வாசிப்பின் மோகம் குறையாது மாடத்தி !

எஸ் வி வேணுகோபாலன்

கணையாழி இதழில் சுஜாதா எழுபதுகளின் இறுதியில் “வேண்டாம்” என்ற தலைப்பில் பதினாறு சீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் என்று போட்டுக் கவிதை ஒன்றை எழுதி இருந்தார். “காலையிலே எழுந்திருந்தால் செய்தித் தாளில், கற்பழிப்புச் செய்திகளைப் படிக்க வேண்டாம் / காப்பித் தூள் கடன் வாங்கும் மனைவி கண்ணில் காத்திருக்கும் நீர்த் துளியை மதிக்க வேண்டாம்..”என்று போகும் அதை வெளியிட்ட ஆசிரியர், அதற்குப் பதிலாக “வேண்டும்” என்ற தலைப்பில் கவிதைகளை வரவேற்று எழுதி இருந்தார். எல்லோரும் வேண்டும் என்று தானே எழுதுவார்கள் என்று எண்ணிய நான், மறுபடியும் வேண்டாம் என்ற தலைப்பில் எழுதிய கவிதை இப்படித் தொடங்கியது:

கணையாழி விற்றிருந்தால் வாங்க வேண்டாம்
கைதவறிக் கிடைத்தாலும் படிக்க வேண்டாம்
காசிருக்கும் வரை நூலாய் வாங்கிப் போட்டுக்
கடை கடையாய் கால் விலைக்குத் துறக்க வேண்டாம்..

ஆனாலும் புத்தகங்களை வாங்கித் தள்ளும் தீராத ஆசையும், வாசிப்பின் தணியாத தாகமும் நின்ற பாடில்லை. புத்தகங்கள் சூழும் வாழ்க்கை எப்படி உருக் கொண்டது என்று துல்லியமாய்ச் சொல்லத் தெரியவில்லை என்றாலும், அதன் நீர்க் கோலம் ஒன்று இப்படி கண் முன் நிற்கிறது…

எட்டாம் வகுப்பில் நுழைய இருந்த நேரம் எனது தாய் வழி பாட்டனார் – வாலாஜாபாத் இந்து மத பாடசாலையின் புகழ் மிக்க தலைமை ஆசிரியராக விளங்கியவர் – தமது பணி ஓய்வுக்குப் பின் குடியேறியிருந்த காஞ்சிபுரத்திற்கு என்னை அழைத்து அங்கே அவரோடு தங்கிப் படிக்கச் செய்திருந்தார். பள்ளிக்கூடம் திறக்க இருந்த சில நாட்களுக்குள் அவர் மாரடைப்பால் காலமானது எனது வாழ்வின் இரண்டாவது அதிர்ச்சி…இரண்டரை வயதில் தாயைப் பறிகொடுத்த முதல் அதிர்ச்சிக்குச் சிகிச்சையை தமது அன்பால் பொழிந்து இதமளித்த அந்த மாமனிதர் வைத்திருந்த ஆளுயர மர அலமாரியின் பெரிய அறைகள் எதை இழுத்தாலும் அவற்றில் புத்தகங்கள் நிறைந்திருந்தது. சின்னஞ்சிறு கதைகள், சுதந்திர வேள்வியில் தியாகம் புரிந்தோர் கதைகள், வாசித்து வாசித்து அட்டை வெளிர் மஞ்சளாக ஆகியிருந்த நாலாயிர திவ்விய பிரபந்தம், யாரோ காலண்டர் அட்டை போட்டுப் பளபளக்க வைத்திருந்த கம்ப ராமாயணத்தின் முதல் மூன்று காண்டங்கள் அடங்கிய அற்புத புத்தகம்…..

புத்தக வாசிப்பையும், நூல்களை நோக்கிய ஒரு வெறியையும் என்னை விட நான்கு வயது மூத்தவரான எனது அண்ணன் எஸ் வி ரங்கராஜனிடம் தான் நான் பழக்கிக் கொண்டிருக்கவேண்டும். என்ன வகையான புத்தகம் என்றாலும் கையில் எடுத்துப் புரட்டாமல் இருக்க அவரால் முடியாது. வீட்டிற்குள் ஒரு சேர புத்தகங்களை வைத்திருக்க முடியும் என்பதை காஞ்சிபுரம் தெற்கு மாட வீதி உணர்த்தியது என்றால், ரங்கசாமி குளத்தருகே (இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும்) மாவட்டக் கிளை நூலகம் கொத்துக் கொத்தாகப் புத்தகங்களைப் பார்த்த முதல் இடமாக இருந்தது. வேலூர் மாவட்ட நூலகம், எனது முந்தைய பள்ளிக்கூடத்தின் நேரெதிரே இருக்க விடுமுறைக்குத் தந்தை வீட்டுக்கு வேலூர் செல்லும் ஒவ்வொரு முறையும் எனது அனைத்து விடுமுறை நாட்களையும் நான் அங்கே தான் கழிக்க விரும்பினேன். தண்ணீர் வைத்திருக்கும் டிரம், சங்கிலி பிணைத்திருக்கும் பித்தளை தம்ளரின் பிரத்தியேக வாசத்தோடும் தொண்டைக் குழிக்குள் இறங்கிய நீர் இன்னும் நினைவுக் காப்பகத்தில் இருக்கிறது. ஆனாலும் எனக்கான நூல் சேகரிப்பைத் தொடங்கும் தாகம் என்னைக் கல்லூரி நாட்கள் வரை காத்திருக்க வைத்தது. அதற்கான உண்டியலில் முதலில் விழுந்தவை பள்ளி நாட்களில் தவறாது எனக்குக் கிடைத்து வந்த பரிசு புத்தகங்கள்.

சென்னை மாநகரில் புகுமுக வகுப்பில் சேர பாட்டியின் அரவணைப்போடு மேற்கு மாம்பலத்தில் தாய்மாமன் வீட்டை வந்தடைந்த போது, எனது கவிதைகள் வெளியாகியிருந்த சிற்றிதழ்களையும், பரிசு நூல்களையும், எப்படியோ சேர்ந்திருந்த சில புத்தகங்களையும் ஒரு நீல நிற பெட்டிக்குள் உடைகளோடு சேர்த்து அடைத்து வைத்திருப்பேன். எனது சொந்த நூலகம் அந்தக் கைப்பெட்டிக்குள் தான் பிறப்பெடுத்தது. கோவையில் முதுநிலை கல்விக்காக மீண்டும் தந்தையோடு சென்று சேர்ந்தபோது டெபுடி கலெக்டர் என்ற அவரது அந்தஸ்து காரணமாகக் கிடைத்திருந்த பெரிய தனி வீட்டின் மாடியில் எனக்கு ஒரு தனியறையும், புத்தகங்களுக்காக சுவரில் அடித்து மாட்டிவைக்கும் ஒரு மர ஷெல்ஃபும் வாய்த்தது. கல்லூரிப் புத்தகங்களுக்கான இடம் தான் என்றாலும், அதில் மெதுமெதுவாகக் குடியேறத் தொடங்கின எனது வாசிப்பு வசந்தங்கள். அப்போதும் சிற்றிதழ்களே அதிகமிருந்தன, அழகியசிங்கர், ஸ்ரீதர்-சாமா ஆகியோர் என்னையும் உள்ளடக்கி நடத்திவந்த மலர்த் தும்பி பத்திரிகையில் வரும் படைப்புகளை எடுத்து எடுத்துப் படித்தபடி தான் வேதியல் பாடத்தின் மேற்கல்வியை மேற்கொண்டிருந்தேன். கோவை வானொலி நடத்திய நிகழ்ச்சிகள், இலக்கிய கூட்டங்கள் இவற்றோடு பாலகுமாரன், மாலன், சுப்ரமணிய ராஜூ எல்லோரும் எழுத்தாளர் சாவியோடு வந்து கலந்து கொண்டிருந்த கூட்டத்தில், சில உணர்ச்சிகர பேச்சுக்களைக் கேட்டபிறகு நூல் வாசிப்பின் வேகம் கூடியது. கணையாழி உள்ளிட்டுச் சில இதழ்களின் தொடர் வாசகன் ஆனேன். பெரிய அளவில் நூல்கள் வந்தடைய எனது சொந்த நிதி நிலைமை அனுமதித்திருக்கவில்லை.

இடமாற்றலில் எனது தந்தை தருமபுரிக்குச் சென்றுவிடவும், கோவையில் அரிசி மண்டி வைத்திருந்த நண்பர் ஒருவர் முன் என்னை நிறுத்தினார் தந்தை. அவரோ, தாம் அரிசி மூட்டைகள் வைத்திருந்த அறை ஒன்றில் எந்த வாடகையும் இல்லாமல் நான் குடியிருக்கலாம் என்று அனுமதித்தார். அந்த அறைக்குள் எனக்கு முன்பே நான்கு பெருச்சாளிகள் என்னைப் போலவே வாடகை கொடுக்காமல் குடியிருந்தது எனக்குப் பின்னர் தான் தெரியவந்தது. அவற்றிடமிருந்து என்னையும், எனது நூல்களையும் தற்காத்துக் கொள்ள இருபத்து நான்கு மணி நேரமும் டியூப் லைட் எரியவிட்டிருப்பேன் (அந்த அறைக்குள் சன்னல்கள் கிடையாது !). வங்கியில் வேலை கிடைத்து திருத்தணி அருகில் வங்கனூர் என்ற சிற்றூரில் குடியேறியபோது எப்படியோ அந்த நீலப்பெட்டி என்னோடு வந்துவிட்டிருந்தது. தரையிலேயே புத்தகங்களை அடுக்கி வைக்கத் தொடங்கினேன். தருமபுரி பேருந்து நிலையம் அருகில் முதன்முறை பார்க்க நேர்ந்த நியூ செஞ்சுரி புக் அவுஸ் கடைக்குள் வேதியல் பற்றிய 107 கதைகள் என்ற தலைப்பிலான ஆங்கிலப் புத்தகம் தான் முதலில் கண்ணில் பட்டது. அதன் எழுத்து நேர்த்தியும், அசத்தல் சித்திரங்களும் சோவியத் வாசிப்புலகை நோக்கி ஈர்த்தது. முன்னதாக பதினோராம் வகுப்பு விடுமுறையின்போது வேலூரில் அண்டை வீட்டில் அஞ்சல் ஊழியர் சங்கத் தலைவர் சி எஸ் பஞ்சாபகேசன் அவர்களது குடும்பத்தோடு ஏற்பட்ட நெருக்கம், அவரது இளைய மகள் சி பி மல்லிகா பத்மினி என் வசம் வாசிக்கக் கொடுத்த மக்சீம் கார்க்கியின் தாய் நாவலின் நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டேன். வங்கனூரில் உள்ளூர் மாணவரகள் பலர் மாலை நேரங்களை என்னோடு கழிக்க அவர்களது பாடப் புத்தகங்களோடு வந்து விடுவார்கள். கணிதம், ஆங்கிலம், தமிழ், அறிவியல் என பல்வேறு பாடங்களில் அவர்களது ஐயங்களைத் தீர்க்க உதவியபடி, அவர்களுக்கு வாசிப்புப் பழக்கம் ஊட்ட எனது நூலகம் இப்போது கொஞ்சம் விரிவடைத் தொடங்கியிருந்தது. ஆனாலும் அது தரைமீதே கொலுவிருந்தது.

இடமாற்றல் கேட்டுச் சென்னைக்குக் குடிபெயர்ந்த போது, மீண்டும் தந்தையின் நிழலில் வந்து இளைப்பாறிய பொழுதில், வாடகை வீட்டில் எனது நூல்களை மீண்டும் நீலப் பெட்டிக்குள் அடைத்து வைத்திருந்தும் இடம் காணாது சுவர் அலமாரியில் திணித்து நிரப்பியிருந்தேன். தங்கை ஆண்டாள் (இன்றும்) வீட்டின் சிறந்த வாசகி. விரைந்து சொந்தமாக வாங்கிய எளிமையான சிறுவீட்டில் புத்தகங்கள் கம்பீரமாக வரிசையாக எனது பார்வைக்கு எப்பொழுதும் அடையாளம் காட்டியபடி அடுக்கப் பட்டிருந்தன. அந்த வரிசை, நியூ செஞ்சுரி தயவில் மிக மிக மலிவான விலையில் நீண்டு கொண்டு சென்றது. சோவியத் நூல்களோடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் போருக்கு விடை கொடுப்போம் போன்ற அழகு நூல்களும், வேறு தமிழ் பதிப்பக நூல்களும், அதிகமாகக் கவிதை நூல்களும் என்னிடம் சேரத் தொடங்கிய நேரத்தில் திருமணம் நிகழவும், அதற்கு முந்தைய சந்திப்புகளில் எனக்கும் எனது வாழ்க்கை இணை தோழர் ராஜேஸ்வரி இருவருக்கும் இடையேயான உரையாடலில் பரஸ்பரம் படித்திருந்த புத்தகங்கள், வீட்டில் வைத்திருக்கும் நூல்கள் முக்கிய இடம் பெற்றிருந்தது. நீரோடு நீர் போல நாம் சேருவோம் என்று எங்கள் புத்தகங்கள் கலந்த வீட்டில் நாங்களும் அன்போடு குடியேறினோம். எங்கள் குடும்பத்தின் இன்னொரு பேசும் உறுப்பினராக நூல்கள் வளர்ந்தன.

எனது மாமனார் குடும்பம் பம்மல் பகுதியில் வாங்கியிருந்த காலி மனையில் கட்டிய வீட்டில் மாடியில் தனியறையும், நூல்களுக்கான சிறப்பு சுவர் அலமாரியும் ஏற்பாடு ஆனது. அந்தப் பெரிய நூலகத்தில், எனது சேகரிப்போடு, மைத்துனி கங்காபாய், அவரது கணவர் தோழர் நடராஜன், மைத்துனர் கவிஞர் மா குருமூர்த்தி ஆகியோர் வாங்கியிருந்த புத்தகங்களும், (மாமனார் மாத்ருபூதம் அவர்கள் பள்ளிக் காலத்தில் பெற்றிருந்த அருமையான பரிசுப் புத்தகங்களும், அகராதிகளும்) இரண்டறக் கலந்துவிட்டிருந்தன. எல்லாம் இடதுசாரி இயக்க சிந்தனைப் பரப்பில் வளர்ந்தவர்கள். ஆதலால் சில புத்தகங்கள் இரண்டு, மூன்று கூட தட்டுப்படும். வாசிப்பு தளம் விரிவடைந்து வரும் அதே வேகத்தில், எப்போது எல்லாம் வாசிப்போம் என்ற பெருமூச்சும் எழுந்த காலங்கள் அவை. சுவர்ப் பல்லிகளின் சீழ்க்கை ஒலி கூட இது பற்றிய பழிப்பு தானோ என்று நான் எண்ணுவதுண்டு. இத்தனைக்கும், ஜோல்னாப் பை புத்தகங்களோடு தான் வீட்டை விட்டு வெளியேறும், கூடுதல் கனத்தோடுதான் இரவு மீளும் என்றானது. ஒரு கட்டத்தில், குழந்தைகளுக்காக என்று நூலகம் அடுத்த கட்டம் சென்றது. என் பி டி, சி பி டி புத்தகங்களின் வசீகர மயக்கத்தில் ஆங்கிலமும், தமிழுமாய் சொல்லச் சொல்லத் திகட்டாத கதைப் புத்தகங்கள் ஜாம் ஜாம் என்று உடன் பயணம் செய்யத் தொடங்கின.

அதற்கு முன்னும், பின்னும் சென்னை மாநகரில் ஆறே முறை தான் வீடு மாற்றினோம். (அதில் ஒற்றை அறை மட்டுமே இருந்த ஒரு சிறு வீட்டில் பரணில் ஏற்றிவிட்ட புத்தக மூட்டையைப் பார்த்து அரற்றியே எட்டு மாதங்கள் கடந்து போனது…). வீடு மாற்றும் நேரத்தில், அடேங்கப்பா, புத்தக மூட்டைகளைத் தொடுகிற வரை எல்லாம் மங்களகரமாகப் போய்க் கொண்டிருக்கும். அந்த இடத்தில் கை வைக்கிற போது சுற்றி நின்று ஒவ்வொருவராகப் பேச ஆரம்பிப்பார்கள். புது இடத்தில் இத்தனை இடம் கிடையாது…எதற்கு மூட்டை மூட்டையாய்க் குப்பைகளை எடுத்துக் கொண்டு. இப்போதே உட்கார்ந்து கழித்துக் கட்டுங்கள்..என்று. அதிலும் குறும்பு நிறைந்த கண்களோடு மைத்துனர் குருமூர்த்தி சொல்லிக் கொண்டே போவதை மறக்க முடியாது. ‘ஐந்தாவது மாநாட்டு அறிக்கை, அதைத் தூக்கிப் போடுங்க, அப்புறம் ஆறாவது மாநாட்டிலும் அதே அறிக்கையைத் தான் எழுதி வைப்பீங்க, இதென்ன புத்தகம், பெரிஸ்த்ரோய்க்கா? கொர்பச்சேவே எல்லாத்தையும் வித்துட்டு அமெரிக்கா போய்ட்டாரு, கழுதையத் தூக்கி வீசுங்க, புதிய கல்விக் கொள்கையா, அது பழையதாய்ப் போய் வருஷமாச்சு, எதுக்கு இத்தனை ஃபிரண்ட்லைன் ? அவங்க ஆபீஸ்ல இருந்து வந்து கேப்பாங்கன்னா?…’ அப்படியே அள்ளி எடுத்துக் காப்பாற்றி ஒவ்வொன்றையும் அடுத்த வீட்டுக்குக் கொண்டு சேர்ப்பது பெரும் பாடு.

மாம்பலத்தில் இருந்து தற்போது இருக்கும் கோடம்பாக்கம் சொந்த இல்லத்திற்கு வந்த போது, வேறு எந்த அறைக்கும் கொடுத்த கவனத்தைப் போல் பல மடங்கு அக்கறையோடு எனக்காகப் புத்தக அலமாரியை வடிவமைத்திருந்தார் தோழர் ராஜி. அது நிறைந்தாலும், அட்டைப் பெட்டிகளில் வந்திறங்கிய புத்தகங்கள் குறைந்தது மாதிரி தோன்றவில்லை. பெண் விடுதலை, சிறுகதைத் தொகுதிகள், அதிகாலையின் அமைதியில், முதல் ஆசிரியர், வீரம் விளைந்தது, உண்மை மனிதனின் கதை, தாய், மாதவராஜ், தமிழ்செல்வன் கதைகள், பிரளயனின் சந்தேகி, என் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுத்தில் பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, கப்பற்படை எழுச்சி, நினைவுகள் அழிவதில்லை,……….என பெருகிய நூல் நதியை அணை கட்டி யார் தடுப்பது. துணிக்காக ஒதுக்கப் பட்டிருந்த இடத்திலும் தஞ்சம் புகுந்தன நூல்கள். ஆனாலும் ஜோல்னாப் பை கனத்தே தான் வீடு மீண்டு கொண்டிருந்தது.

திடீரென்று சுவர் அலமாரியைத் திறந்தால், நான்கு ஐந்து ஜோல்னாப்பைகள் அப்படியே இடத்தை அடைத்துக் கொண்டிருக்க, புத்தகங்களும் வகை தொகையில்லாமல் துணி வரிசையிலும் ஒண்டிக் கொண்டிருக்கும். ஏம்ப்பா, இன்னிக்கு ஒரு நாள் சீக்கிரம் வந்து இந்த அலமாரியை ஒழித்துச் சுத்தமா அடுக்கி வச்சிருங்க என்று குரல் வரும். ஒரு பத்து மணிக்கு சாவகாசமாக அந்த அறைக்குள் நுழைந்து புத்தகக் கட்டுக்களை இழுத்துக் கீழே வீழ்த்தினால், பை பையாய்ப் புத்தகங்கள், கவர் கவராய்ப் புத்தகங்கள் சரிந்து விழுந்து இடத்தை நிரப்ப, ஜவுளிக் கடையில் இறைத்துப் போட்ட துணிகளை மடிக்க உட்காருபவனாக அமர்வேன். அடுக்க வேண்டியது, ஒழிக்க வேண்டியது…எல்லாம் ஐந்து நிமிடத்தில் அகன்று விட, எடுத்த புத்தகத்தில் பிடித்த பக்கத்தை எடுத்து அந்த வரிகள் அங்கே தான் இருக்கின்றனவா, இடம் பெயர்ந்துவிட்டதா என்று படிக்க ஆரம்பித்தால் அதற்கு முடிவேது…தோழர் ராஜி அறைக்குள் எட்டிப் பார்த்து, என்னப்பா முடிக்கலையா மணி ரெண்டு (நள்ளிரவைக் கடந்து..) என்பார்…தோ..இன்னும் கொஞ்சம் தான் என்று அவரது தலை மறைந்ததும் வாசிப்பு தொடரும் மறுபடியும். அப்படியே நூல்களை வாரி எடுத்து நாற்காலிகள் மீதும், பெரிய ஜூட் பையிலும், துணிக்கடை பிளாஸ்டிக் உறைகளிலும் நிரப்பி சுவர் ஓரமாக நிறுத்திவிட்டு, அடுத்த நாள் முடித்துவிடலாம் என்ற பொய்யான வாக்குறுதியை அளித்துவிட்டு அன்றாட ஓட்டம்.

ஆனாலும், தவறாது புத்தகக் கண்காட்சியில் ஆஜர். ஒரு நண்பரிடம் கேட்டேன், நீ தான் போன ஆண்டு சந்தித்தபோது இனிமேல் நூலே வாங்க மாட்டேன், வாங்கியதையே படிக்க முடியவில்லை என்று சொன்னாயே, எங்கே இங்கே என்றேன். குடியை நிறுத்திவிட்டேன் என்று சொல்லும் ஒருவன் கடைக்கு அடுத்த நாள் போய் நின்றபோது, போதை மறந்து விடக் கூடாது என்று வந்ததாகச் சொல்வது மாதிரி தான் என்றார்.

தேர்வு செய்யப்பட்டிருக்கும் தனது விருப்ப நூல்களை ஆர்வத்தோடு படிக்கும் மகள் இந்து (இரா.நடராசனின் ரோஸ் புத்தகத்தை எவ்வளவு விலை கொடுத்தாலும் தர மாட்டாள் ), அன்றன்று வாங்கிய புதிய புத்தகங்களை அன்றே ஒயிலாய் சாய்ந்து உட்கார்ந்து ஆசை தீர வாசிக்கும் மகன் நந்தா, இரண்டு கைகளாலும் புத்தகத்தை ஏந்திப் பிடித்துக் கொள்ள இயலாத படிக்கு இடது கை, தோள்பட்டை செயலற்ற நிலையிலும் நூல்களை வாசித்துத் தள்ளிக் கொண்டிருக்கும் மாமியார் கோமதி அம்மாள் (பிரசுரமாகும் எனது எழுத்து அனைத்தின் முதல் வாசகர் அவர்), படிக்க நேரமற்றுப் போக வைக்கும் அன்றாட நச்சரவை சபித்தபடி ரயில் பயணத்திற்குப் புத்தகத்தைத் தேக்கிக் கொள்ளும் மனைவி ராஜி எல்லோரும் வாசிப்புச் சூழலை வளப்படுத்திக் கொண்டிருப்பவர்கள்.

நூல்களை அடுக்கி வைக்கவோ, எதையாவது எடுக்க எண்ணி கை வேறொன்றின் மேல் படவோ நேரும்போது விரிவது புத்தகங்கள் மட்டுமா, அது எப்போது வாங்கியது என்ற நினைவின் பின்னோட்டம், அதை வாசிக்கத் தொடங்கிய அந்தப் பொழுது, அதில் இன்னும் பத்திரமாக இருக்கும் பிடித்த வரிகள் எல்லாமும் ஒரு மறு ஒளிபரப்பாக மனத்தில் ஓடுவதை யார் தான் தடுக்க முடியும்..உங்களுக்கு அறிமுகமான இலக்கிய வீதி தான் என்றாலும் சில வீடுகளில் அதிகம் உரிமையோடு அடிக்கடி நுழைவீர்கள், சிலவற்றைக் கடக்கும் போது வெளியில் இருந்தபடி குரல் கொடுத்துப் பார்த்துவிட்டு நகர்வீர்கள், வேறு சிலவற்றை அடுத்த முறை வரும்போது உள்ளே எட்டிப் பார்க்கலாம் என்று வேகமாகக் கடந்து போவீர்கள் தானே, புத்தக வீதியும் அப்படியே தான் இருக்கிறது. படித்தவை, மீண்டும் படித்தவை, தொடாது வைத்திருப்பவை, முன்னே இருந்த நிலையில் இருந்து மக்கிய பக்கங்களோடு நைந்து போயிருப்பவை…என்று!

ஆனாலும் வாசிப்பின் மோகம் குறையாது பெருகுவதே வாழ்க்கையை இனிமையாக்கிக் கொண்டிருக்கிறது. தீக்கதிர் இலக்கியச் சோலையில் வெளியான எனது இந்த சுய விமர்சனக் கவிதை அதைத் தான் பேசுகிறது:
நூல்களோடு…….

வாங்க விடுபட்ட புத்தகங்களிடம்
இன்னும் கால அவகாசம் கேட்கிறேன்

உறங்கவிடாது அலைக்கழித்தவற்றோடு
தொடரும் உறவுகளையும்
உறக்கத்தை ஊட்டியவற்றிடம்
கருணையையும் கேட்கிறேன்

காலத்தின் இரக்கம் மறுக்கப்பட்டு
நைந்துபோன நூல்களிடம்
மன்னிப்பு கோரி மன்றாடுகிறேன் –
கவனமற்றுக் கையாளப்பட்டவற்றிடமும்!

பல்வரிசையில் காணாமல் போன பல் போல்
உருவப்பட்டுக்
களவாடப்பட்ட நூல்களிடம்
யாசிக்கிறேன் அவற்றின் மீட்சியை

பைகளைக் கிழித்துக் கொண்டு நிறைந்தும்
மேசை முழுக்க இறைந்தும்
வானொலிப் பெட்டிக்கும்
தொலைக்காட்சிப் பெட்டிக்கும்
காதுகள் முளைத்ததாய்
அவற்றருகே அடைந்து கொண்டும்

இன்னும்
தொலைபேசி உட்கார்ந்திருக்கும்
சுவர்ப் பலகையில் குடியேறியும்

பெரிய வாசக தோரணையைக்
கொடுத்துக் கொண்டு
கண்ணாடிக் கதவறைக்குள்ளிருந்தவாறு
(தண்ணீர் குடிக்க
எழும்
ஒவ்வொரு நள்ளிரவிலும் )
என்னை நியாயம் கேட்டுக் கொண்டும்

கிடக்கும் எண்ணற்ற நூல்களிடம்
முன்வைக்கிறேன்
வாசிப்பிற்கான
நிரந்தர கால நீட்டிப்புக்
கோரிக்கை விண்ணப்பத்தை –

வெட்கத்தோடும்
விடமுடியாத தாகத்தோடும்………..

***********

நன்றி ; புத்தகம் பேசுது இதழ்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “புத்தகங்கள் சூழ்ந்த வீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *