சுரேஜமீ

தெளிவு

peak111111

இன்றைய குழந்தைகள் பலருக்கும் ஒற்றைக் குறிக்கோளாக இருப்பது,

ஒன்று பெற்றவர்களின் எண்ணத் திணிப்பு;

அல்லது சக மனிதத் திணிப்பு!

என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

புற்றீசல் போல எங்கும் பரவிக் கிடக்கும், எண்ணற்ற பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் இடங்களின் எண்ணிக்கை,, தேர்ச்சி பெறும் மாணாக்கர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதும்,

பெரும்பாலான மாணவர்கள்,

ஏதேனும் ஒரு பொறியியல் சார்ந்த படிப்பு, எப்படியும் ஒரு கணிணிப் பயன்பாட்டு நிறுவனத்தில் பணி கிடைப்பதற்கு ஏதுவாகி விடும்;

என்ற எண்ணப் போக்கும், இன்றைய கல்வி நிலையில் ஒரு பொருளாதாரச் சிந்தனையை வித்திட்டு விட்டது என்று சொன்னால் மிகையாகாது.

இதனால் பாதிக்கப்பட்டது ஒட்டு மொத்த சமூகமேயன்றி தனி மனிதன் மட்டுமல்ல என்பதை நாம் அறிய வேண்டும். மிகச் சில பெற்றோர்களே, தம் குழந்தைகளின் விருப்பத்தை அறிந்து, அவர்களின் வழியில் செல்லவிட்டு, அந்தக் குழந்தைகளின் சாதனைக்குச் சான்றாக இருக்கின்றனர் என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இதற்கு என்ன அடிப்படைக் காரணம்?

யோசித்துப் பார்த்தால், ஒன்று நம்முடைய அறியாமையாக இருக்கும்; இல்லையெனில், கற்ற கல்வி உடனடியாக நம் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய ஆற்றல் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்ற குறுகிய காலச் சிந்தனையாக இருக்க வேண்டும்.

கல்வியைப் பற்றி நம் இலக்கியங்களில், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ‘நாலடியார்’ கல்வி எப்படி கற்க வேண்டும் என்று சொல்வதைத் தெரிந்து கொள்வோமா?

…..தெள்ளிதின்

ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்

பாலுண் குருகின் தெரிந்து!

எப்படி அன்னப் பறவை, நீரைப் பிரித்துப் பாலை மட்டும் உண்ணுகிறதோ, அதைப்போல, நாம் எண்ணங்களை ஏற்றம் பெறச் செய்யும் நூல்களைத் தெரிந்தெடுத்து கற்றல் அவசியம்!

அப்பொழுதுதான் வாழ்வில் உயர்வடைய முடியும். அதை விடுத்து, ஒரு பொருளியல் சார்ந்த சிந்தனையிலோ, அல்லது ஒரு பட்டம் பெறவேண்டும் என்ற நோக்கிலோ படித்தால், கற்றலின் பயன் வாழ்வில் உய்ய வழி வகுக்காது!

சரி நமக்கு என்ன படிப்பது? எதைத் தேர்ந்தெடுப்பது? என்று தெரியவில்லையென்று வைத்துக்கொள்வோம்.

அடுத்து என்ன செய்ய வேண்டும்? நம்மில் கற்றறிந்த மக்களை உற்று நோக்குதல் அவசியம்.

நான் படித்தது முகவை மாவட்டத்தில், இராமநாதபுரத்திற்கும், இராமேஸ்வரத்திற்கும் இடைப்பட்ட ஒரு சிற்றூர். நான் படித்த காலத்தில், கிழக்கு முகவை என்று சொல்லக் கூடிய, மேற்கூறிய இவ்விரண்டு ஊர்களுக்கும் இடையில் இருந்த ஒரே மேல்நிலைப் பள்ளிக் கூடம், நான் படித்த கடுக்காய் வலசை என்னும் கிராமம் தான். அந்தக் கால கட்டத்தில், ஆசிரியர் எண்ணிக்கையும் குறைவே. மேலும், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், என எல்லாவற்றிலும் பின் தங்கிய ஒரு மாவட்டம் என்பதால், அரசு ஊழியர்களுக்குத் தண்டனைக்குரிய பகுதியாகக் கருதப்பட்டதால், அது சார்ந்த சிக்கல்களும் உண்டு.

அத்தகைய சூழலில், என்னால் தேவையான மதிப்பெண்களை, பள்ளி இறுதி வகுப்பில் பெற முடியவில்லை; அப்பொழுதே, முடிவு எடுத்தேன் மேல்நிலை வகுப்பில் வணிகவியல் பாடம் எடுத்து படிக்க வேண்டும் என்பதையும், அதற்குப் பின் பட்டயக் கணக்காளர் படிப்புதான் படிக்க வேண்டும் என்பதும்!

இதற்கு உறுதுணையாக இருந்தது நான் அடிக்கடி விடுமுறைக் காலங்களில் காரைக்குடிக்குச் செல்வதும், அங்கே கற்றறிந்தவர்களுடனான நட்பும் என்றால் சாலப் பொருந்தும்!

அதைத்தான் பின் வரும் பாடலில் உணர்த்துகிறது!

……….கற்றறிந்தார் கேண்மை நுனியின் கரும்புதின் றற்றே!

கற்றறிந்தவர்களுடைய நட்பு என்பது கரும்பை நுனியிலிருந்து சுவைப்பத் போன்று, நம் வாழ்க்கை கரும்பை ருசிப்பதற்கு உதவும். இதையெல்லாம், இளம் வயதில் நம் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி, ஒரு வழிகாட்டியாக இருந்தால், நிச்சயம் எந்த சிகரத்தையும் வரும் தலைமுறை அடையும் என்பதில், எள்ளளவும் ஐயமில்லை!

சமீபத்திய செய்தி ஒன்று!

apooja

இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த பதினேழே வயதான மாணவி பூஜா சந்திரசேகருக்கு, அமெரிக்காவில் உள்ள முதல்நிலைப் பல்கலைக் கழகங்கள் பதிநான்கில் சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இவருக்கு எப்படி இந்த வாய்ப்பு கிட்டியது என்றால்,

இவர் மறதி நோய் எனப்படும் பார்க்கின்சன் எனும் நோயை, ஒருவர் பேசும் முறையை வைத்தே கண்டறியப் படும் ஒரு முறையக் கண்டுபிடித்துள்ளார் என்ற சிறப்பே!

அவரிடம் எப்படி உங்களால் சாதிக்க முடிந்தது என்று வினவியதற்கு, அவர் கூறிய பதில் என்ன தெரியுமா?

‘என்னால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என நான் நம்பியதுதான்!’ என்றார்.

ஆக, ஒவ்வொருவரும் நாம் என்ன சாதிக்க வேண்டும் என்பதைத் தான் படித்த நூல்களின் வாயிலாகவோ,

நம் பெற்றோர்களின் அனுபவத் துணையோடோ, அல்லது

கற்றறிந்த மேதைகளின் நட்பு மூலமாகவோ,

நாம் விரும்பும் படிப்பைத் தேர்ந்தெடுத்து, அத்துறையில் தனிப்பெரும் சிறப்புப் பெறவேண்டும் என்ற முனைப்பும், தன்னம்பிக்கையும் கொண்டு முயன்றால்,

தெய்வத்தால் ஆகாதெனினும், முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் எனும் வள்ளுவனின் கூற்று,

உங்களைச் சிகரங்களை நோக்கிப் பயணிக்க வைக்கும்!!

-தொடர்ந்து சிந்திப்போம்!

அன்புடன்

சுரேஜமீ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *