Blog

  • தாகம் தீர்க்காத நதிகள்

     

    சச்சிதானந்தம்

     

    கொதிகலன் போலுலகைக் கதிரவன் காயவைக்க,

    மதிமுகம் சுமந்தோடிக் குளிர்ந் திருந்த,

    நதிகளின் ஊற்றுக்கண் குருடாகிக் காய்ந்திருக்க,

    விதியென நொந்துசெத்து மனிதனும் வீழுகின்றான்!

     

    வனங்கொண்ட வளங்களை தினந்தினம் அழிக்க,

    பணங்கொண்ட மமதையில் பசுமையைப் பழிக்க,

    சினங்கொண்ட மரங்களின் சாபத்தால் இப்போது,

    குணங்குன்றி ஆறுகள் நீரின்றி வறண்டன!

     

    மலர்களை, மீன்களைச் சுமந்த நதிகள்,

    மணல்வெளிப் பாதையாய் அனல்கக்கி நிற்க,

    மதகணைக் கதவெங்கும் தேனீக்கள் கூடுகட்ட,

    மலைத்தேனால் நிறைந்திருக்கும் எம்மாற்று வளங்காணீர்!

     

    ஆற்றங்கரை அரசமரம் நீரின்றிச் சாக,

    அங்குவாழும் பிள்ளையாரும் நாவறண்டு வாட,

    அழகுகங்கை சூடியவன் சடைவறண்ட கோலத்தால்,

    அகிலமெங்கும் தாகத்தில் தவித்துறைந்து நிற்கிறதே!

     

    மாதம் ஒரு செடி நடுவோம்,

    மேகஞ் சூல் கொள்ள வைப்போம்,

    மாரித் துளி பூக்க வைத்து,

    மண்ணு லகைக்  காத்திடு வோம்!

    Share
  • வைகாசி அனுஷம்- பவ சங்கர தேசிக மே சரணம்!

    -சு.ரவி

     

    வணக்கம் வாழியநலம்!

    சென்ற 25ஆம் தேதி வைகாசி அனுஷம்.

    காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி மஹாஸ்வாமிகளுடைய ஜயந்தி தினம்.

     

    ஆதிசங்கரரின் மறுஅவதாரம், அன்னை காமாக்ஷியே குரு உருவில் புரிந்த அனுக்ரஹம், நமது காஞ்சி மாநகரின் பாக்கியம் என்று பலகோடி மாந்தர் மதித்துப் பணியும் ஸ்ரீமஹாஸ்வாமிகளுடைய  பாதகமலங்களுக்கு நமஸ்காரங்கள்.

    “ஜகத்குரு” என்ற அடைமொழிக்கு, ” இந்த ஜகமே எனக்கு குரு” என்று விளக்கமளித்த எளிமை.

    பீடமேறிய தனது ஆரம்பநாட்களில் ஒருபயணத்தின் போது, ஆற்றங்கரையில், பொய்பேசிய தன் 6 வயதுத் தம்பியைத் திருத்தும் முகமாக, சத்தியத்தின் உயர்வு பற்றி எந்த வேதமும், உபநிஷத்துக்களும், புராணங்களும் சொல்லியதை விடஅற்புதமாகவும், எளிமையாகவும் விளக்கிய 8 வயது குடியானவச் சிறுமியைத் தனது குருமார்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டதாக ஒப்புக்கொண்ட நேர்மை;

    ஆன்மபரிசுத்தி எனும் அக்னியில் புடம்போட்டு ஞானக் கனலாகவும், கருணைப் புனலாகவும் விளங்கிய  மேன்மை;

    பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தமது திருவடி தோயத் தோய நடந்து விஜயம் செய்து இந்துமதத்தின் உயிர்மூச்சை, உள்ளுறை ஒளியை அணையாது காத்துக் கொடுத்த மஹான், தமது விஜயங்களின் போது “மேனா” வின் பின் நடந்து செல்லும் காட்சி

    இந்த மஹான் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற நினைப்பே நம்மைப் புனிதமாக்கிவிடும்.

     

    கருணையே வடிவான அன்னையும், கண்டித்து வழிநடத்தும் தந்தையும், தானே முன்னுதாரணமாய் நடந்து காட்டி உபதேசிக்கும் குருவும் ஒரு வடிவாய் வந்துதித்த பேரருளாளரின் ஆழ்ந்த தியானக் கோலம்.

    ஐந்து சுடர்களுக்கு நடுவே ஒருகால் ஊன்றித் தவம் செய்யும் அன்னை காமாக்ஷியும், காமகோடி பீடத்தை அலங்கரிக்கும் காஞ்சிமாமுனிவரும் வேறு வேறல்ல என உணர்த்தும் தவக்கோலம். (தற்செயலாக ஒரு அடியவருக்குக் கிடைத்த தரிசனம் இது).

    ஸ்ரீ மஹாஸ்வாமிகள் வாழ்க்கையில் நடந்த பலசம்பவங்கள் ஒரு குரு எப்படி இருப்பார் என்பதை நமக்கு உணர்த்த வல்லவை.

    நான் கேட்டறிந்த ஒரு நிகழ்ச்சி.

    திண்டிவனத்துக்கு அருகே ஆலக்கிராமம் என்றஒரு சிறு கிராமம். அங்கு ஸ்வாமிகள் செல்லும் போது பிற்பகல் ஆகிவிட்டிருந்தது.

    சிலநாட்களாகப் பெய்து வந்த கடும் மழை காரணமாக, வீடு, வாசல், பொருட் சேதமடைந்து துயருற்ற ஏழைக் குடியானவ ஜனங்கள் ஸ்வாமிகளைத் தரிசிக்கக் கூட்டமாக வந்திருந்தனர்.ஸ்வாமிகள் அம் மக்களுக்கு மடத்தின் சார்பாக உதவும்நோக்குடன் உடனிருந்த மடத்து நிர்வாகியிடம் அவர்களுக்கு வேட்டி, துண்டு, சேலைகள் வழங்க ஏற்பாடு செய்யக் கூறினார்.

    முகாம் வந்த இடத்தில் மடத்தின் கைவசம் ஸ்டாக் இல்லாததால் திண்டிவனம் சென்றுதான் வாங்கி வரவேண்டும். பெய்துகொண்டிருந்த மழைகாரணமாகப் போதுமான துணிமணிகள் வாங்கிவரத் தாமதமாகிவிட்டது. பின்னர் அவற்றைக் குடியானவர்களுக்கு ஸ்வாமிகள் தமது திருக்கரங்களால் வழங்கி முடிக்கும்போதுமாலைப்பொழுது சாய்ந்து இரவு ஆகிவிட்டது. மனநிறைவோடு எழுந்த ஸ்வாமிகளிடம் நிர்வாகி,

    ” ஆனால் பெரியவாளுக்கு சந்திரமௌளீஸ்வரர் பூஜைக்குத்தான் நேரமாயிடுத்து” என்றார்.

    அவரை ஏறிட்டு நோக்கிய ஸ்வாமிகளோ “சந்திரமௌளீஸ்வரர் பூஜை முடிஞ்சாச்சு” எனச் சொல்லிவிட்டு உள்ளேசென்றார்.

    நம்மைக் கரையேற்றுவதற்காகத் தாம் தவவாழ்வு வாழ்ந்த மஹான் கரைஏறிவரும் காட்சியும்,

    உண்மையான சந்திரமௌளீஸ்வரர் பூஜை எது என உணர்த்தியவர் பூஜை செய்யும் கோலமும்,

    யோகிராஜராக, ருத்ராக்ஷ கிரீடத்துடன் நிற்கின்ற தரிசனமும்..

     

    கோட்டோவியங்களாக…

     

    ஒரு கருத்தை விளக்கி உபதேசிப்பதில் ஸ்ரீமஹாஸ்வாமிகள் தனித்து ப்ரகாசித்தார்.நான் படித்த இரண்டு உதாரணங்கள்:

    1. அம்பாளுடைய லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பாளுக்கு ‘அபர்ணா’ என்றொரு நாமம்.  வழக்கமாக இந்த நாமத்திற்கு ‘ கடும்தவம் செய்கையில் இலைகளைக் கூடச் சாப்பிடாமல் தவமிருப்பவள்’ என்றுபொருள் கொள்வர்.

    ஸ்ரீ மஹாஸ்வாமிகளோ, ” தவம் செய்கையில் இலைகளற்ற கொடிபோல் காட்சி தருபவள்” என்று அற்புத விளக்கம் அளித்தார்.

     

    2. ஸ்ரீ ராமானுஜர் வரலாற்றில், சைவம் தழுவிய சோழமன்னனின் கட்டளைக்காக, ஸ்ரீ. ராமானுஜருக்குப் பதிலாக மன்னனைச் சந்தித்த அவரது சீடர் ஸ்ரீ கூரத்தாழ்வார் பற்றிய நிகழ்ச்சி. மன்னன் “சிவாத் பரதரம் நாஸ்தி ( சிவத்திற்கு மேல் ஏதுமில்லை)” என்றெழுதிய ஓலையில்  பரம வைணவரான அவரைக் கையெழுத்திடுமாறு பணிக்க, அவர் அவ்வோலையில்

    ” அஸ்தி த்ரோணம் அதஃபரம்” என்றெழுதி கையொப்பம்  இட்டார். “சிவம்” என்பது சிவனைக் குறிப்பதல்லாமல் ‘ஆழாக்கு போல ஒரு முகக்கும் அளவையும் குறிக்கும். ஸ்ரீ கூரத்தார் அதை சிலேடையாக்கி  அதை விட ‘த்ரோணம்’ என்ற முகக்கும் கருவி பெரியது எனப் பொருள்படும் வாக்கியத்தை எழுதினார் என்பர்.

    ஸ்ரீமஹாஸ்வாமிகள் ” சோழமன்னன் எந்த நோக்கத்தோடு சிவனுக்கு மேல் ஒன்றுமில்லை என கூரத்தாழ்வானை ஒப்புக் கொள்ளக் கட்டாயப் படுத்தினானோ- ஆனால் மஹா ஞானியும், பண்டிதனும், பாகவதனும் ஆன கூரத்தாழவான் வேடிக்கைக்காகக்கூட சிவ தூஷணை தவனிக்கப் பதில் அளித்திருக்க மாட்டார். எனவே இதற்கு வேறு பொருள் இருக்கவேண்டும் எனத்தோன்றியது.

    சிவலிங்கத்தை அலங்கரிக்கும் போது, அதன் உச்சியில் விலவ இலைகளிச் சூடுவர். ஆம், “த்ரோணம்” என்றால் வில்வம் என்றும் பொருள்படும்.    ” சிவனுக்கு மேலே ஒன்றுமில்லை” என்பதற்குப் பரம பாகவதனான கூரத்தாழ்வார் ” அதற்கு மேலே வில்வம் இருக்கிறது” என்று பொருள்படத்தான்மாற்றுரைதிருப்பார்”  என்று விளக்கி உள்ளார்.

     

    மஹான்கள் பார்வையே தனி.

     

    அவர்கள் பூஜை செய்யும் போது அந்த அந்த மந்திரங்களின் அதிதேவதைகள் நேர்வந்து அவற்றை ஏற்கும்.

     

    அன்னாரது ஜயந்தியை ஒட்டி, அடியேனது கோட்டோவியங்களை என் காணிக்கையாக்குகிறேன்!

     

    ” பவ சங்கர தேசிக மேசரணம்! “

    Share
  • அன்பே அழகானது – 1

    ராஜ்ப்ரியன்

    சாந்தமும், அமைதியும் குடிகொண்ட பிரபலமான குழந்தை ஏசு மெட்ரிக்குலேஷன் பள்ளி பிரின்ஸ்பல் நாற்பத்தியெட்டு வயது சிஸ்டர் சில்வியா கண் கண்ணாடியை கழட்டி வைத்தபடி சொன்னதும் எதிரே அமர்ந்திருந்த சுதா புன்னகையுடன்  நன்றி மேடம் என்றாள்.

    எங்க பள்ளியை விட பிரபலமான பள்ளிங்க இங்க இருக்கு. நீங்க நல்லா படிச்சியிருக்கிங்க. உங்க தகுதிக்கு காலேஜ்கள்ளயே நல்ல சம்பளத்துக்கு வேலை கிடைக்கும்மே அங்கயெல்லாம் போகாம குறைந்த சம்பளத்துக்கு இங்க டீச்சரா வேலைக்கு சேர என்ன காரணம் ?

    என்னோட சின்ன வயசுல இந்த ஸ்கூல்ல படிக்கணம்ன்னு ஆசை. அப்ப முடியல. இப்ப வேலை பாக்க வேண்டிய நிலை வந்ததும் இங்க சேரணம்ன்னு ஆசைப்பட்டன். விளம்பரத்த பாத்து அப்ளே பண்ணேன் என சுதா சொன்னபோது மெல்ல புன்னகைத்த சிஸ்டர் சில்வியா, நீங்க எய்த் டூ டென்த் ஸ்டூடன்ட்க்கு கெமிஸ்ட்ரி க்ளாஸ் எடுங்க.

    சரிங்க மேடம்.

    தன் இருக்கையில் இருந்து எழுந்த சிஸ்டர் சுதாவிடம் வாங்க என அழைத்தார்.

    மேடம் ஒரு நிமிஷம். உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டா தப்பா எடுத்துக்கமாட்டிங்களே ?.

    தெரியாததைத்தான் கேள்வியா கேட்பாங்க. அதல என்ன தப்புயிருக்கு. கேளும்மா என்றார் சிரித்தபடியே ?.

    ஸ்கூல்ல எல்லாரும் இங்கிலிஷ்ல தான் பேசணம்ன்னு வெளியில சொன்னாங்க. நீங்களே தமிழ்ல பேசறிங்களே.

    ஆங்கிலம் கத்து தர்றோம் இல்லன்னு சொல்லல. ஆனாலும் இங்க தாய்மொழிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. வெளிநாட்லயிருந்து வந்த கால்டுவெல் தமிழ் கத்துக்கிட்டு தமிழைப்பத்தி சிறப்பா நூல்கள் எழுதனாரு. ஆப்படியிருக்கும் போது நம்ம மொழிய நாம பேசலன்னா நல்லாயிருக்கும்மா. முதல்ல தாய்மொழிக்கு முக்கியத்துவம், அதுக்கப்பறம் தான் பிறமொழி. மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்ங்கறதால இங்கிலிஸ்ல தான் பேசுவாங்கன்னு வெளியில இருக்கறவங்க நினைக்கறாங்க. அப்படியெல்லாம் இல்ல பசங்களுக்கு ஆங்கிலத்த கற்று தர்றோம், தாய் மொழிய உணர வைக்கறோம் என்றவர் போகலாம்மா என கேட்டார் சுதா தலையாட்டியதும் நடக்க தொடங்கினார். அலுவலக வாயிலில் நின்று டேவிட் என அழைத்தார். வந்துட்டன் மேடம் என குரல் தந்தப்படி 40 வயதான டேவிட் பவ்யமாக வந்து நின்றார். சுதா இவர் ஆபிஸ் பியூன் டேவிட் என அறிமுகப்படுத்தியவர், டேவிட் இவுங்க சுதா புது அப்பாய்மெண்ட் 8 டூ 10 கெமிஸ்ட்ரி க்ளாஸ் எடுக்கபோறாங்க. இவுங்களுக்கான டைம்டேபிள் கம்ப்யூட்டர் ரூம்ல இருக்கும் பிரிண்ட் அவுட் வாங்கி வாங்க எனச்சொல்லிவிட்டு நடந்தார்.

    ஸ்டாப் ரூம்க்குள் நுழைந்த சிஸ்டரை கண்டு அனைவரும் எழுந்து நின்றனர். தன் பின்னால் நின்ற சுதாவை சுட்டிகாட்டி எம்.எஸ்.சி. எம்.பிஎல் முடிச்சியிருக்காங்க. நம்ம ஸ்கூல்க்கு கெமிஸ்ட்ரி டீச்சரா அப்பாய்மென்ட் பண்ணியிருக்கு. நீங்க இவுங்களுக்கு ஒத்தொழைப்பு தரனும் என்றவர் சுதா பக்கம் திரும்பி இதான் ஸ்டாப் ரூம், டைம் டேபிள் தரச்சொல்றன், போய் உட்காருங்க குட் லக் எனச்சொல்லிவிட்டு தன் அறையை நோக்கி நடந்தார்.

    சுதா காலியாக இருந்த இடத்தில் அமர அருகில் இருந்த ஒரு ஆசிரியை ஹாய், ஐயெம் மாலதி. இங்கிலிஷ் டீச்சர் என அறிமுகமானார்.

    நீங்க என்ன ஊர் ?.

    இதே ஊர் தான் காந்தி நகர்ல இருக்கன்.

    எங்க படிச்சிங்க ?.

    திருச்சியில எம்.எஸ்.சியும், பெரியார் யுனிவர்சிட்டியில எம்.பில் பண்ணன்.

    அப்பா என்ன பண்றாரு ?

    பிஸ்னஸ் பண்றாரு.

    இதுக்கு முன்னாடி எங்கயாவது வேலை பாத்திங்களா?.

    இல்ல.

    ஏன் ?.

    சும்மா தான் எங்கயும் முயற்சி பண்ணல.

    மாலதி மேடம் அவுங்க இப்பத்தான் வந்துயிருக்காங்க. அதுக்குள்ள அவுங்கள ஏன் ராக்கிங் பண்றிங்க விடுங்க என ப்ரியா சொல்ல அந்த அறையே சிரிப்பால் அதிர்ந்தது.

    ஏன் மேடம் கலாய்க்கறிங்க. புதுசா வந்துயிருக்காங்க. அவுங்களப்பத்தி உங்களுக்கும் தெரியாது. உங்க மனசுல இருக்கற கேள்வியையும் தான் நான் கேட்கறன் தெரிஞ்சிக்கிட்டா பழகா ஈசியா இருக்கும்மில்ல அதுக்குத்தான் கேட்கறன் என்றார்.

    நீங்க கேளுங்க மேடம் என சுதா சொன்னதும்

    கல்யாணமாகிடுச்சா

    என கேட்டதும் சுதா அமைதியாகி சுதாவின் முகம் சுருங்கி கண்ணீல் நீர் கோர்த்தது. இதை பார்த்த மாலதிக்கு சுதா பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது.

    தொடரும்……………

    Share
  • பாரதியின் வேத முகம் – 12

     

    -சு.கோதண்டராமன்

    நம்புவதே வழி

    இஸ்லாமிய வேதம் குர் ஆன் பல இடங்களில் அல்லா மேல் ஈமான் கொள்ளுங்கள் என்று நம்பிக்கையை வலியுறுத்துகிறது. கிருத்துவர்களின் பைபிளும் பல இடங்களில், விசுவாசியுங்கள் என்று நம்பிக்கையை முதன்மைப்படுத்துகிறது. ஆனால் இந்து மதமோ அந்த அளவுக்கு நம்பிக்கையை வலியுறுத்துவதாகத் தெரியவில்லை.

    வேதம் தனி மனித சிந்தனைக்குக் கொடுத்துள்ள சுதந்திரம் வேறு எங்கும் காணக் கிடைக்காதது. வேதத்தை ஒப்புக் கொள்ளாதவரைப் பாவி என்றோ காபிர் என்றோ இந்துக்கள் இகழ்வதில்லை. மாறாக புதிய சிந்தனைகளை வரவேற்று அவற்றின் உண்மைகளை ஆராய்ந்து அவற்றில் உள்ள நல்லனவற்றை ஏற்றுக் கொண்டு தன்னை மாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரே வேதத்திற்கு சங்கரர் ஒரு விதமாகவும் ராமானுஜர் ஒரு விதமாகவும் மத்வர் ஒரு விதமாகவும் விரிவுரை எழுதியுள்ளனர். அவரவருக்கு எது சரி என்று படுகிறதோ அதை ஏற்றுக் கொள்ளவும் அதன்படி நடக்கவும் பிறப்புரிமை பெற்றவன் இந்து. கடவுள் இல்லை என்று சொல்பவனையும் வேத மதம் வெறுப்பதில்லை. இன்றைய பெரியார் மட்டுமல்ல, முற்காலத்தில் வாழ்ந்த ஜாபாலி என்ற முனிவரின் கருத்துகளும், சார்வாகர்கள் என்றழைக்கப்பட்ட நாஸ்திகர்களின் கருத்துகளும் இந்து சமய இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.

    வேதம் நம்பிக்கையை வலியுறுத்துகிறதா? சாதாரண மக்கள் வழக்கில் நம்பினவருக்கு நடராசா, நம்பாதவருக்கு யமராசா என்று சொல்லப்படுகிறது என்றாலும் வேதத்தில் எந்த இடத்திலும் இந்த வேதம் சொல்வதை நம்புங்கள். நம்பினால் தான் கடைத்தேறுவீர்கள், இல்லாவிட்டால் நரகத்துக்குப் போவீர்கள் என்ற மிரட்டல்கள் காணப்படுவதில்லை.

    இத்தகைய சூழ்நிலையில் பாரதியின் இரு வரிகள் நமக்குப் புதிராக உள்ளன. முதலாவது, சக்தியைக் கும்பிடுமாறு தன் மனத்துக்கு அறிவுறுத்தும் இடத்தில்

    நம்புவதே வழி என்ற மறை தனை

                    நாம் இன்று நம்பி விட்டோம் என்கிறார்.

    இன்னொரு பாடலில்

    நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு

                    அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக நலம் பெறலாம்

    என்கிறார்.

    வேதம் நம்பிக்கையை வலியுறுத்துவதாக அல்லவா கூறுகிறார். உண்மையா? தேடினால் கிடைப்பது சிரத்தை பற்றிய ஒரு சூக்தம். ரிக்வேதம் பத்தாவது மண்டலம் 151வது சூக்தம்.

    சிரத்தை என்பது அடைய வேண்டிய லட்சியத்தில் உறுதியும் அதை அடைவதற்கான வழியில் முழு முனைப்புடன் ஈடுபடுவதையும் குறிக்கும். செய்யும் ஒவ்வொரு சிறு செயலும் தன் இறுதி நோக்கத்துக்குப் பயன்படுமா என்று ஆராய்ந்து பயன்படக்கூடிய எந்த சிறு செயலையும் விடாமல் செய்வதும் பயன் தராத எந்த சிறு செயலையும் செய்யாதிருப்பதும் இதில் அடங்கும். இதில் நம்பிக்கை எங்கே வந்தது?

    ஆதி சங்கரர் சிரத்தை என்பதற்கு நம்பிக்கை என்றே பொருள் தருகிறார். இறைவன் ஒருவர் உண்டு என்பதில் சந்தேகம் இல்லாத தெளிவான மனத்துடன் இருப்பதே நம்பிக்கை என்கிறார். அதுவே சிரத்தையின் அடிப்படை. குறிக்கோளில், அதாவது இறைவனிடத்தில், நம்பிக்கையும் அதை அடையும் வழியாகிய, குருவின் வார்த்தைகளில் நம்பிக்கையும் தான்.

    ஒரு உதாரணம் பார்ப்போம். ஒருவன் ஒரு புதிய ஊருக்குச் செல்ல விரும்புகிறான், ஒருவரிடம் வழி கேட்கிறான். அவன் அதில் நம்பிக்கையோடு பயணம் செய்ய வேண்டும். கொஞ்ச நேரம் சென்ற பின் இந்தப் பாதை சரியானது தானா? நமக்குச் சொன்னவர் சரியாகத் தான் சொல்லி இருப்பாரா? நாம் போய்ச் சேருவோமா என்று ஐயுறுதல் கூடாது.

    நம்பிக்கை இன்றி, சந்தேகம் தன்னை ஆட்கொள்ள அனுமதிப்பவன் அழிவான் என்கிறது கீதை. (ஸம்சயாத்மா விநச்யதி)

    இந்த சிரத்தை, அதாவது குறிக்கோளில் உறுதியும் செயல்பாட்டில் சந்தேகம் மற்றும் குறை இல்லாத வினைத் திட்பமும், ஒரு தேவியாக உருவகப்படுத்தப்பட்டு வேதத்தில் போற்றப்படுகிறது. அதன் சுருக்கமான மொழி பெயர்ப்பு இதோ:-

    சிரத்தை இறைவனின் தலையில் உள்ளது. அதைச் சொற்களால் போற்றுவோம். சிரத்தையே, கொடுப்போருக்கும் கொடுக்க விரும்புவோருக்கும் விரும்பிய பலன்களைக் கொடுப்பாயாக. (சிரத்தையோடு செய்தால் விரும்பிய பலன் கிடைக்கும்.) தேவர்கள் அசுரர்களுடன் இட்ட போரில் சிரத்தையைக் கைக் கொண்டனர். வெற்றி பெற்றனர். (நோக்கத்தில் வெற்றி பெற வேண்டுமென்ற) இதய தாகத்தால் சிரத்தை அடையப்படுகிறது. சிரத்தையால் செல்வம் அடையப்படுகிறது. சிரத்தையைக் காலையிலும் நண்பகலிலும் மாலையிலும் வணங்குகிறோம். சிரத்தா தேவியே, எங்களுக்கு சிரத்தையைக் கொடு.

    இந்தக் கருத்துகளைத் தான் பாரதி ஒரு வரியில் கூறுகிறார்.

                    நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு.

    சிரத்தையை, அதற்கான இதய தாகத்தை, அடைவது எப்படி? அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல சிரத்தையை அடைய சிரத்தை என்னும் அம்பிகையைத் தான் வணங்க வேண்டும். சிரத்தா தேவியே, எங்களுக்கு சிரத்தையைக் கொடு என்று தான் அந்த ரிக் வேத சூக்தம் நிறைவடைகிறது. பாரதியும் அதையே எதிரொலிக்கிறார்.

    அம்பிகையைச் சரண் புகுந்தால்

                    அதிக நலம் பெறலாம்.

     

                    நம்புவதே வழி என்ற மறை தனை

                    நாம் இன்று நம்பி விட்டோம்.

     

    Share
  • ஐயப்பன் கீர்த்தனைகள்-கேட்க,ரசிக்க…

    -சு.ரவி

    வணக்கம், வாழியநலம்,

    ஒரு மாறுதலுக்கு இம்முறை ஒலிவெளிப் பயணம்.

    ( ஓவியத்தை விட்டுக்கொடுக்கமுடியாமல், என்னை ஆட்கொண்ட சபரிகிரீசன், நெய்ப்பிரியனின் ஓவியம் பார்க்க, ரசிக்க..)

    என் சபரிமலைப் பயணங்களை இசைப்பயணங்களாக மாற்றியதில் பெரும்பங்கு

    என்நண்பன் V.K நாராயணனையே சாரும்.

    1980- 2000 களில் சபரிமலைப்பயணங்களின் போது, வழிநடையில் நாராயணனின் ராக ஆலாபனைகளைத் தொடர்ந்த இசைப்பாடல்களாகவோ, என்னில் உதித்த பாடல்களின் இசைவடிவங்களாகவோ உருவெடுத்த பாடல்கள் இவை.

    பலவருடங்களுக்கு முன் ஒரு மதியப்பொழுதில் என் இல்லத்தில் ஒரு MONO டேப் ரெகார்டரில் சுருதிப்பெட்டியுடன் நாராயணனின் குரலில் பதிவு செய்யப்பட்ட பாடல்களை வலைத்தளத்தில் ஏற்றி, அந்த இணைப்பைக் கீழே தருகிறேன்.

    http://archive.org/details/Su.raviIyyappanKeerththanaikal

    3 Track களில் உள்ள இந்தப் பாடல்களைப் பற்றிய சிறு குறிப்புகள் வருமாறு:

    ( பத்துப் பாடல்கள் உள்ளதால், பாடல்களின் முழுவரிவடிவங்களுக்குப் பதில்

    இவை உருவான பின்னணிகளிப் பற்றிய குறிப்புகளை மட்டும் தருகிறேன்)

     

    1. என்மனம் ஆனந்தக் கூத்தாடுதே- கமாஸ் ராகம்:

    பெரிய குருஸ்வாமி திருச்சியில் இருந்ததால் கட்டுநிறை திருச்சியில்.

    ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸில் திருச்சிக்குச் செல்லும் போது கமாஸ் ராகத்தில்

    நாராயணன் ஆரம்பித்த பல்லவி விழுப்புரம் வருவதற்குள் நிறைவு செய்யப்பட்டு இசைவடிவமும் பெற்றது.

    சரணத்தில் வரும் சூசித ராகமுத்திரைக்கு ( சுகமா சுகமா என) inspiration கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானாமோகனாம்பாள் நாவலில் வரும் ‘கமாஸ்’ கிட்டாவையர் சொல்லும் dialog.

     

    2. மழைச்சாரல் வரவேற்குது- அம்ருதவர்ஷிணி ராகம்

    சபரி மலையிலிருந்து திரும்பும் வழியில் வேனில் அச்சங்கோவில் செல்கிறோம்.இயற்கைஎழில்கொஞ்சும்

    வனப்பகுயதியில், அச்சங்கோவில் மலை மீது வேன் செல்லும்போது பூந்தூரலாக மழை பன்னீர் தெளிக்கின்றது.

    பஞ்சுப் பொதிகளாக மேகங்கள் தவழ்கின்றன. நாராயணனின் உற்சாகக் குரலில் அம்ருதவர்ஷிணி ராகம் பீறிட்டுவர

    பாடல் பிறந்து சன்னிதானம் சேர்வதற்குள் நிறைவடைகிறது, வன் புலியேறும் ராவுத்தனுக்குக்.காணிக்கையாக!

     

    3.’உனைக் காணும் வரை கண்கள் மூடாது- ஷண்முகப்ரியா ராகம்

    மற்றுமோர் ஜனவரி மாதம் சபரிமலைப் பயணம். சென்னையிலிருந்து வேன் ஒன்றில் நாங்கள் 12 ஐயப்பன்மார் திருச்சிக்குப் போய்க்கொண்டிருந்தோம். நள்ளிரவு. பாடல்கள் ஓய்ந்து அவரவர் கண்ணயரும் தருணம்.ஓட்டுனருக்கு அருகில் உறங்காமல் மௌனமாக நான்.

    பின்ஸீட்டிலிருந்து ஓர் ஐயப்பன் ” என்ன, சு.ர. தூங்கிட்டியா” என்று குரலெழுப்ப, அவருக்கு விடையாக ஷண்முகப்ரியாவில் எழுந்த பதில்.

    சரணத்தில் ‘நினைப் பாட’ என்ற வரிகளை ஒவ்வொரு சரண முடிவிலும் நிரவல் செய்து பாடுமாறு அமையப்பெற்றபாடல்.

     

    4. சரீர வீணை தன்னிலும் சங்கீதம் கேட்குது-அமீர்கல்யாணி ராகம்

    1987/88 வருடம் என்று நினைவு. எண்ணூர்ஃபவுண்டரி நிறுவனத்தில் பணி. ஒருநாள்காலை 8:00 மணிக்கு நணபன் க.ரவி தொலைபேசியில் அழைத்தான்.

    ” சு.ர, ‘அமரத்வனி- 2’ கேஸட்- ஐயப்பன் மீது- இன்று ஒலிப்பதிவு- நணபன் K.S ராஜகோபால் பாட, என் இசையில் சங்கீதா நிறுவனம் தயாரிக்கிறது. 9: 30 க்கு மறுபடி அழைக்கிறேன்.நீ ஒரு பாடல் தயார் செய்து தா”

    அமீர் கல்யாணியில் அப்போது உருவான பாடல்.

    பாடலை முழுவதும் ஃபோனில் கேட்ட க.ரவி, பாடலின் இறுதியில் அமைந்த சந்தப் பகுதியைப் பாடுவது கடினமாக இருக்கும் எனக்கருதி வேறு பாடலைக் கேட்க, தர்பாரி கானடாவில் ” பூதமைந்தும்” என்ற பாடலை அளித்தேன்.

    கேஸட்டில் இடம் பெறாவிடினும், நாராயணனின் குரலில் எங்கள் ஐயப்பன் பஜனைகளில் இப்பாடல் இடம் பெறும்.

     

    5.வானவர் போற்றிட- பூர்விகல்யாணி ராகம்

    கர்நாடக சங்கீதம்(வீணை) பயில்கையில், கீர்த்தனைகள் கற்றுக்கொள்ள ஆரம்பித்த காலகட்டம். நாராயணனை ராக அலாபனை செய்யச்

    சொல்லி நான் பயணத்தின் போது உருவாக்கிய முதல் கீர்த்தனை. இப்பாடலிலும், இதனை அடுத்து உருவாக்கிய தோடி ராகக்

    கீர்த்தனையிலும் பல்லவி, அநுபல்லவி, மத்யமகாலம், சரணங்கள், மத்யம காலம் என்ற ஃபார்மேட்டில், ‘குருதாஸ’ எனற

    முத்திரையும், ராகமுத்திரையும் அமைந்துள்ளன.

     

    6. உனையொருகணம் நினைவதும்- மலயமாருதம் ராகம்

    தரிசனம் முடித்து, மலையிலிருந்து திரும்புகிறோம். நண்பன் க.ரவி ” பாடல் தொட்டுத்திறக்குமா நுழைவாயிற் கதவங்கள்”

    என்ற கவிதையை ஆசுகவியாகப் பொழிந்தான். சுகமாக வீசிய மலயமாருதமும், கவிதையும், ஐயனின் தரிசன அனுபவமும் உள்ளுருக்க, மலயமாருதத்தில் உருவான பாடல். 99% குறில்களால் அமைந்த பாடல்.

     

    7. அஹங்காரத்திரை அறுபடுமோ- சுப பந்துவராளி ராகம்

    மஹனீயர் தியாகைய்யரின் ‘தெரதீயகராதா’ கீர்த்தனை கொடுத்த உந்துதல் இந்த சுபபந்துவராளி.

    சரணத்தில் வரும் கருத்துக்கு Inspiration கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் வரிகள்

    ” அங்கவ் வயனும் இருக்க ஒட்டான்”-

    அங்கே பிரமனும் இருக்க விடமாட்டான் – இங்கே யமனும் தங்க விடமாட்டான்” என்கிற யதார்த்த உண்மை.

    நாராயணன் ஒரு சுபபந்துவராளி ஸ்பெஷலிஸ்ட்- செம்மங்குடி மாமாவின் ‘ஸ்ரீ சத்ய நாராயணம்:” வழி…

     

    8. நெஞ்செலாம் நின் ராஜ்யம்- ரஞ்சனி ராகம்

    பாடலின் இறுதியில் வரும் சிட்டை ஸ்வரம் நாராயணனின் கற்பனை. ‘ரஞசனி’, நாராயணனுக்கு மிகவும்

    நெருக்கமான ராகம். இதில் திருமதி.ரஞ்சனிநாராயணனுக்கு விருப்பம்தான்!

     

    9. தவத்தில் நிலைத்த தயைவடிவம்- சிந்துபைரவி ராகம்

    அந்த வருடப் பயணத்தில் எங்களுடன் என் லேலண்லட் தோழன் கிருஷ்ணன் சேர்ந்து கொண்டான்.

    (T.K.S. சகோதரர்களில் இரண்டாவது சகோதரர் திரு. டி.கே. முத்துஸ்வாமி அவர்களின் இரண்டாவதுமகன் கிருஷ்ணன். அற்புதமான குரல்வளம் – இவனுக்காக, அந்த கால ஹிந்தி, தமிழ்ப்படப் பாடல்களின் மெட்டில் இயற்றிக்கொடுத்த ஸ்வாமி பாடல்கள் பல. எங்களுடன் ஒருமுறையே மலைக்கு வந்த கிருஷ்ணன் இன்று மறைந்துவிட்டான்).

    எருமேலியில், ஒரு கீர்த்தனை எப்படி உருவாகிறது என்ற அவன் கேள்விக்கு விடையாக, நாராயணன் பாட, சிந்துபைரவியில் உருவான கீர்த்தனை.

    ( இதே பயணத்தில் திரும்பும் போது, கிருஷ்ணன் ‘ஹரிவராஸனம்’ HUM செய்ய, அதே மெட்டில் “விரியும் வானெலாம்’ பாடல் பிறந்தது வேறு அனுபவம்)

     

    10. நினைத்ததுமே மெய்சிலிர்க்குதையா- ரீதிகௌள ராகம்

    நாராயணன், க.ரவி ஆகியோருடன் கட்டுநிறைக்காகத் திருச்சிக்கு ராக்ஃபோர்ட்டில் இரவுப் பயணம்.

    எங்களை மிகவும் ஈர்த்த ரீதி கௌள ராகத்தில், நாராயணன் இந்தப் பாடலின் ஆரம்ப வரிகளைப் பாட

    க.ரவியும், சு.ரவியும் மாறி,மாறி ஆளுக்கொரு வரி எனப் பாடி நிறைவு செய்த பாடலிது.

    ( இதன் தொடர்ச்சி ஒரிஜினல் கேஸட்டின் மறுபகுதிக்குப் போய் விட்டதால், நான் பிற்பாடு Up-Load செய்ய இருக்கும்

    இழையில் கேட்கலாம்)

    Share
  • பெற்றோர்

     

    பி.தமிழ் முகில் நீலமேகம்

     

    தட்டுத் தடுமாறி மெல்ல
    எட்டு எடுத்து வைக்கையிலே
    பட்டுக் கரம் தா என்
    கட்டித் தங்கமே என்றேந்தி
    எட்டி வைக்கும் அடிகளுக்கெல்லாம்
    தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டி
    எட்டுத் திக்கு சென்றாலும்
    கட்டி ஆள்வாய் உலகையே
    நாட்டிடுவாய் வெற்றிக் கொடியையே !!!
    என்று
    உற்சாகமூட்டும் அன்னை தந்தை
    உற்ற துணையாய் இருக்கையிலே
    உன்னத நம்பிக்கை  மலையென
    உள்ளமதில் எழுந்து நிற்க
    உலகையே கைப்பற்றி விட்டது போன்றொரு
    உயர் எண்ணம் உள்ளமதில் குடியேற
    உள்ளங்கையில் தவழ்ந்தாடும் வெற்றி மாலைகள் !!!

    Share
  • புத்தகங்கள் சூழ்ந்த வீடு

    வாசிப்பின் மோகம் குறையாது மாடத்தி !

    எஸ் வி வேணுகோபாலன்

    கணையாழி இதழில் சுஜாதா எழுபதுகளின் இறுதியில் “வேண்டாம்” என்ற தலைப்பில் பதினாறு சீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் என்று போட்டுக் கவிதை ஒன்றை எழுதி இருந்தார். “காலையிலே எழுந்திருந்தால் செய்தித் தாளில், கற்பழிப்புச் செய்திகளைப் படிக்க வேண்டாம் / காப்பித் தூள் கடன் வாங்கும் மனைவி கண்ணில் காத்திருக்கும் நீர்த் துளியை மதிக்க வேண்டாம்..”என்று போகும் அதை வெளியிட்ட ஆசிரியர், அதற்குப் பதிலாக “வேண்டும்” என்ற தலைப்பில் கவிதைகளை வரவேற்று எழுதி இருந்தார். எல்லோரும் வேண்டும் என்று தானே எழுதுவார்கள் என்று எண்ணிய நான், மறுபடியும் வேண்டாம் என்ற தலைப்பில் எழுதிய கவிதை இப்படித் தொடங்கியது:

    கணையாழி விற்றிருந்தால் வாங்க வேண்டாம்
    கைதவறிக் கிடைத்தாலும் படிக்க வேண்டாம்
    காசிருக்கும் வரை நூலாய் வாங்கிப் போட்டுக்
    கடை கடையாய் கால் விலைக்குத் துறக்க வேண்டாம்..

    ஆனாலும் புத்தகங்களை வாங்கித் தள்ளும் தீராத ஆசையும், வாசிப்பின் தணியாத தாகமும் நின்ற பாடில்லை. புத்தகங்கள் சூழும் வாழ்க்கை எப்படி உருக் கொண்டது என்று துல்லியமாய்ச் சொல்லத் தெரியவில்லை என்றாலும், அதன் நீர்க் கோலம் ஒன்று இப்படி கண் முன் நிற்கிறது…

    எட்டாம் வகுப்பில் நுழைய இருந்த நேரம் எனது தாய் வழி பாட்டனார் – வாலாஜாபாத் இந்து மத பாடசாலையின் புகழ் மிக்க தலைமை ஆசிரியராக விளங்கியவர் – தமது பணி ஓய்வுக்குப் பின் குடியேறியிருந்த காஞ்சிபுரத்திற்கு என்னை அழைத்து அங்கே அவரோடு தங்கிப் படிக்கச் செய்திருந்தார். பள்ளிக்கூடம் திறக்க இருந்த சில நாட்களுக்குள் அவர் மாரடைப்பால் காலமானது எனது வாழ்வின் இரண்டாவது அதிர்ச்சி…இரண்டரை வயதில் தாயைப் பறிகொடுத்த முதல் அதிர்ச்சிக்குச் சிகிச்சையை தமது அன்பால் பொழிந்து இதமளித்த அந்த மாமனிதர் வைத்திருந்த ஆளுயர மர அலமாரியின் பெரிய அறைகள் எதை இழுத்தாலும் அவற்றில் புத்தகங்கள் நிறைந்திருந்தது. சின்னஞ்சிறு கதைகள், சுதந்திர வேள்வியில் தியாகம் புரிந்தோர் கதைகள், வாசித்து வாசித்து அட்டை வெளிர் மஞ்சளாக ஆகியிருந்த நாலாயிர திவ்விய பிரபந்தம், யாரோ காலண்டர் அட்டை போட்டுப் பளபளக்க வைத்திருந்த கம்ப ராமாயணத்தின் முதல் மூன்று காண்டங்கள் அடங்கிய அற்புத புத்தகம்…..

    புத்தக வாசிப்பையும், நூல்களை நோக்கிய ஒரு வெறியையும் என்னை விட நான்கு வயது மூத்தவரான எனது அண்ணன் எஸ் வி ரங்கராஜனிடம் தான் நான் பழக்கிக் கொண்டிருக்கவேண்டும். என்ன வகையான புத்தகம் என்றாலும் கையில் எடுத்துப் புரட்டாமல் இருக்க அவரால் முடியாது. வீட்டிற்குள் ஒரு சேர புத்தகங்களை வைத்திருக்க முடியும் என்பதை காஞ்சிபுரம் தெற்கு மாட வீதி உணர்த்தியது என்றால், ரங்கசாமி குளத்தருகே (இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும்) மாவட்டக் கிளை நூலகம் கொத்துக் கொத்தாகப் புத்தகங்களைப் பார்த்த முதல் இடமாக இருந்தது. வேலூர் மாவட்ட நூலகம், எனது முந்தைய பள்ளிக்கூடத்தின் நேரெதிரே இருக்க விடுமுறைக்குத் தந்தை வீட்டுக்கு வேலூர் செல்லும் ஒவ்வொரு முறையும் எனது அனைத்து விடுமுறை நாட்களையும் நான் அங்கே தான் கழிக்க விரும்பினேன். தண்ணீர் வைத்திருக்கும் டிரம், சங்கிலி பிணைத்திருக்கும் பித்தளை தம்ளரின் பிரத்தியேக வாசத்தோடும் தொண்டைக் குழிக்குள் இறங்கிய நீர் இன்னும் நினைவுக் காப்பகத்தில் இருக்கிறது. ஆனாலும் எனக்கான நூல் சேகரிப்பைத் தொடங்கும் தாகம் என்னைக் கல்லூரி நாட்கள் வரை காத்திருக்க வைத்தது. அதற்கான உண்டியலில் முதலில் விழுந்தவை பள்ளி நாட்களில் தவறாது எனக்குக் கிடைத்து வந்த பரிசு புத்தகங்கள்.

    சென்னை மாநகரில் புகுமுக வகுப்பில் சேர பாட்டியின் அரவணைப்போடு மேற்கு மாம்பலத்தில் தாய்மாமன் வீட்டை வந்தடைந்த போது, எனது கவிதைகள் வெளியாகியிருந்த சிற்றிதழ்களையும், பரிசு நூல்களையும், எப்படியோ சேர்ந்திருந்த சில புத்தகங்களையும் ஒரு நீல நிற பெட்டிக்குள் உடைகளோடு சேர்த்து அடைத்து வைத்திருப்பேன். எனது சொந்த நூலகம் அந்தக் கைப்பெட்டிக்குள் தான் பிறப்பெடுத்தது. கோவையில் முதுநிலை கல்விக்காக மீண்டும் தந்தையோடு சென்று சேர்ந்தபோது டெபுடி கலெக்டர் என்ற அவரது அந்தஸ்து காரணமாகக் கிடைத்திருந்த பெரிய தனி வீட்டின் மாடியில் எனக்கு ஒரு தனியறையும், புத்தகங்களுக்காக சுவரில் அடித்து மாட்டிவைக்கும் ஒரு மர ஷெல்ஃபும் வாய்த்தது. கல்லூரிப் புத்தகங்களுக்கான இடம் தான் என்றாலும், அதில் மெதுமெதுவாகக் குடியேறத் தொடங்கின எனது வாசிப்பு வசந்தங்கள். அப்போதும் சிற்றிதழ்களே அதிகமிருந்தன, அழகியசிங்கர், ஸ்ரீதர்-சாமா ஆகியோர் என்னையும் உள்ளடக்கி நடத்திவந்த மலர்த் தும்பி பத்திரிகையில் வரும் படைப்புகளை எடுத்து எடுத்துப் படித்தபடி தான் வேதியல் பாடத்தின் மேற்கல்வியை மேற்கொண்டிருந்தேன். கோவை வானொலி நடத்திய நிகழ்ச்சிகள், இலக்கிய கூட்டங்கள் இவற்றோடு பாலகுமாரன், மாலன், சுப்ரமணிய ராஜூ எல்லோரும் எழுத்தாளர் சாவியோடு வந்து கலந்து கொண்டிருந்த கூட்டத்தில், சில உணர்ச்சிகர பேச்சுக்களைக் கேட்டபிறகு நூல் வாசிப்பின் வேகம் கூடியது. கணையாழி உள்ளிட்டுச் சில இதழ்களின் தொடர் வாசகன் ஆனேன். பெரிய அளவில் நூல்கள் வந்தடைய எனது சொந்த நிதி நிலைமை அனுமதித்திருக்கவில்லை.

    இடமாற்றலில் எனது தந்தை தருமபுரிக்குச் சென்றுவிடவும், கோவையில் அரிசி மண்டி வைத்திருந்த நண்பர் ஒருவர் முன் என்னை நிறுத்தினார் தந்தை. அவரோ, தாம் அரிசி மூட்டைகள் வைத்திருந்த அறை ஒன்றில் எந்த வாடகையும் இல்லாமல் நான் குடியிருக்கலாம் என்று அனுமதித்தார். அந்த அறைக்குள் எனக்கு முன்பே நான்கு பெருச்சாளிகள் என்னைப் போலவே வாடகை கொடுக்காமல் குடியிருந்தது எனக்குப் பின்னர் தான் தெரியவந்தது. அவற்றிடமிருந்து என்னையும், எனது நூல்களையும் தற்காத்துக் கொள்ள இருபத்து நான்கு மணி நேரமும் டியூப் லைட் எரியவிட்டிருப்பேன் (அந்த அறைக்குள் சன்னல்கள் கிடையாது !). வங்கியில் வேலை கிடைத்து திருத்தணி அருகில் வங்கனூர் என்ற சிற்றூரில் குடியேறியபோது எப்படியோ அந்த நீலப்பெட்டி என்னோடு வந்துவிட்டிருந்தது. தரையிலேயே புத்தகங்களை அடுக்கி வைக்கத் தொடங்கினேன். தருமபுரி பேருந்து நிலையம் அருகில் முதன்முறை பார்க்க நேர்ந்த நியூ செஞ்சுரி புக் அவுஸ் கடைக்குள் வேதியல் பற்றிய 107 கதைகள் என்ற தலைப்பிலான ஆங்கிலப் புத்தகம் தான் முதலில் கண்ணில் பட்டது. அதன் எழுத்து நேர்த்தியும், அசத்தல் சித்திரங்களும் சோவியத் வாசிப்புலகை நோக்கி ஈர்த்தது. முன்னதாக பதினோராம் வகுப்பு விடுமுறையின்போது வேலூரில் அண்டை வீட்டில் அஞ்சல் ஊழியர் சங்கத் தலைவர் சி எஸ் பஞ்சாபகேசன் அவர்களது குடும்பத்தோடு ஏற்பட்ட நெருக்கம், அவரது இளைய மகள் சி பி மல்லிகா பத்மினி என் வசம் வாசிக்கக் கொடுத்த மக்சீம் கார்க்கியின் தாய் நாவலின் நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டேன். வங்கனூரில் உள்ளூர் மாணவரகள் பலர் மாலை நேரங்களை என்னோடு கழிக்க அவர்களது பாடப் புத்தகங்களோடு வந்து விடுவார்கள். கணிதம், ஆங்கிலம், தமிழ், அறிவியல் என பல்வேறு பாடங்களில் அவர்களது ஐயங்களைத் தீர்க்க உதவியபடி, அவர்களுக்கு வாசிப்புப் பழக்கம் ஊட்ட எனது நூலகம் இப்போது கொஞ்சம் விரிவடைத் தொடங்கியிருந்தது. ஆனாலும் அது தரைமீதே கொலுவிருந்தது.

    இடமாற்றல் கேட்டுச் சென்னைக்குக் குடிபெயர்ந்த போது, மீண்டும் தந்தையின் நிழலில் வந்து இளைப்பாறிய பொழுதில், வாடகை வீட்டில் எனது நூல்களை மீண்டும் நீலப் பெட்டிக்குள் அடைத்து வைத்திருந்தும் இடம் காணாது சுவர் அலமாரியில் திணித்து நிரப்பியிருந்தேன். தங்கை ஆண்டாள் (இன்றும்) வீட்டின் சிறந்த வாசகி. விரைந்து சொந்தமாக வாங்கிய எளிமையான சிறுவீட்டில் புத்தகங்கள் கம்பீரமாக வரிசையாக எனது பார்வைக்கு எப்பொழுதும் அடையாளம் காட்டியபடி அடுக்கப் பட்டிருந்தன. அந்த வரிசை, நியூ செஞ்சுரி தயவில் மிக மிக மலிவான விலையில் நீண்டு கொண்டு சென்றது. சோவியத் நூல்களோடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் போருக்கு விடை கொடுப்போம் போன்ற அழகு நூல்களும், வேறு தமிழ் பதிப்பக நூல்களும், அதிகமாகக் கவிதை நூல்களும் என்னிடம் சேரத் தொடங்கிய நேரத்தில் திருமணம் நிகழவும், அதற்கு முந்தைய சந்திப்புகளில் எனக்கும் எனது வாழ்க்கை இணை தோழர் ராஜேஸ்வரி இருவருக்கும் இடையேயான உரையாடலில் பரஸ்பரம் படித்திருந்த புத்தகங்கள், வீட்டில் வைத்திருக்கும் நூல்கள் முக்கிய இடம் பெற்றிருந்தது. நீரோடு நீர் போல நாம் சேருவோம் என்று எங்கள் புத்தகங்கள் கலந்த வீட்டில் நாங்களும் அன்போடு குடியேறினோம். எங்கள் குடும்பத்தின் இன்னொரு பேசும் உறுப்பினராக நூல்கள் வளர்ந்தன.

    எனது மாமனார் குடும்பம் பம்மல் பகுதியில் வாங்கியிருந்த காலி மனையில் கட்டிய வீட்டில் மாடியில் தனியறையும், நூல்களுக்கான சிறப்பு சுவர் அலமாரியும் ஏற்பாடு ஆனது. அந்தப் பெரிய நூலகத்தில், எனது சேகரிப்போடு, மைத்துனி கங்காபாய், அவரது கணவர் தோழர் நடராஜன், மைத்துனர் கவிஞர் மா குருமூர்த்தி ஆகியோர் வாங்கியிருந்த புத்தகங்களும், (மாமனார் மாத்ருபூதம் அவர்கள் பள்ளிக் காலத்தில் பெற்றிருந்த அருமையான பரிசுப் புத்தகங்களும், அகராதிகளும்) இரண்டறக் கலந்துவிட்டிருந்தன. எல்லாம் இடதுசாரி இயக்க சிந்தனைப் பரப்பில் வளர்ந்தவர்கள். ஆதலால் சில புத்தகங்கள் இரண்டு, மூன்று கூட தட்டுப்படும். வாசிப்பு தளம் விரிவடைந்து வரும் அதே வேகத்தில், எப்போது எல்லாம் வாசிப்போம் என்ற பெருமூச்சும் எழுந்த காலங்கள் அவை. சுவர்ப் பல்லிகளின் சீழ்க்கை ஒலி கூட இது பற்றிய பழிப்பு தானோ என்று நான் எண்ணுவதுண்டு. இத்தனைக்கும், ஜோல்னாப் பை புத்தகங்களோடு தான் வீட்டை விட்டு வெளியேறும், கூடுதல் கனத்தோடுதான் இரவு மீளும் என்றானது. ஒரு கட்டத்தில், குழந்தைகளுக்காக என்று நூலகம் அடுத்த கட்டம் சென்றது. என் பி டி, சி பி டி புத்தகங்களின் வசீகர மயக்கத்தில் ஆங்கிலமும், தமிழுமாய் சொல்லச் சொல்லத் திகட்டாத கதைப் புத்தகங்கள் ஜாம் ஜாம் என்று உடன் பயணம் செய்யத் தொடங்கின.

    அதற்கு முன்னும், பின்னும் சென்னை மாநகரில் ஆறே முறை தான் வீடு மாற்றினோம். (அதில் ஒற்றை அறை மட்டுமே இருந்த ஒரு சிறு வீட்டில் பரணில் ஏற்றிவிட்ட புத்தக மூட்டையைப் பார்த்து அரற்றியே எட்டு மாதங்கள் கடந்து போனது…). வீடு மாற்றும் நேரத்தில், அடேங்கப்பா, புத்தக மூட்டைகளைத் தொடுகிற வரை எல்லாம் மங்களகரமாகப் போய்க் கொண்டிருக்கும். அந்த இடத்தில் கை வைக்கிற போது சுற்றி நின்று ஒவ்வொருவராகப் பேச ஆரம்பிப்பார்கள். புது இடத்தில் இத்தனை இடம் கிடையாது…எதற்கு மூட்டை மூட்டையாய்க் குப்பைகளை எடுத்துக் கொண்டு. இப்போதே உட்கார்ந்து கழித்துக் கட்டுங்கள்..என்று. அதிலும் குறும்பு நிறைந்த கண்களோடு மைத்துனர் குருமூர்த்தி சொல்லிக் கொண்டே போவதை மறக்க முடியாது. ‘ஐந்தாவது மாநாட்டு அறிக்கை, அதைத் தூக்கிப் போடுங்க, அப்புறம் ஆறாவது மாநாட்டிலும் அதே அறிக்கையைத் தான் எழுதி வைப்பீங்க, இதென்ன புத்தகம், பெரிஸ்த்ரோய்க்கா? கொர்பச்சேவே எல்லாத்தையும் வித்துட்டு அமெரிக்கா போய்ட்டாரு, கழுதையத் தூக்கி வீசுங்க, புதிய கல்விக் கொள்கையா, அது பழையதாய்ப் போய் வருஷமாச்சு, எதுக்கு இத்தனை ஃபிரண்ட்லைன் ? அவங்க ஆபீஸ்ல இருந்து வந்து கேப்பாங்கன்னா?…’ அப்படியே அள்ளி எடுத்துக் காப்பாற்றி ஒவ்வொன்றையும் அடுத்த வீட்டுக்குக் கொண்டு சேர்ப்பது பெரும் பாடு.

    மாம்பலத்தில் இருந்து தற்போது இருக்கும் கோடம்பாக்கம் சொந்த இல்லத்திற்கு வந்த போது, வேறு எந்த அறைக்கும் கொடுத்த கவனத்தைப் போல் பல மடங்கு அக்கறையோடு எனக்காகப் புத்தக அலமாரியை வடிவமைத்திருந்தார் தோழர் ராஜி. அது நிறைந்தாலும், அட்டைப் பெட்டிகளில் வந்திறங்கிய புத்தகங்கள் குறைந்தது மாதிரி தோன்றவில்லை. பெண் விடுதலை, சிறுகதைத் தொகுதிகள், அதிகாலையின் அமைதியில், முதல் ஆசிரியர், வீரம் விளைந்தது, உண்மை மனிதனின் கதை, தாய், மாதவராஜ், தமிழ்செல்வன் கதைகள், பிரளயனின் சந்தேகி, என் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுத்தில் பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, கப்பற்படை எழுச்சி, நினைவுகள் அழிவதில்லை,……….என பெருகிய நூல் நதியை அணை கட்டி யார் தடுப்பது. துணிக்காக ஒதுக்கப் பட்டிருந்த இடத்திலும் தஞ்சம் புகுந்தன நூல்கள். ஆனாலும் ஜோல்னாப் பை கனத்தே தான் வீடு மீண்டு கொண்டிருந்தது.

    திடீரென்று சுவர் அலமாரியைத் திறந்தால், நான்கு ஐந்து ஜோல்னாப்பைகள் அப்படியே இடத்தை அடைத்துக் கொண்டிருக்க, புத்தகங்களும் வகை தொகையில்லாமல் துணி வரிசையிலும் ஒண்டிக் கொண்டிருக்கும். ஏம்ப்பா, இன்னிக்கு ஒரு நாள் சீக்கிரம் வந்து இந்த அலமாரியை ஒழித்துச் சுத்தமா அடுக்கி வச்சிருங்க என்று குரல் வரும். ஒரு பத்து மணிக்கு சாவகாசமாக அந்த அறைக்குள் நுழைந்து புத்தகக் கட்டுக்களை இழுத்துக் கீழே வீழ்த்தினால், பை பையாய்ப் புத்தகங்கள், கவர் கவராய்ப் புத்தகங்கள் சரிந்து விழுந்து இடத்தை நிரப்ப, ஜவுளிக் கடையில் இறைத்துப் போட்ட துணிகளை மடிக்க உட்காருபவனாக அமர்வேன். அடுக்க வேண்டியது, ஒழிக்க வேண்டியது…எல்லாம் ஐந்து நிமிடத்தில் அகன்று விட, எடுத்த புத்தகத்தில் பிடித்த பக்கத்தை எடுத்து அந்த வரிகள் அங்கே தான் இருக்கின்றனவா, இடம் பெயர்ந்துவிட்டதா என்று படிக்க ஆரம்பித்தால் அதற்கு முடிவேது…தோழர் ராஜி அறைக்குள் எட்டிப் பார்த்து, என்னப்பா முடிக்கலையா மணி ரெண்டு (நள்ளிரவைக் கடந்து..) என்பார்…தோ..இன்னும் கொஞ்சம் தான் என்று அவரது தலை மறைந்ததும் வாசிப்பு தொடரும் மறுபடியும். அப்படியே நூல்களை வாரி எடுத்து நாற்காலிகள் மீதும், பெரிய ஜூட் பையிலும், துணிக்கடை பிளாஸ்டிக் உறைகளிலும் நிரப்பி சுவர் ஓரமாக நிறுத்திவிட்டு, அடுத்த நாள் முடித்துவிடலாம் என்ற பொய்யான வாக்குறுதியை அளித்துவிட்டு அன்றாட ஓட்டம்.

    ஆனாலும், தவறாது புத்தகக் கண்காட்சியில் ஆஜர். ஒரு நண்பரிடம் கேட்டேன், நீ தான் போன ஆண்டு சந்தித்தபோது இனிமேல் நூலே வாங்க மாட்டேன், வாங்கியதையே படிக்க முடியவில்லை என்று சொன்னாயே, எங்கே இங்கே என்றேன். குடியை நிறுத்திவிட்டேன் என்று சொல்லும் ஒருவன் கடைக்கு அடுத்த நாள் போய் நின்றபோது, போதை மறந்து விடக் கூடாது என்று வந்ததாகச் சொல்வது மாதிரி தான் என்றார்.

    தேர்வு செய்யப்பட்டிருக்கும் தனது விருப்ப நூல்களை ஆர்வத்தோடு படிக்கும் மகள் இந்து (இரா.நடராசனின் ரோஸ் புத்தகத்தை எவ்வளவு விலை கொடுத்தாலும் தர மாட்டாள் ), அன்றன்று வாங்கிய புதிய புத்தகங்களை அன்றே ஒயிலாய் சாய்ந்து உட்கார்ந்து ஆசை தீர வாசிக்கும் மகன் நந்தா, இரண்டு கைகளாலும் புத்தகத்தை ஏந்திப் பிடித்துக் கொள்ள இயலாத படிக்கு இடது கை, தோள்பட்டை செயலற்ற நிலையிலும் நூல்களை வாசித்துத் தள்ளிக் கொண்டிருக்கும் மாமியார் கோமதி அம்மாள் (பிரசுரமாகும் எனது எழுத்து அனைத்தின் முதல் வாசகர் அவர்), படிக்க நேரமற்றுப் போக வைக்கும் அன்றாட நச்சரவை சபித்தபடி ரயில் பயணத்திற்குப் புத்தகத்தைத் தேக்கிக் கொள்ளும் மனைவி ராஜி எல்லோரும் வாசிப்புச் சூழலை வளப்படுத்திக் கொண்டிருப்பவர்கள்.

    நூல்களை அடுக்கி வைக்கவோ, எதையாவது எடுக்க எண்ணி கை வேறொன்றின் மேல் படவோ நேரும்போது விரிவது புத்தகங்கள் மட்டுமா, அது எப்போது வாங்கியது என்ற நினைவின் பின்னோட்டம், அதை வாசிக்கத் தொடங்கிய அந்தப் பொழுது, அதில் இன்னும் பத்திரமாக இருக்கும் பிடித்த வரிகள் எல்லாமும் ஒரு மறு ஒளிபரப்பாக மனத்தில் ஓடுவதை யார் தான் தடுக்க முடியும்..உங்களுக்கு அறிமுகமான இலக்கிய வீதி தான் என்றாலும் சில வீடுகளில் அதிகம் உரிமையோடு அடிக்கடி நுழைவீர்கள், சிலவற்றைக் கடக்கும் போது வெளியில் இருந்தபடி குரல் கொடுத்துப் பார்த்துவிட்டு நகர்வீர்கள், வேறு சிலவற்றை அடுத்த முறை வரும்போது உள்ளே எட்டிப் பார்க்கலாம் என்று வேகமாகக் கடந்து போவீர்கள் தானே, புத்தக வீதியும் அப்படியே தான் இருக்கிறது. படித்தவை, மீண்டும் படித்தவை, தொடாது வைத்திருப்பவை, முன்னே இருந்த நிலையில் இருந்து மக்கிய பக்கங்களோடு நைந்து போயிருப்பவை…என்று!

    ஆனாலும் வாசிப்பின் மோகம் குறையாது பெருகுவதே வாழ்க்கையை இனிமையாக்கிக் கொண்டிருக்கிறது. தீக்கதிர் இலக்கியச் சோலையில் வெளியான எனது இந்த சுய விமர்சனக் கவிதை அதைத் தான் பேசுகிறது:
    நூல்களோடு…….

    வாங்க விடுபட்ட புத்தகங்களிடம்
    இன்னும் கால அவகாசம் கேட்கிறேன்

    உறங்கவிடாது அலைக்கழித்தவற்றோடு
    தொடரும் உறவுகளையும்
    உறக்கத்தை ஊட்டியவற்றிடம்
    கருணையையும் கேட்கிறேன்

    காலத்தின் இரக்கம் மறுக்கப்பட்டு
    நைந்துபோன நூல்களிடம்
    மன்னிப்பு கோரி மன்றாடுகிறேன் –
    கவனமற்றுக் கையாளப்பட்டவற்றிடமும்!

    பல்வரிசையில் காணாமல் போன பல் போல்
    உருவப்பட்டுக்
    களவாடப்பட்ட நூல்களிடம்
    யாசிக்கிறேன் அவற்றின் மீட்சியை

    பைகளைக் கிழித்துக் கொண்டு நிறைந்தும்
    மேசை முழுக்க இறைந்தும்
    வானொலிப் பெட்டிக்கும்
    தொலைக்காட்சிப் பெட்டிக்கும்
    காதுகள் முளைத்ததாய்
    அவற்றருகே அடைந்து கொண்டும்

    இன்னும்
    தொலைபேசி உட்கார்ந்திருக்கும்
    சுவர்ப் பலகையில் குடியேறியும்

    பெரிய வாசக தோரணையைக்
    கொடுத்துக் கொண்டு
    கண்ணாடிக் கதவறைக்குள்ளிருந்தவாறு
    (தண்ணீர் குடிக்க
    எழும்
    ஒவ்வொரு நள்ளிரவிலும் )
    என்னை நியாயம் கேட்டுக் கொண்டும்

    கிடக்கும் எண்ணற்ற நூல்களிடம்
    முன்வைக்கிறேன்
    வாசிப்பிற்கான
    நிரந்தர கால நீட்டிப்புக்
    கோரிக்கை விண்ணப்பத்தை –

    வெட்கத்தோடும்
    விடமுடியாத தாகத்தோடும்………..

    ***********

    நன்றி ; புத்தகம் பேசுது இதழ்

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    சென்னை தாம்பரம்-பீச் இடையேயான லோகல் ரயிலில் பிஸியான நேரத்தில் பிரயாணிப்பவர்கள் அதுவும் நின்று கொண்டே பிரயாணம் செய்பவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள்தான். ஆனால் இந்த சிரமத்தைப் போக்கும் மருந்தாக அவ்வப்போது சில பாடல்கள் கேட்கும். கண்ணிழந்தவர் ஓரிருவர் பக்தி பாடலோ அல்லது ஜனங்களுக்கு மத்தியில் புகழ்பெற்ற சோகப்பாடல்களில் ஒன்றையோ பாடிக் கொண்டே பிச்சை எடுப்பார்கள். பிரயாணிகள் அவர்களுக்கு உதவுகிறார்களோ இல்லையோ அவர்கள் பாடல்களை இவர்கள் உதடுகளும் நிச்சயம் முணுமுணுக்கத்தான் செய்யும். பிரயாணப் பொழுது எத்தனை சிரமமாக இருந்தாலும் மனம் திசை திருப்பப்பட்ட நிலையில் சிரமத்தை பொருட்ப்படுத்தமாட்டார்கள். இப்படி ஆரம்பகால மாணவப்பருவத்தில் இப்படி ரயிலில் நான் கேட்ட ஒரு பாடல் ‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்.. எனும் செவிக்கினிய, மனதுக்கினிய செந்தமிழ்ப் பாடல்.

    நான் வெகு நாட்கள் வரை இது ஏதோ திரைப்படப்பாடல் என்றுதான் நினைத்திருந்தேன். பின்னொருநாள் நண்பன் கொடுத்த டி.எம்.எஸ் பாடிய.முருகர் பாடல் தனிப்பாடல்கள் மூலம்தான் உண்மையை அறிந்துகொண்டேன். என் மனதைக் கொள்ளை கொண்ட அந்தப் பாடல் எத்தனையோ பேருக்கு ஆழ்ந்த ஆறுதலையும் பக்தியையும் கொடுத்திருக்கத்தான் வேண்டும் என நான் எனக்குள்ளேயோ சொல்லிக் கொள்வதுண்டு.. டி.எம்.எஸ் இன் முருகர் பாடல்கள் இன்றளவும் இயற்கையான, எளிமையான பக்தி பாடல்களாகவே இருப்பது மட்டுமல்லாது பாமரர் மத்தியிலும் புகழடைவதென்பது அவருக்கு முருகர் கொடுத்த வரம் போலும். உள்ளம் உருக வைக்கும் முருகைய்யாவின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பரபரப்பாக விற்பனையானது ஆச்சரியமல்ல வென்றும், அதன் காரணம் டி.எம்.எஸ் எனும் மக்கள் கலைஞனின் குரல் வண்ணத்தால் என்பதை அறுதியிட்டுச் சொல்லலாம்.

    இதோ இந்த வாரம் டி.எம்.எஸ் பற்றி அஞ்சலிக் கட்டுரையை சமூக ஆர்வலர் திரு வேணுகோபாலன் உணர்ச்சிகரமாக எழுதி இருக்கிறார்

    டி எம் எஸ் என்பது ஒரு குரல் மட்டுமல்ல. நான்கு பத்தாண்டுகளை, சில நூறு திரைப்படங்களை, அடுத்தடுத்த தலைமுறைகளை அப்படியே கட்டி ஆண்ட இசை சிம்மம். எப்படித் தான் அவர் நடிகர்களுக்கு ஏற்பத் தமது குரலில் மாற்றங்களைக் கொண்டு வர முடிந்தது என்பது பலரும் வியந்து நோக்கிய விஷயம். நடிகர்களின் காலப் போக்கிற்கு ஏற்ற நெளிவு சுளிவுகளையும் கூட அவர் தமது குரலில் ஏற்றிக் கொண்டார். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற (மலைக்கள்ளன்) பாடலின் தொனி வேறு. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் (எங்க வீட்டுப் பிள்ளை) பாடலின் தொனி முற்றிலும் வேறு. தாழையாம் பூ முடிச்சு (பாகப் பிரிவினை) பாடிய காலம் வேறு, சுமை தாங்கி சாய்ந்தால் (தங்கப் பதக்கம்) காலம் வேறு.

    பாடலைப் பாடுவது மட்டிலும் அல்ல பாட்டுக்கான பாவத்தைப் பிடிப்பது மட்டிலும் கூட அல்ல, வாயசைக்கும் நடிகரின் திறன், அவரது உடல் மொழி, அந்தக் கதா பாத்திரத்தின் சமூக அடையாளம்….இவை எல்லாவற்றையும் தனது குரல் ஒரு ஒட்டுமொத்தக் குறியீடாக உணர்த்தி விட வேண்டும் என்று ஒரு பயிற்சி மேற்கொண்டார் போலும். இதனால் தான் அவர் – ஆத்திரம், அன்பு, கோபம், காதல், வீரம் சோகம், என எந்த உணர்ச்சியைக் காட்டும் பாடலையும் எடுத்துப் பாடும் திறமையைப் பெற்றிருந்தது.

    கம்பீரம் பொங்கும் பாடல்களை மிக அனாயாசமாகப் பாட முடிந்த அவருக்கு, மெலிதான குரலில் அரவணைப்பாக இசைக்கவும் தெரிந்திருந்தது. கர்ணன் படத்திற்காக அவர் பாடிய (ஆனால் படத்தில் இடம் பெறாத) மகாராஜன் உலகை ஆளலாம் என்பதில் ஒலிக்கும் அவரது குரலுக்கும், சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி (சபாஷ் மீனா) என்பதன் குழைவுக்கும் எத்தனை வேறுபாடு ! சோதனை மேல் சோதனை போதுமடா சாமி (தங்கப் பதக்கம்) என்ற தன்னிரக்கம் மிகுந்த ஒரு பாடலுக்கும், அச்சம் என்பது மடமையடா (மன்னாதி மன்னன்) போன்ற நெஞ்சு நிமிர்த்தும் ஒரு பாடலுக்கும் எத்தனை மாறுபாடு.

    துயரம் பொங்க ஒலிக்க வேண்டிய பாடல்களை அவர் வெளுத்துக் கட்டினார். நினைந்து நினைந்து நெஞ்சம் (சதாரம்), நான் உன்னை அழைக்கவில்லை, ஒரே பாடல் உன்னை அழைக்கும் (எங்கிருந்தோ வந்தாள்), தேவனே என்னைப் பாருங்கள் (ஞான ஒளி), ஆட்டுவித்தால் யார் ஒருவர் (அவன் தான் மனிதன்), அம்மம்மா தம்பி என்று நம்பி (ராஜபார்ட் ரங்கதுரை) என்று பெரிய பட்டியல் உண்டு. ஓர் இசைக் கருவி இழைத்துத் தரும் சோகத்தை அவரது குரலினுள் குரலாக ஒரு ரசவாதம் செய்து அந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு அவரால் வழங்க முடிந்தது.

    கர்நாடக சங்கீத ஞானம் இருந்ததால், ராகங்கள் கொஞ்சும் இசைப் பாடல்களை அவர் தூக்கலான குரலில் இசைக்க முடிந்தது. வசந்த முல்லை போலே (சாரங்கதாரா), ஏரிக்கரையின் மேலே (முதலாளி), முல்லை மலர் மேலே (உத்தம புத்திரன்), சின்னஞ்சிறிய வண்ணப் பறவை (குங்குமம்), மாதவிப் பொன் மயிலாள் (இரு மலர்கள்) என கிறங்க வைக்கும் குரலில் அவர் கலக்கிய பாடல்களில், கே வி மகாதேவன் அவர்களின் இசை நுட்பத்தில் விளைந்த ‘பாட்டும் நானே பாவமும் நானே’ (திருவிளையாடல்) பாடல் ஓர் அற்புதக் கொடை ! கர்நாடக சங்கீதத்தில் பாடத் தொடங்குமுன் சுருதி சேர்த்துக் கொள்ள, ஸ ப ஸ பிடிப்பது என்று முக்கிய தொடக்கம் ஒன்று உண்டு. அதை, ஒரு இசையறிவு அற்ற பாமரன் எத்தனை கொனஷ்டை வேலைகளைச் செய்து பாடுவானோ (விறகுவெட்டி பாத்திரம்) அப்படி பாடியவாறே ஸ ப ஸ சுருதியில் அதை அமைத்துத்தான் அந்தப் பாடலை டி எம் எஸ் தொடங்குவார். சிரிப்பில் உண்டாகும் ராகங்களே என்ற எம் எஸ் விசுவநாதனின் (எங்கிருந்தோ வந்தாள்) அரிய பாடலில் பி சுசீலாவும் டி எம் எஸ்சும் சங்கீத சிரிப்பு சிரிப்பது வித்தியாசமான அனுபவம்.

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற ஒப்பற்ற கவிஞர் மிகக் குறுகிய காலமே திரையுலகில் பங்களிப்பு செய்ததில், அவரது பொருளடர்த்தி மிகுந்த பாடல்களின் உயிர்த் துடிப்பாக ஒலித்தது டி எம் எஸ் குரல். தூங்காதே தம்பி தூங்காதே, திருடாதே, சின்னப் பயலே சின்னப் பயலே ஆகியவை காலத்தால் அழியாதவை. அதைப் போலவே, தியேட்டரில் ஒரு காலத்தில் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்த சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா (நீல மலைத் திருடன்), எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் (மலைக்கள்ளன்) போன்றவை ஒரு ரகம் என்றால், எழுபதுகளில் கொடி கட்டிய அடி என்னடி ராக்கம்மா (பட்டிக்காடா பட்டணமா), அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு (ராமன் எத்தனை ராமனடி) வரிசையில் சிலவற்றை இரண்டு எதிரெதிர் உணர்வுகளின் விளிம்பில் பாடியவை இன்னொரு விதம்.

    சிவாஜி, எம் ஜி ஆர் இருவருக்காக மட்டுமல்ல- ஜெய்சங்கருக்காகவும் அவர் நிறைய பாடினார். நாகேஷ், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவகுமார்…. என பல நடிகர்களுக்கும் ஒலித்த அவரது குரல், தனக்குப் பல பாடல்களை எழுதிய கண்ணதாசனுக்காகவும் கூட (ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, பரமசிவன் கழுத்தில் இருந்து.) ஒலித்தது.

    கிராமப்புறக் கதைகளுக்கான தெம்மாங்கு பாடல்களும், துள்ளாட்டப் பாடல்களும் அவருக்கு நிறையவே வாய்த்திருந்தன. மணப்பாறை மாடு கட்டி (மக்களைப் பெற்ற மகராசி) பாடல் எல்லாக் காலத்திற்குமான ஒன்று. மேற்கத்திய பாணியில் சாந்தி திரைப்படத்தில் அவர் பாடிய ‘யாரந்த நிலவு…’ அவரது இன்னொரு பரிமாணத்தை எடுத்துச் சொன்னது. எந்தக் குரலோடும் இணைந்து, தனது தனித்துவத்தைப் பதிக்கும் திறம் அவரது தனித்தன்மையாக இருந்தது. ‘இது மாலை நேரத்து மயக்கம் ‘ (தரிசனம்) போன்ற எல் ஆர் ஈஸ்வரியின் கிறக்கம் மிகுந்த பாடல்களானாலும், காதலின் பொன் வீதியில் (பூக்காரி) போன்ற எஸ் ஜானகியின் கொஞ்சும் குரல் ஒலிக்கும் பாடல்களானாலும், முத்துக்களோ கண்கள் (நெஞ்சிருக்கும் வரை) போன்ற இழையும் குரலெடுக்கும் பி சுசீலாவோடு இணைந்து ஒலித்த பாடல்களானாலும் அவரது குரல் எப்போது வந்து கலக்கும், எந்த ஒரு மிதப்பில் வசீகரிக்கும் என்று எதிர்பார்க்க வைக்கும்….

    திரைப்படப் பாடல்களில் மட்டுமல்ல, பக்திப் பாடல்களிலும் எண்ணற்ற ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்துவிட்டவர் அவர். புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ஒலிக்காத இசைக் குழு ஏது தமிழகத்தில் ! முருகர் பாடல்களுக்கு அவரைப் போல் உள்ளம் கரைய வைத்தவர்கள் யார்….அழகென்று சொல்லுக்கு முருகா, உள்ளம் உருகுதையா, மண்ணானாலும் திருச்செந்தூரில், முத்தைத் திரு பத்தி…இந்தப் பாடல்களை அவர் தமக்கென்று அமைத்துக் கொண்ட அசத்தலான ஒரு பாணியில் பாடி கேட்பவர் மனங்களை மயக்கிக் கொண்டிருந்தார். சில படங்களில் நடிக்கவும் செய்தார்.

    அவரது பாடல்களை உற்றுக் கேட்கும்போது, ‘ன்’ என்ற எழுத்தை அவர் அதற்குமுன் ஒரு ‘ல்’ சேர்த்து தினுசாக உச்சரிப்பதைக் கண்டு பிடிக்க முடியும். ஒன்று என்ற சொல்லை அவர், (உனது விழியில் என்ற பாடலில், உயிர் கொண்ட ஓவியம் ஒன்று என வரும் இடத்தில்) ஒல்ன்று என ஸ்டைலாக ஒலிப்பதைக் கேட்க முடியும். இன்று என்பது இல்ன்று எனவும், வந்து என்பதை வல்ந்து எனவும் அவர் பாடுவதைக் கேட்க முடியும்.

    டி எம் எஸ் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்றுமே நம் மனதை விட்டு மறையப்போவதில்லைதான். இந்த வேளையில். மனதுக்கு இதமாக இப்படி ஒரு அஞ்சலிக்கட்டுரையை எழுதிய திரு வேணுகோபால் அவர்களை இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்கிறோம். திரு வேணுகோபால் அவர்களுக்கு,, வல்லமையாளருக்கு எம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: மலர்சபா அவர்களின் ’நான் அறிந்த சிலம்புப் பாடல்’

    மயக்கத்தையுடைய மாலைப்பொழுதே!

    நின் கொடுமைதான் காணச் சகியாமல்
    நிலமகளும் கண் மூடிக்கொண்டனள்;

    நீ மட்டும் வந்திடுவாய் ஆயின்,
    எம் தலைவர் வாராதிருப்பார் ஆயின்,
    யாம் மட்டுமின்றி இவ்வையமே
    இங்ஙனம் துன்புறுமன்றோ..
    மாலையே! நீ வாழ்வாயாக!

     

    Share
  • மனிதனுக்குள் இப்படி ஒரு மிருகமா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    உலகம் முழுவதும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றிய செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. சரி, இனி பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடராது என்று நினைத்து முடித்தால் இன்னொரு கொடுமை பற்றிய செய்தி வருகிறது. டில்லியில் 2012 டிசம்பரில் ஓடும் வேனில் மருத்துவ மாணவிக்கு நடந்த கொடுமை பற்றிப் பத்திரிக்கையில் படித்து அதிர்ந்து போனதோடு இனி கண்டிப்பாக அரசும் காவல்துறையும் ஏதாவது செய்து பெண்களைக் காப்பாற்றுவார்கள் என்று நிம்மதி அடைய முடியவில்லை. இந்தியா முழுவதும் கொதித்து எழுந்து அரசியல்வாதிகள் விழித்தெழுந்து இம்மாதிரிக் கொடுமைகள் நிகழாமல் தடுக்க சட்டம் இயற்றினர். அதன் பிறகும் தொடர்ந்து அப்படிப்பட்ட செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இனி இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்காது என்று நினைத்ததிற்கு மாறாக செய்திகள் வந்த வண்ணமாக இருக்கின்றன. பத்திரிக்கைகள்தான் இந்தச் சம்பவங்களை மிகைப்படுத்துகின்றனவா அல்லது இத்தனை குற்றங்கள் நடைபெறுகின்றனவா என்று அனுமானிக்க முடியவில்லை.

    இம்மாதம் அமெரிக்காவில் ஓஹையோ மாநிலத்தில் உள்ள க்ளீவ்லேண்ட் ஊரில் இன்னொரு கொடுஞ்சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்தது. அதுவும் தொழில்நுட்பத்திலும் வளத்திலும் சிறந்து விளங்கும் அமெரிக்காவில் இப்படி நடக்க எப்படி அனுமதித்தார்கள் என்று நினைத்து மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.

    2002-லிருந்து 2004 வரை ஒரு கொடியவன் மூன்று பெண்களைக் கடத்திக்கொண்டுபோய் ஒரு பாழடைந்த வீட்டில் பதுக்கிவைத்து அவர்களுக்குப் பல கொடுமைகள் புரிந்திருக்கிறான். அந்தப் பெண்களில் ஒருத்தி இவனுடைய மகளின் நெருங்கிய தோழி. மனைவியை பல முறை அடித்து அவளுடைய உடம்பில் பல வகையான காயங்கள் ஏற்படுத்திக் கடைசியில் அவள் இவனிடமிருந்து விவாகரத்து பெற்றிருக்கிறாள். இந்த வழக்கில் தீர்ப்புக் கூறிய நீதிமன்றம் அவனுடைய குழந்தைகளைப் பார்க்கக் கூட இவனுக்கு அனுமதி வழங்கவில்லை. அப்படியும் குழந்தைகளை அவ்வப்போது மனைவியிடமிருந்து கடத்திக்கொண்டு வந்திருக்கிறான். இவனுடைய மகளின் தோழியைக் கடத்திவந்த பிறகு இவனுடைய மகளே அது பற்றி ஒரு உரையில் குறிப்பிட்டிருக்கிறாள். அவனுடைய மகன் அது பற்றிப் பத்திரிக்கையில் எழுதியிருக்கிறான். இவர்கள் இருவருக்கும் இந்தக் கொடுமையைச் செய்தவன் தங்கள் தந்தைதான் என்று தெரியாது.

    பத்து வருடங்களுக்கும் மேலாக இந்தப் பெண்களை இந்தக் கொடியவன் அடைத்துவைத்திருந்தது அவனுடைய சகோதரர்களுக்குக் கூடத் தெரியாதாம். அடைத்துவைக்கப்பட்ட வீட்டின் அருகில் வசித்துவந்தவர்களுக்கும் தெரியாதாம். அவர்களிடம் அந்தப் பக்கம் போகும்போதும் வரும்போதும் ‘ஹலோ’ சொல்லிவிட்டு சுமுகமாகப் பேசிவிட்டுப் போவானாம். ஆனாலும் அவர்களுக்கு இவன் மூன்று பெண்களைப் பத்து வருடங்களாக அடைத்துவைத்திருக்கும் விஷயம் தெரியாதாம். பக்கத்து வீட்டில் யார் வசிக்கிறார்கள், என்ன நடக்கிறது என்ற விஷயங்கள் எப்படித் தெரியாமல் போகும், அதுவும் பத்து வருடங்களுக்கு. மூன்று பெண்களில் ஒரு பெண்ணோடு பெற்றுக்கொண்ட ஒரு பெண் குழந்தையைத் தன்னோடு தன் உறவினர் வீடுகளுக்குக் கூட்டிச் சென்று தன் பேத்தி என்று உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பானாம். அவன் எப்போது அந்தப் பெண்ணைப் பெற்றெடுத்தான் என்று எப்படி அந்த உறவினர்களுக்கு தெரியாமல் போயிற்று? அவன் அப்படி ஒன்றும் பல ஏக்கராக் கணக்கில் விஸ்தீரணமுள்ள வீட்டில், பல காத தூரத்திற்கு அக்கம்பக்கம் யாரும் இல்லையென்ற இடத்தில் வசிக்கவில்லை. எப்படி இவனுடைய தினசரி நடவடிக்கைகளை அதுவும் பத்து வருடங்களுக்குக் கவனிக்காமல் விட்டார்கள்? ஒருவர் அந்தரங்கத்தில் (privacy) இன்னொருவர் தலையிடக் கூடாது என்ற கொள்கையை இத்தனை தூரம் கொண்டுபோக வேண்டுமா?

    இந்தக் கொடூரச் செய்தியை ஜீரணித்துக்கொள்வதற்குள், அமெரிக்காவில் பெண்களின் நலனுக்காகப் பாடுபட்டுவரும் ஒரு பெண் பிரேசில் போன்ற நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதில்லை என்று சொல்லி வாய் மூடும் முன் அந்த நாட்டிலேயே இந்தியாவில் நடந்தது போன்ற ஒரு கொடூரச் செயல் நடந்ததாகச் செய்தி வந்திருக்கிறது. உலகில் என்ன நடக்கிறது? திடீரென்று மனிதர்களில் சிலர் மிருகங்களாக மாறிக்கொண்டிருக்கிறார்களா? இந்தக் கொடூரங்கள் இனியும் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்று நெஞ்சு குமுறுவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற கையாலாகாத்தனம் ஏற்கனவே இருக்கும் சோகத்தை இன்னும் அதிகரிக்கிறது.

    எழுதுவதற்கே கை கூசும் இன்னும் பல சம்பவங்கள் உலகம் முழுவதும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.

    கடைசியாக இறைவனைத்தான் நாடுகிறேன். நான் தினசரி இறைவனிடம் எனக்காகக் கேட்கும் வரங்களில் இன்னொன்றாக ‘இறைவா, உலகில் இனி ஒரு போதும் எந்தப் பெண்ணிற்கும் இத்தகைய கொடுமைகள் நடக்கக் கூடாது’ என்ற வரத்தையும் சேர்த்துக்கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் புலப்படவில்லை.

    Share
  • முன்னைப் பிறவியில்… (கவிதைக்கதை)

     

    மாதவன் இளங்கோ

     

    Author’s Note:

    சில சந்திப்புகள் நம் மனதிற்கு இனிமையானதாக அமையும்; சில சந்திப்புகள் நம்மை சிந்தனையாளர்களாக மாற்றும்; சில சந்திப்புகள் நம்மை முட்டாள்களாக்கும்; சில சந்திப்புகள் நம் வாழ்க்கைப் பாதையை  சற்று மாற்றும்; சில சந்திப்புகள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும். சில சந்திப்புகள் சில மணித்துளிகளே நீடித்தாலும், நம் மனதில் ஒரு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விடும். அப்படிப்பட்ட ஒரு சந்திப்பு தான் ‘முன்னைப் பிறவியில்..’ எழுத உந்துதலாக அமைந்தது.

    ஒரு வியாழக்கிழமை மாலை. ப்ரசல்சு மாநகரத்தின் நார்டு (வடக்கு) ஸ்டேஷன். லூவன் நகரம் செல்வதற்காக, இரயிலுக்காகக் காத்திருந்த போதுதான் நான் மேலே கூறிய அந்த ‘கொந்தளிப்பு’ சந்திப்பு நிகழ்ந்தது. அந்த மனிதர், ‘நீங்கள் தமிழரா?’ என்று கேட்டதில் ஆரம்பித்த உரையாடல் ஒரு இருபது நிமிடம் நீடித்தது. சில நிமிட உரையாடலாக இருந்தாலும் என்னை வெகுவாய் பாதித்து விட்டது – தமிழனாக அல்ல; வெறும் மனிதனாகவே!! இன்னும் சொல்லப்போனால் அவர் பகிர்ந்துகொண்ட விதத்தில், மொழியே புரியவில்லை என்றாலும் கூட, எங்களருகே அமர்ந்து கொண்டிருந்த ஃப்ளம்மியரின் மனதிலும் அது ஒருவித கிளர்ச்சியை உண்டு பண்ணியிருக்கக் கூடும்.

    பெல்ஜியத்தின் பிரெஞ்சு பகுதியிலுள்ள லியாஷே (Liege) நகருக்கு செல்லும் இரயிலுக்காக அவர் காத்திருந்தார். நானும் அதே இரயிலில் சென்று இடையில் வரும் ஃப்ளம்மிய நகரான லூவனில் (Leuven) இறங்க வேண்டும். வண்டியிலும் அவர் பேச்சு தொடர்ந்தது. நான் அமைதியாக அவரருகே அமர்ந்து அவர் கூறுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாலும், என் மனது மட்டும் அடங்காமல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

    ‘காலம் நிச்சயம் மாறும்; விடியல் பிறக்கும்!’ என்று கூறிவிட்டு , லூவன் நகரில் இறங்கிய என் மனதில் ஏராளமான எண்ண ஓட்டங்கள், கேள்விகள், கொந்தளிப்புகளை ஏற்படுத்திவிட்டு அவர் விடைபெற்று இரயிலோடு சென்று விட்டார். அப்போது  வேறொரு சமயத்தில், வேறொரு இடத்தில் நடந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வர, இவையிரண்டையும் இணைத்துப் பார்க்கையில் ‘முன்னைப் பிறவியில்..’ பிறந்தது.

    வீட்டிற்கு வந்தவுடன், அதே வேகத்தில், அதே மனநிலையில் ஒரு இருபத்து ஐந்து நிமிடத்தில் எழுதியதைத்தான் இன்று நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    இதோ… முன்னைப் பிறவியில்… 

    …

    …

    இம்மையில்,

    என் பெயர் வேதநாயகம்.

     

    காதலில் விழுந்து,

    திருமணம் முடிந்து,

    ஐந்து ஆண்டுகளோடிய பின்னும்

    மழலை இல்லை வீட்டினிலே!

     

    முதல் குழந்தை, கருவிலே மரித்தது!

    இரண்டாவது, இறந்தே பிறந்தது!

    மூன்றாவதோ, பிறந்து இறந்தது!      

     

    உற்றார் உறவினர் –

    துரத்தி அடித்தனர்!

    மருத்துவம் பாரென்றனர்!

    கருக்காவூர் போவென்றனர்! 

    திருமலை நடவென்றனர்!

    தானம்புரி என்றனர்!

     

    அவர்தம் பரிகாசப்

    பேச்சுகளைக் கேட்டுக்கேட்டு,

    நாணிக் குறுகினோம்,

    நானும் என் மனையாளும்!

    ஓடி ஒளிந்தோம்.

    உற்றார் உறவினரின்,

    தொடர் பறுத்தோம்!

     

    ‘மூலகாரணம் அறிந்திடல்’

    முக்கிய மென்றார்,

    நண்பர் ஒருவர்.

    அவர் நாடச் சொன்னது

    ‘நாடி சோதிடம்‘!

     

    ‘நாடி‘ நாடித்

    தேடி ஓடினேன் –

    வைத்தீசுவரன்கோவில்!   

     

    ஓலைகள் பல அலசியபின்

    சோதிடர் சொன்னார் என்னிடமே:

    “முன்னைப் பிறவியில் நீ,

    ‘அந்தத் தீவினில்’ பிறந்தவன்!

    பந்துக் களுடன் கூட்டாய், 

    செய்தாய் பல நீ உயிர்வதைகள்.

    அதற்கு விலையே,

    இப்பிறவியிலே உனக்கு

    இத்தனை சித்ரவதைகள்!”

     

    சோதிடர் சொன்னதை நான்,

    துளியும் நம்பவில்லை!

    வீடு திரும்பினேன்.

    நாடி சோதிடத்தை,

    நம்பி ஓடுபவர்கள்

    அனைவருமே அவிவேகிகள்,

    என்றெண்ணிச்

    சிறிது கண்ணயர்ந்தேன்.

     

    கனவிலே,

    கடல் கடந்து சென்றேன்.  

    அங்கே, பச்சை உடையணிந்த

    வெறிபிடித்தக் கூட்டமொன்று,

    வளைத்துப் பிடித்தது –

    சில அப்பாவி மக்களை!

    அதில் ஆடவர் சிலர்,

    பெண்டிர் பலர்,

    நிறைமாதக் கர்ப்பிணிகள் சிலர்! 

    சிறார்களோ பலர்.

     

    “பிடித்தோம்!” என்றும்,

    சிக்கினர்!”  என்றும்,

    கொக்கரித்தது,

    அந்தப் பச்சை உடையணிந்தக் கூட்டம்!

     

    அதோ!

    அந்த கூட்டத்தின் தலைவன்!

    அவன் என்னைப்போல்!

    அது நானா?

    எனக்கு என் நண்பர்கள்

    வைத்த பெயர் ‘சாந்த சொரூபி‘ அன்றோ?!

    ஆனால், அந்தக் கொடூர முகம்?

    அதில் குடிக்கொண்டிருந்த வெறித்தனம்!

    அது நிஜமாய் நான் தானா?

    ஆம்! நானே தான்!

    அந்தச் சிரிப்பு…

    அந்த அசுரச் சிரிப்பு?

    அதற்குச் சொந்தக்காரன்?

    அதுவும் நானே தான்!

     

    பெண்களை, சிறார்களை

    மட்டும் விட்டு விட

    ஆடவர் வேண்டினர்! 

    கர்ப்பிணிகளை மட்டும் விட்டு விட

    பெண்டிரும் கதறித் துடித்தனர்!

    ஒன்றும் புரியா மழலைகளோ,

    ஒளிந்து அழுதன – 

    சேலையின் மறைவில்!

    அனைவரையும் விட்டு விட,

    கிழவர்கள் சிலர் – என்

    காலில் விழுந்து மன்றாடினர்!  

     

    நான் தந்த பதிலோ,

    சிரிப்பு மட்டும் தான்!

    ஏளனச் சிரிப்பு!

    இடிச்சிரிப்பு!

     

    சில நிமிடங்களில்,

    வெடிச்சிரிப்பு மறைந்தது,

    வெறித்தனம் புகுந்தது,

    வெறிச்சிரிப்பானது!

    கண்கள் சிவந்தது,

    வானம் பார்த்தோம்,

    உரக்கக் கத்தினோம்!   

     

    வெட்டிச் சாய்த்தோம்

    ஆடவர் கைகளை – பின்

    அவர்தம் கால்களை – அதன் பின்

    அவர்தம் தலைகளை!

     

    சிட்டுக் குருவிகளைப்  போல்,

    சுட்டு வீழ்த்தினோம் – அவர்தம்

    சிறார்களை!

    ஓடி விளையாடும் வயதில்,  

    அவர்தம் உடல்களில் – எம்

    துப்பாக்கிக் குண்டுகள்

    விளையாடின!

     

    கதறினர் பெண்டிர் – அவர்

    கண்களில் நீர் வற்றும் வரை!

    அழுகுரல்கள் நிறைந்த

    அந்த அவல ஓசை,

    எங்கள் செவிகளில்

    ‘தேனினு மினிய’ 

    நாதமாய் ஒலித்தது!

     

    சபித்தனர் எங்களை:

    “நீங்கள் கொன்று குவித்த

    அவைகள் –

    எம் பிள்ளைகள் அல்ல!

    உம் பிள்ளைகள்!

    அவைகளுக்கும் இது நேரும்!

    அதுவரை, நீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    இங்கே புதைக்கப்படும்,

    ஒவ்வொரு உடலும்,

    விதைகள்!

    அவைகள் மரமாய் வளர்ந்து

    உங்களைச் சாய்க்கும் நாள் வரும்!

    அதுவரை, நீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    நிராயுதபாணிகளை நிர்வாணப்படுத்திச்

    சுட்டுக் கொல்லும்

    உங்களை, உங்கள் பாவங்களே

    ஆயுதங்களாய் மாறித்

    தாக்கி அழிக்கும்!

    அதுவரை, நீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    ‘நாய்நிலைக்கும் கீழ்நிலை

    எம்நிலை’ கண்டு

    கொக்கரிக்கும் நீவீர் – நாளை

    உம்நிலை மாறுகையில்

    கதறி வீழ்வீர்கள்!!

    அதுவரை, நீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    இயற்கை தந்த மண்ணை ஆள,

    இன்றெம்மைக் கொல்லும் உம்மை

    இனிதாய் வாழவிடுமா இயற்கை?

    இந்நிலத்தை அதன் சீற்றமே,

    சிதைத்தெறியும் நாள் தூரமில்லை!

    அதுவரை, நீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    ஆம்! எம் மக்களின்

    சதை தின்று,

    எம் குஞ்சுகளின்

    குருதி குடித்த உம்மை, 

    அந்தக் கடல் குடிக்கும் நாள் வரும்!

    அதுவரை, நீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    உங்கள் ஒவ்வொரு கொலைக்கும்,

    உங்கள்  சந்ததி விலை கொடுக்கும்!

    ஏன்! இன்னொரு பிறவி

    என்று ஒன்று இருப்பின்,

    நீங்களே அதற்கு விலை கொடுப்பீர்கள்!

    அதுவரை, நீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    நீங்கள் கொன்று குவித்த

    அவைகள் –

    எம் பிள்ளைகள் அல்ல!

    உம் பிள்ளைகள்!

    அவைகளுக்கும் இது நேரும்!

    அதுவரை, நீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!”

     

    “எம் பிள்ளைகளா?

    ஹா ஹா ஹா” என

    மீண்டும் அதிபயங்கரமாய்,

    அசுரத்தனமாய்ச் சிரித்தோம்!

     

    கொலைவெறி, காமவெறியும் ஆனது!

    பேதை முதல்

    பேரிளம்பெண் வரை  

    ஆளுக்கு ஒன்றாய்ப் பகிர்ந்து,

    இழுத்துச் சென்றோம்!

    கதறக் கதறச்

    சூறையாடினோம்!

    சூறையாடிய பின்

    சிதைத்தோம்

    சுட்டு வீழ்த்தினோம்!

     

    அங்கே பாரென்றான் தோழன்!

    அவன் காட்டிய திசையில்,

    கர்ப்பிணிப் பெண்ணொருத்தி,

    மடிந்து கிடந்தாள்!

    வயிற்றினில் சுட்டேன்!

    சுட்டுச் சிரித்தேன்!

     

    சிரித்தேன்! சிரித்தேன்!

    இடியெனச் சிரித்தேன்!

     

    அந்த வயற்காட்டை, 

    இடுகாடாய், சுடுகாடாய்,

    பூலோக நரகமாய், 

    மாற்றிக் காட்டி இருந்தோம்!

    எங்கள் சாதனைகளைக் கண்டு

    குதூகலித்தோம்!

     

    வானத்தில் வட்டமிடும்,

    வல்லூறுகளாய்ச் சுற்றிப் பார்த்தோம்!

     

    எங்கெங்கு காணினும்

    உடையில்லா உடல்கள்!

    சிதைக்கப்பட்ட உறுப்புகள்!

    அறுபட்ட தலைகள்!

    அவற்றினூடே ஓடிய

    குருதி ஆறு!

     

    “ஹா ஹா ஹா!”

    மீண்டும் சிரித்தேன்!

    உடல்களின் மீதேறிக் குதித்துத்

    தாண்டவ மாடினோம்!

     

    திடீரென,

    நிலை தடுமாறி

    கீழே விழுந்தேன்,

    ஆவென்று கத்தி,

    ‘விழித்தேன்‘!

     

    “ஓ! அது கனவா?”

     

    இதயம் இரைத்தது,

    தேகம் நடுங்கியது,

    தலை கனத்தது,

    கண்களில் கண்ணீர்

    வழிந்து ஓடியது!

     

    ஆயிரமாயிரம் எண்ணங்கள்

    ஆணிபோல் என் நெஞ்சில்

    அறைந்ததாய் உணர்ந்தேன்!

     

    “எனக்குள் இப்படி ஒரு மிருகமா?”

     

    “ஐயோ! அந்தக் குழந்தைகள்!!!”

     

    “முன்தினப் பிறவியில்,

    நான் கொன்றது,

    அவர்கள் எவருடைய

    குழந்தைகளையோ அல்ல!

    என்னோடு இன்று 

    வாழ்ந்திருக்க வேண்டிய

    என் குழந்தைகளே!”

     

    “எந்த இனத்தை அழித்துக்

    கொக்கரித்தேனோ,

    அதே இனத்தில்

    இன்று நானா?”

     

    “இனமென்ற குறுகிய

    வட்டத்திற்குள் நான்

    சிக்க வேண்டாம்!

    அவர்களெல்லாம் மனிதர்களல்லவா?

    வெறும் மனிதனாகவே,

    வெட்கித் தலை குனிகிறேன்!” 

     

    “அந்த இரத்த பூமி!”

     

    “அந்த உடல்கள்!”

     

    “பொசுக்கப்பட்ட அந்த பொடியன்கள்!”

     

    “அந்த கதறல்கள்!”

     

    என்றோ செய்த

    என் குற்றங்கள்          

    என் கண்முன்னே

    படமாய் ஓடின!

     

    கதறிக் கதறிக்

    கடவுளை வேண்டினேன் –

    “வேண்டாம் எனக்கு

    பெண் குழந்தைகள்!

    ஏனெனில், அவர்கள்

    கண்டிப்பாய்ச் சூறையாடப்படுவார்கள்!”

     

    மீண்டும் வேண்டினேன் –

    “இன்னொரு பிறவி இருப்பின்,

    நானும் பெண்ணாய்ப்

    பிறந்திடல் வேண்டாம்!

    ஏனெனில், நானும்

    நிச்சயமாய் சூறையாடப்படுவேன்!”

     

    “கடவுளே“

    என்று மீண்டும் கத்திக் கதறினேன் !

     

    ஓடி வந்தாள் மனையாள்!

    என்னவென்று கேட்டாள்,

    பதறியபடி!

     

    “அந்தத் தீவினில்

    குழந்தைகளையுமா கொன்றார்கள்?”

    என அதிர்ச்சியுடன் கேட்டேன்.

     

    “தீவிரவாதம் பேசாதீர்,” என்றாள்!

     

    சிந்தித்தேன் –

    “கொடூரக் கொலைகளை

    எதிர்த்து இந்த மண்ணில்

    கொடுக்கப்படும்

    குரல்களெல்லாம் ,

    தீவிரவாதத்தின் குரல்களாக

    மாற்றிக்காட்டியது

    யார் குற்றம்?”  

     

    என்னவென்று மீண்டும் வினவினாள்

    என் மனையாள்.

    அதற்கு பதிலாய்,

    நான் தந்தேன் உபதேசம்,

    அவளுக்கு மட்டுமல்ல,

    என் முன்னைப்பிறவி சக மிருகங்களுக்கும்:

    “நீ விதைக்கும் ஒவ்வொன்றையும்,

    நீ அறுவடை செய்தே ஆகவேண்டும்!

    நீ கொலைகாரன் என்றால்,

    நீ கொல்வது மற்றவரை அல்ல!

    உன்னையே தான்!

    நீ செய்வது கொலையல்ல,

    தற்கொலை!

    ஏனெனில்,

    நீ கொல்லும் ஒவ்வொரு முறைக்கும்,

    நீ ஒருமுறை கொல்லப்படுவாய்!    

     

    முன்னைப் பிறவியில் நான் மிருகம்!

    என் கொலைகளுக்கு விலையாய்,

    இம்மையில் நானே அந்த

    மிருகம் தின்ற ஆடாய்!

     

    ஏ, இம்மை மிருகங்களே!

    அங்கிருந்தவன்,

    இங்கிருந்து பேசுகிறேன்!

    ஆடாதீர்! ஆவீர்கள் ஆடுகளாய்!

    யாரும் ஆக்கவேண்டியதில்லை!

    நீங்களாகவே ஆவீர்கள்!“

      

    ‘பழிக்குப் பழி’

    சரியான பதிலல்ல!

    ‘கண்ணுக்குக் கண்’

    சரியான பதிலல்ல!

    ‘கொலைக்குக் கொலை’

    சரியான பதிலல்ல!

    ஆனால்,

    இயற்கைக்குக்

    கண்ணனையும்,

    நியூட்டனையும்,

    தெரிந்த அளவிற்கு,

    காந்தியம் தெரியாது!

     

    ‘ஊழிற் பெருவலி யாவுள?’

     

     

     

    Share
  • அந்த நேரம்…

    செண்பக ஜெகதீசன்

    மேலே வானத்து மேகங்களுக்கு

    மேலைக் கடல்விழும் சூரியன்

    மேலாய்த்

    தங்கநிறம் தடவிவிடும் நேரம்..

     

    குஞ்சுப் பறவைக்கு இரைதேடிய

    தாயின்

    காட்டைத் தாண்டிய பயணம்

    கூட்டில் முடியும் நேரம்..

     

    பிஞ்சுக் குழந்தைகள்

    பள்ளிப் பையெனும் பாரமிறக்க

    வீட்டில் வந்து

    விடுதலையாகும் நேரம்..

     

    கண்கள் பேசியதைக்

    காரியமாக்கிட,

    இரவின் வருகைக்கு

    இணைபிரியா

    காதல் உலகம்

    காத்திருக்கும் நேரம்..

     

    கடவுள் தோட்டத்து

    மணிமலரின் வாசம்

    ஓசையாய்

    வெளிவந்திடும் நேரம்..

     

    இது,

    இரவும் பகலும் இணைந்திடும்

    மணவிழா-

    மாலையாகிய நேரம்…!

     படத்துக்கு நன்றி

      http://www.hiren.info/desktop-wallpapers/natural-pictures/sunset_kauai_hawaii    

    Share
  • புத்த பூர்ணிமா

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்

     

    நேற்றைய முழுநிலா வடமாநிலங்களில் புத்த பூர்ணிமாவாகக் குறிக்கப் பட்டுள்ளது.

     

    அன்பு, அறம், அஹிம்ஸை, அவா அறுத்தல் என எளிமையும், வலிமையும் நிறைந்த

    வழிமுறைகளைப் போதித்த மஹான்!

     

    சித்தார்த்தன் புத்தராகப் பரிணாமம் பெற்றது இந்த பாரத மண்ணிலே எனினும், இவர் தூவிய விதைகள்

    பரவிச் செழித்ததென்னவோ கிழக்காசிய நாடுகளிலே!

     

    (புத்தரையும், இந்துமதம் தனது கடவுளின் அவதாரங்களில் ஒன்றாக உள்வாங்கி விழுங்கிவிட்டதோ!)

     

    அமைதிதவழும் புத்தரின் சாந்தமுகம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று!

     

    வண்ணப்படமாக இணைப்பில்..

     

    பார்க்க, ரசிக்க

     

     

    Share
  • அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை!.. 6

     

    சாகர் 

     

    புராதன கைரோ

    கோப்டிக் கைரோ (Coptic Cairo) கிருஸ்த்துவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. மெல்ல நடந்து வரும் போது மஹ்மூத் ஒரு மசூதி, சர்ச் மற்றும் யூதர்கள் கும்பிடும் சைனகோக்(Synagogue) மூன்றும் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக இருப்பதை சுட்டிக்காட்டி எப்படி மூன்றும் இனத்தினரும் அன்னியோனியமாக வசிக்கின்றனர் இங்கே என்று சுட்டிக்காட்டினார். யூத சமயத்தில் அவதரித்த இயேசு கிறிஸ்து போதித்தது பிற்காலத்தில் கிருஸ்துவ மதம் என்று அவதரித்தது.பின்னர் வந்த முஹம்மத் நபி தோற்றுவித்த இஸ்லாமிய மதம் யூத மற்றும் கிருஸ்துவ சமய போதகர்களையும் துறவிகளையும் கடவுளின் தூதர்கள்(prophets) என்று அங்கீகரித்த போதும் அவர்களுக்கும் எல்லாம் உயர்ந்த தேவதூதர்  நபிகள் என்று நம்புகிறது.  ஒன்றுபட்ட ஆரம்பம் உள்ள இந்த சமயங்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளினால் மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் ரத்த ஆறு ஓடியதும் உண்மை.

    மஹ்மூத் பெருமையாக இதை சொன்னாலும் எகிப்தும் இஸ்ரேலுடன் பலமுறை போர் செய்ததும் சரித்திரம் தான். இன்றும் எந்த நேரம் போர் மூளும் ஒரு சூழ்நிலை உள்ள பிரதேசம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    கிருஸ்துவமதம் எகிப்திற்கு வந்தது அந்த மதம் தோன்றுவதற்கு முன்பே என்பது குறிப்பிடத்தக்கது. ஏரோது(Herod) மன்னரின் கட்டளையின் பேரில் யூதர்களின் அரசன் என்று நம்பப்பட்ட குழந்தை இயேசுவை காப்பாற்ற ஜோசப்பும் மேரியும் தப்பி ஓடி ஓளிந்த இடம் எகிப்து தான். எகிப்து ஏரோதின் ஆதிக்கத்தில் இல்லாத நாடு என்றாலும் அது ரோமானிய சாம்ராஜ்யத்தில் ஒரு பகுதி என்பதால் அவர்களால் தடை இன்றி தப்பிக்க முடிந்தது. மேரி ஜோசப் மற்றும் குழந்தை ஏசு அவர்கள் தங்கியதாக ஒரு இடம் இன்றும் கோப்டிக் கைரோவில் உள்ளது. அப்படி தப்பி ஓடிய குழந்தைதான் பின்நாளில் ஏசுவாக வாழ்து போதித்தது தான் கிருஸ்துவ மதம். அவரது சீடர்களில் ஒருவரான புனித மார்க்(St Mark) இந்த மதத்தை எகிப்திற்கு போதித்தார்.

    எங்களை முதலில் கைரோவின் மிக பழமையான சர்ச்சிற்கு அழைத்து சென்றார். இந்த கோவிலுக்கு தொங்கும் சர்ச்(HangingChurch) என்று ஒரு பெயர் உண்டு.

    இன்றைய கோப்டிக் கைரோ பெர்சிய மன்னர்களால் தங்கள் பெருமை வாய்ந்த நகரான பாபிலோன் (Babylon) நகரத்தை நினைவாக பாபிலோன் என்ற நகைரை நிறுவினர். பின்னர் அங்கே அரசாண்ட ரோமானியர் அங்கே ஒரு கோட்டையும் கட்டி அரசாண்டார்கள். பண்டை ரோமானியர் கட்டிய பாபிலோன் கோட்டை மதில்களில் மேல் கட்டப்பட்டது இந்த சர்ச். அடித்தளம் இல்லாமல் தொங்குவது போல அமைக்கப்பட்டது என்பதால் இந்த பெயர். ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சர்ச் 29 படிகளை கொண்ட இந்த சர்ச்சை படிகோயில் என்றும் அழைத்தனர். இந்த இடத்தில மூன்றாம் நூற்றாண்டில் சிறிய சர்ச் இருந்ததாக நம்பப்படுகிறது. கட்டிய காலத்திற்கும் இன்றைக்கும் பூமியளவு ஆறடி உயர்துள்ளமையால் இன்று பாபிலோன் கோட்டை மண்ணிற்கு கீழே தான் உள்ளது. சில இடங்களில் இருந்து பார்த்தால் அந்த கோட்டை சுவர்கள் இன்றும் சர்ச்சிற்கு கீழே உள்ளது தெரிகிறது.

    கிழக்கு ஆர்த்தோடாக்ஸ்(orthodox) கிருத்துவ வகுப்பினரான கோப்டிக் கிருஸ்துவ அமைப்பின் தலைமை தளமாகவும்  ஆர்த்தோடாக்ஸ் கிருத்துவ போபாண்டவரின் ஜாகையகம் இந்த சர்ச் திகழ்ந்தது.

    மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த சர்ச்சின் சிறப்பம்சங்கள் கருமையான எபோனி மரம்(Ebony) மற்றும் யானைத்தந்தங்களால் செய்யப்பட்டவேலைப்பாடுகள்.  மேலும் இங்கு உள்ள ஒரு புனித மேரியின் ஓவியம் எகிப்திய மோனலிசா என்ற சிறப்புப்பெற்றது. நாம் எந்த திசையிலிருந்து பார்த்தாலும் இந்த மேரி ஓவியம் நம்மை பார்ப்பது போன்ற ஒரு பிரமை ஏற்படுத்தும். ஓவியத்தை பார்த்தவாறு நாம் நகர்ந்தாலும் இதே உணர்வு தோன்றுவது இதன் சிறப்பு.

    அடுத்து சர்ச்சின் பக்கத்தில் உள்ள ஒரு யூதர் வழிபாடுதளமான பெண் எஸ்ரா (Ben Ezra) சைனகாகிற்கு சென்றோம். இந்த சைனகாக் பாலஸ்தீனர்களின் சைனகாக் என்றும் அழைக்கப்படுகிறது. குழந்தை மோசஸ் இந்த இடத்தில தான் எகிப்திய ராணியால் கண்டெடுக்கப்பட்டதாக ஒரு வரலாறு நிலவுகிறது.

    சிறியதாக இருந்தாலும் மிகவும் அழகாக இருந்தது. யூதர் இஸ்லாமிய பாணியில் உள்ளே சிலைகள் எதுவும் இல்லை. இந்த கோவிலை சுற்றிபார்க்க கால்மணிநேரம் போதுமானதாக இருந்தது.

    அடித்து கைரோவின் புகழ் பெற்ற முகம்மது அலி மசூதி நோக்கி சென்றோம். கைரோவிர்க்கு ஆயிரம் மசூதி கோபுரங்கள் கொண்ட நகரம்(City of 1000 minarets) என்ற பட்டபெயர் உண்டு. எந்த திசையில் பார்த்தாலும் மசூதி கோபுரங்களுள் மினாரெட்ட்டுகளும் கண்ணை கவரும்.

    கைரோ சிட்டாடல்(Citadel) எனப்படும் பகுதியில் அமைக்கப்பட்ட இந்த பெரிய மசூதி முஹம்மத் அலி பாஷா எனப்படும் ஒட்டமன் அரசர்  மகனின் நினைவாக கட்டியது. இவர் துருக்க வம்ச்சதினர் என்பதால் இஸ்தான்புல்லில்(Istambul) உள்ள ஏணி(Yeni) மசூதியை போல வடிவமைத்தார்.1857 வருடம் கட்டிமுடித்தபோது இதுதான் பத்தொம்பதான் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய மசூதி.

    சுண்ணாம்பு கற்களால்(Limestone) கட்டப்பட்ட இந்த மசூதி அலபாச்டர் (Alabaster)பளிங்கினால் அலங்கரிக்க பட்டது. உள்ளே நுழையும் முன் பெண்கள் தலையில் மூடும் பழக்கம் துருக்கியை போலவே இங்கும் நிலவியது. நன்று அலங்கரிக்கப்பட்ட குவிந்த கூரை (Dome) மற்றும் நான்கு சிறிய மண்டபக்கூரைகளும் கொண்டதாக அமைக்கபட்டிருந்தது.

    வடமேற்கு பகுதியில் ஒரு அழகிய பித்தளை மணிக்கூண்டு (brass clock tower)அமைந்திருந்தது. லக்சோர் ஒபெளிச்க்(Luxor Obelisk) ஒன்றை முஹம்மத் அலி பிரான்சு அரசருக்கு பரிசளித்தாராம். இந்த கடிகாரம் முஹம்மத் அலிக்கு பிரான்சு அரசர் லூயிஸ் பிலிப்(Louis Philip) தந்த மாற்று பரிசாம். லக்சோர் ஒபெளிச்க் இன்றும் பாரிஸ் நகரத்தில் பிளேஸ் டி ல கண்க்கார்டில் உள்ளது(Place de la Concorde).

    முஹம்மத் அலி மசூதியை பார்த்து முடித்து மீண்டும் வண்டியில் ஏறி கைரோ அருங்காட்சியகத்திற்கு சென்றோம். கைரோ அருங்காட்சியகம் ஒரு எகிப்திய கலாச்சாரத்தின் கடல். தொல்பொருள் ஆய்வாளர்கள் எகிப்தில் கண்டெடுக்கபட்டவை பெரும்பாலானவை இதில் உள்ளது. மற்றவை பாரிஸில் உள்ள லூவ்ரு(Louvre) அருங்காட்சியகம் மற்றும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது.

    சிறிது நேர பயணமுடிவில் தாஹ்ரிர் சதுக்கத்தை அடைந்தோம்.  இந்த சதுக்கத்தில் தான் எகிப்திய புரட்சியின் பொது மக்கள் கூடி கிராசி செய்தனர். அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நடந்த கைகலப்புகள் இங்கே அதிக்கம் அரங்கேறியது. புரட்சியின் பொது அருங்காட்சியகம் தாக்கப்பட்டது என்றும் அப்போது இரண்டு மம்மிகள் மற்றும் பல தொல்பொருள்கள் சிதலமடைந்தன என்று மஹ்மூத் குறிப்பிட்டார்.

    மேலும் பக்கத்தில் உள்ள ஒரு கட்டடத்தை சுட்டிக்காட்டி அது முன்னால் அதிபர் முபாரக்கின் அலுவலங்களில் ஒன்று என்றும் புரட்சியின் பொது கோபமடைந்த மக்கள் அதனை கொளுத்திவிட்டனர் என்றும் குறிப்பிட்டார்.இன்றும் புகைப் படிந்து சிதலமடைந்த நிலையில் இருந்தது அந்த கட்டிடம்.

    மேலும் எகிப்திய அரசாங்கம் இந்த அருங்காட்சியகத்தில் உள்ள தொல் பொருட்களை கீஸாவில் புதிதாக கட்டப்படும் ஒரு அருங்காட்சியகத்திற்கு இன்னும் சில வருடங்களில் கொண்டு செல்வதாக திட்டம் என்றும் கூறினார்.

    நான்காயிர வருட வரலாறு மற்றும் தொல்பொருட்களை பார்க்கும் ஆர்வத்தோடு உள்ளே சென்றோம்.

    தொடரும்…….

    Share
  • மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட மாட்டாயா….

    அண்மையில் மறைந்த திரு பி பி ஸ்ரீநிவாஸ் அவர்களது நினைவில் அன்றைய இரவே நான் எழுதிய இந்த எளிய பிரதி, ஏப்ரல் 22 தீக்கதிர் நாளேட்டில் வந்திருக்கிறது….
    உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது….

    நன்றி
    எஸ் வி வேணுகோபாலன்

    அற்புதமான பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ் சித்திரை திங்கள் முதல் நாள் காலமாகிவிட்டார்.

    காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம் என்று முணுமுணுக்காத பழைய தலைமுறை இருப்பது அபூர்வம். மெல்லிசை என்று அழைக்கப்படும் திரை இசையை அதனினும் மெல்லிய இசையாகத் தமது குரல் வழி பொழிந்தவர் பி பி எஸ்.

    மிகக் குறைந்த எண்ணிக்கையில் கவிஞர்கள், இசை அமைப்பாளர்கள், கதாநாயகர்கள் இருந்த அந்த அறுபதுகளில் சிவாஜி, எம் ஜி ஆர் என்ற பெரிய நடிகர்களுக்கு டி எம் சவுந்திரராஜன் நிரந்தர பாட்டுக்காரராகத் திகழ்ந்தார். எங்கே நிம்மதி என்று வானொலியில் பாடல் புறப்படுகையிலேயே ரசிகன் சிவாஜி படம் என்று முடிவுக்கு வந்துவிடுவான். அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு என்று தொடங்கும் பாடலை வாத்தியார் பாட்டுடா என்று கூத்தாடத் தொடங்கிவிடுவான்…

    பி பி எஸ் அவர்களது அலை வரிசை வேறு தளத்தில் இயங்கியது. பிறந்த குழந்தையின் கள்ளம் கலவாத புன்னகைக் கோடு போலவோ , ஒரு முதியவரின் பற்றற்ற உலர்ந்த சிரிப்பைப் போலவோ இருக்கும் பாடல்கள் அவருக்கு வாய்த்தது வியப்புக்குரிய விஷயம். துள்ளலான காதலைக் கூட அவரது கொஞ்சும் மொழி இலக்கியப் படுத்தியதை, தாமரைக் கன்னங்கள் தேன்மலர்க் கிண்ணங்கள் என்னும் எதிர் நீச்சல் படத்தின் பாடலில் கேட்க முடியும். வாலியின் அருமையான வார்த்தை விளையாட்டு நிறைந்த அந்தப் பாடலில் (மங்கை நான் கன்னித் தேன், காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன் என்று பி சுசீலா இழைக்கும் இடம் அத்தனை அழகு), நாகேஷின் சேட்டை நிறைந்த உடல் மொழிக்கு ஏற்ப ஏற்ற இறக்கங்களோடு அமைந்திருக்கும் சரணங்களைப் பாடியிருப்பார் பி பி எஸ்.

    ரோஜா மலரே ராஜகுமாரி என்ற பாடல் காதல் உருக்கத்திற்கு இலக்கணம் எழுதுபவர்கள் கேட்டுக் கொண்டே எழுத வேண்டிய சாகித்தியம். உதடுகளை அவர் எப்படிப் பிரித்து எப்படி மூடி பாடலின் சொற்களை உச்சரித்தார் என்று யோசிக்க வைக்கும் எழில் அவரது குரலில் நெளிகிறது. வீரத் திருமகன் படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடலிலும் சுசீலா அவருக்கு ஏற்ற இணை குரலாய் ஒலித்தார்

    எம் எஸ் விஸ்வநாதன் தமது எந்த மெல்லிசைக் கச்சேரியிலும் முதல் பாடலை இசைக் கருவிகளைக் கொண்டு தான் தொடங்குவார். எண்பதுகளில் நான் பார்த்தவரையில் அது காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் நாளாம் நாளாம் திருநாளாம் என்ற இனிமை நிறைந்த பாடலாகத் தான் இருக்கும். அதில், இளைய கன்னிகை என்ற சொற்களை அத்தனை கிறக்கமாக எடுத்துக் கொடுப்பார் பி பி எஸ். அதே கதியில் சரணங்களை இசைக்கும்போதும், ஹம்மிங் செய்கையிலும் அப்படி ஒரு சுகானுபவத்தை அளிப்பார் கேட்போர்க்கு.

    அவருக்கே உரித்தான வெல்வெட் குரலில் ஜானகியோடு இணைந்து அவர் பாடிய போலீஸ்காரன் மகள் படத்தின், பொன் என்பேன் சிறு பூ என்பேன் என்ற கீதம், வித்தியாசமான திரை இசைப் பாடல்களைத் தொகுத்தால் அதில் முக்கிய இடத்தில் இருக்கும்.

    சொற்களை அவர் கொஞ்சம் நகாசு வேலை செய்து சொகுசாக்கி உருட்டி விடுவது போல் வந்து நமது இதயத்தைத் தொடும்….சோகப் பாடல்களோ இதயத்தை வருடும். ஜெமினி கணேசனுக்கென்றே அவர் குரல் கொடுத்த கண்ணதாசனின் தத்துவ முத்துக்கள் இரவின் தனிமையில் நம்மை வேறு ஒரு கிரகத்திற்குக் கொண்டு போய்க் குடியமர்த்தும். அப்படியான பாடல்களில் மயக்கமா கலக்கமா ஒரு தினுசான வித்தை காட்டும் என்றால் அசர வைக்கும் வேறொரு பாடலான யார் சிரித்தால் என்ன, இங்கு யார் அழுதால் என்ன என்பது கற்பனையான ஒரு சோகத்தைக் கேட்பவருள் உருவாக்கி அதில் ஒரு பரவசத்தை ஏற்படுத்தி நிறைவுறும்.

    டி எம் சவுந்திரராஜனோடு இணைந்து பி பி எஸ் கொடுத்த அருமையான பாடல்களில், மறக்க முடியாதவை, பொன் ஒன்று கண்டேன், பெண் அங்கு இல்லை என்பது தனி ராகம். புல்லாங்குழல் இசையின் ஒத்த கதியில் மிகவும் அமைதியான பரஸ்பர காதல் பகிர்வின் இரண்டு வெவ்வேறு குரல்கள் கலந்து மிதக்கும் அந்தப் பாடலில், ஸ்ரீநிவாஸ் அழுத்தமான டி எம் எஸ் குரலினூடே ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு போல மென்சிதறலாய்த் தமது குரலைப் பொழிவார். அவள் பறந்து போனாளே பாடல் வேறொரு பாவத்தில் இதே இருவரின் குரல்களை இணைக்கும் பாடல். எம் எஸ் வி தேர்ச்சியான கருவிகளைப் பயன்படுத்தி மேற்கத்திய சூழலை மனத்திற்குள் படரவிடும் அழகே தனி.

    தவப் புதல்வன் படத்தில், சிவாஜிக்காக ‘உலகின் முதலிசை தமிழிசையே’ என்று டி எம் எஸ் பாடுவதற்குப் போட்டியாக, திக்குரிசி சுகுமாரன் நாயர் என்ற நடிகர் பாடுவதற்கு பி பி எஸ் பாடிய, சங்கீத குலோமினி பஹியாகே என்ற சங்கீதம் ருசியானது

    என்ன சொன்னாலும் பி பி ஸ்ரீநிவாஸ் பாடிய தத்துவப் பாடல்களில், கண்ணதாசனின் சிறந்த பாடல்களில் ஒன்றான காட்டு ரோஜாவில் வரும் எந்த ஊர் என்றவனே பாடல் ரசனைக்கு ஏற்ற சரக்கு. அதில்

    காதலூர் காட்டியவள்
    காட்டூரில் விட்டுவிட்டாள்,
    கன்னியூர் மறந்தவுடன்
    கடலூரில் விழுந்துவிட்டேன்,
    பள்ளத்தூர் தன்னில் என்னை
    பரிதவிக்க விட்டுவிட்டு
    மேட்டூரில் அந்த மங்கை
    மேலேறி நின்று கொண்டாள்….

    என்று ஓர் இழு இழுத்து ஒரு நொடி pause கொடுப்பார்….இசையின் அழகு, நடுவே கடந்து போகும் ஓசையற்ற மவுன இடங்கள் என்பதன் இலக்கணம் அந்த இடம்…

    ‘அழகிய மிதிலை நகரத்திலே யாருக்கு ஜானகி காத்திருந்தாளை’ விட்டுவிட முடியுமா.அல்லது ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து, ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இது தான், என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன், என்ற எந்தப் பாடலைத் தான் விட்டுவிட முடியும்? இன்னும் அவரது முத்திரைப் பாடல்களான நிலவே என்னிடம் நெருங்காதே, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், பால் வண்ணம் பருவம் கண்டு, கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே, பார்த்தேன் சிரித்தேன், ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்…..எதைத் தான் விட முடியும்?

    கர்ணன் படத்தில், மழை கொடுக்கும் கொடையுமொரு என்று கம்பீர நாவுக்கரசர் சீர்காழி கோவிந்தராஜன் தொடங்கும் பாடலில், பி பி எஸ் நுழையும் என்ன கொடுப்பார் எதைக் கொடுப்பார் என்றிவர்கள் எண்ணும் முன்னே வரிகளும் சரி, குழந்தைக்காக படத்தில் ராமன் என்பது கங்கை நதி என்று அதே போல சீர்காழி தொடங்கி வைக்கும் மூவர் பாடலில், இயேசு என்பது பொன்னி நதி என்று பி பி எஸ் அடி எடுத்து, அப்புறம் சரணங்களிலும் மென்குரலில் இசைக்கும் இடங்களும் சரி ரசிகர்களுக்கு போனஸ் பரிசு.

    இதெல்லாம் கடந்த காலத்தின் மனிதர்களுக்கானவை…இடையே திடீரென்று எதிர்பாராத இன்ப அதிர்ச்சி, எண்பதுகளின் பிற்பகுதியில் ஊமை விழிகள் படத்தில், மிகப் பரவலாகக் கொண்டாடப் பட்ட, தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா என்ற இரத்தினத்தை பி பி எஸ் வழங்கியது

    மிக மிக எளிய மனிதராகவே அறியப்பட்ட அவர், கிட்டத் தட்ட ஒரு குழந்தையைப் போலவே நடந்து கொண்டவர். எப்போதும் பல நிறங்களில் விதவிதமான பேனாக்களை பாக்கெட்டில் வைத்திருப்பார் அவர். உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டல் இடிக்கப்பட்டு அங்கே செம்மொழி பூங்கா வரவிருப்பதாக செய்தி வந்ததும் முதலில் அதிர்ச்சி அடைந்தவர் அவர் தான்….கால காலமாக மாலை நேரங்களை அவர் அங்கே தான் கழித்து வந்தார். அவரைப் பார்க்க விரும்பும் யாரும் அந்த நேரத்தில் அவரை அங்கே பிடித்துவிட முடியும்.

    எந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப் பட்டாலும் அவரது கவிதை ஒன்று தயாராக இருக்கும்….ஆங்கிலத்திலும் தமிழிலும் தம்மை சிறப்பித்த மனிதரின் பெயரில் உள்ள எழுத்துக்களை முதல் எழுத்துக்களாக வைத்து அத்தனை வரிகளில் ஒரு கவிதை எடுத்து விடுவார் அல்லது அந்த அமைப்பின் பெயரில்.! இந்தியன் வங்கியில் ஒரு பாடல் போட்டிக்கு அவர் அழைக்கப்பட்டபோது வங்கியைப் பெருமைப் படுத்தி அப்படியான ஒரு கவிதையை வாசித்தார் அவர்.

    தம்மை விட இளைய வயது பாடகர்கள் அல்லது போட்டிகளில் தமது பாடலைப் பாடும் சிறுவர்கள் யாரையும் அத்தனை சிறந்த குரல் வளம் மிக்கவர்களாக வாழ்த்துவார். தலைக் கனத்தோடு அவர் யாரையும் மட்டம் தட்டிப் பேசியதாக ஒரு நிகழ்வும் நினைவில் இல்லை.

    அவரது குரல் ஓர் அலங்காரம் என்றால், அவரது உடை அலங்காரம் இன்னும் தடபுடலாக இருக்கும்….சரிகைக் குல்லாய் சட்டை மீது ஓர் சால்வை, பவர் அதிகமான லென்ஸ் கொண்ட கண்ணாடி, நெற்றியில் திருநாமம்.

    சில மாதங்களுக்குமுன் பாண்டி பஜாரில் ஓர் ஓட்டலில் இருந்து அவர் வெளியே வருவதைப் பார்த்தேன்…உடன் வந்த குடும்ப உறுப்பினர்களில் இளைய தலைமுறைக்கு அவர் பெயரைச் சொல்லத் தெரியாமல் திணறிய போது வருத்தமாக இருந்தது…அவரைத் தெரியும் என்றால் அருகே போய்ப் பேசுங்களேன் என்றார்கள். எனக்குத் தான் அவரைத் தெரியும், அவருக்கு என்னைத் தெரியாது. .இந்த முதிய வயதில் அவர் தேடித் தேடி அவசரமாக வெளியேறிக் கொண்டிருக்கும் நேரத்தில், வெறும் அற்ப ரசனையுடன் குறுக்கிட எனக்கு தயக்கமாக இருந்தது….வழக்கமாக இத்தனை யோசிக்கவே மாட்டேன்.

    அவரை இனி ஒரு போதும் அருகே சென்று பார்த்துப் பேசவோ அவரது பாடல்களை அணு அணுவாய் நான் எப்படி ரசித்தேன் என்று நடுங்கும் அவரது கைகளை எடுத்து எனது இதயப் பக்கத்தில் அழுத்தியவாறு பகிர்ந்து கொள்ளவோ முடியாது என்று இன்று நினைக்கும்போது அன்றைய தயக்கம் இப்போது வேதனை மிகுந்ததாக மாறுகிறது…..

    வணக்கம் பி பி எஸ்…..எங்களை உங்களது வசீகர குரலின்வழி புதிய கனவுகளுக்கு கற்பனைகளுக்கு வெவ்வேறு உணர்வுகளுக்கு ஆட்படுத்திய கலைஞனே, நீங்கள் வாழ்வாங்கு வாழ்வீர்கள் – தமிழில் மட்டும் அல்ல கன்னடம் தெலுங்கு என உங்கள் குரல் ஒலித்த அத்தனை மொழிகளிலும்…..

    *************************
    நன்றி: தீக்கதிர் – ஏப்ரல் 22

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 73 (27.05.13)

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    “வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறுதல்”

    (51)

    தீயைக் கொட்டிப் பரப்பி
    அதன் வெப்பத்தினால்
    எமை வருந்தச் செய்கிறதே
    இம்மாலைப்பொழுததுவே!

    இது இங்ஙனம் நமை வருத்தும்
    என்று சற்றும் நினைந்து பார்த்திடாது
    தலைவன் உரைத்திட்ட
    பொய்ச் சூளுரைகளை
    உண்மையென நம்பி ஏமாந்துவிட்டோமே!

    பூமணம் நிறை கானற்சோலையில் வாழுகின்ற
    சிறப்புப் பொருந்திய கடல் தெய்வமே!
    எம் தலைவர்தம் பொய்ச்சூளுரையைத்
    தண்டிக்காது பொறுத்தருள்வாயாக!
    நின் மலரடி போற்றி வணங்குகிறோம்.

    கட்டுரை

    “கோவலன் ஊழ்வினையால் மனம் மாறுபட்டு மாதவியைப் பிரிந்து போதல்”

    (52)

    இவ்வாறெல்லாம் மாதவி பாடக்கேட்ட கோவலன்
    நான் கானல்வரி பாடினேன்;
    அங்ஙனம் பாடாமல்
    வஞ்சனைப் பொய்கள் கூட்டி
    மாயம் செய்திடும் இம்மாயக்காரியோ
    வேறு யாரையோ நினைத்துப் பாடினள்
    என்று எண்ணுகையில்,
    யாழிசை மேல் வந்து நின்றது
    அவனுடைய ஊழ்வினை.

    முழுநிலவு நாளில் தோன்றுகின்ற
    நிலா போலும் முகமுடைய மாதவியுடன்
    இணைத்த தன் கையை
    அப்போதே ஞெகிழவிட்டனன்;
    பொழுது சாய்ந்துவிட்டது என்று கூறியே
    ஏவலர் மட்டும் சூழ
    மாதவியை விடுத்துப் புறப்பட்டனன்;

    மாதவி, கோவலனுடன் இன்றி, தனியளாய் ஆயத்துடன்
    தன் மனை புகுதல்”
    தாது விரிந்த பூக்கள் நிறைந்த சோலையில்
    தனித்துக் கோவலன் விட்டுச் சென்றிட
    செயலற்றுத் தவித்த மாதவி
    ஆங்கே நிலவிய ஆரவார ஒலிகள் அடங்கியதும்
    வண்டியில் சென்றமர்ந்து
    தனியே தன்மனை புகுந்தனள்
    கோவலன் உடன் இன்றியே.

    புகுந்தபின்,
    இவ்வுலகின் அரசர்கள் எல்லாம் தலைவணங்கும்
    சோழ மன்னனையும்,
    அவனது
    முகபடாம் அணிந்த யானையையும்
    ஒளி பொருந்திய வாளையும்
    “மிகப்பெரிய சக்கரவாளம்
    எனும் மலையை உள்ளடக்கி
    ஆட்சி புரிவதாகுக” என்று
    வெண்கொற்றக் குடையையும்
    வாழ்த்தி நின்றனள் மாதவி.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram23.html

    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/diploma/a021/a0214/html/a02141l6.htm
    கானல்வரி முற்றியது; தொடர்வது வேனில் காதை

    Share