-றியாஸ் முஹமட்

ஆணுக்கு பெண் இங்கே சரி நிகர்
புரிந்தும்  கிடக்கலாமோ
வீட்டுச் சுவர்,
கொதித்தெழு உன்னை எதிர்ப்பவர்              puthumaipen
இங்கு எவர்…?

பேனாவைப் பிடித்து விட்டாய்
பேராயுதம் ஏந்திவிட்டாய்
பேரின்பம் அடைந்து விட்டாய் – இனிப்
பேரரசை ஆளப்போகிறாய்…!

காடு மலை தாண்டு
கழுகுக்கண்கொண்டு பாரு
பல்லக்கில் ஏறு
பல்லாங் குழியாடு!

அடிமைச் சங்கிலியை அவிழ்த்து
மடமைகளைக் கொளுத்து
சாத்திரங்களை வகுத்து
மூத்த பொய்களை நசுக்கு!

தளர் நடைபோக்கு
நிமிர்ந்த நன்னடையாக்கு
அந்தப் பாரதியின் எளிய நடைதானே
உன் மொழிநடையாச்சு…!

அச்சம் மடம் நாணம்
உடைத்தெறி,
நல்லவை கெட்டவை பகுத்தறி
உன் பேனா வைக்கட்டும் வெடி
அசத்தட்டும் வரி!

திறந்து கிடக்கிறது வழி
உன்னை அழைக்கிறது வெற்றிப்படி
ஓயாமல் ஓடடி
நீதான் வற்றா நதி…!

நீ மரபுக் கவி
புதுக்கவி
ஹைக்கூக் கவி!

உன் வாழ்க்கையில்
இல்லவேயில்லை சதி
விதி உடைத்து வெளியேற்றும்
உன் மதி!

பல்லவர் காலப் பக்தி
சோழர்காலப் புத்தி
மாந்தர்கள் வியக்கும் செம்பருத்தி
உன்னைப்போல யாரு இன்னொருத்தி?

பெண்ணியம் எதிர்ப்பவனுக்குக்
கொடு வியாதி…!
உன் பேனா குண்டுபட்டு அழியட்டும்
அந்தக் கபோதி…!

விழி பிதுங்கி நிற்கட்டும்
இனவாதி…!
உன் எழுத்தால் விழிக்கட்டும்
பச்சோந்தி…!

நல்லறங்களைக் கவிதைகளில் போதி!
எச்சரிக்கையாகட்டும்
நம்ஊர் அரசியல்வாதி!

மாற்றங்களைக் கொண்டுவா
பெண் பாரதி!
நம் நலிந்த சமூகத்தில்
நீயும் ஒரு பாதி!

பேனா பிடித்த தாதி
தந்திரவாதிகளுக்கு மந்திரவாதி,
இதைத்தானே பாரதி சொன்னான்
கவிதைகளில் ஓதி..!

அற்புதம் உன் எழுத்து
இனி மாறும் ஈழத் தமிழர்களின்
தலையெழுத்து!

பெண்ணடிமை அழியட்டும்!
பெண்குரல் ஓங்கட்டும்!
அற்பர்கள் ஒழியட்டும்!
அநியாயம் அழியட்டும்!

உன் பேனா கண்டு அவன்
கை அரிவாள் நழுவட்டும்..!
அந்தப் பாரதி கண்ட
புதுமைப் பெண்ணும்
நீயாகட்டும்!

பாரதி கண்ட புதுமைப் பெண்ணடி!
உன்னைப் போற்றி வணங்குது
தாய் மண்ணடி!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.