
”ஈருயிர் ஓர்தலையாய் இந்தப் பசுமாடு,
சீராயர் கோவிந்தன் சேவடி, -சேராது,
கனைத்திளங்கன் றுக்காய், நனைக்குமோநப் பின்னை,
மனைத்தலத்தைப் பாலின் மடி”….கிரேசி மோகன்….
Blog
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
திருக்குறளுக்குப் புது விளக்கம் – 5
– புலவர் இரா. இராமமூர்த்தி.
ஈதல் என்ற மனிதகுலக் கடமைகளுள், விருந்தோம்பல் என்ற இல்லறத்தார் கடமை அடங்கும்! ஒருவர் மனைவியுடன் இல்லறம் நடத்துவதே தம்மை நாடி வரும் விருந்தினர்களுக்கு உணவுபடைத்து, மகிழ்வதற்கேயாகும்! இதனைத் திருவள்ளுவர்,
”இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு!”(81)என்று விருந்தோம்பல் அதிகாரத்தின் முதற்குறட்பாவில் குறித்துள்ளார்! தம் இல்லத்திற்கு விருந்தினர் வரவேண்டும் என்பதே இல்லத்தரசியரின் ஏக்கமும், நோக்கமும் ஆகும்! இந்தச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாகப் பலவிடங்களில் உள்ளன! விருந்தினர் வருவதை முன்னரே காக்கை கரைந்து அறிவிக்கும் என்பது நம் குடும்ப மரபு சார்ந்த நம்பிக்கை. காக்கை கரைந்ததைக் கேட்ட தோழி தலைவியிடம், பிரிந்து சென்ற கணவன் விரைவில் மீளுவான் என்று கூறியதாகக் குறுந்தொகையில் ஒரு பாடல் உள்ளது. அந்தப் பாடலில் காக்கையைப் பற்றிச் சிறப்பித்துப் பாடியமையால் அப்படலாசிரியர் ”காக்கைப் பாடினியார்” என்று அழைக்கப் பெற்றார்!
இந்த விருந்தோம்பல் அதிகாரத்தின் எல்லாக் குறட்பாக்களும் தனித்த சிறப்பு வாய்ந்தவை! இல்லறத்தின் ஐந்து கடமைகளுள் விருந்தோம்பலும் ஓன்று. இதனைத் திருவள்ளுவர் ,
”தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்
கைம்புலத்தார் ஓம்பல் தலை! ” (43)என்ற குறட்பாவில் தெளிவிக்கிறார்! விருந்தோம்பல் நம் தமிழகத்தின் சைவ வைணவ சமயங்களின் கடமையாக அறிவிக்கப் பெற்றன! சைவத்தில் விருந்தோம்பல், ”மாகேசுர பூசை ” என்றும், வைணவத்தில் “ததியாராதனம்” என்றும் வழங்கப் பெறும். பொதுவாக இந்திய உபநிடதங்கள், ”மாத்ரு தேவோ பவ: பித்ரு தேவோ பவ: ஆசார்ய தேவோ பவ: அதிதி தேவோ பவ: ” என்று விருந்தோம்பலை மனித குலக் கடமையாக அறிவிக்கின்றன! சிலப்பதிகாரத்தில் கண்ணகி …
”அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை ”என்று தன் கடமைக் குறித்துக் கோவலனிடம் கூறுகிறாள்! விருந்தோம்பல் தொல்லோர் சிறப்பித்த பெருமை பெற்றதாகும். இங்கே புதிய விளக்கம் பெற அமைந்த திருக்குறள் ,
”வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்” (85)என்பதாகும். இக்குறளுக்கு, ”வந்த விருந்தினருக்கு உணவிட்டபின் எஞ்சிய உணவை உண்டு மகிழும் இல்லறத்தானது விளைநிலத்தில் விதை விதைக்க வேண்டா; அந்நிலத்தில் பயிர்கள் தாமே விளையும் ” என்ற பொருளையே எல்லாரும் கூறினர்! இறைவன் திருவருள் விருந்தோம்பும் இல்லறத்தானின் நிலத்தில் தேவையான பயிர் விளைச்சலை உண்டாக்கும், என்பது உண்மைதான். ஆனாலும், இந்த விளக்கம் சற்றே மிகையாக இருப்பதுபோல் எனக்குத் தோன்றியது.
பெரிய புராணம், வைணவ வியாக்யானங்கள் ஆகியவற்றில் இந்த விருந்தோம்பல் பற்றிய வரலாறுகளைப் படித்த பின் இந்தக் குறட் பாவுக்குப் புதுமையான விளக்கம் புலப்பட்டது. சைவத்தின் பேரிலக்கியமான பெரிய புராணத்தில் ”இளையான்குடி மாற நாயனார்” புராணத்தில் ஒரு நிகழ்ச்சி உள்ளது! அந்த மாறனார் இல்லத்தை நோக்கி வந்த அடியாருக்கு உணவிட்டு விருந்தோம்பும் வகையில் அவரில்லத்தில் வசதி இல்லை; வறுமை கொடிய தாண்டவ மாடியது! இந்த நிலையிலும், அவர் வீட்டுப் பொருள்களை விற்றும் கடன் வாங்கியும் விருந்தினரைப் பேணினார்! இவர்தம் சிறப்பை உலகத்தார் உணரும் பொருட்டு , இறைவனே சிவனடியாராக அந்த இளையான்குடி மாறனின் இல்லம் நோக்கி எழுந்தருளினார். வீட்டில் ஒரு மணியரிசி கூட இல்லை! அடுத்த போகத்துக்கு உ ரிய விதைநெல்லை வயலை உழுது விதைத்திருந்தார்! நள்ளிரவில் பசியுடன் வந்த சிவனடியாரின் நிலைமையைக் கண்டு உள்ளம் உருகிய மாற நாயனார். மனைவியிடம் யோசனை கேட்டார். அந்த மங்கையர் திலகம், வயலில் விதைத்த நெல்லை வழித்தெடுத்துச் சேர்த்துக் கொண்டு வந்தால், தம்மால் இயன்ற வகையில் அமுதாக்குவதாகக் கூறினார். அந்த ஈரநெல்லை வறுத்து, உரலில் குத்தி அரிசியாக்கி உணவு சமைத்து அடியாருக்கு அமுது படைத்த அருள் வரலாறு என் உள்ளத்தை உருக்கியது! அதே நேரத்தில் இந்தத் திருக்குறளுக்குப் புதிய பொருளும் புலப்பட்டது!
வந்த விருந்தினருக்கு உணவிட்டு எஞ்சியதைப் புசிக்கும் அறவோராகிய அவர் , அடுத்த போகத்துக்கு விதைத்த நெல்லையே எடுத்து அடியாருக்கு உணவு சமைத்து வழங்கினார். ஆகவே அவர் நிலத்தில் வித்தினை இட்டுப் பயிராக்க விரும்பவில்லை! இதனை,”அவர் வயலில் வித்து இடுதலையும் வேண்டுவாரோ?” என்ற கேள்வி கேட்டு விளக்குகிறார் . இந்த வகையில், விருந்தோம்பி மிச்சில் மிசைவானாகிய இல்லறத்தான் வித்து இடலும் வேண்டும் கொல்லோ? என்று சொற்களை மாற்றிப் போட்டுப் பொருள் கொள்ளல்லாமே? என்று கருதினேன். ஆகவே இத்திருக்குறளின் புதிய பொருளைப புரிந்து கொண்டேன்! அதன்படி ,”விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் (விளைநிலத்தில்), (அடுத்த போகத்துக்கு) வித்தும் இடல் , வேண்டும் (விரும்புவான்) கொல்லோ? (விரும்ப மாட்டான்!! ) என்று பொருள் கொண்டேன்! வித்திட வேண்டா; தாமே விளையும் என்ற மிகைப்படுத்தப் பெற்ற பொருள் இங்கே வேண்டாததாகி விடுகிறது , அல்லவா?
இதற்கு ஆதரவாக வைணவ வியக்கியானத்திலும் ஓர் அழகிய வரலாறு உண்டு. ஸ்ரீ இராமானுஜருக்கு அணுக்கத்தொண்டனாகிய பிள்ளை உறங்காவில்லி தாசரின், அன்புக்குரிய மனைவி பொன்னாச்சி. அவள் ஒருமுறை தன் கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில், அடியாருக்கு ததியாரா தனம் செய்ய, வீட்டில் அடுத்த போகத்துக்கு விதை இடுவதற்கு வைத்திருந்த முற்றிய நெல்லை இடித்து அரிசியாக்கி அமுது படைத்து விட்டாள்! இதனை அறிந்த உறங்காவில்லி தாசர் ‘ஏன் ?’ என்று கேட்டார்! அதற்குப் பொன்னாச்சி, ”சுவாமி இந்த நெல்லை, அடியாருக்கு இட்டதன் மூலம் இனி, நாம் செல்ல விருக்கும் சொர்க்கபூமியில் விதைத்து விட்டேன்!” என்று விடை கூறி அடியாரை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி விட்டார்! ஆகவே விருந்தோம்பலுக்குச் செலவிட்ட நெல் சொர்க்கத்தில் விதைக்கப் படும். ஆகையால் இங்கே இந்த பூமியில் வித்திட வேண்டா! ‘ என்பது புலனாகின்றது!
-
கவிஞானி ரூமியின் கவிதைகள்
கவிஞானி ரூமி (கி. பி. 1207-1273)
கவிதை -2 பாகம் -2
மதுக்குடி அங்காடி (The Tavern)
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
ஒயின் உள்ளது
பெரிய அண்டாவில் !
ஆயினும்
கிண்ணங்கள் இல்லை !
அவ்வித மாயின் சரி !
உடம்பு மினுமினுக்கும்
ஒவ்வோர்
காலைப் பொழுதிலும் !
மேனி மிளிரும் எமக்கு
மீண்டும்
மாலைப் பொழுதில் !+++++++++++
எதிர்காலம்
எமக்கில்லை என்று
இடித்துரைப்பார்
அவரெல்லாம் !
அப்படிச் சொல்வது சரிதான் !
அதனை
ஒப்புக் கொள்ளும்
எமதுள்ளம் !+++++++++
வாடிக்கை
குடிபோதை இனமொன்று
ஒன்றுள்ளது !
அத்துடன் சேர்ந்து நீவீர்
பித்துடன் மகிழ்வீர் !
கூச்சல் வீதியில் நடப்பீர்
கூக்குரல் நாயகர் ஆகி !
ஆசை தீரும் மட்டும்
அருந்துவீர்
தம்மைத் தாமே
அவமதித்துக் கொண்டு !+++++++++
இரு கண்களை மூடிக் கொள்
மறு கண்ணால் நீ பார்த்திட !
கரங்களை விரித்திடு
கைகளைக் குலுக்க வரும் போது !
வட்டத்தில் நீ வந்து
உட்கார் !
ஓநாய் போல் நடிப்பதைத்
தவிர்த்திடு !
ஆட்டிடையன்
பரிவு
உள்ளத்தில் நிரம்புவதை
உணர்ந்திடு !+++++++++++++
இரவு வேளையில்
உன்னருங் காதலி
திரிகிறாள் உன்னைத் தேடி !
ஆறுதல் அளிக்க வருவோரை
ஏற்றுக் கொள் ளாதே !
வாயை மூடிக் கொள்,
வாய்க்குள்
உண்டியைத் திணித்த பிறகு !
உன் காதலி வாயை
உன் வாயால் சுவைத்திடு !++++++++++++++
“என்னை விட்டுப் போனாள்
அவள்”
“என்னை விட்டுப் போனான்
அவன்”
என்று முணுமுணுத்து
நொந்தால்
இருபது பேர் உன்னை
நெருங்குவார் !
கவலை படுவதைக் காலி செய் !
மனக்கவலை
உனக்குத் தருபவன் யாரென
நினைத்திடு !++++++++++++
சிறைக் குள்ளே நீ ஏன்
தங்கி யுள்ளாய்
அறைக் கதவு முழுவதும்
திறந்துள்ள போது ?
முக்கோணப் பயத்தில்
முடங்காது நீ வெளிச் செல் !
சிந்தித்து
மௌனமாய் வாழ்ந்திடு !+++++++++++
வாழ்வு வட்டத்தை விரிவாக்கித்
தாழ்ந்து பணிவாய்
எப்போதும் !
விரைந்து செல் தணிவாய் !
எந்தன் தலையில் கொந்தளிக்கும்
விந்தை,
பறவைகள் பயணம் பற்றி !
ஒவ்வோர் அணுவும்
தனக்குள் சுழலும் ! எனது
மனத்தின் காதல் அவைதான் !+++++++++++++
காவல் துறை அதிகாரியைக்
கண்டு அஞ்சுவார்
குடிகாரர் !
ஆனால் காவல் துறை
அதிகாரியும் குடிக்கின்றார் !
இங்குள்ள மக்கள்
நேசிப்பர்
மது மண்டும் இருவரையும்
மாறு பட்ட
சதுரங்கக்
காய்கள் போல் !***************************
தகவல் :
- Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
- The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
- Life of Rumi in Wikipedia
+++++++
-
ஐந்து கை ராந்தல் (21)
வையவன்
மனிதர்கள்!
ஆண்டாண்டு காலத்துக்குத் தாம் வாழப் போகிறோம் என்பதில் ஒவ்வொருவருக்கும் என்ன நிச்சயம்! எவ்வளவு நம்பிக்கை!
சாலையிலும் வீதியிலும் மரணம் அவர்களைச் சந்திக்கிறது.
ஹலோ சொல்லுகிறது. ஞாபகம் இருக்கிறதா என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறது. கடன் கொடுத்துவிட்டு வசூல் செய்யும் தமிழ் சினிமாப் பட்டாணியன் போல் மிரட்டுகிறது. விபத்துக்களின் கோரைப் பற்கள் இளிக்கின்றன.ஆனால் மனிதர்கள்?
கொஞ்சம் வெலவெலக்கிறார்கள். வியர்க்கிறார்கள். நான் அங்கிருந்தால்… என்று கற்பனை செய்கிறார்கள்.இறந்து போனவர்களிடம் தங்கள் இடம் மாற்றிப் பார்க்கிறார்கள். அப்பாடா, நல்லவேளை. அது நானில்லை என்று நிம்மதி அடைகிறார்கள். நகர்கிறார்கள்.
மீண்டும் மீண்டும் மரணம் எதிர்கொள்கிறது. நம்பிக்கைகள் கொஞ்சம் நெளிந்து கொடுக்கின்றன. ஆனாலும் என்ன? அவை மீண்டு விடுகின்றன.
எல்லாம் ஒரு நாளைக்கு மாறிவிடும். இருந்த சுவடு தெரியாமல் அழிந்து விடும். அது அவர்களுக்கும் தெரியும்.
அந்த உண்மையை அவர்களுக்குச் சந்திக்கப் பிரியமில்லை. கூடுமானவரை உண்மையைத் தள்ளிப் போடவே அவர்கள் விரும்புகிறார்கள்.
தன்நலம்… தன் சுகம்… தன் பாதுகாப்பு… தன் எச்சரிக்கை… தான்… தான்… தான். அதற்கு எங்கே குந்தகம் வந்தாலும் அவர்களுக்கு எரிச்சல் வருகிறது. வேறு வேலை இருப்பது, அவசரம் காத்திருப்பது கவனம் வருகிறது.
சாலையிலே ஒரு டூரிஸ்டு பஸ் கவிழ்ந்து விழுந்திருக்கிறது.
நொறுங்கிய கண்ணாடிச் சிதறல்; இரத்தம் குட்டையாய்த் தேங்கியிருக்கிறது. முனகல்கள்.. ஊசலாடும் உயிர்களின் ஓலம்.சாலையில் இரவு நேர லாங் ரூட் பஸ்கள் போகின்றன. நிற்பதில்லை லாரிகள் போகின்றன. நிற்பதில்லை. கார்கள் பறக்கின்றன. நிற்பதில்லை.
தான், தன் பாதுகாப்பு, தன் அவசரம், கடிகார முட்களில் கட்டப்பட்டு விட்ட யந்திர வாழ்க்கையில் ஓடு ஓடு என்று நியமிக்கப்பட்ட ஒரு கற்பித ஓட்டப் பந்தயத்திற்கு குந்தகம் வந்து விடும்.
போலீஸ்… வழக்கு… கோர்ட்… சம்மன்..
“வண்டியை விடுப்பா”
ஓரிரண்டு வாகனங்கள் நிற்கின்றன. வேடிக்கை பார்க்க. பிரயாணிகளுக்கும் ‘தான்’ ஞாபகம் வந்து விடுகிறது.“அடுத்த ஊர் போலீஸ் ஸ்டேஷன்லே போய் ரிப்போர்ட் பண்ணுவோம். வண்டியை எடுப்பா.”
‘விபத்தில் சில மனித உயிர்கள் போயிருக்கின்றன. போய்க் கொண்டிருக்கின்றன. ப்சப்… புவர் சாப்ஸ்… போலீஸ் இருக்கிறது. வந்து பார்த்துக் கொள்ளும்.’‘அது போலீஸோட கடமை புவர் சாப்ஸ்… வர வர டூரிஸ்ட் வண்டிக்காரனுங்க ராத்திரி தூக்கமில்லாம தண்ணி அடிச்சிட்டு வண்டியை விடறானுங்க.’
எல்லாருமே இப்படித்தானா?
இதயம்… இரக்கம்… உணர்ச்சிகள்… எல்லாவற்றையும் எலக்ட்ரானிக் கடிகார எண்கள் சாப்பிட்டு விட ஒரு நிமிஷத்தை விட்டு அடுத்த நிமிஷத்துக்கு ஓடுவதிலேயே மனித நாகரீகம் கண்ணும் கருத்துமாக இருக்கிறதா?
இல்லை.
சாலையில் ஒரு ஜீப் வருகிறது.
அதில் ஓர் ஆணும் பெண்ணும். அவர்கள் வண்டியை நிறுத்துகிறார்கள். ரத்தக் குட்டையை, மரண ஓலங்களை, சிதைந்த அங்கங்களைப் பற்றிப் பயமில்லாமல் பஸ்ஸில் விழுந்திருப்பவர்களை ஒவ்வொருவராக இழுத்து வெளியேற்றுகிறார்கள்.குழந்தைகளை, கிழவிகளை வெலவெலத்து உயிருடன் இருக்கும்போதே செத்து விட்டதாக விழுந்திருக்கும் நபர்களை இறக்குகிறார்கள்.
ஏழெட்டு பிணங்கள் விழுந்துவிட்டன. முன் ஸீட் பக்கமாக உட்கார்ந்திருந்தவர்கள் பத்துப் பதினைந்து… இல்லை இருபது பேருக்கு மேல் பலமான அடி.
“பிரீதா… நீ இங்கே தனியா நிக்கிறியா… நான் ஏழெட்டுப் பேரை அள்ளிப் போட்டுக்கிட்டுப் போயி கேஷûவாலிட்டிலே அட்மிட் பண்ணிட்டு வர்றேன்!”
“ஓ… எஸ்”
“வண்டி ஏதாவது வந்தா நிறுத்து… கை காட்டு… விஷயத்தைச் சொல்லு! ஏ.பி. பார்டர் தானே இது… ஐ வில் கோ டு சித்தூர் ஹாஸ்பிடல்.”
வண்டியில் அவள் அவன் காயமடைந்த உடல்களை ஏற்றுவதற்கு உதவி செய்கிறாள். வண்டி கிளம்புகிறது.அவள் மட்டும் தனியாக ஒரு தீரமான உள்ளத்தோடு அடிபட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு நிற்கிறாள்.
முக்கால் மணி நேரத்தில் சாலையில் சென்ற பல லாரிகளை நிறுத்தும் முயற்சியில் தோற்றுப் போய் அவள் காத்திருக்கிறாள்.
இரண்டாவது ‘சிங்கிள்’ அடிக்க அவன் ஜீப்போடு வருகிறான்.
“ப்ளாகார்ட்ஸ்… ஹாஸ்பிடலா நடத்தறானுங்க. நோபடி கேர்ஸ்… டூட்டி முடிஞ்சு போச்சு! டாக்டர் பர்மிஷன் வேணும்… இல்லாத ரூல்ஸ் பேசறானுங்க. போலீஸ் வான் எடுத்துட்டு வாங்கய்யான்னா கமிஷனர் கிட்டே போன்லே பரிமிஷன் வாங்கிட்டு வர்றோம்னு சொல்றாணுங்க” அவன் வெறுப்போடு திட்டித் தீர்க்கிறான்.“டோன்ட் வேஸ்ட் டைம்… இந்த சிங்கிள்ளே நானும் வர்றேன். மனுஷங்களை சபிச்சு திட்டி ஒரு புண்ணியமுமில்லே வேஸ்ட் ஆஃப் டைம்… வேஸ்ட் ஆஃப் எனர்ஜி”
ஹாஸ்பிடலுக்குப் போய் ‘பிரயாணிகளை’ இறக்கி விட்டு விட்டு நர்ஸுகளைச் சந்தித்து, டாக்டரைச் சந்தித்து என்னமோ படபடவென்று பேசுகிறாள்.அவள் செம்மஞ்சள் நிறத்தில் கவர்ச்சியாக இருக்கிறாள். அவள் முகத்தில் சொட்டுச் சொட்டாகக் குறைந்து கொண்டு போகும் அந்த ‘ஸோ-கால்ட்’ மனிதாபிமானம் ஜுவாலை வீசுகிறது. அதன் உண்மை தகிக்கிறது.
அவ்வளவு அழகான, இளமையான, கவர்ச்சியான நர்ஸாக இருக்கின்ற ஒரு பெண் பேசும்போது தான் மனிதாபிமானம் என்ற சரக்குக்கு ஒரு விலை மதிப்பு வருகிறது.
ஒரு பட்டாளம் டாக்டர்கள் நர்ஸுகள் ஓடி வருகிறார்கள்… ஸ்ட்ரெச்சர்கள்… ‘பெட்’கள்.
“இன்னும் ஒரு சிங்கிள் அடிச்சுடலாமா தாமு!”“ஓ…எஸ்”
“பாவம், யூ அர் வெரி டயர்ட்”
“இல்லே… ஐம் வெரி ஹாப்பி… நமக்கு ஒரு சில நிமிஷமாவது மனுஷனா வாழற ஒரு சான்ஸ் கிடைச்சுதே!”
அதுதான் அவன் பேசிய கடைசிப் பேச்சு.மூன்றாவது சிங்கிளில் எக்கச் சக்கமாக சிக்கிக் கொண்டிருந்த ஒரு பிணத்தை இழுத்து வெளியேற்றும் போது நாலைந்து பேர் ஏறி தங்கள் உடமைகளை அவசரமாக இழுத்து வெளியேற்றுகிற கலவரத்தில், விழுகிற நிலைக்கு வந்திருந்த ஓர் இரும்புப் பெட்டி நச்சென்று அவன் தலையைக் குறிப்பார்த்த மாதிரி வந்து விழுந்தது.
தாமுவையும் கேஷûவாலிட்டிக்குக் கொண்டு போகிறார்கள். காப்பாற்ற வந்தவனுக்கு விபத்து நேர்ந்த பரிதாபம் எல்லோரையும் நெகிழ வைக்கிறது.
“ஸ்கல் ஃப்ராக்சர். இங்கே கருவிகள் கிடையாது. வேறே வசதிகள் கிடையாது. சி.எம்.சிக்கு எடுத்துட்டு போயிடுங்க. நிலைமை சீரியஸ்” என்று சித்தூர் கை விரிக்கிறது.
ஜீப்பில் இரண்டு பேர் துணையுடன் அவனை சி.எம்.சிக்குக் கொண்டு வருகிறார்கள்.
அடுத்த இருபத்தி நாலு மணி நேரம்.அவளுக்கு நம்பிக்கையும் பயனும் அந்தரத்தில் தொங்கும் கம்பி ரயில் பயணமாக மாறி மாறி வருகின்றன.
உலகின் எந்த மூலையில், எந்த சிகரத்தில், எந்த சமுத்திரத்தில், எந்தக் கட்டிடத்தில், உயிரை மண்ணோடு கட்டி வைக்கிற மஹாசக்தி இருக்கிறது?
அவள் எல்லாவற்றையும் வேண்டுகிறாள்.அவன் அவளைக் காதலித்ததில்லை.
அவளும் அவனைக் காதலித்ததில்லை.
இரவுகளிலும் பகல்களிலும் ஒருவர் உடம்பும் உள்ளமும் மற்றவருக்குத் தேவைப்பட்டன.
இதைத் தவிர வேறு பந்தம் இல்லை.எனினும் அவள் பெண். கற் பாறையை ஊடுருவி உயிரின் வேர்களை பந்தம் கொண்டாட விடும் பூமி.
வானத்தில் பறந்துவிடத் துடிக்கும் உயிர்களை தன் கருணையின் ஈரத்தில், கனிவின் அமிர்தத்தில் கட்டிப் போடும் ஆகர்ஷணம்.அவளுக்கு இறந்த காலம் ஒன்று இருந்தது. நேசித்தவை எல்லாம் – பிரியமானவை எல்லாம் – கையிலிருந்து பறிக்கப்பட்ட சபிக்கப்பட்டதொர இறந்த காலம்.
அவன் எதிர்காலம் ஒன்றிற்கு வாக்குறுதி அளித்திருந்தான். அவள் அந்த இறந்த காலங்களின் குவிந்த சாம்பல் மேட்டின் முன் மண்டியிட்டாள்.
‘எனிக்கு இத்ர மதி. பகவானே ரக்ஷிக்கு ரக்ஷிக்கு’ பிரார்த்தித்தாள் உருகினாள்.
ஆனால் பிரார்த்தனைகளின் சிறகுகளுக்கு உயரமான எல்லை விரைவில் தட்டுப்படுவதில்லை.
அவை முன்னும் பின்னுமற்ற, முடிவும் தொடக்கமுமற்ற ஆகாயத்தில் அனாதைகளாகப் பறக்கின்றன.
சில சமயம் தொடுவானம் ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்புறம் வெறிச்சிட்டிருக்கிறது.நீலமாய்… சாம்பலாய்… நித்தியத்துவம் என்ற நிற உருவமற்ற சூன்யமாய், பிரார்த்தனைகள் பறந்து கொண்டே செல்கின்றன.
சிவா வரும்போது எல்லாம் முடிந்து விட்டிருந்தது. ‘மார்ச்சுவரி’யில் பாண்டேஜ் போடப்பட்டு செலுத்த வேண்டிய பில் கட்டணத்தை எதிர்பார்த்து தாமுவின் உடம்பு டெலிவரி செய்யப்படுவதற்காகக் காத்திருந்தது.
அவன் போன பத்து நிமிஷத்தில் மதனபள்ளியிலிருந்து தர்மராஜ ரெட்டிகாருவின் உறவினர்கள் ஒரு மெடாடரில் வந்து இறங்கினர்.
பில் கட்டப்பட்டதும் ஸ்ட்ரெச்சரில் தாமுவின் உடல் லேசாகத் தூக்கித் தூக்கிப் போடப்பட வந்து சேர்ந்தது.
இதுதான் தாமு.விசாலமான இருதயம். வைராக்கியம், நேசம், தொழில் திறமை.. தான் தான் என்று சுழலும் சுயநலச் சக்கர அச்சிலிருந்து சந்தர்ப்பம் வரும்போது துண்டித்துப் பிரிந்து வரும் துணிவு.
மிச்சம் எல்லாம் போர்வை போர்த்தப்பட்ட இந்த உடம்புதான். மீதியெல்லாம் இவ்வளவு தான்.
சிவா நொறுங்கிப் போனான்.பிரீதா சில்லு சில்லாகச் சிதறியவள் போல் நின்றாள். அவள் சிவாவைப் பார்த்து தலையசைத்தாள். அழவில்லை. கதறவில்லை.
அவையெல்லாம் நேர்ந்துள்ள இழப்பின் முன்னே கொச்சையானவை. அந்த வெளியீடுகளில் நேர்ந்த நஷ்டத்தின் துக்கத்தை செலவிட முடியாது.
மதனபள்ளியில் கட்டிலின் மீது படுத்துக் கொண்டே தாமுவின் தந்தை அவன் தனக்கு செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளை பிறர் அவனுக்குச் செய்வதைப் பார்த்தார்.
செய்தி வேட்டைக்காரர்கள், புகைப்படம் பிடித்தார்கள். மறுநாள் கொட்டை எழுத்துக்களில் இயந்திரங்கள், இயந்திர மயமாய்விட்ட வாழ்வில் மனிதர்கள் மிச்சமிருக்கும் அதிசயத்தை அச்சடித்தன.
மயானத்திற்கு கூட்டங் கூட்டமாய் மனிதர்கள் வந்தார்கள். தாமுவின் அந்த அந்தஸ்திற்காக வந்தார்கள் சிலர்.மனிதன் ஒருவன் மாண்ட வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டோர் பலர்.
செங்குட்டுவன் வந்தான்.ராயப்பேட்டையிலிருந்து மலர் வளையங்கள் வந்தன.
புண்ணியகோட்டி வந்தார். திஷ்யா வந்தாள்.
தந்திகள் வந்தன.
தபால்கள் வந்தன.சிவாவுக்கு சுயநிலை மீள மூன்று நாளாயிற்று. கரை தெரியாமல் இருண்டு விட்ட சமுத்திரத்தில் மரணம் என்ற சூறாவளியின் ஆர்ப்பரிப்பும், உணர்ச்சிகள் சுழன்றடிக்கும் ஊர்த்துவ வேகமும் மட்டும் அவனுக்கு நினைவிருந்தன.
எப்படிப் போயின அந்த மூன்று நாட்கள்!
பிரீதா எங்கே இருந்தாள்? என்னவானாள்?
வந்தவர்கள் எப்படிப் போனார்கள்?
போனவர்கள் எங்கே மறைந்தார்கள்? எதையும் அவனால் சொல்ல முடியவில்லை.அந்த மூன்று நாட்கள் அவன் எங்கே சாப்பிட்டான்? எவ்வாறு விழித்தான்? எதுவும் திருப்பிச் சொல்ல முடியாத அனிச்சை செயல்கள் மாதிரி நடந்தன.
நாலாவது நாள் கட்டிலில் படுத்திருந்த தர்மராஜ ரெட்டிகாரு முன்னிலையில் விவகாரம் பேசினார்கள். அன்று சிவா சிவாவானான்.
“ராயப்பேட்டா ஒர்க்ஷாப் கணக்கு வழக்கெல்லாம் ஒனக்கு நல்லாத் தெரியுமா?” தாமுவின் மாமா கேட்டார்.
“எல்லாம் கரெக்டா எழுதி அப்டுடேட்டா வச்சிருக்கேன்…”
“ஒர்க்ஷாப்பை மறுபடியும் நடத்தணுமா மாமா?” அவர் கட்டிலில் படுத்திருந்த தர்மராஜ ரெட்டிகாருவிடம் அபிப்பிராயம் கேட்டார் தெலுங்கில்.கட்டிலின் மீது ஒரு மார்பு இரண்டு மூன்ஙறு முறை குலுங்கிற்று. ஒரு மேல் துண்டு வாய் ஓசை வெளிவராமல் தான் வாங்கிக் கொண்டது.
“இப்புடு தேனிகிஅதந்தா அடுகுதாரு?”
அதை இப்போது கேட்க வேண்டாம் என்று யாரோ தடுத்தார்கள்.
தர்மராஜ ரெட்டிகாரு ‘வேண்டாம்’ என்று கையசைத்தார்.‘வொர்க்ஷாப் ஒத்து” என்று அவர் குழறிய குரலில் சொன்னதை எவரோ தெளிவாகத் திருத்திச் சொன்னார்.
“ஒர்க்ஷாப்பை மூடிடலாம்னு சொல்றார்.”
‘இல்லை. ஒர்க்ஷாப் நடக்க வேண்டும்! அது தாமுவின் நினைவுச் சின்னம். வெறுங்கையுடன் சென்னைக்கு வந்த இளைஞன் ஒருவனின் வெற்றிச் சின்னம். தயவு செய்து அதை மூடாதீர்கள்.’
சிவா எழுந்து கத்தப் போனான். ஏதோ ஒரு கை அவனைப் பிடித்தது. பிரீதா.அவள் அவன் மனசிலிருந்ததைப் புரிந்து கொண்டவள் போன்று அவனை ஒரு கணம் உற்றுப் பார்த்தாள். பின்பு மெதுவாக அதைத் தடுப்பது போல் தலையாட்டினாள்.
தான் அதில் மானேஜர் என்பது அப்புறம் சிவாவுக்கு ஞாபகம் வந்தது. எழுந்து பேசினால் தன் உத்தியோகம் போய்விடும் என்று சொல்வதாக எடுத்துக் கொள்வார்கள்.
தாமு போனபின் நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கிற அக்கறை அவர்களுக்கு இருக்க வேண்டிய அவசியம் என்ன?
தன் தாமு வேறு.
அவர்கள் தாமு வேறு.அவர்கள் தங்கள் தாமுவின் சொத்தைக் குறித்து விவகாரம் பேசுகிறார்கள். அதில் தலையிடுவதற்கு தனக்கோ பிரீதாவுக்கோ எவ்வித உரிமையுமில்லை.
அங்கே விவகாரம் பேசப்பட்ட பதினெட்டாவது நாளில் தாமு நிறுவிய ஒர்க்ஷாப் அதன் குட்வெல்லோடும் ஸ்தாவர ஜங்கம சொத்துக்களோடும் இருபது லட்ச ரூபாய்க்குக் கை மாறியது.
சிவாவின் கணக்கு வழக்குகள் அப்பழுக்கின்றி இருந்ததை மீடியேட்டராக இருந்த ஆடிட்டர் எல்லார் முன்னிலையிலும் பாராட்டினார்.
அவனது மாதச் சம்பளத்தோடு ஒரு தொகை சேர்த்துக் கணக்கிட்டு கவரில் வைத்து அவனிடம் நீட்டினார்கள்.
ஒர்க்ஷாப் நடுவில் சமீபத்தில் பிரேம் செய்து, பெரிதாக மாலை போட்டிருந்த தாமுவின் போட்டோவை சிவா திரும்பிப் பார்த்தான்.
‘தட்ஸ் ஆல் சிவா..தாங்க்யூ. தாங்க்யூ ஃபார் எவ்ரிதிங்.’
போட்டோவில் திடமாக தீர்க்கமாக மரணத்தால் அழிக்க முடியாத உயிர்ச் சக்தியின் நினைவு போல் தாமு சிரித்தான்.
தொடரும்
-
பயன்மிகு இணையவழிச் சேவைகள் – தகவல் சேமிப்பு
– எஸ். நித்யலக்ஷ்மி.
பென்டிரைவ் (Pen Drive) போல தகவல்களை சேமிக்கும் மென்பொருள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
முன்னுரை :
டிராப்பாக்ஸ் (Dropbox) என்பது நம்முடைய ஃபைல்களை இண்டர்நெட்டில் பாதுகாப்பாகச் சேமிக்க உதவும் ஒரு சேவையாகும். இதனால் நமக்குத் தேவையான தகவல்களை Pen drive இல் கொண்டுபோகும் அவசியம் இல்லை. உங்களுடைய முக்கிய தகவல்கள் அழிந்தாலும் கவலைப்படத் தேவையில்லை, அவை பத்திரமாக டிராப் பாக்ஸ் Server களில் சேமிக்கப்பட்டு இருக்கும்.வழிமுறைகள் :
முதலில் டிராப் பாக்ஸ் இல் உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள் பின் உங்கள் கணினியில் டிராப் பாக்ஸ் ஸினால் வழங்கப்படும் மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் கணினியில் டிராப் பாக்ஸ் என்ற ஒரு Folder உருவாக்கி இருக்கும். இனி நீங்கள் அந்த டிராப் பாக்ஸ் folder இல் போடும் எந்த ஒரு கோப்பும் இணைய இணைப்புள்ள எந்தக் கணினியில் இருந்தும் www.Dropbox.com என்ற தளத்தின் வழியாக அல்லது நீங்கள் நிறுவியுள்ள டிராப் பாக்ஸ் மென்பொருளினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும். டிராப் பாக்ஸ் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவியவுடன் Public, Photos என்ற இரண்டு Folder கள் உருவாகியிருக்கும்.தகவல்களை பரிமாற வழிகள் :
Public :
இதில் Public என்ற Folder இனுள் போடும் கோப்புக்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம் அந்தக் கோப்பின் மேல் Right click செய்து Public Link ஐ copy செய்து email மூலமாக அல்லது ஏதாவது சமூகவலைத் தளங்களின் மூலம் வேறு ஒருவருடன் பகிர்ந்து கொள்ள முடியும்.Photos :
அதே போல் Photos என்ற Folder இனுள் உங்கள் படங்கள் உள்ள Folder ஐ போட்டு விட்டு நீங்கள் போட்ட அந்த folder இனுள் Right click செய்து Copy Public Gallery link என்பதை Click செய்து உங்கள் Photo Gallery க்கான அந்த link ஐ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.Sharing :
மேலும் டிராப் பாக்ஸ் இக்குள் இருக்கும் விரும்பிய ஒரு Folder ஐ நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். இதன் மூலம் அந்த Folder இல் நீங்கள் போடும் கோப்புக்களை உங்கள் நண்பரும், உங்கள் நண்பர் போடும் கோப்புகளை நீங்களும் பயன்படுத்த முடியும்முடிவுரை :
டிராப் பாக்ஸ் இனுள் Public , Photos எனும் இவ்விரு Folderகள் தவிர மற்றைய Folder இனுள் போடும் உங்கள் கோப்புக்களை உங்களைத் தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது. டிராப் பாக்ஸ் இல் நீங்கள் பதிவு செய்வதன் மூலம் இலவச 2 GB சேமிப்பிடத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். உங்கள் டிராப் பாக்ஸ் கணக்கில் இருந்து உங்கள் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களை டிராப் பாக்ஸ் இல் இணைப்பதன் மூலம் உங்கள் சேமிப்பிடத்தைப் 8GB வரை அதிகரிக்க முடியும் . -
சிகரம் நோக்கி (12)
சுரேஜமீ
தெளிவு

இன்றைய குழந்தைகள் பலருக்கும் ஒற்றைக் குறிக்கோளாக இருப்பது,
ஒன்று பெற்றவர்களின் எண்ணத் திணிப்பு;
அல்லது சக மனிதத் திணிப்பு!
