படக் கவிதைப் போட்டி!

அன்பினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

10968398_790635987695368_6964584805244615655_n

நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் அவர்களால் நம் குழும உறுப்பினரான அனிதா சத்யம் அவர்கள் இந்த மாதத்தின் சிறந்த ஒளிப்படக் கலைஞராகத் தேர்வு பெறுகிறார். அவர் எடுத்த படத்தை, கவிதைப் போட்டிக்கான முதல் படமாக அறிவிக்கிறோம். அழகோவியமான இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். அவற்றில் சிறந்த கவிதையை முனைவர் அண்ணாகண்ணன் தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1214 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

26 Comments on “படக் கவிதைப் போட்டி!”

 • umamohan wrote on 20 February, 2015, 20:14

  குடிகாரப்பாவி உளறலும் 
  திருப்பி எத்திய கதையும் கூட 
  காயத்தின் வலி மூடி 
  அரிசி புடைத்தபடி
  தவிட்டோடு தள்ளி விடடி 
  அழுக்குக் கயிறும் அலசாத சேலையும் 
  சிரிக்கவிடாமல் சிறைவைக்குமா என்ன…….

 • செண்பக ஜெகதீசன்
  Shenbaga jagatheesan wrote on 20 February, 2015, 22:14

  அந்த மலர்கள்…

  நாகரீகத்தின்
  நச்சுக்காற்று படவில்லை..

  வெளி வேடத்தின்
  வெப்பம் தாக்கவில்லை..

  இலக்கணங்கள்
  இங்கு மீறப்படவில்லை..

  இயற்கையில் செயற்கை
  இன்னும் கலக்கவில்லை..

  வெள்ளை உள்ளங்களைக்
  கள்ளம் கறுப்பாக்கவில்லை..

  அதனால்,
  மண்மணம் மாறாத
  பெண் கொடிகளில்
  பூத்துக் குலுங்கும்
  கள்ளமில்லா
  வெள்ளைச் சிரிப்பு மலர்கள்…!

  -செண்பக ஜெகதீசன்…

 • சி.ஜெயபாரதன்
  சி. ஜெயபாரதன் wrote on 20 February, 2015, 22:39

  படக் கவிதைப் போட்டிக்கு :

  பெண்டிர் தினமா ?
  சி. ஜெயபாரதன், கனடா.

  பெண்டிர் தினம் எமக்கா ? பேச்சுரிமை இல்லாமல்
  திண்டாட்டம் ! வீதியில் செல்ல பயம் ! – கண்ணியம்
  இல்லாத நாட்டில் எமக்குச் சிரிப்பு வரும் !
  பொல்லாத ஆண்கள் உலகு !   
   

 • பாலமுருகன் wrote on 21 February, 2015, 0:28

  எட்டு முழம் சேலை கட்டிய திருமதிகளின்…
  தாவணி கட்டிய நாட்களின் நினைவுகள். 

 • கீதா மதிவாணன்
  கீதா மதிவாணன் wrote on 21 February, 2015, 6:47

  சோட்டுப்பெண்களெல்லாம் கூடி
  சொப்புவைத்து விளையாடிய 
  பழம்நினைவோடீ பெண்டுகளா?
  சோறுதின்னவும் மறந்து
  சோழிகளாட்டம் சிதறுகிறதே சிரிப்பு
  விண்ணுக்கும் மண்ணுக்குமாய்!
  பார்த்திருந்தால் போதும்
  பசியாறிடும் எங்களுக்கும்!

 • கீதா மதிவாணன்
  கீதா மதிவாணன் wrote on 21 February, 2015, 6:48

  இடுப்பொடிய வேலை செஞ்சாலும்
  இந்த இடைப்பட்டநேரந்தானே 
  இல்லாத நமக்கெல்லாம் இன்பலோகம்.
  வெரசா எழுந்து வாங்கடீன்னு
  வெரட்ட ஆள்வருமுன்னே
  வேண்டியமட்டும் சிரிச்சிக்குவோம்…
  வீணாப்போன கவலையெல்லாம் 
  பேயா நாயா பிறாண்டும்போது 
  சிடுசிடுக்கத்தானே முடியிது
  சிரிக்க எங்க முடியிது? 

 • சி.ஜெயபாரதன்
  சி. ஜெயபாரதன் wrote on 21 February, 2015, 8:07

  பெண் சிரித்தால் போச்சா ?

  சி. ஜெயபாரதன்

  பெண்சிரித்தால் போச்சாம் ! பொருள்போச்சா ? பொன்போச்சா ?
  கண்சிரிக்கும் காரிகைப் புன்னகையில் – மண்ணாசை
  பெண்ணாசை, பொன்னாசை போச்சா நமக்கெல்லாம் ? 
  பெண்சிரித்தால் காதலெனக் கூறு  ! 

  சி. ஜெயபாரதன்

 • சி.ஜெயபாரதன்
  சி. ஜெயபாரதன் wrote on 21 February, 2015, 10:16

  பெண் சிரிப்புகள்

  சி. ஜெயபாரதன்

  காதலிப்பது நிஜமெனப் புன்சிரிப்பு முதல் மாது !
  காதலிக்கிறாயா நீயெனக் கேலி நகைப்பு நடு மாது !
  பேதமை, பிழையென மறை நகைப்பு மூன்றாவது !

  சி. ஜெயபாரதன்

 • பி.தமிழ்முகில்
  பி.தமிழ்முகில் wrote on 21 February, 2015, 10:18

  உள்ளக் களைப்பும்
  உடற் களைப்பும்
  ஒருசேர பறந்ததே
  சிரிப்பூக்கள் கலகலவென
  இதழ்வழி உதிர்ந்ததால் !

 • கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
  kalaimahel hidaya risvi wrote on 21 February, 2015, 10:57

  வாழ்வினை துறந்தோர் கூட
  சிரிப்பினைத் துறந்தாரில்லை !
  தாழ்விலா நிலையி லிந்தத்  
  தரணியோர் சிரித்துப் போற்றும்
  நீள் பழம் பெருமை யோடு
  நித்தமும் சிரிக்கும் மெங்கள்
  சோகமில்லா தோழிகளே !
  என்றும் சிரிப்புடன் வாழ்க மண்ணிலே 
  கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

 • மு.யாகூப் அலி wrote on 21 February, 2015, 11:33

  மூன்று…பெண்மணிகள் ..
  மூன்று முகத்திலும் 
  மூக்குத்தி நவமணிகள் 
  மூடாத வென்பனிகள்,

  தோட்டாக்கள் சப்தமின்றி …
  வீட்டால்க்கள் சங்கதிக்கு ….
  கூட்டாளிகள் கூடிநின்று 
  கூட்டாக குதூகலம் .

  மதுபாட்டிகள் தூக்காமல் 
  மாதுகளை தாக்காமல் 
  சூதுகளை ஏற்காமல் 
  தோதுகளை எதிர்பார்த்த காலம்,

  இனிவொரு வசந்த காலம் 
  இன்னொருமுறை கிடைக்காது .
  இன்னொரு காலம் கிடைத்தாலும்,
  இப்படியொரு இன்பம் நிலைக்காது !

  அர்த்தமற்ற வார்த்தைகளும்
  அவசரமற்ற வாழ்க்கையிலும் 
  அவசியமில்லா புன்னகைகள் 
  ஆகாதெணவே விட்டு விடுவோம்..

  இருக்கின்ற காலம் வரை 
  இறக்கின்ற நாள் வரை 
  பிறக்கின்ற பிள்ளைகளாய் 
  பறக்கின்றோம் பறவைகளாய்!

  தோழிகளாய் புன்னகைத்தோம் 
  தோன்றமுடியா புதையலாய் 
  தோன்டிபார்த்தோம் எங்களை 
  தோற்கடித்தது எங்கள் துன்பங்களை !

  -மு.யாகூப் அலி.

 • Meenakumari Kannadasan wrote on 21 February, 2015, 12:15

  அச்சம், மடம், பயிர்ப்பு கொண்ட 
  அழகுச் சிரிப்பு இதுவோ…!! 
  அத்தனை சந்தோசங்களும் கிடைத்த 
  ஆனந்த சிரிப்பு இதுவோ…!! 
  முத்துப்போல் உதிர்ந்த முத்தமிழும் சங்கமம் கொண்ட 
  முத்தமிழ் சிரிப்பு இதுவோ…!! 
  இயற்கையெல்லாம், பெண்களுக்கு உவமையாகச் சொல்லும் 
  அந்த பசுமைச் சிரிப்பு இதுவோ…!! 
  நீர், நிலம், ஆகாயம், நெருப்பு, காற்று என அனைத்தும், அவளாய் நிலைகொண்ட படைப்பில், 
  பண்பின் சிரிப்பு இதுவோ…!! 
  நிலம் பார்த்து பூமாதேவியாய் சிரிக்கும் 
  பொருமைச் சிரிப்பு இதுவோ…!! 
  எத்தனை கறைகள் பட்டாலும் நீரைப் போல 
  தெளிவான கங்கைச் சிரிப்பு இதுவோ…!! 
  பெண்ணென்றால் உயர்ந்தவள் தானென்ற அந்த ஆகாயத்தைப் போல 
  உயர்ந்த சிரிப்பு இதுவோ…!! 
  அத்தனை நவரசமும் அள்ளித் தரும் இந்த சிரிப்பு 
  பெண்களின் அன்பு பரிசு…!!  By   Meenakumari Kannadasan (மீனாகுமாரி k)

 • ஜெயராமசர்மா
  Jeyarama Sarma wrote on 21 February, 2015, 12:55

              படக்கவிதை
   ( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் )

    உறிமீது பானைதனில்
    ஊற்றிவைத்த மோரிருக்க
    மடிமீது கடலையுடன்
    மாமியாரும் வந்தாரே

    கைத்தடியைக் காணாது
    பாட்டிவரும் நிலைகண்டு
    பயந்தபடி விட்டெறிந்தான்
    பாட்டியது கைத்தடியை

   விட்டெறிந்த கைத்தடியோ
   வேகமாய் சென்றங்கே
   மோர்வைத்த பானையினை
   முழுமையாய் உடைத்ததுவே

  அவ்வேளை மாமிமீது
  அபிஷேகம் மோராக
  மாமியார் அப்போது
  சாமியாடி நின்றாரே

  எறிந்த அவன்அங்கிருந்து
  எப்படியோ ஓடிவிட
  முகமெல்லாம் மோர்வழிய
  மூர்க்கமாய் மாமிவந்தார்

  அக்காட்சி தனைநினைத்து
  அவளிப்போ முற்றமதில்
  அண்ணாந்து பார்த்தபடி
  ஆவென்று சிரிக்கின்றாள்

  அங்குவந்த தோழியரும்
  அவளுடனே சேர்ந்திருந்து
  அக்கதையக் கேட்டதனால்
  அழகொழுகச் சிரிக்கின்றார் !

             

             
   
      

      

 • தனுசு
  அமீர் wrote on 21 February, 2015, 15:34

  வெட்கச்சிரிப்பு
  ———————————
  சந்தனமும்
  குங்குமமும்
  மல்லிகையும்
  வெட்கப்பட்டு சிரிப்பதை பார்த்தேன்!

  அது
  உப்பு புளி
  மஞ்சப்பொடி
  கறி மோர் மறந்து
  களிப்பதை பார்த்தேன்!

  அந்தப்புர அரசிக்கு
  கிட்டாத ஆனந்தம்
  அடுப்பறை அரசிக்கு
  கிட்டியது எங்ஙனம்?

  மெல்ல
  காது கொடுத்து கேட்டேன்…

  “குடிக்க குடிக்க
  பாலும் புளிக்கும்
  ஆனால்
  நீ மட்டும்
  இனித்து இனித்து
  மேலும் இழுக்கிறாய்
  என்று
  உங்கள் கணவர்
  சொன்னது போலவே
  என் கணவரும்
  நேற்றிரவு சொல்லிவிட்டாரடி”
  என்று பேசிக்கொள்கிறார்கள்!

  கோடியும்
  கோட்டையும்
  கேட்க்காமல்
  கட்டியவன் கவனம் கேட்ட
  இந்த கண்ணகிகளுக்கு
  கேட்ட வரம் 
  தந்த கடவுளும்
  பொறாமையில் பார்க்கிறான்
  தன் துணைவி
  இதுவரை
  இங்ஙனம்
  சிரித்து மகிழ்ந்ததில்லையே என்று!

 • ஷைலஜா wrote on 22 February, 2015, 13:12

  பொதிகைமலைத்தென்றலென சிரித்தபடி
  பூ நெஞ்சை வருடும் இந்தப்பூவையர்கள்
  பதிமதுரை தமிழ்ச்சங்க புலவர் கண்ணில்
  பட்டிருந்தால் பாடலொன்று பரவி வந்திருக்கும்!

  நதிவளரும் வெள்ளமெனக் கவிஞர் நாவில்
  நாளும் எழும் நற்றமிழின் அமுத தாரை
  அதிமதுர அழகு நிறை மங்கையரின் இந்த
  ஆனந்தச்சிரிப்பிற்காய் அளிப்பார் பாரை!

 • றியாஸ் முஹமட்
  றியாஸ் முஹமட் wrote on 22 February, 2015, 13:15

  பல்தெரிய சிரித்து 
  பல்லாண்டு ஆயிற்று
    
  பார்த்து விட்டுப் போங்கடா
   இதுதான் தமிழச்சி சிரிப்பு..!

  இழந்து எல்லாம் மண்ணோடு
  ஈழக் கனவுகள் மட்டும் மனதோடு

  நீ சுட்டுப் போடு இல்ல வறுத்துப் போடு பீனிக்ஸ் பறவையா பிறப்போமடா..!           
  தாய் மண்ணைக் காப்போமடா..!

  றியாஸ் முஹமட்

 • Revathi Narasimhan wrote on 22 February, 2015, 15:46

  This is just a comment.
  @@@@@@@@@@@@@@@@@@@@@@@
  கவிதை கேட்கு முன்னரே  சிரித்துவிட்ட மங்கையரே
  கன்றை நினைத்துச் சிரித்தீரோ 
  கணவனை நினைத்துச் சிரித்தீரோ 
  சீண்டிய ஆணை  நையப் புடைத்ததை 
  எண்ணிச் சிரித்தீரோ.
  ஓடிய நரிக்கு ஒரு சிரிப்பு பொங்கும் சோறுக்கு ஒரு சிரிப்பு.
  சிரித்தே வாழ்ந்திடுவீர்  நலமாக 

 • Revathi Narasimhan wrote on 22 February, 2015, 15:48

  VAAZHTHTHUKAl  oru makizhcci padaththaik koduththaRku. nanRi vallamai. nanRi 
  Anitha.

 • ஸ்ரீநிவாஸ் பிரபு wrote on 22 February, 2015, 19:32

  • அழகான முகங்கள்
  சுவாரஸ்ங்களின் அணிவகுப்பு
  ஊற்றாய் எழுந்து நிற்கிறது 
  பிரதிபளிக்கும் உணர்ச்சி நிலை 
  தேங்கி நிற்கும் மனபாரங்களை
  உடைத்துத் தள்ளி
  அழகாக்குகிறது முகங்களை. 
  உணர்ச்சிவசப்படுதல்களின் பலனாய்
  தவிர்க்க இயலாமல் போகிறது
  புன்னகைகளின் வெளிப்பாடு.
  தினசரி வாழ்வின்
  உதய அஸ்தமணங்களைப் போல்
  வாழ்க்கை ரம்யமாய்த்துவங்வது
  ஒரு புன்னகையிலிருந்துதான்.
  ஸ்ரீநிவாஸ் பிரபு

 • naavukkarasan wrote on 22 February, 2015, 22:24

  வழமை போலவே 
  கோபத்தைக் 
  கணக்கில் எடுக்காமல் 
  சுவர்க்கத்தை
  அடைய
  அவர்களின்   
  மன்னிப்புக்காக
  மன்றாடும் 
  ஒவ்வொரு முறையும் 
  இதயம் 
  பலவீனமடைகிறது…..
   
  ஒரு
  கச்சிதமான
  பொய்யை 
  நாலு பக்கமும் 
  உருவாக்கி
  அதை
  ஆராதிக்கிறார்கள்… 
   
  திட்டிப்  பேசுகிற
  நேரங்களில்
  மிக இயல்பான
  ஆரோக்கியமான 
  அமைதியான  வாழ்வு
  அடி வேண்டுவதை 
  சாத்தியமாக்கும்
  பின் விழைவுகளை 
  தவிர்க்க முடியவில்லை…. 
   
  இந்தப்
  விரிசல்கள் 
  தொடுவான எல்லையில்
  போய் முடிய முன் 
  வசதியான 
  இடத்தில 
  முழுவதும்
  உடைய முன்னர் 
  நிறுத்திக்
  கொள்ள வேண்டியது தான்…
   
  ஒவ்வொரு
  செயலுக்கும்
  ஒரு
  அர்த்தம்
  முக்கியத்துவமாயுள்ள
  தீர்மான உணர்வு
  நிரந்தர திருப்தியை
  அளிக்க
  எவ்வளவு நேரம் 
  சிரிக்க முடியுமோ
  அவ்வளவு தான்
  மனித
  எல்லை.
   
  நாவுக் அரசன் 
  ஒஸ்லோ 

 • வ-க-பரமநாதன் wrote on 22 February, 2015, 23:08

  சிரிப்புக்கான எனது கவிதை

  தேவர் போனார் கட்டி வேட்டி
  திரும்பி வந்தார் எல்லாம் காட்டி
                       ஆவலாகப்  பேசுதுகள்
                          அதுபற்றிச் சிரித்திந்த
  தாவணிகள் பல்லுகளைக் காட்டி.

 • Meenakumari Kannadasan wrote on 23 February, 2015, 12:57

  ஆண்டவனால் படைக்கப்பட்ட, அற்புதங்கள் மண்ணின் சிறப்பும், பெண்ணின் சிரிப்பும், குறைந்து வருகிறதோ, என்ற ஏக்கம் பாரதிக்கும்…!! 
  பெண்களின் புன்னகையை பறிக்கும் நிலையென்னி மகாகவியும் மனம் சோர்ந்தான்…!! 
  நாட்டின் கண்களென சொல்லும், இந்த பெண்களின் சிரிப்பிற்கும் ஏது வெகுமதி…!! 
  என் மகள்களின் சிரிப்பும் சிதைந்து வருகிறதே என்று நினைத்து துடித்த தாயவளுக்கு…!! 
  இந்நிலையும் மாறாதோயென்ற ஏக்கம்…!! 
  இன்று பெண்கள் மலர் போல மனம் பூத்துச் சிரிக்கும் இந்நிலைகண்டு, இன்று தான் மனம் குளிர்ந்தாள் என் பாரதத் தாயவள்…!! 
  மீனாகுமாரி k

 • மணிமுத்து wrote on 23 February, 2015, 23:18

  கடவுள் மனிதனுக்கு
  கொடுத்த பெரிய வரம் புன்னகை – ஆனால்
  இந்த கலியுகத்தில்
  முன்னேற்றம் என்ற பெயரில் நாம்
  அனைவரும் வரங்களை தொலைத்து விட்டு
  சபிக்கபட்டவர்களாக
  அலைந்துக்கொண்டிருக்கிறோம்!

  அவர்கள் முகத்தில்
  நேற்றைய பொழுதில் தொலைந்து போன
  கனவுகளின் வலி தெரியவில்லை!
  நாளை பொழுதுக்கான தேடல் தெரியவில்லை!
  இன்றைய பொழுதின் நிதர்சனம் மட்டுமே தெளிவாக!

  இருக்கிற நொடியின் இன்பத்தை விட்டுவிட்டு
  தனிமையில் நினைவுகளை சுமப்பதே
  மனிதனுக்கு சுவாரசியமான பொழுதுபோக்கு!

  போனது போகட்டும்
  வாருங்கள் இன்றுமுதல்
  இந்த நொடிக்காக வாழ்வோம்
  இவர்களை போல!

 • புனிதா கணேஷன் wrote on 24 February, 2015, 3:08

  இயற்கையின் தூய சுவாசங்கள் இயம்பிய இனிய கூடுதல் பயத்திட்ட பழமை நட்புகள் வியந்து மகிழ்ந்ததில் தூய இதயங்கள் கொட்டின தூ வெண் முத்துக்கள் பரல்களாய் இதழ்களில் விரவின , அவை விரைந்து பரப்பின பிரபஞ்சம் முழுவதும் வரையற்ற மகிழ்வை! பாரங்கள் குறைந்ததால் துயரங்கள் பகிரந்ததால் இலகுவாய்ப் போன இதயங்கள் நெகிழ்ந்ததில் சிதறின சிரிப்புகள் !! சிட்டுகள் ஆயினர் பெண்கள்! இன்பத்தின் இறக்கைகள் கொண்டு துன்பத்தை மறந்தே .. மனத்தில் இனிய பொழுதுகள் கனிந்து போயின….. கனத்த பொழுதுகள் காற்றாய்ப் … கரைந்ததில் இதழ்கள் முகிழ்த்தன முத்துப் பரல்கள் …… கொத்துக் கொத்தாக சத்தமாய் சிரிப்பு …. எங்கும் நிறைந்தது மனம் விட்டுச் சிரிக்கும் மங்கைகளாலே …. புனிதா கணேசன் 22.02.2015

 • geetha wrote on 25 February, 2015, 23:56

  கண்மூடி நான் சிரிச்சு

  காலமாச்சு கள்ளமில்லா

  புன்னகையும் புறந்தள்ளி

  போயாச்சு புகுந்த வீடு

  போனதுமே …

  எஞ்சோட்டு தோழிகளே

  என்சிரிப்ப மீட்டீகளே

  களிப்புடனே வாழ்ந்த

  காலம் கனவுபோல

  போயாச்சு….

 • அண்ணாகண்ணன்
  அண்ணாகண்ணன் wrote on 2 March, 2015, 2:02

  முதலாவது படக் கவிதைப் போட்டியின் முடிவுகள் – http://www.vallamai.com/?p=54920

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.