-செண்பக ஜெகதீசன்

அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார்
தமரின் தனிமை தலை.
(திருக்குறள்:814 – தீ நட்பு)

புதுக் கவிதையில்…

போரில் வீரனைப்
புறந்தள்ளிவிட்டுப்                                            horse
பாதியில் ஓடிடும்
பரி போல,
துன்ப காலத்தில்
துணையாயின்றித்
தனியே விட்டுச்செல்லும்
தீய நட்பைவிட,
தனிமை மேலானதே…!

குறும்பாவில்…

போரில் களம்விட்டோடும் குதிரைபோல்
துன்பத்தில் துணைவரா நட்பைவிட,
தனிமை தலையாயதே…!

மரபுக் கவிதையில்…

அமரது நடந்திடும் வேளையிலே
ஆற்றும் கடமையை விட்டுவிட்டு,
சுமையென வீரனைத் தள்ளிவிட்டே
சுகம்பெற ஓடிடும் குதிரையேபோல்,
நமக்குத் துன்பம் வருகையிலே
நம்மைச் சிறிதும் பாராமல்
தமது நலனே பார்த்தோடும்
தீய நட்பினும் தனிமைமேலே…!

லிமரைக்கூ…

வீரனைப் புறந்தள்ளியோடும் குதிரை போரில்,
இதுபோல் கைவிட்டோடும் நட்பைவிட
இடர்வரினும் தனிமையே மேலானது பாரில்…!

கிராமிய பாணியில்…

குதுரவோடும் குதுரவோடும்
குப்புறத்தள்ளிட்டு குதுரவோடும்,
சண்டையில வீரன உட்டுட்டு
சத்தமில்லாம ஓடிப்போவும்,
குதுரவோடும் குதுரவோடும்
குப்புறத்தள்ளிட்டு குதுரவோடும்…

வேண்டாம்வேண்டாம் நட்புவேண்டாம்
குதுரபோல நட்புவேண்டாம்
கைவுடுற நட்புவேண்டாம்,
போதும்போதும் தனிமபோதும்
பொய்யில்லாத் தனிமபோதும்…

குதுரவோடும் குதுரவோடும்
குப்புறத்தள்ளிட்டு குதுரவோடும்…!

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “குறளின் கதிர்களாய்…(61)

  1. லிமரக்கூவில் அருமையாக வந்துள்ளது. 

  2. கருத்துரை வழங்கிச் சிறப்பித்த 
    நண்பர் அமீர் அவர்களுக்கு,
    நன்றிகள் பல…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *