குரு பெயர்ச்சி பலன்கள்: (28.05.2013 முதல் 12.06.2014 வரை)
காயத்ரி பாலசுப்பிரமணியன்
இந்த ஆண்டு, குரு பகவான் மே 28-ம் தேதி, வைகாசி மாதம் 14-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை இரவு 9.03 மணியளவில், ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
12 ராசிகளுக்கு உரிய பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அனைவரும் குருவின் அருளைப் பெற, கீழே கொடுக்கப்பட்டுள்ள துதிப் பாடலைப் படித்து வரவும்.
மறைமிகு கலை நூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
கறைசொரி கற்ப கப்பொன் னாட்டினுக் கதிப னாகி
நிறைதனஞ் சிவிகை மண்ணி நீடுபோ கத்தை நல்கு
மிறையவன் குருவி யாழ னிருமலர்ப் பாதம் போற்றி.
அனைவருக்கும் பிரகஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான் வளம் பல நல்கட்டும்!
மேஷ ராசி: இது நாள் வரை 2-ல் இடத்தில் இருந்து ஏற்றமான வாழ்வு தந்த குரு பகவான், இந்த பெயர்ச்சி மூலம் 3-ம் இடத்திற்கு மாறுகிறார்.
மாணவர்கள் பிறர் சொல்லும் கருத்துக்களிலிருந்து நன்மை தீமையை அலசி நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வதன் மூலம் அனுகூலமான பலன்களை அடையலாம். வெளியூர்களுக்கு செல்லும் வியாபாரிகள் உணவு பழக்கத்தில் கட்டுப்பாடாய் இருந்தால், மருத்துவச் செலவுகளை ஓரளவிற்கு கட்டுக்குள் வைக்க இயலும். பெண்கள் வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை காட்டி வாருங்கள். இல்லத்தின் இனிமை குறையாமலிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பல நேரங்களில் உழைப்பு அதிகமாகவும், அதற்கான பலன் குறைவாகவும் இருக்கும். பதவியில் உள்ளவர்கள் பதவி உயர்வுக்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். அதிக தடவைகள் அலைந்தபின், வியாபாரிகளுக்கு வர வேண்டிய தொகை கையில் கிடைக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு செலவுகள் அதிகம் என்பதால், சேமிப்புக்கு அதிக தொகை ஒதுக்க இயலாத நிலை இருக்கும். நேரான பாதையில் சிந்தனையைத் திருப்பினால், நிறைவான வாழ்க்கை நிலைத்திருக்கும்.
ரிஷப ராசி : இது வரை உங்கள் ராசியிலிருந்த குரு, இப்பொழுது 2-ம் இடத்தில் அமர்கிறார். பொது வாழ்வில் இருப்பவர்கள் வெளி வட்டார பழக்கங்களை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வார்கள். பூர்வீகச் சொத்தில் நிலவிய வில்லங்கங்கள் நீங்கி சுமூகமான முடிவுகள் ஏற்படும். தொழில் விரிவாக்கத்தால் வியாபாரிகள் விரும்பிய லாபம் கையில் வந்து சேரும். இது வரை பெண்களுக்கு தலைவலியாய் இருந்தவர்கள் மனம் மாறி, உங்களுடன் உறவாட வருவார்கள். நல்ல சுற்றமும், நட்பும் உடனிருந்து தரும் ஊக்கத்தால், கலைஞர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும். கை வேலையில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள எடுக்கும் முயற்சிக்குத் தக்க பலனிருக்கும். மாணவர்களுக்கு நண்பர்களிடையே நீண்ட நாளாய் நிலவி வந்த பகை விலகி உறவுகள் மீண்டும் சுமூகமாகும். பணியில் இருப்பவர்களுக்கு தெளிவான சிந்தனையும், தீர்க்கமாக முடிவெடுக்கும் ஆற்றலும் பெருகும். சுய தொழில் புரிபவர் கள் தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து செயலாற்றும் காரியங்கள் நல்ல விதமாக முடியும்
மிதுன ராசி : இது வரை 12-ல் இருந்த குரு பகவான், இந்தப் பெயர்ச்சிமூலம் உங்கள் ராசியில் அமர்கிறார். வியாபாரிகள் அசையாச் சொத்துக்களில் அதிக மூதலீடுகளைத் தவிர்ப்பதுடன், நம்பிக்கைக்கு உகந்தவர்களை பங்காளிகளாகச் சேர்த்துக் கொண்டு செயலாற்றினால், வியாபாரம் ஓரளவு லாபகரமாய் அமையும். மாணவர்கள் நண்பர்களுக்கு, பணம் தருவதில் கவனமாய் இருந்தால், நட்பு நிலை நன்றாக இருக்கும். சில நேரங்களில் தேவையற்ற அலைச்சலும், இடமாற்றமும் பெண்களின் அமைதியை கெடுக்கும் . பணியில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்க ளிடமிருந்து அதிக ஒத்துழைப்பை பெற இயலாத சூழல் நிலவும். பொது வாழ்வில் இருப்பவர்கள் அமைதியாக தங்கள் பணிகளை செய்து வந்தால், அனைத்தும் சீராகவே நடக்கும். பொருப்பில் இருப்பவர்கள் தேவையற்ற இடங்களில் வீண் பேச்சுக்களைத் தவிர்த்தல் வேண்டும். கலைஞர்கள் தீய பழக்க வழக்கங்களுக்கும் கூடா நட்புக்கும் கும்பிடு போட்டு விட்டு விலகுவது நல்லது.
கடக ராசி : இது நாள் வரை 11-ம் இடத்தில் அமர்ந்து கொண்டு நற்பலன் பலவற்றைத் தந்து கொண்டிருந்த குரு பகவான் இந்த பெயர்ச்சி மூலம், உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் அமர்கிறார். நிதானத்துடன் செயல்பட்டால், எதிலும் அதிக சிக்கல் இராது. மாணவர்கள் உடனிருந்து தொல்லை தருபவர்களிடமிருந்து விலகி இருங்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் கவனாமாய் இருந்தால், இழப்புகள் குறையும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் வெளி மாநிலங்களில் வேலையில் அமர்வார்கள். கலைஞர்கள் தேடி வரும் வளர்ச்சி வாய்ப்புகளை கவனத்துடன் செயல்படுத்தினால் வளமான வாழ்வு அமையும். வீடு, மனை, வாகனம் வாங்கும் முயற்சிகளில் நிதானம் தேவை. பொது வாழ்வில் இருப்பவர்கள் உண்மையே பேசினாலும், இடம் பொருள் அறிந்து பேசினால், அதிக நன்மை பெறலாம். பெண்கள் இதமாக நடந்து கொண்டால், குடும்பத்தில் சண்டை சச்சரவு தலை காட்டாமலிருக்கும்.
சிம்ம ராசி : இது வரை உங்கள் ராசிக்கு 10-ல் இருந்த குரு பகவான், இந்த பெயர்ச்சி மூலம், 11-ம் இடத்தில் அமர்வதால், இது வரை மனதில் இருந்த கலக்கம், குழப்பம் யாவும் விலகுவதால் தெளிவான சிந்தனையுடன் களமிறங்குவீர்கள். வியாபாரிகள் வராமல் இருந்த பணத்துக்காக வருத்தப்பட்ட காலம் இனி இராது. பெண்கள் புதிய சொத்து மற்றும் நகை வாங்கி எதிர்காலவளத்தை ஸ்திரப்படுத்திக் கொள்வார்கள். முன்னேற முடியவில்லையே என்று வருந்தியவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வரும். பொது வாழ்வில் இருப்பவர்கள் அவ்வப்போது தொல்லை கொடுக்கும் எதிரிகளை தங்கள் தைரிய நடவடிக்கையால் ஒடுக்கி விடுவார்கள். பணியில் இருப்பவர்கள் தங்களுடைய தனிப்பட்ட சாதுர்யத்தால் கடினமான காரியங்களையும் எளிதில் முடித்து, அனைவரின் பாராட்டையும் பெறுவார்கள். மாணவர்கள் தூசி படிந்து கிடந்த தங்கள் திறமைகளை வளப்படுத்தி மீண்டும் ஒரு வலம் வருவார்கள். குழந்தைகள் பெறக்கூடிய பெருமையால் உங்கள் அந்தஸ்து உயரும்.
கன்னி ராசி : உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திலிருந்த குரு பகவான் இந்த பெயர்ச்சி மூலம் 10-ம் இடத்திற்கு மாறுகிறார். தனியார் துறையில் பணி புரிபவர்களுக்கு, உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை என்ற குறை இருக்கும். பெண்கள் நம்பிக்கை , தெய்வ பலம் இரண்டையும் பக்க பலமாக வைத்துக் கொண்டால், வெற்றியும், மதிப்பும் உங்களைத் தேடி வரும். சுய தொழில் புரிபவர்கள் பேசும் வார்த்தைகளில் இனிமையை சேர்த்துக் கொண்டால், உங்களின் கோரிக்கைகள் நிறைவேறுவது எளிதாகும். வியாபாரிகள் கடையில் உள்ள பொருள்களின் பாதுகாப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துதல் அவசியம். பணி சுமை கூடுவதால், வேலையில் இருப்பவர்களுக்கு எரிச்சலும், அசதியும் அவ்வப்போது வந்து போகும். மாணவர்கள் மன உறுதியுடன் செயல்பட்டால், பிரச்னைகள், தடைகள் ஆகியவற்றைத் தாண்டி வெற்றியின் பக்கம் உறுதியாக செல்ல இயலும். கலைஞர்கள் ஆடம்பரச் செலவுகளை சுருக்கிக் கொண்டால், பற்றாக் குறையை ஓரளவு சமாளித்துவிட முடியும்.
துலா ராசி : உங்கள் ராசிக்கு 8-ல் இருந்த குரு தற்பொழுது 9-ம் இடத்தில் அமர்ந்துள்ளார். பிரிந்த உறவுகளும், நட்பும் திரும்ப வந்து சேர்வதுடன் உங்கள் வளர்ச்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் தோள் கொடுத்து உதவும் நிலை உருவாகும். மங்கல காரியங்களின் பொருட்டு புதிய இடங்களுக்குச் செல்லுதல், புதிய மனிதர்களை சந்தித்தல் என்று பெண்களுக்கு பொழுது மகிழ்ச்சியாகச் செல்லும். அயல்நாடு செல்ல முயன்று கொண்டிருப்பவர்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து சிறந்த தேர்ச்சியும், பரிசுகளும் பெற்று மகிழ்வார்கள் . கணினியை இயக்கும் இடங்களில் பணி புரிபவர்களுக்கு விசேஷ சலுகைகளும், வாய்ப்புகளும் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கான நிதி உதவி பெற விரும்புவர்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும் உதவியால், தொழில் வளம் ஏற்றமான பாதையை நோக்கிச் செல்லும். கலைஞர்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கு குறைவிராது. வரும் வாய்ப்புக்களையும் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால், வியாபாரிகளின் எதிர் காலம் வளமானதாக அமையும்.
விருச்சிக ராசி : இது நாள் வரை 7-ல் இடத்தில் இருந்து ஏற்றமான வாழ்விற்கு பொறுப்பேற்ற குரு பகவான், இந்த பெயர்ச்சி மூலம் அஷ்டம குருவாய் அமரப் போகிறார். பெண்கள் குடும்பத்திலுள்ள மூத்தோரை கலந்தாலோசித்து எல்லா செயல்களிலும் ஈடுபட்டால் நிச்சயம் முன்னேற்றம் உண்டு. வியாபாரிகள் பங்குதாரர்களிடையே இருக்கக் கூடிய உரசலை இதமான அணுகுமுறையால் சரி செய்வது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் விதண்டாவாதத்தை தவிர்த்தால், உங்கள் நிம்மதியும், பிற்ர் நிம்மதியும் குலையாமல் இருப்பதுடன்,நினைத்த வண்ணம் செயல்கள் நடைபெறுவதில் எந்தத் தடையும் இராது. வியாபாரிகள் பங்குச் சந்தையில் அளவான முதலீடு செய்வது புத்திசாலித்தனம். மாணவர்கள் யாரையும் குற்றம் சாட்டிப் பேச வேண்டாம், மற்றும் தங்களை புகழ்பவர்களை நல்லவர்கள் என்று நம்பி உங்கள் சொந்தப் பிரச்சனைகளை அவர்களிடம் கொட்ட வேண்டாம். கலைஞர்கள் .சீரான உணவுப் பழக்க வழக்கம், தேவையான உடற்பயிற்சி -இந்த இரண்டையும் கடைபிடித்து வர, ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
தனுசு ராசி: இந்த பெயர்ச்சி மூலம் குரு பகவான் உங்கள் ராசியிலிருந்து 7-ம் இடத்திற்கு சென்றுள்ளார். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உறவுகளும்போட்டிப்போட்டுக் கொண்டு உதவுவதால், மகிழ்ச்சியும், மன நிறைவும் உண்டாகும். மனதி ல் இருந்த பின்னடைவும், இறுக்கமும் மாறுவதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் புதிய திட்டங்களில் ஆர்வத்துடன் இறங்குவார் கள் .. நண்பர்கள் நட்பை பலப்படுத்தும் வகையில் நடந்து கொள்வதால், மாணவர்கள் அதிக உற்சாகத்துடன் வலம் வருவார்கள். பணிபுரிபவர்களுக்கு, வேலை செய்யும் இடங்களில் நல்ல செல்வாக்கும் மரியாதையும் இருக்கும் . சுய தொழில் புரிபவர்கள் தங்களின் அயராத உ ழைப்பால் உன்னதனமான நிலையை அடைவார்கள் . பரிசுப் பரிமாற்றம், விருந்து என்று கலைஞர்கள் மகிழ்வாக இருப்பார்கள். கொடுக்க வேண்டிய கடன்கள் சிக்கலின்றி முடிவது போல், வரவினங்களும் தடையின்றி வருவதால், வியாபாரிகளுக்கு புதிய முதலீடுகளின் விரிவாக்கத்திற்கு தேவையான பணம் கிட்டும்.
மகர ராசி : இந்த பெயர்ச்சி மூலம் குரு பகவான் உங்கள் ராசியிலிருந்து 6-ம் இடத்திற்கு மாறியுள்ளார். வியாபாரிகள் எதிர்பாராத மாற்றத்திற்கு ஈடு கொடுத்து தன் வேலைகளை முடிக்க வேண்டி இருக்கும். பணியில் உள்ளவர்கள், நெருக்கடியான சூழலுக்கு நடுவில், தங்கள் திறமையை மூலதனமாக வைத்து நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்வார்கள். மாணவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு முயற்சியைப் போடுகின்றார்களோ, அவ்வளவுக்களவு, நல்ல பலன்கள் வந்து சேரும். .குடும்ப அமைதியை நிலை நிறுத்த, பெண்கள் சாதுரியமாக செயல்பட வேண்டும். தீய பழக்கத்திலிருந்து தள்ளி நின்றால், கலைஞர்களுக்கு வெற்றி நடை போடுவது எளிதாகும். முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பது அவசியம். சுய தொழில் புரிபவர்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையினை உரிய காலத்தில் செலுத்தி விட்டால், அவர்களைத் தேடி வரும் சலுகைகள் சீராக வந்து கொண்டிருக்கும். பொது வாழ்வில் உள்ளவர்கள், எந்த சூழலிலும், பக்குவமாக நடந்து கொள்வதே புத்திசாலித்தனம்.
கும்ப ராசி : இது நாள் வரை 4-ல் இருந்த குரு பகவான், இந்தப் பெயர்ச்சி மூலம் 5-ம் இடத்தில் அமர்கிறார். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வாழ்வில் பல நல்ல மாறுதல்கள் இருக்கும். பிரிந்திருந்த உறவுகளும், குடும்பமும் இணைவதால், பெண்களுக்கு மகிழ்ச்சி பெருகும். குழந்தைககளின் மேல் படிப்பு, வேலை ஆகியவை அதிக சிரமமின்றி அவர்களின் விருப்பப்படி நிறைவேறும். வாகனம், ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கான வாய்ப்பு கூடி வருவதால், கலைஞர்கள் தனி உறசாகத்துடன் வளைய வருவார்கள்.. சுய தொழில் புரிபவர்கள் இது வரை அனுபவித்த பொருள் கஷ்டம், மனக் கஷ்டம் யாவும் நீங்கிவிடும் . சிறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உடலும், மனமும் வலிமை பெறுவதால், புதிய முயற்சிகளில் துணிவுடன் இறங்குவதுடன், நினைத்த ஆதாயமும் கிடைக்கப் பெறுவார்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு தொழிலில் ஏற்பட்ட தேக்கம் நீங்குவதால் கூடுதல் லாபத்தை எதிர்பார்க்கலாம்.
மீன ராசி: இது நாள் வரை 3-ல் இருந்த குரு,இந்த பெயர்ச்சி மூலம், 4-ம் வீட்டுக்கு செல்கிறார். பெண்கள் பொருளாதார நிலையில் சற்றே ஏற்ற இறக்கங்களை சந்திக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் பொறுமை என்னும் தாரக மந்திரத்தை கடை பிடித்தால், சிறப்பான பலன்களை பெறுவீர்கள். தொழில் நிமித்தம் சிலர் அடிக்கடி பிரயாணங்களை மேற் கொள்ளும் நிலை இருப்பதால், உடல் நலனை நன்கு பேணிக்காப்பது நல்லது. பத்திரம் எதிலும் கையெழுத்து போடும் முன் தகுந்த ஆலோசனையை மேற்கொள்ளுங்கள். பணியில் இருப்பவர்கள் பண விவகாரங்களில் பிறர்க்கு ஜாமீன் தருவதையும், பிறரை நம்பி முக்கிய பொறுப்புகளைத் தருவதையும் தவிர்த்தால், சஞ்சலம், வீண் சங்கடம் ஆகியவற்றில் சிக்காமல் நிம்மதியாய் காலம் செல்லும். வியாபாரிகள் வாக்கில் நிதானமாக இருப்பதன் மூலம் வரும் வரவுகளை தக்க வைத்துக் கொள்ள இயலும். கலைஞர்கள் ஏமாற்றங்களைக் கண்டு சலிப்படையாமல், முழு சக்தியையும் உழைப்பில் போட்டால், வெற்றி உங்கள் வாசல் தேடி வரும்.