நடராஜன்கல்பட்டு

எங்கெ ஊருன்னு நான் எப்பொவுமே சொல்லிக்கிறது திருச்சி பக்கத்துலெ இருக்குற பொன்மலை தாங்க.  ஏன்னா அந்த ஊருலெ தான் நான் பொறந்தது லேந்து இருபது வயசு வரெ இருந்துருக்கேன்.

அந்த நாளுலெ, அதாங்க ஒரு எண்பது வருசத்துக்கு முன்னெ, வெள்ளெக் காரன் நம்ம நாட்டெ ஆண்டுகிட்டு இருந்த காலத்துலெ, எங்க ஊருலெ தான் இந்தியாவுலேயே பெரிய ரயில்வே தொழிற்சாலை இருந்துதுங்க.  அங்கெ இந்தியா பூராலேந்தும் ப்ராடு கேஜு, மீட்டர் கேஜு, நேரோ கேஜு எஞ்சினுங்க, பயணிங்க போற பொட்டீங்க எல்லாம் ரிப்பேருக்கு வருங்க.  ஒரு விசேசம் அந்த நாளுலெ எங்க ஊருலெதான் மூணு வித எஞ்சினுங்க, வண்டிங்க, அதுக்கான லயனுங்க இதுகளெப் பாக்க முடியும்.

எங்க ஊருக்குப் பொன்மலைனு ஏன் பேரு வெச்சாங்க தெரியுமா?  ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக் காரனுக்கும் சண்டெ நடெந்த போது பிரெஞ்சு தளபதி டூப்ளேயோட சோல்ஜருங்க எங்க ஊருலெ இருக்குற மலெயோட குகைலெ ஓளிஞ்சிகிட்டாங்க.  அவுங்களெத் தொரத்திகிட்டு வந்த கிளைவோட, அதாங்க வெள்ளெக் காரனோட தளபதி, ஆளுங்க குகெலெ ஒளிஞ்சு கிட்ட இருந்த சோல்ஜருங்களெ கொன்னு அந்த இடெத்தெக் காலி பண்ண போது அவங்க ஒளிச்சு வெச்சிருந்த தங்கக் காசுங்க அங்கெ கெடெச்சுதான்.  அதுனாலெ அந்த மலெய்க்குப் பொன் மலென்னு பேரு வெச்சங்களாம்.

மலெ அடிவாரததுலெ பொன்னேஸ்வரி அம்மன் கோவிலும், மலெயோட கால் பங்கு ஒயரத்துலெ முருகன் கோவிலும் இருக்குங்க.   அந்த முருகன் கோவில் பக்கத்துலெயே ஒரு குட்டி மொட்டெ மலெ.  கோவிலுக்குப் போயிட்டு அந்த மொட்டெ மலேலெ கொஞ்ச நாளி குந்தி அரெட்டெ அடிச்சூட்டுதான் ஊட்டுக்குத் திரும்புவோம் நாங்க.  அங்கெ எங்கெ பேரெக் கூட பதிச்சிருக்கோம்.  தேடினா ஆயிரத்துலெ ஒண்ணா எங்க பேரும் கெடெய்க்கலாமுங்க.

கோவில உட்டு வெளியெ வந்தோம்னா ஒரு சதுரக் கெணறு.  கொஞ்சமா பதினெஞ்சு இருபது அடி ஆழம்தான் இருக்கும்.  கைப்பிடி சுவரெல்லாம் கெடெயாதுங்க.  எட்டிப் பாத்தா தண்ணி, நீரு கலந்த பாலு கலருலெ இருக்குங்க.  அந்தத் தண்ணியெ குடிச்சீங்கன்னா மெய்யாலுமே பாலு குடிக்கிறீங்களோன்னு சந்தேகம் வருங்க.  அவ்வொளோ தித்திப்புங்க (அதே கலருலெ தண்ணியெ 1965லே பங்களூருலெ பன்னேர்கட்டா போற வளிலெ இருந்த சுந்தர் ராஜ் என்பவரோட ஊட்டுக் கெணத்துல பாத்திருக்கேங்க.)  பக்கத்து ஊருங்களான பொமைலைப் பட்டி, கொட்டைப் பட்டி கிராமங்களுக்குப் பூரா குடி தண்ணி அந்தக் கெணத்துலேந்து தான் எடுத்து கிட்டுப் போவாங்க. (நாப்பது வருசத்துக்கு முன்னெ ஒரு வாட்டிப் போனேங்க எங்க ஊருக்கு.  அந்தக் கெணெத்தெ எட்டிப் பாத்தா பாறெதான் தெரிஞ்சுது.  எங்க ஊடும் பாழடெஞ்ச ஊடு மாதிரி இருந்தீச்சு.

எங்க ஊட்டுலேந்து பாத்தா எதுத்தாப்புல ஏரோபிளேனுங்க இறங்கறதும் ஏறுறதும் தெரியுங்க.  ஏன்னா ஒரு மைலு தொலவுலெ ரன்வேங்க.  அதுல உலக யுத்தம் நடந்த நாளுலெ ஏரோபிளேனுங்க நிறுத்தி வெச்சிருப்பாங்க.  கிட்டெ போயி பாக்கலாமுங்க.  ஏன், அதுங்கள்லெ ஏறிக் கூட பாக்கலாமுங்க.  நான் ரெண்டு மூணுக்குள்ளெ ஏறிப் பாத்துருக்கேனுங்க பக்கத்துலெ நின்னு கிட்டு இருந்த சோல்ஜரு கிட்டெ சொல்லீட்டு.  ‘ஆர்டெமிஸ், ஆஸ்ற்றேயியா’ ன்னு பேருங்க அதுங்க ரெண்டுக்கும்,

சரி அதெல்லாம் உடுங்க.  மெயின் மேடருக்கு வருவோங்க, அதான் சந்தெய்க்கு வருவோங்க.

எங்க ஊருலெ வாராவாரம் ஒரு சந்தெ கூடும்.  ஆனா அதெ விட முக்கியமான சந்தெ மாசா மாசம் ஒண்ணாந் தேதியும், பதினஞ்சாந் தேதியும் ஒர்க் ஷாப்பு வாசலுலெ கூடுற சந்தெய்ங்க.  அந்த ரெண்டு தேதிங்கள்லெ ஒர்க் ஷாப்புலெ சம்பளம் தருவாங்க.  அதுனாலெ தான் அந்த ரெண்டு நாளு சந்தெ கூடுறது.  இந்த சந்தேலெ பாருங்க ஊட்டுக்கு வேணுங்கெற துணி, மணி, அரிசி, பருப்பு, காய் கறி, சோப்பு, சீப்பு, கண்ணாடி, அலுமினிய, இரும்பு, பித்தாளெ பத்திரங்க இப்பிடி எல்லா ஜாமானுங்களுமே கெடெய்க்குங்க,

எங்க அப்பாரு ஒரு சோப்பு ஃபேக்டரி வெச்சிருந்தாரு. சிம்மா சோப்பு ஒர்க்ஸ்னு பேரு அதுக்கு.  அவரு பண்ணுற துணி தோய்க்கிறெ சோப்பு ரொம்பப் பிரபலங்க மார்கெட்டுலெ.  அந்த சந்தெலெ நாங்களும் கடெ வெச்சிருப்போம் ஒரு கண்ணாடி தள்ளு வண்டிலெ.  அரெ மணிலெ வித்துப் போயிடும் வண்டிலெ கொண்டாந்த சரக்கு பூரா.

எங்க கடெய்க்குப் பக்கத்துலெ தரெலெ ஆறுக்கு எட்டுலெ ஒரு ஜமுக்காளத்துலெ கடெ பரெப்பி இருப்பாரு ஒருத்தரு.  அது ரொம்ப ரொம்ப விசேஷ மான கடெய்ங்க.  வாங்க அதெப் போயி பாக்கலாம்.

“ஓடிவா…ஓடிவா….. ஒங் கஷ்டம் என்னவானாலும் ஒடிவா……இருக்கு அதுக்கு மருந்து எங்கிட்டெ..”  “டக…டக…டக…” இது அவர் ஒரு கொட்டாங்கச்சி டமாரத்தில் எழுப்பும் ஒலிங்க.

தயங்கித் தயங்கி வருகிறார் ஓமக் குச்சி வடிவமும் சோவின் தலையையும் கொண்ட ஒருவர்.

“என்னையா?  மயிரு வளறணுமா?  வாங்கித் தேயி இந்தத் தைலெத்தெ.  பத்தே நாளுலெ வளர ஆரம்பிக்கும் பாரு ஒம் முடி.  சின்ன பாட்டிலு எட்டணா.  பெரிய பாட்டிலு ஒரு ரூவா.  சட்டுனு வாங்கு.  பட்டுனு தேயு.  வளருது பாரு ஒம் முடி.  சோதனெ பண்ணதையா இந்தத் தைலம்.  பத்தே நாளுலெ முட்டைக்கெ மயிரு முளெச்சுதுன்னா பாத்துக்க.”

“பெரிய பாட்டிலே குடுங்க.”

அடுத்து வருகிறார் கரடியா? மனிதரா? என்று சந்தேகிக்கும் படியான செந்தில் போல ஒரு ஆளு.

“என்னையா?  ஒடம்புலேந்து ஒனக்கு மயிரு கொட்டணுமா?  அதுக்கும் இருக்குது எங்கிட்டெ தைலம்.  சின்ன பாட்டிலு எட்டணா.  பெரிய பாட்டிலு ஒரு ரூவா.”

“ஆமாங்க.  சட்டெ போடாமெ வெளிலெ கெளெம்பவே முடியறதில்லீங்க.  தெருவுலெ சுத்துற குறும்புப் பசங்க, ‘டேய் கரடி வருதுடா’ ன்னு கிண்டல் பண்ணுறானுவ.”

“சின்ன பாட்டிலா இல்லெ பெரிய பாட்டிலா?”

“பெரிசே குடுங்க.  அது தான் என் பெரிய ஒடம்புக்குப் பத்து நாளெய்க்கு வரும்.”

“டக… டக…. டக…. ஓடிவா….. ஓடிவா… ஒங் கஷ்டம் எதுவானாலும் ஓடிவா.  இருக்குது எங்கிட்டெ மருந்து அதுக்கு.  டக…டக…டக…”

“ஒடெம்பெல்லாம் அரிச்சுப் புடுங்குதுங்க.  சொறிஞ்சு சொறிஞ்சு ஒடெம்பே புண்ணாயிப் போயிடுதுங்க.  அதுக்கு எதுனா……”

“இருக்கு அதுக்கும் எங்கிட்டெ தைலம்.  சொறியோ, சிரங்கோ, கரப்பானோ, படையோ எதுவானாலும் பத்தே நாளுலெ பறந்து போயிடும் இந்த எண்ணெயெத் தடவினையானா.  சின்ன பாட்டில் எட்டணா.  பெரிய பாட்டிலு ஒரு ரூவா.  எடு காசெ.  எது வேணும் ஒனக்கு?”

“பெரிசே குடுங்க,  அப்பொ தானே பத்து நாளெய்க்கு வரூம்?”

“ஆமாம்.  இந்தா புடி.  டக… டக…. டக…. ஓடிவா….. ஓடிவா… ஒங் கஷ்டம் எதுவானாலும் ஓடிவா.  இருக்குது எங்கிட்டெ மருந்து அதுக்கு.  டக…டக…டக… அடுத்த சந்தைக்கு வர மாட்டார் சாயபு.  ஹைதராபாத் போறாரு அவரு.”

பதினைந்து நாட்களுக்குப் பிறகு கூடுகிறது மீண்டும் சந்தை.  எங்கள் கடைக்குப் பக்கத்துக் கடை அதே சகல வியாதி நிவாரணி மருந்துக் கடை!

(கதையல்ல.  கற்பனையல்ல.  கட கட கட… அக்மார்க் நிஜம் இது.)

(சந்தை படங்கள் இணையத்தில் இருந்து)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “எங்க ஊரு சந்தெ

  1. நான் அந்த சந்தையிலே உங்களை பார்த்திருக்கிறேன். விடலைப்பையன். அரும்பு மீசை. நடு வகிடு. பொமேட் போட்டு சீவியிருப்பீங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.