ஐந்து கை ராந்தல் (21)

வையவன்

மனிதர்கள்!

ஆண்டாண்டு காலத்துக்குத் தாம் வாழப் போகிறோம் என்பதில் ஒவ்வொருவருக்கும் என்ன நிச்சயம்! எவ்வளவு நம்பிக்கை!

சாலையிலும் வீதியிலும் மரணம் அவர்களைச் சந்திக்கிறது.
ஹலோ சொல்லுகிறது. ஞாபகம் இருக்கிறதா என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறது. கடன் கொடுத்துவிட்டு வசூல் செய்யும் தமிழ் சினிமாப் பட்டாணியன் போல் மிரட்டுகிறது. விபத்துக்களின் கோரைப் பற்கள் இளிக்கின்றன.

ஆனால் மனிதர்கள்?
கொஞ்சம் வெலவெலக்கிறார்கள். வியர்க்கிறார்கள். நான் அங்கிருந்தால்… என்று கற்பனை செய்கிறார்கள்.

இறந்து போனவர்களிடம் தங்கள் இடம் மாற்றிப் பார்க்கிறார்கள். அப்பாடா, நல்லவேளை. அது நானில்லை என்று நிம்மதி அடைகிறார்கள். நகர்கிறார்கள்.

மீண்டும் மீண்டும் மரணம் எதிர்கொள்கிறது. நம்பிக்கைகள் கொஞ்சம் நெளிந்து கொடுக்கின்றன. ஆனாலும் என்ன? அவை மீண்டு விடுகின்றன.

எல்லாம் ஒரு நாளைக்கு மாறிவிடும். இருந்த சுவடு தெரியாமல் அழிந்து விடும். அது அவர்களுக்கும் தெரியும்.

அந்த உண்மையை அவர்களுக்குச் சந்திக்கப் பிரியமில்லை. கூடுமானவரை உண்மையைத் தள்ளிப் போடவே அவர்கள் விரும்புகிறார்கள்.

தன்நலம்… தன் சுகம்… தன் பாதுகாப்பு… தன் எச்சரிக்கை… தான்… தான்… தான். அதற்கு எங்கே குந்தகம் வந்தாலும் அவர்களுக்கு எரிச்சல் வருகிறது. வேறு வேலை இருப்பது, அவசரம் காத்திருப்பது கவனம் வருகிறது.

சாலையிலே ஒரு டூரிஸ்டு பஸ் கவிழ்ந்து விழுந்திருக்கிறது.
நொறுங்கிய கண்ணாடிச் சிதறல்; இரத்தம் குட்டையாய்த் தேங்கியிருக்கிறது. முனகல்கள்.. ஊசலாடும் உயிர்களின் ஓலம்.

சாலையில் இரவு நேர லாங் ரூட் பஸ்கள் போகின்றன. நிற்பதில்லை லாரிகள் போகின்றன. நிற்பதில்லை. கார்கள் பறக்கின்றன. நிற்பதில்லை.

தான், தன் பாதுகாப்பு, தன் அவசரம், கடிகார முட்களில் கட்டப்பட்டு விட்ட யந்திர வாழ்க்கையில் ஓடு ஓடு என்று நியமிக்கப்பட்ட ஒரு கற்பித ஓட்டப் பந்தயத்திற்கு குந்தகம் வந்து விடும்.

போலீஸ்… வழக்கு… கோர்ட்… சம்மன்..
“வண்டியை விடுப்பா”
ஓரிரண்டு வாகனங்கள் நிற்கின்றன. வேடிக்கை பார்க்க. பிரயாணிகளுக்கும் ‘தான்’ ஞாபகம் வந்து விடுகிறது.

“அடுத்த ஊர் போலீஸ் ஸ்டேஷன்லே போய் ரிப்போர்ட் பண்ணுவோம். வண்டியை எடுப்பா.”
‘விபத்தில் சில மனித உயிர்கள் போயிருக்கின்றன. போய்க் கொண்டிருக்கின்றன. ப்சப்… புவர் சாப்ஸ்… போலீஸ் இருக்கிறது. வந்து பார்த்துக் கொள்ளும்.’

‘அது போலீஸோட கடமை புவர் சாப்ஸ்… வர வர டூரிஸ்ட் வண்டிக்காரனுங்க ராத்திரி தூக்கமில்லாம தண்ணி அடிச்சிட்டு வண்டியை விடறானுங்க.’

எல்லாருமே இப்படித்தானா?

இதயம்… இரக்கம்… உணர்ச்சிகள்… எல்லாவற்றையும் எலக்ட்ரானிக் கடிகார எண்கள் சாப்பிட்டு விட ஒரு நிமிஷத்தை விட்டு அடுத்த நிமிஷத்துக்கு ஓடுவதிலேயே மனித நாகரீகம் கண்ணும் கருத்துமாக இருக்கிறதா?

இல்லை.
சாலையில் ஒரு ஜீப் வருகிறது.
அதில் ஓர் ஆணும் பெண்ணும். அவர்கள் வண்டியை நிறுத்துகிறார்கள். ரத்தக் குட்டையை, மரண ஓலங்களை, சிதைந்த அங்கங்களைப் பற்றிப் பயமில்லாமல் பஸ்ஸில் விழுந்திருப்பவர்களை ஒவ்வொருவராக இழுத்து வெளியேற்றுகிறார்கள்.

குழந்தைகளை, கிழவிகளை வெலவெலத்து உயிருடன் இருக்கும்போதே செத்து விட்டதாக விழுந்திருக்கும் நபர்களை இறக்குகிறார்கள்.

ஏழெட்டு பிணங்கள் விழுந்துவிட்டன. முன் ஸீட் பக்கமாக உட்கார்ந்திருந்தவர்கள் பத்துப் பதினைந்து… இல்லை இருபது பேருக்கு மேல் பலமான அடி.

“பிரீதா… நீ இங்கே தனியா நிக்கிறியா… நான் ஏழெட்டுப் பேரை அள்ளிப் போட்டுக்கிட்டுப் போயி கேஷûவாலிட்டிலே அட்மிட் பண்ணிட்டு வர்றேன்!”
“ஓ… எஸ்”
“வண்டி ஏதாவது வந்தா நிறுத்து… கை காட்டு… விஷயத்தைச் சொல்லு! ஏ.பி. பார்டர் தானே இது… ஐ வில் கோ டு சித்தூர் ஹாஸ்பிடல்.”
வண்டியில் அவள் அவன் காயமடைந்த உடல்களை ஏற்றுவதற்கு உதவி செய்கிறாள். வண்டி கிளம்புகிறது.

அவள் மட்டும் தனியாக ஒரு தீரமான உள்ளத்தோடு அடிபட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு நிற்கிறாள்.

முக்கால் மணி நேரத்தில் சாலையில் சென்ற பல லாரிகளை நிறுத்தும் முயற்சியில் தோற்றுப் போய் அவள் காத்திருக்கிறாள்.

இரண்டாவது ‘சிங்கிள்’ அடிக்க அவன் ஜீப்போடு வருகிறான்.
“ப்ளாகார்ட்ஸ்… ஹாஸ்பிடலா நடத்தறானுங்க. நோபடி கேர்ஸ்… டூட்டி முடிஞ்சு போச்சு! டாக்டர் பர்மிஷன் வேணும்… இல்லாத ரூல்ஸ் பேசறானுங்க. போலீஸ் வான் எடுத்துட்டு வாங்கய்யான்னா கமிஷனர் கிட்டே போன்லே பரிமிஷன் வாங்கிட்டு வர்றோம்னு சொல்றாணுங்க” அவன் வெறுப்போடு திட்டித் தீர்க்கிறான்.

“டோன்ட் வேஸ்ட் டைம்… இந்த சிங்கிள்ளே நானும் வர்றேன். மனுஷங்களை சபிச்சு திட்டி ஒரு புண்ணியமுமில்லே வேஸ்ட் ஆஃப் டைம்… வேஸ்ட் ஆஃப் எனர்ஜி”
ஹாஸ்பிடலுக்குப் போய் ‘பிரயாணிகளை’ இறக்கி விட்டு விட்டு நர்ஸுகளைச் சந்தித்து, டாக்டரைச் சந்தித்து என்னமோ படபடவென்று பேசுகிறாள்.

அவள் செம்மஞ்சள் நிறத்தில் கவர்ச்சியாக இருக்கிறாள். அவள் முகத்தில் சொட்டுச் சொட்டாகக் குறைந்து கொண்டு போகும் அந்த ‘ஸோ-கால்ட்’ மனிதாபிமானம் ஜுவாலை வீசுகிறது. அதன் உண்மை தகிக்கிறது.

அவ்வளவு அழகான, இளமையான, கவர்ச்சியான நர்ஸாக இருக்கின்ற ஒரு பெண் பேசும்போது தான் மனிதாபிமானம் என்ற சரக்குக்கு ஒரு விலை மதிப்பு வருகிறது.

ஒரு பட்டாளம் டாக்டர்கள் நர்ஸுகள் ஓடி வருகிறார்கள்… ஸ்ட்ரெச்சர்கள்… ‘பெட்’கள்.
“இன்னும் ஒரு சிங்கிள் அடிச்சுடலாமா தாமு!”

“ஓ…எஸ்”
“பாவம், யூ அர் வெரி டயர்ட்”
“இல்லே… ஐம் வெரி ஹாப்பி… நமக்கு ஒரு சில நிமிஷமாவது மனுஷனா வாழற ஒரு சான்ஸ் கிடைச்சுதே!”
அதுதான் அவன் பேசிய கடைசிப் பேச்சு.

மூன்றாவது சிங்கிளில் எக்கச் சக்கமாக சிக்கிக் கொண்டிருந்த ஒரு பிணத்தை இழுத்து வெளியேற்றும் போது நாலைந்து பேர் ஏறி தங்கள் உடமைகளை அவசரமாக இழுத்து வெளியேற்றுகிற கலவரத்தில், விழுகிற நிலைக்கு வந்திருந்த ஓர் இரும்புப் பெட்டி நச்சென்று அவன் தலையைக் குறிப்பார்த்த மாதிரி வந்து விழுந்தது.

தாமுவையும் கேஷûவாலிட்டிக்குக் கொண்டு போகிறார்கள். காப்பாற்ற வந்தவனுக்கு விபத்து நேர்ந்த பரிதாபம் எல்லோரையும் நெகிழ வைக்கிறது.

“ஸ்கல் ஃப்ராக்சர். இங்கே கருவிகள் கிடையாது. வேறே வசதிகள் கிடையாது. சி.எம்.சிக்கு எடுத்துட்டு போயிடுங்க. நிலைமை சீரியஸ்” என்று சித்தூர் கை விரிக்கிறது.

ஜீப்பில் இரண்டு பேர் துணையுடன் அவனை சி.எம்.சிக்குக் கொண்டு வருகிறார்கள்.
அடுத்த இருபத்தி நாலு மணி நேரம்.

அவளுக்கு நம்பிக்கையும் பயனும் அந்தரத்தில் தொங்கும் கம்பி ரயில் பயணமாக மாறி மாறி வருகின்றன.

உலகின் எந்த மூலையில், எந்த சிகரத்தில், எந்த சமுத்திரத்தில், எந்தக் கட்டிடத்தில், உயிரை மண்ணோடு கட்டி வைக்கிற மஹாசக்தி இருக்கிறது?
அவள் எல்லாவற்றையும் வேண்டுகிறாள்.

அவன் அவளைக் காதலித்ததில்லை.
அவளும் அவனைக் காதலித்ததில்லை.
இரவுகளிலும் பகல்களிலும் ஒருவர் உடம்பும் உள்ளமும் மற்றவருக்குத் தேவைப்பட்டன.
இதைத் தவிர வேறு பந்தம் இல்லை.

எனினும் அவள் பெண். கற் பாறையை ஊடுருவி உயிரின் வேர்களை பந்தம் கொண்டாட விடும் பூமி.
வானத்தில் பறந்துவிடத் துடிக்கும் உயிர்களை தன் கருணையின் ஈரத்தில், கனிவின் அமிர்தத்தில் கட்டிப் போடும் ஆகர்ஷணம்.

அவளுக்கு இறந்த காலம் ஒன்று இருந்தது. நேசித்தவை எல்லாம் – பிரியமானவை எல்லாம் – கையிலிருந்து பறிக்கப்பட்ட சபிக்கப்பட்டதொர இறந்த காலம்.

அவன் எதிர்காலம் ஒன்றிற்கு வாக்குறுதி அளித்திருந்தான். அவள் அந்த இறந்த காலங்களின் குவிந்த சாம்பல் மேட்டின் முன் மண்டியிட்டாள்.

‘எனிக்கு இத்ர மதி. பகவானே ரக்ஷிக்கு ரக்ஷிக்கு’ பிரார்த்தித்தாள் உருகினாள்.

ஆனால் பிரார்த்தனைகளின் சிறகுகளுக்கு உயரமான எல்லை விரைவில் தட்டுப்படுவதில்லை.
அவை முன்னும் பின்னுமற்ற, முடிவும் தொடக்கமுமற்ற ஆகாயத்தில் அனாதைகளாகப் பறக்கின்றன.
சில சமயம் தொடுவானம் ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்புறம் வெறிச்சிட்டிருக்கிறது.

