-சு.ரவி

வணக்கம், வாழியநலம்,

ஒரு மாறுதலுக்கு இம்முறை ஒலிவெளிப் பயணம்.

( ஓவியத்தை விட்டுக்கொடுக்கமுடியாமல், என்னை ஆட்கொண்ட சபரிகிரீசன், நெய்ப்பிரியனின் ஓவியம் பார்க்க, ரசிக்க..)

என் சபரிமலைப் பயணங்களை இசைப்பயணங்களாக மாற்றியதில் பெரும்பங்கு

என்நண்பன் V.K நாராயணனையே சாரும்.

1980- 2000 களில் சபரிமலைப்பயணங்களின் போது, வழிநடையில் நாராயணனின் ராக ஆலாபனைகளைத் தொடர்ந்த இசைப்பாடல்களாகவோ, என்னில் உதித்த பாடல்களின் இசைவடிவங்களாகவோ உருவெடுத்த பாடல்கள் இவை.

பலவருடங்களுக்கு முன் ஒரு மதியப்பொழுதில் என் இல்லத்தில் ஒரு MONO டேப் ரெகார்டரில் சுருதிப்பெட்டியுடன் நாராயணனின் குரலில் பதிவு செய்யப்பட்ட பாடல்களை வலைத்தளத்தில் ஏற்றி, அந்த இணைப்பைக் கீழே தருகிறேன்.

http://archive.org/details/Su.raviIyyappanKeerththanaikal

3 Track களில் உள்ள இந்தப் பாடல்களைப் பற்றிய சிறு குறிப்புகள் வருமாறு:

( பத்துப் பாடல்கள் உள்ளதால், பாடல்களின் முழுவரிவடிவங்களுக்குப் பதில்

இவை உருவான பின்னணிகளிப் பற்றிய குறிப்புகளை மட்டும் தருகிறேன்)

 

1. என்மனம் ஆனந்தக் கூத்தாடுதே- கமாஸ் ராகம்:

பெரிய குருஸ்வாமி திருச்சியில் இருந்ததால் கட்டுநிறை திருச்சியில்.

ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸில் திருச்சிக்குச் செல்லும் போது கமாஸ் ராகத்தில்

நாராயணன் ஆரம்பித்த பல்லவி விழுப்புரம் வருவதற்குள் நிறைவு செய்யப்பட்டு இசைவடிவமும் பெற்றது.

சரணத்தில் வரும் சூசித ராகமுத்திரைக்கு ( சுகமா சுகமா என) inspiration கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானாமோகனாம்பாள் நாவலில் வரும் ‘கமாஸ்’ கிட்டாவையர் சொல்லும் dialog.

 

2. மழைச்சாரல் வரவேற்குது- அம்ருதவர்ஷிணி ராகம்

சபரி மலையிலிருந்து திரும்பும் வழியில் வேனில் அச்சங்கோவில் செல்கிறோம்.இயற்கைஎழில்கொஞ்சும்

வனப்பகுயதியில், அச்சங்கோவில் மலை மீது வேன் செல்லும்போது பூந்தூரலாக மழை பன்னீர் தெளிக்கின்றது.

பஞ்சுப் பொதிகளாக மேகங்கள் தவழ்கின்றன. நாராயணனின் உற்சாகக் குரலில் அம்ருதவர்ஷிணி ராகம் பீறிட்டுவர

பாடல் பிறந்து சன்னிதானம் சேர்வதற்குள் நிறைவடைகிறது, வன் புலியேறும் ராவுத்தனுக்குக்.காணிக்கையாக!

 

3.’உனைக் காணும் வரை கண்கள் மூடாது- ஷண்முகப்ரியா ராகம்

மற்றுமோர் ஜனவரி மாதம் சபரிமலைப் பயணம். சென்னையிலிருந்து வேன் ஒன்றில் நாங்கள் 12 ஐயப்பன்மார் திருச்சிக்குப் போய்க்கொண்டிருந்தோம். நள்ளிரவு. பாடல்கள் ஓய்ந்து அவரவர் கண்ணயரும் தருணம்.ஓட்டுனருக்கு அருகில் உறங்காமல் மௌனமாக நான்.

பின்ஸீட்டிலிருந்து ஓர் ஐயப்பன் ” என்ன, சு.ர. தூங்கிட்டியா” என்று குரலெழுப்ப, அவருக்கு விடையாக ஷண்முகப்ரியாவில் எழுந்த பதில்.

சரணத்தில் ‘நினைப் பாட’ என்ற வரிகளை ஒவ்வொரு சரண முடிவிலும் நிரவல் செய்து பாடுமாறு அமையப்பெற்றபாடல்.

 

4. சரீர வீணை தன்னிலும் சங்கீதம் கேட்குது-அமீர்கல்யாணி ராகம்

1987/88 வருடம் என்று நினைவு. எண்ணூர்ஃபவுண்டரி நிறுவனத்தில் பணி. ஒருநாள்காலை 8:00 மணிக்கு நணபன் க.ரவி தொலைபேசியில் அழைத்தான்.

” சு.ர, ‘அமரத்வனி- 2’ கேஸட்- ஐயப்பன் மீது- இன்று ஒலிப்பதிவு- நணபன் K.S ராஜகோபால் பாட, என் இசையில் சங்கீதா நிறுவனம் தயாரிக்கிறது. 9: 30 க்கு மறுபடி அழைக்கிறேன்.நீ ஒரு பாடல் தயார் செய்து தா”

அமீர் கல்யாணியில் அப்போது உருவான பாடல்.

பாடலை முழுவதும் ஃபோனில் கேட்ட க.ரவி, பாடலின் இறுதியில் அமைந்த சந்தப் பகுதியைப் பாடுவது கடினமாக இருக்கும் எனக்கருதி வேறு பாடலைக் கேட்க, தர்பாரி கானடாவில் ” பூதமைந்தும்” என்ற பாடலை அளித்தேன்.

கேஸட்டில் இடம் பெறாவிடினும், நாராயணனின் குரலில் எங்கள் ஐயப்பன் பஜனைகளில் இப்பாடல் இடம் பெறும்.

 

5.வானவர் போற்றிட- பூர்விகல்யாணி ராகம்

கர்நாடக சங்கீதம்(வீணை) பயில்கையில், கீர்த்தனைகள் கற்றுக்கொள்ள ஆரம்பித்த காலகட்டம். நாராயணனை ராக அலாபனை செய்யச்

சொல்லி நான் பயணத்தின் போது உருவாக்கிய முதல் கீர்த்தனை. இப்பாடலிலும், இதனை அடுத்து உருவாக்கிய தோடி ராகக்

கீர்த்தனையிலும் பல்லவி, அநுபல்லவி, மத்யமகாலம், சரணங்கள், மத்யம காலம் என்ற ஃபார்மேட்டில், ‘குருதாஸ’ எனற

முத்திரையும், ராகமுத்திரையும் அமைந்துள்ளன.

 

6. உனையொருகணம் நினைவதும்- மலயமாருதம் ராகம்

தரிசனம் முடித்து, மலையிலிருந்து திரும்புகிறோம். நண்பன் க.ரவி ” பாடல் தொட்டுத்திறக்குமா நுழைவாயிற் கதவங்கள்”

என்ற கவிதையை ஆசுகவியாகப் பொழிந்தான். சுகமாக வீசிய மலயமாருதமும், கவிதையும், ஐயனின் தரிசன அனுபவமும் உள்ளுருக்க, மலயமாருதத்தில் உருவான பாடல். 99% குறில்களால் அமைந்த பாடல்.

 

7. அஹங்காரத்திரை அறுபடுமோ- சுப பந்துவராளி ராகம்

மஹனீயர் தியாகைய்யரின் ‘தெரதீயகராதா’ கீர்த்தனை கொடுத்த உந்துதல் இந்த சுபபந்துவராளி.

சரணத்தில் வரும் கருத்துக்கு Inspiration கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் வரிகள்

” அங்கவ் வயனும் இருக்க ஒட்டான்”-

அங்கே பிரமனும் இருக்க விடமாட்டான் – இங்கே யமனும் தங்க விடமாட்டான்” என்கிற யதார்த்த உண்மை.

நாராயணன் ஒரு சுபபந்துவராளி ஸ்பெஷலிஸ்ட்- செம்மங்குடி மாமாவின் ‘ஸ்ரீ சத்ய நாராயணம்:” வழி…

 

8. நெஞ்செலாம் நின் ராஜ்யம்- ரஞ்சனி ராகம்

பாடலின் இறுதியில் வரும் சிட்டை ஸ்வரம் நாராயணனின் கற்பனை. ‘ரஞசனி’, நாராயணனுக்கு மிகவும்

நெருக்கமான ராகம். இதில் திருமதி.ரஞ்சனிநாராயணனுக்கு விருப்பம்தான்!

 

9. தவத்தில் நிலைத்த தயைவடிவம்- சிந்துபைரவி ராகம்

அந்த வருடப் பயணத்தில் எங்களுடன் என் லேலண்லட் தோழன் கிருஷ்ணன் சேர்ந்து கொண்டான்.

(T.K.S. சகோதரர்களில் இரண்டாவது சகோதரர் திரு. டி.கே. முத்துஸ்வாமி அவர்களின் இரண்டாவதுமகன் கிருஷ்ணன். அற்புதமான குரல்வளம் – இவனுக்காக, அந்த கால ஹிந்தி, தமிழ்ப்படப் பாடல்களின் மெட்டில் இயற்றிக்கொடுத்த ஸ்வாமி பாடல்கள் பல. எங்களுடன் ஒருமுறையே மலைக்கு வந்த கிருஷ்ணன் இன்று மறைந்துவிட்டான்).

எருமேலியில், ஒரு கீர்த்தனை எப்படி உருவாகிறது என்ற அவன் கேள்விக்கு விடையாக, நாராயணன் பாட, சிந்துபைரவியில் உருவான கீர்த்தனை.

( இதே பயணத்தில் திரும்பும் போது, கிருஷ்ணன் ‘ஹரிவராஸனம்’ HUM செய்ய, அதே மெட்டில் “விரியும் வானெலாம்’ பாடல் பிறந்தது வேறு அனுபவம்)

 

10. நினைத்ததுமே மெய்சிலிர்க்குதையா- ரீதிகௌள ராகம்

நாராயணன், க.ரவி ஆகியோருடன் கட்டுநிறைக்காகத் திருச்சிக்கு ராக்ஃபோர்ட்டில் இரவுப் பயணம்.

எங்களை மிகவும் ஈர்த்த ரீதி கௌள ராகத்தில், நாராயணன் இந்தப் பாடலின் ஆரம்ப வரிகளைப் பாட

க.ரவியும், சு.ரவியும் மாறி,மாறி ஆளுக்கொரு வரி எனப் பாடி நிறைவு செய்த பாடலிது.

( இதன் தொடர்ச்சி ஒரிஜினல் கேஸட்டின் மறுபகுதிக்குப் போய் விட்டதால், நான் பிற்பாடு Up-Load செய்ய இருக்கும்

இழையில் கேட்கலாம்)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஐயப்பன் கீர்த்தனைகள்-கேட்க,ரசிக்க…

 1. ஐயப்பன் கீர்த்தனைகள் பாடல்களும் படமும் அருமை 
  – என் மனம் ஆனந்தக் கூத்தாடுதே 
  – வானவர் போற்றிட மாமலை சபரியில் வாழ்பவனே சரணம் 
  – தவத்தில் நிலைத்த தயை வடிவம் தன்னிகரில்லாத சுடர் உருவம், 
  என்னும் மூன்று இசைக் கோப்புகளில் இருக்கும் பாடல்களையும் கேட்டேன்.

  பாடல்களின் வரிகளின் எளிமையாலும், பாடகரின் (V.K. நாராயணனின்) அருமையாக உச்சரித்துப் பாடும் திறமையாலும், அதிகப் பின்னணி இசை இல்லாமலே பாடல்கள் இனிமையாக இருந்தன. கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் , ஒரு கோவிலில் ஒரு பக்தர் மனமுருகிப் பாடுவதைக் கேட்பது போல இருக்கிறது. இப்பாடல்களின் எளிமையே மனத்தைக் கவர்ந்தது.  

  “மழைச்சாரல் வரவேற்குது உன் மலைச்சாரால் மகிழ்வூட்டுது” பாடல் மிகவும் பிடித்தது. 

  அன்புடன் 
  ….. தேமொழி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *