எண்ணத்தால் வாழ்வு வரும்!!!
-பார்வதி இராமச்சந்திரன்
நாம் பெத்த ஓவியமே
நடந்து வரும் பூந்தேரே
பூதலத்து ராசாவே
புன்சிரிக்கும் ரோசாவே
எம்மடியில அதிசயமா
வந்துதிச்ச சூரியரே
பொன்னான ஒன் வாழ்வு
கண்ணு முன்ன தோணுதய்யா!!
தங்கத்தால் அரமணையாம்
தகதகக்கும் கோவுரமாம்
கருந்தேக்குக் கதவுகளாம்
கண்மூடா காவலுண்டாம்
கோட்டை மதிலு தாண்டி
கோமகனார் வாசலிலே
காத்திருக்கும் கோடி சனம்
கண்ணார உனைப் பார்க்க
வெள்ளியிலே வீதிகளாம்
வீதியெல்லாம் ரத்தினமாம்
முத்து நவரத்தினத்தைக்
கொட்டி அங்கே விப்பாகளாம்
முத்தத்தில் (முற்றத்தில்) முந்நூறு
முழுப்பவளக் கோலமிட்டு
மாணிக்கம் நிறைப்பாராம்
மகராசன் வருகைக்கு
கண்ணா உன் முகம் பாத்தா
காணாத வாழ்வு வரும்
கங்கை வீட்டு வாசல் வரும்
கனவெல்லாம் நனவாகும்
கலகலன்னு நீ சிரிச்சா
மளமளன்னு முத்துதிரும்
தங்கமே நீ நடந்தா..
தங்கத்தேரு ஆடி வரும்.
எட்டடிக் குடுசக் குள்ள
ஏந்தான் பொறந்தோமின்னு
என்னைக்கும் நெனக்காதே
எந் தங்க ராசாவே!!
இருளெல்லாம் வெடிஞ்சு வரும்
ஏழைக்கும் காலம் வரும்
எம் மகனே நீ நெனைக்கும்
எண்ணத்தால் வாழ்வு வரும்!!!
படத்துக்கு நன்றி: https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcS7_Wnk2Ekn0w5GnNsEmAEzw0KFuFBVXHrW96B46kDXkF0uJcuDSg
எட்டடிக் குடுசக் குள்ள
ஏந்தான் பொறந்தோமின்னு
என்னைக்கும் நெனக்காதே
எந் தங்க ராசாவே!!
இருளெல்லாம் வெடிஞ்சு வரும்
ஏழைக்கும் காலம் வரும்
எம் மகனே நீ நெனைக்கும்
எண்ணத்தால் வாழ்வு வரும்!!!
நல்ல ஊக்கமூட்டும் …உற்சாகமூட்டும் வரிகள் பார்வதி, அருமை.
அன்புடன்
….. தேமொழி
அழகான வரிகள். அருமையான நாட்டுப்புறப் பாடல்.
வாழ்த்துகள்.
வாழ்வை எதிர்கொள்ளும் வழிமுறைகளைத் தன் மகனுக்கு மிக அழகாக விளக்கும் பாடல். வாழ்த்துக்கள் திருமதி.பார்வதி இராமச்சந்திரன் அவர்களே!
எட்டடி குடுசக்குள்ள பொறந்தாலும்
ஏழத்தாய் தாலாட்டு போதுமம்மா..
எழுதிய பார்வதிக்கு வாழ்த்துக்கள்…!
-செண்பக ஜெகதீசன்…
@ திருமதி.தேமொழி…
தங்களின் பாராட்டுக்களே மிகவும் ஊக்கமூட்டுபவையாகவும் உற்சாகத்தைத் தருபவையாகவும் இருக்கின்றன. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..
@திருமதி. தமிழ்முகில்..
தங்களின் வாழ்த்துக்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
@திரு.சச்சிதானந்தம்..
ஊக்கமூட்டும் தங்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
@திரு.செண்பக ஜெகதீசன்..
தங்களின் மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.
மக்கள் கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களை நினைவுபடுத்தும் அற்புதமான கவிதை வரிகள்! நெஞ்சைத் தொட்ட எளிமை! அற்புதம்!
சு.ரவி
இத்தகைய இசை மிகுந்த, சுவை குவிந்த, பொருளணைத்த, அணி கூடிய கவிதைகளை பார்த்து பல காலமாயிற்று. வாழ்த்துக்கள், பார்வதி. ஒரு கருத்து:
‘முத்து நவரத்தினத்தைக்
கொட்டி அங்கே விப்பாகளாம்’ என்பதை
‘முத்தான முத்து படிக்கணக்கா!
ரத்தினமும் கொட்டிக்கிடந்ததாம்’
என்ற மாதிரி போட்டிருக்கலாமோ!
‘விப்பாகளம்’ கூடி வராததால்.
தப்பா நினைக்கவேண்டாம்னேன்!