நீலமாய்… சாம்பலாய்… நித்தியத்துவம் என்ற நிற உருவமற்ற சூன்யமாய், பிரார்த்தனைகள் பறந்து கொண்டே செல்கின்றன.

சிவா வரும்போது எல்லாம் முடிந்து விட்டிருந்தது. ‘மார்ச்சுவரி’யில் பாண்டேஜ் போடப்பட்டு செலுத்த வேண்டிய பில் கட்டணத்தை எதிர்பார்த்து தாமுவின் உடம்பு டெலிவரி செய்யப்படுவதற்காகக் காத்திருந்தது.

அவன் போன பத்து நிமிஷத்தில் மதனபள்ளியிலிருந்து தர்மராஜ ரெட்டிகாருவின் உறவினர்கள் ஒரு மெடாடரில் வந்து இறங்கினர்.

பில் கட்டப்பட்டதும் ஸ்ட்ரெச்சரில் தாமுவின் உடல் லேசாகத் தூக்கித் தூக்கிப் போடப்பட வந்து சேர்ந்தது.
இதுதான் தாமு.

விசாலமான இருதயம். வைராக்கியம், நேசம், தொழில் திறமை.. தான் தான் என்று சுழலும் சுயநலச் சக்கர அச்சிலிருந்து சந்தர்ப்பம் வரும்போது துண்டித்துப் பிரிந்து வரும் துணிவு.

மிச்சம் எல்லாம் போர்வை போர்த்தப்பட்ட இந்த உடம்புதான். மீதியெல்லாம் இவ்வளவு தான்.
சிவா நொறுங்கிப் போனான்.

பிரீதா சில்லு சில்லாகச் சிதறியவள் போல் நின்றாள். அவள் சிவாவைப் பார்த்து தலையசைத்தாள். அழவில்லை. கதறவில்லை.

அவையெல்லாம் நேர்ந்துள்ள இழப்பின் முன்னே கொச்சையானவை. அந்த வெளியீடுகளில் நேர்ந்த நஷ்டத்தின் துக்கத்தை செலவிட முடியாது.

மதனபள்ளியில் கட்டிலின் மீது படுத்துக் கொண்டே தாமுவின் தந்தை அவன் தனக்கு செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளை பிறர் அவனுக்குச் செய்வதைப் பார்த்தார்.

செய்தி வேட்டைக்காரர்கள், புகைப்படம் பிடித்தார்கள். மறுநாள் கொட்டை எழுத்துக்களில் இயந்திரங்கள், இயந்திர மயமாய்விட்ட வாழ்வில் மனிதர்கள் மிச்சமிருக்கும் அதிசயத்தை அச்சடித்தன.
மயானத்திற்கு கூட்டங் கூட்டமாய் மனிதர்கள் வந்தார்கள். தாமுவின் அந்த அந்தஸ்திற்காக வந்தார்கள் சிலர்.

மனிதன் ஒருவன் மாண்ட வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டோர் பலர்.
செங்குட்டுவன் வந்தான்.

ராயப்பேட்டையிலிருந்து மலர் வளையங்கள் வந்தன.
புண்ணியகோட்டி வந்தார். திஷ்யா வந்தாள்.
தந்திகள் வந்தன.
தபால்கள் வந்தன.

சிவாவுக்கு சுயநிலை மீள மூன்று நாளாயிற்று. கரை தெரியாமல் இருண்டு விட்ட சமுத்திரத்தில் மரணம் என்ற சூறாவளியின் ஆர்ப்பரிப்பும், உணர்ச்சிகள் சுழன்றடிக்கும் ஊர்த்துவ வேகமும் மட்டும் அவனுக்கு நினைவிருந்தன.

எப்படிப் போயின அந்த மூன்று நாட்கள்!
பிரீதா எங்கே இருந்தாள்? என்னவானாள்?
வந்தவர்கள் எப்படிப் போனார்கள்?
போனவர்கள் எங்கே மறைந்தார்கள்? எதையும் அவனால் சொல்ல முடியவில்லை.

அந்த மூன்று நாட்கள் அவன் எங்கே சாப்பிட்டான்? எவ்வாறு விழித்தான்? எதுவும் திருப்பிச் சொல்ல முடியாத அனிச்சை செயல்கள் மாதிரி நடந்தன.

நாலாவது நாள் கட்டிலில் படுத்திருந்த தர்மராஜ ரெட்டிகாரு முன்னிலையில் விவகாரம் பேசினார்கள். அன்று சிவா சிவாவானான்.

“ராயப்பேட்டா ஒர்க்ஷாப் கணக்கு வழக்கெல்லாம் ஒனக்கு நல்லாத் தெரியுமா?” தாமுவின் மாமா கேட்டார்.

“எல்லாம் கரெக்டா எழுதி அப்டுடேட்டா வச்சிருக்கேன்…”
“ஒர்க்ஷாப்பை மறுபடியும் நடத்தணுமா மாமா?” அவர் கட்டிலில் படுத்திருந்த தர்மராஜ ரெட்டிகாருவிடம் அபிப்பிராயம் கேட்டார் தெலுங்கில்.

கட்டிலின் மீது ஒரு மார்பு இரண்டு மூன்ஙறு முறை குலுங்கிற்று. ஒரு மேல் துண்டு வாய் ஓசை வெளிவராமல் தான் வாங்கிக் கொண்டது.

“இப்புடு தேனிகிஅதந்தா அடுகுதாரு?”
அதை இப்போது கேட்க வேண்டாம் என்று யாரோ தடுத்தார்கள்.
தர்மராஜ ரெட்டிகாரு ‘வேண்டாம்’ என்று கையசைத்தார்.

‘வொர்க்ஷாப் ஒத்து” என்று அவர் குழறிய குரலில் சொன்னதை எவரோ தெளிவாகத் திருத்திச் சொன்னார்.

“ஒர்க்ஷாப்பை மூடிடலாம்னு சொல்றார்.”
‘இல்லை. ஒர்க்ஷாப் நடக்க வேண்டும்! அது தாமுவின் நினைவுச் சின்னம். வெறுங்கையுடன் சென்னைக்கு வந்த இளைஞன் ஒருவனின் வெற்றிச் சின்னம். தயவு செய்து அதை மூடாதீர்கள்.’
சிவா எழுந்து கத்தப் போனான். ஏதோ ஒரு கை அவனைப் பிடித்தது. பிரீதா.

அவள் அவன் மனசிலிருந்ததைப் புரிந்து கொண்டவள் போன்று அவனை ஒரு கணம் உற்றுப் பார்த்தாள். பின்பு மெதுவாக அதைத் தடுப்பது போல் தலையாட்டினாள்.

தான் அதில் மானேஜர் என்பது அப்புறம் சிவாவுக்கு ஞாபகம் வந்தது. எழுந்து பேசினால் தன் உத்தியோகம் போய்விடும் என்று சொல்வதாக எடுத்துக் கொள்வார்கள்.

தாமு போனபின் நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கிற அக்கறை அவர்களுக்கு இருக்க வேண்டிய அவசியம் என்ன?
தன் தாமு வேறு.
அவர்கள் தாமு வேறு.

அவர்கள் தங்கள் தாமுவின் சொத்தைக் குறித்து விவகாரம் பேசுகிறார்கள். அதில் தலையிடுவதற்கு தனக்கோ பிரீதாவுக்கோ எவ்வித உரிமையுமில்லை.

அங்கே விவகாரம் பேசப்பட்ட பதினெட்டாவது நாளில் தாமு நிறுவிய ஒர்க்ஷாப் அதன் குட்வெல்லோடும் ஸ்தாவர ஜங்கம சொத்துக்களோடும் இருபது லட்ச ரூபாய்க்குக் கை மாறியது.

சிவாவின் கணக்கு வழக்குகள் அப்பழுக்கின்றி இருந்ததை மீடியேட்டராக இருந்த ஆடிட்டர் எல்லார் முன்னிலையிலும் பாராட்டினார்.

அவனது மாதச் சம்பளத்தோடு ஒரு தொகை சேர்த்துக் கணக்கிட்டு கவரில் வைத்து அவனிடம் நீட்டினார்கள்.

ஒர்க்ஷாப் நடுவில் சமீபத்தில் பிரேம் செய்து, பெரிதாக மாலை போட்டிருந்த தாமுவின் போட்டோவை சிவா திரும்பிப் பார்த்தான்.

‘தட்ஸ் ஆல் சிவா..தாங்க்யூ. தாங்க்யூ ஃபார் எவ்ரிதிங்.’

போட்டோவில் திடமாக தீர்க்கமாக மரணத்தால் அழிக்க முடியாத உயிர்ச் சக்தியின் நினைவு போல் தாமு சிரித்தான்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.