சச்சிதானந்தம்

 

கொதிகலன் போலுலகைக் கதிரவன் காயவைக்க,

மதிமுகம் சுமந்தோடிக் குளிர்ந் திருந்த,

நதிகளின் ஊற்றுக்கண் குருடாகிக் காய்ந்திருக்க,

விதியென நொந்துசெத்து மனிதனும் வீழுகின்றான்!

 

வனங்கொண்ட வளங்களை தினந்தினம் அழிக்க,

பணங்கொண்ட மமதையில் பசுமையைப் பழிக்க,

சினங்கொண்ட மரங்களின் சாபத்தால் இப்போது,

குணங்குன்றி ஆறுகள் நீரின்றி வறண்டன!

 

மலர்களை, மீன்களைச் சுமந்த நதிகள்,

மணல்வெளிப் பாதையாய் அனல்கக்கி நிற்க,

மதகணைக் கதவெங்கும் தேனீக்கள் கூடுகட்ட,

மலைத்தேனால் நிறைந்திருக்கும் எம்மாற்று வளங்காணீர்!

 

ஆற்றங்கரை அரசமரம் நீரின்றிச் சாக,

அங்குவாழும் பிள்ளையாரும் நாவறண்டு வாட,

அழகுகங்கை சூடியவன் சடைவறண்ட கோலத்தால்,

அகிலமெங்கும் தாகத்தில் தவித்துறைந்து நிற்கிறதே!

 

மாதம் ஒரு செடி நடுவோம்,

மேகஞ் சூல் கொள்ள வைப்போம்,

மாரித் துளி பூக்க வைத்து,

மண்ணு லகைக்  காத்திடு வோம்!

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “தாகம் தீர்க்காத நதிகள்

  1. வனங்கொண்ட வளங்களை தினந்தினம் அழிக்க,
    பணங்கொண்ட மமதையில் பசுமையைப் பழிக்க,
    சினங்கொண்ட மரங்களின் சாபத்தால் இப்போது,
    குணங்குன்றி ஆறுகள் நீரின்றி வறண்டன!

    அருமையான வரிகள் கவிஞரே….

    அன்புடன் 
    ….. தேமொழி 

  2. பிள்ளையாரின் நா வறள
    பெற்ற அப்பன் சடைவறள
    விட்ட பஞ்சம் விடைபெறவே
    மரம் வளர்த்து
    மாரித்துளி பூக்கவைக்கும்
    கவிதை நன்று
    வாழ்த்துக்கள்…!
    -செண்பக ஜெகதீசன்…

  3. பசுமரக்காடுகள் அழித்து, கான்க்ரீட் காடுகள் செய்யும் தற்போதைய காலக் கட்டத்தில், விளைவுகளை அறிவுறுத்தும் அருமையான கவிதை. ஒவ்வொரு வரியும் முத்தானவை. அற்புதம் கவிஞரே!!!. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  4. கவிதையைப் படித்துத் தங்களின் கருத்துக்களையும்,வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் திருமதி.தேமொழி, திருமதி.தமிழ்முகில் நீலமேகம், திரு.செண்பக ஜெகதீசன், மற்றும் திருமதி.பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *