புலவர் இரா. இராமமூர்த்தி.

ஈதல் என்ற மனிதகுலக் கடமைகளுள், விருந்தோம்பல் என்ற இல்லறத்தார் கடமை அடங்கும்! ஒருவர் மனைவியுடன் இல்லறம் நடத்துவதே தம்மை நாடி வரும் விருந்தினர்களுக்கு உணவுபடைத்து, மகிழ்வதற்கேயாகும்! இதனைத் திருவள்ளுவர்,

”இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு!”(81)

என்று விருந்தோம்பல் அதிகாரத்தின் முதற்குறட்பாவில் குறித்துள்ளார்! தம் இல்லத்திற்கு விருந்தினர் வரவேண்டும் என்பதே இல்லத்தரசியரின் ஏக்கமும், நோக்கமும் ஆகும்! இந்தச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாகப் பலவிடங்களில் உள்ளன! விருந்தினர் வருவதை முன்னரே காக்கை கரைந்து அறிவிக்கும் என்பது நம் குடும்ப மரபு சார்ந்த நம்பிக்கை. காக்கை கரைந்ததைக் கேட்ட தோழி தலைவியிடம், பிரிந்து சென்ற கணவன் விரைவில் மீளுவான் என்று கூறியதாகக் குறுந்தொகையில் ஒரு பாடல் உள்ளது. அந்தப் பாடலில் காக்கையைப் பற்றிச் சிறப்பித்துப் பாடியமையால் அப்படலாசிரியர் ”காக்கைப் பாடினியார்” என்று அழைக்கப் பெற்றார்!

இந்த விருந்தோம்பல் அதிகாரத்தின் எல்லாக் குறட்பாக்களும் தனித்த சிறப்பு வாய்ந்தவை! இல்லறத்தின் ஐந்து கடமைகளுள் விருந்தோம்பலும் ஓன்று. இதனைத் திருவள்ளுவர் ,

”தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்
கைம்புலத்தார் ஓம்பல் தலை! ” (43)

என்ற குறட்பாவில் தெளிவிக்கிறார்! விருந்தோம்பல் நம் தமிழகத்தின் சைவ வைணவ சமயங்களின் கடமையாக அறிவிக்கப் பெற்றன! சைவத்தில் விருந்தோம்பல், ”மாகேசுர பூசை ” என்றும், வைணவத்தில் “ததியாராதனம்” என்றும் வழங்கப் பெறும். பொதுவாக இந்திய உபநிடதங்கள், ”மாத்ரு தேவோ பவ: பித்ரு தேவோ பவ: ஆசார்ய தேவோ பவ: அதிதி தேவோ பவ: ” என்று விருந்தோம்பலை மனித குலக் கடமையாக அறிவிக்கின்றன! சிலப்பதிகாரத்தில் கண்ணகி …

”அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை ”

என்று தன் கடமைக் குறித்துக் கோவலனிடம் கூறுகிறாள்! விருந்தோம்பல் தொல்லோர் சிறப்பித்த பெருமை பெற்றதாகும். இங்கே புதிய விளக்கம் பெற அமைந்த திருக்குறள் ,

”வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்” (85)

என்பதாகும். இக்குறளுக்கு, ”வந்த விருந்தினருக்கு உணவிட்டபின் எஞ்சிய உணவை உண்டு மகிழும் இல்லறத்தானது விளைநிலத்தில் விதை விதைக்க வேண்டா; அந்நிலத்தில் பயிர்கள் தாமே விளையும் ” என்ற பொருளையே எல்லாரும் கூறினர்! இறைவன் திருவருள் விருந்தோம்பும் இல்லறத்தானின் நிலத்தில் தேவையான பயிர் விளைச்சலை உண்டாக்கும், என்பது உண்மைதான். ஆனாலும், இந்த விளக்கம் சற்றே மிகையாக இருப்பதுபோல் எனக்குத் தோன்றியது.

பெரிய புராணம், வைணவ வியாக்யானங்கள் ஆகியவற்றில் இந்த விருந்தோம்பல் பற்றிய வரலாறுகளைப் படித்த பின் இந்தக் குறட் பாவுக்குப் புதுமையான விளக்கம் புலப்பட்டது. சைவத்தின் பேரிலக்கியமான பெரிய புராணத்தில் ”இளையான்குடி மாற நாயனார்” புராணத்தில் ஒரு நிகழ்ச்சி உள்ளது! அந்த மாறனார் இல்லத்தை நோக்கி வந்த அடியாருக்கு உணவிட்டு விருந்தோம்பும் வகையில் அவரில்லத்தில் வசதி இல்லை; வறுமை கொடிய தாண்டவ மாடியது! இந்த நிலையிலும், அவர் வீட்டுப் பொருள்களை விற்றும் கடன் வாங்கியும் விருந்தினரைப் பேணினார்! இவர்தம் சிறப்பை உலகத்தார் உணரும் பொருட்டு , இறைவனே சிவனடியாராக அந்த இளையான்குடி மாறனின் இல்லம் நோக்கி எழுந்தருளினார். வீட்டில் ஒரு மணியரிசி கூட இல்லை! அடுத்த போகத்துக்கு உ ரிய விதைநெல்லை வயலை உழுது விதைத்திருந்தார்! நள்ளிரவில் பசியுடன் வந்த சிவனடியாரின் நிலைமையைக் கண்டு உள்ளம் உருகிய மாற நாயனார். மனைவியிடம் யோசனை கேட்டார். அந்த மங்கையர் திலகம், வயலில் விதைத்த நெல்லை வழித்தெடுத்துச் சேர்த்துக் கொண்டு வந்தால், தம்மால் இயன்ற வகையில் அமுதாக்குவதாகக் கூறினார். அந்த ஈரநெல்லை வறுத்து, உரலில் குத்தி அரிசியாக்கி உணவு சமைத்து அடியாருக்கு அமுது படைத்த அருள் வரலாறு என் உள்ளத்தை உருக்கியது! அதே நேரத்தில் இந்தத் திருக்குறளுக்குப் புதிய பொருளும் புலப்பட்டது!

வந்த விருந்தினருக்கு உணவிட்டு எஞ்சியதைப் புசிக்கும் அறவோராகிய அவர் , அடுத்த போகத்துக்கு விதைத்த நெல்லையே எடுத்து அடியாருக்கு உணவு சமைத்து வழங்கினார். ஆகவே அவர் நிலத்தில் வித்தினை இட்டுப் பயிராக்க விரும்பவில்லை! இதனை,”அவர் வயலில் வித்து இடுதலையும் வேண்டுவாரோ?” என்ற கேள்வி கேட்டு விளக்குகிறார் . இந்த வகையில், விருந்தோம்பி மிச்சில் மிசைவானாகிய இல்லறத்தான் வித்து இடலும் வேண்டும் கொல்லோ? என்று சொற்களை மாற்றிப் போட்டுப் பொருள் கொள்ளல்லாமே? என்று கருதினேன். ஆகவே இத்திருக்குறளின் புதிய பொருளைப புரிந்து கொண்டேன்! அதன்படி ,”விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் (விளைநிலத்தில்), (அடுத்த போகத்துக்கு) வித்தும் இடல் , வேண்டும் (விரும்புவான்) கொல்லோ? (விரும்ப மாட்டான்!! ) என்று பொருள் கொண்டேன்! வித்திட வேண்டா; தாமே விளையும் என்ற மிகைப்படுத்தப் பெற்ற பொருள் இங்கே வேண்டாததாகி விடுகிறது , அல்லவா?

இதற்கு ஆதரவாக வைணவ வியக்கியானத்திலும் ஓர் அழகிய வரலாறு உண்டு. ஸ்ரீ இராமானுஜருக்கு அணுக்கத்தொண்டனாகிய பிள்ளை உறங்காவில்லி தாசரின், அன்புக்குரிய மனைவி பொன்னாச்சி. அவள் ஒருமுறை தன் கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில், அடியாருக்கு ததியாரா தனம் செய்ய, வீட்டில் அடுத்த போகத்துக்கு விதை இடுவதற்கு வைத்திருந்த முற்றிய நெல்லை இடித்து அரிசியாக்கி அமுது படைத்து விட்டாள்! இதனை அறிந்த உறங்காவில்லி தாசர் ‘ஏன் ?’ என்று கேட்டார்! அதற்குப் பொன்னாச்சி, ”சுவாமி இந்த நெல்லை, அடியாருக்கு இட்டதன் மூலம் இனி, நாம் செல்ல விருக்கும் சொர்க்கபூமியில் விதைத்து விட்டேன்!” என்று விடை கூறி அடியாரை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி விட்டார்! ஆகவே விருந்தோம்பலுக்குச் செலவிட்ட நெல் சொர்க்கத்தில் விதைக்கப் படும். ஆகையால் இங்கே இந்த பூமியில் வித்திட வேண்டா! ‘ என்பது புலனாகின்றது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *