இலக்கியம்கவிதைகள்

கடற்கரை நினைவுகளில்……….

எஸ் வி வேணுகோபாலன்

என் கடந்த காலத்தைத்
துணைக்கு அழைத்து வந்திருக்கிறேன்
இன்றைய கடற்கரைக்கு…

உறுத்துகின்றது மணல்
நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகளால் நிரம்பி –
பேரோசை எழுப்பும் அலைகளின்
கண்டனத்தை
அமைதியோடு ஏற்றுக் கொள்கிறது மனம்

கைகளில் தட்டுப்படும்
உடைபட்ட கிளிஞ்சல்களின்
விட்டுப் போன பகுதிகளைத்
தேடுகிறது பேதை உள்ளம்
இழந்த நட்புகளின் எஞ்சிய நினைவுகளில்

அப்போது திமிராய் மிதித்துத்
தகர்த்த மலைக் கோவில்களைத்
திரும்ப மீட்டெடுத்து எழுப்பினாலும்
யாரிடம் தர என ஏங்குகிறது இதயம்

வறண்ட உதடுகளைத் திரும்பத் திரும்ப
ஈரப்படுத்தித் தோற்கும் நாவைப் போல்
தீண்டும் நுரையலைகளின்
சுழிப்பு அழித்துப் போட்ட
பெயர் ஒன்றை
எழுதிவைத்த மண் எந்தப் பக்கம்
எனத் தேடுகின்றன கண்கள்

உப்புக் காற்றின் சில்லென்ற நேயம்
கழுவி விடுகிறது கன்னங்களை
ரணங்களை ஆற்றுப் படுத்தும் காலத்தைப் போலவே

நீரோடு சேர்ந்து கருத்துவிடும்
இரவின் வெளிச்சத்தில்
விடை சொல்லி எழுகையில்
கைக்குட்டை திருடியிருக்கும்
மணல் துகள்களை உதறி
அவ்விடத்திலேயே பத்திரப் படுத்தி
மீள்கிறேன்

தடயம் பதிந்திருக்கும்
தோழமை நினைவுகளையும்…

**********

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

 1. Avatar

  //உறுத்துகின்றது மணல்

  நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகளால் //- அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.

 2. Avatar

  மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வரிகள்..

  ////கைகளில் தட்டுப்படும்
  உடைபட்ட கிளிஞ்சல்களின்
  விட்டுப் போன பகுதிகளைத்
  தேடுகிறது பேதை உள்ளம்
  இழந்த நட்புகளின் எஞ்சிய நினைவுகளில்//

  இனம் புரியாத ஒரு உணர்வில் மனம் கனப்பது நிஜம். பகிர்விற்கு மிக்க நன்றி.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க