வெறிகொண்டு தலையில்
    வைத்து ஆடவுமில்லை…
    தோல்விதனை அடைந்ததனால்
    தலைகுனிந்து ஓடவுமில்லை!

    வெற்றியும் தோல்வியும் கலந்தே
    வாழ்க்கை இங்கே இருக்கிறதே!
    தோல்வியையும் ரசித்திருந்தால்
    வாழ்க்கையது இனிக்கிறதே!!

     

    Share
  • பாரதி கண்ட புதுமைப்பெண்!

    -றியாஸ் முஹமட்

    ஆணுக்கு பெண் இங்கே சரி நிகர்
    புரிந்தும்  கிடக்கலாமோ
    வீட்டுச் சுவர்,
    கொதித்தெழு உன்னை எதிர்ப்பவர்              puthumaipen
    இங்கு எவர்…?

    பேனாவைப் பிடித்து விட்டாய்
    பேராயுதம் ஏந்திவிட்டாய்
    பேரின்பம் அடைந்து விட்டாய் – இனிப்
    பேரரசை ஆளப்போகிறாய்…!

    காடு மலை தாண்டு
    கழுகுக்கண்கொண்டு பாரு
    பல்லக்கில் ஏறு
    பல்லாங் குழியாடு!

    அடிமைச் சங்கிலியை அவிழ்த்து
    மடமைகளைக் கொளுத்து
    சாத்திரங்களை வகுத்து
    மூத்த பொய்களை நசுக்கு!

    தளர் நடைபோக்கு
    நிமிர்ந்த நன்னடையாக்கு
    அந்தப் பாரதியின் எளிய நடைதானே
    உன் மொழிநடையாச்சு…!

    அச்சம் மடம் நாணம்
    உடைத்தெறி,
    நல்லவை கெட்டவை பகுத்தறி
    உன் பேனா வைக்கட்டும் வெடி
    அசத்தட்டும் வரி!

    திறந்து கிடக்கிறது வழி
    உன்னை அழைக்கிறது வெற்றிப்படி
    ஓயாமல் ஓடடி
    நீதான் வற்றா நதி…!

    நீ மரபுக் கவி
    புதுக்கவி
    ஹைக்கூக் கவி!

    உன் வாழ்க்கையில்
    இல்லவேயில்லை சதி
    விதி உடைத்து வெளியேற்றும்
    உன் மதி!

    பல்லவர் காலப் பக்தி
    சோழர்காலப் புத்தி
    மாந்தர்கள் வியக்கும் செம்பருத்தி
    உன்னைப்போல யாரு இன்னொருத்தி?

    பெண்ணியம் எதிர்ப்பவனுக்குக்
    கொடு வியாதி…!
    உன் பேனா குண்டுபட்டு அழியட்டும்
    அந்தக் கபோதி…!

    விழி பிதுங்கி நிற்கட்டும்
    இனவாதி…!
    உன் எழுத்தால் விழிக்கட்டும்
    பச்சோந்தி…!

    நல்லறங்களைக் கவிதைகளில் போதி!
    எச்சரிக்கையாகட்டும்
    நம்ஊர் அரசியல்வாதி!

    மாற்றங்களைக் கொண்டுவா
    பெண் பாரதி!
    நம் நலிந்த சமூகத்தில்
    நீயும் ஒரு பாதி!

    பேனா பிடித்த தாதி
    தந்திரவாதிகளுக்கு மந்திரவாதி,
    இதைத்தானே பாரதி சொன்னான்
    கவிதைகளில் ஓதி..!

    அற்புதம் உன் எழுத்து
    இனி மாறும் ஈழத் தமிழர்களின்
    தலையெழுத்து!

    பெண்ணடிமை அழியட்டும்!
    பெண்குரல் ஓங்கட்டும்!
    அற்பர்கள் ஒழியட்டும்!
    அநியாயம் அழியட்டும்!

    உன் பேனா கண்டு அவன்
    கை அரிவாள் நழுவட்டும்..!
    அந்தப் பாரதி கண்ட
    புதுமைப் பெண்ணும்
    நீயாகட்டும்!

    பாரதி கண்ட புதுமைப் பெண்ணடி!
    உன்னைப் போற்றி வணங்குது
    தாய் மண்ணடி!

     

    Share
  • மனநிலை தெளிய வேண்டும் !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

     உரசல்கள் ஒழிய வேண்டும்
     விரிசல்கள் விலக வேண்டும்
     தெருதனில் தீய தெல்லாம்
     சிதறியே ஓட வேண்டும்!

    மொழியலை ஓய வேண்டும்
    முரணிலை ஒழிய வேண்டும்
    மருணிலை நீங்க வேண்டும்
    மனநிலை தெளிய வேண்டும்!

    அழிவுகள் அகல வேண்டும்
    அனைவரும் இணைய வேண்டும்
    தெளிவுகள் பிறக்க வேண்டும்
    சிறப்பெலாம் சேர வேண்டும்!

    சமயங்கள் யாவும் சேர்ந்து
    சமரசம் பேண வேண்டும்
    இமயமாய் உள்ள சிக்கல்
    இறந்துமே போக வேண்டும்!

    பெருமைகள் பேசி நிற்போர்
    பிதற்றலை விடவே வேண்டும்
    கருவதில் நல்ல எண்ணம்
    பெருகியே நிற்க வேண்டும்!

    Share
  • தொலைவிலும் அருகிலும் மிதக்கும் கடல்!

    – எம்.ரிஷான் ஷெரீப்

    துல்லியமான நீர்ப்பரப்பு
    கூழாங்கற்களைப் போர்த்திப் படர்ந்திருக்கிறது           sea
    சலனமற்றிருக்கிறது ஈர நிலத்தின் சயனம்!

    போர்வையின் பாசிப் பூக்களும் பசிய அலங்காரங்களும்
    அசைந்தசைந்து
    காற்றின் தாலாட்டுக்களை இசைக்கின்றன மௌனமாய்!

    உன் கையிலொரு மதுக் குவளை
    ‘அதிதிகளாய்ப் பறவைகள் வந்திரையும்
    மா கடலின் மேலேயான வானம் பற்றித் தெளிவாகத் தெரியும்
    சமுத்திரம் பற்றி மட்டும் சொல்’ என்றாய்
    ‘இறுதி மதுவில் கரைந்தழியும் பேரண்டம்’
    வேறென்ன சொல்ல இயலும்?

     

    Share
  • லிமரைக்கூ கவிதைகள்!

    -கவிக்குயில்  ஆர். எஸ். கலா, இலங்கை

    தள்ளாடும் குடிகாரன்  கால்கள்
    வறுமையின்  பிடியில்  அவன் குடும்பம்          kala
    பசியில் மனைவி மக்கள்!

    மழையில் நிரம்பியது ஆறு
    சந்தோசமாக ஓடி  நீந்தியது  மீன்
    உள்ளே மறைந்தது சேறு!

    ஓயாமல்  ஆடுது  அலை
    உதவி  இன்றிப் படகில் மீனவன்
    கடலோடு ஆடுது வலை!

    மேகத்தின்  அழுகையோ மோகம்
    பூமியிலே  நிறைந்து  விட்டது வெள்ளம்
    என்னுள்ளே  ஒரு சோகம்!

    சிவனுக்கு நெற்றிக் கண்
    அடையாளம்  போல்  மனிதனுக்குச்  சிறந்து
    நல்ல  அறிவின்  கண்!

    தாய்  தந்தை  ஆசான்
    மூன்று தெய்வங்கள்  சொல் கேட்டால்
    நாம்  அறிவில்  மகான்!

    விலங்குக்கு வீடு காடு
    இதயம் அற்ற மனிதன் கொடுத்தான்
    சிறைக் கம்பிக்  கூடு!

    கண்  கவரும்  இயற்கை
    அதை அழித்து மனிதன்  உருவாக்கி
    விட்டான் ஒரு செயற்கை!

    அச்சம் மடம் நாணம்
    பெண்ணுக்குச் சொத்தாக அந்தக் காலம்
    இப்போது அதைக்  காணோம்!

    ஏந்தியது அகப்பை அன்று
    துணிந்தாள் போருக்குச் சென்றாள் பெண்
    ஏந்தினாள் துப்பாக்கி இன்று!

     

    Share
  • “நம்பிக்கை”

    — சரஸ்வதி ராசேந்திரன்.
    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    malaysia airline‘’இது ரொம்ப தப்பு ஆறுமுகம், உன்னை நம்பிய மக்களை மோசம் பண்ணுவது நம்பிக்கைத் துரோகம், வேண்டாம்ப்பா‘’ என்றான் விஷால்.

    மக்கள் கொண்டுவந்து கொட்டிய பணத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு வெளிநாட்டிற்கு ஓடிவிடும் நோக்கத்தோடு ஃபைனான்சியர் ஆறுமுகம் ஃப்ளைட்டில் பறந்தார் குடும்பத்தோடு. தவறு என்று தடுத்த நண்பனையும் சட்டை செய்யவில்லை.

    அடுத்த நாள் பேப்பரில் செய்தி:
    சென்னையிலிருந்து கிளம்பிய மலேசிய விமானத்தைக் காணவில்லை, அதிலிருந்த முன்னூறு பேர் என்ன ஆனார்களென்றே தெரியவில்லை.


     
     
     
     
     

    படம் உதவி: http://www.malaysiaairlines.com/my/en.html

    Share
  • இயல்புநிலை திரும்பியது …

    — தேமொழி.
    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    angry birdமலர் கவலையுடன் வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்தாள். மது வழக்கமாக வீடு வரும் நேரம் கடந்து இருட்டவும் துவங்கி விட்டது.

    ஒருவழியாக வாசல் கதவைத் திறந்தவன் சோர்வுடன், “வண்டியும் பிரேக் டவுன், செல்ஃபோனிலும் சார்ஜ் இல்லை,” என்றான்.

    அவனைக் கண்டதும் நிம்மதி அடைந்திருந்தவளுக்கு உடனே கோபம் வந்தது. “அதென்ன பொறுப்பில்லாத்தனம், எங்கேயும் ஃபோனே இல்லையா, அடுத்தவங்க கவலைப் படுவாங்களேன்னு கொஞ்சமாவது கருத்து இருந்தாத்தானே?” என்று சீறினாள். இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டாள் அவள்.

     

     

     

     

     

    படம் உதவி: http://www.scooppick.com/things-most-common-in-indian-wives/

    Share