என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
புற்றீசல் போல எங்கும் பரவிக் கிடக்கும், எண்ணற்ற பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் இடங்களின் எண்ணிக்கை,, தேர்ச்சி பெறும் மாணாக்கர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதும்,
பெரும்பாலான மாணவர்கள்,
ஏதேனும் ஒரு பொறியியல் சார்ந்த படிப்பு, எப்படியும் ஒரு கணிணிப் பயன்பாட்டு நிறுவனத்தில் பணி கிடைப்பதற்கு ஏதுவாகி விடும்;
என்ற எண்ணப் போக்கும், இன்றைய கல்வி நிலையில் ஒரு பொருளாதாரச் சிந்தனையை வித்திட்டு விட்டது என்று சொன்னால் மிகையாகாது.
இதனால் பாதிக்கப்பட்டது ஒட்டு மொத்த சமூகமேயன்றி தனி மனிதன் மட்டுமல்ல என்பதை நாம் அறிய வேண்டும். மிகச் சில பெற்றோர்களே, தம் குழந்தைகளின் விருப்பத்தை அறிந்து, அவர்களின் வழியில் செல்லவிட்டு, அந்தக் குழந்தைகளின் சாதனைக்குச் சான்றாக இருக்கின்றனர் என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
இதற்கு என்ன அடிப்படைக் காரணம்?
யோசித்துப் பார்த்தால், ஒன்று நம்முடைய அறியாமையாக இருக்கும்; இல்லையெனில், கற்ற கல்வி உடனடியாக நம் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய ஆற்றல் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்ற குறுகிய காலச் சிந்தனையாக இருக்க வேண்டும்.
கல்வியைப் பற்றி நம் இலக்கியங்களில், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ‘நாலடியார்’ கல்வி எப்படி கற்க வேண்டும் என்று சொல்வதைத் தெரிந்து கொள்வோமா?
…..தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து!
எப்படி அன்னப் பறவை, நீரைப் பிரித்துப் பாலை மட்டும் உண்ணுகிறதோ, அதைப்போல, நாம் எண்ணங்களை ஏற்றம் பெறச் செய்யும் நூல்களைத் தெரிந்தெடுத்து கற்றல் அவசியம்!
அப்பொழுதுதான் வாழ்வில் உயர்வடைய முடியும். அதை விடுத்து, ஒரு பொருளியல் சார்ந்த சிந்தனையிலோ, அல்லது ஒரு பட்டம் பெறவேண்டும் என்ற நோக்கிலோ படித்தால், கற்றலின் பயன் வாழ்வில் உய்ய வழி வகுக்காது!
சரி நமக்கு என்ன படிப்பது? எதைத் தேர்ந்தெடுப்பது? என்று தெரியவில்லையென்று வைத்துக்கொள்வோம்.
அடுத்து என்ன செய்ய வேண்டும்? நம்மில் கற்றறிந்த மக்களை உற்று நோக்குதல் அவசியம்.
நான் படித்தது முகவை மாவட்டத்தில், இராமநாதபுரத்திற்கும், இராமேஸ்வரத்திற்கும் இடைப்பட்ட ஒரு சிற்றூர். நான் படித்த காலத்தில், கிழக்கு முகவை என்று சொல்லக் கூடிய, மேற்கூறிய இவ்விரண்டு ஊர்களுக்கும் இடையில் இருந்த ஒரே மேல்நிலைப் பள்ளிக் கூடம், நான் படித்த கடுக்காய் வலசை என்னும் கிராமம் தான். அந்தக் கால கட்டத்தில், ஆசிரியர் எண்ணிக்கையும் குறைவே. மேலும், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், என எல்லாவற்றிலும் பின் தங்கிய ஒரு மாவட்டம் என்பதால், அரசு ஊழியர்களுக்குத் தண்டனைக்குரிய பகுதியாகக் கருதப்பட்டதால், அது சார்ந்த சிக்கல்களும் உண்டு.
அத்தகைய சூழலில், என்னால் தேவையான மதிப்பெண்களை, பள்ளி இறுதி வகுப்பில் பெற முடியவில்லை; அப்பொழுதே, முடிவு எடுத்தேன் மேல்நிலை வகுப்பில் வணிகவியல் பாடம் எடுத்து படிக்க வேண்டும் என்பதையும், அதற்குப் பின் பட்டயக் கணக்காளர் படிப்புதான் படிக்க வேண்டும் என்பதும்!
இதற்கு உறுதுணையாக இருந்தது நான் அடிக்கடி விடுமுறைக் காலங்களில் காரைக்குடிக்குச் செல்வதும், அங்கே கற்றறிந்தவர்களுடனான நட்பும் என்றால் சாலப் பொருந்தும்!
அதைத்தான் பின் வரும் பாடலில் உணர்த்துகிறது!
……….கற்றறிந்தார் கேண்மை நுனியின் கரும்புதின் றற்றே!
கற்றறிந்தவர்களுடைய நட்பு என்பது கரும்பை நுனியிலிருந்து சுவைப்பத் போன்று, நம் வாழ்க்கை கரும்பை ருசிப்பதற்கு உதவும். இதையெல்லாம், இளம் வயதில் நம் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி, ஒரு வழிகாட்டியாக இருந்தால், நிச்சயம் எந்த சிகரத்தையும் வரும் தலைமுறை அடையும் என்பதில், எள்ளளவும் ஐயமில்லை!
சமீபத்திய செய்தி ஒன்று!
இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த பதினேழே வயதான மாணவி பூஜா சந்திரசேகருக்கு, அமெரிக்காவில் உள்ள முதல்நிலைப் பல்கலைக் கழகங்கள் பதிநான்கில் சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இவருக்கு எப்படி இந்த வாய்ப்பு கிட்டியது என்றால்,
இவர் மறதி நோய் எனப்படும் பார்க்கின்சன் எனும் நோயை, ஒருவர் பேசும் முறையை வைத்தே கண்டறியப் படும் ஒரு முறையக் கண்டுபிடித்துள்ளார் என்ற சிறப்பே!
அவரிடம் எப்படி உங்களால் சாதிக்க முடிந்தது என்று வினவியதற்கு, அவர் கூறிய பதில் என்ன தெரியுமா?
‘என்னால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என நான் நம்பியதுதான்!’ என்றார்.
ஆக, ஒவ்வொருவரும் நாம் என்ன சாதிக்க வேண்டும் என்பதைத் தான் படித்த நூல்களின் வாயிலாகவோ,
நம் பெற்றோர்களின் அனுபவத் துணையோடோ, அல்லது
கற்றறிந்த மேதைகளின் நட்பு மூலமாகவோ,
நாம் விரும்பும் படிப்பைத் தேர்ந்தெடுத்து, அத்துறையில் தனிப்பெரும் சிறப்புப் பெறவேண்டும் என்ற முனைப்பும், தன்னம்பிக்கையும் கொண்டு முயன்றால்,
தெய்வத்தால் ஆகாதெனினும், முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் எனும் வள்ளுவனின் கூற்று,
உங்களைச் சிகரங்களை நோக்கிப் பயணிக்க வைக்கும்!!
-தொடர்ந்து சிந்திப்போம்!
அன்புடன்
சுரேஜமீ
-
காதல் நாற்பது – 43
உன்னை நேசிப்பது எவ்விதம் ?
மூலம்: எலிஸபெத் பிரௌனிங் (1806-1861)
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
1. Free Verse
எவ்விதம் நேசிப்பது உன்னை ?
எத்தனை வழிகள் உள்ளன வென்று
எண்ண வேண்டும் நான் !
என் காதல் ஆழ மானது !
அது விரிவது ! அது உயர்வது !
உணர்ச்சி மறைந்துள்ள போது,
உயிரினத்தின் முடிவாய்,
ஒப்பிலா நளினத்தில்
உன்னை எட்டித் தொடும்
என் ஆத்மா!பகற் பொழுதில், மங்கிடும்
இரவு வெளிச் சத்தில்
அவசியம் நேசிப்பேன் உன்னை
அனுதின முடிவு வரை !
மனத் தடுப்பின்றி
உனைக் காதலிக் கிறேன்,
மானிட உரிமைத் தேடலாய் !
தூய மனதுடன் நேசிப்பேன்,
என் புகழின் திருப்பமாய் !
முந்தைய துக்கங்க ளோடு
குழந்தையின்
பிடிவாத நம்பிக்கை யோடு
பித்தானேன் உன் மீது !இழந்த புனிதரிடம்
நழுவிப் போன எந்தன் காதல்
நாடுகிறது உன்னை !
கண்ணீர், பெருமூச்சு, முறுவல்
காட்டி விடும் எனது
காதலை !
வாழ்வு பூராவும் நேசிப்பேன் !
முடிவிலே
கடவுளின் விதி அதுவாயின்,
உறுதியாய் இருக்கும்
காதல் மட்டும்,
உன்மேல்
சாதலுக்குப் பிறகும் !+++++++
2. Sonnet Style
எப்படி நேசிப்ப துன்னை ? எண்ண வேண்டும் வழிகளை
என் காதல் ஆழ்ந்தது, அகண்டது, உயர்ந்தது, உன்மேல்
எட்டித் தொடும் என் ஆத்மா பிரிவை உணரும் போது
உயிரின வாழ்வின் முடிவாய், உன்னத நளின மதில்
அனுதினம் இயலும் வரை நானுனை நேசிப்பேன்
பரிதி வெளிச்சம், இரவு விளக்கில் அமைதிக் கவசியம்
தடையிலா நேசம் மனித உரிமை முயற்சி போல்
தூய தென் நேசம் பிறரது புகழின் திருப்பமாய்
நேயம் உணர்ச்சி வசப்படும், பயன் படுத்தப் படும்
பழைய துயரொடு, என் குழந்தை நினைப்பொடு
இழந்த காதலை மீட்டு நேசிப்பேன் பாசமுடன்
நழுவிய புனிதருடன் நேசிப்ப துன்னை, மூச்சுடன்
கண்ணீர், முறுவல் ஆயுள் வரைக் கடவுள் விதியெனின்
உன்னைத்தான் நேசிப்பேன் மேலாய்ச் சாதலுக்குப் பிறகும்++++++++++++
Poem -43
Sonnets from the Portuguese
By: Elizabeth Browning
How do I love thee? Let me count the ways
I love thee to the depth and breadth and height
My soul can reach, when feeling out of sight
For the ends of Being and ideal Grace
I love thee to the level of everyday’s
Most quiet need, by sun and candle-light
I love thee freely, as men strive for Right;
I love thee purely, as they turn from Praise
I love thee with the passion put to use
In my old griefs, and with my childhood’s faith
I love thee with a love I seemed to lose
With my lost saints,–I love thee with the breath,
Smiles, tears, of all my life!–and, if God choose,
I shall but love thee better after death -
உலகமெங்கும் ஒரே மொழி …
— கவிஞர் காவிரிமைந்தன்.
உலகமெங்கும் ஒரே மொழி …
காலவெள்ளத்தில் கரைந்துபோகாதது காதல் ஒன்றுதான்! உள்ளங்கள் பேசுவதற்காகவே உலகில் தோன்றிய மொழி! இந்த மொழியை எந்த மனிதனும் பேசாமல் இல்லை! அப்படிப் பேசமறந்தவன் மனிதனுமில்லை! ஜீவராசிகளில் மனிதனால் மட்டுமே வழிவழியாக மொழியப்படுவதுடன், கவிதைகளாய், காவியங்களாய், கலை வடிவங்களாய் பதிவுகள் செய்யப்பட்டுவரும் உன்னத மொழி காதல்!அன்பின் மறுவடிவம் காதல் என்பதை அறுதியிட்டுச் சொல்வதற்கு ஆதாம் ஏவாள் முதல் இன்றுவரை காதலர்கள் படையெடுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அங்கு இங்கு என்று பேதம் இல்லாமல் எங்கும் நிறைந்திருக்கிற காதலை உலகமெங்கும் காண முடிகிறதல்லவா?
இந்தப் பாடலைக் கேட்கும்பொழுதெல்லாம் இனிமைதவழும் தென்றல்காற்று இதயத்தில் பரவிநிற்கும்! எளியதமிழில் கவிதைமுழங்கும் காதலின் ஊர்வலம்!
கவியரசரின் கைவண்ணத்தில் ஒவ்வொரு வரியிலும் உன்னதம் தென்படுகிறது! மகத்தான சக்தியாய் விளங்கும் காதலின் மாண்புகள் புரிகிறது! அள்ளி எடுத்த பின்னும் இன்னும் அமுதசுரபியாய் விளங்குவது காதல் என்கிற சுகவரியில் கொஞ்சம் மூழ்கலாமே!
நாடோடி திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மீட்டிய இசையில், கண்ணதாசன் கவிதைமழையில், கானக்குயில்கள் டி.எம்.எஸ்., பி.சுசீலா பாடிய கீதம்! காதலுக்கு இது ஒரு வேதம்!!
உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றிப் பேசும் மொழி
உருவமில்லா தேவன் மொழி
(உலகம்)பறவை ஒன்று வர்ணங்கள் வேறு
பாட்டு ஒன்று ராகங்கள் வேறு
இரவு ஒன்று பருவங்கள் வேறு
இன்பம் ஒன்று உருவங்கள் வேறுகடலும் வானும் பிரித்து வைத்தாலும்
காதல் வேகம் காற்றிலும் இல்லை
உடல்கள் இரண்டும் வேறுபட்டாலும்
ஒன்று காதல் அதன் பேர் தெய்வம்
(உலகம்)ஒன்றே வானம் ஒன்றே நிலவு
ஓடிச் சென்ற ஆண்டுகள் கோடி
காதல் பேசி கவிதையில் ஆடி
கலைகள் தேடி கலந்தவர் கோடிகோடி மனிதர் தேடிய பின்னும்
குறைவில்லாமல் வளர்வது காதல்
நாடு விட்டு நாடு சென்றாலும்
தேடிச் சென்று சேர்வது காதல்
தேடிச் சென்று சேர்வது காதல்
(உலகம்)காணொளி: https://youtu.be/O2j_0yaXZkM
-
அனைவருமே தடுத்திடுவோம் !
– எம். ஜெயராம சர்மா – மெல்பேண்
விஞ்ஞானம் தானிப்போ
விண்ணோக்கிச் செல்கிறது
நல்ஞானம் எனப்பலரும்
நாட்டிலிப்போ சொல்லுகிறார்கல்ஞானம் எனவெண்ணிக்
கட்டளையும் இடுகின்றார்
உள்ளமெலாம் விஞ்ஞானம்
உட்புகுந்தே நிற்கிறதுதொழிநுட்ப விஞ்ஞானம்
தொகையாக வந்துளது
துறைதோறும் அதுசென்று
சூடாக்கி நிற்கிறதுகிராமத்தார் கூடவிப்போ
’கிறுகிறுத்து’ நிற்கின்றார்
அங்கெல்லாம் தொழிநுட்பம்
அரங்கேறி நிற்கிறதுமொழிபற்றிக் கவலையின்றி
முறுவலுடன் ஏற்கின்றார்
முகம்பார்த்துக் கதைத்துவிட்டு
அகங்குளிர்ந்தும் நிற்கின்றார்அழகான படம்பார்த்து
அவர்மகிழ்வு கொள்ளுகிறார்
அயல்நாட்டில் மருமகளின்
சுகம்கேட்டும் நிற்கின்றார்குறுஞ்செய்தி பலர்பார்த்து
குதூகலத்தில் மிதக்கின்றார்
முகநூலால் திருமணங்கள்
சபையேறி நிற்கிறதுவியாபாரம் பெருகுதற்கும்
விளம்பரங்கள் செய்வதற்கும்
நலமான நண்பனென
நாட்டிலுள்ளோர் நினைக்கின்றார்தகவல் பரிமாற்றம்
தான்பெருகி நிற்பதற்கும்
சரியான வழியெனவே
சகலருமே எண்ணுகிறார்அரசியல் தலைவரையும்
ஆன்மீகத் தலைவரையும்
ஆட்டிவைக்கும் சக்தியென
அதுவிப்போ திகழ்கிறதுகற்பழிப்பு நடப்பதற்கும்
காடைத்தனம் செய்வதற்கும்
கண்போன்ற தொழிநுட்பம்
கருவியென நிற்கிறதுமண்ணிலுள்ளோர் பயனடைய
வந்ததொழில் நுட்பமதை
மனிதகுல மாண்பழிக்க
மாற்றுவது முறைதானா?விஞ்ஞானத் தொழில்நுட்பம்
எஞ்ஞான்றும் உதவுவதை
வீணடிக்கும் கூட்டமதை
வீதிக்குக் கொணர்ந்திடுவோம்நல்லபக்கம் பார்த்திட்டால்
நமக்கெல்லாம் நன்மையன்றோ?
நம்மனதில் நல்லவெண்ணம்
நாளும்நாம் வளர்த்துநிற்போம்உள்ளமதில் நல்லவெண்ணம்
ஊற்றெடுக்கச் செய்துவிடின்
பள்ளமதில் வீழ்ந்திருக்கும்
பாதகரும் மாறுவரேதொழில்நுட்பச் சேவையினைத்
துஷ்டத்தனம் செய்யாமல்
அழிவுநாடிச் செல்வதனை
அனைவருமே தடுத்திடுவோம் ! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கண்ணன் காப்பு
—————————கஷ்டம் கலைந்திடும் நஷ்டம் நகர்ந்திடும்
இஷ்டம் நமக்கு இணங்கிடும் – அஷ்டமி
ரோகினியில் தோன்றிய லேகிய வண்ணனை
ஏகிட எல்லாம் எளிது….(0)
தீக்குளிட்டு பாரதி தீண்டிய தெய்வத்தை
வாக்கிலெட்டா கண்ணனை வாழ்த்துவோம்-பூக்களிட்டு
அப்பம் அதிரசம் முப்பழங்கள் வைத்தாலும்
அப்பயலுக்(கு) அன்பே அமுது (or) அறம்….(1)மாதவனை கேசவனை மாலொழிய வந்தவனை
ஆதவனை ஆயர் அணிவிளக்கை -யாதவனை
ரோகினி அஷ்டமியாய் ஆகிய கீதையை
தாகிநீ தேஹியென்றோ தி….(2)
நடுநிசியில் ரோகினி நட்ஷத் திரத்தில்
கொடுஞ்சிறையில் தோன்றிய கண்ணா-முடிமிசையில்
அப்பன் சுமந்திட ஆயர்தம் கோகுல
குப்பம் நுழைந்தவனே காப்பு….(3)கட்டு மயிற்பீலி கொண்டை யிலணிந்து
பட்டுப்பீ தாம்பரம் பூண்டாவை -வெட்ட
வெளிதனில் மேய்க்க வேய்ங்குழல் ஊதும்
களிமிகு கண்ணனே காப்பு….(4)பொன்னிற வண்ணப் புழுதி எழுந்துயர்
விண்ணவர் கண்ணில் விழுந்திட -செந்நிற
சாயங்கா லத்தில் சகாக்களுடன் வீடேகும்
காயாம்பூ வண்ணனே காப்பு….(5)காளியன் குட்டையில் மூளியாய் மூழ்கஅவன்
தோளினில் ஆடிய தெய்வமே -காளியின்
அண்ணனே கைமாறி ஆயர் குலம்புகுந்த
கண்ணனே வேண்டினேன் காப்பு….(6)பூதனை மார்பை புசித்தவள் ஆவியை
வேதனை இன்றி விரட்டியவா -தீதினை
ஓட்டவும் தர்மம் உயரவும் பாண்டவ
கூட்டம் பிணைந்தவா காப்பு….(7)தாய்க்குப் பணிந்தன்று தாம்பில் புகுந்துமரம்
சாய்க்க உரலிழுத்த சாகஸா – வாய்க்குள்
மாதா மகிழ மகோன்னதம் காட்டிய
கீதா உபதேசா காப்பு….(8)எதுரா எதுராவென எங்கெங்கோ தேடும்
புதிராம் புவிவாழ்வு போதும் – மதுரா
நகரொளிந்த தெய்வம் நவனீதக் கண்ணன்
சுகமளிக்கும் செல்வச் செழிப்பு….(9)தீரன் யமுனா தரங்கக் கரையோரன்
சேரும் இளமாதர் ஜீவான்ம -சோரன்
அழகில் சுகுமாறன் அன்பில் உபகாரன்
கழுகில் வரும்நேரம் காப்பு….(10)குவலயா பீடத்தின் கொம்பொசித்துக் கம்சன்
கவலையால் பீடிக்கக் கொன்றோன் – அவலையா
தந்தாய் எடுத்துக்கொள் தோழாயென் செல்வத்தால்
கந்தையைக் கட்டென்றான் காப்பு….(11)கூவும் கஜேந்திரனை காத்த புஜேந்திரா
ஏவிய சக்கரத்தை ஏந்தியவா -காவிய
பாகவதக் கண்ணா பரந்தாமா நாரணா
காகவத காகுத்தா காப்பு….(12)ஆலில் மிதந்தவா ஆழ்வார்கள் பாசுர
நூலில் நிறைந்தவா நந்தலாலா -தோளில்
திருத்துழாய் பூண்ட திருவோணத் தானே
கருத்தில் கலந்துவளைக் காப்பு….(13)உதித்தவா நேற்று மிதித்தவா இன்று
நதிக்கரை நந்தகோபன் நாட்டை -எதிர்த்ததாய்
மாமா அனுப்பிய மல்லர் களையன்று
கோமாளி ஆக்கியவா காப்பு….(14)
கோலத்தால் காலிட்டு கைகூப்பி கும்பிட்டு
ஞாலத்தை உண்டுமிழ்ந்த நாதனுக்காய் -தாலத்தில்
பக்ஷணத்தை ஏந்திநின்றால் பக்தராதைக்(கு) ஈடாக
தக்ஷிணையாய் கேட்டான் தபஸ்….(15)கால்கள் பலநூறு கண்டேனென் வாசலில்
வால்கள் புடைசூழ வந்தமுகுந்தன்-நூல்போல்
அணிவகுப்பாய் சென்று அடுக்களை உள்ளில்
விநியோகம் செய்தான் விருந்து….(16)பலராமன் தம்பி, பனிநாளில் பீச்சை
வலமாக வந்ததில் வைரஸ் -ஜலதோஷம்
நாசியில் கொட்டும் நயகரா வீழ்ச்சியாய்
க்ரேஸிக்கு தேவையுன் காப்பு….(17)உறியிழுத்தாய் பின்னர் உரலிழுத்தாய் பின்னர்
மரமிழுத்தாய் பின்னர் மதகில் – அரவிழுத்தாய்
பின்னர் நகிலிழுத்தாய் பெண்கள் துகிலிழுத்தாய்
கண்ணா எனையிழுப்பாய் காப்பு….(18)
கண்ணே கனியமுதே கற்கண்டே கார்முகிலே
என்னே பெயர்வைத்து ஏத்தினாலும் -அண்ணே!
டபாய்த்திடுவான் கண்ணன் உபாயமொன்று கேளாய்
அபாயமென்பாய் உண்டே (அ)பயம்….(19)சகடா சுரனை சுமந்தா காய
முகடில் முறித்த முகுந்தா -பகடையில்
தோற்றவர்க்காய் தேரேறி நூற்றவர் மாய்ந்திட
கூற்றவனாய் நின்றவனே காப்பு….(20)கோடி குருமார்கள் கூறிய வேதாந்தம்
தேடிப் படித்தும் திருப்தியில்லை -நாடியில்
ஏதோ அதிருப்தி என்னென்று சொல்வது
கீதோ பதேசகா காப்பு….(21)தரையில் புரளபீ தாம்பர ஆடை
சுருளும் முடிநுதல் சாய -முரளி
மனோகரா வந்துன் மதிவதனம் காட்டு
கனாவரும் நேரத்தில் காப்பு….(22)கன்னத்தில் அன்னையிட்ட கண்மை திருஷ்டியது
வண்ணக் கருமையில் வாடிட -எண்ணற்ற
இம்சைக்(கு) இடமாகி இன்னல் கடந்தோனே
கம்சன் மருகோனே காப்பு….(23)வையங்கள் ஏழை வயிறார உண்டும்
ஐயம் மிகக்கொண்டு அய்யனே -கையால்
பிடித்துக் கமல பதத்தை அன்று
கடித்துக் களித்தவனே காப்பு….(24)நான்மறை ஓதிடும் நான்முகன் வாழ்ந்திடும்
தாமரை நாபியும், பூமகள் -போய்மறையும்
சந்தனம், ஸ்ரீவத்ஸம், சாற்றும் திருத்துழாய்யு
கந்திடும் திண்மார்பும் காப்பு….(25)மோதகப் பிள்ளை முழுங்க, பதைபதைத்து
பீதகப் பட்டாடை பாழாக -காதினை
கைகளால் பற்றி கரணமிட்(டு) ஆழியை
கொய்தகோ பாலனே காப்பு….(26)தேர்கடவி பாரதப் போர்முடிக்க பார்த்தனின்
சீர்கெடலை கீதையால் செப்பனிட்டோய் -மோர்குடத்தை
கல்லால் உடைத்தன்று கோபியர் கோபத்திற்க்
குள்ளான கண்ணனே காப்பு….(27)சாக்கிரதை யாக சகாக்களுடன் சென்றாயர்
தூக்கிலிட்ட வெண்ணை திருடியுண்ட -போக்கிரிப்
பையனே பேய்மழைக்குப் பர்வதம் தாங்கியக்
கையனே கண்ணனே காப்பு….(28) -
சுட்டும் விழிச்சுடர்!
பவள சங்கரி
உள்ளத்தில் உண்மையும், மனதில் தெளிவும், விடா முயற்சியும் இருந்தால் எந்த தீய சக்தியும் அணுகாமல் தம் இலட்சியம் நிறைவேற மன உறுதியே துணை நிற்கும் என்று நிரூபித்து உள்ளார் சிங்கால்!
மனதில் உறுதி வேண்டும்!
‘மன உறுதி’ என்பது ஆண், பெண் என இரு சாராருக்கும் பொதுவான விசயம். காரணம் ‘மனம்’ என்பதற்கு மனம் என்பது ஆன்மாவின் தொடர்புடையது என்பதே நம் ஆன்மீகம் நமக்கு உணர்த்தும் நெறி. இந்த மனத்தில் தோன்றும் எண்ணங்கள்தான் ஒருவரின் குணநலன்களையும், அதன் தொடர்பான வாழ்க்கையையும் நிர்ணயிக்கிறது என்று எடுத்துக்கொண்டால் அந்த எண்ணம் தோன்றுவது எப்படி? ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட எண்ணங்கள் தோன்றுவது எப்படி? ஒருவருக்குள்ளேயே பலவிதமான கோணங்களில் பல்வேறு எண்ணங்கள் தோன்றுவது எங்கனம்? இவையெல்லாம் புரியாத புதிராக இருந்தாலும், இந்த மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்து தாம் எடுக்கும் காரியங்களை தடையேதும் இன்றி நிறைவேறும் பொருட்டு, அதனை அலைபாய விடாமல், உறுதியுடன் நின்று சாதித்துக் காட்டியவர் பலர். அவர்கள் வரலாற்றுப் பட்டியலில் நீங்கா இடம் பெறக்கூடிய வாய்ப்பும் பெறுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு சாதனையாளர்தான் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்துள்ள டெல்லியைச் சேர்ந்த மாற்று திறனாளி பெண்ணான இரா சிங்கால். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் ஆகிய உயர் பதவிகளுக்காக நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நாடெங்கிலும் மொத்தம் 1,236 பேர் பணி ஒதுக்கீட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வில் அவர்களில் டெல்லியைச் சேர்ந்த இரா சிங்கால் முதலிடம் பெற்றுள்ளார். இந்த வருடம் சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் நான்கு இடங்களை பெண்களே பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டைக்காட்டிலும், நம் தமிழகத்தில் அதிக அளவில் பெண்கள் வெற்றி பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த, 2012ல், 97 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், 2014ல், 118 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இரா சிங்கால் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற இந்திய வருவாய்துறை பணி தேர்வில் வெற்றி பெற்று தற்போது ஐதராபாத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். 31 வயதான, இரா சிங்கால் ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ் தேர்வில் வெற்றி பெற்றபோது அவரது ஊனம் அதிகமாக இருப்பதாகக் கூறி பணி இடம் வழங்க மத்திய பணியாளர் நலத்துறை மறுப்புத் தெரிவித்தது. ஆனால் மனம் தளராத சிங்கால் நான்கு ஆண்டுகள் கடுமையாக சட்டத்துடன் போராடி பின் கடந்த டிசம்பர் மாதம்தான் இவருக்கு பணி இடம் ஒதுக்கப்பட்டது. முதுகுத் தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டு உடல் வளைந்து, உயரம் குறைவாகக் காணப்படும் இவர் அதனால் மனம் தளராமல் ஐ.ஏ.எஸ் தேர்வில் நல்ல ரேங்கில் வெற்றி பெற வேண்டும் என்கிற தனது கனவை தற்போது நனவாக்கியுள்ளவரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. தீவிர மன உறுதியே தனது வெற்றிக்கு முக்கியக் காரணம் எனக் கூறும் சிங்கால் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்.
தன்னுடைய உடற்குறையை பெரிதுபடுத்தாமல், தான் கொண்ட இலட்சியமே பெரிதென சாதித்துக்காட்டியிருக்கிறார் சிங்கால். தன் புறத்தோற்றமோ அல்லது உடற்குறையோ தன்னை எந்த விதத்திலும் பாதிக்கவிடாமல், இதனால் எந்த விதமான தாழ்வு மனப்பான்மையோ அல்லது தம் சக தோழியருடன் ஒப்பீடு செய்து அதனால் தம் மன நிலை பாதிக்கப்பட்டு மன உறுதியை இழந்துவிடாமல், தம் இலட்சியத்திற்கு இந்த ஊனமோ அல்லது மற்ற எதுவும் தன்னை அண்டாது என்ற நம்பிக்கையே அவரை சாதனைப் பெண்மணியாக்கியிருக்கிறது.
இந்தத் தாழ்வு மனப்பான்மையானது, ஆண்,பெண் என்ற இரு சாராரையும் விட்டு வைப்பதில்லை. என்றாலும் பெண்கள் சீக்கிரம் மனச்சிக்கல்களுக்குச் சிறைப்பட்டு விடுகிறார்கள் என்ற பெண்ணிய உடல் கோட்பாட்டை முறியடித்திருக்கிறார் இவர். அன்றாட வாழ்வில் பல விதமான துன்பங்களுக்கு ஆட்படும் ஒரு குறைபாடுடன், இத்தனை பெரிய சாதனை புரிந்தாலும், தற்போதும் ஐஏஎஸ் பணி ஒதுக்கீடு செய்வதிலும் அரசு தயக்கம் காட்டுமோ எனஅவரும் அவருடைய பெற்றோரும் கலக்கம் அடைந்துள்ளனர். ஐ.ஏ.எஸ். பணி என்பது மிகவும் சவாலான ஒரு பணிதான் என்றாலும், அவருடைய மனவலிமையை கருத்தில்கொண்டு, அதற்குரிய வகையில், அவருக்குரிய பணியை வழங்குவதே நியாயமான செயல். நான்கு முறை முயன்று தம் தரத்தை உயர்த்திக்கொண்டு பெரும் பாடுபட்டு இந்நிலையை அடைந்திருக்கும் இவருடைய வல்லமையை நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்வதே முறையாகும்.
பொதுவாக ஒரு பெண் புறத்தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாலேயே, சின்னச் சின்ன பாதிப்புகளுக்கும் விரைவிலேயே மனம் தளர்ந்து விடுவதோடு, தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு தன்னம்பிக்கைக் குறைவுக்கும் ஆரோக்கியக்கேடு என மிகப் பெரிய ஆபத்தாகவும் அமைந்து விடுகிறது. சமுதாயத்துடன் ஒன்றி செயல்படுவதற்கும் இது பெரும் சவாலாகிவிடுகிறது.
நம்பிக்கைதான் வாழ்க்கை. அதற்கு மன உறுதியே வித்து. மனச்சிதைவிற்கு வழிவிடாமல், தம்மால் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று சாதித்துக் காட்டியிருக்கும் இரா சிங்கால், நம் நாட்டிற்கு தம் தன்னலமற்ற சேவையை வழங்குவார் என்ற நம்பிக்கையும் நம்முள் துளிர்விடுகிறது.
சிங்கால் தாமே கூறியுள்ளபடி, “இதற்குப் பிறகு மக்கள் பெண்களை அதிகமாக மதிப்பார்கள். குறிப்பாக உடல் ஊனமுற்ற பெண்களை மிகவும் மதிப்பார்கள்” என்பது சத்தியமான வாக்கு. தற்போது இந்திய வருவாய் துறையில், அதிகாரியாக பணியாற்றி வரும் தாம் விரும்பியபடி எந்த தடையும் இல்லாமல் ஐ.ஏ.எஸ். பதவி கிடைத்து, நாட்டிற்கு நலம் பல செய்ய வேண்டும் என்று மனமார வாழ்த்துவோம்.
-
அறிவுக்கு வேலை கொடு…பகுத்தறிவுக்கு வேலை கொடு…
திரைப்படப் பாடல்களில் இடம்பெறும் வரிகள் வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல.. வாழ்க்கை முழுமைக்கும் வழிகாட்டும் விளக்காக அமைய முடியும் என்பதற்கு சான்று பகரும் பாடல்களை கவிஞர் பெருமக்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி போன்றோர் வழங்கியிருக்கிறார்கள்.
சமுதாய அவள்கள், சீர்கேடுகளைச் சாடுவதும் அவற்றை சீர் செய்ய மொழியைப் பயன்படுத்துவதும் இவர்களின் தலையாய கடமைகளில் ஒன்றானது. அவ்வாறு அமையும்போது செம்மை மொழிவளத்தால் இசைக் கோர்வையுடன் கை கோர்க்கும் வார்த்தைச் சரங்களை கொட்டிமுழக்கும் கொள்கைப் பான் பாடுகிறார்கள்.
குறிப்பாக மக்களின் மனம் கவர்ந்த கதாநாயகனுக்காக இப்பாடல்கள் அமைந்துவிடும்போது புதிய பொலிவுடன் புரட்சியின் முழக்கங்கள் புறப்பட்டு வருகின்றன. ஆம். இதோ.. இந்தப் பாடல் தலைவன் திரைப்படத்திற்காக கவிஞர் வாலி வரைந்தளித்தது. எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைப்பில் ஏழிசை வேந்தர் டி எம்.சௌந்தரராஜன் பாடியதாகும்.
அறிவுக்கு வேலை கொடு…பகுத்தறிவுக்கு வேலை கொடு…
ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும்

கோட்டையைக் காட்டி வைத்தான் அந்தக்
கோட்டைக்கு விளக்காக அறிவென்னும்
தீபத்தை ஏற்றி வைத்தான்
ஆகாத வழக்கமெல்லாம் அறிவுக்குப்
பொருந்தாத பழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்து வைக்கும் மனிதனின்
அழிவுக்கு வழி வகுக்கும்
ஆக்கத்தைக் கெடுத்து வைக்கும் மனிதனின்
அழிவுக்கு வழி வகுக்கும்……………………………..
பாடல்: அறிவுக்கு வேலை கொடு
திரைப்படம்: தலைவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
ஆண்டு: 1970அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டு விடு
காலம் மாறுது கருத்தும் மாறுது நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும்
கோட்டையைக் காட்டி வைத்தான் அந்தக்
கோட்டைக்கு விளக்காக அறிவென்னும்
தீபத்தை ஏற்றி வைத்தான்
ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும்
கோட்டையைக் காட்டி வைத்தான் அந்தக்
கோட்டைக்கு விளக்காக அறிவென்னும்
தீபத்தை ஏற்றி வைத்தான்
ஆகாத வழக்கமெல்லாம் அறிவுக்குப்
பொருந்தாத பழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்து வைக்கும் மனிதனின்
அழிவுக்கு வழி வகுக்கும்
ஆக்கத்தைக் கெடுத்து வைக்கும் மனிதனின்
அழிவுக்கு வழி வகுக்கும்அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
மண்வெட்டி கையிலெடுப்பார் சிலபேர்
மற்றவர்க்குக் குழி பறிப்பார் அது
தன் பக்கம் பார்த்திருக்கும் என்பதைத்
தானறிய மறந்திருப்பார்
மண்வெட்டி கையிலெடுப்பார் சிலபேர்
மற்றவர்க்குக் குழி பறிப்பார் அது
தன் பக்கம் பார்த்திருக்கும் என்பதைத்
தானறிய மறந்திருப்பார்பந்தெடுத்து விட்டு எரிந்தால் சுவர் மேல்
பட்டது போல் திரும்பி வரும்
பந்தெடுத்து விட்டு எரிந்தால் சுவர் மேல்
பட்டது போல் திரும்பி வரும் இந்த்த்
தத்துவத்தைத் தானறிந்தால் பிறர்க்குத்
தீங்கு செய்யும் எண்ணம் வருமோ? இந்த்த்
தத்துவத்தைத் தானறிந்தால் பிறர்க்குத்
தீங்கு செய்யும் எண்ணம் வருமோ?அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
ஆஹாஹஹ ஹாhttps://www.youtube.com/watch?v=alcegBOWi3I
ஐந்து அறிவு வரை யுள்ள ஜீவன்களைத் தாண்டி ஆறாம் அறிவாம் பகுத்தறிவு தானே .. எது நல்லது.. எது கெட்டது எதை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற பகுத்துணர்வு மனித குலத்திற்கான மாபெரும் வரப்பிரசாதம். “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு..” என்னும் குறளின் குரலும் கேட்கிறதல்லவா?
வினாக்களும் அவற்றுக்கான விடைகளும் அறிவு வெளிச்சத்தில் மட்டுமே ஆராயப் பட முடியும். மட்டிலா நம் அறிவுச் சுரங்கத்தை எத்தனை சதவிகிதம் நாம் பயன்படுத்துகிறோம் என்கிற கேள்விக்கான விடையில் தனி மனித வாழ்வின் வெற்றிக்கான ரகசியம் அடங்கியிருக்கிறது.
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”என்றுமே கூடாதோர்க்(கு), ஏற்றமிடு கோவிந்தனை,
நின்றுகொல்லும் தெய்வமென்று நூலுரைக்கும்: -இன்றென்ன,
மாறாக காளியன் மேலமர்ந்து கொட்டத்தை,
சீராயன் கொள்வதேன்கே சவ்!”….கிரேசி மோகன்….









