இந்த வார வல்லமையாளர்!
மார்ச் 2, 2015
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு முனைவர் எல்மார் நிப்ரத் அவர்கள்
வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுபவர், பண்டைய தமிழ் வட்டெழுத்து எழுத்துருவை உருவாக்கி தமிழுலகிற்கு அளித்துள்ள, ஹாம்பர்க்கில் வசிக்கும் முனைவர் எல்மார் நிப்ரத் (Elmar Kniprath, Hamburg) அவர்கள். தமிழ் ஆர்வலர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வண்ணம் திரு. எல்மார் நிப்ரத் செய்துள்ள இப்பணியை வல்லமை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர் பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆய்வு மையத்தின் மொழியியல் ஆய்வாளரான முனைவர் “ழான்” (Jean-Luc Chevillard of France, French National Centre for Scientific Research/CNRS – Paris) அவர்கள்.
தமிழ் வட்டெழுத்து பற்றியும் நிப்ரத் வடிமைத்த வட்டெழுத்து மற்றும் அதன் பயன்பாடு பற்றியும் வல்லமையின் வாசகரும் எழுத்தாளருமான, ஈழத்தின் மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் வல்லமை இதழில் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் கல்வெட்டுகளில் எழுதப்பட்ட வட்டெழுத்து தமிழையும், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட தமிழ் எழுத்தையும் நாம் இப்பொழுது கணினி வழியே எழுதவும், படிக்கவும் முடிவதை வியப்புடன் பாராட்டியதுடன், அந்த எழுத்துருக்களைக் கொண்டு எழுதியும் காண்பித்துள்ளார்.
அவர் வழங்கிய மிகச் சிறப்பான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் தகவலறிய பார்க்க: பழன் தமிழ் எழுத்துகள் உங்கள் கணிணியில் – https://www.vallamai.com/?p=54582
பாண்டியர் சோழர் பயன்படுத்திய வட்டெழுத்தை இப்பொழுது உங்கள் கணிணியில் நீங்களே எழுதலாம். அடுத்துள்ள இணைப்புக்குச் செல்க, எழுத்துருவைத் தரவிறக்குக. தமிழ் ஒருங்குறியில் தட்டச்சிடுக. ஒருங்குறி எழுத்துருவாக e-Vatteluttu OT தேர்க. 35 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்துருவுக்கு e-Tamil 100 தேர்க.
என்னே… என்னே…. என்னே….
செய்தி தந்த புதுவைப் பேராசிரியர் இழான் அவர்களுக்கும், அரிதின் முயன்று எழுத்துரு உருவாக்கிய ஆம்பேர்க்கு வாழ் பேராசிரியர் எல்மார் இணிப்பிராதருக்கும் தமிழ் மக்கள் என்றென்றும கடமைப்பட்டவர்கள்.
திரு. நிப்ரத் அவர்கள் வடிவமைத்த வட்டெழுத்து எழுத்துருக்களை தரவிறக்கம் செய்ய இத்தளத்திற்கு செல்க:
http://www.aai.uni-hamburg.de/indtib/vatteluttu.html
திரு. நிப்ரத் அவர்கள் தமிழ் வட்டெழுத்து மட்டுமன்று, இதுவரை; தமிழ், அஸ்ஸாம், வங்கம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, ராஜஸ்தானி, சமஸ்கிரதம், தெலுங்கு எனப் பற்பல இந்திய மொழிகளிலும், சிங்கள மொழியிலும் எழுத உதவும் பொருட்டு, அந்தந்த மொழிகளுக்குமான “இந்தோலிபி” (Indolipi) எழுத்துருக்களை உருவாக்கி விலையற்று வழங்கி அனைவரும் பயன்பெறும் வகையில் உதவியுள்ளார்.
இவர் உருவாக்கிய Elmar’s Indic எழுத்துருக்களான e-Tamil , e-Telugu , e-Kannada , e-Malayalam , e-Oriya , e-Panjabi , e-Asamiya, e-Bengali, e-Gujarati, e-Nagari, e-Devanagari, e-Grantha, e-Sanskrit, e-Sinhala ஆகிய எழுத்துருக்கள் கிடைக்கும் இணைய தளத்தின் முகவரி: http://elmar-kniprath.software.informer.com/
திரு. நிப்ரத் உருவாக்கிய வட்டெழுத்துக்களில் எழுதிப் பழகி, படித்துப் பழகி தேர்ச்சி பெறும் தமிழர் யாவரும் அடுத்த முறை தமிழக தொல்பொருள் காட்சியகங்களுக்கோ, கோவில்களுக்கோ செல்லும் பொழுது வட்டெழுத்தில் உருவாக்கப்பட்ட கல்வெட்டுகளையும் ஓலைச்சுவடிகளையும் படிக்க ஆர்வம் கொள்வார்கள் என்பது உறுதி. தமிழின் தொன்மையைப் பாராட்டும் வண்ணம் அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் அக்கறையுடன் ஈடுபடுவார்கள் என்பதையும் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போம்.
திரு. நிப்ரத் தமிழர்களுக்கு அளித்த பரிசுக்காக அவரை வாழ்த்தி, வல்லமை குழுவினர் அவரை வல்லமையாளாராகப் பாராட்டி மகிழ்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
தொடர்புக்கு: “Elmar Kniprath” மின்னஞ்சல் முகவரி: kniprath@online.de
படங்களும் தகவல்களும்:
முனைவர் “ழான்” அவர்களின் சமூக வலைத்தளங்களில் இருந்து திரட்டப்பட்டன.